அபிநயா ஆவலுடன் திரும்பிப் பார்க்க, அங்கே கார்த்திக் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் வாலை ஆட்டியபடி அவன் காலைச் சுற்றியது ஐரீன். காலை மடித்து முட்டியிட்டு அதன் முன் அமர்ந்து அவன் விளையாடத் தொடங்க, அவள் முகம் அப்பட்டமாக ஏமாற்றத்தைக் காட்டியது.
அந்த மாமா என்ற அழைப்பில் கடுப்பானாள் அபிநயா. சற்று முன்னர் சித்தார்த் அழைத்த போது புகழேந்தியை அல்லவா அவள் எதிர்பார்த்தாள். ‘ம்ம்’ என்று மனதில் சலித்துக் கொண்டாள்.
“நீங்க வர்றீங்கன்னு யாரும் சொல்லவேயில்ல தம்பி” என்று சியாமளா கேட்க, காளியம்மாள் அவரை முறைத்தார்.
“தப்பா எடுத்துக்காதப்பா. நீ திடீர்னு வந்து நிக்கவும் என்னவோன்னு பயந்து கேட்கிறா, வேற ஒன்னுமில்ல. வீட்ல எதுவும் சொல்லி விட்டாங்களா? இல்ல, இங்க வேற வேலையா வந்தியா?” என்று காளியம்மாள் கேள்விகளை அடுக்கினார்.
“சாரி அம்மாச்சி. நைட் மதுரையில் இருந்து கிளம்பும் போது மாமாக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். மறந்தே போய்ட்டேன்” என்று சாவகாசமாக பதில் சொன்னான் கார்த்திக்.
அபிநயா எழுந்து சென்று அவனுக்கு காஃபி போட்டு வந்து நீட்ட, “தேங்க்ஸ் அண்ணி” என்று வாங்கி அதை ரசித்து குடிக்கத் தொடங்கினான்.
மொத்த குடும்பமும் அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று பார்த்திருக்க, அவனோ நாய்க் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சித்தார்த்துடன் கிரிக்கெட் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தார் மகேஷ்வரன்.
“உங்களுக்கு பஸ்ல வந்தது அலுப்பாருக்கும். குளிச்சுட்டு வாங்க தம்பி, டிஃபன் சாப்பிடுவீங்க” என்று அவர் சொல்ல, அவரின் முகம் பார்த்தே அவர் கேட்காமல் விட்ட கேள்வியையும், அதை கேட்க அவர் படும் சங்கடத்தையும் கண்டுக் கொண்டான் கார்த்திக்.
அன்றிரவு மதுரை செல்லும் அவர்களின் பயணத் திட்டமும் அவனுக்குத் தெரியும். அப்படியிருக்கையில் தான் இப்போது வீடு வந்திருப்பது அவர்களுக்கு புதிராக இருக்கும் என்பது புரிந்து, “அத்தை, அண்ணி, அம்மாச்சி மூனு பேரும் நைட் மதுரை கிளம்பறாங்கன்னு எனக்குத் தெரியும் மாமா. உங்களுக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்ணிட்டு, அப்படியே இவங்களையும் ஊருக்கு கூட்டிட்டு போக வந்தேன் மாமா. எங்கப்பத்தா தான் அனுப்பி விட்டாங்க” என்று விளக்கினான்.
“ஓ, சரிங்க தம்பி. எனக்கும் மூனு பேரையும் தனியா அனுப்ப என்னன்டோ இருந்துச்சு. இப்போ நீங்க வந்தது நிம்மதியா இருக்கு” என்றவர், “இருங்க. டிராவல்ஸ் கால் பண்ணி உங்களுக்கு டிக்கெட் சொல்லிடுறேன். கடைசி நேரத்துல கேட்கறோம், டிக்கெட் இருக்கா இல்லையான்னு தெரியல” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்தார்.
“பஸ் டிக்கெட் வேணாம் மாமா. அண்ணே ஃப்ளைட் டிக்கெட் போட்டு கொடுத்திருக்கு. நாலு பேருக்கும் சேர்த்து தான்” என்று கார்த்திக் சொல்ல, அவனை அதிர்ச்சியாய் பார்த்தார் மகேஸ்வரன்.
“மாப்பிள்ளை இது பத்தி ஒன்னும் சொல்லலியே” என்று அவர் தடுமாற, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காளியம்மாள், “ஆமா, எல்லாத்தையும் உன்ட்ட சொல்லிட்டே இருப்பாங்களாப்பா? மாப்பிள்ளை தம்பி நம்ம பிள்ளைக்கு தெரியாம செய்யணும்னு நினைச்சுருக்கார். அதுக்கு பேர் என்ன சொல்லுவீங்கத்தா?” என்று அவர் அபிநயாவைக் கேட்க,
அதற்கு, “சர்ப்ரைஸ் அப்பத்தா” என்று கத்தினான் சித்தார்த்.
“ஆ, அதென். இங்க பாரு, பேத்தி முகமே மலர்ந்து போச்சுல்ல” என்று சொல்லி சிரித்தார் காளியம்மாள்.
“ஃப்ளைட் டிக்கெட் எல்லாம் வெலை கூடுதல் இல்லையா தம்பி?” மகேஸ்வரன் கேட்க,
“ஸ்லீப்பர் பஸ் டிக்கெட்டை விட கொஞ்சம் விலை கூடுதல் மாமா. அம்புட்டு தான். புகழேந்தி சார் செலவு தான். நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று அவன் சொல்ல, மற்றவர்கள் சிரிக்க, அபிநயா முறைத்தாள்.
“அப்போ நான் பஸ் டிக்கெட்டை கேன்சல் பண்றேன் தம்பி”
“சரிங்க மாமா. பெரிய லக்கேஜ் மட்டும் பஸ்ல போட்டு விட்டுடலாம். அதுக்கு சொல்லி வைங்க. அது நாம ஏர்போர்ட் போற வழியில கோயம்பேடுல நிறுத்தி டிராவல் ஆபீஸில் குடுத்துட்டு போய்டலாம். சரி தானே?”
“அப்படியே செஞ்சுடலாம் தம்பி” என்றார்.
“நான் பிளேன்ல போனதே இல்ல தம்பி. அது பறந்து வானத்துக்கு மேல போகையில நமக்கு தலைச் சுத்தி போகாதா? இந்த படுத்துட்டு போற பஸ் நல்லா சொகுசா தான் இருக்கும். நாம படுத்து எந்திருச்சா ஊரு வந்திரும்” காளியம்மாள் சொல்ல, எழுந்து அவரிடம் வந்தான் கார்த்திக்.
அவனோடு, ஐரீனும் வந்து அபிநயாவை உரசிக் கொண்டு அமர்ந்தது.
“உங்க தூங்கற பஸ்ல ஊர் போக எட்டு, ஒம்பது மணி நேரம் ஆகும் அம்மாச்சி. ஆனா, ஃப்ளைட் ஒரு மணி நேரத்துல மதுரை போய்டும். இங்க தூங்கற பஸ் எடுக்கிறதுக்கு முன்னாடியே நாம ஊர் போய் சேர்ந்திடுவோம். அங்க போய் வீட்ல நல்லா படுத்து தூங்கலாம்” அவன் சொல்ல,
“ஆ, நெசமாவா? ஒரு மணி நேரம் தான் ஆகுமா? ம்ம், எம் பேத்தி வேலைக்கு போனதுக்கு அப்புறம் முருகனை பார்க்க என்னை ஃப்ளைட்ல மலேசியா கூட்டிட்டு போறேன்னு சொன்னா. ஆனா, அவளுக்கு முன்னாடியே நீ கூட்டிட்டு போற” என்றார் காளியம்மாள்.
“நான் இல்ல அம்மாச்சி. உங்க மாப்பிள்ளை புகழேந்தி சார் ஏற்பாடு” என்றான்.
ஆச்சரியமாக சியாமளா எதுவும் சொல்லவில்லை. மருமகனை குறித்து பெருமை மட்டுமே. அதைக் கணவரிடமும் பகிர்ந்துக் கொண்டார் அவர். கார்த்திக்கை நன்றாக கவனிக்கவும் செய்தார்.
காலை உணவை முடித்து விட்டு அவர்களோடு சேர்ந்து ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பொருட்களை சேதாரமின்றி வந்து சேரும் வகையில் கட்டி வைக்க உதவினான் கார்த்திக்.
சென்னையில் அபிநயாவிற்கு அழகிய நினைவுகள் பல உண்டு. ஆனால், கடந்த சில வருட கசப்பின் காரணமாக அங்கிருந்து விரைந்து செல்லவே விரும்பினாள் அவள். இரவு பயணத்தில் நிச்சயம் எதையெதையோ நினைத்து மனதை உழப்பிக் கொண்டிருப்பாள். அதற்கு வாய்ப்பு தராமல் விமானத்தில் பயண ஏற்பாடு செய்த புகழேந்தியின் பக்கம் அவள் மனம் அதிகமாக சாய்ந்தது.
அவளிடம் தினமும் பேசுகிறான். ஆனால், அளவாக. ஒரு எல்லைக் கோட்டில் நின்று விடுவான். அவளுக்கு திருமணம் என்று தெரிந்து தோழிகள் எல்லாம் கேலி செய்து ஓட்டித் தள்ள, வருங்கால கணவனோ கல்லூரி பாடங்களை பற்றித் தான் அதிகம் பேசினான்.
அவன் அதிகபட்சம் பேசுவதே அரை மணி நேரம் தான். அதிலும் பாடமா என்ற கோபத்துடன், “ப்ரோபஸர் சார், இந்த ப்ரோகிராமில் ஒரு டவுட்” என்று அபிநயா கேட்கவும் தான் அடங்கினான் அவன்.
“நான் காமர்ஸ் டிபார்ட்மெண்ட் அபி. நீ என்ன சந்தேகம்னு சொல்லு. நான் என் ப்ரெண்ட்கிட்ட கேட்டு சொல்றேன்.” கேலி சிரிப்பில் மீசை துடிக்க அவன் கேட்க,
“நல்லவேளை காலேஜ் முடிஞ்சதும் தான் நமக்கு கல்யாணம். இல்லனா நீங்க என்னை படி படின்னே..” அவள் புலம்பி முடிக்கும் முன், “அப்போ வேற பாடம் படிக்கலாம்” என்று கண் சிமிட்டினான்.
“அப்பவுமா?” என்று தலையில் கை வைக்கப் போனவள், அவன் கண்ணடித்ததைப் பார்த்ததும், வெட்கத்தை சிரிப்பில் மறைத்தாள்.
அதன் பிறகு தினமும் இயல்பாக பேசினான். அவளின் பிடித்தங்களை விசாரித்தான். தனக்குப் பிடித்ததைப் பகிர்ந்தான். விரைவில் திருமணமாக போகிறவர்களை போல பேசவில்லை என்றாலும் ஓரளவு காதல் பேசினான்.
மகேஸ்வரன் பெட்டி அடுக்கிக் கொண்டிருந்த மகளிடம் வந்து, “மாப்பிள்ளை உன்கிட்ட எதுவும் சொன்னாரா அபி?” என்று கேட்டார்.
“இல்லப்பா.” என்றாள். நேற்றோடு அவளின் கல்லூரி வாழ்க்கை முடிவிற்கு வந்திருந்தது. முதன் முறையாக அன்றிரவு தான் வெகுநேரம் பேசியிருந்தான் புகழேந்தி.
“அப்பா, உன் லைஃப் நினைச்சு ரொம்ப பயந்திருக்கேன் அபிம்மா. ஆனா, இன்னைக்கு முழுசா நம்பிக்கை மட்டுமில்ல என் பயம் எல்லாம் காணாம போயிடுச்சு. இனிமே உன்னைப் பத்தி நான் கவலைப்படத் தேவையில்லை. மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துப்பார். நானே சல்லடை போட்டு தேடியிருந்தாலும் இப்படி ஒரு பையனை கொண்டு வந்திருக்க மாட்டேன். இந்தா இருக்க மதுரைக்கு நீ பத்திரமா வரணும்னு நினைக்கிறவர், வாழ்க்கை முழுக்க உன்னை பத்திரமா பார்த்துக்க மாட்டாரா?” மகளின் முகம் பார்த்து சொன்னவரின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.
“நீ உனக்கு தேவையானதை எடுத்து வை அபி. மிச்சத்தை நானும், தம்பியும் வர்றப்போ எடுத்துட்டு வந்திடுறோம்”
“சரிங்கப்பா. நான் ஷபானா வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்ப்பா. அவங்ககிட்ட ஊருக்கு போறதை சொல்லிட்டு வந்துடுறேன்” என்று அவரிடம் சொல்லி விட்டு அதே தெருவில் இருந்த தோழி வீட்டுக்குச் சென்றாள் அபிநயா.
அந்தக் கல்லூரி அதற்கே உரிய காலை நேர பரபரப்பில் இருக்க, “ஏட்டில் ஒரு பாவலன் எழுதாத காவியம்… காதல் நிலாவே பூவே.. கை மீது சேர வா..” என்று பாடலை விசிலடித்து கொண்டிருந்தான் புகழேந்தி.
“என்ன புகழ் சார், பாட்டெல்லாம் பலமா இருக்கு. உங்க சட்டைக் கலரும் பளிச்சுன்னு கண்ணைப் பறிக்குது. கல்யாண மாப்பிள்ளைக்கு காதல் வந்திடுச்சா?” என்று கேலியாக கேள்வி கேட்டான் சாமுவேல்.
“ஆசைக் கனாவே அபியே..” என்று விசிலடித்த புகழேந்தி, “காதல் வந்ததான்னு தெரியல. ஆனா, கல்யாண நாள் நெருங்குது இல்ல? அதான் ஆபீஸ் ரூம் போய் பொறுப்பா எனக்கு கல்யாணம் நிச்சயமாகிடுச்சுன்னு சொல்லிட்டு வரப் போறேன்” என்றான்.
“ஓகே. இத்தனை நாள் ஏன் சொல்லலன்னு அவங்க கேட்டா?”
“அதையெல்லாம் எதுக்கு கேட்க போறாங்க சாம்? நான் கல்யாணத்தை பத்தி மட்டும் தான் சொல்லப் போறேன்”
“ரைட்டு. ஆமா, என்ன இன்னைக்கு திடீர் ஞானோதயம்?”
“அதுவா? நேத்தோட என் வருங்காலத்துக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்சுடுச்சுடா. இனி அவ காலேஜ் ஸ்டூடண்ட் இல்ல. ப்ரோபஸர் புகழேந்தியின் வருங்கால பொண்டாட்டி, அவ்ளோதான்.”
“அடப்பாவி. அதானே பார்த்தேன். இதுக்காகவாடா இவ்வளவு நாள் வெயிட் பண்ண?”
“ம்ம்” என்று தலையசைத்தான் புகழேந்தி.
“வெள்ளிக் கிழமை லீவ் போட்டா காலேஜ்ல சொல்லணும்னு, நீ பூ வைக்கிறதுக்கு ஞாயித்துக் கிழமையே ஓடுனியே, அப்பவே நான் நினைச்சேன் டா. சரியான தில்லாலங்கடி டா நீ”
சாம் சொல்ல, சத்தமாக சிரித்தான் புகழேந்தி.
“அதுக்கு வேற காரணம் சாம். கல்யாணத்தை சீக்கிரம் வைக்க, பூ வைக்கிறதும் சீக்கிரம் வச்சோம். என்னை ஏன்னு கேட்காத, நான் பதில் சொல்ல மாட்டேன்”
“சரிங்க சார்” என்று சாமுவேல் நக்கலாக சொல்ல, அவனைப் பார்த்துக் கொண்டே சட்டையின் கையை அளவாக மடித்து விட்டான் புகழேந்தி.
“என்னது? கண்ணு தெரியலயா உனக்கு? கலரை சரியா சொல்லு சாம். இது பேபி பிங்க். இந்த கலருக்கு என்ன குறைச்சல்?” என்று நண்பனை முறைத்தான் புகழேந்தி.
“நடக்கட்டும்டா. நானும் இதையெல்லாம் கடந்து வந்தவன் தான். இந்த கலர் யாருக்கு பிடிச்சதுன்னு கெஸ் பண்ண நான் மூளையை யூஸ் பண்ண வேண்டிய அவசியமேயில்ல”
“அடடே, நீ இல்லாத மூளையை எப்படி யூஸ் பண்ணுவ? விடு சாம்” நண்பனின் தோளில் தட்டி அவன் சொல்ல, “எல்லாம் நேரம் புகழ் சார்” என்றான் சாமுவேல்.
புகழேந்தி சிரிக்க, “புகழ் சார் காலேஜ் படிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ண போறார்னு ஊரெல்லாம் சொல்ல நான் காத்துட்டு இருந்தேன் டா. ஆனா, கேடி நீ. கொள்கை மாறாம கல்யாணம் பண்ணிக்கிற பாரு. அதுக்கே உன்னை பாராட்டணும் புகழ்” என்று நண்பனின் தோளில் தட்டினான் சாமுவேல்.
“நாம குரு ஸ்தானத்தில் இருந்துட்டு அதுக்கான மரியாதையை கொடுக்க வேணாமா சாம்?” என்ற புகழேந்தி, “இதைப் பத்தி நாம நிறைய முறை பேசிட்டோம். இப்போ நான் ஆபீஸ் ரூம் போய் விஷயத்தை சொல்லிட்டு வர்றேன்” என்க, “ஆல் த பெஸ்ட்” என்றான் சாமுவேல்.
புகழேந்தியின் மனதின் ஓரத்தில் அத்தனை நாள்கள் இருந்த நெருடல் இப்போது அடியோடு மறைந்திருக்க, மனதில் ஓடிய பாடலை மெலிதாக விசிலடித்தபடி சென்று கல்லூரி நிர்வாகத்திடம் தன் கல்யாணம் குறித்து தெரிவித்து விட்டு வந்தான்.
அவனுக்கு முதல் இரு வகுப்புகள் முடிந்து ஓய்வு கிடைக்க, மகேஸ்வரனுக்கு அழைத்து தம்பியை அனுப்பியது குறித்து தெரியப்படுத்தினான். அவருக்கு அதில் மகிழ்ச்சி எனவும் தான் லகுவானான் புகழேந்தி.
அவனது பெற்றோரும் அழைத்து அபிநயா பெற்றோரிடம் முறையாக பேசினார்கள்.
மாப்பிள்ளை வீட்டினர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் அவர்கள் பேசவும் சியாமளா கூட அமைதியானார். ஏற்கனவே அவர்களின் வீட்டு மராமத்து பணிகளுக்கும் மாணிக்கவேலன் தான் ஆள்களை ஏற்பாடு செய்து தந்திருந்தார். வீடு இத்தனை விரைவில் தயாராகவும் அவர்கள் தான் காரணம் என்பது அவர்கள் மேலான சியாமளாவின் மரியாதையை அதிகரிக்கச் செய்திருந்தது.