அபிநயாவிற்கு தோழியுடன் அரட்டை அடித்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. இந்த நாள்கள் எல்லாம் இனி திரும்ப வரவே போவதில்லை என்ற ஏக்கத்துடன் ஷபானா வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் அவள்.
அந்நேரம் கார்த்திக் அவர்கள் வீட்டு கேட்டை பிடித்தபடி நின்று ஐரீனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவளைப் பார்த்ததும் நாய்க் குட்டியை உள்ளே விட்டு கேட்டை பூட்டினான்.
“ஹாய் அண்ணி, ப்ரெண்ட்டுக்கு பை சொல்லியாச்சா?” அவன் கேட்க அபிநயா புன்னகைத்தாள்.
அவளின் பதிலை எதிர்பாராமல், “ஃப்ளைட்ல ஐரீன் அலோவ்டு இல்ல. அதுனால அவளை மாமா வரும் போது கூட்டிட்டு வரட்டும். நீங்க குட்டியை மிஸ் பண்ணுவீங்கன்னு தெரியும். ஆனா, ஏர் இந்தியா மட்டும் தான் பெட்ஸ் அலோ பண்ணுவான். நாம போறது இண்டிகோ ஃப்ளைட். அதான். புகழ் சார் வேற புலம்பினார். ஆனா, நாம என்னப் பண்றது?” என்று அவன் சொல்ல,
“ஐரீன் அவளுக்கு நல்லா பழகின இந்த இடத்தில, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்” என்றாள் அபிநயா. தன்னால் அப்படி சென்னையில் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவள் பேச்சில் துளியளவும் இல்லை. ஆனாலும், அவள் சொன்னது கார்த்திக்கை பாதித்தது.
“ம்ம், சட்டுனு புது இடத்துக்கு போறது கஷ்டம் தான். இந்த ஃபீல் எல்லாம் எப்படி இருக்கும்னே எங்களுக்கு தெரியப் போறதில்லை. இல்லண்ணி? பிறந்து, வளர்ந்த அதே ஊர், அதே வீடுன்னு பெருசா எந்த சேஞ்சும் எங்க லைஃப்ல வரப் போறதில்ல. நாங்களே முடிவு பண்ணி வேலை, வெளியூர்னு போனா தான் உண்டு. அப்பவும் யாரையும் நாங்களா பிரியப் போறதில்ல.. அதுனால இந்த வலி..” என்று பேசிக் கொண்டே போனவன், அவள் முகம் பார்த்து அமைதியானான்.
“எனக்கு இங்கருந்து கிளம்பறதில் எந்த வருத்தமும் இல்ல கார்த்திக்” அவள் சொல்ல, “ஓகே. நல்லதுங்க அண்ணி” என்றான்.
“வாங்க, வீட்டுக்குள்ள போகலாம்”
“இல்லண்ணி, டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுக்கணும். பக்கத்துல ஏதாவது கடை இருக்கா?”
“பிரிண்ட் அவுட்டா? ஏன் மொபைல்ல சாப்ட் காப்பி காட்டினா போதாதா?”
“இல்ல. டிக்கெட் பிரிண்ட் கையில இருக்கறது நல்லது. வாங்க, போய் எடுத்துட்டு வருவோம்”
“ஓகே” என்று சந்தேகத்துடன் சம்மதம் சொன்னாள்.
“நான் சித்துவை கூப்பிடுறேன். நீங்க அவன் கூட போய்ட்டு..” அவள் முடிக்கும் முன்பே இடையிட்டு, “நீங்க வாங்கண்ணி” என்றான்.
‘ஸ்கூட்டியை எடுத்து வரவா?’ என்று கேட்க நினைத்தவள் தயக்கத்துடன் அந்தக் கேள்வியை தவிர்த்தாள்.
“அப்பத்தா..” என்று ஹாலில் அமர்ந்திருந்த காளியம்மாளை கத்தி அழைத்து, “கடைக்கு போய்ட்டு வர்றேன்” என்று சொல்லி விட்டு கார்த்திக்குடன் நடந்தாள்.
கார்த்திக் கேள்விகள் கேட்க, பதில் சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அவளின் கண்கள் சுழன்று, கால்கள் ஒரு பக்கமாக தானாக நடப்பதை கார்த்திக் சரியாக அவதானித்தான்.
அதற்கு மறுபக்கமாக அவன் போக யத்தனிக்க, “அந்த பக்கம் போக வேணாம். இந்த சைடு எங்க காலேஜ் போற வழியில ஒரு கடையிருக்கு. அங்க போகலாம்” என்றாள் அபிநயா.
இருபுறம் பார்த்துக் கொண்டே நடந்த கார்த்திக், “அது தூரமா அண்ணி? இதோ, இந்த சைடே ஏதோ கடை இருக்கும் போலருக்கே” என்று கேட்க,
“ஏதோ போர்ட் தெரியுதே அண்ணி. கடை இங்கேயே இருக்கும் போது எதுக்கு காலேஜ் வரை நடந்துட்டு? சென்னை வெயில் வேற நேரா என் மண்டையில தான் அடிக்குது. ஷப்பா முடியல” என்று அவன் முன்னே நடக்க, அபிநயா சில வினாடிகள் அப்படியே நின்று, பின் சுதாரித்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
கார்த்திக்கின் கண்கள் வரிசையாக ஒவ்வொரு கடையின் பெயரையும் ஸ்கேன் செய்தபடி இருக்க, வேகமாக நடந்தான்.
நாலைந்து கடைகள் தள்ளியிருந்த ஒரு போர்ட்டை பார்த்ததும், “அவனோட சூப்பர் மார்கெட் அதானே அண்ணி?” என்று பின்னால் திரும்பி பார்த்து அவன் கேட்க, அபிநயாவிற்கு அதிர்ச்சியில் கண்களை இருட்டியது.
அவளின் பேச்சை காதில் வாங்காதவன் போல விறுவிறுவென்று முன்னே நடந்தான் அவன். வேறு வழியின்றி அவனோடு நடந்தவள், “உங்க அண்ணாக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவார்னு யோசிங்க கார்த்திக்” என்று சொல்லி அவனைத் தடுக்கப் பார்க்க,
“புகழேந்தி சார் பத்தி உங்களுக்குத் தான் தெரியல அண்ணி. இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் அவர் பொளந்து கட்டிடுவார்” என்று நாக்கை மடித்து அவன் சொல்ல, முறைத்தாள் அபிநயா.
“கடைக்குள்ள போய் ஏதாவது ரெண்டு ஜூஸ் வாங்குங்க.”
“என்ன பிளான் பண்றீங்க கார்த்திக்”
“ஒன்னுமில்ல அண்ணி. சும்மா பேச்சு வார்த்தை தான். வேற ஒன்னும் பண்ண மாட்டேன். பிளீஸ், வாங்க. ரெண்டு ஜுஸ் வாங்கி வெயிலுக்கு இதமா குடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்” அவன் சொன்னதை கேட்டு மறுப்பாக தலையை அசைத்தபடி அவள் நிற்க சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக். அவனைத் தடுக்க முடியாமல் அவனோடு இணைந்து, உள்ளே நுழைந்தாள் அபிநயா.
கார்த்திக் தன் அலைபேசியில் ஏதோ செய்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டான். அவள் இருந்த பதட்டத்தில் அதைக் கவனிக்காத அபிநயா நேராக உள்ளே சென்றாள்.
சூப்பர் மார்க்கெட்டின் நுழைவு பகுதியிலேயே பில் கவுண்டர் இருக்க, அங்கே மோகன் இல்லாததைப் பார்த்ததும் தான் அவளின் மூச்சு சீராகியது.
மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியிட்டு, கண்களால் தேட முதல் அடுக்கின் இறுதியில் குளிர்சாதன பெட்டி தெரிந்தது. “கார்த்திக் ஃப்ரிட்ஜ் அங்க இருக்கு” என்றபடி, அதை நோக்கி நடந்த அபிநயாவின் வழியை மறித்துக் கொண்டு, எங்கிருந்தோ வந்து குறுக்கே நின்றான் மோகன் குமார்.
அபிநயா சட்டென பின்னால் திரும்பி பார்க்க, அங்கே கார்த்திக் இல்லை.
இவனைப் பார்ப்பதற்காக தானே இவனைத் தேடி வந்ததாக நினைத்து விடப் போகிறான் என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஹேய் அபிநயா” என்று ஆச்சரியம் மிக அழைத்தவனை சுற்றிக் கொண்டு அவள் நடக்க,
“என்ன அபி, என் இடத்துக்கு வந்திருக்க என்னைப் பார்க்க தானே?” இரண்டே எட்டில் அவள் முன் வந்து நின்று கேட்டான்.
அவனை பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாக பார்த்தாள் அபிநயா. ஆனாலும், உள்ளுக்குள் பயமும், பதட்டமும் ரயிலின் வேகத்தில் தடதடத்தது.
“தேவையில்லாம வம்பு பண்ணாம, வழியை விடு” என்றவள், அவனின் பார்வையை கவனித்து பட்டென்று திரும்ப முனைய, அவளின் கையை இறுக்கமாக பற்றி தடுத்திருந்தான் மோகன்.
“பொறுக்கி, கையை விடுடா” என்று அபிநயா மறுகையால் அவனை அடித்து உதற முயன்று கத்த, “பொளேர்னு ஒரு அறையை கொடுங்க அண்ணி” என்றான் கார்த்திக்.
அவனைப் பார்த்ததும் அவள் மனதில் வந்த ஆசுவாசத்தை விட வேகமாக, எட்டி மோகனை அடித்திருந்தான் கார்த்திக்.
“அடிங்க, யார் மேல கையை வைக்கிற? கையை எடுடா ராஸ்கல்” என்று அவன் சட்டைக் காலரை பற்றி இன்னொரு அறையை காதோடு சேர்த்துக் கொடுத்தான்.
“ஏய், யார்ரா நீ?” மோகன் ஆத்திரத்துடன் கேட்க, “யாரா இருந்தா உனக்கு என்னடா வென்று. எங்க வீட்டு பொண்ணு கிட்ட வாலாட்டினா அதை ஒட்ட வெட்டணும் இல்ல?” நாக்கை மடித்து கடித்து அடுத்த அடியை கொடுத்தான். அதற்குள் அந்தச் சத்தத்தில் அங்கே கூட்டம் கூடி விட, கடையின் பணியாளர்கள் முன்னே வந்து பிரித்து விடப் பார்த்தார்கள். அவர்களின் கவனம் எல்லாம் கார்த்திக் மேல் இருக்க, “போலாம் கார்த்திக்” என்றாள் அபிநயாவும்.
“நல்லா இன்னும் நாலு அடி சேர்த்து போடுங்க தம்பி. இவனுக்கு எல்லாம் இது பத்தாது. காலேஜ் படிச்சுட்டுருந்த இந்தப் பிள்ளை பேரை ஊர்ல கெடுத்து விட்டவன் இவன் தான்.” என்று அபிநயா குடும்பத்தை அறிந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் சொல்ல,
“கெட்டு போனது இவன் பேர் தான்.” என்றான் கார்த்திக்.
“வாஸ்தவம் தான் தம்பி” என்றார் அவர்.
“இன்னைக்கு இந்த அடியோட விடுறேன். இனிமே ஒழுங்கா இருந்துக்கோ, போடா. இல்லனா தோலை உரிச்சு தொங்க விட்டுடுவேன்” என்று விரல் நீட்டி மோகனை எச்சரித்து உதறித் தள்ளி விட்டான். மோகனை உதடு சுழித்து அற்பமாக பார்த்துக் கொண்டிருந்த அபிநயா முன் வந்து, அவளை முன்னே செல்லுமாறு அவன் குனிந்து கையை வீசி சொல்ல, புன்னகையை மென்று விழுங்கியபடி முன்னே நடந்தாள் அபிநயா.
இத்தனை நாள்கள் பிரச்சனையை தவிர்த்து விட்டு, இன்றைக்கு மொத்தமாக ஊரை விட்டு செல்லும் போது தானாக போய் தலையை கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாள் அவள். ஆனால், இந்த நிமிடம் அவள் மனம் அடைந்த உணர்வை அவளால் விவரிக்கவே முடியாது.
அந்த சூப்பர் மார்கெட்டை விட்டு வெளியில் வந்த இருவரும் ஒன்றும் பேசாமல் வீடு நோக்கி நடந்தார்கள்.
அபிநயா முகத்தை நிமிர்த்தி மலர்ந்து புன்னகைத்தாள்.
“வீட்ல என்ன சொல்லுவாங்க. அண்ணா என்ன சொல்லுவான், இதையெல்லாம் இப்போ யோசிக்காதீங்க அண்ணி” என்றான் கார்த்திக்.
“இது சினிமாவோ, சீரியலோ கிடையாது அபி. நான் ஹீரோ மாதிரி போய் அவனை அடிச்சுட்டு வீட்டுக்கு வர முடியாது. போலீஸ் ஸ்டேஷன் தான் போகணும். புரிஞ்சுதா? சோ நாம எதைப் பண்ணாலும் லீகலா பண்ணலாம்” என்று புகழேந்தி முன்பு சொன்னது அவள் மனதில் வந்துப் போனது.
இப்போது அவன் என்ன சொல்வானோ என்ற பதட்டம் அவளுக்கு வந்தாலும், கார்த்திக்கை அவள் வீட்டிற்கு அனுப்பியவன் இதை நிச்சயம் எதிர்பார்த்திருப்பான் என்றே தோன்றியது.
“பிளீஸ், புகழ் சார் கிட்ட போட்டு மட்டும் கொடுத்துடாதீங்க அண்ணி.” கார்த்திக் கெஞ்ச, “அப்படியே உங்க அண்ணனுக்கு ரொம்பதான் பயம்” என்று கேலியாக சொன்னாள் அபிநயா.
“உண்மையை சொன்னா யார் நம்புறாங்க.” என்று கார்த்திக் புலம்ப, “சரி, நம்பிட்டேன் வாங்க. இப்போ போய் டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வீட்டுக்குப் போகலாம். லஞ்ச் சாப்பிட்டு ஏர்போர்ட் கிளம்பணும். லேட்டாகுது”
“பிரிண்ட் அவுட்டா? எதுக்கு? மொபைல் காப்பி போதாதா அண்ணி?” என்று கார்த்திக் அப்பாவியாக கேட்க, அபிநயா சத்தமாக சிரித்து விட்டாள்.
“என்ன சொன்னீங்க?” என்று கேட்டவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
அந்நேரம் பார்த்து அவளது அலைபேசி அழைக்க, திரையில் காணொளி அழைப்பில் அழைத்தான் புகழேந்தி.
ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து அவனது அழைப்பை ஏற்றாள்.
“ஹாய் அபி” என்றழைத்து பற்கள் தெரிய புன்னகைத்தான் புகழேந்தி. அவன் குரலில் புதிதாக இருந்த துள்ளலும், வித்தியாசமும் அவளுக்கு சட்டென்று பிடிபட்டது.
அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அபிநயா.
அந்தக் கணம் அவளுக்கு எந்தக் கவலைகளும் இல்லை.
பல மாதங்கள் தன் பின்னே யாரோ பின் தொடரும் உணர்வில் நிம்மதியின்றி, தூக்கத்தை தொலைத்து தவித்திருக்கிறாள். ஆனால், இன்று அந்த மோகனின் முகத்தில் தெரிந்த பயம் அவளுக்கு அப்படியொரு ஆழ்ந்த மனஅமைதியை தந்தது.
மோகனின் முடிவு அவளுக்குத் தெரியாது. ஆனால், அவளால் இனி எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். இவனைப் போன்றவர்கள் இனி அவளுக்கு பொருட்டல்ல.
“அபிநயா…” புகழேந்தி மீண்டும் அழைக்க,
“எஸ் சார்” என்றாள்.
“அச்சச்சோ தப்பு அபி. புகழ் சொல்லு பார்ப்போம்”
“புலவர் சொல்றேன்”
“ரைட். ரொம்ப நல்லதா போச்சு. கவிதை படிக்கலாம்” என்று குறும்பாக ஒற்றை கண் சிமிட்டியவனை அந்த நொடி அவளுக்கு அத்தனைப் பிடித்தது. அவனை கண்களால் மொத்தமாக கட்டிக் கொண்டாள் அபிநயா.
“நீ கண்ணால கவிதை படிக்கிற அபி” குறும்பு சிரிப்புடன் சொன்னான் புகழேந்தி.