பால்ய பருவத்தில் தான் மிகவும் விரும்பிக் கேட்டு தன் தந்தை தனக்கு முதன் முதலில் வாங்கிக் கொடுத்த கால் பூட்டணியின் மேல், ஒரு சமயம் பூஞ்சோலை கிராமம் சென்றிருந்த போது சிறு வயது ராஹி அறியாமல் ஐஸ்க்ரீமை கொட்டி, ஆதி அவளைத் திட்டி, பதிலுக்கு அவளும் பேசி என்று ஆதியின் பார்வையில் பொறுப்பில்லாதவளாய் பட்டிக்காட்டுப் பெண்ணாய், சொல் பேச்சுக் கேளாதவளாய் பதிவாகியிருந்த ராஹிக்கும், அனைத்திலும் சிறந்ததை எதிர்பார்க்கும் ஆதிக்கும் இடையில் அப்பொழுது இருந்தே பெரிய பிடித்தமின்மையே படர்ந்திருக்க… ராஹி சென்னை வந்த இந்த ஆறு மாத காலத்தில், சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அந்த பிடித்தமின்மையை அதிகமாக்கித்தான்
இருந்தது.
இருந்தும் தந்தைக்காக அவளை பி ஏ வாக்கி இருப்பவன், இன்று சிவாவுக்கு பதிலாக அவளை பார்ட்டிக்கும் அழைத்து வந்தவன், அவள் இரவு பத்து மணிக்குள் ஹாஸ்டலில் இருக்க வேண்டும் என்று கூறியதாலோ என்னவோ பார்ட்டியில் உணவு கூட அருந்தாமல், (பசியோடு இருந்தவளையும் உண்ண விடாமல்) அவளுக்காக மட்டுமே அத்துணை விரைவாய் அவளை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பியவனை, தற்சமயம் ஒரு காமக் கொடூரன் போல் அவள் பார்த்த நம்பிக்கையற்ற பார்வையும், சூழ்நிலையை உணராது அவள் கூற வந்த வார்த்தைகளும் அவன் சுயமரியாதையை வெகுவாக சீண்டி விட்டிருந்தது.
அழகிலும், ஆண்மையிலும், அந்தஸ்திலும் வெகு உயரத்தில் இருப்பவனின் மஞ்சத்தை அலங்கரிக்கவும், அவன் கடைக்கண் பார்வை கிட்டதா என்றும் ஆயிரக்கணக்கான பெண் மான்கள் காத்துக் கிடக்க, இன்று இந்த நிமிடம் தான் இருக்கும் அறைக்குள் வரவே ஒரு பெண் தயங்கி நிற்பதா என்ற எண்ணமே அவனை கோபத்தின் உச்சியிலும் கொண்டு போய் நிறுத்த போதுமானதாக இருந்தது.
நான் ஒன்றைச் செய்ய நினைத்தால் அதை உன்னால் தடுக்க முடியாது என்றும், உன் மேல் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்றும் அவளுக்கு உணர்த்தும் பொருட்டு, சற்று போதயில் இருந்தாலும் செய்யும் செயல் உணர்ந்தே பெண்ணவளின் இதழ் தீண்டித் தள்ளி விட்டவன் அவளை கடுமையாக ஏசியும் விட்டு ஒன்றுமே நடவாதது போல் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ… முதன் முதலில் கிட்டிய ஒரு ஆணின் அதிரடிப் ஸ்பரிசத்தில் தொய்ந்து விழுந்த பெண் தான் மூச்சு விட மறந்து அதிர்ச்சியில் உறைந்தாள்.
முற்றும் முழுதும் அமெரிக்க கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவனுக்கு நொடி நேரம் நிகழ்ந்த அந்த இதழ் ஒற்றல் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது போனாலும், கற்பைச் சுட்டி காட்டி பல காவியங்கள் உருவாக்கிய தமிழ் பண்பாட்டில் ஊறி வளர்ந்தவளுக்கோ, இன்னும் உதட்டை எறியச் செய்யும் ஆணவனின் ஒற்றை முத்தமே அவள் உயிரின் வேர் வரைப் பரவி, பெண்ணவளின் ஊனோடு உள்ளத்தையும் நடுநடுங்கச் செய்தது.
கல்லூரியில் படிக்கும் பொழுதில் கூட ஆண்வாசமே அண்டாது பெண்கள் கல்லூரியிலே படித்து வந்தவளுக்கு, சற்று முன்னர் அவன் விரல்கள் தன் மேனியில் அழுந்திய இடங்களும், அவனால் தீண்டப்பட்ட உதடுகளுமே அந்நியமாகத் தோன்ற, “ச்சீ ஏண்டா இப்டிப் பண்ண?” என்று அவன் முத்தமிட்ட இடத்தை மீண்டும் மீண்டும் துடைத்தபடியே அமர்ந்திருந்தவளின் உள்ளமோ கணவன் என்று வரும் ஆணுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை அவன் அத்து மீறி அபகரித்து விட்டதாகவே எண்ணி உலை கணலாய் கொதித்துக் கொண்டிருக்க, அதற்கு போட்டியாக பெண்ணவளின் விழிகளும் தாரை தாரையாய் உவரி நீரை வெளியேற்றியது.
அவன் மேல் அத்துணை ஆத்திரமும், ஆற்றாமையும் இருந்தும் வலிமை பொருந்திய ஆணவனை ஒன்றும் செய்ய முடியாததோடு, ‘எங்கே சப்தமிட்டு அழுதால் உறங்கியிருப்பவன் எழுந்து வந்து தன்னை மேலும் ஏதேனும் செய்து விடுவானோ’ என்றும் அஞ்சி நடுங்கி, சுவரோடு ஒட்டி அமர்ந்து மௌனக் கண்ணீர் வடித்தவள், பசி மயக்கத்தில் அவளையும் அறியாது உறங்கியும் போனாள் ராஹித்தியா.
நேற்றைய இரவின் தாக்கத்தில் தன்னையும் அறியாது அமர்ந்தவாக்கிலே உறங்கிப் போனவள் அதிகாலையில் தன்னருகில் கிடந்த ஆதியின் அலைபேசி சப்தத்தில் உறக்கம் கலைந்து மெல்ல எழுந்தவளுக்கு நொடியில் இரவு நடந்த அனைத்தும் கண்முன் வர, உடல் நடுங்க விருட்டென்று ஆதி இருந்த திசையைப் பார்த்தாள்.
அவனோ நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, அவன் கண்ணில் இருந்து மறைந்தால் போதும் என்று சிறிதும் யோசியாது வேகமாக அறையை விட்டு வெளியேறியவள் தன் பாட்டில் நடக்கவும் தொடங்கிவிட்டாள் ராஹித்தியா.
பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்தவள், சென்னையை அடைய இன்னும் வெகுதூரம் இருந்தும் ஏதேனும் வண்டி கிடைக்குமா என்று கூட பார்க்கத் தோன்றாது நேற்றய நிகழ்வுகளிலே உலன்றபடி மீண்டும் மீண்டும் பொங்கி வந்த கண்ணீர் அருவியை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்துக் கொண்டும் கால் போன போக்கில் தன் நடைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவளை “ராஹி ராஹி நில்லு ராஹி” என்று கத்திய ஆத்விக்கின் குரலால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை.
நேற்று இரவு மரத்தில் மோதி வண்டி நிற்கவுமே சிவாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆத்விக்கின் எண்ணிற்கு அழைக்க முயற்சித்த ஆதித்யா, வலைப்பின்னல் (நெட்ஒர்க்) பிரச்சனையால் முடியாது போக, ஒரு குறுந்தகவலை மட்டும் தம்பிக்கு அனுப்பி வைத்தவன் வேறு வழியின்றி அந்தப் பகுதியில் இருந்த விடுதி ஒன்றில் இரவைக் கழிக்க முடிவு செய்து ராஹியுடன் அங்கு சென்றிருந்தான்.
அதிகாலை எழுந்தவுடன் தான் அண்ணனின் அலைபேசியில் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த ஆத்விக்கும் கார் பொறிமுறையாளருக்கும் (மெக்கானிக்) இடத்தை சொல்லி வரப் பணித்தவன், அவனும் அங்கு தான் சென்று கொண்டிருக்க, வழியிலே ராஹி அவள் போக்கில் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவளை நோக்கி வந்தவன் அவள் தோள்களைப் பிடித்து நிறுத்தவும் தான் தன்னிலை உணர்ந்தவள், “ஆது மாமா நீங்க நீங்க எப்டி இங்க?” என்று திணறினாள் பெண்.
பிரம்மை பிடித்தது போல் இருந்த ராஹியை ஒரு மாதிரிப் பார்த்தவனோ, “நான் வர்றது இருக்கட்டும் கூப்ட கூப்ட காதில வாங்காம நீ எங்க போயிட்டிருக்க ராஹி?” என்று வினவ…
அவன் கேள்வியில் தான் சுற்றியும் முற்றியும் பார்த்து தான் செய்து கொண்டிருக்கும் மடத்தனத்தையும் புரிந்தவள், அவனுக்கு என்ன பதில் சொல்ல என்றும் குழம்பி நின்றாள்.
‘நேற்று உன் அண்ணன் முத்தமிட்டதால் தான் எனக்கு இந்த நிலை’ என்று தம்பியிடம் கூற முடியாது தவித்திருந்தவளின் தோளைப் பற்றி “ஹேய் ராஹி ஆர் யூ ஓகே?” என்றவன் மீண்டும் உலுக்கவும் முழுதாக மீண்டவள்…
“ஹான் ஐம் ஓகே மாமா” என்று கூறி நேற்று தானும் ஆதியுடன் சென்றது வண்டி மரத்தில் மோதி நின்றது என்று கவனமாக ஆதி செய்த அபத்தம் மட்டும் விடுத்து அனைத்தும் கூறி முடித்தாள்.
அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டிருந்தவன் இரண்டு பேருக்கும் ஏதும் அடி பட்டதா என்றும் கேட்டு உறுதி செய்து கொண்டபின்னரே, “எல்லாம் சரிதான் ராஹி. வண்டி ரெடியானப் பின்ன அண்ணா கூடவே வராம நீ ஏன் இப்டி தனியா நடந்து போயிட்டிருக்க?” என்று மேலும் வினாத் தொடுக்க…
அதில் மீண்டும் மலங்க மலங்க விழித்தவள், “அங்க அங்க ஆ ஆ ஆதி சார் நல்லா தூங்கிட்டிருக்காங்க. என் போன்ல வேற சார்ஜ் இல்லை. நைட்டு ஹாஸ்டல் போகாததால சாஹி பயந்து போய் இருப்பா அதான் நான் பஸ் பிடிச்சி போகலாம்னு கிளம்பி வந்துட்டேன் மாமா” என்று திக்கித் திணறிக் கூறியவளை இன்னும் குழப்பம் அகலாமலே பார்த்தவனும், “இட்ஸ் ஓகே ராஹி ஒன் மினிட் வெயிட் பண்ணு அண்ணாக்கு மெசேஜ் பண்ணிட்டு நானே உன்ன கூட்டிட்டுப் போறேன்” என்று சொன்னவன் தன்னோடு வந்த கார் பொறிமுறையாளனை மட்டும் அவ்விடத்திற்கு விரையுமாறு பணித்து விட்டு ஆதிக்கும் குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பி விட்டு ராஹியை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி கிளம்பி விட்டான் ஆத்விக்வர்மா.
எப்பொழுது ஆத்விக்கை சந்தித்தாலும் புன்னகை முகமாக அளவளாவிக் கொண்டிருப்பவள், நேற்றய நிகழ்வில் இருந்து இன்னும் வெளிவர முடியாது தவித்திருந்தாளோ என்னவோ.
மருந்துக்குக் கூட ஒரு வார்த்தை இல்லாது என்றுமில்லாத் திருநாளாய் அமைதியின் சிகரமாகி வாடி வதங்கிய வதனத்துடன், இறுக்க விழிகளை மூடி காரின் இருக்கையில் சாய்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்து பார்த்துத் துணுக்கமுற்றவன், “ஹேய் ராஹி உனக்கு என்னாச்சு? ஏன்பா ஒரு மாதிரியா இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையா? ஹாஸ்பிடல் போய்ட்டு ஹாஸ்டல் போவோமா?” என்று சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுத்தான்.
அவன் பேச்சில் சற்றே தன்னைத் தேற்றிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்து ஒரு கட்டாயப் புன்னகையை உதிர்த்தவளும், “அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா. நான் நல்லா இருக்கேன். நேத்து நைட் சாப்புடாததால கொஞ்சம் லோவா பீல் பண்றேன். வேற ஒன்னும் இல்லை” என்று மட்டும் கூறியவள் மீண்டும் இருக்கையில் தஞ்சம் புக…
அதைக் கேட்ட ஆத்விக்கோ, “நேத்து நைட்டு பார்ட்டில சாப்புடலியா நீ?” என்று கேட்டு வண்டியை நிறுத்தியே விட்டான்.
வண்டியை நிறுத்தியதோடு நில்லாமல் வம்படியாக அவளை அழைத்துச் சென்று, எதிரே இருந்த உணவு விடுதியில் உணவருந்தச் சொல்ல…
அவளோ, “எனக்கு டீ மட்டும் போதும் மாமா” என்று ஒரேயடியாக மறுத்தும் விட்டாள்.
வயிற்றின் பசியும், உடலின் சோர்வும் மூளையில் உறைத்தாலும், மனம் முழுதும் ஆதியின் நேற்றைய செயல்களும் வார்த்தைகளுமே சூழ்ந்திருக்க, ஆத்விக்கின் வற்ப்புறுத்தலால் கரத்தில் ஏந்திய தேநீர் கூட தொண்டையில் இறங்க மறுத்தது ராஹிக்கு.
ஒருவழியாக அவளை அதட்டி மிரட்டி அந்த தேநீரோடு இரண்டு பிஸ்கட்டுகளையும் உண்ண வைத்தப் பின்னரே மீண்டும் மகிழுந்தைக் கிளப்பியவன், “ராஹி என்ன நீ. உன்ன நான் சாப்பாட்டு ராமி, நம்ம இனம்னு பெருமையா நினைச்சிருந்தேன். நீ என்னடான்னா ஒரு டீ குடிக்கவே இன்னிக்கு இவ்ளோ யோசிக்கிற? இன்னிக்கு நீ ராஹி போலவே இல்ல. யாரோ போல பிஹேவ் பண்ற” என்றும் மனதிலிருப்பதை மறையாது கூறியவன், அவள் அதற்கும் ஒரு புன்னகையை பதிலாகக் கொடுக்கவும் வேறு வழியில்லாது அமைதியாகவே வண்டியைச் செலுத்தி வந்து அவளின் தங்கும் விடுதியில் நிறுத்தினான்.
வரும் வழியிலேயே சாஹிக்கும் அழைத்துச் சொல்லியிருந்தமையால் அவளும் தமக்கைக்காக ஆவலோடு காத்திருந்தவள், ராஹியைப் பார்த்ததும் வாரி அணைத்துக் கொண்டு, “ராஹி ஏன் டி போன்ல சார்ஜ் கூட போட்டு வைக்கமாட்டியா? நைட்டு நீ வர லேட் ஆகும்னு சொன்னதால உன்கிட்ட ஒரு சாவி இருக்கேன்னு நான் பாட்டுக்கு தூங்கிட்டேன். காலைல பாத்தா உன்னக் காணும். நீ ரூம்ல இல்லங்கவும் எனக்கு உயிரே நின்னுருச்சு தெரியுமா. அப்றம் ஆது மாமாக்கு போன் பண்ண பின்னாடிதான் கொஞ்சம் நிம்மதியாச்சு” என்றும் படபடப்பாகப் பேசியவள் அப்பொழுது தான் ஆத்விக்கும் அங்கு நிற்பதை உணர்ந்து வரவேற்பரையின் இருக்கையைக் காட்டி, “உக்காருங்க ஆது மாமா” என்று வார்த்தைக்கு வலிக்காமல் சொல்ல… ராஹியும், “ஆமா மாமா உக்காருங்க” என்று தங்கையை வழி மொழிந்தாள்.
அது அஸ்வினுக்குத் தெரிந்த ஒரு கண்டிப்பான கண்ணியமான பெண்கள் விடுதியாதலால் அந்நிய ஆண்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. மூவரும் வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் நின்றே பேசிக்கொண்டிருக்க, இரட்டையரின் வார்த்தையில் அவர்களை நிமிர்ந்து பார்த்தவனும், “இப்போவாச்சும் ஏஞ்சல்சுக்கு என்னோட ஞாபகம் வந்ததே? நான் கூட உங்களோட பாசமலர் படம் இன்னிக்கு முடியாதோன்னு நினைச்சி பயந்துட்டேன்” என்று இதழ் விரிந்த புன்னகையோடு சூழலை இலகுவாக்கியவன் அப்பொழுதும் மெல்லிய புன்னகையே உதிர்த்த ராஹியைப் புருவம் நெறிக்கப் பார்த்து விட்டு சாஹியிடம் திரும்பி, “நேத்து நைட்டு மரத்துல கார் மோதுனதுல இருந்து உன்னோட சிஸ்டர் ரொம்ப பயந்துட்டான்னு நினைக்கிறேன். ஆளே பாக்க ஒரு மாதிரியா இருக்கால்ல” என்று சொல்ல…
அதைக் கேட்ட ராஹிக்கோ ‘கார் மோதுனதுலாம் பயமே இல்லை. உங்க அண்ணன் அந்த ஆதி டெவில் எக்குத் தப்பா மோதுனதால தான் சீக்கு வந்த கோழி மாறி ஆகிட்டேன்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
ராஹியின் உள்ளம் படும் பாட்டை அறியாது மேலும் தொடர்ந்த ஆத்விக்கும், “இதப்பாரு ராஹி பேப் உனக்கு உடம்புக்கு முடிலனா ரெண்டு மூனு நாளைக்கு ஆபிஸ் பக்கம் வராத. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்றம் வா. நான் அண்ணா கிட்ட சொல்லிக்கிறேன். அப்றம் எப்போ, என்ன ஹெல்ப் வேணாலும் தயங்காம என்னக் கூப்பிடுங்க. சரியா?” என்றும் ராஹியிடம் தொடங்கி இருவரிடமும் சேர்த்தே முடித்த அன்பிற்கினிய ஆணவனின் அக்கறையில் இரு பெண்களின் உள்ளமும் இன்னும் கொஞ்சம் அவன் பால் ஈர்க்கப்பட்டாலும், ‘ஆதி மட்டும் ஏன் ஆது மாமா போல இல்ல?’ என்று மனதோடு கேட்டுக் கொண்ட ராஹியால் முன்பு போல் ஆத்விக்கின் கண்ணைப் பார்த்து பேசத்தான் முடியவில்லை.
சற்றே ஆதியின் சாயலில் இருக்கும் ஆத்விக்கின் முகத்தை ஏறிடும் பொழுதெல்லாம், நேற்று இரவு மிக மிக அருகில் பார்த்த ஆதியின் ரௌத்திரம் மின்னிய விழிகளும், அதைத் தொடர்ந்த அவனின் அநாகரீகச் செயல்களுமே பெண்ணவளின் கண்ணை நிறைக்க, இப்பொழுதைய ஆத்விக்கின் வார்த்தைக்குக் கூட, “ம்ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தவள், “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்றும் பொதுவாகக் கூறிவிட்டு தங்கள் அறை நோக்கிச் சென்றவள் படுக்கையிலும் சுருண்டு கொண்டாள்.
செல்லும் ராஹியையே நிமிட நேரம் பார்த்த ஆத்விக்கும் “ஓகே சாஹி அப்றம் நானும் கிளம்புறேன். ராஹியக் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோ. எனி ஹெல்ப் கால் மீ இம்மீடியன்ட்லி.” என்றும் சொன்னவனிடம்…
அவளோ, “ரொம்பத் தேங்க்ஸ் ஆது மாமா” என்று சொன்னாள்.
அதற்கு “ப்ச்” என்று அவளைச் செல்லமாய் முறைத்தவனும் “நோ சாஹி பேப் நமக்குள்ள நோ தாங்க்ஸ். நோ பார்மாலிட்டீஸ்.” என்றும் கண்சிமிட்டிச் சிரித்து விட்டுச் செல்ல….
அவனின் வார்த்தையில் நெகிழ்ந்த பெண்ணும் இதழ் விரிந்த புன்னகையோடு கண்கள் நின்றும் மறையும் மட்டும் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள் சாஹித்யா.
தான் தான் ஏதோ பெரும் பிழை செய்தது போன்ற மனக் கலக்கத்தில் யார் முகத்தையும் காணப் பிடிக்காது படுக்கையில் வந்து புதைந்து கொண்டவளுக்கு அடுத்து வந்த நாட்களில் கூட விழிகளை
விடிகாலையில் துயில் தழுவுபவளின் கனவில் கூட ஆதியின் முகமே வந்து முத்தம் பதித்துச் செல்ல, என்ன செய்தும் அந்நினைவுகளைத் துரத்த முடியாது தவித்தவள், காய்ச்சல் என்னும் பெரும் நோவினையும் சேர்த்து இழுத்துக் கொண்டு அவதி பட்டாள் ராஹித்தியா.
முத்தக் காய்ச்சல் காதல் காய்ச்சலாக மாறுமா??? அல்லது ஆணவனின் ரௌத்திரத்தில் வெறும் கானல் நீராகிப் போகுமா???
ஆதியின் அன்றைய அதிரடியில் ராஹி தான் இப்படித் தவித்திருந்தாளே ஒழிய, கலகலப்பாக உலா வந்த பெண்ணுக்கு காய்ச்சல் வர வைத்தவனோ அவளைப் பற்றிய சிந்தனையே இல்லாது வழக்கம் போல் தன் அலுவலில் பரபரப்பாகத்தான் இருந்தான்.
அன்றைய நாள் கோபத்தில் ராஹியிடம் அப்படி நடந்து விட்டு உறங்கிப் போனவன், மறுநாள் காலை சாவதானமாகக் கண்விழித்து தம்பியின் குறுந்தகவலைப் பார்த்தான்.
அதில், ‘ராஹியை அழைத்துப் போகிறேண்ணா’ என்று இருந்த செய்தியில், “சர்வா கூட ஆத்விக் கூட இப்டி எல்லா ஜென்ஸ் கூடவும் சகஜமா இருப்பாளாம் பேசுவாளாம். ஆனா என்கூட ரூம்ல தங்குறதுக்கு மட்டும் நேத்து நைட்டு என்னம்மா சீன் போட்டா. சரியான ட்ராமா க்வீன்.” என்று ராஹியின் நினைவுகளை அசட்டையாக ஒதுக்கி தன் பணிகளில் மூழ்கியவன் அடுத்து வந்த நாட்களில் “ராஹிக்கு காய்ச்சல்ணா அவ வேலைக்கி வர டூ த்ரீ டேஸ் ஆகும்” என்று ஆத்விக்கின் வாயிலாக அறிந்த அவளது உடல் நலமின்மையும் கூட ஒரு தோள் குலுக்களோடு தான் கடந்திருந்தான் ஆதித்யவர்மா.
முன்பு எப்போதையும் விட இச்சமயம் அதீத காய்ச்சலால் அவதிப்பட்ட ராஹிக்காக சாஹியும் தன் அலுவலுக்குச் செல்லாது தமக்கையின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள, ஆத்விக்கும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அழைத்து வருவது சகோதரிகளுக்கு வேண்டியது பார்த்து வாங்கிக் கொடுப்பது என்று உற்ற தோழனாக ஒரு சிறந்த ஆண்மகனாக மேலும் மேலும் பெண்களின் அன்பை அலுங்காது கைப்பற்றினான்.
நாட்களும் அதன் போக்கில் செல்ல தங்கை மற்றும் ஆத்விக்கின் கவனிப்பில் நன்கு தேறி வந்தவளும் இனியும் ஓடி ஒளிய முடியாது என்றெண்ணி மனதை நிலைப்படுத்திக் கொண்டவள், ஆதியின் அலுவலகத்திற்கும் வந்து சேர, அவனோ அன்றைய நாள் தன் வாழ்வில் நிகழவே இல்லையோ என்று எண்ணுமளவு மிக மிக மிக இயல்பாக தன் வழியில் ஓடிக் கொண்டிருந்தான்.
ஆணவனின் அந்த அதீத மிதப்பில், ‘இவனால காய்ச்சல் வந்து நான் எவ்ளோ அவதிப்பட்டு வந்துருக்கேன். ஆனா இவன் எவ்ளோ ஹாப்பியா இருக்கான்.’ என்று நெஞ்சம் குமுறியவள், “அன்னிக்கு ஏண்டா அப்டி பண்ணன்னு நாக்கைப் பிடுங்கற மாறி நாலு வார்த்தை கேட்டாதான் என் மனசு ஆறும். இருடா உன்ன வர்றேன்” என்றும் வரவழைக்கப்பட்ட துணிவோடு அவன் அறைக்குள் நுழைந்தவளை…
அவனோ பேசக்கூட விடாது, “ஹேய் கமான் ராஹித்தியா நானே கூப்பிடணும்னு நெனச்சேன். இத கொஞ்சம் டைப் பண்ணி சீக்கிரம் எடுத்துட்டு வா. இம்மிடீயட்டா ஒரு மெயில் அனுப்பனும்” என்று சொல்லி அவளிடம் சில அச்சடித்த தாள்களை நீட்டியவன் பார்வை தன் இதழ்களிலே இருப்பது போல் ஒரு பிரம்மை தோன்றியது பெண்ணிற்கு.
அந்த பிரம்மை தோற்று வித்த செய்தியில் கேட்க வந்த வார்த்தை எல்லாம் போன இடம் தெரியாது தொண்டைக்குழியிலே பதுங்கிக் கொள்ள மென் மேலும் அவனைப் பீதியாகப் பார்த்தவளும், “ஓகே சார்” என்று மட்டும் சொல்லி அவன் கொடுத்த காகிதங்களோடு அடித்துப் பிடித்து அவன் அறையை விட்டு வெளியேறி விட்டாள் பெண்.
அடுத்தடுத்த நாட்களிலும் ஆதியின் அருகாமை ராஹிக்கு அளவுக்கு அதிகமான படபடப்பையே அவளுள்ளே தோற்று வித்தாலும் இத்துணை பேர் இருக்கும் அலுவலகத்தில், அன்று போல் அவன் தன்னிடம் தவறாகவெல்லாம் நடக்க முடியாது என்று எண்ணியே தன்னைத் தேற்றிக் கொண்டவள் அவன் முன்னே இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொண்டாள்.
என்னதான் ராஹி இயல்பாக இருப்பது போல இருந்தாலும் நொடிக்கு நூறு வார்த்தை பேசுபவள் இப்பொழுதெல்லாம் தன்னிடம் ஒரு வார்த்தை பேசுவதற்குள் நூறு முறை மூச்சை இழுத்து விடுபவளை ஆராய்ச்சியாகப் பார்த்து அவளின் எண்ணப் போக்கை யூகித்துக் கொண்டவனும், “இவளெல்லாம் திருத்தவே முடியாது. ட்ராமா க்வீன்” என்று பல்லைக் கடித்தவன்…
“இந்த கன்ட்ரி ப்ரூட் நம்ம கிட்ட இப்டி மௌத் க்ளோஸ்டா டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணி இருக்கது கூட ஒரு மாறி ஜாலியாத் தான் இருக்கு” என்றும் எண்ணிச் சிரித்துக் கொண்டவன் அறியவில்லை…
இடைவெளியே ஏற்படுத்த முடியாத ஏகாந்த பந்தத்தில் அவர்களை இறுக்கிப் பிணைத்து வைக்க அவன் தந்தை நாள் பார்த்து வருகிறான் என்று.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.