என்று தமிழ் கவிஞர்களின் கருத்தைக் கூட கவர்ந்திழுத்த மிக மெல்லிய மெல்போன் மலர்கள் கூட்டம் கூட்டமாக பூத்துக் குலுங்கும், அதே பெயரில் அழகிய நகரத்தையும் கொண்ட, உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மிகவும் சிறிய கண்டமாகிய பனிப்பாறைகளின் உறைவிடமும், குட்டி குழந்தைகள் போன்று தத்தித் தத்தி நடக்கும் பெங்குவின்களின் பிறப்பிடமும் இன்னும் பற்பல வியக்கத்தக்க சிறப்புகளைப் பெற்ற அந்த ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகரமான கேன்பெர்ரா மாகாணத்தின் மத்தியில் உள்ள அந்தக் கட்டிடம் “எ பார்க் ஹயாத்ட் ஹால்” என்ற உலோக எழுத்துக்களால் மின்னபட்ட பாரிய பலகையை தன் நெற்றியில் தாங்கியிருந்தது.
வானளவு உயர்ந்து, அதற்கேற்ப பரப்பும் கொண்ட அந்த கட்டிடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பல வண்ண அலங்கார விளக்குகளால் கண்ணைப் பறிக்கும் ஒளியை வாரி இரைத்து அந்த இரவு நேர வேளையைக் கூட பகல் பொழுதை விடவும் வெளிச்சமாக காட்டிக் கொண்டிருக்க…
“மிட்நைட் ஹோட்டல்” என்று அங்குள்ள மேல்தட்டு வர்க்கத்தினரால் சுருக்கமாக அழைக்கப்படும் அந்த கேளிக்கை விடுதியில் இருந்த பரபரப்பும், அங்கு இசைத்துக் கொண்டிருந்த பிரபல பாப் இசைகளும், அந்த
இசைக்கேற்ப “கேபிரே டான்ஸ்” என்கிற பெயரில் உடலை வளைத்து, நெளித்து, அங்கு குழுமியிருந்த ஆண்களின் விழிகளை எல்லாம் கட்டிப் போட்டிருந்த அழகிகளின் அநாகரிக ஆட்டங்களும் அந்த இரவு நேர வேளையிலும் கோட்டும் சூட்டுமாக, கையில் மின்னிய மதுக் கோப்பைகளோடு உலா வந்த தொழில் வல்லுநர்களின் அணிவகுப்பும் அங்கு ஒரு தொழில் பார்ட்டி நடக்கபோவதை தவறாமல் எடுத்துரைத்தது.
அது சரிதான் என்பது போல் அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த கேன்பெர்ரா நகரை தாயகமாகக் கொண்ட பெரும் பணம் படைத்த ஆஸ்திரேலியன் ஒருவர், தன்னுடைய சிவந்த முகத்தில் முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி அங்கு பார்ட்டி ஹாலில் இருந்த தன் தோழனிடம் “வர்மா குரூப்ஸ் ஆர் கம்பெனீஸ்” உடனான அவரது பாட்னர்ஷிப் பற்றியும், அதன் ஒன் ஆப் தி சேர்மன் ஆதித்யவர்மாவோடு இணைந்து அந்த கேன்பெர்ரா மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தங்களுடைய பிரமாண்ட ரேஸ் கார்கள் தயாரிப்புத் தொழிற்சாலை பற்றியும், பூரிப்புடன் அளவளாவிக் கொண்டிருக்க….
அந்த ஆஸ்திரேலியனை நெருங்கிய அவருடைய காரியதரிசியோ, “சார் டைம் இஸ் கோயிங் ஆன் சார், பார்ட்டி ஸ்டார்ட் பண்ணனும் வர்மா குரூப்ஸ் எம் டி இன்னும் வரல, அவருக்கு ஒரு கால் பண்ணட்டுமா சார்.?” என்று தன் கடிகாரத்தை பார்த்த வண்ணம் தூய ஆங்கிலத்தில் பவ்யமாக வினவினான்.
தன் காரியதரிசியின் கூற்றில் இப்பொழுது சத்தமாகவே சிரித்து விட்ட அந்த அயல் நாட்டினனோ… “நோ ஸ்டீவா, மிஸ்டர் வர்மா இன்னும் வரலன்னா கரெக்ட் டைம் இன்னும் ஆகலன்னு அர்த்தம்” என்று தன்னெதெரில் இருந்த மிகப்பெரிய சுவர் கடிகாரத்தை சுட்டிக்காட்டிக் கூறியவர்…
“அவரோட பங்ச்சுவாலிட்டி பாத்து நானே எவ்ளோ வியந்துருக்கேன், பார்ட்டி செலிப்ரேஷன் ஸ்டார்டிங்கு இன்னும் பைவ் மினிட்ஸ் இருக்கு ஸ்டீவா, அதுக்குள்ள அவர் வந்துருவாரு நீ மொதோ உன்னோட ஓட்ட வாட்ச்ச மாத்து மேன்” என்று சிரிப்பு மாறாமலே அதே ஆங்கிலத்தில் தன் பி ஏ வுக்கு பதில் உரைத்தவர் மீண்டும் தன் நண்பரிடம் திரும்பிய வேளை அந்த பார்ட்டி ஹாலின் நுழைவாயிலில் வந்து க்ரீச்சிட்டு நின்றது ஒரு வெள்ளை நிற பஹானி ஹுய்ரா.
பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்தில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த அந்த மகிழுந்தை அதன் டயர்களில் தீப்பொறி பறக்க அந்த பார்ட்டி ஹாலின் பார்க்கிங் பகுதியில் பாந்தமாகப் பொருத்தினான் அவன்.
அன்னப்பறவையின் நிறத்தில் இருந்த பஹானியின் மூடு திரை இரண்டும் அந்த அன்னப்பறவையின் இறக்கைகள் போலவே மேல் வழியாக உயர்ந்து தன்னுள்ளே பொதிந்து இருந்த நம் நாயகனுக்கு வெளியே வருவதற்கு வழி செய்து கொடுக்க அந்த மகிழுந்தின் திறப்பு வழியாக ஒரு வேழத்தின் வேகத்தோடு மின்னலென வெளியே வந்து குதித்தான் ஆதித்யவர்மா.
ஆறடி ஒரு அங்குல உயரத்தில், நாள்தவறாது செய்யும் உடற்பயிற்சி, மற்றும் நீச்சல் பயிற்சியின் உபயத்தில் பரந்து விரிந்த மார்பும் குறுகிய இடையும் கொண்டு சிவப்பும் வெள்ளையும் கலந்த ஒரு புதுவித நிறத்தில் காண்போரை கவர்ந்திழுக்கும் கம்பீரத்தோடு ஒரு புரவியின் துரித நடையில் அந்த பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்த ஆதித்யவர்மா, பூஞ்சோலை யுவராஜின் தாய்மாமன் மகன் அஸ்வின்வர்மா அவன் காதல் மனைவி வெண்மதியின் முதல் தவப்புதல்வன்.
தந்தையின் சாயல், உயரம், வசீகரம் மட்டுமல்லாது அஸ்வினின் கம்பீரத்தோடு அவனுடைய கன்னக்குழியையும் கூட அச்சில் வார்த்துப் பிறந்திருந்தவன் பிறந்தது என்னவோ இந்தியாவில் தமிழ்நாடாக இருந்தாலும் இப்பொழுதைய அவனது வாசஸ்தலம் கூட சிங்காரச் சென்னையாக இருந்தாலும், சிறுவயதில் இருந்தே தந்தையின் தொழில் தொடர்புகள் காரணமாக அடிக்கடி அமெரிக்க வாசம் செய்தவன் அங்கத்திய வாழ்க்கை முறை பிடித்துப் போய் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்புகள் வரை அமெரிக்காவிலேயே தங்கிப் படித்து வளர்ந்தவன் அமெரிக்கா ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம் பி ஏ படிப்புகளையும் முடித்து பட்டமும் வாங்கி இருக்கிறான் ஆதித்யவர்மா.
“புலிக்குப் பிறந்தது பூனையாகாது” என்கிற சொற்றொடருக்கு உயிரூட்டும் வண்ணம் படித்து முடித்து வந்த கையோடு அஸ்வினின் குடும்பத் தொழில்களான ஜவுளி உற்பத்தி, கட்டுமானத் தொழில், பினான்சியல் பிஸ்னஸ், மற்றும் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு போன்ற அனைத்தையும் ஏற்று தந்தைக்கு பக்கபலமாக இருப்பவன், அவற்றை விரிவு படுத்தும் முயற்சியாக ரேஸ் கார்கள் தயாரிக்கும் தொழிலிலும் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிப்பவனின் மித மிஞ்சிய தொழில் திறமையும், சொன்னால் சொன்னபடி நடக்கும் அவனின் நேர்மை கலந்த ஆளுமையும் கண்டு பல நாடுகளிலும் உள்ள பெரிய பெரிய தொழில் ஸ்தாபனங்கள் கூட அவனுடன் நட்பு பாராட்ட போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
கருநீல வண்ண த்ரீ பீஸ் சூட் உடையில், அதற்கு பொருத்தமான கால்ப்பூட்டணி சப்திக்க, கூர்விழிகளை நாலா புறமும் சுழற்றியவாறு, ஜெல் வைத்து வாரியும் அடங்காது முன்னே வந்து விழும் கார்மேக அடர்சிகையை ஸ்டைலாக தலையை சிலுப்பி பின்னால் தள்ளி விட்ட வண்ணம் நடந்து வந்தவன், தன் பின்னே ஓடி வந்த தன் காரியதரிசியிடம்…
“கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம்ல சிவா.?” எனக் கேட்டு… “அப்கோர்ஸ் பாஸ்” என்ற அவனின் பதிலையும் பெற்றுக் கொண்டான்.
சிவப்பு வண்ணக் கம்பளம் விரிக்கப்பட்ட அந்த நீள வராண்டாவில் செந்நிறப் புரவியாய் வீரநடை போட்டு வந்து கொண்டிருந்தவனின் ஒவ்வொரு அசைவும், ஆண்மையின் இலக்கணத்தையும், அவனின் பணச் செளுமையையும் பட்டவர்த்தனமாகப் பறைசாற்ற, அவனின் வசீகர வதனம் காட்டிய அறிவுக் களையோ அங்கிருந்த பல பண முதலைகளின் மனதில் ஆதித்யாவை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்ளும் எண்ணத்தைக் கூட விதைத்துச் சென்றது என்று சொன்னால் அது மிகையே ஆகாது.
ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் ஆன ஆதித்யாவோ அப்படி எந்த கட்டுப்பாடுகளிலும் சிக்கிக் கொள்ள விரும்பாதவன், பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையானவனாகவே தோற்றம் கொண்டிருந்தாலும் நான்கு வருடங்களாக தொழில் ஒன்றே குறிக்கோளாய் ஓடிக் கொண்டிருப்பவன் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழியை கரைத்துக் குடித்திருப்பான் போலும்.
ஆரம்பித்த மூன்று வருடங்களிலே அவனுடைய ரேஸ் கார்கள் உற்பத்தி தொழிலின் கிளைகளை பல நாடுகளில் விரிவு படுத்தி இருந்தவன், புகழ் ஆஸ்திரேலியாவிலும் பரவி இருக்க அவனுடைய R. A. V வர்மா குழுமத்தோடு புதிய ஒப்பந்தம் தொடங்கிய மகிழ்ச்சியை கொண்டாடத்தான் இன்று அந்த பார்க் ஹயாத் ஹாலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சற்று முன்னர் தன் பி ஏ விடம் ஆதித்யாவைப் பற்றி புகழ்ந்து கொண்டிருந்த அந்த ஆஸ்திரேலியன்.
முழுக்க முழுக்க ஆதித்யாவிற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த பார்ட்டிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்த அதே நேரத்தில் ஒரு நொடியும் முந்தாமல் பிந்தாமல் தன் காரியதரசி பின் தொடர தனை நெருங்கிய ஆதியை அவனின் ஆளை அசத்தும் ஆளுமையை சில கனங்கள் விழி விரித்துப் பார்த்திருந்தவர் பின்பு சுதாகரித்து….
“வெல்கம் மிஸ்டர் ஆதித்யவெர்மா, வெல்கம் டூ அவுர் பார்ட்டி, என்னோட அழைப்பை ஏத்து நீங்க இந்த பார்ட்டிக்கு வந்ததுல ரொம்ப மகிழ்ச்சி” என்று அவன் கையைப் பற்றிக் குலுக்க, ஆதியும் “வித் ப்ளஸ்ஸர் வில்லியம்” என்று கன்னம் குழிவில சிரிக்க, அங்கிருந்த ஏனையரின் கண்களும் ஆதியையே சூழ்ந்தது .
ஆதியின் ரேஸ் கார்கள் தயாரிப்பு பார்முளாக்கள் பிடித்துப் போய் அவனோடான இந்த பாட்னர்ஷிப்பை வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்டிருந்த அந்த ஆஸ்திரேலியப் பிரஜ்ஜையோ, பாரிய மகிழ்ச்சியில் ஆதியோடு இணைந்தே பார்ட்டி கொண்டாட்டங்களை அனுபவிக்கத் தொடங்கியவர், அவனைத் தன்னுடைய நட்பு வட்டத்தில் மட்டுமல்லாது தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் அறிமுகப்படுத்தி வைத்து, சிறிது நேரம் அவனோடு அளவளாவியவர் இறுதியாக அவனை இரண்டு வரிகள் பேசுமாறும் கூறினார்.
தொழில் சாம்ராஜ்ஜியத்தில் கால் வைத்த இந்த நான்கு வருடங்களில் யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது போன்ற பல வித்தைகளை கற்றுத் தேர்ந்திருந்தவனும் அனைவரிடமும் கை குலுக்கி அவர்களின் அறிமுகத்தை ஏற்றுக் கொண்டவன்…
ஒரு புன்சிரிப்போடே அவர் கொடுத்த ஒலிப் பெருக்கியையும் தன் முறுக்கேறிய புஜத்தில் பற்றி…
“ஹாய் கைஸ்… இந்த பார்ட்டி மூலம் உங்கள எல்லாம் மீட் பண்ணதுல ரொம்ப மகிழ்ச்சி…”
என்று பேசத் தொடங்கியவனிடம்…
“உங்க கார்ஸ்ல இருக்க ஸ்பெஷலிட்டிஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.?” என்று வேகமாக ஒருவர் வினா எழுப்ப… அனைவரும் அவனையே ஆர்வமாகப் பார்த்திருந்தனர்.
அவனோ சற்றும் அலட்டிக் கொல்லாமல், “பிளான் எல்லாம் மொதவே சொன்னா அதுல கிக் என்ன இருக்கும்?” என்று பதிலுக்கு ஆங்கிலத்தில் வினவியவனோ…
“எனிவேய்ஸ் பி ரெடி டு ரேஸ் ஆன் யுவர் பட்ஜெட் கார்ஸ் யங்மேன்ஸ்.” என்றும் இதழ் விரிந்த புன்னகையோடு உரைத்தவனிடம் அங்கிருந்த மற்றொரு ஆஸ்திரேலியர்…
“சார் ஒன் மோர் கொஸ்டின்.?” என்று கேட்க…
ஆதியோ, “நோ மோர்…” என்று லேசாக தலையசைத்து மறுத்தவன்…
“திஸ் இஸ் நாட் எ பிரஸ் மீட்…. திஸ் மை பிரைவேட் டைம், சோ…” என்று மட்டும் கூறி ஒலிப்பெருக்கியை தன் காரியதரசியிடம் நீட்டியவன், அங்கிருந்த குளிர்பானத்தை ஏந்திக் கொண்டு, அங்கு ஒலித்த பாப் இசைக்கேற்ப தன் சவுக்குக் கரத்தில் தாளமிடத் தொடங்க… அவனைச் சூழ்ந்திருந்த மானிடக் கூட்டமும் மெல்ல விலகி தத்தம் கரங்களில் குடியிருந்த சிவப்பு திரவத்திற்குள் மூழ்கத் தொடங்கினர்.
அந்த பார்ட்டி ஹாலில் எம்பி உட்காரும் அளவு உயரத்தில் இருந்த அந்த இருக்கையில் அமர்ந்து சோமபானத்தை சுவைத்துக் கொண்டிருந்த ஆதியின் ஆளுமை மிகுந்த தோற்றத்திலும், காண்போரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான கன்னக்குழியிலும் அவனுடைய அலட்சிய பாவம் குவிந்த காந்த விழிகளிலும் கிறங்கிய நவீன யுவதி ஒருவள், அவனை நெருங்கி….
“ஹாய் ஹாண்ட்ஸம் வுட் யூ லைக் டு கோ ஆன் எ டேட் வித் மீ?” என்று வினவ, ஆதியும் அந்த யுவதியை ஏறிட்டு நோக்க, அவளுடைய விழுங்கும் பார்வையோ அவன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் பதிந்து விலகிய அவனது சிவந்த அதரங்களிலே படிந்திருந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.