திருமணம் முடிந்த அனைத்து பெண்களும் அதிக எதிர்பார்போடும் அதீத அச்சம் மடம் நாணத்தோடும் எதிர் கொள்ளும் ஒரு இரவு.
கணவன் மனைவி உறவின் புதுமையும் தாம்பத்தியத்தின் இனிமையும் அதன் மூலம் வாழ்க்கை நமக்குக் கொடுத்திருக்கும் அற்புதங்களையும் முற்றும் முழுதாக அறிந்து கொள்ள முயலும் அழகிய நிமிடங்களை ஒரு தம்பதியருக்கு வாரிக் கொடுக்கும் அந்த சோபன அறைக்குள் அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்த பெண்ணோ கணவனைத் தேட அங்கே அவனோ அன்னையிடம் ஓய்வு எடுக்கப் போவதாய் கூறிவிட்டு வந்தவன் அறையில் செய்யப்பட்டிருந்த முதலிரவு அலங்காரங்களைப் பார்த்து அதிர்ச்சியாகி படுக்கையின் அருகில் கூட செல்ல விரும்பாமல் அங்கே சோபாவிலே சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் ஆத்விக்வர்மா.
அண்ணனுக்காக ராஹியை மனைவியாய் ஏற்றுக் கொண்டாலும், சிறுவயது முதலே சாஹியை மனதார நேசித்தவனால் இத்துணை தினங்கள் தோழியாய் நினைத்திருந்த ராஹியை எப்படி சாஹியின் இடத்திற்குக் கொண்டு வர முடியும் என்றே பெரிதும் தவித்திருந்த ஆணவன் தான் மாங்கல்யம் கட்டியது தன்னவளுக்குத்தான் என்றும் இதுவரை உணராமலே இருந்தவன் இக்கணம் அறைக்குள் நுழைந்த மனைவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கூட அறியவே இல்லை.
ஆணவன் தற்பொழுது இருக்கும் நிலையை பார்த்தே அவன் உள்ளத்தில் தான் மட்டும் தான் இருக்கிறோம் என்று அகம் மகிழ்ந்து போனவள் மெல்ல அவனை நெருங்கி அவன் தோளில் கை வைத்து, “ஆது மாமா” என்று அழைக்க…
அவனோ அப்பொழுது தான் பெண்ணின் வருகையை உணர்ந்து சட்டென்று எழுந்து நின்றவன், “ராஹி ராஹி நான் நான் எனக்கு எனக்கு நமக்குள்ள இப்போதைக்கு இதெல்லாம் வேணாம் ராஹி. நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ண கொஞ்சம் நாள் டைம் வேணும் ராஹி ப்ளீஸ்” என்றான் படபடத்த குரலில்.
திருமணம் முடிந்து பத்து மணி நேரம் கடந்த நிலையிலும் தான் தாலி கட்டியது ராஹிக்குத்தான் என்றே எண்ணி இருப்பவன் இன்னும் தன் முகத்தைக் கூட ஏறிட மறுத்து தலை குனித்தவாறே பேசும் கணவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சாஹியும், “எதுக்கு மாமா கொஞ்ச நாள் டைம் என் மேல உள்ள காதலை மறக்கறதுக்கா. அப்டி கொஞ்ச நாள் டைம் கொடுத்தா மட்டும் என்ன மறக்க முடியுமா உங்களால?” என்று நிமிர்ந்து நின்று கேட்ட சாஹியின் குரலிலே அவளை உணர்ந்து கொண்டவன் ஈரெட்டில் அவளை நெருங்கி, “சாஹி நீ நீ. நீ எதுக்கு இப்போ இங்க வந்த. அய்யோ யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க? உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா நான் உன்ன லவ் பண்ணவே இல்லை. மொதோ இங்கிருந்து போ சாஹி” என்று மூச்சு விடாது பேசியவனை இப்பொழுது உஷ்ண மூச்சுக்களோடு பார்த்தாள் சாஹி.
இன்னமும் நடந்ததை உணராது தன் போக்கில் பேசியவனை, “போதும் ஆது மாமா” என்று தடுத்தவளோ “என்ன லவ் பண்ணவே இல்லன்னா அப்றம் எதுக்கு கொஞ்சம் முன்ன என்ன ராஹியா நினைச்சு லைஃப் ஸ்டார்ட் பண்ண டைம் கேட்டிங்கலாம்” என்றும் கேட்டவளுக்கு…
அவனோ, “அது அது” என்று இழுத்தவன், “அதெல்லாம் என்னோட பர்சனல். நீ நீ மொதோ இங்கிருந்து போடி. நம்ம ரெண்டு பேரையும் யாராவது ஒண்ணாப் பாத்தா ரொம்ப தப்பாகிடும். நீ மொதோ அண்ணாவோட ரூம்க்கு போ சாஹி” என்று வாசலைப் பார்த்தவாறே சொல்ல…
இப்பொழுது அவனை காளி அவதாரமாக நோக்கியவளும், “இந்த உலகத்துலயே கட்டின பொண்டாட்டிய பஸ்ட் நைட் ரூம்ல வச்சு அண்ணாவோட ரூம்க்கு போகச் சொன்ன ஒரே ஆள் நீங்களாதான் இருப்பீங்க ஆதுமாமா” என்று காட்டமாகச் சொன்னவளின் பேச்சில் ஏதோ புரிப்பட்டவனாய், “சாஹி” என்ற கூச்சலுடன் பெண்ணவளை நெருங்கி அவள் கையை பற்றிக் கொண்டவனோ, “சாஹி நீ நீயா? உனக்குத்தான் நான் தாலி?” என்று உணர்ச்சிகளின் பிடியில் வார்த்தைகள் வராது திணறினான் ஆத்விக்வர்மா.
ஆணவனின் திணறலில் அதிர்ச்சியை விடவும் மகிழ்ச்சியே அதிகமாக உணர்ந்தும் அதில் சந்தோசிக்க முடியாத பெண்ணும் அவன் பற்றி இருந்த கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டவள், “ஆமா காலைல எனக்கு தான் நீங்க தாலி கட்டினீங்க. என்னோட அக்கா மனசு வச்சதால. இல்லன்னா என்னய உங்கண்ணனுக்கு கட்டி வச்சு, உங்களுக்கு அண்ணியா ஆக்கிட்டு இப்டி ரூம்ல அடஞ்சு கிடந்து பீல் பண்ணிட்டே இருந்திருப்பீங்க இல்லியா ஆது மாமா?” என்றும் அனல் தெறிக்க கேட்டவளை இன்னும் அதிர்ச்சி விலகாமலே பார்த்தவனும்…
“இல்லை இல்லை சாஹி. நான் நான் அண்ணா அண்ணா ரொம்ப நாளுக்கு அப்றம் மேரேஜ்கு ஒப்புக்கிட்டு உன்ன தான் கட்டிப்பேன்னு சொன்னான். அதான்” என்று இழுத்தவன் சட்டென்று ஏதோ தோன்றியவனாய்…
“காலைல அண்ணா தாலி கட்டுனது ராஹிக்கா? இந்த மேரேஜ்ல அண்ணனுக்கு விருப்பமா. அப்போ அவன் உன்ன லவ் பண்ணலியா சாஹி?” என்றும் அதி முக்கிய சந்தேகத்தையும் மனைவியைப் பார்த்துக் கேட்டான் அதீத கவலை தோய்ந்த குரலில்.
எத்துணை கலக்கத்திற்கு இடையில், காதலனின் உதாசீனத்தையும் தாண்டி ராஹியின் பெருந்தன்மையால் தங்கள் காதல் கைகூடி இருக்க அதற்காக தன்னைக் கொண்டாட வேண்டிய ஆண்மகனோ தன் கணவனாகிவிட்ட இச்சயமயம் கூட அண்ணனைப் பற்றி கவலை கொண்டதில் அவனை தீயாய் முறைத்தவளும், “உங்க அண்ணனுக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லனு தெரிஞ்சா என்ன செய்யப் போறீங்க ஆது மாமா? என்ன இழுத்துட்டுப் போய் இந்தாங்க என் பொண்டாட்டின்னு அங்க விட்டுட்டு வரப்போறீங்களா?
அப்போ என்னோட விருப்பத்த பத்தி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லியா?” என்று சீறியவள் தொடர்ந்து, “ராஹி மட்டும் இன்னிக்கு அப்டி ஒரு முடிவு எடுத்தில்லாட்டி மனசுல உங்கள வச்சுக்கிட்டு உங்க அண்ணனோட ஒண்ணா வாழ” என்று விம்மலோடு கூறத் தொடங்கியவளின் வாயில் விரல் வைத்துத் தடுத்தவன்…
“சாஹி வேணாண்டி” என்று இறைஞ்சினான்.
அதற்கு சாஹியும், “ஏன் மாமா வேணாம் உங்களால வார்த்தையால கூட கேக்க முடியாதத எனக்கு வாழ்க்கையாவே கொடுக்க நினைச்சிங்களே அது மட்டும் சரியா? நான் நேத்து நைட்டு கூட எவ்ளோ தூரம் இந்த கல்யாணம் வேணாம்னு கெஞ்சினேன். நீங்க கேட்டிங்களா? என்ன காதலிக்கவே இல்லன்னு கொஞ்சம் முன்ன வரை சாதிச்சிங்களே இப்போ நான் பேசுறது மட்டும் உங்களால தாங்க முடியலையா? நேத்து நீங்க பேசுனது எனக்கு எப்டி வலிச்சிருக்கும்னு கொஞ்சமாச்சும் நினைச்சிங்களா. இன்னிக்கு ராஹி மட்டும் இல்லன்னா இந்நேரம் நான் நான் உங்களுக்கு அண்ணியாகி இருப்பேன். அதுதானே நீங்களும் எதிர்பார்த்தது” என்று தன் உள்ளக் குமுறலை எல்லாம் கொட்டித் தீர்த்தவள் அப்படியே கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு கதற…
தான் செய்த தவறால் தன்னவளின் உள்ளம் வெகுவாகக் காயப்பட்டுப் போனதை தாமதமாக உணர்ந்து கொண்டவனும்…
“சாஹிமா, சாஹி பேப் நான் பண்ணது தப்புத்தான் ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுறா.” என்று அவனும் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து அவளை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டான்.
இதுவரை பாசம் பொங்கும் விழியாலும் நேசம் கொண்ட செய்கையாலும் மட்டுமே காதலை உணர்த்தியவனின் தற்போதைய உரிமையான அணைப்பில் நிமிட நேரம் கட்டுண்டு இருந்தவள் மெல்ல அவனை விட்டு விலகி முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு ஒரு போர்வையை எடுத்துக் கீழே விரிக்க அதில் அவளை அதிர்ச்சியாக நோக்கியவனும்…
“சாஹி…” என்று பரிதவிப்பாய் அழைத்தான்.
அவனின் அந்த அழைப்பே பெண்ணவளின் அகம் தொட்டு அசைத்தும் அவனைப் பார்த்து “என்ன மன்னிச்சுடுங்க மாமா” என்றே சொன்னவள், “நான் நேசிச்ச ஆது மாமா நீங்க இல்லை. இப்போ நீங்க ஆதி மாமாவோட தம்பி. ஒரு அண்ணனுக்கு தம்பியா நீங்க எத வேணாலும் விட்டுக் கொடுக்க நினைச்சிருக்கலாம் ஆனா நீங்க நம்மளோட காதல் முளைக்கும் முன்னவே உங்க அண்ணனுக்காககன்னு அதோட வேற முறிச்சிப் போட நினைச்சுட்டீங்க. நேத்து நீங்க அவ்ளோ பேசியும் நான் உங்கள கட்டிக்கிட்டதுக்குக் காரணம் என் வாழ்க்கைல கணவன்னு ஒருத்தர் இருந்தா அது நீங்களா மட்டும் தான் இருக்க முடியும்ங்கறதாலதான். மத்தபடி என்னோட சேத்து என் காதலையும் தூக்கி எறிஞ்ச உங்க செயல என்னால அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது மாமா. நாம இந்த நாலு செவத்துக்கு வெளில தான் புருஷன் பொண்டாட்டி. இந்த ரூம்குள்ள நீங்க யாரோ நான் யாரோ. நமக்குள்ள இந்த இடைவெளி இப்போதைக்கு ரொம்ப அவசியமா நான் நினைக்கிறேன். ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோங்க” என்றும் கையெடுத்து கும்மிட்டவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராது விரித்த போர்வையில் கூனிக் குறுகிப் படுத்துக் கொண்டாள் சாஹி.
வருடக்கணக்கில் உள்ளத்திலே பூட்டி வைத்திருந்த காதலை தன்னவளிடம் ஒப்படைக்கும் முன்னே தன் அறியாமையால் அவள் உள்ளத்தை சுக்கலாக உடைத்துப் போட்டவனும் அவளை மறுகல் பார்வை பார்த்தவாறே, “சாஹி நான் செஞ்சது தப்புதாண்டி அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனைய எனக்குக் குடுக்காதடி” என்று இடிந்து போய் கதறியவனின் கதறல் அவள் நெஞ்சைக் கிழித்தும், அவன் கொடுத்த வலிகளை மறக்கும் பொருட்டு கல்லாய்ச் சமைந்திருந்தாள் ஆத்விக்கின் சாஹித்தியா.
ஆத்விக்கின் காதல் உளி சாஹியின் வலிக்கு மருந்தாக மாறி மீண்டும் அவள் நெஞ்சில் காதல் சிற்பத்தைச் செதுக்குமா???
அன்னமென நடையிட்டு வந்தாலாவது ஆதியின் கோபத்திலிருந்து இன்னும் சில நிமிடங்கள் தப்பித்து இருக்கலாம் என்று எண்ணினாளோ அத்துணை மெதுவாய் நடந்து வந்த போதும் கணவனின் அறை இத்துணை சீக்கிரம் வந்துவிட்டதாகவே எண்ணியவள் இதுநாள் வரை எட்டிப் பார்க்கக் கூட எண்ணியிறாத ஆதியின் அறைக்குள் தடதடக்கும் நெஞ்சை அழுத்தி விட்டவாறே மெல்ல மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்து உள்ளே சென்ற சமயம் அவள் பின்னாலிருந்த அறைக்கதவு அடித்துச் சாற்றப்பட்டதோடு அவளை நெருங்கிய ஆண் உருவம் ஒன்று, “எவ்ளோ திமிரடி உனக்கு. என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டதோட என் ரூம்குள்ளயே தைரியமா வர்றியா?” என்ற கர்ஜனையோடு பெண்ணவளின் மெல்லிய கழுத்தோடு தன் ஒற்றை பிரம்புக் கரத்தைக் கொடுத்து அவளை அலேக்காகத் தூக்கிப் பிடித்து சுவரோடு சாய்த்து நெறிக்கத் தொடங்கினான் ஆதி.
ஆணவனின் அனல் கக்கும் பார்வையில் இருந்தே ஆதியின் கோபத்தின் அளவை பெண்ணவள் அறிந்திருந்த போதும் இப்படி ஒரு மூர்க்கத் தனத்தை அவனிடம் எதிர்பாராதவள் ஆதியின் இரக்கமில்லாச் செயலில் கண்கள் இருள, கால்கள் துடிக்க, தொண்டை வறண்டு, ‘வ்விடுங்க ஆதி சார். விடுங்க, விடு’ என்று அவனின் தோள்களில் அடிக்க அவளின் துடிப்பைப் பார்த்தும் மேலும் மேலும் கையின் இறுக்கத்தைக் கூட்டியவன் அவள் நிலையை உணரும் நிலையில் இருந்தால் தானே.
சூழ்நிலை கருதி காலையிலிருந்து ராஹியின் மேல் அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமும் இக்கணம் அவளைத் தனிமையில் கண்ட நொடி கட்டவிழ்ந்து கொள்ள சுட்டெரிக்கும் முகிலவனாய் பெண்ணவளைச் சூழ்ந்து கொண்டவனின் வன்பிடியில் மூச்சுக்குத் திணறத் தொடங்கிய பாவையோ தன் உயிர் பிரியத்தான் போகிறதோ என்று “வே வே வேணாம் ஆ ஆத் ஆதி” என்று அஞ்சித் துடித்த சமயம் ஆதியின் புதிய கைபேசி மெல்ல ஒலி எழுப்பி ஆபத்பாந்தவனாய் பெண்ணவளின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தது.
கைபேசி சப்தத்திலே தன்னிலை அடைந்தவன் தன் கையில் சிக்கியிருந்த பெண்ணவளின் நிலையும் கண்டு சற்றே இறங்கியவனாய் அவளை அப்படியே கீழே உதறித் தள்ளியவன் கைபேசி அழைப்பை ஏற்றுக் கூடப் பேசாமல் அதை மூர்ச்சையாக்கி எறிந்துவிட்டு, “ஏண்டி இப்டி போர்ஜரி பண்ண? எதுக்காகடி என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ண?” என்று கேட்டவாறே மீண்டும் ராஹியின் புறம் எட்டு வைத்தான்.
ஆணவனின் அழுத்த எட்டுக்களே அவன் கையில் மீண்டும் சிக்கினால் நிச்சயம் நம்மை கொன்றே போடுவானோ என்ற பீதியைக் கொடுக்க கன்றிச் சிவந்திருந்த கழுத்தை தடவிக் கொடுத்தவள் இருட்டிக் கொண்டு வந்த கண்களையும் கசக்கி விட்டுக் கொண்டு வேகமாக எழுந்து வாசல் நோக்கி ஓடியவள், “கொலை கொலை என்ன கொலை பண்ணப் பாக்குறாங்க யாராச்சும் வாங்களேன்” என்று அவள் பாட்டில் அறைக்கதவைத் தட்டத் தொடங்கி விட்டாள் ராஹித்தியா.
அவளது செயலில் மேலும் உக்கிரமாகியவன், “ஹேய் என்னடி சீன் போடுறியா. நீ எவ்ளோ காட்டுக்கத்து கத்தினாலும் எவனுக்கும் ஒன்னும் கேக்காது. இது சவுண்ட் ப்ரூப் ரூம். டோர் எல்லாமே ரிமோட் கண்ட்ரோல் லாக்” என்று சொல்லி அங்கிருந்த ரிமோட்டைத் தூக்கிக் காட்டியவன், “என்னத் தாண்டி உன்னால எங்கையும் போக முடியாது. எதுக்குடி இப்டி ஒரு காரியத்தப் பண்ண. இந்த மேரேஜ்கு பின்ன என்னடி பிளான் வச்சிருக்க. இல்லன்னா யாருக்கிட்டயும் பல்க் அமௌன்ட் வாங்கிட்டு ஸ்பையா வந்துருக்கியா? சொல்லுடி?” என்றெல்லாம் கேட்டு மேலும் அவளை நோக்கி அகல எட்டுக்களை வைத்தான் ஆதி.
அறையைப் பற்றி அவன் சொன்ன செய்தியிலே, ‘பெட்ரூமுக்கு போய் ரிமோட் கண்ட்ரோல் லாக்கா?. அப்போ இவன் இங்க என்ன செஞ்சாலும் வெளிய தெரியாதா? இவன் வேற கோவம் வந்தா எக்குத்தப்பா பண்ணுவானே?’ என்றெல்லாம் உள்ளூற அஞ்சி முகம் ரத்தப்பசையற்றுப் போனவளோ, அவனின் நரம்பில்லா நாக்கு எழுப்பிய சந்தேகக் கேள்விகளையும் எண்ணிக் கலங்கியவள், தனை நோக்கி வந்து கொண்டிருந்த ஆதியிடமிருந்து பின்னோக்கிச் சென்றவாறே…
“இல்லை இல்லை ஆதிசார். நீங்க நினைக்கிற மாதிரிலாம் என்கிட்ட எந்தப் பிளானும் இல்லை. ப்ளீஸ் கிட்ட வராதீங்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்று சொல்லியவள்
அப்பொழுதும் நில்லாத ஆணவனின் முன்னேற்றத்தில் இப்பொழுது ஓட்டத்தைக் கையிலெடுத்தாள்.
ஏற்கனவே அளவு மீறிய ஆத்திரத்தில் இருந்த ஆதிக்குள் ராஹியின் ஓட்டம் மேலும் சினத்தைக் கூட்டியதில், “ஏய் என்கிட்டயே கண்ணாமூச்சி காட்டுறியா? மரியாதையா நில்லுடி. நானா பிடிச்சேன் உன்ன உண்டில்லன்னு ஆக்கிருவேன்டி.” என்று கறுவியவாறே அவளைத் துரத்தியவன் அங்கிருந்த நான்கு நபர் படுக்குமளவு பரந்து விரிந்திரிந்த கட்டிலைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தவளை சினிமாக்களில் வருவது போல் கட்டிலின் மேலாகத் தாவி அவளின் தலை முடியைப் பற்றி நிறுத்தியவனோ, “எவ்ளோ திமிர் இருந்தா இந்த ஆதியவே ஏமாத்தி என் கையாலையே உனக்கு தாலி கட்ட வச்சிருப்ப?. உண்மைய சொல்லுடி எதுக்கு இப்டிப் பண்ண?” என்று சிங்கமாய் கர்ஜித்தவன் மீண்டும் அவள் குரல்வலையைப் பற்றவர…
காலையில் மணமேடையில் போலவே இப்பொழுதும் அவன் கையைப் பற்றி அவன் விரல்களோடு விரல் கோர்த்து அவன் செயலைத் தடுத்தவளும், “ஆதிசார் ப்ளீஸ் ஆதிசார் கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்க. நீங்க இன்னும் ஒரு பிடி பிடிச்சிங்கன்னா நான் செத்தே போவேன். என் யுவிப்பாக்கு நான்னா ரொம்ப பிடிக்கும். என்ன கொன்னுடாதீங்க ஆதிசார் ப்ளீஸ். நான் சொல்ல வர்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்று தன் கைக்குள் அடங்க முடியாது திமிறிக்கொண்டிருந்த கணவனின் கரத்தை இன்னும் இன்னும் இறுக்கிப் பிடித்தவாறே கெஞ்சலில் இறங்கினாள் பெண்.