சற்று முன்னர் அவனே அவளைத் தள்ளிவிட்டதற்கே எந்த எதிர்வினையும் காட்டாதவன் இப்பொழுது அவளாகவே மோதி விழுந்தவளை, “உனக்குலாம் வேற வேலையே இருக்காதாடி” என்று பார்வையாலே சுட்டெரித்தபடி விழுந்து கிடப்பவளை கைதூக்கி விடக் கூட எண்ணாமல் அவளைத் தாண்டிக் கொண்டே செல்ல முனைய…
“ஆதிசார் ஒரு நிமிஷம் உங்ககிட்ட பேசணும்” என்று அவன் நடையை நிறுத்தியிருந்தாள் ராஹித்தியா.
அவனும், “ப்ச்” என்ற சலிப்புடன் நின்று திரும்பியவன், “ஆமா நீ இன்னும் உங்க கிராமத்துக்கு கிளம்பாம இங்க என்ன பண்ற?” என்று தாடையைத் தடவியவாறு கேட்க…
அவன் கேள்வியில் மனம் வாடிப் போனவளும், “இல்ல ஆதிசார் அது பத்தி தான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று உள்ளே போன குரலில் சொல்ல…
அதற்கு அவனும், “அதான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டியில்ல அப்றம் அதப்பத்தி பேச என்ன இருக்கு. நாளைக்கே அப்ளை பண்ணிட்டா சிக்ஸ் மந்த்ல டிவோர்ஸ் கிடைச்சிடும்” என்றும் அலட்டிக் கொள்ளாது சொன்னான்.
அவன் கட்டிய மாங்கல்யத்தின் ஈரம் கூட இன்னும் நெஞ்சிலாடிக் கொண்டிருக்க, மணம் புரிந்து இருப்பத்து நான்கு மணி நேரம் கூட கடக்காத நிலையில் விவாகரத்திற்கு கையெழுத்து வாங்கியதோடு அவளை வீட்டை விட்டும் விரட்டத் துடிக்கும் இரக்கமே இல்லாதவனின் முன்னால் மீண்டும் மீண்டும் நிற்க நேருகிற தன் விதியை எண்ணி நொந்து கொண்டவள்…
“ஆதிசார்… நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் இன்னும் கொஞ்சம் நாளைக்கு இங்க இருந்துட்டு அப்றம் போயிர்றேன்” என்று ஆரம்பித்து, சாஹி சொன்னவற்றில் சிலவற்றையும் கூறியவள், “இப்போவே நான் வீட்ட விட்டு போனா சாஹியும் ஆது மாமா மேல இருக்க கோவத்துல அவங்க கூட வாழாமயே இருந்துருவா. அப்றம் நம்ம பேரன்ஸும் இப்போ இதுக்கு ஒப்புக்க மாட்டாங்க. ரொம்ப வருத்தப்படுவாங்க நீங்க இந்த மேரேஜ்கு ஒப்புகிட்டதே ஆன்டிக்காகத்தானே. இதுவே கொஞ்சம் நாள் ஆகிடுச்சுன்னா எல்லாம் சரியாகிடும். எங்களுக்குள்ள அண்டர்ஸ்ட்டாண்டிங் இல்லன்னு பெரியவங்களையும் கன்வின்ஸ் பண்ணிடலாம். ப்ளீஸ் ஆதிசார் அதுவரை கொஞ்ச நாளைக்கு மட்டும் உங்க உங்க மனைவியா மனைவியா நான் நான் இங்க இருந்துக்கறேன்” என்று திக்கித் திணறி ஒருவாறு தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தவள் அச்சத்தோடே அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் முகத்திலோ பேரமைதி.
கிரேக்கச் சிற்பம் போல் அசையாது நின்றவனின் விரல்கள் மட்டும் லேசாக தொடையில் தாளமிட்டத்தைப் பார்த்து அவன் யோசிக்கிறான் என்று புரிந்து கொண்டவள், “ஆதிசார் உங்களுக்கு மேரேஜ் லைப்ல விருப்பம் இல்லாட்டியும் உங்க தம்பியோட லைப்பும், ஆன்டியோட ஆசையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நம்ம மேரேஜ் நடந்ததுக்கு காரணமே ஆது மாமா சாஹியோட லவ் தான். கொஞ்ச நாள் இருந்து அவங்க ரெண்டு பேரும் ஹாப்பியா வாழ்றதப் பாத்துட்டு நான் இங்கிருந்து போயிர்றேன்” என்றும் குரல் கரகரக்கச் சொல்லியவளின் பேச்சில் யோசிப்பதை நிறுத்தி நிமிர்ந்தவனும் ‘என்ன இவ இவ்ளோ உருக்கமா பேசுறா. இங்கயே செட்டில் ஆகறதுக்கு வேற ஏதும் பிளான் பண்றாளா?’ என்று ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி வர, அவளுக்கோ அவன் முடியாது என்று விடுவானோ என்றெண்ணி உள்ளம் தொடர்வண்டி ஓட்டமாய் தடதடக்கத் தொடங்கியது.
நெஞ்சத்தையே துளைத்தெடுக்கும் அளவு நிமிடங்கள் பல அவளையே கூர் பார்வை பார்த்தவன் பெண்ணவளின் பால் முகத்தில் என்ன கண்டானோ, “ம்ம்ம் ஓகே. நீ சொல்றதும் சரிதான்.” என்று மட்டும் கனத்த குரலில் சொல்ல…
அதில் உயிர் மீண்ட ராஹியோ,
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஆதி சார் நீங்க முடியாதுன்னு சொல்லிருவீங்களோன்னு ரொம்ப பயந்தேன். தாங்க் யூ சோ மச்” என்று உணர்ச்சிவசத்தால் அவன் கையையே பற்றிக் குலுக்கியவளின் தவிப்பு தங்கள் ஒட்டு மொத்த குடும்பத்திற்கானது என்று அந்த ஆறடி ஆண்மகனுக்கும் புரியாது போனதோ.
ராஹியின் மேல் அளவு கடந்த சினம் இருந்தும், அவள் முகத்தில் இருந்த தவிப்பும் அவள் வார்த்தையில் இருந்த ஆத்விக் சாஹி வாழ்க்கை நலன் பற்றிய கூற்றும் அவனை ராஹியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கத் தூண்டியிருக்க, அவளிடம் சம்மதம் என்று சொன்னவன் அவள் ஆர்ப்பரிப்பில் மீண்டும் முகம் கடுக்க…
“ஹேய் ஹேய் ஸ்டாப் இட் ராஹித்தியா. ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. நான் என் ரூல்ஸ் இன்னும் சொல்லவே இல்லை” என்று தொடங்கியவன்…
“மாம் டாட்கு இப்போ டிவோர்ஸ் மேட்டர் தெரிஞ்சா கண்டிப்பா நம்மள கன்வின்ஸ் பண்ணதான் பாப்பாங்க அதனால நான் இத அக்சப்ட் பண்றேன். ஆனா அதுவரை நீ என் வீட்ல இருக்கணும்னா நான் சொல்றதுக்கு எல்லாம் கட்டுப்பட்டு தான் இருக்கணும். நீ இங்க இருக்க ஒரு நிமிஷம் கூட என் ஒயிப்ன்னு உனக்கு நெனப்பு வரவே கூடாது. அம்மா அப்பா முன்னாடி தவிர நான் உனக்கு பாஸ் மட்டும் தான். நீ எனக்கு வெறும் பி ஏ மட்டும் தான். அதுவும் நமக்கு டிவோர்ஸ் கிடைக்கிற வரைதான். அதுவரை நான் என்ன சொல்றேனோ அது படிதான் நீ கேக்கணும். அதுக்குள்ள நீ இப்போ எதுக்கு இங்க இருக்கணும்னு கேட்டியோ அதெல்லாம் செஞ்சி முடிச்சிடணும். டிவோர்ஸ்கப்புறம் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.” என்றும் இரக்கமே இல்லாது பற்பல கட்டளைகளைப் பிறப்பித்தான் ஆதி.
‘நேற்றைய இரவு ஆதி காட்டிய கோர முகத்திலும், அவன் தன்னிடம் வாங்கிய விவாகரத்துக்கான கையெழுத்திலுமே இன்றே தன்னை அவன் வீட்டை விட்டு அனுப்பி விடுவான்’ என்று உள்ளூற அஞ்சி இருந்தவளுக்கு அவன் தற்பொழுது கொடுத்திருக்கும் கால அவகாசமே அத்துணை மகிழ்ச்சியைக் கொடுக்க, அவன் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் அவளுக்கு பெரிதாகவே தோன்றவில்லை.
‘தான் இங்கிருந்து செல்வதற்குள் சாஹியும் ஆத்விக்கும் இணைந்து விட்டால் போதும்’ என்று மட்டும் நிமிடத்தில் கடவுளிடம் அவசர வேண்டுதலை வைத்தவள் இதழ் விரிந்த புன்னகையோடே…
“எனக்கு எல்லாம் ஓகே ஆதி சார். நான் இங்க இருக்க வரை உங்களுக்கு வெறும் பி ஏ மட்டும் தான். உங்ககிட்ட தனிப்பட்டு ஒயிப்பா எந்த ரைட்சும் எதிர்பார்க்க மாட்டேன்.” என்று சொல்லி கணவனிடம் உறுதி கொடுத்து விட்டு, குளித்து முடித்து சிட்டாகப் பறந்து விட்டவளுக்கு அது சுலபமானதாக இருக்குமா??? அவள் கணவனும் அப்படி விட்டு விடுவானா???
காலை விழித்ததிலிருந்தே நேற்றைய திருமண குளறுபடி பற்றியும், இரவு ஆதி கேட்ட விவாகரத்துப் பற்றியும் பெற்றோரிடம் எப்படிக் கூறப் போகிறோம், நேற்று திருமணத்தின் போது அத்துணை மகிழ்ந்த பெற்றோர் இன்றைய விவாகரத்து விஷயத்தை எப்படி தாங்குவர்’ என்றெல்லாம் கலங்கித் தவித்திருந்தவள் இக்கணம் ஆதி கொடுத்த அவகாசத்தில் மனம் லேசாகியவளாய் சாஹியுடன் இணைந்து கீழே இறங்கிச் செல்ல அங்கே மலரும் மதியும் ஒன்றாக சேர்ந்து தேநீர் தயாரித்தபடி புது மணமக்களை எழுப்பி விடுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
பெரிய பெண்கள் சமையல் கட்டிலிருந்து வெளியேறும் முன்னே இரட்டையர் இருவரும் ஒன்று சொன்னார் போல்
“குட் மார்னிங் விழிமா, குட் மார்னிங் ஆன்டி” என்று சொல்லி உள்ளே நுழைய, அவர்கள் புறம் திரும்பி பார்த்த இரு அன்னைகளும், “குட் மார்னிங்டா அதுக்குள்ள எழுந்துட்டிங்களா?” என்று கேட்டவர்கள் காலையில் பூத்த மலர்கள் போல குளித்து உடை மாற்றி வந்திருந்த இரட்டையரின் அழகில் அகம் பூரித்து நிற்க…
அவர்களைப் பார்த்து மேலும் சிரித்த மதியும், “இனிமேல் என்னையும் அங்கிளையும் அத்தை மாமான்னு கூப்பிடுங்கடா. ஆன்டிலாம் வேணாம்” என்று செல்லக் கட்டளையும் விதித்தாள்.
அதைக் கேட்டு, “சரி” என்பது போல் தலையசைத்துச் சிரித்த இரட்டையரும், “உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கிய விஷயம் ஒன்னு சொல்லனும்” என்றும் ஒன்று சொன்னார் போல் சொல்ல…
அச்சமயம் சரியாக, “என்ன விஷயம்டா?” என்று வினவியபடியே நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த அஸ்வினும் யுவாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.
ஆண்களைப் பார்த்த இரட்டையர் அவர்களுக்கும், “குட்மார்னிங் மாமா, குட்மார்னிங் யுவிப்பா” என்று காலை வணக்கம் பகர்ந்தவர்கள்…
“வெரி குட் மார்னிங்டா” என்று தங்களை நோக்கி வாஞ்சையோடு கை நீட்டிய தந்தையின் கைகளையும் பற்றிக் கொள்ள…
யுவாவைப் போலவே அவர்களுக்கு பதில் வணக்கம் சொன்ன அஸ்வினும், “நாங்க வர்றப்போ ஏதோ சொல்லணும்னு சொல்லிட்டிருந்தீங்க என்ன விஷயம்மா?” என்று புன்சிரிப்போடு கேட்டான்.
அதில் ஒருவரை ஒருவர் பார்த்து தலை குனிந்து கொண்டவர்கள், மாபெரும் தயக்கத்துக்கிடையிலே நேற்று நடந்த திருமண விஷயத்தைச் சொல்ல…
அதைக் கேட்ட பெரியவர்களின் முகத்திலோ அளவில்லாத அதிர்ச்சி.
திருமணத்திற்கு வந்திருந்த தூரத்து உறவுகளும் அண்டை வீட்டு நண்பர்களும் நேற்று இரவு உணவு முடித்ததுமே கிளம்பி இருக்க, இச்சமயம் அஸ்வினின் வீட்டில் இருந்த நெருங்கிய ரத்த உறவுகள் அனைவரும் இரட்டையரின் கூற்றில் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அதில் சினம் துளிர்க்க அவர்களை நெருங்கிய மலரோ, “ஏய் என்னங்கடி சொல்றீக, மாப்பிள்ளைய மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீகளா? என்னடி கூத்து இது” என்று இருவரையும் அடிக்கக் கை ஓங்கியவள் யுவாவின் “விழீ…” என்ற ஒற்றை கர்ஜனையில் அப்படியே கையை கீழே இறக்கி நின்று அவனைப் பார்த்தாள்.
மனைவியைப் பார்த்த யுவாவும்,
‘பொறு மொசக்குட்டி’ என்பது போல் விழியை மூடித் திறந்தவன், தாய்க்கு பயந்து தன் புறம் வந்து நின்ற இளையவர்களை நோக்கி, “நீங்க தப்பா எதுவும் பண்ண மாட்டீகன்னு எனக்குத் தெரியும். ஏண்டா அப்டி பண்ணீக, தைரியமா சொல்லுங்க?” என்று கேட்க…
தந்தை கொடுத்த தைரியத்தில் ராஹியும் அங்கிருந்த அனைவரையும் நோக்கியபடியே சாஹி ஆத்விக்கின் காதலில் தொடங்கி நடந்தது அனைத்தும் விளக்கமாக சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்ட மலரோ கணவனின் வார்த்தையையும் தாண்டி, “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா காதல் கத்திரிக்கான்னு, அவளையும் சேத்து இப்டி ஒரு தப்ப பண்ண வச்சிருப்ப. இப்டி பொய் பித்தலாட்டம் எல்லாம் எங்கடி கத்துகிட்டீக” என்று ஒரு அன்னையாய் ஆவேசம் பொங்க சாஹியை நோக்கி மீண்டும் அறையப் போனவளை…
“மலர் என்ன இது. தோளுக்கு மேல வளந்த பிள்ளைங்கள அடிக்கப்போற அளவுக்கு காதலிக்கிறது அவ்ளோ பெரிய தப்பா? உன்னோட யுவித்தான நீ காதலிக்கலியா?” என்று அவளின் கைப்பற்றியே தடுத்திருந்தாள் வேங்கையின் வெண்மதி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.