வெகு நாட்களுக்குப் பின் அன்று ராஹியுடன் அதே நட்போடு பேசியப் பிறகு மனம் சற்றே இலகுவாகிய ஆத்விக்கும் அன்று காலை வழக்கம் போல் மனைவியை அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் இறக்கி விட்டுச் செல்ல ஆயத்தமாகி காரில் அமர்ந்திருந்தான்.
அவளும் இத்துணை தினங்கள் வீட்டினரின் பார்வைக்காக ஆத்விக்கின் கெஞ்சலுக்கு சற்றே இறங்கி இருப்பவள் அவனுடன் தான் தினமும் அலுவலகம் சென்றும் திரும்புகிறாள்.
ஆனால் என்னதான் கணவனுடன் இணைந்து வாரக் கணக்கில் ஒரே காரில் பயணம் செய்தாலும் அப்படியான சந்தர்ப்பங்களில் அவன் முகத்தைக் கூடப் பாராது அவன் ஏதும் பேச முயற்சி செய்தாலும் அதை செவியிலும் ஏற்காது தூங்குவது போல பாவனை செய்து இருக்கையில் சாய்ந்து கொள்பவள் இப்பொழுதெல்லாம் “ஓவர் டைம் டூட்டி” என்று மாலையும் தாமதாகவே வீட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறாள்.
ஆத்விக்கும் அவளுக்காக வெகு நேரம் காத்திருந்தே அவளை அழைத்து வந்தாலும் அவளோ வீட்டிற்கு வந்ததும் மதியோடு இணைந்து கீழேயே இருந்து கொண்டு கணவனை அலற விட, அவள் கணவனும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் நெருங்கிய நிலையிலும் காதல் மனைவியின் முகத்தைக் கூட சரியாகப் பார்க்க முடியாமல் மிகவும் தவித்துத் தான் போனான்.
இன்றும் அப்படித்தான் அலுவலகம் செல்ல ஆயத்தமாகி வந்த சாஹித்தியா முகத்தில் ஒரு துளி புன்னகை கூட இல்லாமல் கணவனின் காரில் வந்து ஏறிக் கொண்டவள், அவனைத் திரும்பியும் பாராது இருக்கையில் சாய்ந்து கொள்ள…
அவளவனோ மகிழுந்தைக் கூடக் கிளப்பத் தோன்றாமல் முகம் சூம்பி அமர்ந்திருந்தவளையே விழிகள் விலக்காது பார்த்திருந்தவன், “ஹேய் சாஹிமா என்ன கொஞ்சம் பாருடா. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அவள் கைகளைப் பற்ற வந்தான்.
அதற்கு இடம் கொடாமல் கையை விலக்கிக் கொண்டவளும் மேலும் ஒரு அடி கதவை நெருங்கி அமர்ந்து கொண்டவள், “இப்போ நீங்க வண்டிய எடுக்கப் போறீங்களா இல்ல நான் இறங்கி ஆட்டோ பிடிச்சி போகட்டுமா?” என்றாள் மிரட்டல் போன்ற தோரணையில்.
அப்பொழுதும் வண்டியை கிளப்பாது இருந்தவன், “சாஹி…” என்று அவளிடம் மேலும் ஏதோ சொல்ல வர…
அவனைக் கை நீட்டித் தடுத்தவளும், “இதோ பாருங்க ஆது மாமா எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்லாட்டியும் அத்தைக்காக தான் உங்க கூட சகஜமா இருக்க மாதிரி காட்டிட்டு இருக்கேன். என்கிட்ட ரொம்ப நெருங்க நெனச்சு உள்ளதையும் கெடுத்துறாதீங்க” என்று பட்டென்று கூறியவள் வழக்கம் போல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள அவனும் அவளை ஒரு மருகல் பார்வை பார்த்து விட்டு வண்டியை கிளப்பியவன் அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் சாஹியின் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும் விரைந்து இறங்கியவள் கணவனிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட வானளவு உயர்ந்து நின்ற அந்த அலுவலகக் கட்டிடத்தை நோக்கி நடக்க, அவனும் வண்டியை விட்டு இறங்கி அவள் பின்னோடே சென்றான்.
அதில் நின்று திரும்பி குழப்பமாக அவனை நோக்கியவளும், “அதான் வழக்கமா பாக்குற ட்ரைவர் வேலை முடிஞ்சிதில்ல இன்னும் கிளம்பாம எதுக்கு என் பின்னாடியே வர்றீங்க?” என்று முறைத்தவாறு கேட்டவளை கண்டு கொள்ளாது அவளைத் தாண்டிக் கொண்டு முன்னே சென்றான் அவள் கணவன்.
அதைப் பார்த்து மேலும் எரிச்சலாகியவள், “என்ன ஆத்வி சீன் போடுறீங்களா?” என்று அவளையும் மீறி அவளின் பிரத்தியேக அழைப்பைக் கூறி அவன் கையைப் பற்றி நிறுத்த…
அதில் அவளை விழிகள் ஒளிர ஏறிட்டவனும் “சீன் இங்க இல்ல பேபி. உள்ள” என்று மட்டும் கூறியவன் அவள் பற்றிய கையை விட்டுவிடாமலே அவளையும் சேர்த்து உள்ளே இழுத்துச் சென்றான்.
ஓட்டமும் நடையும் கூடவே குழப்பமுமாக அவன் இழுத்த இழுப்பிற்கு அவனோடு சேர்ந்து வந்தவள் அலுவலகத்திற்குள் நுழைந்த நொடி, “டொம்” என்ற சப்தத்துடன் மேலே உயரத்திலிருந்த பெரிய பலூன் ஒன்று வெடித்து அதன் உள்ளிருந்து ஜிகினா காகிதங்கள் எல்லாம் பூத்தூவியது போல் அவர்கள் மேலே கொட்ட, கூடவே “ஹாப்பி வெல்கம் அவர் நியு எம் டி சாஹித்தியா ஆத்விக்” என்ற கரகோசத்துடன் அங்கிருந்த அனைவரும் அவர்களை ஆவலாக வரவேற்றனர்.
பலூன் உடைந்த சப்தத்தில் திடுக்கிட்டு அதிர்ந்தவள் தன்னை நெருங்கி நின்ற கணவனுடன் மேலும் மேலும் ஒன்றிக் கொண்டவள் அங்கே வரவேற்பரையில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களையும், அங்கு குழுமி இருந்தவர்கள் சொல்லிய வார்த்தையிலும் ஆழியாய் விழிகளை விரிக்க, அச்சமயம் அவர்களை நோக்கி வந்த சாஹியின் முதலாளியாகிய ஆத்விக்கின் நண்பனோ, “வெல்கம் சாஹித்தியா, மோஸ்ட் வெல்கம் இன் அவுர் கம்பெனி” என்று அவளிடம் கைகளை நீட்டி குலுக்கியவன், “வா மச்சான் இப்போதான் இங்க வர்ற வழி தெரிஞ்சுதா? எவ்ளோ நாளா கூப்ட்டிட்டிருக்கேன் உன் ஒயிப் எம் டி யா சார்ஜ் எடுக்கறதால ஐயா இன்னிக்கு வந்துருக்கீங்க. அப்டித்தான?” என்றும் கிண்டலாய் கேட்டப்படியே நண்பனையும் தோள் அணைத்து வரவேற்றான். அந்த மிகப்பெரிய ஐடி கம்பெனியின் முதலாளி ஜான்.
அதற்கு ஆத்விக்கும், “அப்டிலாம் இல்ல மச்சான் என் சூழ்நிலை உனக்கே தெரியும் தான” என்று அவனும் நண்பனைத் தழுவி விட்டு விலக…
சாஹியும் தட்டுத் தடுமாறி, “தாங்க்ஸ் சார்” என்று மட்டும் ஜானுக்கு பதில் உரைத்தவள் குழப்பம், அதிர்ச்சி, சிறிதான மகிழ்ச்சி என்று பலவித உணர்ச்சிக் கலவையோடு கணவனையே கேள்வியாகப் பார்த்தாள்.
அதற்குள் ஜானும் தன் காரியதரிசியிடம் திரும்பியவன், “ஆல் புளோர் ஒர்க்கர்ஸும் அசம்பல் ஆகிட்டாங்க தானே?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்த அனைவரையும் நோக்கியவன்…
“ஹாய் காய்ஸ் இப்போ நாமெல்லாம் எதுக்கு இங்க கூடியிருக்கோம்னு உங்க எல்லாருக்கும் முன்னவே தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் நானும் என் வாயால ஒரு தடவ சொல்லிர்றேன்” என்று தொடங்கியன்…
“இவங்க மிஷஸ் சாஹித்தியா ஆத்விக். என் ப்ரண்ட் ஆத்விக்வர்மாவோட ஒயிப். இவங்கள ஒர்க்கர் சாஹித்தியாவா உங்கள்ள பல பேருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா இனிமேல் அவங்க ஒர்க்கர் சாஹித்தியா இல்ல. இந்த கம்பெனிக்கு ஒன் ஆப் தி பாட்னர். சொல்லப்போனா என்ன விட அதிகமான ஷேர்ஸ் இப்போ அவங்க பேர்ல தான் இருக்கு. நானும்
யு எஸ் போற ஐடியால இருக்கதால இனிமேல் அவங்க தான் நம்ம கம்பெனிக்கு மேனேஜிங் டைரக்டர். எல்லா பொறுப்பும் இனி அவங்க கிட்டதான். சோ கீப் யூர் சப்போர்ட் மிஸஸ் சாஹித்தியா ஆத்விக் ப்ரண்ட்ஸ்” என்றும் அங்கு நின்றிருந்த சாஹியையும் நண்பனையும் சுட்டிக்காட்டி புன்னகை முகமாகவே சொல்லி முடித்தவன் வார்த்தையில் தான் அனைத்தும் புரிந்து கொண்டவள்… ‘இவ்ளோ பெரிய கம்பெனிக்கு நான் எம் டியா அதுவும் சிக்ஸ்ட்டி பர்சண்ட் ஷேர் என் பேர்லயா!’ என்று அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று வந்தாள் சாஹித்தியா.
அத்துணை நேரம் ஜான் கூறியதை வைத்தே எல்லாம் கணவனின் வேலை என்று உணர்ந்து கொண்டவளுக்கு என்னமாதிரி மனநிலை என்று கூட விளங்காமல் இருக்க, தன் தொழில் மேல் தனக்கு உள்ள பிடித்தத்தை கணவன் அறிந்தவனானாலும், அவள் கனவிலும் கூட எண்ணியிராத ஒரு காரியத்தை அல்லவா அவன் இன்று செய்திருக்கிறான்.
சென்னையிலே மிகப்பெரிய சிறந்த நிறுவனம் என்று பெயரெடுத்த பல நாட்டுத் தொழில் நிறுவனங்களின் ரகசியங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் அந்த ஐடி நிறுவனத்தின் பங்குதாரர் என்ற பெயருக்கு கணவன் எத்துணை கோடிகளை செலவு செய்து, எவ்வளவு மெனக்கெடுத்திருக்க வேண்டும் என்றும் எல்லாம் தனக்கே தனக்காகத்தான் கணவன் செய்திருக்கிறானா என்றும் உள்ளூற பரவசம் அடைந்தவளுக்கு அப்பொழுது தான் சில நாட்களுக்கு முன்பு அவளின் இரட்டை ராஹி… ஆத்விக்கிடம் பேச வேண்டும் என்று அழைத்துப் போனது அவள் நினைவடுக்கில் வந்து அவள் மகிழ்ச்சி மொத்தத்தையும் குழி தோண்டிப் புதைத்தது.
தன்னருகில் நின்று நண்பனிடம் பேசிச் சிரித்திருந்த கணவனையே அத்துணை நேரம் தன்னையே மறந்தவளாய் காதல் பொங்கப் பார்த்திருந்தவளின் முகம் சட்டென்று கருத்துப் போனதை உணராதவனும் அவளை பார்வையாலே பருகிவிடத் துடிக்க, ஆத்விக்கை கண்டு கொண்ட அவன் நண்பனும், “ஓகே மச்சான் சிஸ்டர நீயே கூட்டிட்டு போய் அவங்க கேபின காட்டுடா. நம்ம அப்றம் பேசிக்கலாம்” என்று விடைபெற்றவன் மற்றயவர்களையும் தங்கள் வேலைகளைப் பார்க்கப் பணிக்க, ஆத்விக்கும் மெல்ல சாஹியின் கையைப் பற்றியவன், “வா பேபி” என்று அவளுக்கென்று ஒதுக்கி இருக்கும் அலுவலக அறை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.
கணவனுடனே பொம்மை போல் நடந்து சென்று அந்த அறைக்குள் நுழைந்தவள் அவன் காட்டிய இருக்கையில் அமராது இறுகிப் போய் நிற்க…
“சாஹிமா ஏதாவது பேசுடா. உனக்கிது பிடிச்சுருக்கு தான? நீ ரொம்பவும் நேசிக்கிற உன்னோட வேலைல இனிமேல் நீ நெனச்சதெல்லாம் செய்யலாம். உன் இஷ்டம் போல நீ இந்த பீல்ட்ல வலம் வரலாம். நீ இப்போ ஹாப்பியா பேபி?” என்று அவள் எண்ணவோட்டம் புரியாது பேசிக் கொண்டே சென்றவன் தொடர்ந்து…
“நான் இன்னிக்கு தான் பேபி ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ஐ லவ் யூ சோ மச் பேபி” என்றும் அவள் முகவாயைப் பற்றி நிமிர்த்தி, பெண்ணவளின் பிறை நுதலில் மென்மையாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தவன் அப்படியே கண்கள் கன்னம் என்று முத்த ஊர்வலம் நடத்தி இறுதியாக “ஐம் நாட் கண்ட்ரோல் மை செல்ப் பேபி” என்றபடியே அவள் மறுப்பதற்குக் கூட இடம் கொடாமல் தன் ஏக்க இதழ்களை பாவையவளின் அமுத அதரங்களில் வேகமாகவே பூட்டிக் கொண்டான் ஆத்விக்வர்மா.
ஏற்கனவே அவன் மேல் இமாலய வருத்தம் கொண்டிருந்தவளுக்கு இன்றைய நாளின் குழப்பத்தோடு அவனது தற்பொழுதைய செயலிலும் அவள் எண்ணம் முழுதும் ஏதேதோ தவறான சிந்தனைகள் தோன்றி பெண்ணவளின் காதல் உள்ளத்தை மேலும் மேலும் ரணப்படுத்தத் தொடங்கியது.
மணம் புரிந்து பல மாதங்கள் கடந்தும் மனைவியின் சினத்தால் ஊனும் உடலும் பாலைவன மணலாய் வறண்டு இருந்தவனுக்கு பன்னீர் குடமாய்க் கிட்டிய பெண்ணின் தேன் சுளைகளை விட்டு விட மனமே இல்லாது அவள் விலக விலக இழுத்து இழுத்து பூட்டிக் கொண்டு தனை மறந்து ஆழ்ந்த இதழ் ஒற்றலில் மூழ்கத் தொடங்கியவனை தடுக்கும் வழியறியாது அவனோடு ஒன்றத் தொடங்கி இருந்தவளுக்கு சிறிது சிறிதாக தன்னை சுழலுக்குள் இழுக்கும் ஆணவனின் அருகாமையும், அவன் மேல் அத்துணை கோபம் இருந்தும் அவனை விலக்கித் தள்ள முடியாத தன்னுடைய இயலாமையும் எண்ணி அவள் கண்ணில் இருந்து கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் இறங்க…
அத்துணை நேரம் அத்துணை தித்தித்த பெண்ணின் இதழ்களில் உப்புச் சுவையை உணர்ந்த ஆத்விக்கும் சடுதியில் மனைவியை விட்டு விலகியவன் அவளின் மௌனக் கண்ணீர் கண்டு பதறி, “பேபி ஏண்டா? ஏன் அழறமா” என்று மீண்டும் அவள் கன்னங்களைப் பற்ற வந்தான்.
அதில் அவனை உறுத்து விழித்தவளும் அவன் கைகளுக்குக் கிட்டாது நழுவிக் கொண்டவள் சிவந்து கலங்கிய விழிகளோடே, “அன்னிக்கு ராஹி உங்ககூட பேசணும்னு சொன்னப்போவே நான் இப்டி ஒன்ன எதிர்பார்த்தேன்” என்று நக்கல் குரலில் சொல்ல…
அவனோ இப்பொழுது அவளை புருவம் நெறிக்கப் பார்த்தான்.
அவன் பாவனையைப் பார்த்து,
“புரியாத மாதிரி பாக்காதீங்க” என்று சீறியவள், “என்ன சமாதானம் பண்றதுக்கு ராஹிதான உங்களுக்கு இப்டிலாம் ஐடியா குடுத்தது?. என்ன இவ்ளோ பெரிய கம்பெனியோட எம் டி ஆக்கிட்டா சட்டுன்னு எல்லாத்தையும் மறந்து நான் உங்க கூட வாழ்ந்துருவேன்னு நினைச்சிங்களா.?” என்று குரல் கரகரக்கக் கேட்டவள்…
“ஆனா நீங்க தப்பு கணக்கு போட்டுட்டிங்க. ச்சீ உங்களுக்கே இது அசிங்கமா இல்லயா. கேவலம் இந்த உடம்புக்குத்தான இவ்ளோ மெனக்கெடுறீங்க.” என்று அவன் முத்தம் பதித்த இதழ்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், “பணம் பதவின்ன உடனே பல்லைக் காட்ட என்ன என்ன அந்த மாதிரிப் பொண்ணுன்னு நினைச்சிங்களா” என்று கணவன் தமக்கை சொல்லியதால் மட்டுமே இப்படி எல்லாம் செய்திருக்கிறான் என்று தவறாக எண்ணியும், தற்சமயம் அவன் செய்திருக்கும் ஒரே செயலில் அவன் முன்பு பேசியது எல்லாம் பின்னுக்குச் சென்று தன் மனம் இக்கணமே அவன் காலடியில் வீழத் துடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அவள் பாட்டில் பேசிக் கொண்டே சென்றவளை…
“ஜஸ்ட் செட்டப் சாஹித்தியா” என்று ஒற்றை கர்ஜனையில் மனைவியை ஊமையாக்கி நிறுத்தி இருந்தான் ஆத்விக்வர்மா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.