மகள்கள் இருவரும் சென்னை சென்று வேலை பார்க்க விருப்பம் தெரிவிக்கவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டோடு தந்தையென்ற பொறுப்பும் சேர்ந்து கொள்ள, அன்றய தினமே சென்னையில் வசிக்கும் தன் அத்தை மகன் அஸ்வினுக்கு அழைத்து விட்டான் யுவா.
குடும்பத்தினரோடு ஒன்றாக இரவுணவு உண்டிருந்த வேளை யுவாவின் அழைப்பை ஏற்ற அஸ்வினும் யுவாவிடம் நலம் விசாரித்து விட்டு “என்ன விஷயம் யுவா.?” என்று வினவ இங்கு ஆத்விக்கின் செவிகளோ கூர்மையாகியது.
அஸ்வினின் கேள்விக்கு யுவாவும், சாஹிக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பது பற்றியும், ராஹிக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தவன், “உங்களுக்கு தெரிஞ்ச கம்பெனில ராஹிப்பாக்கு எதாச்சும் வேக்கன்சி இருக்குமா மச்சான்.?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.
அவன் வார்த்தையிலேயே அஸ்வினை தொல்லை செய்கிறோமோ என்ற உறுத்தல் இருக்க, அதை புரிந்து கொண்ட அஸ்வினுக்கோ யுவாவின் மேல் இன்னும் பாசமும் மதிப்பும் கூடித்தான் போனது.
அஸ்வினோ, “எதுக்கு யுவா வேற கம்பெனி?, நம்ம கிட்ட இவ்ளோ பிஸ்னஸ் இருக்கப்போ ராஹி எதுக்கு வெளிய போய் வேல பாக்கணும்.” என்று பட்டென்று கூறியவன் தொடர்ந்து சாஹி வேலையில் சேரப் போகும் கம்பெனி பற்றியும் கேட்டறிந்தவன் சற்றே மகிழ்ச்சியான குரலில்,
“அந்தக் கம்பெனியும் நம்ம ஆத்விக்கோட ப்ரண்ட் கம்பெனிதான், ரொம்ப நல்ல கம்பெனி யுவா” என்று கூடுதல் தகவலையும் கொடுத்து அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு இறுதியாக, “ராஹிமா, பி காம் தான படிச்சிருக்கு, அந்த படிப்புக்கு ஏத்த வேலைய நம்மகிட்டயே பாக்கட்டும் நீ கவலைய விட்டு ரெண்டு பேரையும் அழச்சிட்டு சென்னைக்கு வா யுவா பாத்துக்கலாம்” என்று முடிக்க…
அவன் பேச்சில் ஆதியின் முகமோ சற்றே கடுமை பூசி அவனுள்ளிருக்கும் பிடித்தமின்மையைக் காட்டியது.
யுவாவிடம் இன்னும் சில ஊர்க் கதைகளையும் பேசி முடித்த அஸ்வின்
கைபேசியை அணைத்து விட்டு உணவுன்னத் தொடர, அவனையே பார்த்திருந்த ஆத்விக்கும் மதியும், வேகமாக அவனிடம் “என்ன விஷயம்.?” என்று விசாரிக்க… அங்கிருந்த அஸ்வினின் பெற்றோரும் கூட மகனை கேள்வியாகப் பார்த்தனர்.
அஸ்வினும் அவர்களிடம் யுவா கூறிய விஷயத்தை விளக்கியவன் “சாஹிக்கு
இங்க ஐ டி ல நல்ல ஜாப் கிடைச்சிருக்காம். ராஹியும் சென்னை வர ஆசைப்படும் போல. அதனால அவள நம்ம கம்பெனிலயே ஜாயின் பண்ணட்டும்னு அழைச்சிட்டு வர சொல்லிட்டேன்” என்று கூறிய அஸ்வினின் பார்வை ‘சரிதானே’ என்கிற ரீதியில் மனைவி மக்களை நோக்க…
மதியோ, “சரியாதான் சொல்லிருக்கீங்க அஸ்வி, நம்ம கிட்டயே எவ்ளோ ஸ்டாப்ஸ் ஒர்க் பண்றப்போ நம்ம வீட்டு பொண்ணு ஏன் வெளில போய் வேல பாக்கணும்” என்று சொன்னாள்.
ஆத்விக்கும், “நீங்க எது செஞ்சாலும் சரியா இருக்கும் டாட்” என்று சொல்லியவன்… “மாமா எப்ப சென்னை வர்றாங்க டாட்.?” என்று சற்றே துள்ளல் குரலில் வினவ…
அவற்றையெல்லாம் ஒரு வெற்றுப் பார்வை பார்த்திருந்த ஆதியோ, யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் கைகழுவி எழுந்து கொண்டான்.
ஆத்விக்கின் கேள்விக்கு உரிய பதிலைக் கொடுத்த அஸ்வினோ, ஆதி கைகழுவி எழவும் ‘தங்கள் பேச்சை அவன் கவனிக்கவில்லையோ?’ என்று எண்ணியவன், “ஆதி” என்றழைத்து மேலோட்டமாக மீண்டும் விஷயத்தைக் கூறியவன், “நம்ம கம்பெனிஸ்ல எதும் வேக்கன்சி இருக்கா.?” என்றும் வினவ…
அவனோ அசட்டையாக உதட்டைப் பிதுக்கியவன், “நோ டாட், லாஸ்ட் மந்த்தானே இன்டெர்வியூ வச்சி வேக்கன்சி எல்லாம் பில் பண்ணோம், மறந்துட்டிங்களா.?” என்று கேட்டான்.
அதற்கு அஸ்வினோ, “அட ஆமால்ல” என்றவன், “அப்போ ஒன்னு செய்யலாம் ஆதி, வேற ஊருக்கோ இல்ல பிராஞ்சுக்கோ டிரான்ஸ்பர் கேட்டிருக்க யாரையாவது மாத்திட்டு அங்க ராஹிய போடலாம்” என்று சொல்லியவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய்…
“நம்ம அக்கௌன்டன்ட் சபரி கூட ரொம்ப நாளாவே கோயம்பேடு ப்ராஞ்ச்க்கு டிரான்ஸ்பர் கேக்குறாரில்ல அவர மாத்திடலாமா ஆதி.?” என்று கேட்டான் அஸ்வின்.
தந்தையின் கேள்வியில் ‘இந்த டாட்க்கு என்னாச்சு.?’ என்பது போல் அவனைப் பார்த்த ஆதியோ, “வாட்ஸ் ராங்க் வித் யூ டாட், நம்ம கம்பெனில ஒர்க் பண்ற சீனியர் அண்ட் சின்சியர் ஸ்டாப்ப போய் டிரான்ஸர் பண்ணலாம்னு சொல்றீங்க. அந்த வில்லேஜ் கேர்ளுக்காக இவ்ளோ மெனக்கெடனுமா டாட்?” என்று நிறுத்தியவனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்னால் பார்த்த ரெட்டை ஜடை முகம் ஒன்று மங்களாகத் தோன்றி மறைய அவனோ முகம் சுழித்தவாறு மேலும் தொடர்ந்தவன்.
“யுவா அங்கிள் நமக்கு வேண்டப்பட்டவருதான் டாட், அவருக்கு எதும் மணி ரெக்யூர்ட் ஹெல்ப் வேணா பண்ணலாம். ஆனா அவரோட பொண்ணுங்கறதுக்காக இப்பதான் டிகிரி முடிச்சிருக்க அன்னெக்ஸ்பீரியன்ஸ் பெர்சன எப்டி நம்ம கம்பெனிக்கு எடுக்க முடியும்?” என்று நீளமாகப் பேசிக் கொண்டே சென்றவனை ஒரு கண்டனப் பார்வை பார்த்தான் அவன் தந்தை.
மகனின் பேச்சில் சிறிதே சினம் துளிர்த்தும் அதை கட்டுப்படுத்திய அஸ்வினோ, “நோ ஆதி…” என்று குரல் உயர்த்தாத ஒற்றை வார்த்தையிலே அவன் பேச்சை நிறுத்தியவன், “நீ பேசுறது ரொம்ப தப்பு ஆதி… யுவராஜ் நல்ல அப்பா மட்டுமில்ல கிரேட் பிஸ்னஸ்மேனும் கூட, அவன் பணத்துக்காக தன்னோட டாட்டர்ஸ இங்க வேலைக்கு அனுப்பல, பொண்ணுங்களோட ஆசைக்காகத்தான் சென்னைக்கு அனுப்புறான், ராஹியும் சாஹியும் நம்ம வீட்டு பொண்ணுக ஆதி, அவங்கள ஆதுவ ட்ரீட் பண்ற மாறிதான் நீ கேர் பண்ணனும், இது அப்பாவோட ஆசை…” என்று முடித்த தந்தையின் பேச்சை மறுக்க விரும்பாதவனோ அஸ்வினை நோக்கி,
“ஓகே டாட் யூர் விஷ்…” என்று மட்டும் கூறி தோள்களை குலுக்கியவன் தன் அறைக்குள் சென்று மறைய, ஆத்விக்கும், “என் இனிய பொன்னிலாவே” என்ற பாடலை ஹம் செய்த வண்ணம் அவன் மஞ்சத்தில் போய் விழுந்தான்.
கட்டளையும் இல்லாத கோரிக்கையும் அல்லாத தந்தையின் வார்த்தைகளுக்கு என்றும் போல் இன்றும் கட்டுப்பட்ட ஆதித்யா அஸ்வினிடம் “யுவர் விஷ் டாட்” என்று கூறிவிட்டு வந்திருந்தாலும், ராஹி சென்னை வரப் போவதையும், தன் கம்பெனியிலேயே அவள் வேலைக்கும் சேரப் போவதையும் நினைத்தவனுக்கு, அவளுடனான இரண்டு மூன்று சந்திப்புகளும் ஞாபகம் வர, படுக்கையில் வீற்றிருந்தவன் கம்பீர வதனத்தில் அது கடுமையைத்தான் விதைத்தது…
அஸ்வினிடம் பேசி முடித்த யுவா மனைவியைப் பார்த்து, “ராஹிப்பாவ அஸ்வின் மாமா அவங்க கம்பெனிலயே சேர சொல்றாங்க விழி, எனக்கும் அது சரின்னுதான் படுது, சாஹிமா சேர போற கம்பெனி கூட ஆத்விக்கோட ப்ரண்ட்தான் பாக்குறாப்புளையாம், ரெண்டுமே தெரிஞ்ச இடமா அமஞ்சு போச்சு விழி… இனி பட்டூஸ சென்னைக்கு அனுப்ப யோசிக்கவே தேவையில்ல” என்று மனைவியோடு சேர்த்து அங்கிருந்த அனைவரையும் பார்த்து மகிழ்ச்சியாகவே கூறியவன்…
மகள்களிடமும், “இப்போ சந்தோசம் தானடா இன்னும் ஒன் வீக்ல சென்னைக்கு கிளம்பலாம் தேவையானதெல்லாம் எடுத்து வச்சி ரெடியாகிக்கங்கடா…” என்று சொல்ல தந்தையின் பேச்சினை கேட்டிருந்த ராஹியின் மனக்கண்ணிலோ தங்கள் கொள்ளுத் தாத்தா வேலுச்சாமியின் இறப்பின் போது இறுதியாகப் பார்த்த ஆதியின் கடுகடுத்த முகமே வந்து போனது.
யுவாவின் பேச்சில் முகம் சுருக்கிய ராஹித்யா அவனிடம் ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன் கணவனை ஏறிட்ட மலரோ, “நீங்க சென்னைய பத்தி சொன்னப்போ கூட எனக்கு இஷ்டமில்லாமத்தே யுவித்தான் இருந்துச்சு, ஆனா அஸ்வின் அண்ணே கம்பெனிலயும், அவங்களுக்குத் தெரிஞ்ச இடத்திலயும்தே புள்ளக இருக்கப் போகுதுகங்கறப்போ என்னோட தயக்கம்லாம் போயிருச்சுத்தான்” என்று சொன்னாள்.
இரட்டைகளின் தம்பி பிரித்திவும்
“சூப்பர் சாஹிக்கா நெனச்ச மாறியே மெட்ராசுக்கு போய் வேல பாக்கப் போற, என்ஜாய் என்ஜாய்” என்று தமக்கையிடம் சொல்லிச் சிரிக்க…
முகம் கொள்ளாப் புன்னகையோடு அவர்கள் அனைவரையும் ஏறிட்ட சாஹித்யாவோ, பெற்றோரோருக்கும் தம்பிக்கும் நன்றி கூறியவள், தன்னருகில் நின்ற தமக்கையையும் அணைத்து விடுவித்து, “அஸ்வின் மாமா உன்ன அவங்க கம்பெனிலையே சேர சொல்லிட்டாங்கன்னு கேட்டபின்ன, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குடி” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவள் மலர்ந்த முகம் பார்த்த ராஹிக்கோ வாய் வரை வந்த மறுப்பு வார்த்தைகள், மீண்டும் அவள் தொண்டைக் குழியிலே அமிழ்ந்து போனது.
தான் ஆசைப்பட்ட ஐடி வேலையில் சேரப் போகும் தங்கையின் குதூகலமும், அஸ்வினின் பேச்சில் திருப்பிதியுற்றிற்கும் குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் ராஹியின் சொந்த விருப்பு வெறுப்புகளை பின்னுக்குத் தள்ளி இருக்க… அவளும், ‘எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துருவோம்’ என்கிற ரீதியில் அவர்களோடு தன்னை பிணைத்துக் கொள்ள, அடுத்த ஆறு தினங்களில், பெற்றோருடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்கினர் அவர்களின் இரட்டை தேன்சிட்டுக்கள்.
பிச்சைகாரன் முதல் பில்கேட்ஸ் வரை அனைவரும் தொழில் செய்யும் மாநிலம், குண்டூசி முதல் குழந்தைகள் வரை அனைத்தையும் பணமாக்கும் மாநகரம், தமிழ்நாட்டின் தலைநகரம் சிங்காரச் சென்னையின் பெயர் கேட்டாலே, தமிழ்நாட்டின் உள்ள மற்ற ஊர் மக்களுக்கு எல்லாம் ஒரு பிரமிப்பும், கூடவே ஒரு விதமான பீதியும் இருக்கத்தான் செய்ய, வாழ்க்கையில் இரண்டாம் முறை சென்னை மண்ணில் கால் பதித்த பூஞ்சோலைப் பாவைகளும் விழிகள் விரியத்தான் அந்த பரந்த சென்னையை ரசித்தபடி வந்தனர்.
சென்னையின் நீலாங்கரைப் பகுதியில் நீண்ட கடற்கரையை ஒட்டி, வானளவு உயர்ந்து நின்ற அஸ்வினின் வீட்டில் தந்தையுடன் வந்திறங்கிய ராஹியும் சாஹியும் இமை கொட்ட மறந்து அந்த அழகிய சூழலில் அமைந்திருந்த ஆடம்பர மாளிகையைப் பார்த்திருக்க, அவர்களை வாயில் கேட்டிற்கே வந்து ஆர்வத்தோடு வரவேற்றனர் அஸ்வினும் மதியும்.
“வெல்கம் மை ஹோம் யுவா மலர், கம் இன்சைட் யுவாஸ் ஏஞ்சல்ஸ்” என்ற அஸ்வின் அவர்களை வரவேற்க, மதியும் “வாங்கண்ணே வா மலர், ராஹி சாஹி வாங்கடா வாங்க” என்று அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல… “வாங்கடா கண்ணுகளா உங்களை எல்லாம் பாத்து எவ்ளோ நாளாச்சு…” என்று பேத்திகளோடு சேர்த்து யுவா மலரையும் உச்சி முகர்ந்தனர், அவனின் அத்தை சுபாவும், மாமா ராகவனும்.
யுவா மலரின் தவப்புதல்வனுக்கு பள்ளியில் முக்கியத் தேர்வு இருப்பதால் தங்களோடு வருகிறேன் என்று அடம் பிடித்தவனை ஏதோதோ சொல்லி சமாளித்து விட்டு விட்டு வந்தவர்கள் இரட்டையரோடு வீட்டிற்குள் நுழைந்தவர்களை…
வேகமாக அவன் அறையிலிருந்து வெளியே வந்த அஸ்வினின் இளைய புதல்வன் ஆத்விக்கும், “வாங்க அங்கிள், வாங்க ஆன்டி” என்று வரவேற்று யுவாவிடம் கைகுலுக்கியவன்…
“ஹாய் ராஹி, ஹாய் சாஹி எப்டி இருக்கீங்க..?” என்று பெண்களிடமும் புன்னகைத்து, அவன் சிறுவயது பழக்கமாய் அவர்களிடம் கேட்பரீஸ் சாக்கலேட்டையும் நீட்ட, அவர்களும் “ஹாய் ஆது மாமா” என்று பதில் நகை உதிர்த்து அவன் நீட்டிய இனிப்பையும் பெற்றுக் கொண்டவர்கள் அங்கிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.
மகள்களோடு அமர்ந்து கொண்ட யுவா தம்பதியும், “எப்டி இருக்கீங்க அஸ்வின் மச்சான், மதியண்ணி நல்லா இருக்கீகளா, ஆதித் தம்பி நல்லாயிருக்காரா.?” என்று விசாரிக்க, அவர்களும், “இங்க எல்லாம் நல்லாயிருக்கோம், நீங்க, அப்றம் ஊர்ல எல்லாரும் எப்டி இருக்காங்க.?, ஏன் மலர் இப்பதான் இங்க வரணும்னு உனக்குத் தோணுச்சா, எவ்ளோ வருஷம் ஆச்சு நீ இங்க வந்து.?” என்று விசாரித்தவர்கள் அப்படியே தங்கள் விருந்தோம்பலையும் தொடங்கினர்.
நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் மலரையும் அவள் பெண்களையும் மதியோ ஓடியாடி கவனிக்க, மலரும் “அண்ணி இருங்கண்ணி நானும் வர்றேன்” என்று அவள் கூடவே இணைந்து கொள்ள அதைப் பார்த்த சாஹியும் அவ்வீட்டில் இயல்பாக அமர்ந்திருக்க, ‘இது ஆதியின் வீடு’ என்ற எண்ணம் மேலோங்கிய ராஹித்யாதான் இருக்கையின் நுனியில் சற்றே நெளிந்திருந்தாள்.
மாலைப் பொழுதில் சென்னை வந்து சேர்ந்தவர்கள் இரவு உணவை முடிக்கும் தருவாயிலும் கூட ஆதி வீட்டிற்கு வராதிருக்க, இப்பொழுது ராஹியின் துறுதுறுப்பும் கூட சிறிது சிறிதாக வெளிப்படத் தொடங்கியிருந்தது. பெரியவர்கள் உள்ளே ஹாலிலும், இரட்டையர்கள் அந்த வீட்டின் அழகிய போர்ட்டிகோவிலும் நின்று, ஆத்விக்கிடம் பேசிச் சிரித்திருந்த நேரம், தூரத்தில் தெரிந்த கடலலையை ரசித்துக் கொண்டிருந்த ராஹியின் மேல் உரசி விடுவது போல் வந்து நின்றது, ஆதித்யாவின் அன்னப்பறவை பஹானி ஹுய்ரா.
திடீரென்று தன்னை உரசுவது போல் ஒரு மகிழுந்து வந்து நிற்கவும் தூக்கிவாரிப்போட்ட பெண்ணவளும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, அதற்குள் அந்த மகிழுந்தில் இருந்து சம்பையென வெளியேறிய ஆதியோ அங்கிருந்த சாஹித்யாவைப் பார்த்ததாலோ என்னவோ, அனைவருக்கும் பொதுவாக “ஹாய் காய்ஸ்” என்று மட்டும் கூறியவன், ராஹியின் முகத்தைக் கூட ஏறிடாமல் வீட்டிற்குள் விரைந்தான்.
பதிலுக்கு “ஹாய் ஆதி மாமா” என்ற சாஹியும் மின்னல் போல் வந்து சென்றவனை பிரமித்து நோக்கியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்ல, ஆத்விக்கும் இமைக்க மறந்து நின்ற ராஹித்யாவிடம், “என்ன ராஹி பயந்துட்டியா? அண்ணா எப்பவும் இப்படித்தான, உள்ள வா ராஹி” என்றவனும் உள்ளே சென்று மறைந்தான்.
ஆதியின் செயலில் தோன்றிய அதிர்ச்சியிலும், அதற்கு ஒரு சாரி கூடச் சொல்லாத அவனின் அலட்சியத்திலும், முகம் கடுத்த ராஹியோ, “திமிர் பிடிச்சிவன், காரக் கொண்டு வந்து எப்டி நிறுத்துறான் பாரு, கார் மோதி எனக்கு எதும் ஆனா இவனா பாப்பான், சின்ன வயசுல எப்டி இருந்தானோ இப்பயும் அப்டியேதான் இருக்கான், ஆள் மட்டும் பனைமரம் மாறி வளந்தா போதுமா, மூளை வளர வேணாம்” என்று சரமாரியாக அவனுக்குத் திட்டிக் கொண்டிருந்தவள், அவன் வண்டியையே பற்றிப் பிடித்து தன்னை சமன்படுத்திக் கொள்ள, அவளின் செவியை வந்தடைந்தது ஒரு சொடுக்குச் சத்தம்.
சற்று முன் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த மகிழுந்தின் கைபிடியை பற்றியே தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்த பெண்ணவளோ செவியருகில் கேட்ட சொடுக்குச் சத்தத்தில் துள்ளித் திரும்பி, தன் முன் ஆஜானுபாகுவாய் உயர்ந்து நின்றவனை அண்ணாந்து நோக்கியவள், பேசும் மொழியற்று நிற்க, அவளை மீண்டும் சொடுக்கிட்டு அழைத்தவனோ, “ஹேய் டெவில்… டூ ஸ்டெப் பேக் போறியா” என்றவன் அவள் சுதாகரித்து நகர்ந்ததும் தன் கார் கதவைத் திறந்து, மறந்து சென்ற தன் கைபேசியை எடுத்துக் கொண்டவனோ மீண்டும் வீட்டிற்குள் செல்லத் திரும்பியவன், பசியோடிருப்பவன் பழைய சோற்றைப் பார்ப்பது போல் இன்னும் தன்னையே விழியகலாது பார்த்திருந்த ராஹியிடம், “இவ்ளோ காஸ்ட்லி கார்லாம் நீ இதுவரை பாத்திருக்க மாட்டதான் ஆனா அதுக்காகவெல்லாம் என்னோட கார நீ டச் பண்றத என்னால அனுமதிக்க முடியாது, பிகாஸ்… யாரும் என் பொருள தொடுறது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது, சோ… டோன்ட் டச் மை கார்…” என்று இகழ்ச்சி இழையோடக் கூறியவன்…
அங்கிருந்த பணியாளை அழைத்து, “கார் புள்ளா நல்லா தொடச்சு கிளீன் பண்ணி வை ரமேஷ்” என்றும் சொல்லி விட்டுச் செல்ல…
அதைக் கேட்டிருந்த ராஹிக்கோ அவன் காரை பற்றியிருந்த விரல்களை விறகடுப்பில் வைத்துப் பொசுக்கி விடும் உணர்வுதான்.
தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி என்று கூட எண்ணாமல், தான் தொட்டதற்காகக் காரை சுத்தப்படுத்தச் சொல்லிய ஆதியின் ஆணவப் பேச்சில் ராஹியின் உள்ளம் எரிமலையாய்க் குமுறி அவள் தன்மானத்தையும் சீண்டிவிட, அவளோ அவன் கார் கண்ணாடியை உடைத்து விடும் நோக்கில் சிறு கல்லோடு அந்த பஹானியை நெருங்கியவள், “சின்னம்மா, கொஞ்சம் தள்ளிக்கீடுறீங்களா?” என்ற பணியாளின் குரலில் சற்றே தன்னை நிதானித்தாள் ராஹித்யா.
“என்ன பேச்சு பேசிட்டுப் போறான், ஆணவம் புடிச்சவன், இவன் காஸ்டலி கார் வச்சிருந்தா என்கிட்ட திமிரா பேசுவானா, கார் லோன் போட்டா யாருவேனாலும்தே கார் வாங்கலாம், இவன் மட்டும்தே பெரிய பிஸ்ஸாத்தா” என்று வாய் ஓயாது அவனைக் கரித்துக் கொட்டியவளுக்கு உலகின் நம்பர் ஒன் மாடல் மகிழுந்தான அந்த பஹானி ஹுய்ராவைப் பற்றி ஒன்றும் தெரியாமல் தான் இருக்க, அவளோ அவனுக்கு பதில் கொடுக்காது விட்ட மடத்தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவள் “எல்லாம் இந்த சாஹியால வந்தது” என்று மேலும் புலம்பியவாறே ஆதியின் மேல் உள்ள கோபத்தை அழகான காரிலும் காட்ட முடியாமல், கையிலிருந்த கல்லை அங்கிருந்த தண்ணீர் ஊற்றுக்குள் வீசி எறிந்துவிட்டு, யாரிடமும் பேசவும் பிடிக்காதவள் போல் படுக்கையில் சென்று முடங்கிக் கொண்டாள்.
முதல் நாள் பொழுதுகள் அனைத்தும் விருந்தோம்பலிலும் அரட்டையிலும் கழிய, மறுநாள் காலை புதல்விகளோடு வெளியேறிய யுவா, சாஹியை அவள் அலுவலகத்தில் சேர்க்கை செய்து விட்டவன், மகள்கள் தங்குவதற்கு உயர்ரக பெண்கள் விடுதிகளும் விசாரித்து வர, அதை செவியுற்ற அஸ்வின் தம்பதியோ யுவாவிடம் சண்டைக்கே கிளம்பி விட்டனர்.
“எதுக்கு யுவா இப்போ ஹாஸ்டல்.?” எனக் கேட்ட அஸ்வினைக் கூட சமாளித்தவனால் “நம்ம வீடு இருக்கப்போ நீங்க எப்டி பிள்ளைகளுக்கு ஹாஸ்டல் பாக்கலாம்.?” என்று மல்லுக்கு நின்ற மதியிடம் பதில் கூற முடியாமல், அவனோ கேள்வியாக மகள்களை ஏறிட, செய்வதறியாது ஒரு நொடி திகைத்த ராஹியும் அங்கு படிகளில் இறங்கி வந்த ஆதியைப் பார்த்ததும், அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து பட்டென்று எழுந்து கொண்டவள், ஏதோ சொல்ல வந்த சாஹியின் கரம் பற்றித் தடுத்து, “இல்ல அங்கிள், இல்ல ஆன்டி எங்களுக்கு ஹாஸ்டல் தான் வசதி” என்றவளோ தொடர்ந்து…
“யுவிப்பா, நம்ம லாஸ்ட்டா பாத்துட்டு வந்த ஹாஸ்டல்லையே எங்கள சேத்து விட்டுடுங்க” என்று தந்தையிடமும் சொன்னாள்.
பெண்ணவளின் பேச்சை செவியுற்றபடி இறங்கி வந்தாலும், அவள் தன்னைப் பார்த்த பின் தான் இப்படிக் கூறுகிறாள் என்றும் அறிந்தே இருந்தாலும் அதற்கெல்லாம் அலட்டிக் கொண்டால் அவன் ஆதித்யா அல்லவே.
அமெரிக்க வாசம் மிகுந்த ஆணவனுக்கும், கிராமத்து மண் மணம் மாறா பெண்ணவளுக்கும் ஏனோ சிறு வயதிலிருந்தே பிடித்தமில்லாதிருக்க…
அவனோ அங்கு ராஹித்யா என்றொருவளே இல்லாது போல சாஹியிடம் மட்டும் இரண்டு வார்த்தைப் பேசியவன், பெரியவர்களிடமும் விடைபெற்று எங்கோ வெளியில் செல்லப் போக “ஆதி” என்று அவனைத் தடுத்து நிறுத்தினான் அவன் தந்தை.
மகனை அழைத்த அஸ்வின் யுவாவின் கரத்தில் இருந்த ராஹியின் படிப்புச் சான்றிதழ்களை வாங்கி அவனிடம் கொடுத்தவன்… “இதுல ராஹிமாவோட டிகிரி பேப்பர்ஸ், அப்றம் மத்த டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு, அன்னிக்கு பேசுனபடி நம்ம கம்பெனில எதாவது போஸ்ட்க்கு ராஹிய அப்பாயின் பண்ணிரூ ஆதி” என்று சொல்ல…
அதைக் கேட்ட ஆதியோ, “அப்பாயின் பண்ணனுமா.?” என்று கூவியே விட்டவன், “ஆனா டாட் இன்டெர்வியூ வச்சிதானே அப்பாயின் பண்ண முடியும்” என்று சொன்னான்…
அதற்கு அஸ்வினோ, “அது மத்தவங்களுக்கு ஆதி, நம்ம ராஹிம்மாக்கு எதுக்கு அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்” என்ற தந்தையின் பேச்சில்…
அவனுக்கோ உள்ளே சுறுசுறுவென்று கிளம்ப, ‘என்னோட கம்பெனில பியூன் வேலைக்கி சேரனும்னாக் கூட, மூனு கட்ட இன்டெர்வியூ முடிச்சாத்தான் சேர முடியும். ஆனா டாட் இந்த வில்லேஜ் கேர்ள்க்காக கம்பெனி ரூல்ஸயே டோட்டலா மாத்துறாரே’ என்ற ஆதங்கத்தோடு, அவள் மேல் உள்ள பிடித்தமின்மையும் சேர்ந்து அங்கிருந்த ராஹியை வெட்டும் பார்வை பார்த்தான் ஆதித்யவர்மா.