தன் நீண்ட நாளைய ஆசையான இந்தியாவிலே ரேஸ் கார்களின் உற்பத்திகள் தொடங்குவதற்கான பெரிய தொழிற்சாலையோடு கூடிய மகிழுந்து நிறுவனம் ஒன்றை தான் நிர்ணயித்த சரியான விலைப் பட்டியலுக்குள் கைபற்றி வெற்றிக் கனியைச் சுவைத்திருந்த ஆதி தந்தை தன் அறையில் இருந்து செல்லவும் கணமும் தாமதியாது மனைவியைத் தூக்கி தட்டாமாலை சுழற்றி இறக்கி விட்டவன்…
“ஹனி நான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன். என்னோட பல வருசக் கனவு இப்போ நனவாகப் போகுது. இதக் கொண்டாட நாம வெளிய போலாம். அப்டியே உனக்கு பார்ட்டிக்கு வியர் பண்றதுக்கு கொஞ்சம் ட்ரெஸ்ஸும் எடுத்தறலாம். ஓகே வா?” என்று திட்டமிடல் செய்ய…
கணநேரம் அவன் தூக்கி இறக்கியதிலே பேசாமடைந்தை ஆகியவளோ அவன் கூற்றில் மேலும் அதிர்ந்தவளாய்…
“நான் நான் நான் எதுக்குங்க பார்ட்டிக்குலாம்?” என்று காற்றுக் கூட கேளாத வண்ணம் கேட்டாள்.
அதில் அவளை சிறு முறைப்போடு பார்த்தவனும், “வை ஹனி அப்பதையும் இப்படித்தான் கேட்ட. நீ என்னோட மனைவி. மனைவின்னா என்னோட பெட்டர் ஹால்ப்னு அர்த்தம். அப்போ பார்ட்டிக்கு நீ இல்லாம எப்டி” என்றும் பேசிக் கொண்டே சென்றவனை…
“மாமா கூட இல்லை. இப்போ எதுக்கு இப்டி நடிக்கிறாங்க. இவங்க?” என்று குழப்பமாகப் பார்த்தாள் அவன் மனையாள்.
தன்னளவிலே தெளிவில்லாது இருப்பவன் தனது மனமாற்றத்தை இன்னும் வாய்வார்த்தையாக மனைவிக்கு உணர்த்தாது இருக்க, இப்பொழுதும் அவனது பெரும்பாலான செயல்களை நடிப்பு என்றே கருதிக் கொண்டவள், அவனின் தனிமை நேர நெருக்கத்தை மட்டும் மேலை நாட்டுப் பழக்கம், பெண் மீது கொண்ட ஈர்ப்பு, தன் மீதான நெகிழ்ச்சி’ இப்படி பல பெயர்களை இட்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டவளுக்கு கூடவே இப்பொழுதெல்லாம் கணவனின் அந்த நெருக்கம் ராஹிக்கும் அத்துணை பிடித்தமாகி இருக்க தன்னையும் அறியாமலே அவனை, அவனது செயல்களை அணுஅணுவாக இரசிக்கத் தொடங்கினாள் ராஹித்தியா.
மனைவி குழம்பி நிற்பதையும் உணராது, “ஹரியப் ஹனி” என்று அவளை துரிதப்படுத்தி, சிவாவிடம் எஞ்சிய வேலைகளை ஒப்படைத்து விட்டு அவளோடு வெளியேறியவன் அவளிடம் கூறியது போலவே அவளை மிகப்பெரிய ஜவுளிக்கடை ஒன்றிற்கும் அழைத்துச் சென்றான்.
அங்கு சென்றதோடு நில்லாமல் அவனே அருகில் நின்று அவளுக்குப் பொருத்தமான புடவைகளைத் தேர்வு செய்து, “இது உனக்கு செம்மையா இருக்கும் ஸ்வீட் ஹார்ட்” என்று அவள் தோள்களில் இட்டுப் பார்க்க…
அவளோ வழக்கம் போல் விழிகள் தெறிக்கும் அளவு அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
அவளுக்குத் தெரிந்து அவனுக்கான உடைகளை வடிவமைத்துக் கொடுக்கவே பிரத்தியேக அழகுக் கலை நிபுணரை நியமித்து இருப்பவன் இதுவரை யாருக்காகவும் யாருடனும் எந்தக் கடைக்கும் சென்றதும் இல்லை அல்லவா.
அவள் ஆச்சர்யத்தைப் பொருட்படுத்தாது அவள் மறுக்க மறுக்க சில பல உயர்ரக புடவைகளும் இன்னும் பிற அணிமணி வகைகளும் கூட அவனே தெரிவு செய்து வாங்கியவன் அதற்கு பொருத்தமாக வேண்டும் என்று கேட்டு தனக்கும் சில உடைகள் வாங்கிக் கொண்டே அவளோடு வீடு வந்து சேர ராஹியின் கால்களுக்கடியில் வந்து நின்றது வெள்ளை நிறப்பூனைக் குட்டி ஒன்று.
பிறந்து சில மாதங்களே ஆன மிக அழகிய பூனைக்குட்டி காலை வந்துச் சுற்றியதும் தன்னோடு வந்த கணவனையும் மறந்து, “ஹேய் மீனுக்குட்டி” என்று அதைத் தூக்கிக் கொண்டவள் பூனைக்குட்டியை நெஞ்சோடு இறுக்கி அணைத்து முத்தங்களும் இட்டவாறே, “பால் குடிச்சியாடி பட்டூ” என்றும் அத்தோடு உரையாடலைத் தொடங்க அதுவும், சில பல முனகலோடு தாயின் சிறகுக்குள் பதுங்கும் பறவைக் குஞ்சாக அவள் கைகளுக்குள் குழைந்தது.
அன்று பேச்சு வாக்கில் அவள் வளர்த்த பூனைக்குட்டியைப் பற்றி பெண்ணவள் சொன்னதை மனதிலே வைத்திருந்தவன் சில தினங்கள் முன்னால் அவளுக்கே தெரியாது ஒரு குட்டி பூனையை வாங்கி வந்து அவளுக்குப் பரிசளித்திருந்தான் ஆதி.
தொழில் உலகின் முடிசூடா மன்னனாக வளம் வரும் கணவன் அன்று எப்படி அவளது அவசரத் தேவையை நிறைவேற்றுவான் என்று எதிர்பார்க்கவில்லையோ அதேபோல் இன்றும் அவனிடம் இப்படி ஒரு பரிசை எதிர்பார்த்திராதவளும், “எனக்கா ஆதி சார்! நீங்களா போய் வாங்குனீங்க?” என்று ஆச்சர்யமாக வினவ…
அவனும் அவளின் ஆழி விழிகளில் புதைந்தபடியே, “உனக்கே உனக்குத்தான் ஹனி. எதுக்கு இவ்ளோ ஆச்சர்யம்” என்று இயல்பாக அவள் மூக்கை பிடித்து ஆட்டி விட்டும் சென்றிருந்தான்.
அந்தப் பூனைக்குட்டியைத் தான் பெண்ணவள் தற்சமயம் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடியே அணிந்திருந்த கோட்டை கழற்றி அதன் கொண்டியில் மாற்றிய அவள் கணவனுக்கோ அவளைத் தூக்கிக் கொஞ்சத்தான் பேராவல் கிளம்பியது.
பூனைக்குட்டியை வாங்கி வரும் போதும் அதை அவள் கைகளில் கொடுக்கும் போதும் இருந்த சந்தோசம் எல்லாம் பூனைக்குட்டியினுடனான ராஹியின் நெருக்கத்தில் இப்பொழுது அதன் மீது பொறாமையாக உறுமாறிக் கொண்டிருந்தது அவள் கணவனுக்கு.
கோட்டைக் கழற்றியதைத் தொடர்ந்து மேல் சட்டையின் பித்தான்களையும் அவிழ்க்கத் தொடங்கியவன், “இங்க புருஷன் டையர்டா இருக்கானே அவனுக்கு பக்கத்துல இருந்து ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம்னு இல்ல. ஆபிஸ்ல இருந்து வந்ததும் எப்போப்பாரு பூனைக்குட்டியத் தூக்கி வச்சுக்கறது” என்று ஓரக்கண்ணால் ராஹியை நோக்கி சிறு பிள்ளை போல் குறைப்பட்டுக் கொள்ள…
அவனின் முக பாவனையைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவளோ, “ஏன் ஆதி சார் காலையிலிருந்து உங்க கூடத்தானே இருக்கேன். நீங்க சொன்னது தான் செஞ்சேன். இப்போதான மீனுவ தூக்கினேன்” என்று அவளும் சலுகையாகவே கேட்டாள்.
சமீப காலமாக இப்படியான உரையாடல்கள் அவர்களுக்குள் மிகவும் சகஜமாகி இருந்தது.
மனைவியின் பதிலுக்கு ஆதியோ, “காலையில இருந்து என்னோட இருந்த தான். ஆனா மீனுகுட்டியப் பாத்ததும் என்ன அம்போன்னு விட்டுட்டியே. பாரு இப்போகூட என்ன சார்னு தான் கூப்பிடுற. ஆபிஸ்ல பேசுனதெல்லாம் மறந்தாச்சு” என்று இன்னும் கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள…
அதில் தவறு செய்தவளாய் உதட்டைக் கடித்தவளும், “இந்த மீனுக்குட்டி எங்க யுவிப்பா வாங்கிக் கொடுத்த அந்த மீனு மாறியே இருக்கா அதான் இது எனக்கு ரொம்பப் பிடிச்சிடிச்சி ஆ ஆ ஆதித் ஆதித்தான்” என்று இழுவையாக சொன்னவள், அவன் விழிகளின் ஒளிர்வையும் பார்த்தவாறே, “நீங்க தானே மீனுவ எனக்கு வாங்கிக் கொடுத்தீங்க. இப்போ இப்டி குறை சொல்றீங்க?” என்றும் சிணுங்களாகக் கேட்டாள்.
மனைவியின் அந்த சிணுங்களில் மேலும் தடுமாறிப் போனவனோ,
“ஆமா ஹனி அன்னிக்கு உன் பூனைக்குட்டிய பிரிஞ்சு பீல் பண்ணியேன்னு இத உனக்கு வாங்கிக் கொடுத்தது நான் தான். ஆனா அதுக்காக எனக்கு மட்டுமே சொந்தமான இடத்த அதுக்கு குடுப்பியா நீ?” என்றும் பொய்க் கோபம் காட்டிக் கேட்டவனின் வார்த்தையில் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவளோ பூனைக்குட்டி இருக்கும் இடத்தைப் பார்க்க, அதுவோ சில நொடிகள் முன்னே அவள் மடியில் இருந்தது தற்பொழுது பெண்ணவளின் மார்பின் மத்திக்கு நகர்ந்து, அங்கேயே தலை சாய்த்து துயில் கொள்ள ஆயத்தமும் ஆகியது.
நொடியில் பூனை இடம் மாறியதை எதிர்பாராத இருவருமே ஒரு நொடி சிலையென உறைந்திருக்க,
அத்தோடு எங்கிருந்தோ….
“மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே” என்ற பாடல் வரிகள் வேறு அவர்களின் செவியை வருடியது…
சற்று முன்னர் வரை அவள் முகத்தை பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்த ஆதியும், பெண்ணவளின் அதிர்ந்த பார்வையில் விழிகளை பூனைக்குட்டி இருக்கும் இடம் நோக்கி நகர்த்திய சமயம்
“மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே”
என்ற பாடல் வரிகளும் தொடர்ச்சியாக ஒலிக்க, அதைக்கேட்டபடி அசையாது நின்ற இருவரின் ஊனோடு உள்ளமும் காதல் எனும் நெருப்பால் உலைகலனாய் கொதிக்கத் தொடங்கியது.
காதல் என்று உணராமலே தங்களையும் அறியாது காதல் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவர்களை தற்சமயம் காமதேவனும் தன் சந்நிதிக்கு அழைக்க, சிறு வயதில் இருந்து மோதல் பார்வைகள் மட்டுமே பரிமாறிக் கொண்டவர்கள் முதல் முறை மோகவலையில் சிக்குண்டு போயினர்.
மனைவியின் தற்போதைய நிலையில் அவள் மேல் பதிந்த விழிகளை அகற்ற முடியாது நின்றவனோ இத்துணை நேரம் இருந்த காதல் பார்வையை கணவன் பார்வையாக மாற்றி பெண்ணவளை உச்சாதி பாதம் அளக்க, அந்தப் பார்வையில் கிறங்கிச் சிவந்தவளும் கையிலிருந்த பொருளை அழுத்திப் பற்றி தன் நாணத்தை மறைத்தாள்.
பெண்ணவள் விரல்களை மூடிய விதத்தில் அவள் மார்போடு பற்றியிருந்த பூனைக்குட்டியோ வலிதாங்க முடியாது, “மியாவ் மியாவ் மியாவ்” என்று கத்தியபடி அவளிடமிருந்து இறங்கி ஓடி ஒளிந்து கொள்ள, அந்த சப்தத்தில் தான் தன்னிலை அடைந்தவர்கள்…
“ஹேய் மீனுக்கு என்னாச்சு?” என்று இருவரும் ஒன்று சொன்னார் போல் பூனைக்குட்டியின் அருகில் ஓடினர்.
ஏற்கனவே ராஹியின் பிடியில் அரண்டிருந்த பூனைக்குட்டி, “ஏண்டா உங்க போதைக்கு நான் ஊறுகாயா? உங்க சங்காத்தமே வேணாம் போங்கடா” என்பது போல் அவர்களை முறைத்து விட்டு அதனிடத்தில் போய் பதுங்கிக் கொள்ள, அதில் நடந்ததை உணர்ந்த ராஹியோ “அச்சோ அழுத்திப் பிடிச்சிட்டனா மீனு சாரிடா. என்கிட்ட வாடா” என்று காதைப் பிடித்துக் காட்டி பூனையிடம் மன்னிப்பு வேண்டினாள் சோகமாய்.
மனைவியின் சிறு பிள்ளைச் செயலில் அடக்க மாட்டாது சிரித்து விட்டவனும் அவள் காலடியில் வீழத் துடிக்கும் மனதையும் இழுத்துப் பிடித்தவாறே, “ராஹி அத கொஞ்சம் தனியா விடு. அப்றமா அதுவே உன்கிட்ட வந்துடும். ப்ரஷ் ஆகிட்டு வா மாம்கிட்ட இன்னிக்கு சக்ஸஸ் ஆன ப்ராஜக்ட் பத்தி சொல்லணும்” என்று சொன்னவன் உடைமாற்றிக் கீழே செல்ல, அவனைத் தொடர்ந்து ராஹியும் கீழே இறங்கிச் சென்றாள்.
தம்பதியர் இருவரும் ஒன்றன்பின் ஒருவராக கீழே இறங்கி வர அங்கே கணவன் மூலம் விஷயம் அறிந்த மதியோ சந்தோச மிகுதியில் இனிப்பு வகைகளை செய்கிறேன் பேர்வழி என்று வீட்டையே அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஜவ்வரிசி, சேமியாவோடு முந்திரி பாதாம் கிஸ்மிஸ் அனைத்தும் சேர்த்து, போதாததற்கு முந்திரியை அரைத்தும் ஊற்றி சுவையானதொரு பால் பாயாசத்தை செய்து அனைவருக்கும் எடுத்து வந்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்தவர்களையும் பார்த்து, “ஆதிக்கண்ணா வா வா அப்பா இப்போதான் சொன்னாங்க. நீ எவ்ளோ நாளா ஆசைப்பட்டது என் மருமகள் வந்த பின்ன தான் கிடைக்கணும்னு இருந்திருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்குப்பா. இந்தாங்க பாயசம் எடுத்துக்கோங்க” என்று மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு சேர பாயாசக் கிண்ணத்தைக் கொடுத்தவள்,
“கொஞ்சம் முன்னதான் ஆதுவும் ஒரு நல்ல விஷயம் சொன்னான். இப்போ நீயும் சொல்லிருக்க. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா” என்றும் அளவளாவியவள் மற்றவர்களுக்கும் கையிலிருந்த இன்னிப்பைக் கொடுக்க…
அதைக் கேட்டபடி ராஹியோடு சோபாவில் வந்தமர்ந்த ஆதி தம்பியைக் கேள்வியாகப் பார்த்தான்.
அங்கே மனைவியோடு அமர்ந்திருந்த ஆத்விக்கும் தமையனின் பார்வைக்கு ஒரு வெட்கம் கலந்த புன்னகையை உதிர்த்தவன், “அது வந்துண்ணா நான் நான் பியூ மந்த்ஸ் முன்னால என் பிரண்டோட கம்பெனி ஷேர்ஸ் வாங்குனேன்ல. அது சாஹிக்காகத்தான் வாங்குனேன். என் பிரண்டும் கொஞ்சம் நாள்ள அமெரிக்கால செட்டில் ஆகப் போறான். அதுக்குள்ள அந்த கம்பெனிய சாஹி டேக் ஓவர் பண்ணனும். ஆனா அதுக்கு முன்ன அவளுக்கு கொஞ்சம் பிராக்டிஸ் தேவைப்படுதுண்ணா. அதான் அவ கூட நானும் வெளிநாட்டுக்கு போய் அவ ஸ்டடிஸ் முடிக்கிற வரை கூட இருந்துட்டு வரலாம்னு இருக்கோம்” என்று மனைவியின் விரல்களோடு விரல் கோர்த்தபடியே தரையைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சிலும் அவனருகில் அமர்ந்திருந்த சாஹியின் செம்மையுற்ற வதனத்திலுமே அவர்கள் தாம்பத்தியத்தின் ருசியை சுவைத்து, தங்கள் இல்வாழ்வை வாழத் தொடங்கி விட்டார்கள் என்று ஆதியோடு சேர்த்து அவன் பெற்றோரும் கூட நன்றாகவே கண்டு கொண்டனர்.
கடந்த சில தினங்கள் முன்பே புரிந்து கொண்ட செய்தியில் அஸ்வினும் மதியும் இரு மகன்களின் வாழ்வும் சீராகி விட்டது என்றெண்ணி பூரித்த முகமாய் இளைய மகன் சொன்னதையெல்லாம் கேட்டிருக்க,
ஆத்விக் சொல்லிய செய்தியில், “சாஹி சூப்பர்டி. வெளிநாட்டுக்குப் போய் படிக்கப் போறியா… ம்ம்ம் ம்ம்ம் ஜமாய்டி” என்று தங்கையிடம் சென்று கைகுலுக்கி விட்டு வந்த ராஹியும், “ஆனா இந்த ஆதுமாமா ஏன் ரெண்டு மூனு நாளாவே எல்லார்ட்டயும் தலையக் குனிஞ்சிகிட்டே பேசுறாங்க” என்ற அதி முக்கிய சந்தேகத்தையும் கணவனிடம் கேட்டு வைத்தாள்.
அதற்கு இதழ்களின் மறைவில் சிரித்துக் கொண்ட ஆதியும், “அவன் இப்போ பேமிலி மேன் ஆகிட்டான்ல. அதான் வெட்கப்படுறான் போல” என்று சொல்ல… ராஹிக்கோ ஒன்றும் புரியவே இல்லை.
சாஹியின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்த்தும் புரியாது விழித்தவள், “பேமிலி மேனா அதான் மேரேஜ் ஆனப்போவே ஆகிட்டாங்கல்ல” என்று கிசுகிசுப்பாகச் சொல்ல…
அதில், “ஹேய் மக்கு டெவில் உனக்கு ஹேர் வளந்த அளவுக்கு உள்ள ஒன்னும் வளரலடி” என்று செல்லமாக வைதவனோ, “பேமிலி மேன்னா அவன் பேமிலிய எக்ஸ்பன்ஷன் பண்ற வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டான்னு அர்த்தம்டி என் அமுல் பேபி” என்றவன் கரங்களோ அவளின் குண்டு கன்னங்களைப் பற்றிக் கிள்ள பேராசை கொண்டது.
கணவன் சொல்லியது முதலில் புரியாவிட்டாலும் புரிந்த நொடி,
“அச்சோ…” என்று மூக்கை சுழித்து செஞ்சாந்து நிறம் கொண்டவள், “இதெல்லாம் இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுதோ. நாம இன்னும் வளரணுமோ?” என்றும் புலம்பியவாறே தங்கையை நோக்கியவளுக்கு இப்பொழுது அவளிடம் தெரிந்த பூரிப்பு இளையவர்களின் இணைவை ஓரளவு தெளிவாக்கியது.
அதில் அவளது முகமும் பூவாய் மலர, மனைவியின் மலர்ந்த முகத்தை ஓரக்கண்ணால் ரசித்தபடியே தம்பியிடம் திரும்பியவன், “கங்கிராஜுலேசன்ஸ் ஆது அண்ட் சாஹி. குட் டிசிசன் பார் ஹேர் கரீர்” என்றும் இருவருக்கும் பொதுவாக உரைத்தவன் அவர்களிடம் சிறு உரையையும் நீட்டி, “இது உங்களோட ஹனிமூன் டிக்கட்ஸ். ஸ்மால் கிப்ட் பார் பியூச்சர் அர்ச்சீவ்மெண்ட்ஸ். ஸ்டடி முடிச்சிட்டு அப்டியே நல்லா என்ஜாய் பண்ணிட்டும் வாங்க” என்றும் சொல்ல…
அதில் தமையனைப் பெருமையாகப் பார்த்தவனும், “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. நான் எதிர்பாக்கவே இல்ல” என்று குதூகலக் குரலில் சொல்லி அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டவன் மனைவியிடம் ஒரு காதல் பார்வையும் வீசிக் கொண்டான்.
ஆதியின் செயலில் மகிழ்ந்து போன அவன் பெற்றோரும் இளைய மகனைத் தொடர்ந்து, “ஆதி நீங்களும் நியூ கபில்ஸ் தானேப்பா அவங்களோட சேத்து நீங்களுமே அப்டியே ஹனிமூன் போய்ட்டு வரலாம்ல நாங்களே சொல்லலாம்னுதான் இருந்தோம்”
என்று சொல்ல…
அதைக் கேட்ட ஆதியோ வேண்டுமென்றே, “இல்ல டாட் நாங்க இப்போ ஹனீமூன் போகல. உங்க மருமக அப்றம் போயிக்கலாம்னு சொல்லிட்டா” என்று தன்னையே உண்பது போல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை மாட்டி விட…
அதில் அஸ்வினும் மதியும் அவளை நோக்கித் திரும்பினர்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.