நீதிபதி அழைத்தும் கூட இன்னும் மனைவியின் முகத்தை விட்டு விழிகளை விலக்கத் தோன்றாமலே அமர்ந்திருந்தவனின் பார்வைக்கான காரணத்தை வேறாக உணர்ந்து, விரல்களை இறுக்க மூடித் திறந்த ராஹியும், “எனக்கு எனக்கு இந்த டிவோர்ஸ்ல டிவோர்ஸ்ல முழு முழு விருப்பம் தான் மேடம்” என்று சில பல நாட்களாய் தான் மனனம் செய்து வைத்த வார்த்தைகளை திக்கித் திணறி ஒருவாறு சொல்லி முடிக்க…
அதைக் கேட்டு இயலாமையாய் கண்களை மூடித் திறந்த ஆதிக்கோ அவன் காதல் உள்ளத்தில் ஒட்டியிருந்த துளி நம்பிக்கையும் தூள் தூளாகச் சிதறி ஆணவனின் ஆணிவேரையே ஆட்டம் காண வைத்தது.
பிறந்து வளர்ந்த இத்துணை வருடங்களில் யாருக்கும் அடங்காத சிம்மமாய் இருந்தவன் காதல் பெண்ணவள் மூலம் நிராகரிப்பின் வலியை முதன் முறை உணர்ந்து கொண்டதில் ஆணவனின் கம்பீர முகமே கருத்துச் சிறுத்து, கலங்கிய குட்டையாய் ஒளி இழந்து போனது.
ஆணவனைத் தாக்கிய பிரிவு என்ற அதே வார்த்தைக் கணம் அதைக் கூறிமுடித்த பெண்ணவளின் விழிகளோடு உள்ளத்தையும் கலங்க வைக்க, அவனைப் போல் அல்லாது தலை குனிந்து தன்னை மறைத்துக் கொண்டவள் சிறிது நேரம் கழித்து மூச்சை இழுத்து விட்டு மீண்டும் நீதிபதியை ஏறிட்டு, “நான் கொஞ்சம் முன்ன சொன்னது தான் மேடம். டிவோர்ஸ் விஷயத்துல அவுங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம். அதுக்காக ஜீவனாம்சம் அது இதுன்னு அவங்க கிட்ட இருந்து எதுவும் வேணாம் மேடம். எங்க சைன் பண்ணனும்னு சொன்னீங்கன்னா போட்டுடுவேன்” என்று மேலும் மேலும் கணவனின் தலையில் இடியை இறக்கியவள், தொடர்ந்து நீதிபதி எடுத்து நீட்டிய தாள்களிலும் நடுங்கும் விரல்களால் பேனாவை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தன் கையொப்பத்தை இட்டு முடித்தவள், “நான் கார்ல இருக்கேன்” என்று கணவனைப் பாராமலே உரைத்து விட்டு வெளியேறி தங்கள் மகிழுத்திலும் ஏறி அமர்ந்து கொண்டாள் ராஹித்தியா.
இமை மூடித் திறப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, அத்துணை மன உளைச்சளிலும் உன்விருப்பமே என் விருப்பம் என்று மனைவி சொல்லாமல் சொல்லிச் சென்றதை உணராது இன்னும் அவள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அமர்ந்திருந்தான் ஆதி.
அவனை மீண்டும் கையாட்டி அழைத்த நீதிபதியோ,
“உங்க ஒயிப் அவங்க விருப்பத்தை சொல்லிட்டாங்க. நீங்க இன்னும் ஒன்னும் சொல்லலியே? உங்களுக்கு இந்த டிவோர்ஸ்ல விருப்பம் இல்லியா?”என்று அவன் கலங்கிய முகத்தை பார்த்தபடியே வினவியவர்…
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. ஆனா நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுனா உங்க ப்ரோப்லம் சால்வ் ஆகும்னு தோணுது. நல்லா யோசிச்சு உங்க முடிவ சொல்லுங்க” என்றும் இறுதியாகச் சொல்லி ஆதியின் முகத்தை ஏறிட்டார் நீதிபதி.
அதைக் கேட்ட ஆதியும், ‘பேசத்தான் என் தியா வாய்ப்பே தரமாட்டிராளே’ என்று ஒரு விரக்திப் புன்னகையை உதிர்த்தவன் தன்னையே பார்த்திருந்தவரிடம்…
“இன்னிக்கு சூழல்ல என் விருப்பம் எனக்கு முக்கியமில்ல மேம். என் தியா என்ன விரும்புறாளோ அதையே நான் நிறைவேத்த ஆசப்படுறேன் அது எங்க பிரிவா இருந்தாலும்……” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது தடுமாறினான் ஆதி.
நெற்றியைக் கீறியபடி அவனையே பார்த்திருந்த நீதிபதியும் மேலும் ஏதேதோ கேட்டு அவனிடம் நீள விசாரணை ஒன்றும் நடத்தி முடித்தவர் அவனிடமும் சில கையொப்பங்களை வாங்கி விட்டு ஒரு மாதம் கழித்து முடிவைத் தெரிவிப்பதாகக் கூறி அனுப்பி வைக்க…
அவனும், ‘இன்னும் ஒரு மாசம் மட்டும் தான் என் தியா என்னோட இருப்பாளா? அதுக்கப்புறம் நான் நான் என்னாவேன்????’ என்று கலங்கியபடியே கால்கள் சென்ற திசையில் அன்னிச்சையாக வந்து மகிழுந்தில் ஏறி அமர்ந்து கொண்டான் ஆதி.
நீதிமன்றத்தில் அனைத்து நடைமுறை வழக்கங்களும் முடிந்து ஆதி வெளியே வரும் வரையிலும் கிட்டத்தட்ட அரை மணிக்கும் மேலான மணித்துளிகளையும் எடுக்க எடுக்க ஊரும் ஊற்றுக் கிணறு போல் துடைக்கத் துடைக்க பொங்கி வழிந்து கொண்டே இருந்த கண்ணீர்த் துளிகளோடு மட்டுமே அழுது கரைத்தவள், மகிழுந்துக் கதவு திறக்கும் சப்தத்தில் சுதாரித்து தன்னை மீட்டுக் கொண்டாள் ராஹி.
கதவைத் திறந்து கணவன் உள்ளே ஏறி அமர்ந்ததும் சடுதியில் முகத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டவள், “ஜட்ஜ் என்ன சொன்னாங்க? நமக்கு டிவோர்ஸ் கிடைசிடுச்சா?” என்று தன் நேசத் தவிப்பை மறைக்கும் மார்க்கமாய் அதீத ஆவல் காட்டிக் கேட்க…
ராஹியின் அந்த ஆவலில், ‘என்ன விட்டுப் பிரியுறது உனக்கு அவ்ளோ சந்தோசமா தியா?’ என்று வலி மிகுந்த பார்வை ஒன்றை மனைவியிடம் செலுத்தியவன், “இன்னும் ஒன் மந்த்ல கிடைச்சிடும்” என்று மரத்த குரலில் சொன்னான்.
அக்குரல் வேறுபாட்டைக் கூட தவறாகவே உணர்ந்து கொண்ட பெண்ணோ, “அப்போ இன்னும் ஒரு மாசம் நான் இங்கதான் இருக்கணுமா? இல்ல ஊருக்குப் போகவா?” என்று இயல்புக் குரலில் கேட்கத் தொடங்கியவளுக்கு இறுதி வார்த்தையை முடிக்கும் முன் மீண்டும் கண்ணில் நீர் நிறைந்து விட்டதை என்ன செய்தும் கட்டுப்படுத்தவே இயலவில்லை.
எங்கே நிமிர்ந்து மனைவியை ஏறிட்டால் அவளை இறுக்கி அணைத்து தன் உள்ளக்கிடக்கை கொட்டி, மேலும் அவளது வெறுப்பை பெற்று விடுவோமோ என்று அஞ்சியவன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டப் பின்னும் அவளை ஏறிட்டு நோக்காமலே, “அது அது உன் உன் விருப்பம் தான் தியா” என்று இரண்டு வார்த்தையில் மட்டுமே பதில் சொன்னவன் அவள் வேறு ஏதும் கேட்கும் முன், “கிளம்பலாமா?” என்று மகிழுந்தையும் உயிர்பிக்கத் தொடங்கினான் ஆதி.
அவனின் பட்டுக் கத்தரித்த பேச்சில், ‘அப்போ நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுதா ஆதித்தான்????’ என்று நெஞ்சடைக்கக் கேட்டுக் கொண்டவள், “எல்லாம் முடிஞ்சிதுன்னா போகலாம்” என்றும் உணர்ச்சிகள் தொலைத்த குரலில் சொல்லி கண்களை மறைத்தபடி கரத்தை வைத்துக் கொண்டு இருக்கையிலும் சாய்ந்து கொண்டாள் ராஹித்தியா.
மனைவியின் அந்தக் குரலிலும் செயலிலும் மீண்டும் ஒரு முறை மனதில் அடிவாங்கியவன் அவளை மருகலாய் பார்த்து விட்டு வண்டியைக் கிளப்ப, சற்று நேரத்தில் சென்னையை நோக்கிய நெடுஞ்சாலையில் சீறிப்பாயத் தொடங்கியது ஆதியின் பஹாணி ஹுய்ரா.
“நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்.
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்.
நிலவே வா செல்லாதே வா
காவேரியா கானல்
நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும்
சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை.
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்”
என்ற பாடல் வரிகள் மட்டுமே அம்மகிழுந்தில் ஒளித்துக் கொண்டிருக்க, தங்களுக்காகவே எழுதப்பட்டது போல் இருந்த அந்தப் பாடலில் கரைந்து உருகியபடியே ஒருவர் அறியாமல் ஒருவர் பார்வையால் தழுவிக் கொண்டபடியும் கனத்த மௌனத்தை மட்டுமே மொழியாகக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் ஆதியும் ராஹியும்.
முன்பு தேவையே இல்லாத பொழுதுகள் எல்லாம் வார்த்தைப் போர் புரிந்து சண்டையிட்டுக் கொண்டவர்கள் இக்கணம் ஒருவரை ஒருவர் உயிராக நேசித்தும் அதை வெளிக்காட்டத் திறன் இன்றி ஊமையாகிப் போக, அவர்களின் கரையில்லாக் காதலும் அவர்கள் உணரும் முன்பே காற்றில் வரைந்த ஓவியமாய் கரைந்து செல்லத் தொடங்கியது.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் சீரான பயணத்திற்கிடையில் நெடுஞ்சாலையோரம் இருந்த ஒரு சவுக்கு தோப்பை ஒட்டி மகிழுந்து சென்று கொண்டிருக்க திடீரென்று சில பல மகிழுந்துகள் மின்னல் வேகத்தில் வெளியேறி சாலையில் புகுந்து ஆதியின் பஹானியைச் சுற்றி வளைத்து அதன் இயக்கத்தை தடை செய்து நிறுத்தியது.
மாலை மங்கி மிதமாக இருள் பரவத் தொடங்கியிருந்த பின் மாலைப் பொழுதில் தங்களை சுற்றி வளைத்த மகிழுந்துகளையும் அதனுள்ளிருந்து திமுதிமுவென்று இறங்கிய வாட்டசாட்ட பயில்வான்களையும் பார்த்தவுடனே பயத்தில் முகம் வெளிறிப் போன ராஹியும், “அய்யோ யாருங்க இவங்கலாம்? எதுக்கு இப்டி குறுக்க வண்டிய நிறுத்திருக்காங்க?” என்று அனைத்தும் மறந்தவளாய் கணவன் கரத்தைப் பற்றி ஒன்ற…
அதில் அன்னிச்சையாக அவளை அணைத்துக் கொண்டவனும் பார்வையை கூர்மையாக்கியபடியே
“என்கிட்ட கொடுக்கல் வாங்கல் வச்சிருக்கவங்களா இருக்கும் தியா. பைசல் பண்ண வந்துருப்பாங்க. நீ பயப்புடாத.” என்று அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன் சீட் பெல்ட்டைக் கழற்றி விட்டு கீழே இறங்க முயன்றான்.
அவன் பேச்சுப் புரியாது விழித்தாலும், கம்பு கட்டைகளோடு சுற்றி நின்றிருந்தவர்களையும் அவர்களை பார்த்தபடியே இறங்க முயன்றவனையும் பார்த்தே நடக்கபோவதை யூகித்து, “சண்டை போடப்போறீங்களா ஆதித்தான்?” என்று அவன் கையை விட்டு விடாது பற்றிக் கொண்டவள், “வேணாம் ஆதித்தான். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. வண்டிய எடுங்க நாம போயிடலாம்” என்று படபடப்பாய் தலையாட்டிச் சொன்னவளின் மனம் முழுதும் கணவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் மட்டுமே அளவில்லாது இருந்தது.
பெண்ணவளின் அந்தச் செயலில் அவளை அள்ளி அணைக்கத் துடித்தவனும், “ஹேய் தியாமா டேக் இட் ஈஸிடா. நீ இதுக்கெல்லாம் பயப்படாத. ரொம்ப நாளைக்கு அப்றம் நீ ஆதித்தான்னு கூப்டதே எனக்கு யானை பலத்த தந்துருக்கு. நீ உள்ளயே இருந்து வேடிக்கை மட்டும் பாரு. அஞ்சே நிமிஷத்துல நான் பேசிட்டு வந்தர்றேன். எக்காரணத்தைக் கொண்டும் கீழ மட்டும் இறங்கிடாத ஹனி” என்று அவள் தலை தடவி சமாதானம் செய்து விட்டு அவன் மட்டும் கீழே இறங்கியவன் ஒரு வேங்கையின் கூர்மையோடு சுற்றி நின்றிருந்தவர்களை ஆராய்ந்தபடியே அஞ்சா நெஞ்சனாய் அவர்களை நோக்கி நடக்கத் துவங்கினான் ஆதி.
அன்று பார்ட்டி நடந்த நாளில் ஆதியிடம் அவமானப் பட்டுச் சென்றவன் அடிபட்ட நாகமாய் பியூலாவுடன் சேர்ந்து பெரிய திட்டமாய் தீட்டி இன்று ஆதியின் மகிழுந்தை சுற்றி வளைத்திருந்தான் சர்வா.
பார்த்தாலே வெடவெடக்கும் தோற்றத்தில் இத்துணை பேர் சுற்றி வளைத்தும் சிறிதும் அச்சமின்றி வேக எட்டுக்களோடு தங்களை நோக்கி வந்தவனை ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாகப் பார்த்தபடியே தன் மகிழுந்தின் உள்ளே அமந்திருந்தவன் தன் அடியாட்களை நோக்கிக் கண்காட்ட அவர்களும் கையில் இருந்த ஆயுதங்களோடு ஆதியை நோக்கி ஓடியவர்கள் சரமாரியாக அவனைத் தாக்கத் துவங்கினர்.
அனைத்திற்கும் தயாராக இருந்த ஆதியும் தான் கற்று வைத்திருந்த வித்தைகள் கொண்டு அவர்களின் ஆயுதத்தை வைத்தே ஒவ்வொருவராய் அடித்து வீழ்த்த, அங்கு மிகப்பெரிய யுத்தமே நடந்தேறத் தொடங்கி தார்ச்சாலை முழுதும் குருதிகளின் குளமாக மாறத் தொடங்கியது.
கிட்டத்தட்ட இருபது அடியாட்களுக்கு மேல் தன்னைச் சுற்றி வளைத்தும் ஒற்றை ஆளாக அனைவரையும் அடித்து வீழ்த்திக் கொண்டிருந்த கணவனையும் மேல் சட்டையில்லாது ஆம் கட் பனியனுடன் ஆண்மையின் சின்னமாய் நின்று அவன் சண்டையிடும் அழகையும் ஏதோ அரசக்குமாரன் தன் நாட்டிற்காய் போர் புரிவதைப் போல் விழிகள் விரித்துப் பார்த்திருந்தவளுக்கு சண்டையில் கணவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்ற பயம் நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டே சென்றது.
அப்படியே சண்டையும் நீண்டு கொண்டே செல்ல துளியும் சளைக்காத ஆதியின் இடி போன்ற அடிகளில் சர்வா ஏவிவிட்ட அடியாட்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையத் தொடங்கியது.
வெகுநாளைக்குப் பிறகு ஆதியுடன் ராஹி வெளியே வந்திருப்பதை பியூலா மூலம் அறிந்து எப்படியாவது இன்று ராஹியை கடத்திச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் அடியாட்களை இறக்கியிருந்த சர்வா, தனி ஒருவனாய் நின்று ஆதி அத்துணை பேரையும் இப்படி அடித்து வீழ்த்துவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
தான் முதன் முதலில் ஆசைப்பட்ட பெண்ணை தனக்குக் கிட்டாது அபகரித்து விட்ட ஆதியின் மேல் ஏற்கனவே கொலைவெறியில் இருந்தவனுக்கு அனைவரையும் அடித்து வீழ்த்திக் கொண்டிருந்த ஆதியைப் பார்க்க பார்க்க அவனால் மகிழுந்தினுள் அமரவே இயலவில்லை.
அவன் அழைத்து வந்த அடியாட்களிலும் இன்னும் ஒரு சிலரே அடிபடாது இருக்க, எங்கே இன்று விட்டால் ராஹியை அடையும் வாய்ப்பு தனக்கு கிட்டாமலே போகுமோ என்ற வெறியில் அருகில் இருந்த அறிவாளை எடுத்துக் கொண்டவன், தன் வேக நடையில் ஆதி சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை நெருங்கினான் சர்வா.
சுற்றி சுழற்றி சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆதி சர்வா தன்னை நோக்கி வருவதை உணராது இருக்க மகிழுந்தில் இருந்தபடியே சண்டையை பார்த்திருந்த ராஹிக்கு சர்வாவின் கையிலிருந்த ஆயுதமும் அவன் கண்ணில் இருந்த பழி வெறியுமே அவனின் கொடூர நோக்கத்தை உணர்த்தியதில் உடல் கிடுகிடுத்த பெண்ணோ நிமிடமும் தாமதியாது மகிழுந்தை விட்டு வெளியேறியவள் கணவன் இருந்த திசையை நோக்கி ஓடினாள்.
இதை எதையுமே அறியாத ஆதி மீதம் இருந்த இருவரையும் “உங்கள யாருடா அனுப்புனது சொல்லுங்கடா?” என்று கேட்டப்படியே அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதற்குள் அவனை சமீபித்துவிட்டிருந்த சர்வாவோ, “நான்தாண்டா அவனுகள அனுப்பினேன். இதுவரை நான் ஆசைப்பட்ட எத்துணையோ பிராஜக்ட், பிஸ்னஸ் எல்லாம் நீ என்கிட்ட இருந்து பரிச்சிகிட்ட போது கூட நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா நான் மொதோ மொதோ ஆசைப்பட்ட பொண்ணையும் நீ…. நீ… உனதாக்கி இருந்திருக்கக் கூடாதுடா. இவ்ளோ நாள் உன்ன விட்டு வச்சதே பெரிய தப்புடா. உன்ன கொன்னுட்டாச்சும் என் கியூட்டிய நான் அடைஞ்சே தீருவேன். செத்துப்போடா” என்றும் கருவியவாறே ஆதியை நோக்கி மின்னலென அரிவாளைச் சுழற்ற
அந்நிமிடம் சரியாக “ஆதித்தான்” என்ற அலறலோடு அவர்களுக்கிடையில் பாய்ந்திருந்தாள் பாவை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.