தன் கைபேசி அழைப்பை கணவன் ஏற்க்காததிலும், தன் கையிலிருக்கும் அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் உள்ள செய்தியிலும் இருந்தே பியூலா கூறியது போல் கணவன் தன்னை நிரந்தரமாகப் பிரிந்து பியூலாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறான் என்று தவறானப் புரிதல் கொண்ட பெண்ணவளுக்கு நெஞ்சை அறுக்கும் இந்த உண்மையை உணர்ந்தும் தன் உயிர் ஏன் இன்னும் இந்த உடலை விட்டு நீங்கவில்லை என்று அவளது உடலே அவளுக்கு பாரமாகத் தான் இருந்தது.
தன்னை மூர்ச்சை அடையச் செய்து தரையோடு தரையாக துவள வைத்திருக்கும் ‘கணவனைப் பிரியப் போகிறோம்’ என்ற பாரத்தையும் தாண்டி அவனாக வந்து தன்னை அனுப்பி வைப்பதற்குள் தானே அவனை விட்டுச் சென்று விட்டால் தான் தன் உடலில் ஒட்டியிருக்கும் மிச்சம் மீதி உயிரையும் அதற்கும் மேலான மானத்தையும் காத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்பியவள் நிற்காமல் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்து தன் உடமைகள் அடங்கிய மர அலமாரியை நோக்கிச் சென்றாள்.
கணவன் வருவதற்குள் செல்ல வேண்டும். என்கிற முடிவை எடுத்தப் பின்னர் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று கப்போர்டைத் திறந்து தன் உடைகளை எடுத்து பையில் அடுக்கியவளின் பார்வை ஒரு புடவையோடு வந்த புகைப்படத்தில் நிலை குத்தி நிற்க, நடுங்கும் கரங்களால் அப்படத்தைத் திருப்பி அதில் கன்னங்குழிய சிரித்தபடி இருந்த கணவனின் புன்னகை முகத்தைப் பார்த்தவளுக்கு அரும்பாடு பட்டு அடக்கிய கண்ணீர் மீண்டும் ஆழிப் பேரலையாய் கன்னங்களைச் சூழ ஆரம்பித்தது.
“ஆதித்தான் ஏன் ஆதித்தான் உங்களுக்கு என்னப் பிடிக்காமப் போச்சு? கல்யாணம் முடிஞ்சு உங்க பக்கத்திலேயே இருந்த இத்தனை மாசத்துல ஒரு நாள், ஒரு நொடி கூட நான் உங்களை எந்த விதத்துலயும் பாதிக்கலையா? உங்களைப் பொறுத்தவரை இவ்ளோ நாளா நமக்குள்ள இருந்த எல்லாமே நடிப்பு தானா? ஆனா நான் நான் உங்க பக்கத்துல இருந்த ஒரு நிமிஷம் கூட மனசரிஞ்சு நடிக்கவே இல்லையே அத்தான். ஆரம்பத்துல நீங்க என்னோட கணவர்கிற உரிமைலயும், அதுக்கு அப்றம் நீங்க எனக்கே உரியவர்ங்கிற நினைப்புலயும் தான நான் உங்களோட இருந்தேன். உங்கள எந்த விதத்துலையும் பாதிக்காத இந்தப் பிரிவு எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ வலியக் கொடுக்குது? இந்த உலகத்துல பாசம் வைக்கிறது அவ்ளோ பெரிய தப்பா ஆதித்தான்?” என்றெல்லாம் கொட்டும் மழையாய் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர்க் கோடுகளோடு அவன் புகைப்படத்திற்கே கணக்கில்லா முத்தங்களை இட்டப்படி மனப் பாரம் அத்துணையும் கொட்டித் தீர்த்தவளுக்கு கணவனின் புகைப்படமே தன்னை இத்துணை நிலை இழக்கச் செய்யும்பொழுது அவன் நேரில் வந்தால் நாம் என்னாவோம் என்ற அச்சமும் அவளை அதற்கு மேல் காலம் தாழ்த்த விடாது துரிதப்படுத்தியிருந்தது.
பொட்டில் அறைந்த உண்மையில் பேரச்சம் கொண்டவள் புகைப்படத்தோடு சேர்த்து கையிலிருந்த பொருள்களையும் கப்போடில் வைத்துப் பூட்டிவிட்டு பேப்பரும் பேனாவும் எடுத்து “நம் ஒப்பந்தப்படி அனைத்தும் முடிந்தது. நான் உங்களைப் பிரிந்து செல்கிறேன்” என்று இரண்டு வார்த்தைகள் எழுதி வைத்து விட்டு பையை தூக்கிக் கொண்டு வெளியேறியவளால் அந்த வான்மதி போன்ற கலங்கமற்ற அன்பைக் கொட்டும் மாமியார் வெண்மதியின் முன்னால் நிற்கக் கூடத் தென்பில்லாமல் தான் போனது.
கணவனின் ஆசைப்படி அவனைப் பிரிந்து இக்கணமே இங்கிருந்து செல்ல வேண்டும், என்கிற முடிவைக் கூட ஆதியின் மேல் உள்ள வீம்பில் சடுதியில் எடுத்து விட்டவளுக்கு இத்துணை மாதங்கள் அன்னைக்கும் மேலாய் தன்னை அரவணைத்து அன்பு செலுத்திய மாமியாரிடம் அதைக் கூறவோ, அவரைப் பிரிந்து செல்லவோ, அத்துணை ஏன் மதியின் முகத்தைப் பார்த்து “நான் ஊருக்கு போயிட்டு வர்றேன் அத்தை” என்கிற நான்கு வார்த்தைகளைப் பேசுவதற்குள்ளாகவே நாவரண்டு போனது ராஹிக்கு.
திடீரென்று கையில் ஒரு பயணப்பையை சுமந்து வந்து ஊருக்கு போகிறேன் என்று சொன்ன மருமகளை அதிர்ச்சியாய் ஏறிட்ட மதியும், “ஊருக்கா? என்ன ராஹிமா திடீர்னு. ஆதி கூட ஊர்ல இல்லியே” என்று தொடங்கியவள் அடித்துக் கழுவி இருந்தாலும் உள்ளக் கலக்கத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டும் மருமகளின் முகத்தையும் பார்த்து, “என்னாச்சுடா உன் முகமும் டல்லா இருக்கு அங்க யாருக்காவது உடம்பு எதுவும் சரி இல்லையா? இல்ல வேற ஏதும் பிரச்சனையா?” என்றும் பதட்டமாக வினவினாள்.
மதியின் கேள்வியில் முகத்தை அழுந்தத் துடைத்து சற்றே தன்னை தெளிவாக்கிக் கொண்ட ராஹியும், “அய்யோ இல்லத்தை அப்படிலாம் எதுவும் இல்ல நீங்க பதறாதீங்க” என்று மதியை சமாதானம் செய்தவள், “மேரேஜ் ஆனதுல இருந்து ஊருக்கே போகலியா. சாஹியும் இல்லாம ரொம்ப லோன்லியா இருக்கு. ஊர்ல எல்லாரையும் பாக்கணும் போலவும் இருக்கு. அதனால அதனால நான் நான் இன்னிக்கு ஊருக்கு போறேன் அத்தை… ப்ளீஸ்” என்று வரவழைக்கப்பட்ட இலகுக் குரலில் ஆரம்பித்தவளால் இறுதி வார்த்தைகளைச் சொல்லும் பொழுது என்ன முயற்சி செய்தும் குரல் கரகரக்கத் தொடங்கியதை கட்டுப்படுத்தவே இயலவில்லை.
மருமகளின் வார்த்தையில் அவளை செல்லமாக முறைத்த மதியும், “எப்போ எங்க கிளம்புனாலும் போறேன்னு சொல்லக்கூடாதுடா. போயிட்டு வர்றேன்னு தான் சொல்லணும்” என்று புன்னகையோடே கடிந்து கொண்டவள், “மேரேஜ் முடிஞ்சு மறுவீட்டுக்கு கூட நீங்க போகல்ல. நானே ஆதியும் உன்னையும் ஊருக்கு அனுப்பி வைக்கணும்னு நினைச்சுட்டு தான் டா இருந்தேன். பரவாயில்ல உனக்கு இப்போவே போனும்னு தோணுனா நீ போயிட்டு வா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் ஆதி வந்ததும் அங்க அனுப்பி வைக்கிறேன். இப்போ பாட்டிக்கு பீவர் இல்லன்னா நானே உன்கூட வந்துருப்பேன். உன்ன தனியா அனுப்பவும் சங்கடமா இருக்கு” என்று சொல்லி இன்னும் கொஞ்சம் ராஹியை அழும் நிலைக்குக் கொண்டு வந்தவள் தன் வீட்டில் உள்ள இனிப்பு வகைகளையும் எடுத்துக் கொடுத்து, “அங்க தம்பிங்களுக்கு கொடுடா. நம்ம கார்லயே போ. ஆனா ரொம்ப நாள் அங்க இருந்துடாத. ஆதி வந்ததும் சீக்கிரம் வந்துருடா” என்றும் சொல்லி தான் மகளாகவே நினைக்கும் மூத்த மருமகளை அவள் மறுக்க மறுக்க தங்கள் மகிழுந்திலேயே ஏற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தாள் மதி.
சிறிது இளகினாலும் வெடித்து விடும் நிலையில் இருந்தவள் இழுத்துப் பிடித்த இறுக்கத்தோடு மாமியாரிடமும், வீட்டுப் பெரியவர்களிடமும் விடைபெற்று வெளியே வந்து மகிழுந்தில் ஏறி அமர்ந்து, “இனி நான் இங்கு வரவே போறதில்லை அத்தை. ஆனா அத உங்க முகத்தைப் பாத்து சொல்ற தெம்பும் எனக்கில்லை. என்ன மன்னிச்சுடுங்கத்தை” என்று மாமியாரோடு சேர்த்து கணவன் வீட்டையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே கைஅசைத்துச் சென்ற ராஹிக்கு அதற்கு மேல் அடக்க முடியாது உடைப்பெடுத்த கண்ணீர் கன்னங்களைக் கடந்து கழுத்தில் இறங்கி மார்புச் சேலையையும் நனைக்கத் தொடங்கியது.
ஒரு வருடங்களுக்கு முன்னால் தன் இரட்டைக்காக துளியும் விருப்பம் இல்லாமலே ஆதியின் வீட்டில் கால் வைத்த பெண்ணவள் இந்த நிமிடம் அவன் மேல் அளவில்லா நேசம் நிரம்பி வழிய, மனம் முழுதும் ஆதியை மட்டுமே சுமந்தபடி அவன் பிரிவு தந்த உயிர் வலியோடு சென்னையை விட்டு தங்கள் கிராமம் நோக்கிப் பயணிக்க, அவள் சென்ற அடுத்த நான்கு மணி நேரத்திற்கெல்லாம் ஆதி தன் வீட்டை அடைந்தவன் கீழே அன்னையைக் கூடப் பாராது மனைவியைக் காணும் ஆவலில் “தியா தியா” என்று அழைத்தபடி படிகளில் தடதடத்து தங்கள் அறைக்குள் நுழைந்தவனுக்கு அறைக்குள் இருந்த இருளே ஏதோ அமானுஷ்யத்திற்குள் நுழைந்தது போல் உடல் முழுதும் ஒருவித திகிலைப் பரவச் செய்திருந்தது.
ராஹி தன்னறையில் புழங்க ஆரம்பித்த தினம் தொட்டு இதுவரை கண்டிராத அளவு வெறுமையும் அமைதியும் சூழ்ந்த அறைக்குள் நுழைந்து விளக்குகளை உயிர்பித்தவன், “ஹனி ஹனி தியா எங்க இருக்கடா? லைட் கூட போடாம என்ன செய்ற ஹனி?” என்றபடியே அறை முழுதும் மனைவியைத் தேடியவன், அவள் இல்லாது போக குளியலறை மற்றும் பால்கனியிலும் கூட பெண்ணவளை ஏலம் போட்டு விட்டு மீண்டும் அறைக்குள்
நுழைந்தவனின் ஒவ்வொரு அணுவும் தன்னவளின் முகம் பார்த்து தன்னுள்ளே புதைந்து கிடக்கும் நேசத்தை அவள் காலடியில் சமர்ப்பிக்க தவியாய் தவித்துக் கொண்டிருக்க, அவன் மனையாளோ அவனை விட்டு வெகுதூரம் அல்லவோ சென்று கொண்டிருந்தாள்.
அறை முழுதும் தேடியும் பெண்ணவளின் சிறு அரவமும் இல்லாது போக, ‘ஒருவேளை கீழ மாம் கூட இருப்பாளோ?’ என்று எண்ணியபடியே அறைவாயிலை நோக்கி எட்டு வைத்தவனின் காலை வந்து பிராண்டியது ராஹிக்கு அவன் வாங்கிக் கொடுத்த பூனை குட்டி மீனு.
மீனுவைப் பார்த்ததும், ‘தியா கீழே போயிருந்தா மீனுவும் அவளோடு போய் இருக்குமே?’ என்ற கேள்வி மனதில் உதிக்க தன் காலை சுரண்டிய பூனையைத் தூக்கிக் கொண்டவன், “மீனு… தியா எங்கடா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு மேஜையில் இருந்த காகிதம் ஒன்று படபடத்து அவன் கவனத்தை ஈர்த்தது.
அதைப் பார்த்த ஆதியும் கையில் பூனைக்குட்டியைச் சுமந்தபடியே மெல்ல எட்டு வைத்துச் சென்று லேசாக நடுங்கும் கரங்களால் அதை எடுத்துப் படித்தவனின் உலகமே ஒருகணம் தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டது என்று சொன்னால் அது துளியளவும் மிகை இல்லை.
தான் படித்த வார்த்தையில் சுற்றும் பூமி மட்டுமல்ல அவனுள் எந்நேரமும் தியா தியா என்று துடிக்கும் இதயமும், அவளைக் கண்டாலே உடல் முழுதும் பரவிப் பாய்ந்து தன்னைப் புதிதாய் ஜனிக்க வைக்கும் ரத்த நாளங்களும் கூட நொடியில் வேலை நிறுத்தம் செய்து விட…
“நமக்குள் அனைத்தும் முடிந்து விட்டது. உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்” என்று மனைவியின் கையெழுத்தில் நெளிந்த வார்த்தைகள் சொன்ன செய்தி மூளையில் பதியாமல் ஒரு முறைக்கு பத்து முறை மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளைப் படித்தவன் இமை சிமிட்டா அதிர்ச்சியில் உறைந்து நின்ற சமயம் கதவை மெல்லத் தட்டி விட்டு உள் நுழைந்தாள் மதி.
மகன் வந்து விட்டதை அறிந்து அவனை சாப்பிட அழைக்க வந்த மதியோ, “என்ன ஆதி… ராஹி நீ முக்கிமான பிஸ்னஸ் விஷயமா போயிருக்க, எப்போ வருவன்னு தெரியலன்னு சொன்னா. நீ அதுக்குள்ள வந்துட்ட” என்று கேட்டவள் தொடர்ந்து…
“போன காரியம் சீக்கிரம் முடிஞ்சுதா? அதுக்காக ரெஸ்ட் கூட எடுக்காம உடனே திரும்பிட்டியா என்ன?” என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்க…
அன்னையின் கூற்றிற்கு பதில் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லாதவன், “மாம் மாம் தியா தியா தியா எங்க?” என்ற கேள்வியை மட்டும் தான் கேட்டான்.
அதில் அவனை முகம் சுருங்கப் பார்த்த மதியும், “ராஹி அப்போவே அவங்க ஊருக்குக் கிளம்பி போயிட்டாளேப்பா.
உனக்குத் தெரியாதா? உன்கிட்ட சொல்லிட்டுத்தானே போயிருப்பா?” என்றும் கேட்டுக் கொண்டே வந்தவள் “ஆமா… கைல என்ன லெட்டர் ஆதி?” என்றும் ராஹி எழுதி வைத்துச் சென்ற கடிதத்தைப் பார்த்துக் கேட்க…
அன்னையின் வார்த்தைகள் மேலும் உறுதி செய்த செய்தியில் ஆறடி உடலே ஆட்டம் காணத் தொடங்கியது அஞ்சா நெஞ்சம் கொண்ட ஆணவனுக்கு.
அன்னை இலகுவாக இருப்பதை வைத்தே ராஹி தங்களுக்குள் நடந்த எந்த விஷயமும் அன்னைக்குத் தெரியப்படுத்தாமலே தன்னை விலகிச் சென்று விட்டாள் என்று புரிந்து கொண்டவன் அன்னையின் முன்னால் தன் பதைபதைப்பை வெளிக்காட்டாது மறைத்தபடி, “ஹான் ஆமா மாம் என்கிட்ட சொல்லிட்டுத் தான் போனா. நான்தான் ஒர்க் டென்ஷன்ல மறந்துட்டேன்” என்று சொல்லி ராஹி எழுதி வைத்துச் சென்று கடிதத்தையும் தொழில் விஷயம் என்று சமாளித்து அன்னையை அனுப்பி வைத்துத் திரும்பியவனுக்கு அதற்கு மேல் நிற்க முடியாது கால்கள் வழுவிழந்து சற்று முன்னர் ராஹி சரிந்திருந்த அதே இடத்தில் வெற்றுத் தரையில் சரிந்து அமர்ந்தவனோ “தியா ஏண்டி ஏண்டி இப்டி பண்ண?” என்று நெஞ்சே வெடிக்கும் அளவு கத்திக் கதறிக் கலங்கத் தொடங்கினான் ஆண். தான் ஆண் என்ற கர்வத்தை முற்றும் முழுதுமாய் தொலைத்து.
“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்ற ஆங்கிலச் சொலவடைக்குச் சிறந்த உதாரணமாக, இதுவரை வாழ்வில் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே அனுபவித்து யாருக்காகவும் எதற்கும் தன்னிலை இறங்கியிராதவன் தொழில் உலகின் டைக்கூன் அஸ்வின் வர்மா என்ற வேங்கைக்குப் பிறந்த இளைய வேங்கை தி கிரேட் ஆதித்யவர்மாவுக்கு இன்று இக்கணம் நெஞ்சைக் கீறும் காதல் வலியை அறிமுகம் செய்து சினத்தையும் கர்வத்தையும் பறைசாற்றும் நீல விழிகளை விரக்தியின் கூடாரமாய் மாற்றி இருந்தவள்…
“உன்னைப் பிரிந்து செல்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தை மூலம் ஆணவனின் ஆணவத்தை அடியோடு சாய்த்து ஆறடி ஆண்மகனை வேரோடு வீழ்த்தி இருந்தாள் அவன் மனையாள்.
அவள் எதற்காக தன்னைப் பிரிந்து சென்றாள் என்ற உண்மை எதுவும் அறியாத நிலையில் அவள் தன்னோடு இருக்கப் பிடிக்காது தான் பிரிந்து விட்டாள் என்று உள்ளம் அடிபட்டு போனவனுக்கு உலகமே சூன்யமாகிப் போக, “தியா தியா ஏண்டி ஏன் இப்டி பண்ண? நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுன்னு உன்னால எப்டி தியா எழுத முடிஞ்சுது. நான் உன்னப் பிரியணும்னு சொல்லி உன்ன எவ்ளவோ உதாசீனப்படுத்துனப்போவெல்லாம் என் பக்கத்துலயே இருந்த, ஆனா நான் நான் நீதான் சகலம்னு உன்கிட்ட சரணடைய வந்துருக்கேன் டி இப்போ போய் என்ன விட்டுப் போய்ட்டியேடி. எஸ் தியா ஐம் இன் லவ் யூ தியா. லவ் யூ சோ மச் ஹனி. நான் உன்கிட்ட டிவோர்ஸ் கேட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு உணந்துட்டேன் டி. ப்ளீஸ் என்கிட்ட வந்துடு ஹனி” என்று மனைவியின் கண்ணீர்த் தடங்கள் பதிந்த இடத்திலேயே தன் உவரி நீரையும் கலக்க விட்டவன் அன்று மட்டுமல்லாது அடுத்தடுத்த நாட்களிலும் விட்டத்தை வெறித்தபடி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் ஆதி.
அன்றைய விபத்திற்குப் பின் மனைவிக்கும் தன் மேல் நேசம் உள்ளதோ என்ற சந்தேகத்தில் தான் கோரிய விவாகரத்தைக் கூட தானே ரத்து செய்து விட்டிருப்பவன் தங்கள் பிரிவிற்க்கு இனி வாய்ப்பே இல்லை என்று இறுமாந்திருக்க, ஆனால் அவனவளோ நமக்குள் அனைத்தும் முடிந்தது என்று சொல்லி அவனது மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் சேர்த்தே முடிவுரை எழுதிச் சென்றிருந்தாள்.
பிறந்து வளர்ந்து வாலிபம் அடைந்த இத்துணை வருடங்களில் எந்தப் பெண்ணாலும் திறக்க முடியாத இதயப் பெட்டகத்தில் ராஹித்தியா என்ற சிறு பெண்ணிற்கு மட்டுமே இடமளித்து, முதன் முதல் ஒரு பெண்ணின் மேல் கட்டுகடங்கா காதல் கொண்டு, தன் நேசத்தை தன்னவளிடம் ஒப்படைக்கும் முன்னே அதில் மரண தோல்வியைத் தழுவியவன்…
“அப்போ அப்போ என் தியா என் தியா என்ன லவ் பண்ணவே இல்லியா? இவ்ளோ நாளா சாஹிக்காகத்தான் என்ன சசிச்சுட்டு இருந்தாளா? ஆனா நேத்து நான் நான் அவகிட்ட எல்லை மீறி நடந்தப்போக் கூட அவ என்னத் தடுக்கலியே. ஒருவேளை நான் நான் அவகிட்ட அப்டி நடந்துகிட்டதாலதான் என்ன வெறுத்துட்டு போயிட்டாளா? ஆமா ஆமா அப்டித்தான் இருக்கும். நான் அவகிட்ட அன்னிக்கு அளவுக்கு மீறி நடந்துகிட்டதாலதான் என் தியா என்ன விட்டுப் போயிட்டா. அப்போ இவ்ளோ நாளா என்ன அவ கணவனாவே நினைக்கல. அதான் என்ன வேணாம் சொல்லிட்டுப் போயிட்டா. என் தியாக்கு என்னப் பிடிக்கல.” என்று பைத்தியம் பிடிக்காத குறையாய் பிதற்றத் தொடங்கியவன், “ஆமா நீ அவளை கொஞ்சம் நஞ்ச பாடா படுத்தின? மேரேஜ் அன்னிக்கே அவகிட்ட டிவோர்ஸ் கேட்டு, அதுக்கப்புறம் நடிப்பு ஒத்திகைன்னு எவ்ளோ டார்ச்சர் பண்ண? உன்னோட இவ்ளோ நாளா அவ இருந்ததே பெருசு. இனியாவது அவ சந்தோசமா இருக்கட்டும்” என்ற மனசாட்சியின் வார்த்தையை வலிக்க வலிக்க ஏற்றுக் கொள்ள முடிவு செய்தவனால் எத்துணை முயற்சி செய்தும் அவள் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் தென்பு மட்டும் அவனுக்குக் கிட்டவே இல்லை.
அவளது கைபேசிக்கு அழைப்பு விடுத்து ஒரே ஒரு முறை அவளது குரலையாவது கேட்டு விடேன் என்று நொடிக்கு நூறு முறை தன்னை வாட்டி எடுக்கும் உள்ளத்தை, ‘என்னப் பிரிஞ்சி இருக்கறது தான் என் தியாக்கு சந்தோசம்னா நான் அவளை எந்த விதத்துலயும் தொந்தரவு பண்ணக் கூடாது’ என்று அரும்பாடு பட்டு அடக்கி அலுவலில் மூழ்க எண்ணியவனிற்கு வீட்டில் மட்டுமல்லாது அலுவலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், ஏன் மகிழுந்தில் செல்லும் பொழுதில் கூட அவனை வாட்டி வதைக்கும் பெண்ணவளின் வாசத்தில் மூச்சு முட்டிப் உயிரற்ற உடலாகத் தான் வளைய வந்தான் ஆதி.
அங்கே ராஹியும் ஒரு வீராப்பில் அவனைப் பிரிந்து சென்றாலும் அவனது நினைவுகளை சிறிதும் ஒதுக்க முடியாது தவித்தவள் திடீரென்று “கொஞ்ச நாள் உங்க கூட இருக்கணும் போல இருக்கு” என்று வந்து நிற்கும் மகளது முகத்தையே பார்த்திருக்கும் பெற்றோருக்கும் பதில் கூற முடியாது வெளியே சிரிப்பதும் உள்ளே அழுவதுமாய் அவளது நிலை இன்னும் மோசமாகி இருந்தது.
போதாதற்கு அவள் அங்கிருந்து சென்ற தினம் தொட்டு நாள்தவறாது கைபேசி அழைப்பு விடுத்து “எப்போ வர்றடா? சீக்கிரமா வந்துடு. நீ இல்லாம வீடே நல்லா இல்லை” என்று சொல்லிப் புலம்பும் மதியின் அன்பில் மென்மேலும் ரணம் கூடிப் போனவளோ, ‘என்ன மன்னிச்சிடுங்கத்தை நான் அங்க வரவே போறதில்ல. இனியாவது உங்க பையன் அவருக்கு பிடிச்ச பொண்ணு கூட சந்தோசமா வாழட்டும்.’ என்று மதிக்கு உள்ளூற பதில் சொல்லிக் கொள்பவள் கணவன் ஒருமுறை கைபேசியிலாவது அழைத்துப் பேசி விட மாட்டானா என்று கைபேசியில் இருக்கும் கணவன் முகத்தைப் பார்த்துப் பார்த்தே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இளைக்கத் தொடங்கி இருந்தாள் பெண்.
இப்படியே ஒருவரின் பிரிவில் ஒருவர் உயிரையே வெறுத்தபடி பெயருக்கு நடமாடிக் கொண்டு முழுதாய் இரண்டு வாரங்கள் கடந்திருக்க, அன்று அதிமுக்கிய மீட்டிங் என்று கலந்துரையாடல் அறையில் தந்தை உட்பட முக்கிய பணியாளர்கள் அனைவரையும் கூட்டி இருந்தவன் தான் சமீபத்தில் கைப்பற்றியிருக்கும் மகிழுந்து தொழிற்சாலையில் ரேஸ் கார்கள் வடிவமைப்பது பற்றியும், அதன் விற்பனை, லாப நஷ்டங்கள் பற்றியெல்லாம் நீண்ட விளக்கவுரை கொடுக்க ஆயத்தமாகி அவ்வறைக்குள் நுழைந்தான் ஆதி.
வழக்கமான நீள எட்டுக்கள் இல்லாது சோகை பீடித்த சிங்கமாய் சற்றே தளர்ந்த நடையில் உள்ளே நுழைந்த ஆதிக்கு அனைவரும் எழுந்து நின்று வணக்கத்தைத் தெரிவிக்க, அவனோ பெயருக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவன் முகத்தில் அப்பியிருந்ததெல்லாம் விரக்தி விரக்தி விரக்தி மட்டுமே.
அவனைத் தொடர்ந்து அஸ்வினும் உள்ளே வந்து அமர, “எல்லாரும் வந்தாச்சு பாஸ். ஸ்டார்ட் பண்லாம்” என்ற சிவாவின் கூற்றில் அங்கிருந்த வெள்ளைத் திரையின் முன்னால் நின்றவனுக்கு
“குட் மார்னிங் எவ்ரிபடி” என்ற வார்த்தைக்கு மேல் அவனால் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசவே இயலவில்லை.
அஸ்வினின் இருக்கைக்குக் பக்கத்தில் வெறுமையாகக் கிடந்த ராஹியின் இருக்கையைப் பார்த்ததும் முன்பொரு நாள் இதே போல் கலந்துரையாடலில் வேறு ஏதோ தொழில் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தவனை அவன் மனையாள் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்ததும், அவள் பார்வை உணர்ந்து அவன் புருவத்தை தூக்கி விழியாலே வினவிய பொழுது சட்டென்று தலை குனிந்து தன் நாணத்தை மறைத்துக் கொண்டதும், அதைத் தொடர்ந்த பல நிகழ்வுகளும் இச்சமயம் ஆதியின் சிந்தையில் உதிக்க, ‘அப்போ இவ்ளோ நாளா நமக்குள்ள இருந்த எல்லாமே பொய்யா தியா? என்னால முடில ஹனி’ என்று மேஜையைப் பற்றி குனிந்து கொண்ட ஆதி, “பாஸ் ஆர் யூ ஓகே?” என்ற சிவாவின் கூற்றில் தான் சுற்றம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
சிவாவின் தொடுகையில் சூழலைப் புரிந்து கொண்டாலும் அதற்கு மேல் அந்த கலந்துரையாடலைத் தொடங்க உடலிலும் மனதிலும் வலுவில்லாது போக, “நோ சிவா ஐம் நாட் ஓகே” என்று நிமிர்ந்தவன், “ரொம்ப ஹெட் ஏக்கா இருக்கு. சாரி பார் த ட்ரபிள் ஜெண்டில்மேன்ஸ்” என்று மட்டும் அனைவரையும் நோக்கிக் கூறி விட்டு நிமிடமும் நில்லாது அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கும் விரைந்து விட்டவன் நேரே சென்று நின்றது என்னவோ தன்னுடைய அறைக்குள் தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.