இன்டெர்வியூ போல் எந்தத் தேர்வும் வைக்காமலே ராஹியை வேலையில் சேர்த்துக் கொள்ளக் கூறிய தந்தையின் பேச்சில், ‘போயும்போயும் இந்த டெவிலுக்காக கம்பெனி ரூல்ஸயே மாத்தணுமா?’ என்று சினம் கொண்ட ஆதி, இருந்தும் சுற்றம் கருதி, விரல்கள் கொண்டு தொடையில் தாளமிட்டு தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டவன் ராஹித்யாவை உறுத்து விழித்தவாறே, “பைன் டாட், இப்போதைக்கு ட்ரெய்னிங் வரட்டும், கொஞ்ச நாள்ள பெர்மனெண்ட் பண்ணிக்கலாம்” என்று மட்டும் கூறி வெளியேறினான்.
அவன் பார்வையை சந்திக்காவிடினும் அவன் கூறிய “பைன் டாட்” என்ற வார்த்தையிலே அவனின் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டு பெண்ணவளின் உள்ளமதை சோர்வடையத்தான் செய்தது.
ஆதி அடக்கப்பட்ட கோபத்துடன் கிளம்பிச் செல்லவும் அஸ்வினும் மதியும் மீண்டும் ஹாஸ்டல் பற்றிப் பேச, ஆதியைப் பற்றிப் புரியாத மலரும் கூட மகள்களிடம் அங்கிருக்க வலியுறுத்த, ஆனால் ஆதியின் கடுகடுத்த முகத்தை மனதில் வைத்த ராஹித்யாதான் சற்று பிடிவாதமாகவே மறுப்புத் தெரிவித்தாள்.
யுவாவும் எப்பொழுதும் மகள்களின் விருப்பத்திற்கே முன்னுரிமை கொடுப்பவனும், சில பல வார்த்தைகள் மூலம் அஸ்வின் மதியை சமாதானம் செய்ய… அவர்களும் வேறு வழியில்லாது, “வீக்லி ஒன்ஸ் ஹாலிடேவுலயாச்சும் இங்க வந்துட்டுப் போகணும்..!” என்ற அன்புக் கட்டளையோடு சமாதானம் அடைந்தனர்.
அவர்கள் அன்பைக் கண்டு மகிழ்ந்த யுவாவும் மலரும் “அப்போ புள்ளைகள கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு இன்னிக்கு நைட் நாங்க ஊருக்குக் கிளம்புறோம்…” என்று சொல்ல… அவர்களை நோக்கி வந்த ஆத்விக்கோ, “அதெல்லாம் முடியாது அங்கிள் எவ்ளோ வருசத்துக்கப்றம் இங்க வந்துருக்கீங்க அத செலிபிரேட் பண்ண வேணாம். இன்னிக்கு புள்ளா ஜாலியா ஊர் சுத்துறோம் அப்றம் ரெஸ்டாரெண்ட்ல டின்னர முடிக்கறோம், அதுக்கப்புறம் நீங்க எங்க வேணா போலாம்” என்று சொல்லிச் சிரித்தான்.
அஸ்வினும் மதியும் கூட மகன் பேச்சை ஆமோதிக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் அஸ்வினின் ரோல்ஸ் ராய்சில் அவர்கள் அனைவரும் பரந்து விரிந்த சென்னையில் மால் பீச் என்று உலா வந்தவர்கள், இறுதியாக ஒரு பிரமாண்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்குள்ளும் நுழைந்தனர்.
“பேம்லியா வெளிய வந்து ரொம்ப நாளாச்சுண்ணா, நீயும் வாண்ணா” என்ற தம்பியின் அழைப்புக்காக டின்னரில் மட்டும் கலந்து கொள்வதாக ஆதி கூறியிருக்க சென்னையில் மிகவும் பிரபல்யமான ஆதிக்கு மிகவும் பிடித்தமான, அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அனைவருக்கும் இருக்கை பதிவு செய்திருந்தான் ஆத்விக்வர்மா.
கண்ணை பறிக்கும் வண்ண விளக்குகளும், செவியை வருடும், மேற்கத்திய மெல்லிசையும், பச்சை பட்டைப் போன்ற அருகம்புற்களின் அணிவகுப்பும் அந்த இடத்தையே அத்துணை ரம்யமாக்கியிருக்க, பெயர் கூட வாயில் நுழையாத உணவு வகைகளின் மனமோ அந்த கிராமத்துப் பாவைகளின் வாயில் உமிழ் நீரை சுரக்க வைக்க, அவ்விடத்தின் ஆடம்பர அழகை விழிகள் சுழற்றி ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தனர் ராஹியும் சாஹியும்.
மற்றயவர்களும் மற்ற இருக்கைகளில் அமர, ஆத்விக்கின் தொடர் அழைப்பில் சற்று நேரத்தில் ஆதித்யாவும் அவர்களோடு வந்து இணைய, பேச்சும் சிரிப்புமாய் அந்த இடமே களைகட்டத் தொடங்க, ராஹியும் கூட காலையில் இருந்த மனநிலை முற்றிலும் மாற்றப்பட்டவளாய் அருகில் இருந்த ஆத்விக்கிடம் கலகலப்பாகப் பேசிச் சிரித்திருந்தாள்.
விசேஷம் திருவிழா என்று பெற்றோரோடு அடிக்கடி தங்கள் கிராமத்திற்கு வரும் ஆத்விக்வர்மாவின் கலகல சுபாவமும், சினேகமான புன்னகையும், நட்பான பேச்சுக்களும் சிறுவயதில் இருந்தே ராஹியிடமும் சாஹியிடமும் ஒரு இனிமையை தோற்றுவித்திருந்தது…
அவளோ அவனிடம் வாய் ஓயாது சலசலத்துக் கொண்டிருந்தவள், ஆதித்யாவின் வரவை உணர்ந்தும் உணராதது போல் அமர்ந்திருக்க, அவனும் அந்த இடத்திற்கும் அவள் அணிந்திருந்த லாங் ஸ்கர்ட் மாடர்ன் உடைக்கும் சிறிதும் பொருந்தாது நேர் வகிடெடுத்துச் சீவி இறுகப் பின்னலிட்டு, நெற்றியில் விபூதி குங்குமமும், தலையில் மணக்க மணக்க மல்லிப்பூவும் வைத்து அமர்ந்திருந்தவளை ஒரு அற்பப் பார்வை பார்த்தபடி அமர்ந்தவனும் பெயருக்கு உணவைக் கொரித்திருந்தான் ஆதித்யவர்மா.
அவளுக்கு பாவாடை தாவணி தான் மிகவும் பிடித்த உடை என்றாலும், சாஹித்யாவிற்காக சுடிதார் மிடி போன்ற மாடர்ன் உடைகளை உடுத்திக் கொள்ளும் ராஹித்யா மற்ற அனைத்திலும் ஒரு கிராமத்துப் பெண்ணாகவே பழக்க வழக்கம் கொண்டிருந்தவள், இப்பொழுது அந்த சைனீஸ் உணவைக் கூட கையில் அள்ளிதான் உண்டு கொண்டிருந்தாள்.
உணவை முடித்தவள் இறுதியாக அங்கிருந்த ஐஸ்க்ரீமை எடுத்து வாயில் வைத்த நொடி…
“ஹூ லெட் தி டாக்ஸ் அவுட். ஹூ ஹூ ஹு ஹூ ஹூ” என்று கைபேசியில் ஒலித்த ஆங்கிலப் பாடல் சப்தத்தில் திடுக்கிட்ட ராஹி, அந்த ஐஸ்க்ரீமை தன் மேலேயே போட்டுக் கொள்ள, அதைப் பார்த்த ஆதியோ ‘இவளுக்கு எப்பவும் ஐஸ்க்ரீம கொட்டுறதுதான் வேல போல’ என்று எண்ணியவனாய், விடாது அலறிக் கொண்டிருந்த தன் கைபேசியை ஆன் செய்து செவியில் பொருத்தியவன்…
“கன்ட்ரி ப்ரூட்” என்று முணுமுணுத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
ஆதியின் கைபேசி சப்தத்தில் கையிலிருந்த ஐஸ்க்ரீமை நழுவவிட்டு ஒலி வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தவள் ஆதியின் முணுமுணுப்பையும் கண்டு கொண்டவளுக்கு, அத்துணை நேரம் இருந்த இதம் மாறி, ‘இவனுக்கு வேற ரிங்டோனே கிடைக்கலியா?’ என்ற ஒரு வித எரிச்சலே தோன்றியது போலும்…
அவளோ சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள அவளருகில் இருந்த ஆத்விக்கோ, “அச்சோ என்னாச்சு ராஹி ஐஸ்க்ரீம் சிந்திடுச்சா.?, இரு நா துடைச்சி விடுறேன்” என்று தன் கைக்குட்டையை எடுத்தவனின் செயலில் சிலிர்த்த பெண்ணவளின் விழிகளோ அவளையும் அறியாது சற்று தள்ளி நின்று கைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஆதியின் மேல் படிந்து மீள…
அவளோ, ‘ஆதி மாமா ஏன் ஆது மாமா மாறி இல்ல’ என்று உள்ளத்தில் உதித்த விடையறியா வினாவோடு ஆத்விக்கின் செயலை மறுத்தவள், “இல்ல ஆது மாமா, நா ரெஸ்ட்ரூம் போய் வாஸ் பண்ணிட்டே வந்தர்றேன்” என்றாள்.
ஆத்விக்கும், “ஓகே ராஹி அதுவும் பெட்டெர்தான்” என்றவன் அவளை அழைத்து வந்து அங்கிருந்த பெண்கள் குளியலறையைக் காட்டிக் கொடுத்தவன் திரும்பிச் செல்லாமல் அங்கேயே நிற்க…
ஆத்விக்கின் நட்பில் கரைந்த ராஹியும், இதழ் விரிந்த புன்னகையோடு, “நா வாஸ் பண்ணிட்டு வர்றேன் மாமா நீங்க போங்க” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
ஆத்விக்கை அனுப்பி விட்டு, வந்த வேலையை முடித்துத் திரும்பியவள், அந்த ஹோட்டலின் “பியூட்டிபுல் வியூவ் ஆப் சென்னை” என்ற சிறப்பு அம்சமாய்… கண்ணாடியூடு தெரிந்த சென்னையின் இரவு நேர அழகை தனை மறந்து ரசித்திருக்க,
அவளின் ஈரஉடை தோற்றத்தை அங்கிருந்த கல்மிஷ விழிகள் சில கள்ளத்தனமாக பார்த்திருந்தன.
அணிந்திருந்த உடையின் முன் பக்கம் முழுதும் ஐஸ்க்ரீம் கொட்டி விட்டதால் முன்பக்க உடை மொத்தமும் தாராளமாய் நீர் விட்டு அளம்பியிருக்க, நீர் சொட்டும் உடையோடு நின்ற ராஹியின் பக்கவாட்டுத் தோற்றமும் அவளையே பார்த்திருந்த ஜொள்ளன்களின் பார்வையும் அப்பொழுது தான் கைபேசியில் பேசி முடித்து வந்த ஆதியின் விழிகளில் பட்டதோ என்னவோ, அவனோ சற்றும் யோசியாமல் வேகமாக அவளை நெருங்கினான்.
அந்த உணவு விடுதி அமைந்திருந்த பத்தாவது மாடியிலிருந்து சிங்காரச் சென்னையை ரசித்துக் கொண்டிருந்தவளின் பின்னே சென்று நின்ற ஆதியோ, “ஹேய் டெவில் இங்க என்ன பண்ணிட்டிருக்க.?” என்றான் சற்று உரக்கவே.
செவியருகில் கேட்ட ஆதியின் குரலில் சற்றே திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் கேட்ட கேள்வியையும் உணர்ந்து அவனை எரிச்சலாகப் பார்க்க அவனோ அதற்குள், “உனக்கு எப்பவும் ஐஸ்க்ரீம் ஒழுங்கா சாப்புடத் தெரியாதா, சின்ன புள்ளைல என் மேல கொட்டுன, இப்போ உன் மேலையே கொட்டி அத வாஸ் பண்றேன்னு ட்ரெஸ் புள்ளா ஈரத்தோட நின்னுட்டிருக்க, ம்ம்ம்.?” என்று மீண்டும் கேட்டவனை இப்பொழுது நன்றாக முறைத்துப் பார்த்தவள்…
“என் பேரு டெவில் இல்ல” என்று கூறி, “அதான் அன்னிக்கு உங்க மேல ஐஸ்க்ரீம் கொட்டுனதுக்கு சின்ன பொண்ணுன்னும் பாக்காம என்ன எவ்ளோ திட்ட முடியுமோ திட்டி என்ன சாரியும் கேக்க வச்சிங்கள்ள, இன்னிக்கு நா என் மேல தான கொட்டிகிட்டேன் அதுல உங்களுக்கு என்ன பிராப்லம்” என்றவள் மீண்டும் திரும்பிக் கொள்ள…
அவனோ, “பிராப்லம் எனக்கில்ல உனக்குத்தான்னு இந்த டெவில்க்கு எப்டி சொல்லிப் புரிய வைக்கிறது” என்று எண்ணியவனாய் அவளிடம்,
“சரி ஐஸ்க்ரீம் கொட்டி கழுவிட்டும் வந்தாச்சுல்ல அங்க டேபிளுக்கு போக வேண்டியதுதான, இங்க தனியா நின்னு என்ன செய்ற.?” என்று மீண்டும் குரல் உயர்த்தாது சீறியவனுக்கு, வாய்ப்புக் கிடைத்தால் சில்மிஷம் செய்யக் கூடத் தயங்காத கல்மிஷர்களின் விழி வட்டத்தில் அவள் இருப்பதை அனுமதிக்க முடியாமல் இருந்ததோ???.
தான் நினைத்ததைப் பேசியும், வேண்டியதை நடத்தியும் பழக்கப்பட்டவனின் சீற்றத்தில் அவனை நிமிர்ந்து நோக்கிய ராஹியின் விழிகளிலோ, ‘நா எங்க நின்னா உனக்கென்ன, நேத்து உன் காரத் தொட்டதுக்கே அத தொடைக்கச் சொன்னவனுக்கு இப்போ என் மேல என்ன அக்கற?’ என்ற கேள்வி தான் தொக்கி நின்றது.
உள்ளமதை அப்பட்டமாய் காட்டும் பாவையவளின் நேத்திரங்களில் அவள் கேள்வியை படித்துக் கொண்டவனோ.
தன் தொடையில் விரல் தாளமிட்டவாறே,
“ஹேய் ஹேய், உன் மேல எனக்கு எந்த அக்கறையும் இல்ல, நீ எதும் இமாஜின் பண்ணிக்காத, உன்ன இன்னும் காணோன்னு உன் யுவிப்பா தேடுவாரில்ல அதான் உன்ன போகச் சொல்றேன், டேபிளுக்குப் போ…” என்று இன்னும் தன் அதிகாரத்தையே நிலை நாட்டத்துடிப்பவனைக் கண்டு மனதுக்குள் வெதும்பினாள் ராஹி.
‘எப்ப பாத்தாலும் மொறச்சிகிட்டு வீட்லதான் நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறான்னா இங்கயும் வந்து அங்க போ, இங்க வான்னு டார்ச்சல் பண்றானே’ என்று உள்ளூற சலித்துக் கொண்டவளுக்கு ஈர உடையோடு சென்று அமரவும் சிறிதும் பிடித்தமில்லாதிருக்க, அவளோ இன்னும் சிறிது நேரம் அங்கேயே நிற்க எண்ணியவள்,
இப்பொழுது அவனை ஏறிட்டுக் கூடப் பாராமல்…
“நா இன்னும் கொஞ்சம் நேரம் சென்னை வியூஸ் பாத்துட்டு அப்றம் போய்க்கிறேன்” என்று மட்டும் கூறினாள்.
இத்தனை வருட தொழில் சாம்ராஜ்யத்தில் தனக்கு கீழே மேலே என்று இருக்கும் அத்தனை பேரையும் தன் விழியசைவாலும், கன்னம் குழிந்த மென் சிரிப்பாலும் ஆட்டிப் படைப்பவனுக்கு இவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காது அசையாது நிற்கும் ராஹியின் மேல் சட்டென்று கோபம் துளிர்க்க…
அவனோ, “சென்னை வியூவ் தானே ம்ம்ம், பாரு பாரு நல்லா பாரு, இந்த மாறி விஷயங்களெல்லாம் நீ இப்டி ஓசில பாத்துக்கிட்டாத்தான உண்டு, இனி உனக்கு இப்டி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்னமோ” என்று இன்னும் அவளை விட்டு விலகிச் செல்லாமல் ஒரு ஏளனக் குரலில் கூறியவன் தொடர்ந்து…
“இங்கயிருந்து பாக்குறப்போ சென்னை ரொம்ப அழகா இருக்குல்ல” என்றும் ஒரு இகழ்ச்சிப் பார்வையை அவள் மேல் செலுத்தினான் ஆதி.
அவன் அவளை அங்கிருந்து அனுப்ப நினைக்கும் காரணமே வேறாக இருந்தாலும், தன் பேச்சை அவள் மதிக்கவில்லை என்ற கோபத்தில் அவன் பேச்சு அவனையும் அறியாமலே திசை மாறி சிறு வயது பழக்கமாய் அவளைச் சீண்டிப் பார்க்கும் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
ஆதியின் வார்த்தையில் அடிப்பட்டவளாய் அவனை நிமிர்ந்து நோக்கியவளோ, ‘இவனுக்கு என்னதான் பிரச்சனை, ஏன் என்கிட்ட மட்டும் சின்ன புள்ளையிலிருந்து இப்டி சரி மல்லுக்கு நிக்கிறான், ஆது மாமா மாறி அன்பா பேசாட்டியும் பரவால்ல இந்த மாறி குத்திப் பேசி என்ன கஷ்டப்படுத்தாமையாவது இருக்கலால்ல’ என்று உள்ளூறக் குமைந்தவள் அவன் பார்வையை சந்தித்த நொடி அவளின் இயல்பான நிமிர்வு தலைதூக்க…
அவன் ஏளனப் பார்வையோடு தன் தீ விழிகளை போரிட விட்டவள், “எனக்கு எதையும் ஓசில அனுபவிச்சு பழக்கமில்ல மா… ஆதி, இங்க சாப்டதுக்குண்டான பில்ல வேணா நா வேலைல ஜாயின் பண்ணப்றம் என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க” எனக் கூறி தன் ஐந்தரை அடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவள் தொடர்ந்து,
“சென்னை ரொம்ப அழகாத்தான் இருக்கு ஆனா இங்க இருக்க ஒரு சில ஆட்களோட மனசுதான் ரொம்ப அழுக்கா இருக்கு” என்று அவன் முகத்தில் பார்வை பதித்துக் கூறியவள் அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் விரைந்து விட,
அவளின் பதிலடியில் அன்று போல் இன்றும் முகம் கருத்தவனோ, “எப்பப்பாரு இவளுக்கு பதிலுக்கு பதில் பேசுறதே பழக்கமா போச்சி, இன்னும் அப்டியே தான் இருக்கா டெவில், வாடி வா என்கிட்ட தான வேலை பார்க்க போற உனக்கு இந்த ஆதி யாருன்னு காட்றேண்டி.?” என்று வாய்விட்டே கறுவியவன் அங்கிருந்த கல்மிஷ விழிகளை முறைக்கவும் தவறவில்லை ஆதித்யவர்மா.
ஆத்விக்கின் ஆசைப்படி மால் ஹோட்டல் என்று சுற்றியவர்கள் அன்றைய இரவையும் அஸ்வின் வீட்டிலேயே கழித்து மறுநாள் காலை கிளம்பினார்கள்…
“அப்போ நாங்க புள்ளைகள ஹாஸ்டல்ல விட்டுட்டு ஊருக்கு கெளம்புறோம் மச்சான் ராஹிப்பா, சாஹிப்பாவ அப்பப்போ கொஞ்சம் பாத்துக்கங்க…” என்று மகள்களோடு தங்களிடம் விடைபெற்ற யுவாவிடம், “ஒரு நிமிஷம் யுவா” என்ற அஸ்வினோ அவனிடம் ராஹியின் வேலைக்கான சேர்க்கைப் படிவத்தைக் கொடுத்தவன், “நீயே உன் கையாள ராஹிகிட்ட கொடு யுவா” என்று கூறி புன்னகைக்க… அவனும் அதை வாங்கிப் பார்த்தவன் ஒரு புன்சிரிப்போடு மகளிடம் கொடுத்தான்.
ராஹித்யாவும் தந்தை கொடுத்த பேப்பரை தயக்கத்தோடு வாங்கிக் கொள்ள, அவளை நோக்கிய அஸ்வினோ, “இதப் பாருடா ராஹிமா இது உன்னோட ட்ரைனிங்கான அப்பாயின்மென்ட் ஆடர்தான், ஆனா
நீ சீக்கிரமே வர்மா கம்பெனியோட முக்கிய போஸ்ட்ல உக்கார்ற அளவு முன்னேறிக் காட்டணும்” என்றவன் “நாளையிலிருந்து நீ எப்ப வேணா வந்து ஜாயின் பண்ணிக்கலாம்” என்று சொல்லி முடிக்க…
ராஹியின் விழிகள் அவளையும் அறியாமல் ஆதியின் மேல் ஒரு கணம் படிய அவனோ ‘வாடி வா இருக்கு உனக்கு’ என்பது போல் அவளை முறைத்தவன் முகம் போன போக்கிலே தான் இங்கு வந்ததும், அவன் கம்பெனியிலே வேலை பார்க்கப் போவதும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று நன்றாகவே உணர்ந்து கொண்டாள் ராஹித்யா.
கூடவே அவன் நேற்று இரவு தன்னிடம் பேசிய வார்த்தைகளும் நினைவு வந்து கையிலிருக்கும் வேலைக்கான படிவத்தை சுக்கலாகக் கிழித்து அவன் முகத்திலே போட்டு விட்டு அப்படியே தந்தையுடன் கிராமத்திற்கே சென்று விடலாமா என்று கூடத் தோன்ற ஆரம்பிக்க, ஆனால் அந்த எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்தது சாஹியின் சந்தோசமும், கூடவே ஆத்விக்கின் வாழ்த்துக்களும்.
‘இப்படி முகம் சுண்டுபவனிடம் எப்படி வேலை பார்க்கப் போகிறோம்?’ என்று பெண்ணவள் சிந்தித்திருந்த வேளை, “ஹேய் சூப்பர்டி ராஹி” என்ற சாஹித்யா அவளை கட்டிக் கொள்ள…
அவளை நெருங்கிய ஆத்விக்கும் “காங்கிராட்ஸ் ராஹி” என்று சொல்லி கை குலுக்கினான்.
அவளும் “தாங்க்ஸ் ஆது மாமா” என்று சொல்லிக் கொள்ள அவளைப் பார்த்து புன்னகைத்த ஆத்விக்கோ அருகில் நின்ற சாஹியிடமும், “உனக்கும் கங்கிராட்ஸ் சாஹி, நீயும் நாளைக்கு நியூ ஜாப்க்கு ஜாயின் பண்ணப்போறல்ல” என்று கைநீட்ட…
அவனை நிமிர்ந்து பார்த்த சாஹியோ இதுவரை அவனிடம் தானாகச் சென்று கூட எதுவும் பேசியிராதவள் அவனின் இந்த திடீர் செயலில் திகைத்தவளாய் சற்றுத் தயக்கத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்க,
அவனும் இரட்டையர் இருவருக்கும் பொதுவாக “ஆல் தி பெஸ்ட் ஏஞ்சல்ஸ்” என்று கூறி கண்சிமிட்டிச் சென்றான்.
அத்துணை நேரமும் கைபேசியில் பார்வை இருந்தாலும் சுத்தி நடப்பவற்றையும் உள்வாங்கிக் கொண்டிருந்த ஆதியோ ‘இந்த டெவில்க்கு கங்க்ராட்ஸ் ஒண்ணு தான் குறைச்சல்’ என்று நக்கலாக எண்ணியவன் தன் கைபேசியில் மேலும் புதைய…
மீண்டும் “யுவா” என்றழைத்த அஸ்வினோ, “சாஹியும் ஐடி பீல்ட் இல்லாம வேற பீல்டா இருந்தா அவளையும் நம்ம கம்பெனிக்கே வரச் சொல்லிருப்பேன் யுவா, சரி பரவாயில்ல பிள்ளைக அவங்க விருப்பம் போல இருக்கட்டும், இவங்க ரெண்டு பேரும் இனி என் வீட்டுப் பொண்ணுங்க நீ ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காம ஊருக்கு போ யுவா” என்று கூறியவன் மதியைப் பார்க்க…
அவளும், “ஆமா மலர் நீயும் எதும் யோசிக்காத எல்லாம் நாங்க பாத்துக்கறோம்” என்று அருகில் நின்ற மலர்விழியின் கையைப் பற்ற…
அவளும் யுவாவும், “ரொம்ப சந்தோசம் அண்ணி, நன்றி மச்சான்” என்று சொல்லி விடைபெற இளையவர்கள் நால்வரின் பார்வையும் ஒன்றையொன்று உரசிவிட்டு விலகிச் சென்றது.
அஸ்வின் குடும்பத்திடம் விடைபெற்ற யுவா தம்பதியர் தங்கள் புதல்விகளையும் அழைத்து வந்து அவர்களுக்கென்று பார்த்திருந்த ஹாஸ்டலில் விட்டு அவர்களுக்கு பல புத்திமதிகளும், வழிக்காட்டுதலும் சொல்லி விட்டுக் கிளம்ப, அத்துணை நேரமும் அவர்களோடு இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்த ஆத்விக்கும், “ராஹி சாஹிய நாங்க பாத்துக்கறோம் ஆன்டி டோன்ட் ஒர்ரி, நீங்க வீட்ல ரீச் ஆனதும் ஒரு கால் பண்ணிருங்க அங்கிள்…” என்று மலரிடம் தொடங்கி யுவாவிடம் முடித்தவன் அழகான புன்னகை ஒன்றையும் உதிர்க்க, அவர்களும் “சரிங்க தம்பி” என்று சொல்லிக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனே தங்கள் கிராமம் நோக்கிப் பயணப்பட்டனர்.
பெற்றோருக்கு கையசைத்து அனுப்பி வைத்த சாஹியோ தனக்குப் பிடித்த வேலையில் சேரப் போகும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, தந்தை காரில் ஏறி கிளம்பும் மட்டும் அவனருகிலேயே இருந்த ராஹித்யாதான் அவன் தன் நெற்றியில் முத்தமிட்டு உள்ளே ஏறி அமர்ந்ததும், அவள் உள்ளம் இனம் விளங்கா தவிப்பிற்கு ஆளாக அதை பெற்றோர் விழிகளுக்குக் காட்டாமல் மறைத்தவளும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பியவாறு தனக்குள்ளே,
“ஐ மிஸ் யூ யுவிப்பா” என்று தான் சொல்லிக் கொண்டாள் பெண்.
பெற்றோரை அனுப்பி விட்டு தங்களுக்கென்று கொடுத்திருந்த அறைக்குள் நுழைந்த சாஹி ஐந்து நட்சத்திர விடுதி அறைகள் போல் இருந்த தங்கள் ஹாஸ்டல் அறையை சுற்றியும் முற்றியும் பார்த்தவள், “ரூம் செம்மையா இருக்குல்லடி ராஹி.?” எனக் கேட்டு “சரி காலைல சீக்கிரம் கிளம்பணும், வாடி தூங்கலாம்” என்று சொல்லி படுக்கையில் விழ, அவளுக்கு உம் கொட்டியபடி இருந்த ராஹித்யாவும் உடை மாற்றி வந்து தங்கையின் அருகில் படுத்து உறங்க முயன்றாலும் அவள் இமைகள் என்னவோ மூட மறுத்து அவளிடம் சண்டித்தனம் தான் செய்தது.
அத்துணை பெரிய அரண்மனை வீட்டின் கூட்டுக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்ந்தவள் வீட்டில் மட்டுமல்லாது தொழிற்சாலையிலும் எந்நேரமும் தன் தந்தையின் பார்வை வட்டதுக்குள்ளேயே இருந்தவள், தங்கைக்காக அவளே விருப்பப்பட்டு சென்னைக்கு வந்திருந்தாலும் இந்த ஒரு வார காலத்தில் அவள் வாழ்க்கை நினைத்துக் கூடப் பார்த்திராத புதிய கோணத்தில் பயணமாகப் போவதை எண்ணி அவள் உள்ளம் உறங்க மறுக்க, அதில் ஆதியின் பேச்சுக்களும் செய்கைகளும் வேறு ஞாபகம் வந்து அவளை கலங்கத் தான் வைத்தது.
அவளோ தன்னையும் நம்பி இன்டெர்வியூ கூட இல்லாமல் அவர்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்ட அஸ்வினின் பெரிய மனதையும், மாலை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதைக் கூட ஓசி என்று ஏளனம் செய்த ஆதியின் சிறு புத்தியையும் எண்ணி “இந்த ஆதி அஸ்வின் மாமாவோட புள்ளதானா? இவன் கிட்ட தான் நாம வேலை பாத்தாகணுமா” என்றும் புலம்பிக் கொண்டவாறே புரண்டு புரண்டு படுக்க, மெல்ல ஆத்விக்கின் முகம் வந்து “ஆல் தி பெஸ்ட் ராஹி” என்றும் அவள் முன்னால் சிரித்தது…
அதைக் கண்ட பெண்ணவளின் அகமும் முகமும் மலர, ‘ம்ம்ம் அங்க ஆதி மட்டும் இல்லியே அஸ்வின் மாமா, ஆது மாமாவும் இருப்பாங்கல்ல அதுவும் இல்லாம நா பூஞ்சோலை யுவராஜோட மக அப்டி இருக்கப்போ ஆதிய நெனச்சு இந்த பதட்டம் எனக்குத் தேவையில்லாதது, அப்டி என்ன செஞ்சுருவான் அந்த டெவில்…’ என்று தனக்குத் தானே தைரியம் அளித்துக் கொண்டு உறங்கிப் போனவள் காலை சீக்கிரமே எழுந்து சற்று ஆர்வத்தோடே தன்னுடைய புதிய பாதையை நோக்கி பயணப்பட்டாள் ராஹி.
அந்தப் பாதை அவளுக்கு வைத்திருப்பது மலர்களா முட்களா..???
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.