ராஹிக்கு சிறு வயதில் இருந்தே மழையில் நனைவது நிரம்பவும் பிடிக்கும். அத்தோடு இடி மின்னல் என்றாலும் மிகவும் பயம். அவள் சிறு வயதில் பார்த்த மழைகள் எல்லாம் இடி மின்னலுடன் கூடிய மழையாகவே தோன்றிட கூடவே பெரியவர்களின் எச்சரிக்கையும் சேர்ந்து அவள் மழையில் நனையும் ஆசையும் பெரும்பான்மை நேரம் அந்த மழையோடு மழையாகவே கரைந்து போய்விட்டது. அப்பொழுது இருந்தே வானம் இருட்டி கட்டி வந்தாலே கதவு ஜன்னல்கள் எல்லாம் அடைத்து விட்டு அறைக்குள் அடைந்து கொள்ளுமளவு இடி மின்னலுக்குப் பயந்த பெண்ணாகவே வளர்ந்து விட்டாள் ராஹி.
ஆனால் இன்று கணவன் குளிர் காற்றில் படுத்திருப்பது தாளாது அவனை உள்ளே வந்து படுக்கச் சொல்லி அழைப்பதற்காக தன் பயத்தையும் மீறி பால்கணிக்குச் சென்றவள் வேகமாக அவனை “ஆதிசார்” என்று அழைக்க, அவனோ அத்தான் என்று அழைக்காத வீம்பில் தூங்குவது போல் பாசாங்கு செய்ய, அச்சமயம் சரியாக இடியுடன் கூடிய மழை ஆரம்பம் ஆகியதும் பயந்து அலறியவள் கணவனின் மேலே தடுமாறி விழுந்து வைத்தாள் ராஹி.
இடியின் சப்தம் கொடுத்த பயத்தால் விழுந்ததோடு மட்டுமல்லாது தன் கோபத்தையும் மறந்து கணவனின் ஆறடி மேனியையே மஞ்சமாக்கிக் கொண்டவள் இத்துணை தினங்கள் கோபத்தில் அழைக்காது இருந்த “ஆதித்தான்” என்ற விளிப்போடும் அவனைக் இறுக்கிக் கட்டிக் கொண்டு, “இடி இடிக்குது அய்யோ மின்னல் ஆதித்தான். பயமாயிருக்கு” என்று அச்சக்குரலில் கூறியபடியே இன்னும் இன்னும் கணவனின் பரந்த மார்பில் ஒன்ற அவனுக்கோ மனைவியின் இந்த எதிர்பாரா நெருக்கத்தில் ஊனோடு உள்ளத்திலும் பெரும் தாப நெருப்பு பற்றி எரிய தொடங்கியது.
பூப்பந்து போல் திடீரென்று தன் மேல் விழுந்தவளை ஆடவனின் கைகள் அன்னிச்சையாக அணைத்துக் கொண்டாலும் வெகு நாளைக்குப் பிறகான மனைவியின் இந்த நெருக்கம் இரவும் பகலும் அவனது உறக்கத்தை திருடிக் கொண்டவளின் எதிர்பாரா அணைப்பு மனைவியின் முழு இணைவோடுதான் அவளைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்ற ஆடவனின் அதீத கட்டுப்பாட்டுக்கே அளவில்லா சோதனையாய் இருந்தது.
சூழ்நிலை உணர்ந்து, “தியா என்னாச்சு உனக்கு இடின்னா பயமா?” என்று அவன் அதரங்கள் அசையும் முன்னவே அவன் கைகள் அவனையும் கேளாது அவளது முதுகைத் தட்டி சமாதானம் செய்யும் சாக்கில் மெல்ல மெல்லக் கீழிறங்கி பெண்ணவளின் பொய்யோ எனும் இடையையும் இடைவெளியே இல்லாது மூடத் தொடங்கியது.
ஆனால் அதையெல்லாம் உணர முடியாத அச்சத்தில் இருந்தவள் அவன் கேள்விக்கும் செவிசாய்க்காது இன்னும் இன்னும் அவனுள் புதைய, அதில் “தியா…” என்று பெண்ணின் வெற்றிடையில் அழுத்தத்தைக் கூட்டி தன்னை நிலைப்படுத்த முயன்றவன் முயன்று வருவித்த இலகுக் குரலில், “டேய் தியா… இங்க பாருடா… இடி மின்னலுக்குப் போய் யாராவது இப்டி பயப்படுவாங்களா. கண்ண முழிச்சு என்னப் பாரு ஹனி” என்று அவள் செவியோரச் சிகையை காதடியில் ஒதுக்கியவன் அவள் நாடியைப் பற்றியும் நிமிர்த்த முயற்சிக்க…
ஆனால் அவனவளோ எதற்கும் அசையாது, “இல்ல இல்ல நான் கண்ணு முழிக்க மாட்டேன். கண்ண முழிச்சா மின்னல் தாக்கிடும்” என்று இன்னும் கொஞ்சம் அவன் மார்புச் சட்டயைப் பற்றிக் கோழிக் குஞ்சாய் பதுங்கினாள் ராஹி.
பெண்ணின் அந்தப் பேச்சிலும் செயலிலும் அடக்க வழியில்லா தாபத்தோடு அடங்காச் சிரிப்பும் சேர்ந்து கொள்ள, “தியா ரொம்ப சோதிக்கிறடி” என்ற முணுமுணுப்போடு, “ஹனி என்ன இது சைல்டிஸ்ஸா பேசுற. அதெல்லாம் ரேர்றா நடக்குற ஆக்சிடண்ட்ஸ்டா. இடி மின்னல் மழைலாம் பயப்புட வேண்டிய மொமெண்ட்ஸ் இல்லடா. என்ஜாய் பண்ண வேண்டிய மொமண்ட்ஸ். கொஞ்சம் நிமிர்ந்து பாரு ஹனி” என்றும் சொல்ல…
கணவனின் தாலாட்டுப் போன்ற அந்தக் குரலில் சற்றே தலை உயர்த்திப் பார்த்தவளும், “எனக்கும் மழைன்னா ரொம்ப பிடிக்கும்த்தான். சின்னப் புள்ளைல மழைல டான்ஸ் ஆடணும்னு ரொம்ப ஆசைப்பட்டிருக்கேன். ஆனா இடி மின்னல்ன்னாதான்” என்று அவள் சொல்லத் தொடங்கிய பொழுதே டமடமவென்று மீண்டும் கேட்ட இடிச்சப்தத்தில், “ஆதித்தான் ஆதித்தான்” என்று அலறி மீண்டும் அவனை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள் பெண்.
பெண்ணின் அந்தச் செயலிலே அவள் அச்சத்தை உணர்ந்து கொண்டவனும், “ஹனீமா இவ்ளோ பெரிய பொண்ணா இருந்துட்டு ஒரு இடிக்குப் போய் இப்டி பயப்புட்றியேடா? வாய்ச்சவடால் எல்லாம் என்கிட்ட மட்டும் தானா?” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவனின் கைகள் அவள் இதழ்களையும் வருடிக் கொடுக்க,
அதில் லேசாகக் கூசிச் சிலிர்த்த பெண்ணோ, “அய்யோ என்ன கிண்டல் பண்ணது போதும் ஆதித்தான். ப்ளீஸ் என்ன ரூம்குள்ள மட்டும் கூட்டிட்டுப் போய் விட்டுடுங்களேன். நான் வீட்டுக்கு தளச்சம் பிள்ளை வேற” என்று அழுகாத குறையாகச் சொன்னாள்.
அதற்கு புருவம் சுருங்கப் பார்த்தவனும், “வீட்டுக்குத் தளச்சம் பிள்ளைன்னா ஒய் ஹனி?. இடி இடிக்கிறது கேக்கக் கூடாதா?” என்று புரியாது வினவ…
அதில், “அய்யோ… உங்களுக்கு ஒண்ணுமே தெரியல” என்று மீண்டும் தலையைத் தூக்கிப் பார்த்தவள், “வீட்டுக்குத் தளச்சம் பிள்ளையத்தான் இடி தேடி வந்து தாக்குமாம். மழை பெய்யுறப்போ வெளியவே போகக் கூடாதுன்னு சின்னபுள்ளைல அப்பத்தா பாட்டி சொல்லிருக்காங்க” என்று இதழ் குவித்துச் சொன்னவளின் அதரங்களைக் கண்டு பெரும் உஷ்ண மூச்சுக்களை வெளியேற்றியவன், “கொஞ்சம் பொறுமைடா ஆதி. அவசரப்பட்டு காரியத்தக் கெடுத்துடாத. இப்போ தான் அவ சகஜமா பேச ஆரம்பிச்சிருக்கா” என்று பெரிய பாடமே எடுத்து அவள் கன்னம் தாங்கி இதழ்களைக் கொய்ய முனைந்த கைகளுக்கும் உதடுகளுக்கும் தடா போட்டான் ஆதி.
கைகளுக்கும் உதடுகளுக்கும் தடா போட்டவன் நிமிட நேரம் எந்த இடி மின்னலும் இல்லாதிருந்ததால் தலையை மட்டும் தூக்கி கணவன் முகம் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவளின் பூ வதனத்திலிருந்து மட்டும் விழிகளை விலக்க முடியாது கருவண்டாய்ப் பருகத் தொடங்கியவன், “அச்சோ அதெல்லாம் மூட நம்பிக்கைமா. சின்னப்புள்ளங்க மழைல நனஞ்சா ஜுரம் வரும்னு அப்டி சொல்லி பயமுறுத்திருப்பாங்களா இருக்கும்.
நீ இன்னுமா அதெல்லாம் நம்பிட்டிருக்க?” என்றும் புருவம் உயர்த்திக் கேட்க…
ஒரு நிமிடம் அவனைக் குழப்பமாகப் பார்த்தவளும், “அது மூட நம்பிக்கையோ இல்ல மூடாத நம்பிக்கையோ. அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்ன ரூம்குள்ள மட்டும் கூட்டிட்டுப் போய் விட்டுடுங்களேன். தனியாப் போக பயமாயிருக்கு. ப்ளீஸ். ப்ளீஸ்” என்று அரை அடி தூரத்தில் இருந்த அறைக்கதவைப் பார்த்தவாறு சொன்னவள் அப்பொழுதும் தான் எங்கிருக்கிறோம் என்று உணராமலே சற்று அசைந்து நெளிந்து வாகாக கணவன் மேனியோடு பொருந்திக் கொண்டாள் ராஹி.
பெண்ணின் கூற்றில், “ரெண்டெட்டுல இருக்க ரூம்க்கு போறதுக்கு உனக்குத் துணைக்கு ஆளா? இருந்தாலும் நீ இவ்ளோ பயந்தாகுள்ளியா இருப்பன்னு எதிர்பாக்காலடி” என்று ஒரு அட்டகாசப் புன்னகையை வெளியேற்றியவன், “சரி என் மேல இருந்து கொஞ்சம் எழுந்திரு ரூம்க்கு போலாம்” என்றும் சொல்ல…
அவன் பேச்சில் இருந்துதான் தான் இருக்கும் நிலையும், இருக்கும் இடம் கணவனின் மேனி என்றும் புரிந்து, “அச்சோ ராமா…” என்று சட்டென்று எழுந்து நின்றவளுக்கு அப்பொழுது தான் தங்களுக்குள் இருக்கும் ஊடலும் உரைத்து தான் எதற்கு இங்கு வந்தோம் என்ற ஞாபகமும் எழ, ‘இவர மழைக் காத்துல இருந்து காப்பாத்தறேன்னு வந்துட்டு நீ இப்டி எக்குத்தப்பா சிக்கிட்டியேடி ராஹி’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவளுக்கு இடையோரம் லேசாக வலிப்பது போலும் தோன்றியது.
அதில் இடையை தடவி விட்டுக் கொண்டே குனிந்து பார்த்து அதிர்ந்த ராஹி தன் பின்னோடே எழுந்து நின்ற கணவனையும் காளியாய் முறைத்தவள், “மழை வர்ற மாறி இருக்கே வெளிய குளிரும்னு உங்களப் போய் உள்ளக் கூப்பிட வந்தேன் பாருங்க என்ன சொல்லணும். என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க?” என்று பாவையவளின் வெற்றிடையில் கணவனின் விரல் தடம் சிவப்பு வரிகளாய் படர்ந்திருந்ததைப் பார்த்து பல்லைக் கடித்தவாறே, ஏகத்துக்கும் விலகி இருந்த இடைச்சேலையையும் இழுத்து சரி செய்ய முனைந்தாள் பெண்.
அதில் ஆடு திருடியவனாய் விழிகளை உருட்டியவன், ‘ச்சே அவ்ளோ கண்ட்ரோலா இருந்தும் இப்டி சிவக்குற மாறி அழுத்திப் பிடிச்சிட்டனே’ என்று உள்ளூற வருந்தியவன், ‘இல்ல இல்ல நான் மெதுவாதான் பிடிச்சேன் அவளோட ஹிப் அவ்ளோ சாப்ட் அதான் இப்டி செவந்துருக்கு’ என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டவனாய் மனைவி மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்த இடையை இடைவிடாது ரசித்தபடியே, “நான் என்ன பண்ணுனேன் ஹனி?
நீ ரூம்குள்ள படுக்கக் கூடாதுன்னு சொன்னதும் மறு பேச்சுப் பேசாம அக்கடான்னு பால்கணில வந்து படுத்துருந்தவன் மேல நீதான் வாலன்ட்றியா வந்து விழுந்து வச்சு என் இடுப்ப ஒடச்சிட்டு என்னையே குத்தம் சொல்றியே.” என்று வேண்டுமென்றே மனைவியின் மேல் குற்றப் பத்திரிக்கை வாசித்தான். தொடர்ந்து…
“விழுந்தது மட்டும் இல்ல. விழுந்து மணிக்கனக்கா ஆகியும் எந்திரிக்கணும்னு எண்ணமே இல்லாம இவ்ளோ நேரமா என்ன இறுக்கி கட்டிப் பிடிச்சிட்டு….” என்றும் ஒன்றும் அறியாக் குழந்தை போல் முகத்தை வைத்துப் பேசிக் கொண்டே சென்றவனை மீண்டும் உக்கிரமாய்ப் பார்த்து வைத்தவள்…
“போதும் போதும் நிறுத்துங்க… ஆளும்… முழியும்…. பார்வையும்… ச்சே… உங்களுக்குப் போய் பாவம் பார்த்து வந்தேனே என்ன சொல்லணும். பால்கணிக் குளிர்லயே விடிய விடியக் கெடந்து வெரச்சப் போங்க. அதான் உங்களுக்கு தண்டனை” என்று ஏகத்துக்கும் பொங்கியவளாய் தோளைச் சிலுப்பிக் கொண்டு திரும்பி இரண்டெட்டு வைத்தவள் மீண்டும் ஒரு இடிச்சப்தத்தில், “ஆ ஆ ஆதித்தான்… ஆதித்தான்” என்ற அலறலுடன் ஓடி வந்து மீண்டும் ஆடவனின் நெஞ்சில் இடைவெளி இன்றிப் புகுந்து கொண்டாள் பெண்.
மனைவியின் அந்தச் செயலில் சற்று முன்னர் போலவே அன்னிச்சையாக அவளை அணைத்துக் கொண்டவனும், “ஹனீ இவ்ளோ பயமிருக்கப்போ எதுக்குடி உனக்கு இவ்ளோ வீம்பு” என்றபடியே அவள் என்னவென்று உணரும் முன்னே அவளைக் கரங்களிரண்டில் ஏந்திக் கொண்டவனுக்கு மனைவியின் இன்றைய செயல்கள் ஒவ்வொன்றும் அவனை மிச்சமின்றிச் சாய்த்திருக்க, திடீரென்று அந்தரத்தில் மிதக்கவும் தான் அவன் தன்னைத் தூக்கியிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியில் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு வெகு அருகில் தெரிந்தது என்னவோ ஆடவனின் கன்னம் குழிந்த புன்னகையும் காதல் ரசம் சொட்டும் கண்களும் தான்.
ஆடவனின் ஸ்பரிசம் கூட தோற்றுவிக்காத நாணத்தை கணவனின் காந்த விழிகளால் அளவில்லாது பெற்றுக் கொண்டவள், அங்கிருந்து விழிகளைத் திருப்ப முடியாமலும் தவித்தபடியே, “என்ன விடுங்க. நான் போணும்” என்று மட்டும் சொல்ல…
அவனோ, “இவ்ளோ நாள் எப்டியோ விட்டுட்டேன். ஆனா இனிமேல் ஒரு நிமிசம் கூட விட முடியாது ஹனி” என்று காதோரம் கிசுகிசுத்து அவளை சுமந்தபடியே நீள எட்டுக்களை வைக்கத் தொடங்கிவனின் குரலில் கரையில்லாக் காதலோடு கட்டுங்கடங்கா மோகமும் பெரும் குழைவைச் சேர்த்திருந்தது.
ஆடவனின் அந்தக் குரலும் அது கூறிய வார்த்தைகளுமே பெண்ணின் மேனியில் இனம் புரியா சிலிர்ப்பை உண்டாக்கி பலகோடி பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்பை ஆலிழை வயிற்றிக்குள் அறிமுகம் செய்ய கணவனைப் பார்க்க முடியாது விழிகளைத் தழைத்துக் கொண்டவள் அவன் நடையின் அதிர்வைத் தாங்காது பிடிமானத்திற்கு வேண்டி அவன் கழுத்தையும் கட்டிக் கொண்டதில் மேலும் மேலும் கிறக்கம் கூடிப் போனவனோ, “விடமாட்டேன் கண்மணி…” என்று பிடியில் மட்டுமல்லாது வார்த்தையிலும் கொடுத்த அழுத்தம் ‘இக்கணம் மட்டுமல்ல ஆயுள் உள்ள மட்டும் என் அணைப்புக்குள் உனை அடை காப்பேன்’ என்று சொல்லாமல் சொல்லி மங்கையவளின் ஊடலை தடமின்றி விரட்டி கூடலுக்கு விடுக்கும் அழைப்பாய் மாறியது.
தேக்கு மரத்துண்டை நினைவூட்டும் ஆடவனின் வன்கரங்களில் பூச்செண்டாய் கிடந்தவளை ஒற்றைப் பூவைச் சுமப்பது போல் மிகவும் இலகுவாக தூக்கிக் கொண்டு நடந்தவன் அவள் விழிகளில் நின்றும் தன் விழிகளை விலக்காமலே அறைக் கதவையும் தாண்டிபல வித மலர்ச்செடிகளின் அணிவகுப்போடு மேல் கூரையில்லாது மாடித் தோட்டம் போல் தோற்றம் அளித்த பால்கணியின் மறுகரையை நோக்கி நடந்தான் ஆதி.
அப்பகுதியை நெருங்கிய பின்னர் தான் மலர்க்கூட்டங்களின் நறுமணத்தில் சுற்றி முற்றிப் பார்த்தவள், “அய்யோ இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்கத்தான். இன்னும் இடி மின்னல் நிக்கலை. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. ப்ளீஸ் ரூம்க்கு கொண்டு போய் விட்டுடுங்களேன்” என்று இன்னமும் லேசாக உருட்டிக் கொண்டிருந்த வெட்டவெளி வானத்தைப் பார்த்தவாறு சொல்ல…
“நீதான ஹனி. மழைல நனையனும் டான்ஸ் ஆடணும்னெல்லாம் ரொம்ப ஆசைன்னு சொன்ன” என்றவன் இன்னும் சில பல எட்டுக்களை வைத்தான்.
அதில் அஞ்சன விழிகளை அச்சத்தால் நிரப்பியவள், “அது வந்து மழைல நனைய ஆசைதான். ஆனா இப்டி இடி இடிக்கிறப்போ நனைய வேணாமே. ரொம்ப பயமாயிருக்கு. ப்ளீஸ் உள்ள போயிரலாம் ஆதித்தான்”
என்று கெஞ்சல் குரலில் மறுத்துக் கொண்டே வந்தவளை “ஹனீ” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கியவன்,
“உன் ஆதித்தான் உன்னோட இருக்கப்போ ஆப்ட்ரால் இடிக்குப் போய் பயப்புடலாமா? உன்ன ஒன்னு நெருங்கணும்னா அது என்னதாண்டி தான் ஹனி உன்கிட்ட வரமுடியும்.
சோ… சில் இட் பேபி” என்றும் கூறியபடியே வெட்ட வெளியாய் இருந்த பால்கணிப் பகுதியை அடைந்தவன் மெல்ல மெல்ல அவளைக் கீழ் இறக்கி தன் கைவளைவிலே நிற்க வைத்தான் அவள் கணவன்.
காரிருள் கப்பிய மழைக் காலப் பொழுதில் சிறிதான நிலா வெளிச்சம் மட்டுமே ஒளியாகக் கொண்ட மழைக் காற்றோடு இணைந்து வந்த மண்வாசத்தோடு, மலர்களின் சுகந்த நறுமணமும் இணைந்திருந்த ஏகாந்த சூழலில் வெயில் மழை போன்ற இயற்கை வரங்கள் வீட்டிற்குள்ளும் வேண்டுமென்று துரவையாகக் கட்டப்பட்டிருந்த பால்கணியின் மறு பகுதியில் நின்றிந்தவர்களை சிறு சிறு துளிகளாய் தூரிக் கொண்டிருந்த மழை நீர் சுகமாய் நனைக்கத் தொடங்க, கூடவே இடியுடன் மின்னலும் பளிச்சென்று வெட்டி விட்டு மறைந்தது.
அதில், “ஆதித்தான்…” என்று மீண்டும் கண்களை மூடி விரல்களைப் பற்றியவளை,
“சில் ஹனி சில்…” என்று ஆற்றுப் படுத்தியவாறே அவள் கை விரல்களோடு தன் கை விரல்களைக் கோர்த்து கொண்டவன், “ஹனீ என்னப் பாருடா” என்று சொல்ல…
அவளோ, “ம்ஹூம் என்பது போல் வேகமாக தலையாட்டி மறுத்தாள்.
பூ ஒன்று காற்றில் ஆடியதைப் போல் இடம் வலம் அசைந்த மனைவியின் மறுப்பில் கூட மையல் கூடிப் போனவனாய் பெண்ணின் கன்னம் பற்றி இறுக்க மூடியிருந்த இமைகளின் மேல் இதழ்களை ஒற்றி எடுத்தவன், “தியாமா… இதுபோல சான்ஸ் எல்லாம் அமையறது ரொம்ப ரார் ஹனி. பீல் திஸ் எக்ஸலன்ட் மூமெண்ட்ஸ் ஸ்வீட் ஹார்ட். கண்ணத் திறந்து பாருடா. நோ பியர். ஓபன் யூர் ஐஸ் கண்மணி” என்றும் குழைந்த குரலில் கூற..
அவன் வார்த்தையும், முத்தமும் கொடுத்த திடத்தில் சட்டென்று விழிகளை விரித்து கணவனின் விழிகளோடு தன் விழிகளை பிணைத்துக் கொண்டாள் ராஹி.
அதற்கு அவனும், “குட் பேபி” என்று அவள் கன்னத்தில் தட்டியவன், “சுத்தியும் பாரு ஹனி மழை எவ்ளோ அழகா இருக்குன்னு. அது நம்ம மேல விழற அந்த மூமண்ட்ஸ் எவ்ளோ சில் இல்ல, அத பீல் பண்ணு ஹனி” என்று மழையோடு சேர்ந்து பெண்ணின் மலர் முகத்தையும் கரங்களில் ஏந்திச் சொல்ல…
அதில் மெல்ல மெல்ல பயம் விலக்கியவளும் விழிகளை மற்றும் சுழற்றி அந்த ஏகாந்த இரவின் மழைக் கணத்தை ரசித்து உள் வாங்க ஆரம்பித்தாள்.
மனைவியின் பார்வையில் ரசனை கூடியதும், “இந்த ப்ளான்டஸ் ப்ளவர்லாம் பாரு ஹனி மழைல நனைஞ்சு எவ்ளோ அழகா ப்ரஷ்ஷா இருக்கு. அப்டியே உன் கன்னம் மாதிரி. மழையோட மலர் சேந்து வர்ற அந்த ஸ்மெல் இதெல்லாம் நீ முன்ன ரசிச்சுருக்கியா” என்று தங்களைச் சுற்றி இருந்த அனைத்தையும் சுட்டிக் காட்டி, அவளின் இல்லை என்ற தலையாட்டலைப் பெற்றுக் கொண்டவன்
“நானும் இப்போதான் ஹனி இதெல்லாம் ரசிக்கிறேன். நீ பக்கத்துல இருக்கதால தான் எனக்கு எல்லாமே ரசனைக்குறியதா தெரியுது” என்று மழைநீரில் குளித்த பால்நிலவாய் நின்றிருந்த மனைவியின் வதனத்தைப் பருகியவாறே சொல்ல…
உடலைக் குளிரவிக்க வேண்டிய அந்த மழைநீரோடு இணைந்த இருவரின் நெருக்கம் அவர்கள் உள்ளத்தில் மாபெரும் உஷ்ணத்தையே பரவச் செய்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.