நான்கு வருடங்களுக்குப் பிறகான இனிமையான காலைப் பொழுதில் சுட்டெரிக்கும் முகிலவன் பூமியெங்கும் தன் ஒளியைப் பரப்பிக் கொண்டு எழும்ப சென்னை நீலாங்கரையில் இருந்த ஆதியின் வீடு மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.
வீட்டின் முன்னறையில் அஸ்வின் தம்பதியோடு, யுவாவின் மொத்தக் குடும்பமும் கூடியிருக்க ஆண்கள் ஒரு புறம் அமர்ந்து சுவாரசியமான உரையாடல்களில் இருக்க மதியும் மலரும் அனைவருக்குமான காலைக் காபியை தயாரித்து எடுத்து வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும்,
“மதி… ராஹிமா, சாஹிமா, பசங்க எல்லாரும் இன்னும் எழும்பலையா? பங்க்ஸன் சார்ப்பா லெவனோ கிளாக் ஸ்டார்ட் ஆகிடும்மா. லேட் பண்ணிடாதீங்க” என்று மனைவியைப் பார்த்து அஸ்வின் சொல்ல…
யுவாவும், “ஆமம்மா இங்க இருந்து டிராபிக்ல போகவே 2 அவர்ஸ் ஆகிடும். நாமளே லேட்டா போனா நல்லா இருக்காது.” என்று பெண்களைப் பார்த்துச் சொன்னவன், “சரிதான மச்சான்?” என்று அஸ்வினிடமும் சிரித்துக் கொண்டான்.
ஆண்களின் கூற்றிற்கு மதியும்,
“அப்பவே போன் பண்ணி ராஹிம்மாவ எழுப்பிட்டேங்க. மத்த எல்லாரையும் அவ கிளப்பிருவா சீக்கிரம் வந்துடுவாங்க அஸ்வி” என்று சொல்லியவாறே அஸ்வின், யுவா, தனா, கதிர் கரங்களில் தேநீர் கோப்பைகளை வைத்த மதி கூடவே நின்ற மலரின் கரத்தில் இருந்த காபி பால் அடங்கிய பிளாஸ்குகளையும் வாங்கி பணிப்பெண்ணிடம் கொடுத்து மேல் தளத்தில் வைத்து விட்டு வரப் பணித்தாள்.
பனிப்பெண்ணும் அதை ஏந்திக் கொண்டு ஆதித்யா ஆத்விக் தம்பதியர் இருக்கும் மூன்றாம் தளம் நோக்கிச் செல்ல அதைப் பார்த்திருந்த மலரோ, “நீங்க மருமகள்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கறீக அண்ணி. ரெண்டு பேரும் ரெண்டு ரெண்டு பிள்ளைகள வச்சிருக்காளுக. பசங்களுக்கு பாலும் மாப்பிள்ளைகளுக்கு காபியும் கூட வந்து எடுத்துட்டுப் போக மாட்டாளுகளா? விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் ரூம விட்டு வரல. இன்னமும் எல்லா வேலையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்றீக. வரட்டும் அவளுகள பேசிக்கிறேன்” என்று பெண்களைப் பெற்ற அன்னையாய் மகள்களின் மீதே குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
அதைக் கேட்டு சிரித்துக் கொண்ட மதியும், “மலர்… பொண்ணுங்கள அப்டிலாம் சொல்லாத. மாமியாருன்னா ரெண்டு கொம்பிருக்கா என்ன? நம்ம உயிரையே வச்சிருக்க மகனோட மனைவிய நாம ஏன் அந்நியமா நினைக்கணும்? மகனுல பாதிதானே அவங்க. ராஹிமா சாஹிமா ரெண்டு பேரையும் நான் எப்பவும் மருமகள்களா பாக்க மாட்டேன் மலர். அவங்களோட பசங்க பெரிசானாக் கூட அவங்க உனக்கு மட்டுமில்ல எனக்கும் பொண்ணுங்க தான். பொண்ணுங்களுக்கு வேலை பாக்க என்ன கணக்கிருக்கு” என்று சொல்லியவாறே காலை உணவுக்கு பணிப்பெண்ணை துரிதப்படுத்தியவள், “அதுமட்டுமில்ல, முன்னயாச்சும் நம்ம பொண்ணுக ஒரு ஒரு ஆளத்தான் சமாளிக்க வேண்டியிருந்துச்சு. ஆனா இப்போ கட்டுனது ஒன்னு பெத்தது ரெண்டுன்னு ஒரே மாறி மூனு பேர சமாளிக்கணும். மெதுவா வரட்டும்” என்று மலரையும் சமாதானம் செய்து மருமகள்களையும் விட்டுக் கொடுக்காது பேசியவள், அன்றும் இன்றும் என்றும் மருமகள் மெச்சும் மாமியாராகத் தான் வாழ்ந்து வருகிறாள்.
மதியின் பதிலில் புல்லரித்துப் போன மலரும், “என் பொண்ணுக ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க அண்ணி” என்று சிலாகித்துக் கூறியவள் மதியோடு இணைந்து காலை உணவு வேலையில் இறங்க அங்கே மாடியிலோ அவரவர் அறைகளில் அப்பொழுது தான் போர்வைக்குள்ளிருந்து துயில் கலைந்து எழுந்தனர் அவர்களின் பிள்ளைகளோடு பேரன் பேத்திகளும்.
கடந்த நான்கு வருடங்களில் அவர்களின் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது. ஆதி ஆத்விக், மற்றும் சாஹியின் தொழில் துறைகளிலும் பல வித ஏற்ற இரக்கங்கள் நிகழ்ந்திருக்க சொந்த வாழ்க்கையிலும் இரு ஜோடியும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆகி இருந்தனர்.
ஆதி ராஹி ஆசைப்பட்டது போல அவர்களுக்கு குட்டி தியா ஒன்றும் குட்டி ஆதி ஒன்றும் இரட்டையர்களாகப் பிறந்திருக்க, அவர்களின் மகிழ்ச்சியான காதல் வாழ்வில் அந்த மழலைகளின் வருகை மென்மேலும் பரவசத்தைச் சேர்த்திருந்தது.
சிறு ரோஜா மொட்டவிழ்ந்தது போல் அன்னையும் தந்தையும் உரித்து வைத்துப் பிறந்திருந்த மூத்தோர்களின் மகவுகளைப் பார்த்த ஆத்விக் தம்பதியும் இனியும் பிள்ளைப் பேரைத் தள்ளிப் போட மனமில்லாது தொழில் வளர்ச்சி கருதி எடுத்திருந்த முடிவை கடலில் போட்டு விட்டு, அடுத்த பத்து மாதத்தில் அவர்களும் இரட்டைப் பெண்களை ஈன்றிருக்க, அவ்வீட்டில் குதூகலத்திற்கோ குறைவில்லாது போனது.
கைபேசியின் மெலிதான சினுங்களில் சட்டென்று விழித்து விட்ட ஆத்விக் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு வேகமாக அதை உயிர்பித்து செவியில் பொருத்தியவன் அந்தப்புறம் பேசிய குரலுக்கு, “ம்ம்ம் சரி ராஹி ஞாபகம் இருக்கு சீக்கிரம் கிளம்பிர்றோம்” என்று பதில் கூறிவிட்டு வைத்தவன் வேகமாக குளியலறைக்குள்ளும் புகுந்து கொண்டான்.
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவன் அப்பொழுதும் ஆழ்ந்து தூங்கிய மனைவியைப் பார்த்து, “ரொம்ப டையர்டா இருக்காளே” என்று அவள் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டு, அவளருகில் உறங்கிக் கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகளை கைக்கொன்றாய் தூக்கிக் கொண்டு அறையை ஒட்டி இருந்த குழந்தைகளின் அறைக்குள் வந்தவன், “குட்டிகளா முழிச்சிக்கோங்கடா. கொஞ்ச நேரத்துல எல்லாரும் டுர்றா போகப்போறோம்” என்று எழுப்பி பல்துலக்கி குளிக்க வைத்தவன் அவர்களுக்கு பாலும் பிஸ்கட்டும் கொடுக்க, பல நேரங்களில் தந்தை உருவிலே அன்னையைக் கண்ட இரண்டரை வயதுப் பிஞ்சுகளும் சமத்தாக தகப்பன் சொல்படி கிளம்பி இருந்தனர்.
நேற்று எல்லாருமாகச் சென்று வாங்கி இருந்த பாபிடால் போன்ற அழகிய உடைகளையும் அவர்களுக்கு அணிவித்து விட்டவன் மகள்களின் கன்னத்தில் சில முத்தங்களும் இட்டு கையிலிருந்த பொம்மை குஷிப்பின்னைப் பார்த்து, “இத எப்டிடா மாட்டுறது” என்று புரியாது விழிக்க…
அவர்களும் தந்தைக்கு பதில் முத்தம் கொடுத்தவர்கள், “டாடி ராஹிம்மாக்குத் தெரியும். ராஹிம்மாட்ட போறோம்” என்று மட்டும் சொல்லி ஆத்விக்கின் கையிலிருந்ததைப் பரித்துக் கொண்டு அறையிலிருந்து சிட்டாக ஓடி விட்டனர்.
ஓடும் சிட்டுக்களைப் பார்த்து,
“நாலும் சேந்து அண்ணா அண்ணிய ஒரு வழி பண்ணப்போதுக” என்று சிரித்துக் கொண்ட ஆத்விக்கும், ‘என்னிக்கோ ஒரு நாள் இதெல்லாம் பண்றதுக்கே நாக்குத் தள்ளுதே. உண்மையிலே லேடிஸ்லாம் பாவந்தான்” என்றும் சொல்லிக்கொண்டவாறே படுக்கையை நெருங்கினான்.
அங்கே இன்னும் கூட உறங்கிக் கொண்டிருந்த சாஹியைப் பார்த்து விட்டு சுவரில் இருந்த கடிகாரத்தையும் பார்த்தவன், “சாரி பேப்” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றியவாறு அவளருகில் அமர்ந்து மெதுவாக,
“சாஹி பேப். எழுந்துக்கோடா” என்று எழுப்பத் தொடங்க…
அவளோ, “இன்னும் டூ மினிட்ஸ் ஆது மாமா” என்று உருண்டு வந்து அவன் மடியிலே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
குளித்து விட்டு வந்திருந்தாலும் அவனுக்கும் உடை மாற்றிக் கிளம்பும் வேலை பாக்கி இருக்க, மடியில் தலை வைத்து மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்த மனைவியின் நெருக்கத்தில் வேறு சிறு தவிப்பை உணர்ந்தவன்,
“டீ சாஹி… நைட் ரொம்ப நேரம் முழிச்சு வேலை பாக்காதன்னு இதுக்குதான் சொன்னேன். இப்போப்பாரு எவ்ளோ கஷ்டப்படுற” என்று கடந்த நான்கு வருடங்களாய் அவளுக்குப் பிடித்த துறையில் மனைவியின் அயராத உழைப்பை கண்ணுற்றவனாய் கடிந்து கொண்டவன், “ஆனா நீ இப்போவே எழுந்து தாண்டி ஆகணும். இன்னிக்கு நம்ம வர்மா குரூப்ஸ்கு சி எம் தலைமைல பாராட்டு விழா பங்க்சன் இருக்கு மறக்கலை தானே” என்று அவள் சிகையைக் கோதிக் கொடுத்தவாறு சொன்னதும், “ஆமால்ல” என்று சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்தவள், “ஆத்வி பேபிஸ் எங்க?” என்றும் படுக்கையை தடவியவாறு கேட்க…
அவனும், “அவங்கல்லாம் எப்போவே ரெடியாகி ராஹிட்ட ஓடியாச்சு. பேபிஸோட மம்மி தான் டர்ட்டி பேபியா படுத்துருக்காங்க” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “ஹரியப் பேபி நானும் டிரஸ்சேஞ் பண்ணனும்” என்று மீண்டும் எழுப்பினான்.
அப்பொழுது தான் அவனும் குளித்து முடித்து அமர்ந்திருப்பதைப் பார்த்தவள் மகவுகளையும் அவனே கிளப்பி இருப்பான் என்றும் அனுபவத்தில் கண்டு கொண்டு, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஆத்வி. எவ்ளோ ஹஸ்பண்ட் ஒயிப்கு இவ்ளோ சப்போர்ட்டா இருப்பாங்க. உங்களோட சப்போர்ட் இல்லன்னா நான் நான் ஒன்னுமே இல்ல” என்றும் சற்றே குரல் நெகிழ கணவன் கரத்தைப் பற்றி முத்தமிட்டுச் சொல்ல…
அதற்கு அவனோ, “ஆமடி இப்போ இப்டி பேசு. நைட் மட்டும் சிஸ்டம் முன்னாடி உக்காந்துக்கோ. உன்ன முழுசாப் பாத்து நாலு நாளாச்சுடி” என்று சலித்துக் கொண்டாலும் அவளுக்கு பதில் முத்தங்களை நெற்றி கன்னம் என்று ஒற்றி ஒற்றி எடுத்தான் ஆத்விக்.
கணவன் கேலி போல் சொன்னாலும் அதில் உண்மையும் இருப்பதை உணர்ந்து கொண்டவள், “ஆதுமாமா பங்க்ஸன் எத்தனை மணிக்கு?” என்று அவன் மடியில் இருந்து தலையணைக்கு இடம் பெயர்ந்தவள் சுவரில் இருந்த கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டாள்.
அவனும், “லெவன் தேர்ட்டிக்கு சிஎம் வந்துருவாராம் அதுக்குள்ள நாம அங்க இருக்கணும் சாஹிமா. ஏன் கேக்குற இன்னொரு ரவுண்ட் தூங்கப் போறியா?” என்று கேட்டு முடிக்கும் முன் அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள், “ம்ஹூம். இப்போதான் பஸ்ட் ரவுண்டே ஸ்டார்ட் பண்ணப்போறேன்” என்று அவன் காதில் மேலும் ஏதோ சொல்ல…
அதற்கு அவனோ, “அச்சோ இப்பவா வேணாண்டி. நான் ஆல்ரெடி குளிச்சிட்டண்டி” என்று தொடங்கியவனின் இறுதி வார்த்தைகளை தன் இதழ்களுக்குள் வாங்கி இருந்தவள், அடுத்து வந்த மணித்துளிகளுக்கு கணவனைக் காதலாலே தாங்கி இருந்தாள்.
அங்கே ஆதியின் அறையில் மதி கைபேசியில் அழைக்கும் முன்னேயே எழுந்து குளித்துத் தயாராகி இருந்த ராஹிக்கு உள்ளமெல்லாம் அத்துணை பூரிப்பு பொங்கி வழிந்தது.
பின்னே அவர்களது வர்மா குழுமத்திற்கு சிஎம்மின் முன்னால் சென்னையிலே சிறந்த குழுமம் என்ற பாராட்டு விழாவோடு கூடிய பரிசளிப்பிற்கு தமிழகஅரசு சார்பாக அழைப்பு செய்திருக்க, அதை எண்ணி எண்ணி பூரிக்காமல் இருக்க முடியுமா குடும்பத்தை நேசிக்கும் பெண்ணால்.
ஏற்கனவே அவர்களின் வர்மா குழுமத்தில் இருந்த தொழில்களோடு கடந்த நான்கு வருடங்களில் சாஹி தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஐடி அலுவலகமும் இணைந்திருக்க, மதி மற்றும் ராஹியின் ஆசைப்படி அனைத்து வருமானங்களிலும் சிறு தொகை ஒதுக்கப்பட்டு பெரிய அளவிலான “தியா சாரிடபில் ட்ரஸ்ட்” என்ற உதவிக் காப்பகமும் அந்த வர்மா குழுமத்தின் கீழ் திறம்பட இயங்கிக் கொண்டிருந்தது.
அத்தோடு ஆதியின் ரேஸ் கார்கள் தயாரிப்பும் பல கிளைகளாய் விரிந்து அசுர வளர்ச்சி அடைந்திருக்க, ஆத்விக்கும் தந்தையுடன் இணைந்து ஜவுளி உற்பத்தியில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றதோடு மனைவிக்கு அவ்வப்பொழுது உதவிகளும் செய்து வந்தான்.
வெளிப்பார்வைக்கு அனைத்தும் ஒரே குடையின் கீழ் இருந்தாலும் அவரவர்களுக்கென்று ஒதுக்கி இருக்கும் தொழில் மற்றும் பணிகளில் அவர்களின் விருப்பமின்றி மற்றவர் தலையிடக் கூடாது என்ற எழுதப்படாத சட்டமும் ஆதியின் ஆலோசனைப்படி விதித்திருக்க, அனைவரும் எந்த மனக்கசப்பும் இன்றி ஒற்றுமையாக வேலை செய்யவும், அவரவரின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணரவும் அந்த முடிவு மிகவும் உறுதுணையாக இருந்தது.
அப்படி அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்கும் வர்மா குழுமத்தின் உதவி காப்பகமும் சென்னையில் மிகவும் பிரபலமடைந்து அதனால் பல ஏழை எளிய மக்கள் பெருமளவில் நலன்கள் அடைந்திருக்க, சில நாட்கள் முன்னே தான் அவர்கள் குடும்பத்தை பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகி அவர்களை அறியாதோரைக் கூட சபாஷ் போட வைத்தது.
அதைப் பார்த்து விட்டுத் தான் அனைத்திற்கும் சேர்த்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் பாராட்டும் பொருட்டு அனைத்திலும் சிறந்து விளங்கும் குழுமம் என்ற பட்டமும் கொடுக்க, சிஎம்மின் தலைமையில் ஏற்பாடு செய்திருக்க, அந்த விழாவிற்குச் செல்வதற்காகத்தான் அஸ்வினின் வீட்டில் இன்று அனைவரும் ஆரவாரத்தோடு கிளம்பிக் கொண்டிருக்க, இத்துணை பெருமைக்கும் முக்கிய காரணமாய் ஒவ்வொன்றிற்கும் காரண கர்த்தாவாய் முன்னின்று அனைவரையும் வழி நடத்திச் செல்லும் கணவனையும் எண்ணி மேலும் மேலும் முகம் விகசித்தபடி குளித்து முடித்து வெளியே வந்தாள் ராஹித்தியா.
மனைவி தன்னை விட்டு எழுந்து சென்ற சிறிது நேரத்தில் எல்லாம் விழிப்புத் தட்டி விட்டாலும், அவள் குளியலறைக்குள் இருப்பதை உணர்ந்து சற்றுத் தள்ளி கனமான திரைக்குப் பின்னே இன்னொரு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரட்டை மகவுகளையும் துயில் களையாது தூக்கி வந்து சிறு சிறு முத்தங்கள் இட்டவாறே மார்பில் போட்டுக் கொண்ட ஆதி மீண்டும் துயிலுக்கு ஆயத்தமாக, அப்பொழுது தான் குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வந்து கண்ணாடியின் முன்னே சென்று நின்ற ராஹியின் முகமோ முழுமதியாய் ஒளிர்ந்திருந்தது.
நினைத்துக் கூடப் பார்க்காத நான்கு வருட மகிழ்ச்சியான வாழ்வோடு கணவனின் கரையில்லாக் காதல் கொடுத்த பூரிப்பும் தங்கள் ஆசைபோலவே இரட்டை மகவுகள் ஈன்றிருக்கும் பரவசமும் சேர்ந்து கண்ணாடியின் முன்னே நின்ற பெண்ணவளை பேரழகியாய் காட்டியிருக்க அவளை அப்படிப் பார்த்தப் பின்னும் மீண்டும் உறக்கம் வருமா ஆடவனுக்கு.
தாமரை மொட்டு வண்ணத்தில் பலவித குந்தன் வேலைபாடுகள் செய்யப்பட்ட டிசைனர் புடவையை உடலைச் சுற்றி நேர்த்தியாய் கட்டியிருந்தவள், கணமான தாலிச்சரடோடு முதல் கல்யாண நாள் அன்று கணவன் அணிவித்து விட்ட பிளாட்டினம் செயின் மட்டும் பவளக் கழுத்தை அலங்கரித்திருக்க, தலையில் சுற்றிய துவாலையோடு எவ்வித ஒப்பனையும் இல்லாது கண்ணாடியின் முன்னே நின்று உச்சி வகிட்டில் திலகம் இட்டுக் கொண்டிருந்தவளை அவள் கணவனோ வைத்த கண் வாங்காது பார்த்திருக்க கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில் கணவனின் பார்வையை உணர்ந்த பெண்ணிற்கோ கன்னங்கள் செம்மையுற்று அவளை மேலும் மேலும் பூலோக தேவதையாய் உறுமாற்றத் தொடங்கியது.
மனைவியைப் பார்த்ததும் மார்பில் கிடந்த மகவுகளை அழுங்காது படுக்கையில் கிடத்தியவன் ஐந்தடி தொலைவில் கண்ணாடியின் முன்னே அமர்ந்திருந்தவளை இரு கைகளையும் மடித்துத் தலைக்கடியில் வைத்துக் கொண்டு உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் ரசித்திருந்தவன், “ஹனீ” என்று கிறக்கமாய் அழைக்க…
அந்த அழைப்பே சொல்லியது அவன் நேசத்தின் ஆழம் இன்னும் இன்னும் அதிகரித்து இருப்பதை.
கணவனின் அந்த அழைப்பில் கன்னங்களோடு உள்ளமும் குளிர கண்ணாடியூடே அவனைப் பார்த்து
‘என்ன’ என்பது போல் புருவத்தைத் தூக்கியவளின் செயலில் மேலும் தலைகுப்புற விழுந்தவன், உதடு குவித்த முத்தம் ஒன்றைப் பறக்க விட்டு கண்ணாலும் ‘வா…’ என்று அழைக்க, அதைப் பார்த்தவளுக்கோ வழக்கம் போல் பட்டாம்பூச்சிகள் அணிவகுக்கத் தொடங்கியது ஆழிலை வயிற்றிக்குள்.
இருந்தும் அவன் செயலைக் காணாதவள் போல அங்கிருந்து எழும்பாது தலையில் சுற்றியிருந்த துவாலையை அவிழ்த்து தலை துவட்டத் தொடங்கியிருந்த மனைவியின் செயலில் சிறு முறைப்பைச் சிந்தியவன் இப்பொழுது சற்றே உரத்த குரலில், “ஹனீ இங்க வாடீ” என்று அழைத்த அந்தக் குரலிலோ கோபத்திற்குப் பதிலாக தாபமே அதிகமாக வெளிப்பட்டது.
அதைக் கண்டு கொண்டவளோ அப்பொழுதும் அசையாது அமர்ந்திருக்க, அதைப் பார்த்து மேலும் சினம் கூடிப் போனவன் சட்டென்று கட்டிலை விட்டு இறங்கி ஈரெட்டில் அவளை நெருங்கியவன், “தியா நான்தான் கூப்டிட்டே இருக்கேன்லடி. வரமாட்டியா” என்று பல்லைக் கடிக்க முயன்று தோற்றவனாய் அவள் தோள்களைப் பற்றித் தூக்கியவன் அடுத்த நொடி அவளை இறுக அணைத்து காது மடலை இதழ்களால் வருட ஆரம்பித்தவனின் கரங்களும் பெண்ணின் மேனியெங்கும் வஞ்சமின்றி ஊர்வலம் செல்லத் தொடங்கியது.
கணவனின் கரங்களில் துவளத் தொடங்கிய ஊனையும் உள்ளத்தையும் இழுத்துப் பிடித்த ராஹி, “வ்வ்விடுங்க என்ன. நான் கோவமா இருக்கேன்” என்று அவனை உதறித் தள்ளியிருக்க…
அதில் உணர்ச்சிகள் அறுபட்டு அவள் முகத்தை ஏறிட்டவன், “ஏண்டி மறுபடியும் முதல்ல இருந்தா? அதான் நைட்டே எல்லாம் சால்வ் ஆகிடுச்சுல்லடி” என்று ஆதங்கமாகக் கேட்டான் ஆதி.
அதில் அவனை முறைத்துப் பார்த்தவளும், “என்ன சால்வ் ஆச்சு? நேத்து நான் கேட்ட ஆரஞ்சு மிட்டாய வாங்கிட்டு வராததோட நான் குண்டாயிட்டன்னும் சொல்லி என் கோவத்தை கிளப்பிவிட்டு நான் பதிலுக்கு சண்டை போடுறதுக்கு முன்னவே ஏதேதோ செஞ்சு என்ன ஆப் பண்ணிட்டிங்க” என்று சற்று காட்டமாகவே தொடங்கியவளின் குரல் அவன் நேற்றைய இரவில் என்னவெல்லாம் செய்து அவள் வாயை அடைத்தான் என்ற நினைவில் சுரத்தின்றி முடிய…
சடுதியில் நிறம் மாறிய மனைவியின் கன்னங்களில் இருந்தே அவளைக் கண்டு கொண்டவனுக்கும் அந்த நினைவுகள் சூழ்ந்து உடல் சிலிர்த்து அவளை மீண்டும் இழுத்து கைவளைவில் அடக்கியவன், “டேய் தியாமா… சொன்னாலும் சொல்லாட்டியும் நீ கொஞ்சம் சப்பியா தாண்டி இருக்க. அதான் டெய்லி இனிப்பு சாப்பிட வேணாம்னு நேத்து மிட்டாய் வாங்காம வந்தேன் அது ஒரு குத்தமா?” என்று தன்னிலை விளக்கம் கொடுத்து பாவமாக மனைவியின் அதரங்களைப் பார்த்தான் ஆதி.
யாருக்கும் அடங்காத கட்டிளம் காளையையே தன் காதலில் கட்டிப் போட்டு வைத்திருந்த ராஹியோ அப்பொழுதும் சமாதானம் ஆகாமல், “பாத்திங்களா பாத்திங்களா இப்பவும் என்ன குண்டுன்னே சொல்றீங்க. இதுக்காகவே எனக்கு இப்போவே ஆரஞ்சு மிட்டாய் வேணும். நான் அது சாப்டு சாப்டு இன்னும் குண்டாவேன். உங்களுக்கு குண்டுப் பொண்ணு பிடிக்காட்டி என்கிட்ட வராதீங்க” என்று சிறு பிள்ளை போல் வீம்பு செய்தவளை கடித்து உண்பதைப் போல் பார்த்து வைத்தவன்…
“ஹனீ… உன்கிட்ட வராமையா? அது முடியுமா என்னால?” என்று அவள் இடையை பிசைந்தபடி கிறக்கமாகக் கேட்டவன், “சென்னைலயே எவ்ளோ பெரிய ட்ரஸ்டோட நிர்வாகி நீ. ஆப்ட்ரால் ஆரஞ்சு மிட்டாய்க்காக புருஷன இப்டிக் கெஞ்ச விடுறது நியாயமே இல்லடி. இன்னிக்கு நைட் நிறைய வாங்கிட்டு வர்றேன்டி. இப்போ கொஞ்சம் பாவம் பாருடி” என்று பச்சைப் பாலகனாய்க் கேட்டு அவள் இடையில் இருந்த கரத்தை இதழ்களுக்குக் கொண்டு வந்து அவளை மென்மேலும் கிறக்கத் தொடங்கினான் அவளவன்
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.