ஆடவனின் அதிரடியை விட தன் ஒற்றை முத்தத்திற்கு ஏங்கி நிற்கும் கணவனின் இது போன்ற செய்கைகளில் உருகிக் கரையத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்தவாறே, “ம்ம்ஹும்… போங்க ஆதி. நைட் மாறி இப்போ என்ன ஏமாத்த முடியாது. ட்ரஸ்ட் நிர்வாகியா இருந்தா ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடக் கூடாதா?. அதோட டேஸ்ட்டே டேஸ்ட்டு தான்.” என்று நாக்கில் எச்சில் ஊற சொன்னவள், “இப்போ ஆரஞ்சு மிட்டாய பஸ்ட் குடுங்க. ஹனி அப்றம் தான் உங்களுக்கு ஹனி கொடுப்பா” என்று தலையைச் சிலுப்பி திரும்பிக் கொண்ட ராஹிதான் ஆதி சொன்னது போல நான்கு வருடங்களுக்கு முன்னால் வர்மா குழுமத்தின் ஒரு அங்கமாக அவள் பெயரில் ஆரம்பித்துக் கொடுத்திருக்கும் உதவிக் காப்பகத்தை மதியின் உதவியுடன் திறமையாகவே நடத்தி வருகிறாள்.
இதுபோல சேவை மற்றும் உதவிப் பணிகளில் தான் மனைவிக்குப் பிடித்தமும் திருப்தியும் என்று உணர்ந்து கொண்டவன், அவள் பெயரில் தொடங்கியிருக்கும் உதவி மையத்திற்கு தந்தையோடு சேர்ந்து தன்னால் முடிந்த உதவிகள் செய்து அவளுக்கு பக்க பலமாக இருப்பவன் அவள் முன்பு வருவதாகக் கூறியிருந்த வாரத்தின் இரு நாட்கள் கூட அவளைத் தன் அலுவலகம் அழைப்பதே இல்லை.
ராஹிக்கும் உதவி மையத்தின் பணிகளே சரியாக இருக்க, தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் அன்றைய நாளின் நிகழ்வுகளை மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு அவளுடன் உரையாடுவதை மட்டும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் ஆதி.
அதற்கு ராஹியும், “பிஸ்னஸ் பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதுங்க என்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க ஆதித்தான்?” என்று கேட்டாலும்…
“பிஸ்னஸ்பத்தி தெரியாட்டியும் பரவாயில்ல. என்னப் பத்தின எல்லாமும் உனக்குத் தெரிஞ்சிருக்கணும் ஹனி” என்று அவள் வாயை அடைத்து விடும் கணவனுடனான உரையாடல் நிறைந்த சந்தர்ப்பங்கள் அவர்கள் வாழ்வில் மென்மேலும் காதலையும் புரிதலையும் அதிகப்படுத்தி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
நேற்று வாங்கி வராத ஆரஞ்சு மிட்டாயை இப்பொழுது கொடுத்தால் தான் நீ விரும்புவதை நான் கொடுப்பேன் என்று கணவனிடமே கரராய் சொல்லி கழுத்தை வெட்டித் திரும்பிக் கொண்டவளின் கன்னம் பற்றித் தன்னைப் பார்க்கச் செய்தவன்,
“தியா… சோதிக்காதடி. இந்நேரம் ஆரஞ்சு மிட்டாய்க்கு நான் எங்கடி போவேன். பெரிய மனசு பண்ணி டூ மினிட்ஸ் ஹனி கொடுடி போதும். பசங்க வேற முழிச்சுப்பாங்க. சீக்கிரம்டி” என்று வரண்டிருந்த தன் இதழ்களை நாவால் வருடிக் கொண்டவன் பெண்ணின் இதழ்களையும் கீழ் மேலாகத் தடவ,
அதில், “ம்ஹூம்” என்ற பெண்ணின் இதழ்களோ விரிந்து விரிந்து மூடி அவன் கேட்ட இதழ்த் தேனை அளவில்லாது கொடுக்கத் தயாராகி நின்றது.
குளிரூட்டப்பட்ட படுக்கை அறைக்குள் அப்பொழுது தான் குளித்து முடித்து நிற்கும் பெண்ணின் கமல வாசனையில் அவனும் வெற்று மார்பில் வியர்வைத் துளிகள் மின்ன தனை இறுக்கி இருந்தவனின் ஆளுகையில் அவளும் உருகிக் கரைந்திருக்க…
மனைவியின் வார்த்தைக்கு மாறாக அவள் கண்கள் சிந்தும் மையலிலே தன்னை முற்றும் முழுதாய் தொலைத்தவன், “ஹனீ உனக்கு இப்போ ஆரஞ்சு மிட்டாய் தான வேணும்” என்று அவள் கன்னமிரண்டும் உள்ளங்கையில் ஏந்த…
அதற்கு “ம்ம்ம்…” என்ற ஒற்றை முனகலை மட்டுமே வெளியேற்றிய பெண்ணோ கணவனின் கருத்தடர்ந்த மீசைக்கடியில் நெளிந்த அதரங்களிலே பார்வையை நிலைக்கவிட்டு எச்சில் கூட்டி விழுங்கி அவளது தேவை என்ன என்பதை அப்பட்டமாக உணர்த்தினாள்.
பெண்ணின் அந்தச் செயலில் அவன் இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறக்க, “ஆரஞ்சு மிட்டாய் இங்கிருக்கு ஹனி. எவ்ளோ வேணுமோ எடுத்துக்கடி” என்று தன் அதரங்களை தொட்டுக் காட்டிச் சிரித்தவாறே சட்டென்று அவள் இதழ் நோக்கிக் குனிந்த சமயம்…
“எங்களுக்கும் வேணும் ஆரஞ் முட்டாய்” என்ற கூச்சலோடு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பெற்றோரையே பார்த்திருந்தனர் அவர்களின் இரட்டை மகவுகள்.
மழலைகளின் குரலில் தூக்கிப் போட்டு விலகியவர்கள் அனைத்தும் மறந்து விட்டு அவர்களை நோக்கி ஓடி ஆளுக்கொரு பிள்ளையை தூக்கிக் கொள்ள அன்னை தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்ட மகவுகளோ,
“டாடி… எங்களுக்கும் ஆரஞ் முட்டாய் வேணும்” என்று தகப்பனிடம் கேட்க அதில், “மிட்டாயா? அது வந்து வந்து” என்று அசடு வழிய நின்ற ஆதி, “ஏதாச்சும் பண்ணுடி” என்று மனைவியைப் பார்த்தான்.
அதற்கு அவளும், “உங்களுக்கு நல்லா வேணும்” என்பது போல் கணவனை முறைத்து வைத்தாலும் மீண்டும் மீண்டும் மிட்டாய் கேட்ட மகவுகளை சமாதானம் செய்யும் பொருட்டு, “பாப்புவும் தம்புவும் பஸ்ட் சமத்தா பிரஸ் பண்ணி, பாத் பண்ணி ரெடியாவீங்கலாம். டாடி அப்றம் நிறைய மிட்டாய் தருவாங்கலாம். நாம இன்னிக்கு எல்லாரோடவும் வெளிய வேற போகப் போறோமே குட்டிகளுக்கு தெரியும் தானே” என்றும் சொல்லிக் கையை நீட்ட அவர்களும், “மம்மிமா, க்ரேண்பா, சாஹிமா பாப்பா, எல்லாமா போறோம்?” என்று கேள்விக் கணைகளை அடுக்கியபடியே மிட்டாயை மறந்து அன்னையிடம் தாவினர்.
ராஹியும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே ஆதியை உரித்து வைத்திருந்த மூன்றேகால் வயது மகனையும், தன்னைப் போலவே பிறந்திருந்த அதே வயது மகளையும் குளிக்க வைத்து ஆயத்தமாக்கும் வேலையில் இறங்க, ஆதியும் அவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று மகவுகளோடு மனைவியையும் கொஞ்சிக் கொஞ்சியே ஒரு வழியாக்கி விட்டான்.
தங்கள் மூவரோடும் ஒட்டிக் கொண்டு திரிந்த கணவன் மழலைகள் அறியாது செய்த சில்மிஷங்கள் தாங்காத ராஹியோ, “அய்யோ ஆதித்தான் நீங்க ஹெல்ப் பண்ணவர போதும். போய் குளிச்சு நீங்களும் ரெடியாகுங்க. பங்க்ஸனுக்கு டைம் ஆச்சு” என்று பிடித்துத் தள்ளாத குறையாய் அவனை குளியலறைக்குள் அனுப்பி வைக்க…
அவனும் அவள் இதழ்களையே ஏக்கமாகப் பார்த்து விட்டு உள்ளே சென்று சப்தமாக கதவை அடைத்துக் கொண்டான் ஆதி.
அடித்துச் சாற்றப்பட்ட குளியலறைக் கதைவைப் பார்த்து இதழ் பிரித்துச் சிரித்துக் கொண்ட ராஹியும் மகவுகளுக்கு எஞ்சிய வேலைகளைச் செய்ய அச்சமயம் ஆத்விக் சாஹியின் மகவுகளும், “ராஹிம்மா நாங்களும் டுர்றாக்கு எடியாகிட்டோம்” என்றபடியே உள்ளே வந்து சேர்ந்தனர்.
“சமத்துடா தங்கங்களா? குட்டிமாஸ் இந்த டிரஸ்ல பொம்மக் குட்டி மாறி கியூட்டா இருக்கீங்களே!” என்று தங்கையின் மகள்களைத் தூக்கிக் கொஞ்சியவள் மழலைகள் நால்வரையும் தயார் படுத்தி முடித்து அவளும் கூந்தலைப் பின்னலிட்டு மல்லிச் சரங்களைத் தொங்க விட்டு, புடவைக்கு ஏற்றவாறு சிறு சிறு ஆபரணங்கள் அணிந்து ஆயத்தமாகி நிற்க, ஆதியும் விழாவிற்குச் செல்ல ஆயத்தமாகி அவர்களை நோக்கி வந்தான்.
கருநீல வண்ண த்ரீ பீஸ் உடையில் கம்பீரமாய் தங்களை நெருங்கிய கணவனை ஓரக்கண்ணால் ரசித்தவாறே, “போலாமா ஆதித்தான்?” என்று விட்டு ராஹி பிள்ளைகளோடு அறைவாயிலை நோக்கி நடக்க, “தியா ஒரு நிமிஷம்டி” என்று அசைந்தாடிச் செல்லும் மனைவியின் பின்னலைப் பிடித்து இழுத்திருந்தான் அவள் கணவன்.
அவன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சில் மோதி நின்றவளின் கையை இறுகப் பற்றிக் கொண்டவன், “ஹனீ… ஆரஞ்சு மிட்டாய் கேட்டில்லடி வாங்காம போனா எப்படிடி?” என்று அவள் இதழ்களையே பார்க்க அதில் சட்டென்று நிறம் மாறி நிமிர்ந்தவளும், ‘அச்சோ என்னங்க இது? பசங்க இருக்காங்க’ என்பது போல் தவிப்பாய் கணவனை ஏறிட அதற்குள் அவர்களைச் சூழ்ந்து கொண்ட நான்கு மகவுகளும், “எங்களுக்கும் மிட்டாய் வேணும். எங்களுக்கும் வேணும்” என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதில் ராஹி தவிப்புப் பார்வையை முறைப்புப் பார்வையாய் மாற்றி கணவனை ஏகத்துக்கும் முறைக்க, அந்தப் பிடிவாதக்காரனோ ‘இதற்கெல்லாமா அசருவேன்?’ என்ற ரீதியில் பார்வையில் இன்னும் கொஞ்சம் ரசனையைச் சேர்த்திருந்தான்.
கணவனின் பார்வையிலும் பிடியிலும் இருந்து மீள முடியாதவள் தங்களைச் சுற்றி நின்ற பிஞ்சுகளைப் பார்த்து, “பாப்பூஸ் எல்லாரும் போய் மம்மிம்மா கிட்ட சமத்தா இருப்பிங்கலாம். நான் டாடிகிட்ட இருந்து மிட்டாய் வாங்கிட்டு பின்னாடியே வருவேனாம்” என்று பணிப்பெண்ணை அழைத்து பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு, “ஆதித்தான்…” என்று பல்லைக் கடித்தவாறே அறைக்குள் நுழைந்தவள் அடுத்த கணம் அந்தரத்தில் மிதந்திருந்தாள்.
மனைவி உள்ளே வந்த நொடி அதற்காகவே காத்திருந்தவன் அவளை அலேக்காகத் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி இறக்கியவனைப் பார்த்து, “ஏன் ஆதி இப்டிலாம் பண்றீங்க? பொண்டாட்டிய கொஞ்சறதுக்கு உங்களுக்கு நேரம் காலமே இல்லியா?” என்று சலித்துக் கொண்டாலும் கரங்களை அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்து பார்வையில் எதிர்பார்ப்புக் கூட
அவனைக் கட்டிக் கொண்டு நின்றாள் ராஹித்தியா.
வார்த்தையில் இருந்த சலிப்புக்கு மாறாக தன்னோடு இழைந்து நின்ற மனைவியைப் பார்த்து, “பொண்டாட்டி இவ்ளோ அழகா, காதல் வழிய நின்னா நேரமும் காலமும் எவண்டி பாப்பான்?” என்று அவளின் கன்னங்களை ஏந்தியவன், “சமத்து பிள்ளையா நின்னு ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டு அப்றம் எங்க வேணா போ…” என்று பெண்ணின் இதழ்களை தன் வசப்படுத்தியவன் போதும் போது மட்டும் அவள் கேட்ட மிட்டாயை ஊட்டி விட்டு. அவனுக்குத் தேவையான இதழ் தேனையும் வேணும் வேணும் மட்டும் பெற்றுக் கொண்டே அவளை விடுவிக்க, “ஸ்ஸ்ஆஆ…” என்றபடி அவனை விட்டு விலகியவளும், “ஆரஞ்சு மிட்டாய் தானே தர்றேன் சொன்னிங்க அப்றம்… கை ஏன் இங்க போகுது?” என்று கசங்கியிருந்த இடைச் சேலையை சரி செய்து கொண்டாள் ராஹி.
அதற்கு அவனும், “ஒரு க்ரிப்புக்குப் பிடிச்சேன்டி பழகிடுச்சு” என்று கண்ணைச் சுருக்கிச் சொன்னவன், “அழுத்திப் பிடிச்சிட்டானா ஹனி? வா பாக்கலாம்” என்று மீண்டும் அவள் இடையை வளைத்து தன்னோடு இறுக்க முனைய…
“அய்யோ போதும். ஆல்ரெடி ரொம்ப லேட் ஆச்சு எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க ஆதித்தான். வாங்க போலாம்” என்றபடியே கணவனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கீழே சென்றாள் ராஹி.
அவர்கள் கீழே செல்லும் முன்னேவே ஆத்விக்கும் சாஹியும் கீழே வந்து அனைவருடனும் இணைந்திருக்க, மதியிடமும் மலரிடமும் காலை உணவை வாங்கி உண்டு கொண்டிருந்த மழலைகளோ, “ராஹிம்மா எங்கடா?” என்ற சாஹியின் கூற்றிற்கு…
“ராஹிம்மா… டாடிட்ட இருந்து ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு இருக்காங்க. இப்போ வந்துருவாங்க” என்று சொல்லி முடிக்க அப்பொழுதான் அங்கு வந்து நின்ற அவர்களின் பெற்றோருக்கோ பிள்ளைகளின் கூற்றில் தூக்கி வாரிப் போட்டது.
மழலைகளின் கூற்றில் ஆதியே ஒருகணம் அதிர்ச்சியாகி மகளைப் பார்த்தவன், ‘குட்டி தியாமா இப்டி மானத்தை வாங்கிட்டியேடா’ என்று நொந்து கொண்டவாறே பெரிய தியாவைப் பார்க்க…
அவளோ, ‘எல்லாம் உங்களால தான்’ என்பது போல் கணவனை முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு மழலைகளின் கூற்றில் அனைவரின் பார்வையும் தங்கள் மேல் படிந்ததில் வேறு வெட்கமும் நாணமும் பொங்கிக் கொண்டு எழுந்தது.
கூடவே ஆதியின் அருகில் வந்து நின்ற ஆத்விக்கும், “ண்ணா ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடுறது தப்பில்ல. ஆனா…” என்று நிறுத்தியவன் தன் கைக்குட்டையை எடுத்து நீட்டி விட்டு நமட்டுச் சிரிப்பும் சிரித்து வைக்க, ராஹியையே பார்த்திருந்த சாஹியும்,
“டீ லிப்ஸ்டிக் போடாமையாவது இருந்திருக்கலாம்ல” என்று தமக்கையின் தோளில் இடித்து வைத்தாள்.
தம்பியின் கூற்றில் தான் மனைவி உதட்டுச்சாயம் இட்டிருந்த ஞாபகமும் வந்து சட்டென்று தன் இதழ்களை அழுந்தத் துடைத்து கொண்ட ஆதியின் முகமோ மெல்லிதான வெட்கப் புன்னகையில் பிரகாசிக்கும் சூரியனாய் ஒளிரந்திருக்க, ஆத்விக் சாஹியின் வார்த்தைகளில் சொல்லிலடங்கா நாணப் பூக்களை உதிர்த்த ராஹியின் முகமோ பூரண சந்திரன் போல் பிரகாசிப்பைச் சிந்த, அதைப் பார்த்து நின்ற இரு பெற்றோர்களுக்கும் இளையவர்களின் மகிழ்ச்சி கண்டு ‘வாழ்வில் இனி என்ன வேண்டும்’ என்கிற அளவு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவசமும் அவர்கள் மனதை வந்து நிறைத்தது.
அப்படியே சிரிப்பும் பேச்சுமாய் காலை உணவை முடித்த ஒட்டு மொத்தக் குடும்பத்தினரும், “இப்போ கிளம்புனா சரியா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டபடியே விழாவிற்குச் செல்ல ஆயத்தமாகி மகிழுந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி நகர்ந்த சமயம் கையில் பெரிய அளவு டேப் ஒன்றை வைத்துக் கொண்டு முன்னே வந்து குதித்த யுவாவின் தங்கை மகள் சம்யுக்தாவோ, “எல்லாரும் நில்லுங்க நில்லுங்க ஒரு குரூப் செல்பி எடுத்துக்கலாம்” என்று குதூகலமாய்ச் சொன்னாள்.
அத்தருணம் படமாக்கப்பட வேண்டிய தருணம் என்றே அனைவருக்கும் தோன்றியதில் அனைத்து ஜோடிகளும் அவள் சொல்படி தங்கள் இணைகளோடு கரம் கோர்த்து நின்று சுயமிப் படத்திற்காக புன்னகையைப் படரவிட்டனர். அவர்களோடு இணைந்து நின்றவளும் அப்பொழுதுதான் ஒருவன் மட்டும் அங்கில்லாததைக் கவனித்து அருகில் இருந்த தன் மூத்த மாமா மகன் நவீனிடம், “நவீன் மச்சான் இந்த டேப் கொஞ்சம் புடிங்க. நான் பிரித்திவா எங்கன்னு பாத்து கூட்டிட்டு வர்றேன்” என்று சிட்டாகப் பறந்தவள் இளைய மாமன் மகன் பிரித்திவ்ராஜைத் தேட…
அவனோ அப்பொழுது தான் வாயிற் கேட்டின் அருகில் 1000 வாலா சரவெடி ஒன்றை பற்ற வைத்து விட்டு தன்னுடைய கருப்பு நிற ராயல் என்பீல்டின் மேல் சாய்ந்து நின்று அடர் கேசத்தை சிலிப்பிக் கொண்டவாறே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
வெடிச்சப்தத்திலே அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனருகில் ஓடி வந்த சம்யுக்தா, “டேய் அவசரக் குடுக்கை எல்லாரும் கார்ல ஏறுனப்புறம் பட்டாசு கொளுத்தலாம்னு நான் தான் சொன்னேன்லடா” என்று அவன் தலையில் ஒரு கொட்டு வைக்க…
“ஹேய் அதுக்கு அய்யாயிரம் வாலா வச்சிருக்கேன் டி” என்று பதிலுக்கு அவளைக் கொட்டியவன் அவள் தோள் மேல் கை போட்டு சாய்ந்து நின்று சரவெடி பட படவென வெடித்துச் சிதறுவதைப் பார்வையிட, அவளும் அவன் பிடியில் பொருந்திக் கொண்டு அதைப் பார்த்து ரசித்தவள், “எல்லாரும் குரூப் செல்பி எடுக்க போறோம். வாடா” என்று அவன் கையைப் பிடித்தும் இழுத்துச் சென்றாள் அவனின் அத்தை மகள் சம்யுக்தா.
அவனும், “இழுக்காதடி வர்றேன்ல” என்று கத்தியபடியே அவள் இழுவைக்கு ஏற்ப ஓடிச் சென்றவன் தமக்கைகளைப் பார்த்து புன்னகைத்து விட்டு எல்லாருடனும் இணைந்து நிற்க சம்யுக்தாவும் நவீனின் கரத்தில் இருந்த டேபை வாங்கி சுயமிப் படம் எடுக்க ஆயத்தம் ஆகினாள்.
அவள் டேபை சிரமப்பட்டு தூக்கிப் பிடித்திருப்பதைப் பார்த்து லேசாக அவள் இடையைப் பற்றி தன்னோடு இழுத்தவன், “ஹேய் குட்டக் கத்திரிக்கா இங்க கொடுடி நான் எடுக்கறேன்” என்று அவள் கையிலிருந்த டேபை உருவ…
அதைப் பார்த்த மலரோ, “பிரித்திவ்… அவ உன்ன விட மூத்தவடா போடி வாடின்னு பேசாதன்னா கேக்க மாட்டியா?” என்று மகனைக் கண்டிக்க…
அதைகேட்டு, “யாரு இந்த அராத்து எனக்கு அண்ணியா?” என்று தெத்துப் பல் சிரித்த பிரித்திவ்வும், “இவளுக்கு கல்யாணம் ஆனாலும் நான் போடி வாடின்னு தான் கூப்பிடுவேன் அத்தை” என்று சொல்லி விட்டு தன் பெரியப்பா மகன் நவீனையும் ஒரு பார்வை பார்க்க… அவனும், ‘உன் இஷ்டம் டா’ என்பது போல் தோளைக் குலுக்கிச் சிரித்து விட்டு யுவராஜின் அருகில் சென்று நின்று கொண்டான் அவர்கள் நட்பினை அறிந்தவனாய்.
அதற்குள், “டேய் யாராவது ஒருத்தங்க சீக்கிரம் செல்பிய எடுங்கடா. பங்க்ஸனுக்கு டைம் ஆச்சு” என்று ராஹி சொல்ல…
“இதோக்கா” என்று டேபை தன் ஆறடி ஒரு அங்குள உயரத்திற்கு உயர்த்திப் பிடித்த பிரித்திவ்ராஜும், “நானே எடுக்கிறேன் திவ்வா. குடுடா” என்று தன்னிடமிருந்து டேபைப் பிடுங்க எக்கிய சம்யுக்தாவை, “சும்மா இருடி” என்று தோளோடு வளைத்து அடக்கியவாறே டேபில் சுயமிக்கான பொத்தானையும் வேகமாக அழுத்த, அனைவரின் சிரிப்பலைகளோடும் ஆதி ராஹி மற்றும் ஆத்விக் சாஹியின் காதல் பார்வைகளோடும் அந்தக் குடும்பப் பட சுயமி மிக மிக அழகாய் அந்த டேபில் பதிவாகியது. வசந்தம் பொங்கும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்குச் சான்றாக.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.