“புதன் கிழமை சேலை எடுக்கப் போறாங்க.. என்னால வர முடியாது.. நீ உனக்கு பிடிச்ச கலர் என்னன்னு சொல்லிடு. நான் அம்மாக்கிட்ட சொல்லி, அதே கலர் போல செலக்ட் பண்ண சொல்றேன்…” என, இப்போது கண்கள் விரித்து பவித்ரா கொஞ்சம் திகைத்துப் பார்த்தாள்.
“என்னம்மா?!” என்று இப்போது பலராமன் கொஞ்சம் கரிசனையாகவே கேட்க,
“ஒண்ணுமில்லை…” என்றவள் “ஆரஞ்சும் பச்சையும் கலந்த கலர்னா பிடிக்கும்…” என,
“அப்படியா?!” என்றவன், அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்க்க, அவனின் பார்வையில், பவித்ரா தலை தாழ்த்திக்கொள்ள, கொஞ்சம் இதமாகவே இருந்தது அந்த பொழுது இருவருக்கும்.
“உனக்கு அந்த கலர் நல்லாருக்குமான்னு பார்த்தேன்…” என,
“ம்ம்…” என்று ஒருவித கூச்சத்தோடு தலையை ஆட்டினாள் பவித்ரா.
“அடடா..!” என்று தன் தலைமுடியை கோதியவன் “வேற எதுவும் என்கிட்ட சொல்லனுமா?” என,
“என்ன சொல்லணும்?!” என்று பவித்ரா முழிக்க,
‘சுத்தம்…’ என்று எண்ணியவன், பதில் சொல்லும் முன்னமே, மனோகர் “பவிம்மா…” என்று அழைத்துவிட,
“சித்தப்பா கூப்பிட்டுட்டார்..” என்று வேகமாய் முன்னே நடந்துவிட்டாள்.
அவனுக்கோ தொஸ் என்று ஆகிவிட்டது..
கொஞ்சம் அவளை பேச வைத்துவிடலாம் என்று பார்த்தால், ஒரே நாளில் முடியுமா என்ன?!
“சொல்லுங்க சித்தப்பா..” என்று பவித்ரா வேகமாய் வந்து நிற்க, பின்னே பலராமன் மெதுவாய் வந்து அமர்ந்தான்.
கோமதி மகனின் முகத்தைப் பார்த்தவர், பின் பவித்ராவிடம் “கிளம்புற நேரமாச்சுன்னு நான் தான் சொன்னேன் ம்மா…” என்றவர்,
“அப்போ நாங்க கிளம்புறோம்…” என்று எழுந்துகொள்ள, பலராமனும் எழுந்துகொண்டான்.
மனோகர் இரு கரம் கூப்பி விடைகொடுக்க, பவித்ரா வாசல் வரைக்கும் வந்து வழியனுப்ப, அடுத்து காற்று வேகத்தில் நாட்கள் நகர்ந்து, இதோ திருமணம் கூட முடிந்தே விட்டது.
எளிய முறையில் கோவிலில் வைத்துத் திருமணம். மொத்தமே இருபதில் இருந்து முப்பதுக்குள் தான் இருப்பர். மாலை தான் வரவேற்ப்பு என்பதால், இப்போது மணமக்கள், முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கும் பின் பெண் வீட்டிற்கு சென்று வரவேண்டும் என்று சொல்ல, பவித்ராவோடு யார் பலராமன் வீடு செல்வது என்பது அங்கே ஒரு பேச்சு பொருள் ஆனது.
மனோகர் தன் மக்களைப் பார்த்தவர் “யார் போறீங்க?” என்று மகனிடமும், மகளிடமும் கேட்க, இருவருமே தயக்கமாய் பார்க்க, பவித்ராவிற்கு மளுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
ஓரளவு அவளின் சூழ்நிலை பலராமனுக்குப் புரிய, இருந்தும் அவனால் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா, “ஷ்..! இந்நேரத்துல போய் கண்ல தண்ணி விட்டுட்டு இருப்பியா நீ?” என்று அவளுக்கு ஆறுதலாய் தான் சொல்ல நினைத்தான்.
ஆனால் அவன் யாருக்கும் கேட்காமல் பேசவேண்டும் என்று பேசியது அவளுக்கு கடிவது போல் இருந்தது. கப்பென்று வாய் அழுகையை அடக்கிவிட்டாள் பவித்ரா.
மனோகருக்கு, தன் பிள்ளைகளை எண்ணி அத்தனை கோபம் வந்தது. இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாதே இந்த நேரத்தில்.
“சம்பந்தி… குடும்பம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.. நீங்க டென்சன் ஆகாதீங்க…” என்றவர், ஏற்பாடு செய்திருந்த காரில், மணமக்களையும், மனோகரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அங்கே ஆரத்தி எடுப்பதற்கு, பக்கத்து வீட்டு பெண்கள் இருவரும், கோமதியின் தங்கை ஒருவரும் தான் இருந்தனர்.
வேறு உறவுகள் யாருமில்லை.
மனோகருக்கு அப்போதே புரிந்து போனது. இங்கேயும் இப்படித்தான் என்று.
“எங்க சொந்தக்காரங்க எல்லாம் இப்போவே மண்டபம் போயிருப்பாங்க.. கிளம்பும் போது வீட்டுக்கு வந்துட்டு போவாங்க.. இல்லைன்னா இல்லை.. வரலன்னா அதையும் நாங்க பெரிசு பண்றது இல்லை…” என, மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட, அடுத்தடுத்து நடக்க வேண்டிய எல்லா சாஸ்திரங்களும் செய்யப்பட, பவித்ராவின் முகம் ஒருவித சோகத்தை மட்டுமே வெளிப்படுத்தியது.
பலராமனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள் என்று. இன்றுதான் திருமணம் நடந்து இருக்கிறது. முகத்தில் அதற்கான சந்தோசம் சிறிதும் இல்லையே என்று எண்ணியவன்,
“இந்த ரூம் தான் என்னோடது.. இனி நம்மளோடது.. உள்ள பாத்ரூம் இருக்கு..” என்று மட்டும் சொல்ல,
“ம்ம்..” என்று அவள் தலையை ஆட்டி வைக்க,
“போறதுன்னா போயிட்டு வா…” என, அவளோ தயக்கமாய் தன் சித்தப்பாவை பார்த்தாள்.
“என்ன பவி?” என்று அவர் அருகே வர,
“ரெஸ்ட் ரூம் உள்ள இருக்குன்னு சொன்னேன் மாமா…” என்றவனுக்கோ ஏக கடுப்பு.
இதற்குக் கூட சித்தப்பாவின் முகம் பார்க்க வேண்டுமா என்று.
“போயிட்டு வா ம்மா… அடுத்து நம்ம வீட்டுக்கு போயிட்டு, மண்டபம் போகணும்…” என, அதற்கு பிறகு தான் பவித்ரா அந்த அறைக்கு உள்ளேயே சென்றாள்.
‘இனி நம்மளோடது…’ என்று பலராமன் சொன்னது, மனதில் பதிந்து தான் இருந்தது.
பார்வையை சுழற்றிக்கொண்டே தான் நடந்தாள். இனி அவளுக்கான படுக்கை அறையும் இதுதானே. இரண்டு பேர் தாராளமாய் புழங்கும் அளவிற்கு இருந்தது. இனி அவள் கொண்டு வரப்போகும் கட்டில், பீரோ எல்லாம் வைத்தாலும் கூட இட வசதி நன்றாகவே இருக்கும்.
எல்லாவற்றையும் மனதில் நொடியில் கணக்கு போட்டவள், ‘ரெஸ்ட் ரூம்..’ சென்றுவிட்டு வெளியே வந்துவிட, கோமதி “என்னம்மா ரூம் பார்த்துட்டு இருந்தியா?” என்றார்.
“நான் தான் ம்மா பாத்ரூம் உள்ள இருக்குன்னு சொன்னேன்…” என்றான் பலராமன் முந்திக்கொண்டு.
அவள் தயங்கியதும் இதற்குத்தானே. பெரியவர்கள் சொல்லாமல், அவள் பாட்டிற்கு உள்ளே சென்று பார்ப்பது சரியில்லை என்றுதான் அவள் சித்தப்பாவின் முகம் பார்த்தது. இப்போது கோமதியின் கேள்வியில் பலராமன் முந்திக்கொண்டு பதில் சொன்னதும் அதற்குத்தான்.
அது புரிய, பவித்ரா, அவனை பக்கவாட்டில் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.
‘இப்போ புரியுதா?!’ என்பது போல்.
‘ஓ..! மேடம் பார்வைல எல்லாம் பேசுவீங்களா?’ என்பதுபோல் அவனும் பார்த்து வைக்க,
கோமதியின் சித்தி வந்து, இருவருக்கும் பாலும் பழமும் உண்பதற்கு ஏற்பாடு செய்ய, இருவருக்குமே ஒருவித சந்தோசம் உள்ளே எழத்தான் செய்தது. அது இருவரின் முகமும் பிரதிபலிக்க, மனோகருக்கு அப்போதுதான் ஒருவித நிம்மதி.
கோமதிக்கும் கூட “இப்போதான் என் மருமகளுக்கு சிரிப்பே வருது போல..” என, பவித்ரா இன்னும் மலர்ந்து புன்னகை செய்தாள்.
நல்ல நேரம் முடிவதற்குள், மனோகர் அங்கே செல்லவேண்டும் என்று சொல்லியிருக்க, எல்லாமே கொஞ்சம் வேக வேகமாகவே நடக்க, அடுத்து மனோகர் தங்கள் வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் சென்றார்.
நல்லவேளை ஆரத்தி கரைத்து வைத்திருந்தார்கள், மகளும் மருமகளும். இல்லையெனில் அதற்கும் பேச்சு வாங்கவேண்டி வரும் என்று செய்திருந்தார்கள் போல.
அவர்களின் உதாசீனமும், பவித்ராவின் சைகையும், அவர்களது உறவு எந்த அளவில் இருக்கிறது என்பதனை சொல்லாமல் சொல்ல, பலராமன் அடுத்து எதுவும் பேசவில்லை. சொல்லப்போனால் அந்த வீடு பவித்ராவிற்கே நொடியில் அந்நியமாய் போய்விட்டது.
அக்காவும், அண்ணியும் உரிமையாய் வீட்டினில் உலாவுவது போல், இவளால் முடியவில்லை. பலராமன் அருகினில் பட்டும்படாமல் அமர்ந்து இருந்தாள். இனி உன்னுடைய நிலை என்பது இந்த வீட்டினில் இதுதான் என்று சூழல் உணர்த்தியது.
“சொப்னா, எல்லாருக்கும் காபியாவது ஜூசாவது கலக்கு…” என்று மனோகர் சொல்ல,
“அ..! சரிப்பா…” என்றவள், நிகிதாவைப் பார்க்க,
“எனக்கு எது எது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது அண்ணி.. உங்களோட வந்து வேணும்னா நிக்கிறேன்…” என்றபடி அவளோடு எழுந்து போக, மனோகருக்கு யாரை சொல்வது என்று இருந்தது.
வெளிநாடு செல்லவே மாட்டேன் என்று அடம் செய்த மகனை வம்படியாய் அனுப்பியதும் அவரே. உள்ளூர் மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்ன மகளுக்கு வெளிநாடு மாப்பிள்ளை பார்த்ததும் அவரே.
இப்போது திடீரென்று ஒட்டுதல் மட்டும் எங்கே வரும்.
வருடத்திற்கு ஒருமுறை வருவர் எல்லாம். விருந்தினர் போல் இருந்துவிட்டு சென்றிடுவர் அவ்வளவே.
இப்போது அப்பா, இத்தனை பேருக்கு காபி போடு, ஜூஸ் கலக்கு என்று சொல்ல, அதெல்லாம் என்னவோ பெரிய வேலையாய் தெரிந்தது சொப்னாவிற்கு. வீட்டு மருமகளாய் நீதான் இதெல்லாம் செய்ய வேண்டும் என்பதுபோல் சொப்னா நிகிதாவைப் பார்க்க, அவளோ உன்னோடு சும்மா வந்து நிக்கிறேன் என்று வந்துவிட்டாள்.
அடுப்படிக்குள் நுழைந்த இருவருக்கும் காபி தூள் எங்கே, சக்கரை எங்கே என்று தேடவும், இல்லை ஜூஸ் போட்டுவிடலாமா என்று பேசுவதிலுமே அடுத்து கால் மணிநேரம் கடந்துவிட்டது.
கடைசியாய், காபியே கலக்குவோம் என்று பாலை காய்ச்சிட, காபி தூள் டப்பா காலியாய் இருந்தது.
நிகிதா யோசிக்கவே இல்லை, நேராய் பவித்ராவிடம் வந்து “பவித்ரா.. காபி தூள் தீர்ந்திடுச்சா?” என்று கேட்க,
“இல்ல அண்ணி, புது பாக்கெட் ஸ்டோர் ரூம்ல இருக்கும்…” என்றபடி அவள் எழ, இயல்பாய் கை பற்றுவது போல், பலராமன் அவளின் கையைப் பிடிக்க,
“ஹா..!” என்று திடுக்கிட்டு, அவனைப் பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துகொண்டாள்.
நேத்ரன், இப்போது தன் மனைவியைப் பார்க்க “இல்லைங்க அது…” என்று இழுத்த நிகிதா, மீண்டும் உள்ளே சென்றுவிட, அனைவருக்கும் காபி வந்து சேரவே, அடுத்து ஒரு கால் மணி நேரம் ஆனது.
மனோகர் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார். மற்றபடி அனைவரும் அமைதியாகவே இருக்க,
“சரி மண்டபத்துக்கு கிளம்புவோமா?” என்று அவர் கேட்க,
“அதுப்பா.. நானும் அவரும் சாயந்திரம் வர்றோமே…” என்றாள் சொப்னா.
“ஆமாப்பா.. எனக்கும் கூட தலைவலி.. நாங்க ரெடியாகிட்டு சாயந்திரம் வந்திடுறோம்.. இப்போ சப்பிடுறதுக்காக வரணுமா என்ன?” என்று நேத்ரனும் சொல்ல,
“சாயந்திரம் மட்டும் வந்து என்ன செய்யப் போறீங்க?” என்று கடிந்தபடி நகர்ந்து சென்றார்.
பலராமன் வீட்டினில் இருந்து கிளம்புகையில் பவித்ராவிற்கு இருந்த ஒரு இதமான மனநிலை இப்போது இல்லை. மனது மீண்டும் இறுகிவிட, அவளது முகமே மாறிவிட்டது.
இத்தனை ஆண்டுகளாய் தங்களோடு வளர்ந்தவள் என்ற எண்ணம் கூடவா இந்த அண்ணாவிற்கும், அக்காவிற்கும் இல்லாமல் போனது. சரி திருமணம் ஆகி செல்கிறாளே, அதற்காகவாது இரண்டொரு வார்த்தை கனிவாய் பரிவாய் பேசி அனுப்புவோம் என்ற குறைந்த பட்ச அன்பு கூடவா இல்லை.
‘ச்சே…’ என்று எண்ணத்தான் தோன்றியது.
மனோகர் கனிவைக் காட்டினாரோ இல்லையோ, பாசத்தைக் கொட்டவில்லை என்றாலும், அவளை நல்ல முறையில் தான் நடத்தினார். அந்தமட்டும் அவர் மீது, இப்போது அன்பும், நன்றியும் மேலும் அதிகரித்தது தான் நிஜம் அவளுக்கு.
மீண்டும் மண்டபம் வந்து, அனைவரும் மதிய உணவு உண்டு, பின் மணப்பெண் அவளது அறைக்கும், மணமகன் அவனின் அறைக்கும் சென்றுவிட, அவளோடு அறையில் இருக்கக் கூட யாரையும் காணோம்.
கோமதி மகனோடு அவனின் அறையில் இருக்க, “ம்மா அங்க பவித்ரா ரூம்ல யார் இருக்காங்கன்னு பாரு.. எனக்குத் தெரிஞ்சு யாருமில்லைன்னு நினைக்கிறேன்.. நீ போய் இரும்மா… எனக்கு ஒண்ணுமில்ல நான் கொஞ்ச நேரம் படுத்துப்பேன்…” என்றிட
“துணி மாத்திக்கோ பவித்ரா.. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு.. ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு..” என,
“இருக்கட்டும் அத்தை..” என்றாள்.
“இல்லைம்மா.. கொஞ்ச நேரம் படு.. நானும் இங்கன படுக்கத்தான் வந்தேன். அங்க ஆம்பிளைங்க படுத்திருக்காங்க…” என்றவர், அங்கிருந்த இருக்கையை நகர்த்திவிட்டு, ஓரத்தில் இருந்து ஒரு ஜமக்காளத்தை விரிக்க, பவித்ராவும், தன் திருமண அலங்காரத்தை எல்லாம் கலைத்துவிட்டு, கட்டியிருக்கும் கூரைப்புடவையோடு அப்படியே அவரின் அருகிலேயே படுத்துவிட்டாள்.