அன்றையை மெட்ராஸ் மாகாணத்தின் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், நகரில் இருந்து ஒதுங்கிய தெருவில் இருந்தது அந்த மாடி வீடு. சேத்துப்பட்டு பகுதியைச் சுற்றி அதிகளவில் பனை மரம் இருந்ததால் அதற்கு நுங்கபாக்கம் என பெயர் வந்ததாய் சொல்கிறார்கள். ஒற்றையடிப் பாதியாய் விளங்கிய ஸ்டெர்லிங் ரோடு படிபடிபாய் வளர்ச்சியடைந்து சில வீடுகள் இருந்தன. சிப்பாயாக இருந்து செஷன்ஸ் நீதிபதியான எல்.கே ஸ்டெர்லிங்(L.K. Sterling) அந்த பகுதியில் தோட்ட பங்களா வாங்கி இருக்க, அவரின் நினைவாய் அந்த பகுதிக்கு ‘ஸ்டெர்லிங் ரோடு’ என பெயர் வந்தது.
அந்த வீட்டின் மாடியில் ஒற்றை அறையில் தங்கியிருந்தார்கள் ஸ்டாலினும் அவனின் நண்பர்களும். எல்லாரும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்.
“ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்” என்று பாடிக்கொண்டே ஃபில்டரில் இருந்து டிகாஷனைப் பாலில் ஊற்றி காஃபி கலந்தான் ஸ்டாலின்.
ராமச்சந்திரன் என்ற ராமு அப்பொழுதுதான் குளித்து முடித்து விட்டு வெளியே வர, காஃபியின் நறுமணத்தில்
“டேய் ஸ்டாலின், நல்ல காஃபியா போட்டிருக்கியா?” என்று கேட்க
“உனக்குப் போட்டு தரதே பெருசு? எங்க போனான் அந்த சூர்யா?” என்று இன்னொரு நண்பனை விசாரித்தான்.
“அவன் எப்பவும் போல, இங்க இருந்து மவுண்ட் ரோடு வரைக்கும் ஓட போய்ட்டான்” என்றான் ராமு.
“சரி சரி, காஃபியைக் குடிச்சிட்டு சமையலுக்குக் காய் வெட்டுடா. நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றான் ஸ்டாலின்.
ராமு, “என்ன இருந்தாலும் ஸ்டாலின் உன்னோட காஃபி நம்ம ரத்னா காஃபி அளவுக்கு இல்லைடா. யூ நீட் பெட்டர் ட்ரையினிங் மேன்” என்றதும் ஸ்டாலின் அங்கிருந்த புத்தகம் ஒன்றைத் தூக்கி அவன் மேல் அடித்து
“நான் என்ன காஃபி மாஸ்டர் ஆகப்போறேனா டா? இதுக்காகவா நான் செங்கல்பட்டுல இருந்து மெட்ராஸ் வரைக்கும் படிக்க வந்துருக்கேன்?” என்றான்.
“டேய்! என்னை அடிச்சு உன் டைம் வேஸ்ட் பண்ணாத, பஸ் வர டைம் ஆகிடும் உன் கோகி வந்துடுவா. அவளை மிஸ் பண்ணிடாத” என்றதும் கோகி என்ற பெயரில் அடிப்பதை விட்டான்.
“ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்” என்று ஒரு மந்தகாசப் புன்னகையுடன் பாடியபடி, அந்த மாடியின் ஓரத்தில் இருந்த குளியறைக்குள் புகுந்து கொண்டான் ஸ்டாலின் சீனிவாசன்.
ஹிக்கின்பாதம்ஸ்(HigginBothams) வரை ஓடிக் களைத்த சூர்யா வியர்வையுடன் ஆவின் பூத்தில் வாங்கி வந்திருந்த பாலை, கீழ் வீட்டில் இருக்கும் ராணி அக்காவிடம் கொடுத்துவிட்டு மாடியேறினான்.
உள்ளே நுழைந்து ஒரு குறையும் சொல்லாது, நண்பன் வைத்திருந்த காஃபியைக் குடித்து முடித்து ஸ்டாலின் வெளியே வரவும்
சூர்யா, “ஸ்டாலின், நீ போகும்போது நானும் உன் கூட வரேன்” என்று சொல்லி குளியறைக்குள் புகுந்து கொள்ள
“டேய் ராமு, இந்த பய என்ன சொல்லிட்டுப் போறான்? நான் போகும்போது என் கூட வரேன்றான். நான் இப்போ என்னோட கோகியைப் பார்க்க போவேன்னு அவனுக்குத் தெரியாதா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
“நீ உன் கோகியைப் பார்த்து பல்லைக் காட்டுறதை பல்லவன் பஸ்ஸே பார்க்குமேடா, இந்த ஆறு மாசமா உன்னோட வேலையே இதானே? அதெல்லாம் நம்ம சூர்யாவுக்கும் நல்லா தெரியும். அவன் காலேஜுக்கு நம்மோட வரேன்னு சொல்லியிருப்பான்” என்ற ராமு கல்லூரிக்குத் தயாரானான்.
ஸ்டாலின் முதலில் தயாராகி விட, அதற்குள் சூர்யாவும் தயாராகி நின்றான்.
“என்னடா காலேஜ் போக இன்னும் டைம் இருக்கே, அதுக்குள்ள ரெடியாகி நிக்கிற? இது என்ன புது சட்டை, பேண்ட். என்னவோ சரியில்லையே?” என்றான் ஸ்டாலின்.
“அதுவும் டெரிகாட் பேண்ட்! என்னடா நடக்குது இங்க?” என்று ராமுவும் பார்க்க
“என்னை அழைச்சிட்டுப் போ” என்றான் சூர்யா.
“சூர்யா! என்னாச்சு காலேஜுக்குப் போகல அவன். அவன் கோகியைப் பார்க்க போறான்” என்றான் ராமு.
“நானும் கோகியைத்தான் பார்க்கணும்” என்று சூர்யா சொல்ல, ராமுவும் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
“என் கோகியை நீ ஏன் டா பார்க்கனும்?” என்று விசாரணைத் தொனியில் கேட்டான் ஸ்டாலின்.
“எனக்கு அந்த அம்மாயியைப் பார்க்கனும்?”
“உங்க அம்மாயியைப் பார்க்க ஏன் டா கோகி காலேஜுக்கு வர?” புரியாமல் ராமு கேட்க
“எந்த அம்மாயி?” என்று சரியாய்க் கேட்டான் ஸ்டாலின்.
ஸ்டாலின் கேட்கவும் சூர்யாவின் முகத்தில் ஒரு தனி தேஜஸ் தென்பட்டது.
“கோகிலா கூட என்.எஸ்.எஸ் கேம்ப் வந்திருந்தாளே, க்ளாரா மேம் கொஸ்டின் கேட்டப்போ” என்றவனை பாதியில் நிறுத்தி
“க்ளாரா மேம் கொஸ்டின் கேட்டப்போ இங்கிலிஷ்ல தந்தியடிச்சதே அந்த பொண்ணா?” ராமு கொஞ்சம் நக்கலாய்க் கேட்க
“உனக்கு மட்டும் இங்கிலிஷ் ரொம்ப நல்லா வருமோ?” என்று கேட்ட சூர்யாவை நண்பர்கள் இருவருமே உச்சகட்ட அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“சூர்யா! நீயா இப்படி பேசுற?” என்றான் ஸ்டாலின். சூர்யா இதுவரை அடுத்தவர் மனம் நோகுமாறு பேசவே மாட்டான். அதுவும் மூவருமே கல்லூரி சேர்ந்தது முதலே நல்ல நண்பர்கள். மூவருக்குமான குறிக்கோள் ஒன்றாய் இருக்க, தனியறை எடுத்துத் தங்கி முழு மூச்சோடு படித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியிருக்க இன்று யாரோ ஒரு பெண்ணுக்காக, இப்படி பேசுகிறானே என்று பார்க்க
“ஸ்டாலின்! ப்ளீஸ் ரா. நேனு அந்த அம்மாயி பார்க்கணும் ரா” என்று சூர்யாவின் பேச்சே வித்தியாசமாய் இருந்தது நண்பர்களுக்கு.
“ஸ்டாலின், இவன் சரியில்லை. நமக்கு தர்மடி வாங்கிக்க கொடுக்க ப்ளான் பண்ணிட்டான்” என்றான் ராமு.
“ராமு? ஏன்ட்ரா நுவ்வு?” என்று சூர்யா அருகே வர
ஸ்டாலின் இருவரையும் பார்த்துவிட்டு
“டேய் பாவிகளா! எனக்கு என் கோகியைப் பார்க்க டைம் ஆச்சு. முதல்ல போவோம். அப்புறம் பேசிக்கலாம். என்னவோ நம்ம பையன் ஆசைப்படுறான்” என்று ஸ்டாலின் சூர்யாவின் தீவிரம் தெரியாமல் அவனையும் அழைத்துக் கொண்டு நடந்தே, கோகிலா பயிலும் கல்லூரிக்கு எதிரே நின்று வேடிக்கைப் பார்த்தனர்.
“இந்த ஜூன் மாசம் மேலதான் டா பசுமையாவே இருக்கு, பாரு எல்லாரும் எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல” என்று ராமு ரசித்துப் பேச
“என் கோகியை விட யாரும் அழகில்ல” என்றான் ஸ்டாலின்.
“இருந்தாலும் உங்கப்பாவோட தோஸ்த் பொண்ணு, அவளை பார்க்க நீ இப்படி காலங்காத்தால கிளம்பி வர வேண்டாம். நினைச்சா அவ வீட்டுக்கே போய் பார்க்கலாம்” என்ற ராமுவின் தோளில் கைப்போட்ட ஸ்டாலின்
“அடேய் சாம்பராணி! அந்த அறிவு இல்லையா எனக்கு? எங்கப்பா பெயர் என்ன?”
“சீனிவாசன்”
“மிசா சீனிவாசன் டா. மிசாவுல எங்கப்பா உள்ள போனார். அதுக்குக் காரணம் அவங்க கட்சித் தலைவர்னு எங்கப்பாவுக்கு கோகி அப்பாவுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம். இதுல கோகி சித்தப்பா புரட்சித்தலைவர் ஆளு. அதனால இந்த கட்சிக்காரங்களால எனக்குக் கல்யாணம் ஆகறதுக்குள்ள ஒரு கலகம் வந்திடும் போல”
“அதனாலதான் கோகியை இப்படி வீட்டுக்குத் தெரியாம பார்க்குறேன்”
“ம்ம், கோகிக்கு உன்னைப் பிடிக்குமா?”
“என்னைப் பிடிக்காம இருக்குமா என்ன?” என்றான் தன் முழு நீள சட்டையின் கையை இழுத்துவிட்டபடி.
இவர்கள் தனியாக பேச்சில் இருக்க, மகளிர் மட்டும் பேருந்தில் வந்து இறங்கினாள் கோகிலா. மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள்.
“ஏன் டா என் கோகி கம்மல் அழகா இருக்குல, இந்த காலேஜோட ஃபேஷன் குயினே என் கோக்கிதான் தெரியுமா?’ ஸ்டாலின் பெருமையாகச் சொல்ல
“பெருமைப் படாதடா சாம்பிராணி! உன் கோகி போட்ட கம்மல் பூவே பூச்சுடவால நதியா போட்டிருக்கும். எல்லாம் ப்ராட்வேல(Broadway) வாங்கியிருக்கும்” என்று கடுப்படித்தான் ராமு.
கோகிலா பேருந்து நிற்கவும் ஒரு நொடி, ஒரே நொடி மின்னல் பார்வை பார்த்தாள் தன்னவனை. பின் ஒரு புன்னகையுடன் அவள் கல்லூரியில் அடியெடுத்துவைக்க, விடுதியில் இருந்து வந்த யமுனா
“ஏய்! கோகி பஸ் டைமுக்கு வந்திடுச்சு போல” என்றாள் தோழியைக் கண்டு சந்தோஷமாக.
“இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு” என்றாள் பாவாடை தாவணியில் இருந்த யமுனா.
அதுவரை அமைதியாய் இருந்த சூர்யா
“ஸ்டாலின், உன் கோகிட்ட சொல்லி என்னை யமுனாவை மீட் பண்ண வைடா” என்று சொன்னதும் அவனை முறைத்த ஸ்டாலின்
“அடேய்! சும்மா அந்த புள்ளையை சைட் அடிப்பன்னு பார்த்தா நீ எனக்கு தர்மடி வாங்கிக் கொடுத்திருவ போல. அந்த பொண்ணு மெட்ராஸ் கூட கிடையாதுடா. தஞ்சாவூர் போல. இந்த ஆசையெல்லாம் பார்க்கறதோட நிறுத்திடனும். பேச எல்லாம் நினைக்காதடா”
“பேசினா மட்டும் அந்த பொண்ணுக்கு புரியவா போகுது?” ராமு கிண்டல் செய்ய
“ஏன் என் தமிலுக்கு என்ன?” என்று சூர்யா எகிற
“நீ பேசுறது தமிழ்னு ஒத்துக்கிற இரண்டே தமிழனுங்க நாங்கதான் டா. எங்க கிட்ட பேசுறதை வைச்சு நீ நல்லா தமிழ் பேசுற நினைச்சிட்டு இருக்கியா? அதெல்லாம் இல்லை மகனே” என்று ஸ்டாலின் அறிவுரை சொன்னான்.
ஆனால் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை சூர்யா.
“ப்ளீஸ் ரா ஸ்டாலின். நான் சீரியஸா பேசுறேன். நேனு அம்மாயி மேல ப்ரமலோ உன்னானு ரா(நான் அந்த பொண்ணை காதலிக்கிறேன்)” என்று சொல்லி நண்பர்களின் முகம் பார்க்க
ஸ்டாலின் கொஞ்சம் யோசித்தவன்
“சரி பார்க்கலாம். ஆனா நீ மனசுல ஆசையை வளர்த்துக்காத, அந்த பொண்ணு கோகிக்குப் ப்ரண்ட், நல்லா படிக்குமாம். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்றான்.
“இன்னும் கொஞ்சம் உன் கோகிட்ட கேட்டு சொல்லேன்” என்ற சூர்யாவின் முதுகில் அடித்த ஸ்டாலின்
“நானே என் கோகியை இரண்டே நிமிஷம் வாசல்ல நின்னு பார்க்கிறேன். இதுல உனக்கு வேற நான் தூது போகனுமா?”
“முதல்ல இவ்வளவு சொன்னதுக்கே இன்னிக்கு எனக்கு நீ உடுப்பில சாம்பார் இட்லி வாங்கித்தர” என்று சொல்ல, அண்ணன் ஹனுமந்தன் அனுப்பும் பணத்தை சேமித்து வைத்திருந்த சூர்யாவும்
“சரி டா வாங்கித் தரேன். பட் எனக்கு யமுனா கிட்ட பேசனும்” என்றவரின் தீவிரம் உடனிருந்த நண்பர்களுக்குக் கூட அப்போது புரியவில்லை. அப்படியே பேசிக்கொண்டே அவர்கள் கல்லூரிக்கு நடந்து வந்துவிட அன்றைய வகுப்பை கவனிக்க போனார்கள்.
அந்த வார இறுதியில் கோகிலா யமுனாவை வெளியே அழைத்தாள்.
“யமுனா, சூப்பர்ஸ்டார் நடிச்ச மாப்பிள்ளை படம் தேவில ரீலிஸ் ஆகியிருக்கு. மேட்னி ஷோ போவோவோமா?” என்று கோகிலா கேட்டாள்.
“ஹேய் வீட்ல நான் இன்னும் கேட்கவே இல்லையே” என்று யமுனா புலம்ப
“யமுனா, வாடி போகலாம். நம்ம இன்னும் ஒரு படம் கூட பார்க்கல. எப்படியும் ஊருக்குப்போனா சினிமாவுக்கெல்லாம் போக முடியுமா? இங்க இருக்க வரை ஜாலியா இருப்போமே, அந்த ராகினி இருக்காளே அவ கூட படம் பார்த்துட்டு அமலாவோட டிரஸ் அப்படி இருக்கு இப்படி இருக்கு. நானும் அதே மாதிரி போட்டிருக்கேன்னு பீத்திட்டு இருக்கா. நான் இன்னும் அமலா நடிச்சு படம் பார்க்கவே இல்லை. ரேவதி விட அழகா இருக்குமா என்ன அந்த அமலா?” என்று கேட்டாள் மேகலா.
“அமலா தெரியாதா உனக்கு?” என்று கேட்ட கோகிலா, பின் யமுனாவிடம் திரும்பி,
“பாரு இவளும் ஆசைப்படுறா.. நீ வீட்ல கேட்கறதுக்குள்ள அடுத்த படமே ரீலிஸ் ஆகிடும் டி. இன்னும் மெட்ராஸ் வந்து ஒரு படம் கூட நீ பார்க்கல. நானே உன்னை டைமுக்கு ஹாஸ்டல்ல கொண்டு வந்து விட்டுடுறேன். பயப்படாத, நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும்தானே வராங்க. நீயும் வாடி என் சாத்துக்குடி” என்று கன்னம் புசுபுசுவென இருந்த யமுனாவைக் கிள்ள ஒருவழியாக யமுனாவும் ஒத்துக்கொண்டாள். அந்த ஒற்றை நிகழ்வு அடுத்தடுத்து தன் வாழ்வில் மாற்றங்கள் கொண்டு வரும் என அறியாது போனாள் அவள்.