பிச்சி’s விழியோர சிறுபார்வை போதும் – அத்தியாயம் 11
Post Views:663
சென்னையில் இருந்து திரும்பி வந்திருந்தான் நந்தன். சூர்யாவை பற்றி சொல்லி விட முயன்றும் மீராவால் முடியவில்லை. ஒன்று அவன் கடையில் இருந்து வரவே நேரமாயிற்று, களைத்து வரும் அவனிடம் இதை ஒரு விஷயமாக சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. மற்ற நேரங்களில் முகிலனுடனோ குடும்பத்தினருடனோ நேரம் செலவழிக்கவே அவன் விரும்பினான்.
நாட்கள் செல்ல அந்த சண்டை பற்றிய நினைவே நீங்கி போயிற்று. ஆனால் சூர்யா மீராவின் நட்பு இறுகி போயிற்று. முகிலனுக்கு எல்லாவற்றையும் மீராவே சொல்லி விடுவாள். சூர்யாவும், தன் முகிலன் அண்ணாவிடம் மீரா செய்யும் குறும்புகளை சொல்லவே முகிலனுக்கும் அவனை மிகவும் பிடித்து போயிற்று.
முகிலனும் இயல்பாக அவனிடம் பேச ஆரம்பித்ததால், “அப்புறம், உன் அத்தை பொண்ணு பேரென்ன சூர்யா”, என்று அவனை வம்பு இழுப்பதுண்டு. “நான் சொல்றேன் அத்தான், நான் சொல்றேன்”, என்று ஓடி வரும் மீரா அவனுக்கு சிறு வயது மீராவை நினைவு படுத்தும். “அந்த பொண்ணு பேர் நித்யா. அவளுக்கு சொந்த ஊர் மலைக்கோட்டை. இப்ப தான் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல சேந்துருக்கா. சூர்யா தம்மடிக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது. இவன் மாசம் ஒரு தடவ காலேஜ் டூர்ன்னு சொல்லிட்டு அவள பாக்க மலைக்கோட்டை பிள்ளையார் பக்கத்துல உக்காந்து தவமிருப்பான். அவ தெரிஞ்சவங்க கூட இருக்காங்கன்னு இவன்கிட்ட பேசாம இவனுக்கு பல்பு கொடுத்துட்டு போயிருவா”, என்று சிரித்துக் கொண்டே சூர்யாவை கடுப்படித்தாள்.
“ஆமா ஆமா சிரிங்க, உங்கள மாதிரியா, இருபத்தி நாலு மணி நேரமும் கூடவே இருக்கீங்க. ஒருத்தர் ஒருத்தர மிஸ் பண்ண வாய்ப்பே இல்ல, அதனால தான் நான் தம்மடிக்கிறேன். திட்டு வாங்குறேன். நீங்கல்லாம் ஒரு சண்ட கூட போட மாட்டேங்கிறீங்களே. பொறாமையா இருக்கு உங்கள பார்த்தா”, என்ற சூர்யாவை முதுகில் தட்டிய முகிலன், “இப்படி வேற ஆசையா உனக்கு, அடுத்த தடவ நித்யாவ பாத்தா நானே உன்னைய போட்டு விடறேன்”, என்றான்.
“ம்க்கும், பாக்கிறதே பத்து நிமிஷமோ என்னமோ, அதுலயும் சண்ட போடவே நேரம் சரியாப் போகிடும் போங்க. ஆனா நெஜமாவே நீங்க ரெண்டு பேரும் சூப்பர் முகிலண்ணா. நல்ல புரிதல் இருக்கு உங்களுக்குள்ள. அன்னிக்கு அவ அண்ணன் கூட மீராட்ட ரொம்ப கோச்சுட்டாங்கன்னு சொன்னா. ஆனா நீங்க அவள நல்லா புரிஞ்சுட்டு என்கிட்டயும் நல்லா பேசுறீங்க. எங்க மீரா ரொம்ப கொடுத்து வச்சவ”, என்ற சூர்யாவை கனிவாக பார்த்தான் முகிலன்.
சூழ்நிலையை இலகுவாக்க, “அதெல்லாம் சரி தான், நல்லா படிக்கணும். படிப்புல கோட்ட விட்றக் கூடாது”, என்ற முகிலனை, “அதான உள்ள இருக்க ப்ரொபஸர் இன்னும் வெளிய வரலையேன்னு பார்த்தேன். நான் கிளம்பறேன்”, என்று கிளம்பினான்.
“என்ன.. மண்டைக்குள்ள என்னமோ ஓடுது மீராக்கு”, என்ற முகிலனிடம், “இல்ல அத்தான், ஒரு வேளை நமக்குள்ள சண்ட வந்துருச்சுன்னா என்ன பண்ண”, என்றாள்.
“அவன் எவ்ளோ பாராட்டினான் நம்மள, அதெல்லாம் மூளைல ஏறாது. சும்மா தேவை இல்லாதது எல்லாம் ஓடும். சண்ட வந்தா தான் என்ன, அதையும் ரசிப்போம், அப்புறம் ஜாலியா சேந்துக்கலாம்”.
“இல்ல அத்தான், அதெல்லாம் சரி வராது. நந்துண்ணாட்ட முன்னாடி மாதிரி பேச முடியலன்னு இன்னும் கஷ்டமா இருக்கு. உன்னோடல்லாம் சண்ட போட்டா அவ்ளோ தான். தாங்காது”, என்றாள் கலக்கத்துடன்.
“ஏன்டா, இவ்ளோ குழப்பிக்கிற. அதெல்லாம் நமக்குள்ள எந்த சண்டையும் வராது. உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும். எனக்கும் உன்ன பத்தி தெரியும். அப்புறம் எப்படி வரும் சண்ட. விடு. “, என்றான்.
“அறுபடை வீட்டுக்குப் போக நான் என்ன ஆன்மீக சுற்றுலா திட்டமா கேட்டேன் உன்கிட்ட”, என்ற முகிலனை, “அப்புறம் உன்ன மாதிரி முத்தின பழத்தைக் கூட்டிட்டு எங்க போறதாம்”, என்று உதட்டை சுழித்தாள்.
“அது சரி”, என்று திரும்பியவன் அங்கே நந்தன் வருவதைக் கண்டு, “என்னடா முதலாளி, இன்னிக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்ட”, என்றான்.
“ஒண்ணுமில்ல முகிலா, இன்னிக்கு அப்பாவோட ப்ரெண்ட் யாரோ கதிரவன்னு கடைக்கு வந்திருந்தார். ரொம்ப நாள் கழிச்சு பாக்குறாங்க போல. குடும்பக் கதையெல்லாம் ஆரம்பிச்சாங்க. நான் போர் அடிச்சு போய் உட்காந்து இருந்தத பாத்ததும் நீ கெளம்பு நான் கடைய பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க”, என்றான் நந்தன். அந்த கதிரவன் சூர்யாவின் தந்தை என்று மீரா முகிலன் இருவருக்கும் புரிந்தது.
மீரா பக்கம் திரும்பியவன், “இன்னிக்கு காலேஜ் இல்லையா மீரு”, என்றவுடன் மீராவிற்கு தலை கால் புரியவில்லை.
“இல்ல நந்துண்ணா, ஸ்டடி லீவு இப்ப, நீ பேசிட்டு வர்றயா, சேர்ந்து சாப்பிடலாம், நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்”, என்று கிளம்பினாள்.
“ஆமா, எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, வாடா நீயும்”, என்று அவன் பதிலை எதிர்பாராமல் அவனை இழுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்.
இந்த நந்தனின் சிறு சிறு அன்பில் தான் தான் நெகிழ்ந்து போய் விடுகிறேன் என்று நினைத்துக் கொண்டே உடன் சென்றான் முகிலன்.
“அப்புறம் மச்சி, நீ எப்ப ப்ரொபஸர் ஆகப் போற”
“இன்னும் ரெண்டு மாசம் தான காலேஜ், அப்புறம் வேலை தேடணும்”
“சென்னை போகப் போறியா”
“இல்லடா நந்தா, அம்மாவ விட்டுட்டுப் போக முடியாது, அவங்க இங்க இருந்து வரவும் மாட்டாங்க. இங்க தான் தேடணும். எக்ஸாம் எழுதினா கவர்மெண்ட் காலேஜ்ல கிடைக்கும். அது வரை ஏதாச்சு பிரைவேட் காலேஜ்ல பாக்கலாம். உனக்கு எப்படிப் போகுது?”
“போகுது மச்சி”, என்று கூறிய நந்தன், மீரா உள்ளே போவதை உறுதிப் படுத்தி விட்டு, “ஒண்ணும் செட் ஆகல” என்றான். நந்தன் இது போல் கிண்டலாக சிரித்துப் பேசி நிறைய நாள் ஆகிற்று என்பதால், முகிலனும், “உனக்கேவா”, என்று சிரித்தான்.
“ஆமா, கடைல வச்சு யாரையும் பாக்க முடியல. அப்பா கூடவே இருக்கார். கஸ்டமர்ட்ட மரியாதையா பேசுன்னு அட்வைஸ் வேற. அழகா இருக்க பொண்ணுட்ட கூட சிரிச்சு பேச முடியல. இதுல எங்க போய் வளச்சுப் போட. இந்த வயசானதுங்கலாம் வீட்லயே இருந்தா என்ன”
இதைக் கேட்டுக் கொண்டே வந்த மீரா,”நந்துண்ணா, இது தப்பு”, என்று அழுத்தமாகக் கூறினாள்.
“மீரா, நீ உன் வேலய மட்டும் பாரு. என் விஷயத்துல தலையிடாத”, என்று நந்துவும் கடுப்பாகவே கூறினான்.
“அட விடுங்க ரெண்டு பேரும்”, என சிரித்தபடி கை கழுவ எழுந்தான்.
“இல்ல மச்சி, எப்போதும் என்ன கடுப்பாக்கிறதுக்குன்னு எனக்கு தங்கச்சியா வந்து வாச்சுருக்கா”, எரிச்சலுடன் இரைந்தான் நந்தன்.
மீரா கண்டித்தால் சிறிது நிதானிக்க வேண்டும் என்று தெரிந்து இருந்தும் அன்று பொறுமை இழந்தான் நந்தன். இப்படியெல்லாம் நந்தன் பேசியதே இல்லை என்பதால் சற்று நிதானித்த மீரா, தான் கண்டிக்காவிட்டால் அப்பாவின் பேரை நந்தன் கெடுத்து விடுவான் என்று உறுதியாக நம்பினாள். தன் மேல் தவறில்லை என நந்தன் நிலைநிறுத்த விரும்புவதும், இது அவனது இயல்புக்கே உரித்தான பேச்சு வழக்கு என்பதையும் முகிலன் உணர்ந்தான். இருவரின் குரலில் தெரிந்த அழுத்தம் முகிலனுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தியது.
“சரி, அப்படியே வச்சுக்கங்க நந்துண்ணா. உங்கள கடுப்பாக்கினாலும் நல்லது சொல்ல வேண்டியது என்னோட கடமை. நீங்க இப்படி கெட்டு குட்டிச் சுவரா ஆகிடக் கூடாதுன்னு தான் இவ்ளோ மெனக்கடறேன்”, என்ற மீராவை சற்று கண்டிப்புடன் பார்த்தான் முகிலன்.
“விடு மீரா, அவன் அப்படிலாம் ஆகிட மாட்டான். எல்லா பசங்களும் பேசறது தானே. விடு”, என்றான்.
“அவ அப்படித் தான் முகிலா. நானும் இவகிட்ட இறங்கி இறங்கிப் போகிறேன், ஆனா ரொம்ப ஏறிக்கிறா. அவள மாதிரி எல்லாரும் ரொம்ப கரெக்டா இருக்கணும்னு நினைப்பா. அது எப்படி இருக்க முடியும்? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. அம்மா தாயே ஆள விடு! “, வெடித்தான் நந்தன்.
“ஏன் இப்ப அத்தான் எல்லாம் ஒழுங்கா தான இருக்காங்க”
“அவன் தலையெழுத்து அது. உன்ன கட்டிக்கிடணும்னா சாமியாரா தான் இருக்கணும். நீ அவன கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்க”
பேச்சு திசை மாறுவதை உணர்ந்தான் முகிலன்.
“யாரு நானா?”, எனக் கேட்ட மீராவை கோபமாக பார்த்த முகிலன், “அமைதியா இருன்னு சொன்னா கேக்க மாட்டியா, அவன் தான் அவன் வேற மாதிரின்னு சொல்லிட்டான்ல. நீ ஏன் அவன கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்க?”, என்று பேசியவுடன் தான் தானும் அவளை நந்தனை போலவே பேசி விட்டோம் என்று உணர்ந்தான்.
இருவருமே மீரா தான் அனைவரையும் கட்டுப்படுத்துவதாய் எண்ணுகின்றனர் என்ற எண்ணமே மீராவுக்கு அதிர்ச்சி அளித்தது. இருவரையும் ஒரு வெறித்த பார்வையோடு நோக்கியவள் தன் அறைக்கு சத்தமில்லாமல் திரும்பினாள். நந்தனுக்கு சிறிது குற்ற உணர்ச்சி இருந்தாலும், சரியாகத் தான் பேசினோம் என்று அந்த உணர்ச்சியை தலையில் தட்டி ஓரங்கட்டினான்.
முகிலனுக்கு தான் பேசியது தவறு என்று உணர்வதுக்கு முன் மின்னலாய் மறைந்திருந்தாள் மீரா. காலையில் தான் இருவருக்கு நடுவிலும் எந்த விரிசலும் விழாது என்றும், நல்ல புரிதல் உள்ளதாகவும் அவளிடம் பேசினோம், இப்போது அவளை புரிந்து கொள்ளாதது போல் பேசி விட்டோமே என்ற எண்ணம் அவனை இம்சித்தது. “வரேன் நந்தா”, என்றவாறு அவள் அறையை கடந்து சென்றான். எப்போதும் இவன் கிளம்பும் போது அவனுடனே நடந்து வரும் மீரா இன்று முகிலன் அறையைக் கடந்து செல்லும் தடம் தெரிந்தும் வெளியே வரவில்லை என்பதை உணர்ந்தான் முகிலன்.