“அம்மா விளிச்சு ஏட்டா” என்று மின்மினி சொல்ல, பதில் பேசாது தங்கையைப் பார்த்தான்.
“ஞான் அம்மையை காணான் போகட்டே?”(அம்மாவைப் பார்க்க போகவா?” என்று அனுமதியாக மின்மினிகுட்டி கேட்க, மின்மினிகுட்டியை நினைத்து கவலைப்பட்டான் பிரதாபன்.
“எப்போல்?”
“நாளே”
“உன்னிமா, வேகம் வரணும். மனசிலாயோ? அச்சச்சனோடு பறையறுது(அச்சச்சங்கிட்ட சொல்லாத)” என்றான் அழுத்தமாக. அதுவரை மின்மினி அண்ணன் என்ன சொல்வானோ என்று பதட்டத்தோடு இருந்தவள், அவன் அனுமதி தரவும் இயல்பானாள். முகம் மகிழ்ச்சியில் மின்ன
“நன்னியேட்டா!” என்றவள் அறைக்குள் சென்றுவிட, பிரதாபன் அறைக்குள் சென்று குளித்து வேஷ்டியை சுற்றியவன், அப்படியே மெத்தையில் சாய்ந்து விட்டத்தை வெறித்தான்.
அவன் அம்மா, அப்பா மீது எப்போதும் அவனுக்கு வருத்தமுண்டு. அவர்கள் இருவருக்குமான சண்டையில் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டது பிரதாபனும், மின்மினிகுட்டியும்தான். இன்று அவன் அம்மா வேறொரு திருமண வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்கிறார், பிரதாபனை பொருத்தவரையில் அவன் அச்சனும் அம்மையும் நல்லவர்கள், ஆனால் கணவன் மனைவியாக அவர்களுக்குள் ஒத்துப்போகவில்லை. சிறு வயதில் அச்சச்சனையும், அச்சனையும் கண்டு வளர்ந்தவனுக்கு அம்மா ஏன் சண்டையிட்டு போனார் என்று அவர்மீது அத்தனை கோபம். அதை மறக்காமல் அவரிடம் காட்டி, சண்டையிடவும் செய்வான், பொறுமையின்றி அவர் விவாகரத்து வாங்கியது எல்லாம் சிறுவனாய் அவனுக்கு அழியாத காயம். வளர்ந்த பின் யோசித்தால் அப்பாவின் மீதும் நிறைய தவறு என்று புரிந்தது.
பிரதாபனின் அம்மா சுமாவும் அப்பா ஷங்கரனும் சந்தோஷமாகத்தான் திருமணத்தில் இணைந்தனர், திருமண வாழ்க்கை சுமாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ‘பூவம்பள்ளில்’ வீட்டு மருமகள், அரசு வேலையிலிருந்தார் ஷங்கரவர்மா, மகன் பிரதாபன் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை. ஷங்கரவர்மா மனைவி, மகனிடம் பாசமாக இருந்தாலும் மனைவிக்கு என்று எதுவும் செய்யமாட்டார், அவர் அச்சன் பொன்னச்சனை பார்த்து வளர்ந்ததால் மனைவி தனக்குக் கீழ் என்ற எண்ணமே. சுமா பிறந்த வீட்டுக்கு செல்ல விரும்பினால் கூட பொன்னச்சனின் அனுமதி வேண்டும், ஒற்றை மகளான சுமாவுக்குத் தன் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்றால் கூட, மாமனாரிடம் அனுமதி வேண்டி செல்வதெல்லாம் பிடிக்கவில்லை. சிறு சிறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பெரிதாக வளர்ந்து கொண்டே போக பிரதாபனுக்கு ஏழு வயதிருக்கும்போது மின்மினிகுட்டி பிறந்தாள்.
இதில் ஷங்கரனுக்கு கொஞ்சமாக குடிபழக்கம் வேறிருந்தது, சுமா கண்டித்து சண்டையிட்டால் பொன்னச்சன் மகனை கண்டிக்காமல், மருமகளை பேசுவார். எப்போதும் வீடும் மகனும் தன் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொன்னச்சனுக்கு. அது சுமாவிற்குப் பிடிக்கவில்லை, மாமியார் அம்மிணிகுட்டி போல் அடங்கியிருக்கவும் முடியவில்லை. அம்மிணிகுட்டி மருமகளை நன்றாக பார்த்துக்கொண்டாலும், கணவன் சரியில்லாதபோது சுமாவால் எத்தனை காலம் பொறுக்க முடியும்? ஷங்கரனுக்கு என்ன செய்தாலும் எப்படி நடந்தாலும் மனைவி அமைதியாக போய்விடுவாள் என்ற எண்ணம். மனைவிக்கான மரியாதையை அவர் தரவில்லை, தர வேண்டும் என்ற எண்ணமில்லை. மின்மினிகுட்டிக்கு இரண்டு வயதிருக்கும்போது, சுமா மகளையும், மகனையும் அழைத்துக்கொண்டு அப்பா வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஷங்கரன் அங்கும் சென்றும் சண்டையிட்டு பொன்னச்சன் அதிகம் பேசி என்று சுமாவிற்கு வெறுத்துப்போனது.
இதில் பிரதாபனை வேறு பொன்னச்சன் அழைத்து சென்றுவிட, ஒரு வருடம் பிரிந்திருந்தபோதிலும் ஷங்கரன் மாறவில்லை. நண்பர்கள், குடி என்று அவரிஷ்டம் போல இருக்க பொன்னச்சனுக்கு மகனின் செயலை விட மருமகள் வீட்டை விட்டு சென்றதுதான் கௌரவக்குறைச்சலாக இருந்தது. மகனுக்குத் திருமணமாகிவிட்டது, அவனை நம்பி மனைவி மக்கள் இருக்கிறார்கள், மகன் என்ன செய்தாலும் சரி, மருமகள் அனுசரித்து வாழ வேண்டும் என்றார். ஒற்றை பிள்ளையான ஷங்கரனுக்கு விட்டுக்கொடுக்கும் பழக்கமில்லை. சுமாவுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, விவாகரத்து கேட்டு வாங்கினார். மகன் அப்பாவிடமும், மகள் அம்மாவிடமும் இருக்க தீர்ப்பானது, பிரதாபனின் பத்தாவது வயதில் அவன் அம்மா, அப்பா சட்டப்படி பிரிந்தனர்.
பிரதாபன் விடுமுறை நாட்களில் அம்மாவை பார்க்க செல்வான், வீட்டுக்கு வர சொல்லி அடம்பிடிப்பான். அவனுக்கு விவாகரத்துக்கெல்லாம் அர்த்தம் தெரியாத வயது, இப்படி நாட்கள் செல்ல, சுமாவுக்கு மறுமணம் என்ற செய்தி கேட்டு பொன்னச்சன் கொதித்துப்போனார். அவர்களின் செல்வச்செழிப்பு, மகனின் அரசாங்க வேலை, இரண்டு குழந்தைகள் எல்லாம் என்றாவது மருமகளை மீண்டும் தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்ற எண்ணத்திலிருந்த பொன்னச்சன் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் சுமா ஒற்றைப்பெண், பெற்றோர் எத்தனை நாள் ஆதரவு தருவார்கள் என்ற நினைப்பில் மருமகளை மகனுடன் வாழ வைக்க வேண்டும் என்று முயற்சி கூட எடுக்கவில்லை. அவளாகத்தானே சென்றாள், வரட்டும் என்ற இறுமாப்பெல்லாம் மருமகளின் மறுமண செய்தியில் தவிடுபொடியாக, ஷங்கரனுக்கும் பொறுக்கவில்லை.
சுமாவின் பெற்றோருக்கு மகளை நினைத்து கவலைதான், ஆனால் மகளை மதிக்காத, அவளுக்குப் பிடிக்காத வாழ்க்கையில் அவரை மீண்டும் தள்ள நினைக்கவில்லை. சுமா மறுமணம் செய்ய போகிறார் என்று தெரிந்து, ஷங்கரன் அவரிடம் மீண்டும் சண்டையிட சுமாவின் முடிவில் மாற்றமில்லை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்துவிடுவார்கள் என்று நினைத்த பிரதாபனுக்கு இனி அம்மா தங்கள் வீட்டுக்கே வரமாட்டார்கள் என்று புரிய, சிறுவயதில் அவனால் அதை தாங்க முடியவில்லை. அந்த புரிதலின்மை தாய் மீது கோபமாக மாறியது.
மருமகளின் மறுமணத்தைக் காரணம் காட்டி, பேத்தியையும் பொன்னச்சன் தங்களிடம் கேட்டு சண்டையிட்டார். மின்மினிகுட்டி அம்மாவிடமும், அப்பாவிடமும் மாறி மாறி இருந்தாள், அதுவரை அம்மா, அப்பாவிடம் மாறி மாறி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. பிரதாபன் அம்மாவைப் பார்க்க சென்றவன் தங்கையை தன்னோடு வர சொல்லி அழைக்க, ஐந்து வயதான மின்மினிகுட்டிக்கு ஏட்டனோடு இருப்பது மிகவும் பிடிக்கும். சுமாவின் பெற்றோரும் தவறிவிட, சுமாவிற்கும் கைகுழந்தையிருக்க, மின்மினிக்கான கவனம் குறைந்தது.
கொச்சி நகரில் சுமாவின் குடும்பமிருக்க, பசுமை போர்த்திய தாமரக்குளம் மின்மினிக்குட்டிக்கு மிகவும் பிடித்திருந்தது. பூவம்பள்ளில் வீட்டு குளமும், தோட்டமும் தோட்டத்தில் பறக்கின்ற பட்டாம்பூச்சியும் பெரும் அதிசயம் அந்த சிறு பெண்ணுக்கு. அச்சம்மா மின்மினிகுட்டியை கண்ணாகப் பார்த்துக்கொள்வார். ஒன்றிரண்டு நாட்கள் என்று தாமரக்குளத்தில் தங்க வந்த மின்மினிகுட்டிக்குப் பூவம்பள்ளில் வீடுதான் அவள் வீடு என்ற எண்ணம் ஆழப்பதிந்தது. பிறகு மீண்டும் சண்டை, நீதிமன்றம் என்று போய் மின்மினிகுட்டியின் விருப்பத்தின்படி அவள் பூவம்பள்ளில் வீட்டிலே நிரந்தரமாக இருந்தாள். வளர வளர மின்மினிகுட்டிக்கு அவள் அப்பா, அம்மாவும் இனி சேர மாட்டார்கள் என்று புரிந்தது, அம்மாவுக்கு இருப்பது தனி குடும்பம், இதுதான் என் வீடு என்று தெளிவாக தெரிந்தது.
ஷங்கரன் மனைவி பிரிந்த பின் அதையே காரணமாக வைத்து அதிகம் குடித்து உடலை கெடுத்துக்கொண்டார். என்ன செய்தாலும் என்னிடம் வந்துவிடுவாள் என்ற கர்வம் தோற்றுப்போக, அதை தாங்கவியலாமல் குடிக்கு அடிமையானார். பிரதாபனுக்கு அம்மாவிற்காக அப்பாவும் விட்டுக்கொடுக்கவில்லை என்பது வளர்ந்ததும் புரிந்தது, ஆனால் அதனை புரியவைத்தாலும் பலனில்லையே. அவர்களின் உடைந்த குடும்பம் உடைந்ததுதான், மின்மினிகுட்டி அம்மாவோடு பேசிக்கொண்டுதான் இருப்பாள், பிரதாபனுக்கு அப்படி இயல்பாக வரவில்லை.
அப்பா, அம்மாவோடு அவன் பேச்சை எப்போதோ குறைத்துக்கொண்டான், பொதுவாகவே அதிகம் பேசாதவன், அவன் வட்டம் மிகச் சிறிது, அதனால் ஷங்கரனுக்கும் மகனின் விலகல் தெரியவில்லை. சுமாவின் கணவர் சில வருடங்களாக சென்னையில் வேலை செய்வதால், அடிக்கடி மகளையும் மகனையும் பார்க்க முடிவதில்லை.
மின்மினிகுட்டிக்கு விவரம் தெரிந்த பின் அவளை தன்னோடு அழைத்தாலும், முன்பு எதுவும் தெரியாமல் அம்மாவோடு போகாதவள், எல்லாம் புரிந்த பின்னும் போகவில்லை. சுமாவின் கணவர் மரியாதையாக, அன்பாக நடந்தாலும் ஒரு இடைவெளியிருக்கும். அதைவிட மின்மினிக்கே அவள் அப்பாவின் இடத்தில் இன்னொருவரை வைத்து பார்ப்பது இயல்பானதாக இல்லை. தனக்கான இடம் எது என்பதில் பிள்ளைகள் இருவரும் தெளிவாக இருந்தனர். அச்சம்மா இறந்த பின்னும், ஷங்கரன் இறந்த பின்னும் சுமா அவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் மின்மினிகுட்டி அம்மாவோடு போகவில்லை. பிரதாபனும் அப்படியே, அவர் வாழ்க்கை அவர் முடிவு! அது போல் அவர்களின் வாழ்க்கையில் இனி அம்மா இல்லை என்ற முடிவில் திடமாக இருந்தான். அவனுக்கு அம்மா என்றால் அவன் அம்மாவாக முழுவதுமாக வேண்டும். இல்லையென்றால் வேண்டாம்.
இப்போது மின்மினிகுட்டி அம்மாவை ஆவலாக பார்க்க நினைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை, நாளை அவளுக்குத் திருமணம் என்று வருகையில், அம்மா உரிமையாக எதையும் செய்ய போவதில்லை. இப்படி தாயிடம் விருந்தினர் போல் நடப்பதற்கு மொத்தமாக விலகியிருப்பது அவன் மனதுக்கு அமைதி கொடுத்தது. சிறு வயதில் ஏன் அச்சனும் அம்மாவும் சேர்ந்தில்லை என்று பாவமாக கண்ணில் நீர் தேக்கி, தன்னிடம் கேட்ட தங்கையின் முகம் நினைவில் வர பிரதாபன் முகத்தில் இளக்கம். அப்போது அவனுக்குப் புரியவைக்கும் வயதில்லை, மின்மினிக்கும் புரியும் வயதில்லை.
தங்கைக்கு எந்த குறையுமின்றி நிறைவான, சுற்றங்கள் சூழ ஒரு திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான் பிரதாபன். வேலையைப் பார்க்கலாம் என்று தயாராகி வெளியே வந்தவன், சாமியறையில் நின்றான். கிளம்பும்போது அவனுக்கு அழைப்பு வந்திருக்க, அது அவன் நினைத்தபடி நடக்க வேண்டும் என்று வேண்டினான்.
“அம்மே நாராயணா!” என்று கண்மூடி நின்று, நெற்றியில் குங்குமம் வைத்தவன், மின்மினியிடம் வெளியே போகிறேன் என்று சொல்லி வாசலுக்கு வர, எப்படியாவது தாரிணி பற்றி பேச வேண்டும் என்று வினயச்சந்திரன் அவன் முன் நின்றான்.
“சேட்டா!” என்று வினயன் வர
“ஜோலியுண்டு வினயா, பின்னே சம்சாரிக்காம்”(வேலையிருக்கு, அப்புறம் பேசலாம்) என்ற பிரதாபன் வண்டியை எடுத்து வெளியே சென்றான்.
“உங்களை சம்சாரியாக்கலாம்னு பார்த்தா பின்னே சம்சாரிக்காமா? தாரிணி உனக்கு இவர்தான் வேணுமா” என்று முணுமுணுத்தவன் கயிற்று கட்டிலில் உட்கார்ந்தான். நசீர் வேலைகள் முடிந்து வந்தவர் அவனருகே ஓய்வாக அமர்ந்தார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.