பொன்னச்சனும் வீடு வந்து ஆவலாகக் காத்திருந்தார். மின்மினிகுட்டிக்கு முதல் முறை இப்படியொரு நிகழ்வென்பதால் கொஞ்சம் பயம், பதட்டமெல்லாம் கலந்திருந்தாள்.
பின்வாசலில் இருந்த சருகையெல்லாம் பிரதாபன் சுத்தப்படுத்த சொல்லியிருக்க, ஒருமுறை அதனை சரிபார்க்க வந்த வினயச்சந்திரன் பார்வையில் மின்மினிகுட்டி விழுந்தாள்.
தேனீர் மட்டும் வீட்டில் போட சொல்லியிருக்க, மின்மினி சாயா தயாரித்தவள் அது கொதிக்கும்வரை பின் கட்டு வாசல்கதவின் வழி வேடிக்கைப் பார்த்தாள். வினயன் மின்மினியைப் பார்த்துவிட்டு உற்சாகக் குரலில்,
மின்மினிக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை, ஆனாலும் இவன் என்ன இத்தனை வெளிப்படையாகப் பேசுகிறான் என்ற எண்ணம் உருவானது. அவன் பாராட்டில் ஒரு நேர்மையான ரசனை இருந்ததே தவிர வேறு கண்ணோட்டமில்லை என்பது மின்மினிக்குப் புரிய, சாயா கொதிக்கும் வாசத்தில் வினயனை மறந்தாள்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வர, அவர்கள் பேசியதைக் கேட்டு வினயனுக்குக் கோபம் வந்தது. பையனின் பெற்றோரும் உறவினரும் மட்டுமே வந்தனர், மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதால் அன்று வரவில்லை. பிரதாபனுக்கு மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் வெகு திருப்தியென்றாலும், நிறைய வரதட்சணை கேட்டார்கள். அதிலும் பூவம்பள்ளில் வீட்டின் முந்தைய செல்வநிலை அறிந்தவர்கள் என்பதால் நிறையவே எதிர்ப்பார்த்தார்கள். பொன்னச்சனால் முடியாதென்று சொல்லமுடியவில்லை. சம்மதத்தை பின்பு சொல்கிறோம் என்று தள்ளிப்போட்டனர்.
அன்றிரவு தாரிணி அழைத்து மின்மினியின் பெண்பார்க்கும் படலத்தை விசாரிக்க, வினயன் பொரிந்துவிட்டான்.
“அந்த பொண்ணு நல்ல பொண்ணு தெரியுமா, இந்த பிரதாபனும் அவர் அச்சச்சனும் ரொம்ப மோசம். எப்படியாச்சும் தள்ளிவிடலாம் பார்க்கிறாங்க” என்றான் கடுமையான கோபத்தோடு.
“வினய்! என்னாச்சு?” என்றாள் தாரிணி எரிச்சலாக.
“பின்ன என்ன? அந்த பையனோட அம்மா நூறு பவுன் நகை, ஆடி கார், அது இதுன்னு கேட்கிறாங்க. அவங்க பையன் யூஸ்ல இருந்தா, என்ன பிரசிடெண்டாவா இருக்கான்? எனக்கு ஒரு தங்கச்சி இருந்து, வரவங்க இப்படி பேசினா நானும் ஜெய்யும் வாய்லயே போட்டு அனுப்புவோம், இந்த பிரதாபன் என்னன்னா மண்டையை ஆட்டிட்டு நிக்கிறான். அதுவும் பூவம்பள்ளில் வீடுன்னு சொன்னதும் இப்போ எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை, முடிஞ்சதை செய்யறோம்னு சொல்லாம அந்த அச்சச்சன், அதெல்லாம் செஞ்சிடலாம்னு பேசுறார். இந்த பிரதாபனும் பேசாம நிக்கிறார்” என்று திட்டிவிட
“டேய்! அவங்களுக்கு முடியும் செய்வாங்க, உனக்கென்ன பிரச்சனை?” என்றாள் தாரிணி.
“என்ன முடியும்? சரி முடிஞ்சாலும் அந்தம்மா பேசுற பேச்சுக்கு எப்படி மின்மினியை நல்லா வச்சுப்பாங்க? இவ்வளவு பணத்தாசை பிடிச்சவங்க எப்படி பொண்ணை நல்லபடியா நடத்துவாங்கன்னு கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாம்?” என்றான் மூச்சுவாங்க.
“பிரதாபன் அப்படியொன்னும் யோசிக்காம செய்ய மாட்டார், உன்னை விட அவருக்கு மின்மினி மேல அக்கறையுண்டு” என்று தாரிணி விட்டுக்கொடுக்காது பேசிவிட, அது வினயனுக்கு இன்னும் கோபம் கொடுத்தது.
“பிரதாப பைத்தியத்துக்கிட்ட வேற என்ன எதிர்ப்பார்க்க முடியும்? காதல் வந்தா கண்ணு தெரியாதுனு சொல்லுவாங்க, உன்னைப் பார்த்த அப்புறம்தான் அறிவு கூட இருக்காதுனு புரியுது, பிரதாபன் என்ன செஞ்சாலும் சரியா உனக்கு? அந்த பிரதாபனுக்குத் தங்கச்சியை எவன் தலையிலாச்சும் கட்டலாம்னு எண்ணம் போல, இல்லன்னா அப்படி பேசுற குடும்பத்தோட சம்மதம் வேண்டாம்னு சொல்லாம இருப்பாரா?” என்று தோழியைப் பேசினான் வினயன்.
“அக்கறையாம் அக்கறை? என்ன இருந்தாலும் அந்த பொண்ணு கையால பத்து நாளாச்சும் சாப்பிட்டிருக்கேனே, அந்த நன்றி இருக்காதா எனக்கு?” என்று பொரிந்து தள்ள
“ஸ்டாப் இட் வினய்! ரொம்ப ஓவரா பேசுற? என்ன தெரியும் உனக்கு அவரைப் பத்தி? மின்மினிக்காக நீ இவ்வளவு யோசிக்கிறப்ப பிரதாபன் யோசிக்க மாட்டாரா? அவர் என்ன நினைக்கிறார் தெரியாம நீ இஷ்டத்துக்கு ஜட்ஜ் பண்ணுவியா? அடுத்தவங்களை ஜட்ஜ் பண்றதுன்னா ஈசி’ல உனக்கு? மினி ஸ்கூல் படிக்கும்போது அவங்கப்பா இறந்துட்டாங்க, அப்போ இருந்து இப்போ அவ பிஜி படிக்கிறா, யார் அவளை பீஸ் கட்டி படிக்க வைக்கிறாங்க?” என்று கேட்டாள் தாரிணி.
“ஓஹ், பணம் கட்டினா நல்ல அண்ணனா? என் அண்ணாவைப் பார்த்துருக்கியா நீ? பாசம் காட்டுறதுன்னா என்னனே உன் பிரதாபனுக்குத் தெரியல, இரண்டு வார்த்தை ஜாலியா, அன்பா பேசி நான் பார்க்கல. நம்ம ஊர்ல எத்தன பொண்ணுங்க படிச்சிருந்தாலும் வரதட்சணை கொடுமையால சாகுறாங்க” என்று குற்றம் சாட்டினான். ஏனோ மின்மினியைப் பெண் பார்க்க வந்தவர்கள் பேசிய தோரணையே அவனுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவன் அவர்களைப் பொருத்தவரையில் மூன்றாம் மனிதன். அங்கே சொல்லமுடியாத கருத்தையும், காட்ட முடியாத ஆத்திரத்தையும் தாரிணியிடம் காட்டினான்.
“போதும் வினய், இப்படி பேசாத! முதல்ல பிரதாபனை கம்பெர் பண்றதை நிறுத்து. உன் அண்ணாவ வச்சு நீ மினியோட அண்ணனை பேசுறதே தப்பு. பத்து நாளா அவங்களைப் பார்க்கிற உனக்கிருக்க இந்த யோசனையெல்லாம் அவருக்கு இருக்காதா? அவர் என்ன யோசிக்கிறார்னு நீயே முடிவு பண்ணுவியா? கல்யாணம்னு வரப்ப யாரும் முகத்தில அடிச்ச மாதிரி பேசமாட்டாங்க, விருப்பமில்லனா கூட பொறுமையா யோசிச்சு சொல்வாங்க.”
“பணம் கட்டினா நல்லா அண்ணாவா கேட்ட இல்ல, பணம் கட்டுறதும் ஒரு நல்ல அண்ணா செய்ற வேலைதான். எனக்கு உனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்ய அப்பா இருக்காங்க, அவருக்கு காலேஜ் முடிக்கும்போதே அப்பா இல்லாம போய்ட்டார், நீ உன்னோட இருபது வயசுல எப்படியிருந்த யோசிச்சிட்டு, பிரதாபனை பத்தி பேசு. அவரோட இருபது வயசுல இருந்து அவங்க அச்சச்சனை, தங்கச்சியைப் பிரதாபன் பார்க்கிறார். அவங்க அப்பா டிரிட்மெண்ட்க்கே நிறைய பணம் செலவாச்சு, அதோட கடனெல்லாம் அடைக்கிறது யார் மினியா இல்ல பிரதாபனா?”
“மினியோட ஸ்கூல், காலேஜ்னு எதிலையும் பிரதாபன் காம்ப்ரமைஸ் பண்ணினது கிடையாது. அவங்கப்பா இருந்தப்ப கூட, மினிக்குட்டிக்கு பிடிக்கும்னு சின்ன சின்ன விஷயம் கூட பார்த்து செய்வார், தெரியுமா உனக்கு? மினியைப் பாவம்னு சொல்றியே, அவ பட்ட கஷ்டம் அத்தனையும் பிரதாபனும் சேர்ந்துதானே அனுபவிக்கிறார், கூடவே பணக்கஷ்டம் வேற! அவருக்கும் அம்மாவோட சேர்ந்திருக்க முடியல, மினி அப்பா இறந்த பின்னாடி ஒருவாரம் அழுதுட்டு ஸ்கூல் போயிருப்பா, குழந்தை அவ, ஆனா பிரதாபன் அவங்கப்பாவோட டிரிட்மெண்ட் கடனை அடைக்க அவங்க பிஸ்னஸ் பார்க்க ஆரம்பிச்சார். உனக்கு வழிகாட்ட அப்பா, அண்ணா இருக்காங்க. பிரதாபனுக்கு அந்த இருபது வயசுல இருந்தே டென்ஷன், அதெல்லாம் சமாளிச்சு இப்ப கூட கஷ்டப்பட்டாலும் தங்கச்சிக்கு குறையில்லாம செய்யணும்னு நினைச்சிருப்பார்.” என்று மூச்சு வாங்க பேசினாள் தாரிணி.
“அவர் நல்ல அண்ணா இல்லனு மினி சொல்லட்டும், நீ சொல்லாத!” என்றபோது அவளின் குரல் திக்கி, கமறியது.
“எனக்கு ஹெல்ப் பண்ண போயிருக்க, அதுக்காக பிரதாபனை எந்த நேரமும் நீ குறை சொல்லணும்னே பார்க்காத வினய். என்னால தாங்க முடியல” என்றாள் அழுகையோடு.
வினயன் தாரிணி பேசி முடிக்கும்வரை பேசவில்லை. பேச விடாது செய்திருந்தது அவள் பேச்சு. அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்று புரிந்தது.
அவள் கேட்ட கேள்வியெல்லாம் சரிதானே? பிரதாபன் பொறுப்பான அண்ணனாக இல்லையென்றால் மின்மினியின் நிலை?
“சாரி தரு” என்று வினயன் சொல்ல, தாரிணிக்குப் பிரதாபனை நினைத்து வந்த அழுகை நிற்கவில்லை. கண்களை மூடி தன்னை சமாதான செய்தவள் பேசாமல் இருக்க,
“சேட்டாவ நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. அது என்னமோ மின்மினிக்கு இன்னிக்கு நல்லபடியா பிக்ஸ் ஆகிட்டா, உன் விஷயம் பேசிடலாம்னு நினைச்சிட்டே இருந்தேனா? அதனால உண்டான ஏமாற்றம் ப்ளஸ் அந்த குடும்பத்தோட பேச்சே சரியில்லை, இவங்களும் அமைதியா இருந்தது எனக்குக் கோவம் வந்திடுச்சு. சாரிடி” என்று மீண்டும் வினயன் சொல்ல
தாரிணிக்குப் பிரதாபனை இவ்வளவு பிடிக்கிறதே என்று வியப்பாக இருந்தாலும், தன் தோழியின் விருப்பம் நிறைவேறிட வேண்டும் என்ற வேண்டுதலும் வினயனுக்கு நிறைய இருந்தது. பிரதாபன் மறுத்துவிடக் கூடாதென்ற எண்ணம் வினயனுக்கு இன்னும் தீவிரமானது.
“ஆனா ஒன்னு, உன் ஆள் தேர்தல்ல நின்னா அவருக்குப் பிரச்சாரம் பண்ண ஆளே தேவையில்ல, நீ மட்டும் போதும்! அவரை பிரைம் மினிஸ்டரா கூட ஆக்கிடுவ” என்று வினயன் வம்பிழுக்க
தாரிணி, “டேய்!” என்று அதட்டினாள்.
“அப்பாடா! நார்மல் ஆகிட்டியா? சரி அதை விடு, நாளைக்கு எப்படியாச்சும் சேட்டா கிட்ட பேசிடுறேன். உன்னை மீட் பண்ற மாதிரி தனியா அழைச்சிட்டு வந்திடுறேன்” என்று தாரிணியிடம் பேசி வைத்தான்.
ஆனால் வினயனின் திட்டங்கள் எல்லாம் அப்படியே நடக்கவில்லை, அடுத்த ஏழு நாளும் பிரதாபன் ஊரிலும் இருக்கவில்லை. வினயனால் பிரதாபனிடம் தாரிணி பற்றியும் பேச முடியவில்லை. சோர்வோடு இருந்தவன், இன்னும் ஏழு நாளா என்று கடுப்பில் வீட்டுக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான். பிரதாபனும் நசீரும் வீட்டில் இல்லை, பொன்னச்சனும் மின்மினியும் உறங்கியிருக்க வினயன் பத்து மணி போல பின் கட்டில் நடந்தவண்ணம் அப்பாவோடு கதையளந்தான்.
“ஒரே பனி’ப்பா, காஷ்மீர் குளிர் தாங்க முடியல.. ஒரு வெள்ளை மழைன்னு சுஜாதா சேச்சி டெய்லி காதுல பாடுறாங்க” என்று அவன் பேசிக்கொண்டிருந்தான்.
“ரிசார்ட்டுக்கு ஈபி’ பில்லா அது ஜெய் கட்ட சொன்னான், கட்டிட்டேன்பா. நமக்கு மொத்தமா ஒரு லட்சம் வந்தது. ஆஹ்ன்ன்.” என்று வினயன் பேசி முடித்து வைக்கையில் அவன் முன்னே கத்தியோடு நின்றாள் மின்மினிகுட்டி.
“நீ யாரானு? சத்தியம் பறா!” என்றாள் அழுத்தமாக.
வினயன் பெருமூச்சுடன் அவளை பார்த்தான். மின்மினி கையிலிருந்த கத்தியைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து, பின் முறைத்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.