மின்மினியைப் பெண் பார்த்துவிட்டு போன மறுநாள் வினயன் சீக்கிரமே எழுந்துவிட்டான். அன்று எப்படியாவது பிரதாபனையும், தாரிணியையும் தனியே சந்திக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினான். பிரதாபன் களரி பயிற்சி முடிந்து வரட்டும், இன்று எப்படியாவது ஆலப்புழாவில் தாரிணியோடு அவனை பேச வைக்க வேண்டும் என்று நினைக்க, பிரதாபன் களரி பயிற்சிக்கே செல்லவில்லை. காலையில் குளித்து வெள்ளை வேட்டி சட்டையில் தயாராகி நின்றான் பிரதாபவர்மா.
“என்ன சேட்டா? களரிப்பள்ளி போகலயா?”
“வினயா! எனிக்கு ஒரு ப்ரதானப்பட்ட காரியமுண்டு (எனக்கு ஒரு முக்கியமான வேலையுண்டு), ஞான் நேரத்தே பரஞ்சில்லே? (முன்னாடியே சொன்னேன்ல). நம்ம பார்ட்டியோட மாநாடு, ஓர்மையுண்டோ?(ஞாபகமிருக்கா?)”
“உண்டு சேட்டா, நான் எதாவது ஹெல்ப் பண்ணனுமா?” என்றான்.
“அதுதன்னே வினயா! நசீரேட்டா கைனகரி போய்டுவார். நான் ஒரு வாரம் ஆலப்புழாவுலதான் இருப்பேன், அங்கயும் இங்கயும் அலைய முடியாது. எம்.எல்.ஏ எனக்கு எல்லா பொறுப்பும் கொடுத்திருக்கார், எனக்கு இது ரொம்ப முக்கியம் வினயா, மாநாடு முடிஞ்ச பின்னே நான் இங்க வருவேன். நீதான் இங்க வீட்ட பார்த்துக்கணும்” என்றதும்,
“என்னது இன்னும் ஒரு வாரமா?” என்று வினயன் அதிர்ந்தான்.
“எந்தாடா?”
“நீங்க இல்லாம ஒரு வாரம் நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன் சேட்டா? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று வினயன் சொல்ல, பிரதாபன் முகத்தில் புன்னகையின் சாயல். உதடுகள் கூட விரியவில்லை, ஆனால் அவன் சிரிப்பது முகத்தில் தெரிந்தது, வினயன் இப்படி சொல்ல, அவன் தோளில் கைப்போட்டு,
“இதுவும் எனக்கு ஹெல்ப்தானேடா? உனக்கு கைனகரில பார்க்க தெரியாது, அவிட ஷிபுவும் நசீரேட்டாவும் பார்த்துப்பாங்க. இங்க வீட்ல ஒரு ஆள் வேணுமில்ல? மனசிலாயோ?”
“அதில்ல சேட்டா..” என்று வினயன் மறுத்துப் பேச,
“ஒன்னும் பேசாத, உனக்கு இங்கதான் வேலை. நான் வர்ற வரைக்கும் அச்சச்சனையும், மினியையும் ஒழுங்கா பார்த்துக்க. நைட்ல எங்கேயும் போகக் கூடாது. வீட்ல பாதுகாப்பு நீதான்” என்றான் அழுத்தமாக.
“எனக்கு இங்க என்ன வேலை?” என்றான் எரிச்சலாக. அவன் முணுமுணுத்தது கேட்டு,
“வேலையெல்லாம் மினி சொல்லுவா” என்று பிரதாபன் சொல்ல,
“அய்யோ சேட்டா! நான் வந்த வேலை..” என்ற வினயனை பேச விடாமல்,
“உன் வேலையை நான் வந்த பின்ன பார்க்கலாம், நான் துபாய்ல ஏஜெண்ட்கிட்ட பேசியிருக்கேன். புரிஞ்சதா? நான் இப்போ ஒன்பது மணிக்கு பார்ட்டி ஆபிஸ்ல இருக்கணும், எதாவதுன்னா கால் பண்ணு. பை” என்ற பிரதாபன் அவனது வண்டியில் புறப்பட்டான்.
தாரிணி அன்று பயிற்சி முடிந்து வந்தவள் வினயனையே ஆர்வமாகப் பார்க்க, அவனோ முறைத்தான்.
தாரிணி வீடு சென்றதும் அழைக்க,
“தாரிணி! நேத்து தங்கச்சி கல்யாணம்னு என்னை பேச விடல, இன்னிக்கு என்னடான்னா கட்சி மாநாடு முக்கியம், நான் பார்க்கணும்னு போய்ட்டார்” என்றான்.
“வந்ததும் பேசுடா”
“எண்ட பகவதியம்மே! அவர் வர ஒரு வாரமாகுமாம். நான் எதையும் இவ்வளவு பொறுமையா செஞ்சதில்ல தெரியுமா? லவ்’வுக்கு ஓகே சொல்ல வைக்க கூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்ல. ஆனா, இரண்டு பேரை பேச வைக்கிறதே இங்க பெரும்பாடா இருக்கு. எல்லாம் உன்னை சொல்லணும். பிரதாபனுக்கு ரோட்ல நின்னு பேசினா பிடிக்காது, வீட்ல பேசினா பிடிக்காதுன்னு…” என்று வினயன் படபடவென பேசினான்.
“இன்னும் ஒரு வாரமா? பேசாம நீ ஊருக்குப் போய்ட்டு அப்புறம் வரியா? இல்லன்னா நானே பிரதாபன் கிட்ட பேச பார்க்கிறேன்”
“இதென்ன என் மாமியார் வீடா? வந்து வந்து போக? நீ வீட்டுக்கு வந்தாலே அவர் உன்னை பார்க்கிறதில்ல, இதுல எங்கயிருந்து பேச?”
“சாரிடா” என்று தாரிணி மன்னிப்புக் கேட்க,
“ப்ச், விடு” என்றான்.
“பிரதாபனை நிறுத்திப் பேசணும்னா நான் எப்பவோ பேசியிருப்பேன். மத்தவங்க பார்க்கிற மாதிரி என்னால அப்படி நடக்க முடியாது, அப்பா என்னை கல்யாணம் பண்ண சொல்லலன்னா, நான் அவர் பேசட்டும்னு காத்திருப்பேன், பிரதாபன் ரொம்ப மரியாதை எதிர்ப்பார்ப்பார். நமக்குப் பிடிச்சவங்க மரியாதை நமக்கு ரொம்ப முக்கியமில்லையா? நீ சொல்ற மாதிரி அவர் ஊர்ல, வீட்ல என்னோட பேச மாட்டார்தான், இது அவரை கட்டாயப்படுத்திப் பேசுற விஷயமுமில்லை. எனக்கு அவரோட மனசு விட்டுப் பேசணும், என் மனசுல உள்ளதைப் பேசணும். என்னோட கால்’ஸ் எடுக்க மாட்டார், என் மெசெஜ் எதுவும் பார்க்க மாட்டார், வேற என்னதான் நான் பண்றது வினய்?” தாரிணி சோர்வாகக் கேட்டாள்.
“முன்னாடியே இதெல்லாம் நம்ம பேசிட்டோமே தரு, விடுடி. நான் பார்த்துக்கிறேன்” என்றான் வினயன்.
“பிரதாபனுக்கு காலேஜ் படிக்கிற டைம்’லயே பார்ட்டி, பொலிடிக்ஸ்’ல ஆர்வமுண்டுடா, இப்ப இன்னும் தீவிரமாகிட்டார். அவர் என்ன நினைக்கிறார், என்ன பண்றார், ஒன்னும் புரியல எனக்கு. என்னோட காலேஜ்ல இருந்த பிரதாபனை நான் ரொம்ப மிஸ் பண்றேன்”
“கூட இருக்க எனக்கே அவர் என்ன செய்றார்னு புரியமாட்டேங்குது, கேட்டா உனக்குப் புரியாதுன்னு பதில் சொல்வார். நேத்து நைட்டே லேட்டாதான் வந்தார், மனுஷன் ரெஸ்ட்’னு ஒன்னு எடுப்பாரானே தெரியல, அந்த கட்சி ஆபிஸ் போனா சாப்பிட கூட மாட்டேங்கிறார்”
“பின்னே! என் பாஸ் ஆச்சே? எங்க தாரிணியோட பிரதாபன் வேற, அக்கறையில்லாம இருக்குமா?”
‘தாரிணியின் பிரதாபன்!’ வினயன் அப்படி சொல்ல, தாரிணிக்கு முகத்தில் அத்தனை வெளிச்சம், கேட்க இதமாக இருந்தது. தாரிணியின் பிரதாபனாக அவன் இருப்பதை விட, பிரதாபனின் தாரிணியாக இருப்பதையே அவள் விரும்பினாள்.
சில நிமிடங்கள் தாரிணி பேசாமல் இருக்க,
“அச்சோடா! பிரதாப பைத்தியமே, லைன்ல இருக்கியா?” என்று வினயன் கத்தவும்,
“கத்தாதடா! இருக்கேன்” என்றாள் தாரிணி.
“ஆனாலும், அவரை உனக்கு இவ்வளவு பிடிக்குதே, உனக்கு பிரதாபன் சேட்டா கிட்ட என்ன பிடிக்கும்? எப்படி உனக்கு இவ்வளவு லவ்வு? எப்பவும் பசங்க பொண்ணுங்களைப் பத்தி சொல்லிக் கேட்டு போர் அடிச்சுப் போச்சு, நீ சொல்லு”
தாரிணி யோசித்தாள், பிரதாபனை அவளுக்குப் பிடிக்கும். பிரதாபனிடம் என்ன பிடிக்கும்? நிச்சயம் இப்போது எதுவும் நினைவில்லை. பிரியம் அப்படித்தான், பிடிக்கும் முன்னே சின்ன விஷயங்களை கூட ஆராயும், அந்த பிடித்தம் பிரியமாக வளரும் போது முழுமைப் பெற்று, மொத்தமாக பிடிக்கும். எது பிடிக்குமென்ற கேள்வியின்றி எல்லாம் பிடிக்கும், எல்லாவற்றையும் ஏற்கும்!
இரு நிமிடங்கள் யோசித்து, “எனக்குப் பிரதாபனை பிடிக்கும்டா, என்ன பிடிக்கும்னு கேட்டா எனக்குத் தனியா சொல்ல தெரியல” என்றாள் தாரிணி.
“ஒஹ்ஹ், பின்னே!” என்று வினயன் கிண்டலாக ராகமிழுத்தான்.
“என்னடா, கிண்டலா? ரொம்ப பண்ற, உனக்கு யாராவது பிடிச்சாத்தான் உனக்கு இது புரியும், இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது.”
“உனக்கும், பிரதாபனுக்கும் இதுவொரு நல்ல பொருத்தம். எதையாவது சொல்லிட்டு எனக்குப் புரியாதுனு ரெண்டு பேரும் சொல்லுங்க, புரியற மாதிரி சொல்லிடாதீங்க!”
“சிலதெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது, தானா புரியற விஷயம்”
“காதலிச்சா இப்படி புரியாத மாதிரி பேசணும், ரைட்டா?”
“அடே!”
“ஹாஹா! விடு தாரிணி ஒரு வாரம்தானே, அதுக்கு அப்புறம் அவர் கையைப் பிடிச்சாவது இழுத்துட்டு வந்து, உன் முன்னாடி நிப்பாட்டுறேன்” என்றான் வினயச்சந்திரன்.
வினயன் பேச வந்த விஷயம் ஒன்றும் சாதாரணமில்லை, தாரிணி பிரதாபன் இருவரின் வாழ்க்கைப் பற்றியது. அதனை நிற்க வைத்து அவசரமாகப் பேசி, பிரதாபன் மறுத்துவிட்டால்? முன்பு கூட அப்படி செய்திருப்பான், இப்போது தாரிணியின் பாசம் புரிய, அதே நேரம் பிரதாபனும் நல்லவிதமாக இருக்க, பிரதாபனின் பதில் நிச்சயம் தாரிணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று வினயன் விரும்பினான். மாநாடு முடிந்து அவன் பொறுமையாக வரட்டும், எப்படியாவது தாரிணிக்கு ஓகே சொல்ல வைக்கிறேன் என்று மனதில் மீண்டுமொருமுறை உறுதியாக நினைத்தான் வினயன்.
பிரதாபன் ஆலப்புழா சென்றதும், காலை உணவு முடிய வினயன் நசீரையும் பேருந்தில் ஏற்றிவிட்டான். அவர் கைனகரி சென்று நிலங்களைப் பார்ப்பார், மின்மினிகுட்டி கல்லூரி சென்று முன்மாலைப்பொழுதில் திரும்பினாள், வினயன் களரிப்பள்ளியைச் சுத்தம் செய்துவிட்டு ஓய்வாக இருந்தான். பேச்சுத்துணைக்கும் ஆளில்லாது தனியாக உணர்ந்தான். எப்போதும் அவனுக்குத் தனியாக இருப்பது பிடிக்காது, அவன் வீட்டில் கூட தனியாக இருக்க மாட்டான், அப்பா, அண்ணன் என்று யாராவது உடனிருப்பார்கள். இல்லையா, அரக்க பறம்பில் வீட்டுக்குச் சென்று விடுவான்.
நசீர் இல்லாமல் போனை நோண்டி பொழுதை ஓட்டி வினயன், இரவு உணவு முடியவும் ஷெட்டுக்கு சென்று விட்டான். அப்பாவும், அண்ணனும் வீடு வந்த நேரம் பார்த்து அவர்களை அழைத்துப் பேசினான். முன்பக்கமிருந்து பேசினால் வீட்டிலிருப்பவர்களுக்குக் கேட்டாலும் கேட்கும் என்று பின்பக்கம் சென்றான்.
பின்கட்டில் சாவகாசமாக கதையளந்த வினயன் நிச்சயம் மின்மினியை அந்த நேரம் எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் சில நொடிகள் அவன் அப்படியே நிற்க, மின்மினிகுட்டியின் கேள்வி அவனை பேச வைத்தது. சலிப்போடு பெருமூச்சுவிட்டவன், மின்மினியைப் பார்த்தான்.
அப்போதுதான் அவள் கையிலிருந்த கத்தி தட்டுப்பட,
“என்ன இது?” என்றான் எரிச்சலாக.
“சத்தியம் பரயு, இதானு காஷ்மீர்?” என்றாள் கோபமாக.
தண்ணீர் எடுக்க வந்த மின்மினி காதில் பின்கட்டிலிருந்து வந்த பேச்சுக்குரல் விழ, யார் அது இந்த நேரத்தில் என்ற எச்சரிக்கை உணர்வில் கத்தியோடு கதவைத் திறந்தாள். வினயனைப் பார்க்கவும்தான் பயம் போனது. ஆனால், அவன் பேசியது தெளிவாய் காதில் விழ, மின்மினிக்கு ஒன்றுமே புரியவில்லை. தாமரக்குளத்திலிருந்து கொண்டு காஷ்மீர் என்கிறான், ஏன் பொய் சொல்கிறான் என்ற கேள்விகள் வர, கோபத்தோடு நின்றாள்.
“மின்மினி! முதல்ல சத்தம் போடாம நான் சொல்றதை கேளு” என்றான் வினயச்சந்திரன்.
வினயச்சந்திரன்தான் வந்த உண்மையான காரணத்தை சொல்ல, மின்மினி நம்பாமல் பார்த்தாள்.
“பிரதாபனேட்டாவா? ப்ரணயமோ? கள்ளம்” (காதலா? பொய்) என்ற மின்மினி வினயன் சொன்னதை நம்பவில்லை.
“இத்தன நாள் என்னை பார்க்கிற? நம்பமாட்டியா நீ?” என்று வினயன் கேட்க, மின்மினி அவனிடம்,
“இத்ரயும் திவசம் நிங்கள் கள்ளமல்லே பரஞ்சது?” (இத்தனை நாளும் நீங்க பொய் தானே சொன்னீங்க?) என்று மின்மினி கேட்டு விட,
“அதை நம்புன, இப்போ உண்மை சொன்னா நம்ப மாட்டேங்கிற?” என்றான் வினயன்.
“எனிக்கு விஸ்வசிக்கான் பற்றுனில்லா” ( நான் நம்ப மாட்டேன்)
“விஷ்வஸிக்கு (நம்பு) மின்மினி” என்ற வினயன்,
“இதை பாரு” என்ற வினயன், எம்.பி.ஏ படிக்கும்போது எடுத்த குழு புகைப்படத்தை மின்மினியிடம் காட்டினான்.
“இது யாரு?”
“நிங்கள் எம்.பி.ஏவா?” என்று அவள் ஆச்சரியப்பட,
“ஆமா, பின்னாடி ரோ’ல அந்த ஆலிவ் க்ரீன் சேரீ யார்னு பாரு” என்று வினயன் போனை நீட்டினான்.
“அதைத்தானே இவ்வளவு நேரம் சொல்றேன். உன் சேட்டாவும், தாரிணியும் ஒரே காலேஜ்ல படிச்சவங்கனு உனக்குத் தெரியும்தானே?” என்ற வினயனின் கேள்விக்குத் தலையசைத்தாள் மின்மினி.
“போன வாரம் தாரிணி பர்த்டே அன்னிக்கு, உன் சேட்டா ஏன் காலையில கோவிலுக்குப் போகணும்? போனவர் பிரசாதத்தையும், பூவையும் உன் கிட்ட கொடுக்காம, வீட்டுக்குள்ளயும் வைக்காம, ஏன் வாசல்ல வச்சுட்டு போகணும்? பரயு மோளே”
“இப்பவாச்சும் நம்புறியா? இல்ல தாரிணிக்குக் கால் பண்ணி கேட்டுக்கிறியா?”
“ஞான் விஸ்வஸிக்குனு( நான் நம்புறேன்), வேண்டா” என்றாள் மின்மினி.
“போதுமா? நான் போகலாமா? அண்ட் ப்ளீஸ் மின்மினி, ஒரு வாரம் இதை வெளியே சொல்லாத, சேட்டாவை தாரிணி ரொம்ப விரும்புறா.” என்று வினயன் சொல்ல,
“எனிக்கு மனசிலாயி”( எனக்குப் புரியுது) என்று மின்மினி கூற, வினயன் புன்னகையோடு முன்பக்கம் போக பார்க்க,
“ஹலோ! சாரே! நிங்கள் கதை பரயு” என்று அவனை நிறுத்தினாள்.
இரவுக்காற்று இருவரையும் தீண்டி போக, வினயன் ஆஸ்தானமாக அமரும் அந்த பெரிய கல்லில் உட்கார்ந்தான்.
“என்னைப் பத்தி சொல்லணும்னா, என் ஊரு தேவிகுளம். எங்க வீட்ல நான், அப்பா, என் அண்ணா ஜெய். என் அண்ணி ஊர்மிளா, அவங்களுக்கு இரண்டு பசங்க, பெரியவ சுஜாதா எங்க அம்மா பேரு, குட்டி பையன் ரத்னா. இப்போ எங்க ஊர்மி மறுபடியும் கன்சீவா இருக்கா, இங்க சமாளிக்க கஷ்டம்னு அண்ணா அவளை காஞ்சிபுரம் அனுப்பிட்டான். எங்களுக்கு மூணாறுல, இடுக்கில ரிசார்ட்ஸ் இருக்கு. எனக்குத் தாரிணி எம்.பி.ஏ படிக்கும்போது ப்ரண்ட். அப்போ இருந்து இப்போ வரைக்கும் நாங்க ரொம்ப க்ளோஸ். ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்காகத்தான் இங்க வந்தேன்” என்று வினயன் தன் கதையை சொல்ல,
“எத்தர கள்ளம்? பொய்யன்” என்றாள் மின்மினி.
வினயன் சிரிக்க,
“அச்சன், ஏட்டன் குறிச்சு பறஞ்சதெல்லாம் கள்ளம். கள்ளன் கள்ளன்” என்று திட்டினாள்.
“போதும் மின்மினி, எல்லாம் பொய்தான்! பின்ன உண்மையை சொன்னா சேட்டா என்னை சேர்த்துருப்பாரா?”
“இல்ல”
“பக்கத்துல இருந்து பார்க்காம, எப்படி தாரிணியோட சாய்ஸ் சரியான்னு எங்களுக்குத் தெரியும்” என்று வினயன் கேட்டதும் மின்மினி முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? உன் சேட்டா உனக்கு நல்லவரா இருக்கலாம், ஆனா பொண்ணு கொடுக்கிறவங்க யோசிச்சுதான் செய்யணும்” என்றான்.
மின்மினிக்கு முதலில் வினயன் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. பின் ஆச்சரியமாக இருந்தது. கடைசியில் ஆசுவாசமாக இருந்தது. வினயனுக்கு நல்ல குடும்பம் இல்லை என்று வருத்தம், பரிவு எல்லாம் அவன் மீதிருந்தது. இப்போது அப்படியில்லை என்பது அவன் பேச்சில் தெரிந்தது, கள்ளன் என்று கோபம் வந்தாலும், குடும்பத்தைப் பற்றி பேசும்போது, நிலவொளியில் தெரிந்த அவன் முகத்தில் பெருமை, நிறைவிருந்தது. அது மின்மினிக்குப் பிடித்திருந்தது.
“ஓகே, குட் நைட்!” என்று மின்மினி எழ,
“அது சரி, என்ன கத்தி?” என்றான் வினயச்சந்திரன்.
“இவிட யாரோ உண்டென்னு ஞான் வன்னு, ஸோ சேப்டி”
“ஹேய், மின்மினி நீயே கத்தியைத் தூக்குறியே. அப்போ சேட்டாவுக்கு நான் சொன்னதெல்லாம் பொய்னு தெரிஞ்சா, களரில போட்டு என்னை காலி பண்ணிடுவார் போல..” என்ற வினயனின் பேச்சில் மின்மினிக்கு சிரிப்பு வர, வாய்விட்டு சிரித்தவள், சத்தம் கேட்குமே என பயந்து வாயை மூடிக்கொண்டாள்.
மின்மினிதான் அவன் இயல்பான பேச்சில் இயல்பைத் தொலைத்து நின்றாள்.
அடுத்த நாள் காலை வினயனால் எழவே முடியவில்லை. இரவு மின்மினியோடு பேசி நேரம் கழித்து உறங்கியிருக்க, நாலு மணியெல்லாம் நடு ஜாமமாக இருந்தது.
மின்மினி வினயனை பெயர் சொல்லி பொறுமையாக அழைத்துப் பார்த்தவள், அவன் அசையவே இல்லையென்றதும் யோசிக்காது அவன் முகத்தில் நீரைத்தெளித்தாள்.
“எண்ட அம்மே! பேய்” என்று அவன் பதறியெழ,
மின்மினி, “பால் யார் எடுப்பா?” என்றாள் கோபமாக.
“நேத்து அவ்வளவு கதை கேட்டும் என்னை வேலை வாங்குறியா?” என்று வினயனும் தூக்கம் கெட்ட எரிச்சலில் முறைத்தான்.
“ஓஹ், தேவிகுளத்து ராஜகுமாரனை ராவிலே எநிப்பிச்சால் தேஷியம் வருமல்லோ? (ராஜகுமாரனை ராவுல எழுப்பினா கோவம் வருமில்ல) என்று மின்மினிகுட்டியும் கிண்டலாகக் கேட்டாள். எழும்போதே இன்னும் ஆறு நாட்கள் என்று எண்ணி எழுந்த வினயனுக்கு, அந்த ஏழு நாட்கள் முடிந்தபோது ஏன் இத்தனை விரைவாக காலம் சென்றது என்ற கேள்வி உதித்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.