நசீர் வந்து அழைக்கவும் வினயன் சிந்தனையிலிருந்து விடுபட்டான்.
“சொல்லுங்க சேட்டா”
“மோனே! சாயா” என்று நசீர் அவனிடம் நீட்டிட வாங்கி கொண்டவனுக்கு வீட்டு ஞாபகம். எப்போதும் அப்பாவுடன் இல்லை அண்ணனுடன் ஒட்டிக்கொண்டே திரிவான், வீட்டில் இப்போது இரண்டு குழந்தைகள். அவன் அண்ணன் ஜெய்ச்சந்திரனின் மக்கள் சுஜாதா, ரத்னாகரன். சுஜிம்மா அவனுடனே சுற்றுவாள். இடுக்கியின் தேவிகுளம் அவன் பிறப்பிடம், அந்த மலைவாசஸ்தலத்தின் குளுமையில் வாழ்ந்தவனுக்கு ஆலப்புழாவின் தாமரக்குளம் கொஞ்சம் வெப்பமாக தெரிந்தது. இதில் ஒருவாரமாக ஆலப்புழாவிலும் அதன் காயலில் அமைந்திருக்கும் தீவு கிராமமான கைனகரியிலும் இருந்தான். ஆலப்புழாவும் வெக்கையாகத் தெரிந்தாலும் கைனகரி உப்பங்கழி சுற்றியிருக்க, குளுமையாக இருந்தது.
சாயா குடித்து அந்த கயிற்று கட்டிலிலிருந்து எழுந்த நசீர் “வினயா! நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன். நீ எங்கேயும் போகாம இங்கயே இரு” என்றார்.
“எப்படி சேட்டா இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?” என்று நசீரிடம் கேட்க
“அது ஆலப்புழாவுல டூரிஸ்ட் வருவாங்க இல்லை, அவங்க கூட பேசி பழகி கொஞ்சம் கத்துட்டேன். நான் ஒரு இருபது வருஷம் முன்னாடி ஒரு மூணு வருஷம் மெட்ராஸ்ல டீ கடையில வேலை பார்த்தேன்” என்றார்.
“சேட்டா! அப்போ நிலாவுல கூட நம்ம ஆளுங்களுக்கு ஒரு சாயா கடை இருக்கிறது உண்மை, அந்த ஆம்ஸ்ட்ராங்க்க்கு முன்னாடி நிலாவுல கால் வச்சு கடை போட்டது சேட்டானு பேசிக்கிறாங்களே அது உண்மைதான் இல்ல?” என்று தீவிரமான குரலில் கேட்டிட நசீர் முதலில் முறைத்தவர் பின் அவன் கேலி புரிந்து
“பின்னே?! சாயா மட்டுமில்ல அவிட பழம்பொரியும் உன்னியப்பமும் கூட அந்த சேட்டா விக்குறார்” என்று பதில் சொல்லி போனார் நசீர்.
வினயச்சந்திரன் அவர் பேச்சில் வாய் விட்டு சிரித்திட, அந்த உரத்த சிரிப்பு மின்மினி குட்டிக்குக் கேட்டது. வினயன் பேசியது காதில் விழ, அவள் முகத்திலும் சிரிப்பு. அந்த வீட்டில் பேச்சுக்கே பஞ்சம், இதில் எங்கே சிரிப்பு? அதிலும் இத்தனை சத்தமாக, வினயச்சந்திரனுக்கு முன்பே அவன் சிரிப்பொலி பூவம்பள்ளி வீட்டை நிறைத்தது. வினயனுக்கே தெரியாது சிறிது நேரம் மின்மினியின் முகத்தில் புன்னகை வர காரணமாயிருந்தான்.
ஆனால் வினயனுக்கு வீட்டு ஞாபகம் அதிகமாக இருந்தது. அதுவும் வெளியூர் வந்திருக்க, அவர்களை பிடித்தால் கூட கொஞ்சம் இயல்பாக இருந்திடலாம், அவனால் நசீரை தவிர யாரிடமும் இயல்பாக இருக்க முடியவில்லை. பிரதாபனிடம் பொய் சொல்கிறோம் என்பதே ஒரு கவனத்தைக் கொடுத்திருக்க, அவன் கூட மதித்து நடந்தான். ஆனால் அவனின் அச்சச்சன் பொன்னச்சன் பார்வையில் கூட மரியாதையில்லை, ஒரு வேற்றுமை. இதுவரை இப்படியான உணர்வை அனுபவித்ததில்லை.
இதுவும் கூட புது அனுபவமாய்த்தான் இருந்தது, அவன் ஊரில் அவனை எல்லாருக்கும் தெரியும். மற்ற இடங்களில் அவனின் உண்மையான அடையாளம் சொல்லியிருக்கிறான், அனைத்து மத நண்பர்களோடு பழகியிருக்கிறான், ஆண் பெண் மிதமின்றி நட்பு அவனுக்குண்டு. இங்கோ தேவிகுளத்துக்காரன் ஆலப்புழாவின் மாவேலிக்கர தாலுகாவிலுள்ள தாமரக்குளத்தில் வேலைக்காரன்!
அவன் பெயர், ஊரைத் தவிர எதுவும் உண்மையில்லை. இடுக்கி என்றானே தவிர வேறு தகவல் பகிரவில்லை. படிப்பை கூட சொல்லவில்லை, பன்னிரெண்டாம் வகுப்பு என்று அடித்து விட்டிருந்தான், சுற்றுலாத்தலமான இடுக்கி விட்டு ஏன் இங்கே என்றால் என் அப்பா சரியில்லை குடிகாரன் என்றான், அண்ணன் உதவாக்கரை என்றான், அண்ணியை வில்லி என்றுவிட அவ்வளவுதான்! நம்பிவிட்டார்கள். வினயனுக்குத் தெரியவில்லை, பிரதாபன் அப்படியொன்றும் இரக்கப்பட்டு வேலையில் சேர்க்கவில்லை, அவன் மனதில் வினயன் குறித்த நல்லெண்ணம்.
வீட்டுக்குப் பேசலாம் என்று நினைத்த வினயன் அந்த தெரு முனைக்குச் சென்றான், பெரிய மரமிருக்க சுற்றி பார்த்தபடி அப்பாவுக்கு அழைத்தான். அவன் அப்பா பாலச்சந்திரன் இடுக்கியில் மூன்று தங்கும் விடுதி வைத்திருக்கிறார், வினயனும் அவன் அண்ணன் ஜெயனும் அதனை பார்த்துக்கொள்கின்றனர். மகன் அழைக்கவும் பாலச்சந்திரன் முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது, அவர் மனைவி சுஜாதா இறந்து சில வருடங்கள் கடந்திருக்க பிள்ளைகள் மட்டுமே அவரின் சந்தோஷம், அதுவும் வினயனிடம் அதிக ஒட்டுதல்.
“டாடீ” என்று வினயன் அழைக்க
“சொல்லுடா! சாப்பிட்டியா? என்ன பண்ற?” என்று பாலா வரிசையாகக் கேட்க
“செம்மீன்(இறால்) கறி சாப்பிட்டேன் பா, அடிபொலி டேஸ்ட்! நம்ம வீட்ல என்ன சாப்பாடு?” என்று விசாரித்தான்.
“இங்க சாம்பார்டா”
“நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்” என்று வினயன் பாடிட
“ஏடா வினயா! வீட்டுக்குத்தான் வந்தாகணும், அது ஞாபகமிருக்கட்டும்டா மகனே” என்று கிண்டலாய் எச்சரித்தார் பாலச்சந்திரன்.
“வரேன்பா”
“ஒருவாரம் ஆச்சே டா, இன்னும் எத்தன நாள் டிரிப்?”
“இன்னும் நம்ம ஊரை சுத்தி முடிக்கல, ஆலப்புழாவுல இருக்கோம். அப்படியே ஹம்ப்பி, புனே, ஜெய்ப்பூர், லடாக் போறதுதான் ப்ளான். எப்படியும் ஒரு மாசம் ஆகும்”
“அவ்வளவு நாளா?” என்று பாலா மகனை பிரிந்த ஏக்கத்தில் இழுக்க
போனை வாங்கி “என்னடா சவுண்ட்?” என்று தம்பியைக் கேட்க
“டிரிப் பத்தி பேசினோம் ஜெய், அங்க ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்ற வினயன் கேள்விக்கு
“இல்லை டா, நீ உன் ப்ரண்ட்ஸோட எஞ்சாய் பண்ணிட்டு வா. கல்யாணமாகிட்டா கனவுல கூட நீ அதெல்லாம் நினைக்க முடியாது” என்றிட ஜெயனின் மனைவி ஊர்மிளா கணவன் பேச்சில் முறைத்தாள்.
“ஜெயேட்டா! என்ன இப்படி உண்மையெல்லாம் வருது, ஊர்மி மேல பயமில்லையா?” என்று வினயன் கிண்டல் செய்ய
“டேய் உண்மையை சொல்ல எதுக்கு பயப்படணும்? வெளியே போகணும்னா குழந்தைங்களை விட்டு நாங்க மட்டும் போக முடியாது, பசங்க ஹெல்த் ஒத்துவராது. நான் தனியா போகலாம்னா எனக்கு ஊர்மியையும் பசங்களையும் விட்டு இருக்க முடியாது” என்றான்.
“எண்ட அம்மோ! ஜெய் ஏற்கனவே நான் இந்த ஊர் வெயில்ல கடுப்பா இருக்கேன், நீ என்னை வெறுப்பேத்தாத” என்றவன் ஊர்மிளாவிடமும் சுஜிம்மாவிடமும் பேசி வைத்தான்.
இப்படிப்பட்ட குடும்பத்தை என்னவெல்லாம் சொன்னோம் என்று யோசித்தவனுக்கு வருத்தமாக இருந்தாலும், அவன் நோக்கம் நல்லதாக இருப்பதால் மனதை தேற்றினான். அதே நேரம் அவன் இயல்பாக இது மட்டும் அப்பா கேட்டா என்ன ஆவார் என்று தோன்ற சிரிப்பை அடக்க படாதபட்டான். அந்த புன்னகையோடு மீண்டும் பூவம்பள்ளில் வீட்டுக்குள் வந்தவன் வாசலில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான். பொன்னச்சன் மாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்று வந்தவர் வினயனை பார்த்தாலும் ஒன்றும் பேசவில்லை.
எப்போதும் எல்லாரிடமும் எளிதாக பழகுபவனுக்கு அவரின் அந்த பார்வையே தள்ளி நிறுத்தியது, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குணம், மனிதருக்குள்ளும் பல குணம் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அதை அனுபவமாக தந்தது இந்த பயணம். அவன் ஊர் தமிழக பார்டரை ஒட்டியிருக்கும், தமிழர்கள் அங்கே அதிகமுண்டு, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்துக்கு வந்தவர்கள் தமிழர்கள். இடுக்கியில் இந்த அந்நியத்தன்மையை அவன் உணர்ந்ததே இல்லை.
தேவிகுளத்து அச்சுதனை போல் பாசமான மனிதரை பார்த்தவனுக்கு இந்த பூவம்பள்ளில் பொன்னச்சனை பிடிக்கவில்லை, அச்சுதன் அவன் தாத்தாவின் நண்பர். இவர்களுக்கு மிகவும் நெருக்கம், அவரிடம் ஏனோ அந்த வேற்றுமையை என்றுமே அவன் உணர்ந்ததில்லை. அதனால் பொன்னச்சனின் இந்த பார்வை, மதிக்காத தன்மை கோபம் கொடுத்தது, அதே நேரம் இவனுக்கு அவர் தேவையே இல்லை, அதனால் எளிதாக அவ்வெண்ணத்தை உதறினான்.
இருந்தும் சிந்தனைவயப்பட்ட அவன் முகம் கண்ட நசீர்
“என்ன வீட்டு ஞாபகமா வினயா? இருந்தாலும் சின்ன வயசுல உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கக் கூடாது, மதியம் நீ சாப்பிட்டப்பவே தெரிஞ்சது. உங்கண்ணி உன்னை எப்படி சாப்பாடு போடாம கொடுமை பண்ணுறான்னு, நீ சம்பாரிக்கிறதை எல்லாம் உங்க வீட்டுக்கு அனுப்பாத! உங்க அண்ணனுக்குப் பொறுப்பு எப்படி வரும்? இங்கயே கொஞ்ச நாள் இரு, நம்ம பிரதாபன் உன்னை தெரிஞ்சவங்க மூலமா துபாய் அனுப்பி வைப்பான். அங்க போய் நல்லா சம்பாதிக்கலாம்” என்று சொல்ல
“நான் அப்படியா பட்டினி கிடந்தவன் மாதிரி தின்னேன்? எப்பவும் சாப்பிடுற மாதிரிதானே சாப்பிட்டேன். இதை மட்டும் ஊர்மி கேட்டா சோறு தண்ணி கட்” என்று மனதில் புலம்பியவனுக்கு நசீரின் கவலையான பாவனையில் சிரிப்பு வந்தது.
“காலம் காலமா சினிமாவுல வர ஹீரோவுக்குள்ள கஷ்டத்தை நான் அடிச்சு விட்டு, அதை நம்புற அளவுக்கு அப்பாவியா இருக்கீங்களே சேட்டா” என்று நினைத்தவன் சிரிப்பை அடக்கினான்.
இரவு உணவுக்குப் பின் வினயச்சந்திரனுக்கும் ஒரு கயிற்றுக் கட்டில் வழங்கப்பட, ஷெட்டின் கதவை அடைத்துவிட்டு அவனும் நசீரும் உறங்கினர். நசீர் காலை ஐந்து மணிக்கு எழுந்து களரி பள்ளியை சுத்தம் செய்திட, வினயச்சந்திரனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. மிகவும் ஆழ்ந்த உறக்கம், புது இடம் சரியாக உறங்கியிருக்க மாட்டான் என்று இரக்கம் கொண்டு நசீரும் எழுப்பவில்லை. அதற்குள் வழக்கம்போல் பொன்னச்சனும், பிரதாபவர்மனும் எழுந்து களரி பயிற்சிக்குச் சென்றனர். அவர்கள் களரி பள்ளியில் இருக்கும் நேரத்தில் மின்மினி குட்டியிடமிருந்து சாயா வாங்கிய நசீர் வினயச்சந்திரனை எழுப்பினார்.
மிகவும் சிரமப்பட்டு எழுந்தவனுக்கு “தெரியாம இங்க வந்துட்டேன்” என்ற எண்ணமே. பின் ஏன் வந்தோம் என்று நினைத்தவன் பல் துலக்கி சாயா குடித்து எழுந்தான். அதன் பின்னே வீட்டின் பின்பகுதியில் இருக்கும் பாத்ரூமில் குளித்து வந்தான். அப்படியே நடந்து களரி பள்ளியின் வாசலில் வந்து நின்றான், அன்று வேறு பேட்ச் மாணவர்கள் இருந்தனர்.
“அது என்ன தாத்தா களரி பயிற்சி தராம அந்த பையனை என்ன பண்றார்? ஆயுர்வேதா டீரிட்மெண்ட்டா” என்று கேட்டான்.
பொன்னச்சன் ஒரு ஆடவன் கையில் எண்ணெய்த் தடவி நீவிவிட்டார்.
“ஆயுர்வேதமல்லே! இது தெக்கன் களரில உள்ள நடைமுறை எல்லாம் அகஸ்தியர் வழி வந்தது, அவரோட சித்த மருத்துவ சிகிச்சையைக் களரி சொல்லித் தர ஆசான் கத்துக்கணும், வடக்கன் களரியில, வடக்கு பக்கம்தான் ஆயுர்வேதா” என்றவர் அவன் கையைப் பிடித்து இழுத்துவந்து
“அந்த பையன் யார் தெரியுமா? நேத்து மின்மினி குட்டி களரி பள்ளிக்கு வந்தப்போ கொஞ்ச நேரம் பார்த்துட்டான். அதை பிரதாபன் பார்த்து கையை முறுக்கிட்டான், அதுக்குத்தான் சேட்டா இப்போ வைத்தியம் பார்க்கிறார், அவருக்கு விஷயம் தெரியாது” என்றதும் வினயன் துடுக்காக
“தெரிஞ்சா?” என்றான்.
“பேரன் வலது கையை முறுக்கினா அவர் இடதுகையை முறுக்கியிருப்பார்” என்ற நசீர்
“அதுக்குத்தான் உன்னை எச்சரிக்கை பண்றேன், மின்மினி குட்டி கிட்ட பேச்சு வச்சுக்காத! புரிஞ்சதா?” என்றார் தீவிரமாக.
“அட போங்க சேட்டா! எனக்கே ஆயிரம் பிரச்சனை, இதுல உங்க மின்மினிகுட்டி கிட்ட பேச போறேனா?” என்றான் அலுப்பாக.
அதன்பின் மதிய உணவு முடியும் வரை அங்கிருக்கும் வேலைகள் பார்த்தான். நசீர் பொன்னச்சனோடு வெளியே சென்றுவிட, மாலை கல்லூரி விட்டு வந்த மின்மினிக்கு மளிகை சாமான் வாங்க வேண்டும் என்று நினைவில் வர, பிரதாபனுக்கு அழைத்து சொல்ல அவன் வினயனை அனுப்ப சொன்னான்.
வினயனை அழைத்த மின்மினிகுட்டி அவனிடம் மளிகை சாமான் லிஸ்ட் கொடுத்துவிட, வினயன் அரை மணி நேரத்தில் பொருட்களோடு வந்தான். மின்மினிகுட்டி பொருட்களை சரி பார்த்தவள், பின் பில்லை பார்த்துவிட்டு
“இரண்டு ரூபா எவிட?” என்று கேட்டாள். அவள் கேட்ட தோரணை வினயனை குற்றம் சாட்டுவதை போலியிருந்தது.
“எந்தோ?”(என்ன?”) என்று வினயன் மின்மினியிடம் கேட்டிட
கடைக்காரர் சில்லரை இல்லையென்றிட வினயசந்திர மகாபிரபுவும் விட்டுவிட்டார், இங்கு மின்மினி இரண்டு முறை கேட்டு பார்த்தவள் அவன் பதில் சொல்லாமல் நிற்க, பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
பத்து நிமிடத்தில் “மின்மினி குட்டி!” என்று வாசலில் நின்று வினயன் சத்தம் போட
“எந்தா?” என்றபடி மின்மினி வர
“சூடா ஒரு சாயா” என்று கேட்டான். மின்மினி பத்து நிமிடத்தில் சாயாவோடு வந்தாள், அதனை குடித்தவன் மீண்டும் “மின்மினி” என்று கூவினான். அந்த பெயரை சொல்ல பிடித்திருக்க, கொஞ்சம் ரசித்து சொன்னவன் மின்மினி வரவும்
“சாயா சூப்பர், அப்புறம் உன் பெயரும் நல்லாயிருக்கு மின்மினி!” என்று மின்மினியின் கண்களை பார்த்து பாராட்டாக சொன்னான். மிகவும் நேர்மையான செயல், ஆனால் மின்மினியால் அதனை ரசிக்க முடியவில்லை, பேசாமல் சென்றவள் மீண்டும் திரும்பி வந்து
“நாளைக்கு இரண்டு ரூபா தரணும்” என்றிட
“ஹேய் உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? சும்மா ரெண்டு ரூபான்னு அதையே பேசுற?” என்று வினயன் எரிச்சலாகக் கேட்க
“கணக்குப் பார்த்து ஒழுங்கா வாங்கிட்டு வந்திருந்தா நான் ஏன் கேட்கிற? கணக்குத் தெரியல” என்று தமிழை மலையாள வாசத்தோடு பேச, வினயனுக்குக் கடுப்பாக வந்தது.
“தேஷியக்காரி(சிடுமூஞ்சி, கோவக்காரி)” என்று முணுமுணுத்தவன் “ஒரு எம்.பி.ஏ கோல்ட் மெடலிஸ்டை கணக்குத் தெரியலன்னு சொல்லிட்டு போறா, குருவாயூரப்பா! எனக்குப் பொறுமை கொடு” என்று வேண்டியவன் நசீர் வரும் வரை ஷெட்டுக்குள் சென்று உட்கார்ந்தான்.
“பெயர் நல்லாயிருக்குனு பாராட்டினா தேங்க்ஸ் சொல்லணும், பெரிய இவளாட்டம் பண்றா? போயும் போயும் இவளை பார்த்து ஒரு கோட்டி பய கையை டேமேஜ் பண்ணியிருக்கான். அஹங்காரி, இவ வீட்டு இரண்டு ரூபா வச்சு நான் புர்ஜ் கலிஃபாவுல தங்க போறேன் பாரு. பெட் கூட இல்லாத ஷெட்தான் எனக்கு வாய்ச்சது” என்று நொந்தவன் கயிற்று கட்டிலில் படுத்தான், நசீர் இரவு உணவுக்கு எழுப்பும் வரை வினயனுக்கு அப்படியொரு உறக்கம்.