அந்த பக்கமாய் ஒரு குளம் உண்டு, நீண்ட அகன்ற பாறாங்கற்கள் இருக்க அதுவே அந்த குளித்திற்குப் படிகள் போல. அதில் வெறுங்காலோடு அடியெடுத்த வைத்த பிரதாபன், கால்களை குளிர்ந்த நீரில் நனைத்தான். சிறிது நேரம் பாறைகளின் ஈரத்தை உணர்ந்து கால்களை நீரில் விட்டு ஓய்வாக உட்கார்ந்தான்.
வினயனும் அருகே அமர, அந்த அதிகாலை நேரத்தில் பறவைகளின் சத்தத்தோடு குளத்தின் ஈரம் பரவியிருந்தில் காற்று தொட்டு போக, வினயனை விட்டால் அங்கே இன்னொரு உறக்கம் போடுவான். வினயன் சொன்னதை கேட்ட பிரதாபன்,
“களரி எல்லாம் கட்டாயத்துல கத்துக்க முடியாது, ஒரு மாசம் போன பின்னாடி உனக்கிஷ்டமிருந்தா கத்துக்கோ” என்றவன்
“அன்னிக்கு எனக்காக ஏன் வினயா சண்டை போட்ட?” என்று கேட்டான்.
“என்ன சேட்டா நீங்க? யார் உங்க இடத்துல இருந்தாலும் நான் சண்டை போட்டிருப்பேன்..” என்றதும்
“அதான் ஏன்?” என்றான் மீண்டும். பிரதாபனை எப்படி பார்க்கலாம் என்று நினைத்து தாமரக்குளத்திற்கு வந்த வினயச்சந்திரனுக்கு, என்ன சொல்லி அவனோடு நெருங்க என்று தெரியாமல் யோசித்து நின்றிருந்தான். பிரதாபவர்மா கட்சி அலுவலகத்தில் இருக்கிறான் என்ற தகவல் மட்டும் தெரிய, அங்கிருந்த டீ கடையில் சாயா குடித்தபடி யோசித்து நின்றான் வினயச்சந்திரன்.
அந்த நேரம் கட்சி அலுவலகத்தின் வாசலில் சத்தம். பிரதாபன் வாசலில் நிற்க, அவனை யாரோ பேசிக்கொண்டிருக்க பிரதாபனின் புகைப்படத்தை தன் அலைப்பேசியில் ஒரு முறை பார்த்த வினயன் அங்கு செல்ல, அந்த நேரம் எதிரே இருந்தவன் பிரதாபனை அவதூறாகப் பேசிவிட, வினயன் அவனை அடித்துவிட்டான். வினயன் தேவையில்லாத வம்புக்கு செல்ல மாட்டான் என்றாலும் கூட, அந்த நேரம் அப்பேச்சு பிடிக்கவில்லை.
அதை யோசித்தவன் “அம்மாவை தப்பா பேசினா அடிக்க மாட்டாங்களா சேட்டா?” என்றான்.
“என் அம்மாவ உனக்குத் தெரியாதே” என்று பிரதாபன் கேட்டான். ஒரு வாரமாக மனதில் ஓடிய கேள்விகள் ஓய்வான பொழுதில் வெளிவந்தன, அன்றைய நிகழ்வுக்குப் பின் பிரதாபனை பேசியவனை கட்சியின் பெரிய உறுப்பினர் அடக்கி வைக்க, பிரதாபனுக்குத் தனக்காக பேசிய வினயச்சந்திரன் மேல் தனி வாஞ்சை. அவனுக்கு சில வருடங்களாக நல்ல நண்பர்களே இல்லை, யாரையும் உடன் சேர்க்கவில்லை. அப்படியிருக்க எங்கிருந்தோ வந்த ஒருவன் காரணமேயின்றி அவனுக்காக நின்றிருக்க, பிரதாபனுக்கு வினயச்சந்திரனை பிடித்தது.
“அம்மான்னா அம்மா தானே சேட்டா? யார் அம்மாவா இருந்தா என்ன? அம்மாவை பிடிக்காதவங்க இருப்பாங்களா? எனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும், இப்போ அவங்க இல்லை” என்றான். ஏற்கனவே வினயன் சொல்லிக் கேட்டிருக்க பிரதாபனுக்கு உள்ளே உருகினாலும் அவனால் அன்பை வார்த்தையால் காட்ட முடியாது. அமைதியாக கேட்டவன்
“எனக்கு என் அம்மாவை பிடிக்கும்னு நான் சொல்லவே இல்லையே..” என்றிட, வினயச்சந்திரன் அதிர்ச்சியாகப் பார்த்தான். பிரதாபனுக்கு அம்மாவை ஒரு காலத்தில் பிடிக்காமல்தான் இருந்தது.
“அப்போ அவங்களை பேசினாங்கன்னு..” என்று வினயன் இழுக்க
“அத விடு வினயா.. எப்பவும் தெரியாத ஊர்ல இப்படி பிரச்சனையை இழுத்துவிட்டுக்காத! வேலை தேடி வந்து அன்னிக்கு வேற பிரச்சனை ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்ப? வாழ்க்கையில உருப்படுற வழி தேடு, பணம் சம்பாரிச்சு முன்னேறு! உன் அண்ணனை நம்பியிருக்காத! உனக்குன்னு எதுவுமில்லன்னா இந்த உலகம் உன்னை மதிக்காது” என்ற பிரதாபன் இத்தனை நிதானமாக யாருக்கும் உபதேசம் செய்திருக்க மாட்டான்.
‘இப்போதைக்கு என் பெரிய பிரச்சனை நீங்கதான் சேட்டா’ மனதில் நினைத்ததை வெளியே சொல்லவில்லை வினயன்.
தந்தையின் வழிகாட்டல் இல்லையென்றால் எப்படி வலிக்கும் என்று அவனுக்குத் தெரியும், அதனாலயே என்னை போல் ஒருவன் என்று வினயச்சந்திரன் மேல் ஒரு கரிசனம். அது உணராமல் வினயன் பொய்யுரைக்க, அதன் விளைவுகளை அவன் யோசிக்கவே இல்லை. பிரதாபனின் அன்பை நம்பிக்கையை அவன் எளிதாக நினைத்திருக்க, அது உடையும்போது என்னவாகும் என்ற எண்ணமே இல்லை வினயனுக்கு. பிரதாபன் எழுந்தவன் மீண்டும் வேக நடையிட, வினயன் பின்னால் நடந்தான்.
பிரதாபனின் சுறுசுறுப்பு, உடல் வலிமை எல்லாம் பார்க்க வினயனுக்கு அவன் அண்ணனின் நினைவு.
பிரதாபன் இவ்வளவு நேரம் பயிற்சியில் இருந்துவிட்டு, இப்போதும் சோர்வின்றி நடக்க உண்மையில் வினயனுக்கு பிரதாபனை ரசிக்கத் தோன்றியது. அவன் அண்ணன் செண்டை மேளம் வாசிப்பான், அவர்கள் கேம்ப் நடத்துமிடத்தில் மலையேற்றத்துக்கு மக்களை அழைத்து செல்வான். அது கூட வினயனுக்கு சோர்வாக இருக்கும். இங்கோ பிரதாபன் கொஞ்சமும் அசராமல் பிசறாமல் பயிற்சி செய்திருக்க வியப்பாக இருந்தது.
வயலின் பக்கம் சென்றால் வீட்டின் பின்பக்கமாக போய்விடலாம், பிரதாபனோ அதை விட்டு குளத்தைத்தாண்டி தெருவில் நடந்தான். அவன் பார்வை அந்த தெரு முனையில் இருந்த பூவம்பள்ளி வீட்டில் நிலைத்தது.
பச்சை பூசிய நீண்ட சுவர்கள் மட்டுமே வினயனுக்குத் தெரிந்தன, அதனுள்ளே வீடிருக்க தூரத்திலிருந்து பார்க்க பாசி படர்ந்த சுவர்களும், தரையெல்லாம் கம்பளம் விரித்திருந்த செவ்வரளி பூக்களும் மட்டுமே தெரிந்தன. பிரதாபனுக்கு அந்த வீட்டில் கண்ணை கட்டி விட்டாலும் வழி தெரியும், அவன் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் விரிய, வழக்கம்போல் பூவம்பள்ளி தரவாட்டினை கண்ணில் நிறைத்தவன் வீடு நோக்கி நடந்தான்.
பிரதாபன் பார்வை பூவம்பள்ளி தரவாட்டில் நிலைத்ததைப் பார்த்த வினயனுக்கு, ‘அந்த வீட்ல அப்படி என்ன இருக்கு?’ என்ற கேள்வியே.
காலை உணவு நசீர் எடுத்து வைக்க, வினயன் வீட்டுக்குள் போகும்போது தனது ஸ்கூட்டரை கிளப்பிக்கொண்டிருந்தாள் தாரிணி. பிரதாபனை பார்த்து போக வேண்டி வேண்டுமென்றே நேரத்தினை விரயம் செய்து நின்றிருக்க, பிரதாபனோ நேரே வீட்டினுள் நுழைந்தான். அவன் ஓரவிழி தாரிணியை நோட்டமிட்டதை அவள் அறியவில்லை.
தாரிணி வண்டியை பிடித்து நிற்க,
“ஹெல்ப்?” என்ற குரலில் திரும்பினால் வினயன் நின்றான்.
அவள் திரும்பவும் வினயன் ஆச்சரியமாகப் பார்த்து, “பார்க்க தமிழ் மாதிரி இருக்கீங்க? தமிழ் தானே?” என்று கேட்டிட, தாரிணி அவனை முறைத்தாள்.
“என்னங்க ஆலப்புழாவுல எல்லாரும் முறைக்கிறீங்க? தமிழான்னு கேட்டா ஒரு குத்தமா? இப்போ என் ஹெல்ப் வேணுமா வேண்டாமா?” என்று வினயன் சிரித்தபடி கேட்க, தாரிணி பதில் சொல்லும் முன் பிரதாபன் அங்கு வந்து நின்றான்.
“எந்தோ?” என்ற கேள்வி வினயச்சந்திரனிடம் இருக்க, தாரிணி பக்கம் பார்க்கவில்லை.
“தமிழான்னு கேட்டேன் சேட்டா, வண்டியை வச்சுட்டு கஷ்டப்பட்டாங்க. அதான்” என்று வினயன் சொல்ல
“அவங்க வண்டி தானா கிளம்பும், நீ போய் சாப்பிடு” என்று அவனை விரட்டினான் பிரதாபன். வினயன் அவர்களை கண்டுகொள்ளாது முன்னே செல்ல, பிரதாபன் தாரிணியைப் பார்க்காமல் நகர, தாரிணி சுற்றிப் பார்த்தவள் பிரதாபனின் கையைப் பிடித்தாள். பிரதாபன் அதிர்ந்து சிவந்த விழிகளோடு அவளை முறைத்திட, தாரிணியும் முறைத்தபடி அவன் கையை விட்டாள். வார்த்தையில்லா நிலையில் இருவரும் நின்றனர்.
பிரதாபன் உள்ளாடும் உணர்வினை அடக்கியபடி காலை உணவை முடித்து,
“வீட்ல பால் கொடுக்கிறது, களரி பள்ளி சுத்தம் பண்றது, மாட்டை பாக்கிறது எல்லாம் நீதான் இனி செய்யணும் வினயா, நான் சேட்டாவ கைனகரி அழைச்சிட்டுப் போய்டுவேன். உனக்கு அங்க பார்க்கத் தெரியாது, மனசிலாயோ?” என்று கேட்டிட
“மனசிலாயி சேட்டா”(புரிஞ்சது) என்றான் கடுப்பாக. அவனுக்கு வீட்டில் வேலையே கிடையாது, பிரதாபனோடு பழக வேண்டும். அதுதானே நோக்கம், என்ன செய்வதென்று யோசித்தவன்
“சேட்டா! எனக்கும் கைனகரியில உங்களோடு இருக்க மாதிரி வேலை சொல்லுங்களேன். நான் கத்துக்கிறேன்” என்றதும் பிரதாபன்
“உனக்கு அங்க தெரியலயே வினயா, உனக்கு சொல்லிக்கொடுத்து பார்க்கிற பொறுமை எனக்கில்லையே, வீட்ல ஆள் வேணும்” என்றிட வினயன் முகம் சுருங்கியது, வீட்டில் வயது பெண் இருந்தாலும் கூட இவன் என்னோடு இருக்க நினைக்கிறானே என்ற ஆச்சரியம் எழுந்தது பிரதாபனுக்கு.
“எந்தாடா?” அதட்டலாக பிரதாபன் கேட்க, ‘மாடு மேய்க்கிறதா என் வேலை’ என்று நினைத்தவன்
“சேட்டா உங்களோட இருக்க மாதிரி வேலை பாருங்க எனக்கு.” என்றான் மீண்டும். பிரதாபனும் தலையசைத்தான்.
மாலையில் வெளியே சென்று வீடு வந்த பொன்னச்சன்
“மினி! மினி” என்று கத்தினார். அவர் கத்தலில் ஷெட்டிலிருந்த வினயன் எழுந்து வர, வாசலில் நின்ற நசீர் அவனை கண்காட்டி அங்கேயே நிறுத்தினார். பிரதாபனும் அந்த நேரம் உள்ளே இருக்க, அவன் மட்டும் ஏதோ பதில் பேசினான்.
பொன்னச்சனின் சத்தம் மட்டுமே பெரிதாகக் கேட்டது, சிறிது நேரத்தில் அவர் வெளியேறிவிட நசீர் பெருமூச்சுடன் வினயன் அருகே வந்தமர்ந்தார்.
“ஏத்தலன்னா இவர் ஏத்த வேண்டிதானே? அதுக்கு ஏன் இவ்வளவு சத்தம், ரொம்ப மோசம்” என்று முணுமுணுத்தான். மனதோ வீட்டில் மூவருமே சிடுசிடுப்பு என்ற எண்ணம். பிரதாபன் கொஞ்சம் இயல்பாய் பேசுவான், ஆனால் அவன் வயதுக்கு ஏற்ற உற்சாகம் துள்ளலிருக்காது. பொன்னச்சன் பேச மாட்டார், மின்மினி தேவையின்றி பேசுவதில்லை. வினயனுக்கு இந்த பத்து நாட்களில் எரிச்சல் வந்துவிட்டது, அவன் விஜயமே வீண் என்ற எண்ணம்.
“உனக்குத் தெரியாது வினயா, சேட்டாவுக்கு அவர் பையன் ஷங்கரன்னா ரொம்ப ரொம்ப பாசம்” என்ற நசீர் ஷங்கரனை பற்றி சொன்னார். பூவம்பள்ளில் ஷங்கரவர்மா பொன்னச்சனின் ஒற்றை மகன், உயிர் என்பார்களே மகனென்றால் பொன்னச்சனுக்கு அப்படித்தான்! எதையும் ஷங்கரன் கேட்டு மறுத்ததில்லை, ஷங்கரனும் அச்சனின் பேச்சை தட்டியதில்லை. மகனை எங்கு சென்றாலும் அழைத்து செல்வார், பெருமையாக வளர்த்தார். ஷங்கரனும் படிப்பு முடிந்து மாவேலிக்கராவில் அரசு வேலையில் இருந்தார். மற்ற உறவுகளை விடவும் தன் மகன் உயர்வு என்ற எண்ணம் பொன்னச்சனுக்கு. கர்வம் கூட!
ஆனால் ஷங்கரனுக்கு குடி பழக்கம் இருந்தது, எத்தனை மோசமென்றால் அவர் உயிரையே பறிக்கும் அளவுக்கு. மகனை கண்டிக்கக் கூட இல்லை.
அறமில்லாத அன்பு அற்பமாக போய்விடும்! அப்படித்தான் பொன்னச்சனின் பாசமிருந்தது, என்ன செய்தாலும் துணை நிற்பதில்லை அன்பு!! அது நல்வழிப்படுத்துவது! நல்வழிப்படுத்தாத நேசம் நஞ்சு! மிக மிக கொடிய நஞ்சு! எதிரியின் பகையை விட மோசமான விஷம்!!
எப்போதும் என் மகன் உயர்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், அதில் என்ன செய்தாலும் கேட்பதில்லை. கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை என்றாலும் கூட நியாயம் பார்க்காமல் மகனுக்கே பேசுவார், ஷங்கரவர்மன் கடைசிவரை பொன்னச்சனின் மகனாக வாழ்ந்து மடிந்தாரே தவிர, அவர் மனைவிக்குக் கணவனாக, பிள்ளைகளுக்கு அப்பாவாக இல்லை! மகனை தனித்து விடமாட்டார், எப்போதும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதை பாசம் என்று நினைக்கும் மனிதர்.
“சேட்டா எதை இழந்தாலும் தாங்கிட்டு நின்னுடுவார், அவர் மனைவி இறந்தப்ப கூட அவர் அழல. ஆனா ஷங்கரன் இல்லாம போனது அவன் பசங்களை விட சேட்டாவுக்கு வாழ்க்கை முழுசும் தண்டனை. அவர் மகன் இறந்த அன்னிக்கு அழுத அழுகை… ! நான் பார்த்து வளர்ந்த பையன்… நல்லா இருக்க வேண்டியவன், இவர் பாசமே அவனை அழிச்சிடுச்சு. குடிக்காம இருந்திருந்தா ரொம்ப நாள் இருந்திருப்பான். பாவம் பிரதாபனும் மின்மினியும் இப்படி தனிச்சு இருக்க மாட்டாங்க. ஆனா ஒரு விஷயத்துல பிரதாபனும் சேட்டாவும் ஒரே மாதிரி ஷங்கரனை எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டாங்க. கடைசிவரைக்கும் அவனை எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை, எல்லாத்தையும் இழந்தப்ப கூட!” என்றார் வருத்தமாக.
அதனை கேட்க கேட்க வினயனுக்கு வருத்தமாக இருந்தது. புத்திர சோகம் எத்தனை கொடுமையானது என்று நினைத்தவனுக்கு, அவன் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது அதன் தாக்கம். பூவம்பள்ளில் வீட்டுக்காரர்கள் மீது அவனுக்கு ஒரு பிம்பம் இருந்தது, அது பார்த்து வந்தது. இப்போது அவர்கள் பக்க கதை கேட்கையில் அவன் பார்வையில் இரக்கம் வந்தது. பிள்ளையை இழந்து நிற்கும் பொன்னச்சன் மீதும், பெற்றவரை இழந்து நிற்கும் பிரதாபன் மின்மினி மீதும் ஒரு பரிதாபம் பிறந்தது.
இங்கே நசீர் வினயனிடம் பேச, பொன்னச்சன் அவர் அறைக்குள் இருந்தார். மின்மினிக்கு அச்சச்சனின் வார்த்தைகள் சுட்டாலும், அப்பாவின் நினைவில் அழுகை வந்தது. சிறு வயது முதலே பொன்னச்சன் பேத்தியிடம் பெரிய ஒட்டுதல் காட்டியதில்லை. அவளின் அச்சம்மா அம்மினிக்குட்டி இருந்தவரை அவர் பிரியமாக இருப்பார். அப்பா மட்டுமே அந்த வீட்டில் அன்பாக பேசுபவர், அதுவும் கூட அவர் தெளிவாக இருந்தால் மட்டுமே. பொன்னச்சனின் பேச்சு யாரிடமும் வெடுக்கென்றே வரும் என்பதால், மின்மினிக்கு அது பெரிய தாக்கம் தரவில்லை.
“உன்னிம்மா! அழாத” என்று பிரதாபன் அழும் தங்கையிடம் சொல்ல, பிரதாபனும் தங்கைக்கென்று தேவைகளை பார்த்து செய்தாலும், அப்படியொன்று தாங்கும் அண்ணன் இல்லை. ஆனால் தங்கை அழுது கொண்டிருக்க வருத்தமாக இருந்தது.
“எந்தா மினி இது?” என்று பிரதாபன் கொஞ்சம் அதட்டலாகக் கேட்டிட
“சாரியேட்டா” என்றாள்.
“போ மோளே” என்று அவன் தோளில் தட்டிக்கொடுக்க, எழுந்து அறைக்கு சென்றவள் முகம் கழுவி மெல்ல இயல்புக்குத் திரும்பினாள்.
பொன்னச்சன் உணவை மறுத்திருக்க, அவருக்குப் பால் கொடுத்து வந்த பிரதாபன் உண்ண அமர்ந்தான். வெளித்திண்ணையில் உணவு வைக்க, நசீரும் வினயனும் கூட அவனோடு இருந்தனர். மதுரகிழங்கு(சக்கரவல்லி கிழங்கு) உப்புமாவு செய்திருந்தாள் மின்மினிகுட்டி
தட்டில் மஞ்சள் நிறத்தில் சுட சுட ஆவி பறக்க மதுரகிழங்கு உப்புமாவு பெரிய காய்ந்த மிளகாய் தாளிப்போடு வைக்கப்பட, வினயனின் கண்கள் நிறைந்தன. வேக வைத்த சக்கரவல்லி கிழங்கை தேங்காய் எண்ணெய்யில் கடுகு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் உப்பு எல்லாம் சேர்த்து தயாரிப்பது மதுரகிழங்கு உப்புமாவு. மிகவும் எளிமையான அதே நேரம் சத்தான உணவு. கூடவே ஊத்தப்பம் தக்காளி சட்னி. வினயனுக்கு மாலையிலும் நல்ல வேலை, மாடு மேய்ப்பது, தோட்டத்தை துப்புரவு செய்வது என்று எல்லாம் செய்தான்.
இருந்த பசியில் உணவு சட்டென்று உள்ளே செல்ல, அவன் அம்மாவின் கைப்பக்குவம் போல் இருந்தது. பசிக்கு ருசியான உணவாக வேறு இருக்க, உணர்ச்சிவசத்தில்
“அடிபொலி மின்மினி” என்று பாராட்டியவன் உணவில் கவனம் செலுத்த, மின்மினியும் பிரதாபனும் வினயச்சந்திரனை ஆராய்ச்சியாகப் பார்க்க, நசீரோ அதிகப்பிரசங்கி என்பது போல் பார்த்தார். பிரதாபன் வினயனின் பேச்சில் உண்ணாமல் அவனை பார்க்க, அவனோ பாராட்டிவிட்டு உணவே கதி என்று இருந்தான். மின்மினி பதில் பேசாமல் உள்ளே சென்றாலும் பல வருடம் கழித்து ஒரு பாராட்டு, அவளுக்கு இதமாக இருந்தது.
பிரதாபன் உண்ணாமல் இருக்க, நசீர் “பிரதாபா!” என்றழைக்க அந்த குரலில் நிமிர்ந்த வினயச்சந்திரன்
“என்ன சேட்டா சாப்பிடாம இருக்கீங்க? எவ்வளவு டேஸ்டா இருக்கு?” என்றான் இயல்பாக.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.