அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு வினயனை எழுப்பிவிட்டார் நசீர்.
“எந்தாடா வினயா?” என்று சலித்தார். அவன் வீட்டில் கன்னுக்குட்டி என்று அறியாதவர் சிரமப்பட்டு அவனை எழுப்பிவிட
“நானும் நாலு மணிக்கு எந்திரிக்கணும் நினைச்சேன் சேட்டா, பஷ்ஷே உறங்கிபோயி” என்று இருகைகளையும் உயர்த்தி நெட்டி முறித்தான் வினயச்சந்திரன்.
“ஒரு பதினஞ்சு திவசம் தொடர்ச்சயாயி அங்கனே நாலு மணிக்கு எழுந்திட்டால் அதினு ஷேஷம் உரங்கன் விசாரிச்சாலும் உறக்கம் வரில்லா வினயா” என்றார் நசீர். (ஒரு பதினைஞ்சு நாள் நாலு மணிக்கு தொடர்ந்து எழுந்தா அதுக்கு அப்புறம் தூங்கணும் நினைச்சாலும் தூக்கம் வராது)
“பார்ப்போம் சேட்டா” என்றவனை தயாராகி வர சொன்ன நசீர், களரி பள்ளியை சுத்தம் செய்ய போய்விட்டார்.
“மின்மினி பால் கறந்து கொடுப்பா, வாங்கிட்டு போய் கொடுத்திடு” என்று சொல்லிவிட்டு போக, வினயனும் பாத்ரூம் சென்று வந்தவன் பின் கட்டு பக்கம் போனான். அங்கே அதிகாலை குளிர் தொட்டு சென்றாலும் இருள் இன்னும் விலகாது இருந்தாலும் மஞ்சள் சுடிதாரில் பிரகாசித்தாள் மின்மினி குட்டி, அவளின் கூந்தல் உயரத்தூக்கி கொண்டையாகியிருக்க இருபக்கமும் சுருளான கேசம் காதோரம் அணிகலனாய்த் தொட்டு சென்றது. வினயச்சந்திரன் அதையெல்லாம் கவனித்து பார்க்கவில்லை. மின்மினி பால் கறக்க அவன் கொஞ்சம் தள்ளியிருந்த கல்லில் குனிந்து உட்கார்ந்தான்.
உட்கார்ந்தவன் அந்த மிக லேசான குளிரிலும் இருளிலும் கண்ணயர்ந்துவிட, ‘மடியன்’ (சோம்பேறி) என்று முணுமுணுத்த மின்மினியின் குரலை கேட்கவில்லை. மின்மினி பால் கறந்தவள்
“ஜோலி செய்யானல்லே வந்தது, திருவிதாங்கூர் ராஜகுமாரனை போலே நடக்குன்னு” என்றாள் கோபமான குரலில். (வேலை செய்ய தானே வந்திருக்கியங்க, திருவிதாங்கூர் இளவரசன் மாதிரி நடக்குறீங்க) என்று கேட்க அந்த குரலில் வழிந்த கிண்டலில் விழித்தவன் மின்மினியை முறைத்தான்.
அந்த நேரம் ஏன் வந்தோம் எல்லாம் மறக்க “நான் ராஜகுமாரன்தான், போடி” என்றான் எரிச்சலாக. ஆறு மணியே அவனுக்கு அர்த்த ராத்திரியாக இருக்கையில் நான்கு மணியெல்லாம் அவன் எழுந்தது உலக சாதனை, தூக்கம் கெட்ட எரிச்சலில் இருந்தவன் அதனை மறையாது மரியாதையின்றி காட்டிவிட மின்மினிக்கு அவன் பேச்சில் எஜமானி அவதாரம் எடுத்தவள்
“ஜோலி செய்” என்று உத்தரவிட்டவள் பால் வாளியையும் நோட்டு புத்தகத்தையும் அவன் பக்கத்தில் வைத்துவிட்டு கோபமாக உள்ளே சென்றுவிட்டாள்.
“ஜோலி செய்யா??.. போடி” என்று பழித்தவன் வேறு வழியின்றி வேலையை செய்தான். காலையில் பால் கொடுத்துவிட்டு வீடு திரும்ப, களரி பள்ளிக்கு மாணவர்கள் வந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நசீர் பின் தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் விட்டு மின்மினி கொடுத்த சாயாவை எடுத்து வந்து வினயனுக்குக் கொடுத்திட,
“சேட்டா” என்று நசீரை அழைத்தாள் மின்மினி. அவள் அப்பா நசீரை அப்படி அழைக்க, பிள்ளைகளுக்கும் அதுவே பழகிவிட்டது.
“எந்தா மினி?” என்று வினயனிடம் சாயாவை நீட்டிவிட்டு அவர் போய்விட, மின்மினி என்னமோ சொல்ல நசீரின் பார்வை வினயன் மேல் ஆராய்ச்சியாகப் பதிந்தது.
மின்மினியிடம் பேசிவிட்டு வந்த நசீர் வினயனிடம், “என்ன வினயா? வேலை செய்ய வந்துட்டு இப்படி இருந்தா எப்படிடா?” என்று கேட்க
“சேட்டா காலையில எழுந்து பழக்கமில்ல, என்ன அந்த மினி உங்ககிட்ட என்ன சொன்னா?” என்றான் கடுப்பாக. வினயனுக்கு இந்த ஒன்பது நாட்களும் பிடிக்கவே இல்லை, அவன் பார்த்த ஊர், உறவின்றி வேறிடம், அடையாளமும் மறைத்து, அதற்கு ஏற்றாற்போல் நடித்து என்று அலுத்துப் போனான். இருந்தாலும் அவனை நம்பி விட்ட வேலை, அதற்காகவே பொறுமையாக இருந்தான்.
“அவ ஒன்னும் சொல்லல, நேத்து நீ இரண்டு ரூபா வாங்கலன்னு திட்டினா சொன்னியே நான் கேட்டேன். அவ சொல்றதும் நியாயம்தானே வினயா? என்ன இருந்தாலும் நீ யார்னு எங்களுக்குத் தெரியாது, இன்னிக்கு இரண்டு ரூபா விட்டு வர, நாளைக்கு இரண்டாயிரம் கூட விட்டு வருவ,.. மினி தானே பிரதாபனுக்குக் கணக்கு சொல்லணும். கவனமா இருக்கணும்” என்றதும் அவனிடம் பெருமூச்சு. லட்சங்களை கையாளுபவன் அவன், அவனை நம்பி அப்பாவும் அண்ணனும் பணத்தைக் கொடுத்தால் பத்திரமாக வைத்துக்கொள்பவன்.
அதையெல்லாம் இவர்களிடம் சொல்ல முடியாதே. “சேட்டா, அதே தான் நானும் சொல்றேன். நான் ஊருக்குப் புதுசு, அந்த கடைக்காரர் பிரதாபன் வீடுதானே நாளைக்கு வாங்கிக்கோ சொல்லிட்டார், ரெண்டு ரூபாக்கு சண்டை போட முடியுமா? என்னயிருந்தாலும் நான் புது ஆள் அல்லே?” என்று வினயன் கேட்க, அதுவும் நியாயமாக பட நசீர் சமாதானமானார்.
பொன்னச்சன் களரிப்பள்ளியில் பயிற்சி கொடுக்க, வீட்டின் பின்பக்கம் சிறிது தூரம் நடந்தால் அவர்கள் இடம் உண்டு. அங்கே பிரதாபன் போட்டிக்குத் தயாராகும் மாணவன் ஒருவனுடன் பயிற்சியில் இருந்தான். புலர்ந்திருந்த பொழுதில் வானம் மொத்தமாக வெளிர் நீலத்தில் இருக்க, ஓங்கியுயர்ந்த தென்ன மரங்கள் சுற்றிலுமிருக்க, வேஷ்டியை பயிற்சிக்கு ஏற்றவண்ணம் கட்டியிருந்த பிரதாபவர்மன் இருகைகளையும் நிலத்தில் ஊன்றி உடலை வளைத்து முன்னே அடி வைக்க அடுத்த நொடி அவன் கால்கள் தரையில் இல்லை, எதிரே இருந்தவனிடமிருந்து வாகாக தப்பி மீண்டும் நிலத்தில் கால் ஊன்றினான்.
பார்த்திருந்த வினயனுக்குத் தலை சுற்றியது. உடல் அப்படி வளைந்தது, பிரதாபனின் பலம் கண்டவன்
‘வந்த வேலை முடிச்சிட்டு சேட்டா கண்ல படாம எஸ்கேப் ஆகிடணும்’ என்று நினைத்தான். பின்னே பிரதாபன் ஆளை அப்படியே தூக்கி மறுபக்கம் நிறுத்தினான். அத்தனை பலம், திடம். பயிற்சி முடிந்து பிரதாபன் அந்த மாணவனிடம் ஏதோ பேசி அனுப்பி வைத்தான், வினயன் நிற்பதை கண்டு
“ஏடா, வா” என்று அழைத்தான்.
“தவிடுபொடி (அடிபொலி) சேட்டா! என்னம்மா பண்றீங்க? நீங்க செய்ற வேகத்தை பார்க்க கூட எனக்கு வேகம் பத்தல” என்று உண்மையில் சிலாகித்தான்.
“எந்தா மோனே? உனக்கும் களரி கத்துக்கணுமா?” என்ற பிரதாபனின் கேள்வியில் வினயச்சந்திரன் பதறிவிட்டான்.
“சேட்டா! அதெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று வினயன் பதறி சொல்ல
பிரதாபன் அதிருப்தியாகப் பார்த்தான். “நம்முட நாட்டு களரி, அது கத்துக்க வேண்டாமா? எத்தன வருஷம் பழசு தெரியுமா? இன்னிக்கு குங் ஃபூ, கராத்தே எல்லாம் உலகமெல்லாம் கத்துக்கிறாங்க, அதுக்கு முன்னாடி உருவானது நம்ம ஆளுங்களே கத்துக்கிறதே இல்ல..” என்றான்.
“அதில்லை சேட்டா! நான் ஒரு அஹிம்சைவாதி!” என்ற வினயன் பேச்சில் பிரதாபன் முகத்தில் லேசாய்ப் பூத்தது புன்னகை.
“களரி’ன்றது சண்டை போடுறது மட்டுமில்லை, தற்காப்புக்காகவும்தான்!”
“ஏன் சேட்டா என்னை யாராச்சும் அடிக்க வந்தா நீங்க காப்பாத்த மாட்டீங்களா?” தப்பிக்க வழி தேடி என்ன என்னமோ பேசினான்.
“எப்பவும் நான் கூட இருப்பேனா? தற்காப்பு , பாதுகாப்பு எல்லாம் தாண்டி அது ஒரு தியானம், மனசு நம்ம கன்ட்ரொல்ல இருக்கும். உடம்புல இருக்க எலும்பு, நரம்பெல்லாம் ஆரோக்கியமா இருக்கும். உனக்கு பழஷி ராஜா தெரியுமா?” என்ற பிரதாபனின் கேள்வியில்
“நம்ம மம்முக்கா நடிச்ச படம் தானே?” என்றதும் பிரதாபனின் பார்வையில் முறைப்பு.
“1804 ல கோட்டயத்து போர் அப்போ பிரிட்டிஷ்க்கு எதிரா களரி வீரர்கள் ராஜாவோட நின்னு ஜெயிச்சதால களரியை தடை பண்ணிட்டாங்க.. சுதந்திரம் கிடைச்ச பின்னாடி மறுபடி நம்ம களரி வளர்ந்தது, எல்லா ஊர் கலையும் அவங்க நாட்டுல கொண்டாடுறாங்க, நம்ம நாட்டுல அப்படியில்லை. சின்ன பசங்க கூட கத்துக்கிறாங்க, உனக்கு என்ன? காசு பத்தி யோசிக்கிறியோ?” என்றிட
“அப்படியில்ல சேட்டா!” என்று மறுத்து பேச கை காட்டி நிறுத்தினான்.
“நான் யாரையும் எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன் வினய், நீ யார்னே தெரியாம எங்க இருந்தோ வந்து எனக்காக நின்ன, உன் மேல மரியாதையிருக்கு. அதான் நீ வேலை கேட்டதும் கொடுத்தேன், உனக்கு இங்க பிடிக்கலன்னா கூட சொல்லிடு. நல்ல சம்பளத்தில வேற வேலை ஏற்பாடு பண்ணி தரேன்” என்று பிரதாபன் சொல்ல
“அச்சோடா! சேட்டா என்ன பேசுறீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்” என்று பதறி
“சேட்டா! பேசிக்கலி நான் கொஞ்சம் சோம்பேறி, நான் ஒரு மாசம் கழிச்சு வேணும்னா களரி கத்துக்கிறேன். இப்போதான் இங்க வந்திருக்கேன், புது இடம்” என்றான் பொறுமையாக.
‘ஒரு மாசம் தாண்டினா உன் ஊர்லயே இருக்க மாட்டேன்யா நான், குருவாயூரப்பன் மேல ஆணை’ என்று மனதில் சபதம் போட்டான். வந்த வேலை முடிந்த பின் தாமரக்குளத்தின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்றிருப்பவன் அவன்.