“எண்ட அம்மோ!” என்ற வினயனின் விளிப்பில் இரவுணவு உண்டு கொண்டிருந்த நசீரும் பிரதாபனும் அவனை பார்க்க, வினயனோ மின்மினியிடம் “அடிபொலி” என்று கண்களை மூடி உணவின் சுவையை ரசித்து சொன்னான்.
மின்மினிக்கு முதல்முறை போல் அதிர்ச்சியில்லை, மாலையில் காஃபி கலந்து கொடுத்த போது கூட வினயன் பாராட்டத்தான் செய்தான். மிக மிக சிறிய செயல்தான், ஆனால் அந்த வேலையை செய்பவர்களுக்கு அது கொடுக்கும் மகிழ்ச்சி அலாதிதானே? அதுவும் மின்மினி எத்தனை சுவையாக சமைத்தாலும் உணவு கூடுதலாக அந்த வீட்டினருக்கு இறங்குமே தவிர வார்த்தைகள் மட்டும் வாயிலிருந்து வந்து விழாது, அதையே அவள் பாராட்டாக எடுத்துக்கொள்வாள்.
உப்போ காரமோ குறைவோ, கூடுதலாகவோ என்றாவது தவறிவிட்டால் பொன்னச்சன் பேத்தியைப் பேசிவிடுவார். அவரை பொருத்தவரை உணவு என்பது பெண்களின் பொறுப்பு, அதை சரிவர செய்ய வேண்டும். மின்மினி சமையலில் அவள் அச்சம்மாவைப் போல், சிறுவயதிலிருந்து பிரதாபன் பொன்னச்சனோடு வெளியிடம் சுற்றினான் என்றால், மின்மினி உலகம் அவள் அச்சம்மாவோடு சமையலறையில். அதுவும் அவர்களின் பூவம்பள்ளி தரவாட்டின் சமையலறை மிக மிக பெரியது, ஒரே நேரத்தில் இருபது முப்பது பேர் வரை உணவு உண்ணலாம்.
மின்மினியின் அச்சம்மா ‘அம்மினிகுட்டி’ காலையில் எழுந்ததும் பின்கட்டில் இருக்கும் குளத்தில் நீர் எடுத்து குளித்துத் தயாராகி, வீட்டில் பூத்திருக்கும் பூக்களைப் பறிப்பார். துளசி செடிக்கு நீர் ஊற்றி வழிப்பட்டு அன்றைய நாளைத் தொடங்குவார். மின்மினிகுட்டி வெள்ளி கொலுசணிந்து அந்த பூவம்பள்ளி வீட்டில் அங்குமிங்கும் ஓடிகொண்டே இருப்பாள், அந்த வீடு அவர்களின் ‘பூக்கால’த்தின் சாட்சி. அம்மா, அப்பா, அச்சச்சன், அச்சம்மா என்று குடும்பமாக வாழ்ந்ததெல்லாம் இன்று வெறும் நினைவே, அம்மா பிரிந்த பின்னும் கூட அந்த வீடு அது கொடுத்த வாஞ்சை வார்த்தைக்குள் அடைக்க முடியாது.
அச்சம்மா சமையல்கட்டில் இருக்கும் மர சாளரங்களை இரு கை கொண்டு திறந்துவிட, வெளியிலிருந்து காற்றும் வெளிச்சமும் அவ்விடத்தை நிறைக்கும். கூடவே அந்த பக்கமிருக்கும் மரங்களில் குடியிருக்கும் பறவைகளின் சத்தம் என்று அந்த சூழலே மிக மிக இயற்கையாக இருக்கும். அச்சம்மா மணக்க மணக்க டீகாஷன் இறக்குவதே மின்மினிக்கு ஏதோ அதிசயம் பார்ப்பது போல் இருக்கும், டீகாஷினிலிருந்து வரும் மணமும் சூட்டிலிருந்து மேலே மெல்ல எழும்பும் புகையும் கண்கொண்டு ரசிப்பவள், கண்களை மூடி அந்த வாசத்தை தனக்குள் நிறைப்பாள். கண்களை திறந்து ஒருவித ரசனை, கண்களை மூடி ஒருவித ரசனை! அப்போது கண் பார்க்காததை மற்ற புலன்கள் உணருமே. அம்மினிகுட்டி தயிர் கடையும்போது “அச்சம்மா” என்று கண்களை விரித்து இன்னும் வேகமாக இழுக்க சொல்லியும், தானும் செய்கிறேன் என்று சொல்லி இரண்டு பக்கமும் இழுத்து சோர்ந்து அந்த தரையில் விழுவது மின்மினிகுட்டியின் விளையாட்டு.
அவளும், அச்சம்மாவும், சமையல்கட்டும்! அதுவொரு தனி பிரபஞ்சம்! எப்போது சமைத்தாலும் மனதில் அச்சம்மா இதை அப்படி செய்தார் என்று நினைவுத் தொட்டுப்போகும். அவர் இருக்கும்போது மின்மினி சமையல் செய்ததில்லை, ஆனால் அச்சம்மாவுக்குப் பிடித்த பதத்தில் சாயா கலந்து கொடுப்பாள். அதற்கே அவரின் முகம் பளிச்சென்றாகிவிடும், ஒற்றை மகனை பெற்றவருக்குப் பெண் பிள்ளை இல்லை என்ற வருத்தம், அதற்கெல்லாம் சேர்த்து பேத்தி ஈடு செய்தாள். அந்த வீட்டில் அத்தனை பேரையும் அம்மினிகுட்டி கவனித்தார் என்றால், அவரை தன்னால் முடிந்தவரை மின்மினிகுட்டி கவனிப்பாள்.
அச்சம்மாவுக்கும் அச்சனுக்கும் பின் அவள் சமையலைப் பாராட்டும் ஒரு ஆள் என்றால் அது வினயச்சந்திரனே, அது பாசாங்கின்றி மிக மிக இயல்பாக அவன் சொல்ல, மின்மினிக்குட்டி அன்றைய நாளில் மாலை அச்சச்சனிடமும் அண்ணனிடமும் வாங்கிய பேச்சுகளை அது மறக்க செய்தது. இந்த பத்து நாட்களாக பார்ப்பதில் பெரிதாக பழக்கமில்லையென்றாலும், வினயன் பார்வை மின்மினியின் கண்களை பார்த்தே இருக்கும், பேச்சிலும் நேர்த்தியிருக்கும். இப்போதும் அவன் நேரடியாக பாராட்ட மின்மினி முன்புபோல் கண்டுகாணாமல் இல்லை.
மின்மினிகுட்டி “தேங்க் யூ” என்று சொல்லிவிட்டு செல்ல, தலையாட்டிய வினயனின் கவனம் எல்லாம் அன்னலஷ்மி மீதே.
பிரதாபனுக்கும் வினயனின் நேரடி பாராட்டினால் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. நசீரோ இவன் வீட்டில் நல்ல உணவில்லை, அதான் இங்கு எது கொடுத்தாலும் ரசித்து உண்கிறான் என்று அவராகவே நினைத்தார். உண்டு முடித்து வினயனும் நசீரும் உறங்க போக, நசீரிடம் மாலையில் இருவர் மின்மினியிடம் வம்பு செய்தது, அவள் பேசியது, தீடீரென உன்னி வந்தது என்று எல்லாம் சொல்ல
“அவன் அந்த ராஜகோபாலன் மகன், அதான் சேட்டாவும் பிரதாபனும் கோவப்பட்டாங்க” என்று கோபத்திற்குக் காரணம் சொன்னார் நசீர். அவரின் காரணம் வினயனுக்கு நியாயமாகப்படவில்லை, பொன்னச்சன் ஏதோ அவசரப்பட்டு பேசினாலும் பிரதாபன் தங்கையிடம் பொறுமையாகப் பேசியிருக்க வேண்டும் என்ற எண்ணமே, அது பிரதாபன் மீது வினயன் வைத்திருந்த மரியாதையைக் குறைத்தது. உணவுக்குப் பின் நேரடியாக பேசலாம் என்று நினைக்க, பிரதாபனோ வினயச்சந்திரனிடம்
“ஏடா வினயா! நிண்ட பாஸ்போர்ட் காஃபி எனிக்குத் தரு” என்று சொல்ல வினயன் ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றான்.
“எந்தோ? பாஸ்போர்ட் இல்லே?” என்று பிரதாபன் புருவம் உயர்த்த
“எண்ட அம்மோ!” என்று மனதுக்குள் அலறியவன் “சேட்டா, சாஃப்ட் காஃபி இல்லை. வீட்ல இருக்கு, நான் இந்த வாரம் ஊருக்குப் போய் எடுத்துட்டு வரேன்” என்றவனுக்கு ஒரே வாரத்தில் ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்ற எண்ணமே. பிரதாபனும் சரியென்று சென்றுவிட, வந்த வேலையை எப்படி நிறைவேற்ற என்ற யோசனையில் இருந்தவனுக்குப் பிரதாபனிடம் பேச மனமில்லை. நசீரிடம் நடந்ததை சொல்லிவிட்டு உறங்கிபோனான்.
அன்று முழுவதும் அலைந்ததில் வினயனுக்கு சரியான உறக்கம், எப்படியோ அலாரம் வைத்து எழுந்தவன், இயல்புபோல் மாட்டுத்தொழுவம் அருகே இருக்கும் பெரிய கல்லில் உட்கார்ந்து தலையைக் குனிந்து குட்டித் தூக்கம் போட, மின்மினிக்கு அவனை பார்க்க சிரிப்பு வந்தது. அந்த புலராத காலையில், தன்னெதிரே அழகிய பெண்ணிருந்தும் காணாமல் உறங்கும் வினயச்சந்திரன் மின்மினிக்கு வித்தியாசமாகத் தெரிந்தான்.
அவர்களின் களரிப்பள்ளிக்கு வருபவர்கள், வயதின் காரணமாக ஒரு ஆவலில் மின்மினிகுட்டியைப் பார்ப்பார்கள், அதில் அச்சச்சனுக்கும் பிரதாபனுக்கும் தெரியக்கூடாதே என்ற பதட்டமிருக்கும். மின்மினிகுட்டி அதையெல்லாம் பெரிது செய்ய மாட்டாள், தொல்லையாக இருப்பார்கள் என்று தோன்றினால் மட்டும் உடனே அண்ணனிடம் சொல்லிவிடுவாள். அப்படியிருக்க இந்த வினயன் வேறுபட்டு தெரிந்தான், அவன் அம்மாவின் வளர்ப்பை மனதுக்குள் மெச்சிய மின்மினிக்கு, நசீர் சொன்னது நினைவில் வந்தது. வினயனின் வீட்டினரை நினைத்தவளுக்கு, நல்ல வேளையாக தனக்கு நல்ல அண்ணன் இருக்கிறான் என்ற சுய ஆசுவாசம். இப்படி எண்ணங்கள் மனதில் ஓடினாலும், பால் கறந்து முடித்தவள்
“குட் மார்னிங்” என்று வினயன் அருகே போய் சொல்ல
கொட்டாவியை வெளியேற்றிய வினயன் “எப்படி நீ, உன் சேட்டா எல்லாம் காலையில ஃப்ரஷா இருக்கீங்க?” என்றபடி பால் வாளியை எடுத்துப்போனான். வழக்கம்போல் அவன் பேச்சில் துளிர்த்த புன்னகையோடு அன்றைய வேலைகளை கவனிக்க போனாள் மின்மினிகுட்டி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.