தாமரகுளம் பொன்னச்சனின் மனைவி அம்மினிகுட்டியின் உடன்பிறந்த சகோதரிதான் தேவிகுளம் அச்சுதனின் மனைவி பத்மினிகுட்டி. அதாவது வினயனின் தாத்தா சேகரனும் அச்சுதனும் பல வருட நண்பர்கள். இப்போது உறவும் கூட! அச்சுதனின் மகன் பிரிகடியர் ராஜீவன் – ப்ளஸ்ஸி தம்பதியின் மகள்தான் வினயச்சந்திரனின் அண்ணன் ஜெய்ச்சந்திரன் மனைவி ஊர்மிளா.
பூவம்பள்ளில் பொன்னச்சனுக்கும் அரக்கபறம்பில் அச்சுதனுக்கும் திருமணமான நாள்முதலே ஒத்துப்போகாது. இருவருக்குமே தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணமுண்டு. மாவேலிக்கராவில் பிறந்த பெண்களில் மூத்தவரான பத்மினி இடுக்கியின் தேவிகுளத்தில் திருமணம் செய்திருக்க, அவரது தங்கை மாவேலிக்கராவின் தாமரகுளத்தில் பூவம்பள்ளில் வீட்டு மருமகளானார்.
இரண்டு ஆண்களுக்குமே அவ்வளவு ஒட்டுதல் கிடையாது. பூரத்தில் செண்டை மேளம் வாசிக்கும் குழுவில் இருப்பவர் அரக்கபறம்பில் அச்சுதன், அதே பூரத்தில் பூவம்பள்ளில் வீட்டு யானையான கேசவனுக்கு மரியாதை கிடைக்கும். அச்சுதனுக்கென்று சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள் உண்டு. இருவருமே வசதியானவர்கள் என்றாலும், அதனை காட்டும் வகையிலும் ஒரே ஊர் என்பதாலும் பூவம்பள்ளில் பொன்னச்சன் கொஞ்சம் பெருமையோடே திரிவார். பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்வரை அடிக்கடி அக்காவும் தங்கையும் சந்தித்துக்கொண்டனர்.
பத்மினியின் மகன் ராஜீவன் வேறு மதத்துப் பெண்ணான ப்ளஸ்ஸியை திருமணம் செய்து ஊரை விட்டு சென்றிட, அவ்வளவுதான் உறவுகள் மத்தியில் அச்சுதனின் மரியாதை பறந்தது. பொன்னச்சனும் அவர்களை கீழிறிக்கி பேசினார். ராஜீவனின் திருமணத்திற்குப் பின் தாமரகுளத்திற்கும் தேவிகுளத்திற்குமான தொடர்பு தொலைப்பேசி அளவில் மட்டுமே இருந்தது. ராஜீவன் திருமணம் முடிந்த சில மாதங்களில் பொன்னச்சனின் மகனான ஷங்கரனின் திருமணத்திற்கு வந்திருந்தார் பத்மினி. அதன்பின் எங்காவது விசேசம் என்றால் சந்தித்தனர். பல வருடங்கள் கழித்து தங்கையின் இழப்பிற்கும், தங்கை மகனின் இழப்பிற்கும்தான் வந்தார்.
அச்சுதன் மனைவிக்காக அவரை அனுப்பிவைப்பார், பொன்னச்சன் அதுவும் கிடையாது. பத்மினியும் அச்சுதனும் பெயர்த்தி, பெயரன் திருமணத்திற்கு வந்து அழைத்திருந்தார்கள். பொன்னச்சன் மட்டும் அப்போது தேவிகுளம் சென்று வந்திருந்தார். பிரதாபனும், மின்மினியும் தேவிகுளம் சென்றதில்லை. ஷங்கரன் மட்டும் தனது வலியம்மா விட்டுக்கு சின்ன வயதில் போய் வந்திருக்கிறார்.
இன்று மாவேலிக்கராவில் பத்மினியின் ஒன்றுவிட்ட அண்ணன் பேரனின் திருமணம். அவர்கள் நேரில் சென்று பத்திரிக்கை வைத்திருக்க, மரியாதைக்காக பத்மினி அங்கு சென்று வந்தார். வயதான காரணத்தால் மனைவியை செல்லாதே என்று அச்சுதன் சொல்லியிருக்க, ஜெய்ச்சந்திரன் அச்சம்மாவுக்காகப் பேசி இங்கு அழைத்து வந்திருந்தான்.
பத்மினிக்கு அப்படியே தங்கை வீட்டிற்குச் சென்று வர ஆசை வரவும் ஜெய் அதற்கும் இசைந்தான். பொன்னச்சன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் இவர்கள் வரவும் வரவேற்க, மின்மினி ஓடி வந்தாள்.
“முத்தஸ்ஸீ” என்று அவள் கையைப் பிடித்துகொள்ள, “மினி மோளே!” என்று பேத்தியின் கன்னம் வருடினார் பத்மினி. தங்கையின் சாயலில் இருக்கும் பெண்ணை கண்களில் நிறைத்தார். தங்கையின் ‘சேச்சி’ என்ற அழைப்பிற்கான ஏக்கம் அவரிடம் அப்படியே இருந்தது.
பொன்னச்சன் அவர்களை உட்கார சொல்ல, ஜெய் அவரிடம்
“சுகமானோ அச்சச்சா?” என்று விசாரித்தான். அவரும் பதில் சொன்னவர்
“டா தெண்டி!” என்று வினயனுக்குக் குரல் கொடுத்தார்.
“எவிட போயி ஈ சந்திரன்?” என்று மினியைப் பார்த்தார். வந்தவர்களுக்குக் குடிக்க எதாவது வாங்கி வர வேண்டி ஆள் பார்க்க, நசீரும் இல்லை வினயனையும் காணும்.
“கடைக்குப் போயிருக்குன்னு” மின்மினி வினயனை காப்பாற்ற பொய் சொல்ல, பொன்னச்சன் சலிப்பாக பார்த்தார்.
“ஞான் சாயா உண்டாக்காம் அச்சச்சா” என்று மின்மினி சொல்லி உள்ளே போக, பொதுவாக பேரப்பிள்ளைகளின் நலம் விசாரித்தார் பத்மினி.
முன்பென்றால் ராஜீவனின் திருமணத்தைக் குறித்துப் பேசி பத்மினியையும் அச்சுதனையும் வருத்தப்பட வைப்பார். அது பொன்னச்சனின் நோக்கமாக இருக்காதென்றாலும் ‘உன் மகன் உன் பேச்சை கேட்கவில்லை, என் மகன் என் பேச்சைக் கேட்டு நடக்கிறான். குடும்பமாக கண்முன் இருக்கிறான்’ என்ற பெருமை. ஷங்கரனுக்கு விவாகரத்து ஆனதும் அதெல்லாம் காணாமல் போக, சில வருடங்களுக்கு முன் ராஜீவனும் திரும்பி வந்திருக்க, ஷங்கரன் இப்போது உயிரோடு இல்லை. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான் போல, தன்னோடே இருந்த மகன் திடீரென இல்லாமல் போய்விட்டான். பல வருடங்கள் பெற்றோரை பிரிந்து பேச்சுவார்த்தையின்றி இருந்த ராஜீவன் இப்போது பெற்றோருடன் இணக்கமாகிவிட்டான்.
பொன்னச்சனுக்கு மகனை நினைத்து கண்கள் கலங்கின. பத்மினிக்கும் தங்கையுமில்லை, தங்கை மகனுமில்லையே என்ற வருத்தம். அவர்கள் பேச ஜெய் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ஜெய்யிடம் அச்சுதன் சொல்லி அனுப்பியிருந்தார்.
‘அந்த பூவம்பள்ளில் தெம்மாடி உன்னையோ இல்லை மினியையோ வருத்தப்படுத்துற மாதிரி பேசினா நீ பதில் பேசிடுடா ஜெய்’ என்றிருந்தார். ஜெய்யை முன்பே பேரனாகத்தான் அச்சுதன் நடத்துவார். ஆனால் பொன்னச்சன் அப்படியில்லை, வேற்றாளாகப் பார்ப்பார்.
ஜெய் நினைத்ததற்கு மாறாக பொன்னச்சன் சாதாரணமாகவே நடந்தார். மின்மினி சாயா கொண்டு வந்து கொடுக்க,
“நன்னி மினிம்மா” என்ற ஜெய்ச்சந்திரன்
“எந்து செய்யுன்னு மினி?” என்று விசாரித்தான். மின்மினி படித்து முடித்துவிட்டேன் என்றதும் பொன்னச்சன் பேத்திக்கு வரன் பார்க்கிறோம் என்றார்.
“பிரதாபன் எவிட?” என்று பத்மினி பேரனை விசாரிக்க
“அவன் ஆலப்புழயிலானு” என்றார் பொன்னச்சன்.
பிரதாபனை பார்க்க முடியவில்லை என்று பத்மினி வருந்த ஜெய் உடனே
“இன்னொரு நாள் அழைச்சிட்டு வரேன் அச்சம்மா” என்று அவரை பார்த்த புன்னகையோடு சொல்ல,
மின்மினி முத்தஸ்ஸீயிடம் சாப்பிட சொல்ல, அவர்கள் விசேஷ வீட்டில் உண்டு வந்ததாக சொல்ல, மின்மினியின் கன்னம் வருடினார் பத்மினி. பல வருடங்கள் மகனில்லாமல் தனிமையில் இருந்தவர் அவர். இப்போது மகன், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், பேத்தி எல்லாம் இருக்க இந்த பிள்ளைகள் தந்தையின்றி இருக்கின்றனரே என்ற இரக்கம். தங்கையின் சாயலில் இருக்கும் பெண்ணைப் பார்க்கவும் அவருக்குக் கண்கள் கலங்கின.
வெண்ணிற புடவையில் சிவப்பு கரையிட்டிருந்தர் பத்மினி. சுருக்கத்தோடு இருந்த அவரின் கைகள் பேத்தியை வருட, மின்மினிக்கு அவள் அச்சம்மாவின் நினைவு. மின்மினியும் அச்சம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். ஜெய் ஆதுரமாக இருவரையும் பார்த்தான். அவன் எப்போதும் அவன் அச்சச்சனின் தீவிர ரசிகன்! அவரை பார்த்து வளர்ந்தவன், அவர் வளர்த்தவன்.
அப்போதெல்லாம் அச்சம்மா அவர் ஊரைப் பிரிந்து வந்திருக்கிறாரே என்றெல்லாம் நினைத்ததில்லை. அவன் அச்சச்சனைப் போல் அக்மார்க் தேவிகுளத்துக்காரனாக இருந்தான். இப்போதும் அப்படித்தான்! ஆனால் என்று காஞ்சிபுரத்து ஊர்மிளாவை மணந்தானோ, பெண்கள் பிறந்தவிடத்தைப் பிரிந்தால் எப்படி உணர்வார்கள் என்று புரிந்துகொண்டான். அதனாலயே அச்சம்மா மாவேலிக்கரா போகவேண்டும் என்று கேட்டால் அழைத்து வந்துவிடுவான். ஏற்கனவே இரண்டு முறை இங்கே வந்திருக்கிறான், அதற்கு முன் பத்மினியின் மகள் ஷோபனாவின் மகன் விஜயன் அம்மம்மாவை அழைத்து வருவான்.
மின்மினியையும் பிரதாபனோடும் பெரிய பழக்கம் இல்லை என்றாலும் அறிமுகமிருந்தது. அச்சம்மா மின்மினியிடம் தன் தங்கை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள, ஜெய் அவர்கள் பேசட்டும் என்று வெளியே வந்தான். பொன்னச்சனும் அவனோடு வெளியே வந்தவர் களரிப்பள்ளியை சுற்றிக்காண்பித்தார். அங்கு சிதறியிருந்த பவழமல்லி பூக்களின் வாசம் அவனை இழுத்தது.
செருப்பைக் கழட்டிவிட்டு அவன் களரிப்பள்ளிக்குள் வர, சொல்லாமலே அவன் அப்படி செய்தது பொன்னச்சனுக்குப் பிடித்தது. ஜெய்யும் அதிகம் பேசவில்லை. அவர் பேசியதைக் கேட்டு இடத்தை சுற்றிப்பார்த்தான்.
ஒன்றரை மணி நேரம் அவர்கள் அங்கிருந்தனர். வினயனோ ஜெய் வீட்டை விட்டு வெளியே வரவும் குளக்கரைக்கு ஓடிவிட்டான். ஜெய்யும் ஊருக்குச் செல்ல நேரமாகுமென்று அச்சம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான். பொன்னச்சன் எப்போதும் கோவில் செல்பவர் பேத்தி தனியாக இருக்கிறாள் என்று எங்கும் செல்லவில்லை.
வினயனோ குளக்கரையிலே உட்கார்ந்துவிட்டான். அண்ணன் ஏன் வந்திருக்கிறான் என்று அறிந்துகொள்ள அப்பாவிற்கு அழைத்தான்.
“டாடி, என்ன பண்றீங்க?”
“நான் வீட்ல இருக்கேண்டா” என்று வினயனின் தந்தை பாலச்சந்திரன் சொல்லவும்
“ஏன்மா எல்லாரும் வீட்ல இருந்தா யார் ரிசார்ட் பார்க்கிறது?” வினயன் படபடவென்று கேட்டான்.
“எல்லாரும் வீட்ல இருக்கோமா? பேசுவடா பேசுவ. அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்து காசி ராமேஸ்வரம்னு டிரிப் அனுப்பவன்னு பார்த்தா நீ கோவா, காஷ்மீர்னு சுத்த போய்ட்ட. உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கேன்ல பேசுவ மோனே” பாலச்சந்திரன் மகனை பிரிந்திருக்கும் ஏக்கத்தில் பேச
“அச்சோ டாடி நான் கேரளா பார்டர் தாண்டலனு எப்படி சொல்லுவேன்?” என்று முணுமுணுத்தவன்
“முதல்ல ஊரை சுத்திட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாடா மோனே” என்று அப்பா சொல்ல வினயனுக்கும் வீடடைய ஆவல்.
“தோ! இன்னும் மூணே நாள். காலையில நீங்க கதவ திறந்தா வினயன் உங்க முன்னாடி நிப்பேன்”
“பொய் சொல்லாதடா! நான் எந்திரிச்சு கதவ திறக்கப்ப நீ நல்லா இழுத்துப் போர்த்திட்டு தூங்குவ, ஏழு மணிக்கு மேல தானே உனக்கு காலையில..” பாலச்சந்திரன் மகனை கிண்டல் செய்ய
“பாலேட்டா! நீங்க என்னை ரொம்ப பேசிறீங்க? நான் இப்போ எல்லாம் டெய்லி நாலரைக்கு எழுந்திடுறேன் தெரியுமா?” என்றான் ரோஷமாக.
“ஏண்டா எந்திரிச்சு பால் போடப்போறியா?”
“எண்ட அம்மோ!” என்று வினயன் ஆச்சரியப்பட
“என்னடா?”
“ஏன்ப்பா அப்படி சொல்றீங்க?”
“பின்ன ஊர் சுத்தப்போனவன் நாலரைக்கு எந்திரிச்சு என்னடா பண்ண போற?”
“அத விடுங்க, ஜெய் எங்க?”
“அவன் மாவேலிக்கரா போயிருக்காண்டா. அம்மாவோட சொந்தத்தில் விசேஷம்டா, அதான் ஜெய் அழைச்சிட்டுப் போயிருக்கான். அப்படியே அம்மாவோட தங்கச்சி வீடு தாமரகுளத்துல இருக்குல்ல. அங்க கூட்டிட்டுப் போறேன் சொன்னான்.”
“ஓஹ், அதான் விஷயமா?”
“என்ன விஷயமா?”
“ஒன்னுமில்ல. சரி டாடி. நான் ஒரு விஷயம் உங்ககிட்ட மறைச்சிட்டேன், ஊருக்கு வந்து சொல்றப்போ பேச கூடாது. ஜெய் திட்டினா நீங்கதான் சப்போர்ட் பண்ணனும்”
“ஏடா வினயா! என்னடா பண்ணி வச்ச?”
“ஒன்னும் பெருசா இல்ல டாடி.”
“வினயா! பிரச்சனை எதுவுமில்லையே?” பாலச்சந்திரன் கவலையாகக் கேட்க, அப்பா கவலையாக இருக்கிறாரே என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டான் வினயன்.
“எண்ட குருவாயூரப்பா! கள்ளன், கள்ளன்! எவ்வளவு பொய்? உன்னை இதுக்குத்தான் பொய் சொல்லிட்டு போனியா? நீ வாடா வீட்டுக்கு உன்னை என்ன செய்றேன் பாரு. பெரிய அனுமாரு தூது போயிருக்காரு.”
“டாடீஈஈஈ! போதும். வினயன் பாவம்”
“நடிக்காதடா! இரு இரு ஜெய் கிட்ட போன் பண்ணி சொல்றேன்”
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.