அவன் முகத்தில் அத்தனை தீவிரம். இதனை இவள் மறந்திருக்க கூடாதே என்ற ஆதங்கம்.
நிஜத்திற்குமே மறந்துதான் போயிருந்தாள் வித்யா. முரளி சொல்லியதும் தான் அவனின் கேள்விக்கான விடை கிடைத்தது.
மன்னிப்பாய் அவனை பார்த்தவள் முகத்தில் இப்படி மறந்துவிட்டோமே என்னும் வருத்தம்.
“சூழ்நிலை அப்படி. லீவ் இட். ரிலாக்ஸ் திவ்யா…” என்றான் இப்போது இலகுவாய்.
“ஆனாலும் நீ மறந்திருக்கக்கூடாது. முருகேஸ் அத்தையும் இங்க வந்தப்போ கூட அதை பத்தி பேசாம வேற என்னவோ பேசிட்டு போயிருக்காங்க போல?…” என்றான் இன்னும் இலகுவாய்.
திடுக்கிட்டு அவனை பார்த்தவள் பார்வை என்ன நினைக்கிறானோ என்று பதட்டமாய் அவனை துளைத்தது.
“கல்யாண விஷயம் இப்போ பேசவேண்டாம். முடிஞ்சுபோனது. ஆனா இதை பத்தி பேசவேண்டாமா?…” என்று சொல்ல, ‘ஸாரி’ என்றாள் தன்னிரு காதிலும் விரல்கொண்டு பிடித்து மன்னிப்பை யாசிக்கும் பாவனையில்.
“மொத்தமா விழுந்துட்டேன். கொஞ்சம் என்னை ஸ்டெடியா உன்னை பார்த்து பேச விடறியா நீ?…” என்று சூட்சம பார்வையுடன் அவன் கேட்க வித்யா முகத்தில் சட்டென்று ஒரு மாற்றம்.
அவனை முறைத்தவள், ‘இதை பேசக்கூடாது’ என்று விழிகளால் மிரட்டி கண்களை உருட்ட,
“ஓகே, பேக் டூ பார்ம்….” என்றவன்,
“சொல்லு, என்ன செய்யலாம்ன்னு இருக்க?…” என்றான் அவளிடம்.
‘தான் என்ன செய்யமுடியும்’ என்று யோசித்தவள், ‘அம்மாக்கிட்ட சொல்றேன்’ என்றாள் அவனிடம்.
“உங்கம்மாட்ட சொன்னா, அவங்க கூப்பிட்டாங்கன்னா உடனே அண்ணி வந்திருவாங்களா அங்க?…” என்ற கேள்வியில் வித்யாவின் முகம் வாடியது.
“இவ்வளோ நாளாச்சு, ஆனந்தி பெரிம்மா ஏன் இன்னும் இங்க இருக்காங்கன்னு புரியுதா உனக்கு?…” என்றதற்கு தலையசைத்து ஆமோதித்தாள்.
“நேரடியாவே சொல்றேனே. நீ வராம ரிது அண்ணி கரூருக்கு வரமாட்டாங்க. அவங்க வராம ஆனந்தி பெரிம்மாவை பெரிப்பா கூப்பிடமாட்டாங்க. இது அண்ணிக்கு முக்கியமான நேரம். விசேஷம் வைக்கனும் திவ்யா….” என்று சொல்ல செய்வதறியாமல் பார்த்தாள் அவள்.
“உன் இஷ்டம். உன்னை யாரும் கட்டாயப்படுத்தமாட்டாங்க. உனக்காக அவ்வளோ பேர் யோசிக்கிறாங்க. நீ உன் அக்காவுக்காக யோசிக்க வேண்டாமா? இப்பவரை அண்ணாவும் கரூர் வரலை….” என்று சொல்ல வித்யாவின் விழிகள் கலங்கியது.
அவளுக்கு அங்கே வர விருப்பமில்லை என்பது தெரிந்திருந்தாலும் அப்படியே விடமுடியாதே?
“உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அந்த இடம் உனக்கானது. உன்னோட பிறந்த இடம் அந்த வீடு தான். நீ என்னை கல்யாணம் செஞ்சாலும் இல்லைன்னாலும் உனக்கான உரிமை அங்க இருக்குன்னு எப்போ நம்புவ?…” என்றவனின் கேள்வியில் தடுமாற்றமாய் அவள் பார்த்தாள்.
“ஓகே, இதை பேசனும்ன்னு கூப்பிட்டேன். பேசியாச்சு. இனிமே உன்னோட இஷ்டம் தான்…” என்றவன்,
“போகலாமா?…” என்று அவளை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு அன்றே கிளம்பியிருந்தான்.
அடுத்த பத்துநாட்களில் ரிதுபர்ணாவுடன் வித்திவ்யா கரூர் வந்து சேர்ந்திருந்தாள்.
ஆனந்தியும், ஆத்மாவும் உடன் வந்திருக்க ஆத்மாவின் தங்கையான மனோவும், பரத்தின் அக்காவான சுந்தரியும் கூட விசேஷத்திற்கு வந்துவிட அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.
மறுநாள் விசேஷம். குடும்பம் மொத்தமும் கொண்டாட்டத்துடன் இருந்தது. முருகேஸ்வரி ரிதுவை தாங்கிய அதேநேரம் வித்யாவையும் கவனித்துக்கொண்டார்.
செண்பகம் ரிதுவை வந்து பார்த்துவிட்டு பூர்விதாவை கொஞ்சிவிட்டு வித்யாவையும் நலம் விசாரிக்கத்தான் செய்தார்.
“வா, நல்லாயிருக்கியா?…” என்ற கேள்வியோடு அமைதியாய் இருந்துகொண்டார்.
அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ரிதுவிற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதில் எல்லாம் தள்ளியும் நிற்கவில்லை செண்பகம்.
வழக்கம் போலவே இணைந்தே எல்லாம் செய்தார் அவர். ஆனால் ஆனந்தியிடம் மட்டும் ஒரு ஒதுக்கமும், பார்க்கும் நேரம் முறைப்புமாய் தான் இருந்தார்.
அண்ணாமலைக்கு மனதெல்லாம் நிறைந்துவிட்டது. நடந்த பிரச்சனைகளின் சுவடு எழாதபடிக்கு இந்த விசேஷம் அனைவரின் மனதிற்கும் ஒரு நிம்மதியை தந்திருந்தது.
பேரப்பிள்ளைகளின் கூச்சல், கும்மாளம் என்று வீடே விழாக்கோலம் தான். அத்தனைபேரையும் துரத்தாத குறையாய் உறங்க விரட்டியிருந்தார்கள்.
அத்தனைபேர் இருப்பினும் வித்யா வந்ததில் இருந்து முரளியை ஒருநொடி கூட பார்க்கவில்லை.
எங்கும் அவனின் பிம்பம் தென்படவில்லை. அவனின் இன்மை அவளுள் பெரிதாய் ஒரு வெற்றிடத்தை வியாப்பிப்பதை போல நொடிக்குநொடி பெரும்பாதிப்பை தந்துகொண்டிருந்தது.
யாரிடமும் கேட்க முடியவில்லை. கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தனக்குள்ளேயே வைத்துக்கொண்டவள் மனது அவனின் வரவை எதிர்நோக்கியது.
இப்படி அனைவரும் ஒன்று கூடி இருக்கும் பொழுதுகள் முரளிக்கு அத்தனை விருப்பமான நிமிடங்கள்.
வந்து இரண்டுநாட்களாக போகிறது. அவனை காணமுடியவில்லை. தன்னால் தானோ, தனக்காக தானோ என்றொரு குற்றவுணர்வு வேறு.
இதில் செண்பகத்தின் முகத்தில் முழுதாய் மகிழ்ச்சி என்பதில்லை. அத்தனைபேருக்கு நடுவில் மகனை அவர் மனது நாடுகிறதென புரிந்துகொள்ள முடிந்தது வித்யாவால்.
“எங்க முரளியை பார்க்கவே இல்லையே மாமா?…” என்று சுந்தரி கூட இரவு உணவின் பொழுது இளவரசுவிடம் கேட்டிருக்க,
“அவன் எங்க வரப்போறான்? வந்தா இங்க சங்கடமா நினைப்பாங்களோன்னு இருக்கான் ம்மா. நான் இல்லைன்னா என்ன, நல்லபடியா கொண்டாடுங்கன்னு சொல்றான். நாளைக்கு விசேஷத்துக்கு வருவான்…” என்று துவண்டுவிட்ட குரலில் அவர் சொல்ல கேட்டிருந்தாள் வித்யா.
நேரம் செல்ல செல்ல இரண்டுமுறை செண்பகம் வேறு வெளியே வந்து வாசலை பார்த்துவிட்டு செல்வதை கண்டவள் கைகள் தன்னைப்போல முரளியின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியது.
‘நாங்க ஊருக்கு வந்திருக்கோம்’ என்று மட்டும் அவள் அனுப்பியிருக்க உடனே அதனை பார்த்துவிட்டதன் அறிகுறி.
“ஓஹ், எனக்கு தெரியாதே?…” என்று பதில் செய்தி அனுப்பி வைத்தவன் முகமெல்லாம் புன்னகை.
பொய் சொல்கிறான் என்று தெளிவாய் தெரிந்தாலும் வா என்று அழைக்க வித்யாவிற்கு அவ்வளவு தயக்கம்.
எழுத்துக்களை தொடுவதும், அனுப்பும் முன் அழிப்பதுமாய் அவளிருக்க அதனை பார்த்துக்கொண்டே தான் இருந்தான் முரளி.
வெகுநேரம் இப்படியான கண்ணாம்பூச்சி விளையாட்டின் நிறைவில் முரளியே செய்தி அனுப்பினான்.
“பார்க்கனும்ன்னு நீ சொல்லனும்ன்னு இல்லை திவ்யா. முரளி வந்துட்டே இருக்கேன்…” என்று அனுப்பியவன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை காண்பிக்க வித்யாவிற்கு சந்தோஷம் ஒருபுறமும், பதட்டம் ஒருபுறமும்.
என்ன நினைத்திருப்பான்? அவனை தேடுகிறோம் என்று புரிந்திருப்பானோ என பல்வேறு எண்ணங்கள்.
அவளின் சிந்தனையை ஆக்கிரமித்தவன் பிரசன்னம் அடுத்த பத்துநிமிடத்தில் அந்த இல்லத்தில்.
வண்ணவண்ண விளக்குகளின் மத்தியில் நடந்து வந்துகொண்டிருந்தவனின் தோற்றம் அவளை தீண்ட ஜன்னலில் நின்றவள் பார்வை அசைந்தாடவில்லை.
அத்தனை பதட்டமும் தணிந்ததை போல உள்ளுக்குள் அவளறியா ஒரு குளுமை.
“ஹாய்…” என்றான் முரளி முகம்கொள்ளா புன்னகையுடன். அவளை கொன்று குவிக்கும் புன்னகையுடன்.
அதனை எதிர்பார்க்காதவள் திடுக்கிட்டு சட்டென கீழே அமர்ந்துவிட முரளியின் மனநிலை உல்லாச கூத்தாடியது.