இப்போது என்னவோ சமீபமாய் வித்யாவை தொழிலுக்குள் அண்ணாமலை ஆத்மாவின் மூலம் நுழைத்திருக்க அவள் அங்கே பணியாள் என்பதை மட்டும் அவளுக்கு அறிவுறுத்துவதை போலத்தான் இருக்கும் அவனின் நடவடிக்கைகள்.
சத்தமிட்டு, சண்டையிட்டு அதட்டி எல்லாம் எதையும் செய்வதில்லை. அதற்கு அவள் தனக்கு சமமா என்னும் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்.
ஆனால் அவளின் இடத்தை முருகேஸ்வரியை போல அவனுமே சுட்டிக்காட்ட நினைக்க அதில் பெரிய அடி விழுந்ததை போலிருந்தது அன்று ஆத்மா அவனிடம் பேசியது.
என்னவோ அதனை மட்டும் பரத்தினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆத்மாவின் இடத்தில் வித்யாவா என்று தோன்றினாலும், ‘பொண்டாட்டிக்காக என்னவோ சொல்றார்’ என்று சமாதானம் செய்துகொண்டான் தன்னையே.
இப்போது முரளியுடன் வித்யாவை கண்டதும் கூட சட்டென்று ஒரு வேகத்தில் பேசிவிட முரளி இப்படி பதிலடி கொடுப்பான் என்று நினைக்கவில்லை.
“தோரணையும், ஆளுமையும் நாம தேடி போற விஷயம் இல்லை பரத். நமக்குள்ள அதுவா உருவாகனும். இவங்களை மாதிரி நாமளும் வரனும்ன்னு நினைக்கலாம். ஆசைப்படலாம். ஆனா நம்மோட பிறந்த சுபாவம்ன்னு ஒன்னு இருக்கு. அது தான் எல்லாத்துக்கும் அடிப்படை…” என்று பல்லை கடித்துக்கொண்டு பேசிய முரளி,
“அண்ணாமலை பெரியப்பாவை ரோல்மாடலா எடுத்து அவரை மாதிரி இருக்கனும்ன்னு நினைக்கிறது ஓகே. ஆனா அவராவே ஆகிடமுடியாது. நாளைப்பின்ன நமக்கு பின்னாடி வர பிள்ளைங்க பரத் மாதிரி வரனும்ன்னு உன்னை நீ ரோல்மாடலா வச்சுக்க பாரு. அதுதான் நல்லது…” என்று சுளீரென்று சொல்லி வந்திருந்தான்.
“நான் சாதாரணமா சொல்ற விஷயத்தை நீ குதர்க்கமா பார்க்கற முரளி…” என்று பரத்தும் முரளியிடம் சொல்ல,
“எது சாதாரணம் பரத்? இன்னொருத்தரோட இயலாமையை கேலி பன்றதா? இனிமே அதை செய்யாத. நீ பெருசா நினைக்கிற அண்ணாமலை பெரிப்பாவே அதை அனுமதிக்கமாட்டார்….” எனவும்,
“என்னடா சொல்லிட்டேன். இன்னும் ஏபிசிடின்னு லெட்டர்ஸை விரல்ல காமிக்கிறான்னு சும்மா ஜஸ்ட் ஒரு ஃபன்னுக்கு சொன்னேன். இதை ஒரு பெரிய விஷயமா பார்த்து எவ்வளோ பேச்சு?…” என அப்போதும் பரத் புரியாமல் தான் பேசினான்.
“நீ அதை குறையா ஊனமா பார்க்கறதால அது உனக்கு இகழ்ச்சியா தெரியுது. ஆனா இப்படி தேள் கொடுக்கு மாதிரி விஷமான வார்த்தைகளை கொட்டுறதுக்கு பேசாம இருக்கறவங்க எவ்வளவோ மேல்….” என்றான் முரளி மனம் பொறுக்காமல்.
“ப்ச், நீ என்னவோ மூட் அப்செட் போல. அப்பறம் பேசுவோம். நீ கிளம்பு முதல்ல…” என்று அவனின் தோளில் தட்டிவிட்டு பரத் புன்னகைக்க அவனிடம் பேசுவதற்கு பதில் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போலானது முரளிக்கு.
வார்த்தையாடினாலும் வீண் என்று அப்படியே முறைப்புடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான் முரளி.
இப்போதும் நினைக்க நினைக்க ஆறவில்லை. எப்போது தான் இவனின் இந்த குணம் மாறுமோ என்றிருந்தது.
சிலநிமிடங்கள் கழித்தும் அவன் அப்படியே அமர்ந்திருக்க இதயத்தினுள் பலவாறான சிந்தனை ஓட்டங்கள் ஓட ஆத்மாவும் அழைத்துவிட்டான் தம்பிக்கு.
தம்பியின் குரல் பேதத்தை கண்டுகொண்ட ஆத்மாவின் மனம் அங்கு துணுக்குற்றது.
எப்போதும் கலகலப்புடன் சிரித்தபடி பேசுபவனின் குரலில் கிஞ்சித்தும் சுரத்தில்லை என்று உணர்ந்தவன்,
“ஓகே, ரிலாக்ஸ். எதுவானாலும் பார்த்துக்கலாம். வா…” என்று சொல்லி என்னவென்றும் கேட்காமல் கூறவும் அத்தனை ஆறுதல் முரளிக்கு.
“வரேன்னா. நான் ஓகே தான்…” என்றவன்,
“ஹ்ம்ம், பார்த்துக்கலாம்ன்ற முடிவுக்கு நானும் வந்துட்டேன்…” என்று பூடகமாக முரளியும் சொல்ல,
“வெல். சியரப் முரளி. நான் எப்பவும் உனக்கு சப்போர்ட் தான்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் ஆத்மா.
அதன் பின்னர் தான் மீண்டும் காரை கிளப்பிக்கொண்டு சென்னை நோக்கி பயணப்பட்டான் முரளிவினோகரன்.
————————————————-
மாலை வித்யா ஸ்கூட்டியுடன் கேட்டை தாண்டிக்கொண்டு வண்டியை நிறுத்துமிடத்தில் கொண்டுவந்து நிறுத்தினாள்.
அங்கே பெண்கள் மாநாடு போல தங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததும் முகமெல்லாம் புன்னகை.
இரு கைகளையும் அசைத்து காண்பித்து சிரித்துக்கொண்டே அவர்களை நோக்கி வந்தாள் வித்யா.
திண்ணையில் முருகேஸ்வரி, சபர்மதி, விசாலாட்சி என்று அனைவருமே அமர்ந்திருந்தனர்.
நால்வருமே தாளிப்பு வடகத்திற்காக சின்னவெங்காயத்தை உரித்துக்கொண்டிருக்க, நடுவில் விரிக்கப்பட்டிருந்த துணியில் கோபுரம் போல உரிக்கப்பட்ட வெங்காயம் நிறைந்திருந்தது.
கையிலிருந்த தன் ஹேண்ட்பேக்கை அப்படியே ஓரமாய் வைத்துவிட்டு தானும் அமர,
“உதைபடுவ. இப்ப தான வந்த கம்பெனில இருந்து. போய் முகத்தை கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா…” என்ற அதட்டல் குரலில் திரும்பி பார்க்க, கையில் உளுந்து வடையும் தேங்காய் சட்னியும் வைத்தபடி செண்பகம் முறைப்புடன் பார்த்தார் வித்யாவை.
“நீ டீயை ஊத்தி குடு….” என்று வித்யா பக்கம் பிளாஸ்க்கை நகர்த்தி,
“நீ வடையை வை…” என்று சபர்மதியிடம் நகர்த்திவிட்டு,
“நீங்க போய் கையை கழுவிட்டு வாங்க…” என்று அவர்களை அனுப்பினார்.
முருகேஸ்வரியும், விசாலாட்சியும் கையை கழுவிக்கொண்டு வர சபர்மதி தயாராய் வைத்திருந்ததை எடுத்துக்கொடுத்தாள்.
சிறிதுநேரம் பேச்சுக்கள் திசைமாறினாலும் திருமணம் பற்றிய விவாதம் தான் நடந்தது.
செண்பகத்தின் பார்வை மட்டும் அவ்வப்போது வித்யாவை கவனித்துக்கொண்டே இருக்க, அவளுமே என்னவென்று கேட்டுவிட்டாள் நேரடியாக.
“ஹ்ம்ம், என்னத்த சொல்ல? உங்கம்மாக்கிட்ட என்ன சொன்ன நீ? எனக்கு அவ்வளோ கோவம். உன்னை புடிச்சு நல்லா நாலு பேசனும்ன்னு நினைச்சேன். ஆனா எங்க முடியுது? உன் முகத்தை பார்த்தா திட்ட தோணமாட்டுதே?…” என்று அவர் கவலையாக விசாலாட்சி குபீரென்று சிரித்துவிட்டார்.
“செண்பகம் மதினிக்கு திட்ட முடியலையாமா? உலக அதிசயம் தான்…” என்றார்.
“அதானே? என்னை பேச சொல்லு, வாய் ஓயாம பேசுவா…” ஆனந்தியும் விசாலாட்சியுடன் சேர்ந்துகொள்ள,
“நான் தான் கிடைச்சேனா? இவ என்ன சொல்லியிருக்கான்னு கேட்கமாட்டீங்களா?…” என்றார் செண்பகம் அவர்கள் இருவரையும் பார்த்து.
“ஏன் முருகேஸு நீ கேட்டுட்டு என்னன்னு அமைதியா இருக்க?…” என்றும் முருகேஸ்வரியிடம் கேட்க,
“ரிதுவும், மாப்பிள்ளையும் வரட்டும்ன்னு தான். நீங்க எல்லாம் இருக்கீங்களே? உங்களை மீறி நான் என்ன செஞ்சிட போறேன்?…” என்றார் முருகேஸ்வரி மாறா புன்னகையுடன்.
“என்னவோ போ. எனக்கு தான் கேட்டுட்டு படபடன்னு ஆகிடுச்சு. இந்த பிள்ளைங்களுக்கு கல்யாணத்தை செய்யறதுக்குள்ள?…” என்ற செண்பகத்தின் கவலை மகன் பக்கம் திரும்பிவிட்டது.