“அதை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் விசாலம். நமக்கு அது சரிப்பட்டு வராது…” என்றார் செண்பகம்.
“என்ன அவங்களையா? நல்ல குடும்பமாச்சே? பிக்கல் பிடுங்கல் இல்ல. ஒத்த பொண்ணு. எல்லாம் பொண்ணுக்கு தான்…” என்று ஆனந்தி ஆச்சர்யமாக கேட்க,
“அந்த ஒத்தைன்ற காரணத்துக்குத்தான் வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்ற செண்பகம்,
“கல்யாணம், பொண்ணு எடுக்கறதுன்னா சும்மாவா? பொண்ணு வீட்டுல பொண்ணுக்கு கூட பிறப்புன்னு ஒரு பையன் வேண்டாமா? நாளைப்பின்ன மச்சினன் தயவு பேருக்காச்சும் இருக்கனும்…” என்றார் செண்பகம்.
அவரின் பேச்சை கேட்டுக்கொண்டே அவர்களும் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
“இப்ப இந்த வீட்டுல பொண்ணை கட்டினா காசோட அவங்க பெத்தவங்க சுமையவும் என் பிள்ளைல சுமக்கனும். மாமியார், மாமனாரை அப்படியே விட முடியுமா? ஒத்தை பிள்ளையை பெத்து வச்சுக்கிட்டு நீ பக்குவம் பார்க்க கூடாதுன்னு மருமகளை சொல்ல ஆவாதே? அவ பார்த்தா கூட என் பிள்ளையும் அதை தூக்கி சுமக்கனும். தோள் குடுக்க இல்லைன்னாலும், இப்படி தலையில வச்சுக்கும்படி எல்லாம் சம்பந்தம் எனக்கு வேண்டாம்…” என்றார் செண்பகம்.
முருகேஸ்வரிக்கு அப்போதே பயம் பிடித்தது. தன் மகளுக்கு தாங்கள் பார்க்கும் வரனும் இப்படி யோசித்தால் என்னவாகும் அவள் எதிர்காலம் என்ற கவலை உண்டாக்கிய கலவரத்தை முகத்தில் காண்பித்து கொள்ளாமல் மறைத்துக்கொண்டார்.
“அதுதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். வசதில முன்னபின்ன இருந்தாலும் ஆளும்பேருமா கூட பிறந்த பிறப்போட இருக்கற இடத்துல தான் பொண்ண எடுக்கனும். அதான் அப்பவே வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்…” என்று கூற,
“அப்ப பேசாம நம்ம ஆனந்தி மதினியோட அண்ணே மகளை பேசி பார்ப்போமா?…” விசாலாட்சி விளையாட்டு போலவெல்லாம் இல்லாமல், நிஜமாகவே கேட்க ஆனந்தி திகைத்து போனார்.
“என்னது?…” என்று செண்பகம் பார்த்த பார்வையில் ஆனந்தி விசாலாட்சியை பார்த்தார் ‘இது தேவையா?’ என்று.
“அவரும் பொண்ணை வச்சிருக்கார். வெளில எடுக்கறதுக்கு பேசாம பார்க்கலாமே? பொண்ணு நல்ல பிள்ளை தானே?…” என்று ஆனந்தியை சமாதானம் செய்த விசாலாட்சி எதார்த்தமாக கூற,
“சரியா போச்சு. கட்டி வச்சிட்டு குடுமிப்பிடி சண்டைலையே வாழ்க்கை ஓடும். அதுவும் ஆனந்தியக்காவோட மதினிய கண்டாவே எனக்கு ஆகாது. அந்தம்மாவும் பார்வையும் பேச்சும்….” முகத்தை அசூயையாக வைத்துக்கொண்டு.
“கட்டிக்கிட்டு வந்ததும் பிரிச்சு கூட்டிட்டு போக தான் பார்க்கும் அது. பொண்ணு நல்லாருந்தா போதுமா? பெத்தவங்களும் சரியா இருக்க வேண்டாமா? எனக்கு வர்ற மருமக மாமனார் மாமியாருன்னு மட்டுமா பார்க்கனும்? நாம எல்லாம் காலத்துக்கும் இந்த ஒருகூட்டுல இருக்கறவங்க…” என்றவர்,
“வர்றவ அதை புரிஞ்சு நடக்கனும். எல்லாரையும் சேர்த்து அனுசரிச்சு போகனும். புரிஞ்சு பழகனும். ஆனந்தியக்கா அண்ணே மகளை எடுத்தா. ப்ச், வேண்டாம் வேண்டாம்…” என்று ஆனந்தி பார்க்கவே அவர் சொல்லிவிட ஆனந்தி ஒன்றும் பேசவில்லை.
என்ன சொல்லிவிடமுடியும்? தன் அண்ணனும், அண்ணியும் அப்படித்தானே இருக்கின்றனர் என நொந்துகொண்டு அமைதியானார்.
வித்யாவிற்கு செண்பகத்தின் பேச்சில் அப்படி ஒரு சிரிப்பு. ஆனாலும் ஆனந்தியை கருத்தில் கொண்டு அதனை காண்பித்துக்கொள்ளவில்லை.
“என்னடி நினைச்ச நீ? உண்மையை சொல்லு…” என்றார் தானும் சிரித்துக்கொண்டே.
“உங்களுக்கு மருமகளா வரப்போற குடும்பத்தையும், பொண்ணையும் ஆடர் குடுத்து தான் செய்ய சொல்லனும்…” என்று கையசைத்து காற்றிலாட்டி அவள் சொல்ல,
“அப்படி சொல்லுடி…” என்றார் ஆனந்தி சந்தோஷமாய்.
அதில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அதை கண்டு சபர்மதியும், விசாலாட்சியும் சிரிக்க,
“என்ன கண்ணு பேசற? தப்பு…” என்றார் முருகேஸ்வரி வித்யாவின் முதுகில் லேசாய் ஒரு அடி வைத்து.
“இந்தா என்ன பன்ற முருகேஸு? வளர்ந்த புள்ளையை கை நீட்டிக்கிட்டு. இப்ப என்ன சொல்லிட்டா இவ?…” என்று அதட்டிய செண்பகம்,
“நீ எங்கிட்ட வா…” என்று வித்யாவின் கை பிடித்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டவர்,
“உன்னோட பெரியமாமாவும், சின்னமாமாவும் வரட்டும். எங்க பொண்ணு செய்யறாங்கன்னு கேட்டு ஆடர் குடுத்துருவோம். சரிதான?…” என்றார் செண்பகம் வித்யாவிடம் அவளை போல சிரித்துக்கொண்டே.
“ஆமாமா, செஞ்சுகுடுத்து வாங்கத்தான் உங்கள அழைக்காக. வாங்கி நட்டநடு வீட்டுல வச்சுக்கிட்டு பூஜை பண்ணுங்க…” என விசாலாட்சி கேலி பேச அந்த நேர பொழுதுகள் கலகலப்பாய் நகர்ந்தது.
“பாரு பேசிக்கிட்டே முரளிக்கு கூப்பிட மறந்துட்டேன். இருட்ட போகுது. மிச்ச வேலையை நாளைக்கு பார்த்துப்போம். போதும் உரிச்ச வரைக்கும்…” என்று செண்பகம் சொல்ல,
“இந்த ராணி எங்க? கூப்பிடு, அள்ளி வைக்க சொல்லுவோம்…” என்று சபர்மதியிடம் ஆனந்தி சொல்ல அந்த இடத்தை ஒழுங்குபடுத்த ராணி வந்துவிட்டார்.
செண்பகமும் முரளிக்கு அழைத்து பேசியபடி நகர்ந்து செல்ல வித்யா அதனை முகத்தில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
முரளிக்கு வரவிருக்கும் துணைக்கான செண்பகத்தின் எதிர்பார்ப்புகள் எல்லாம் வித்யாவின் மனதில் ஆழமாய் பதிந்துபோனது.
——————————————-
வித்யாவின் நினைவுகளின் ஆழத்தில் அங்கே முரளி முழுதாய் கரைந்துகொண்டிருந்தான்.
“எவ்வளோ நேரம்டா இங்கயே நிப்ப?…” என்று முரளியின் தோளில் தட்டியபடி ஆத்மா அவனருகில் வந்து நின்றான்.
அதுவரை இருளில் தூரத்தில் கரையோ தொட்டு சென்ற கடல் அலைகளை வெறித்துக்கொண்டிருந்த முரளியின் பார்வை தன் அண்ணனிடம் திரும்பியது.
அவன் புறம் சற்றே இலகுவாய் திரும்பியவன் பார்வை ஆத்மாவை தாண்டி செல்ல,
அவனே சொல்லட்டும் என்று ஆத்மா மௌனம் சாதிக்க ஒரு பெருமூச்சுடன் திரும்பி மீண்டும் கடலலையை பார்த்தான் முரளி.
“அம்மாவுக்கு என் விருப்பம் பத்தி சொன்னா எனக்காக யோசிப்பாங்கன்னு தோணுது…”
“ஓஹ்…” ஆத்மா வேறு ஒன்றும் பேசவில்லை.
“பார்க்கலாம். பார்த்துக்கலாம். நான் டிஸைட் பண்ணிட்டேன். இனிமேலும் என்னை நானே ஏமாத்திக்க வேண்டாமேன்னு நினைக்கறேன்…” என்றவன்,
“இவளுக்கு புரியவே இல்லைண்ணா. நான், என் பேச்சு எதுவுமே வித்யாவுக்கு எதையுமே தோண வைக்கலை…” என கவலையுடன் சொல்லியவன்,
“எல்லாம் முருகேஸ்வரி அத்தையால. அவங்க அப்படி வளர்த்து வச்சிருக்காங்க. அவளும் வேற எப்படி இருப்பா?….” என்றான் ஆற்றமாட்டாமல்.
“இப்ப மட்டும் சரின்னு சொல்லிருவாங்களா?…” என ஆத்மா கேட்க,
“எங்க வாழ்க்கைக்காக கொஞ்சம் கஷ்டப்படலாம்ன்னு தோணுது. சரின்னு சொல்ல வைக்கலாம்ன்னு பார்க்கறேன்….” என்றவன்,
“என்னால வித்யாவை விட்டுக்குடுக்க முடியலை. தள்ளி வச்சு வேற யாரோடையும் அவளை சேர்த்து பார்க்க முடியும்ன்னும் தோணலை. அவ்வளோ தூரம் நல்லவன் இல்லை ண்ணா நான்….” என்ற முரளியை பார்த்த ஆத்மாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
“சரிடா, பேசலாம்…” என்றான் ஆத்மா அவனை அரவணைத்து.
“ம்கூம், நான் பார்த்துக்கறேன்….” முரளி அவனிடம் சொல்ல,
“தனியா எப்படிடா?…” ஆத்மா திகைத்தான்.
“உங்க கல்யாணத்தன்னைக்கு நீங்க தனியா தானே அண்ணிக்கு நின்னீங்க? எங்க யாரையும் எதிர்பார்த்தீங்களா என்ன? இல்லையே?…” என்று சொல்லியவனை ஆச்சர்யம் பொங்க பார்த்தான் ஆத்மா.
“இது லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா? எப்படி நடக்க போகுதோ? ஆனா கல்யாணம் எங்களுக்கு தான். முரளிவினோகரன் வெட்ஸ் வித்திவ்யா தான்…” என்று உறுதியாய் சொல்லிவிட்டு,
“இப்பதான் எனக்கு தூக்கம் வருது. நீங்களும் போய் தூங்குங்க. குட்நைட்…” என ஆத்மாவிடம்.
“என்னடா தூங்கறேன்னு இங்கயே சாய்ஞ்சு உக்கார்ந்துட்ட?….” ஆத்மா முரளியிடம் கேட்க, மயில்மாணிக்கக்கொடியின் அருகில் இரு கைகளையும் பின்னுக்கு கொடுத்தபடி சாய்ந்திருந்தவன்,
“இங்க தான் தூங்கனும் போல இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாதீங்கண்ணா…” என்று சொல்லிய முரளி கால் மேல் காலிட்டுக்கொண்டு விசிலடித்தபடி இருக்க,
“நீ நடத்துடா….” என்று சிரிப்புடன் அங்கிருந்து சென்றான் ஆத்மகண்ணன்.