“இப்போ கூட வா, வந்து சாப்பிட்டு போன்னு சொல்லமாட்ட இல்ல?…” என்றான் முரளி ஆதங்கமாய்.
“ப்ச், என்னடா உன் பிரச்சனை? இங்க வச்சு சண்டைக்கு நிக்கிற?…” ஆத்மா அவனை பிடித்து நிறுத்த,
“பின்ன என்னண்ணா? கண்ணு நிறைய அத்தனை ஏக்கம். கூப்பிட ஆசை. இருன்னு சொல்ல தவிக்கிறா. ஆனா அவளா சொல்லமாட்டாளாம். ஆனா நானா புரிஞ்சுட்டு இருக்கனுமாம்….” என்று வார்த்தைகளை விட,
“ப்ச், இப்ப என்ன? கிளம்ப போறியா?…” என்றான் ஆத்மா.
“அப்படின்னு சொன்னா போன்னு நீங்களும் சொல்லுவீங்களா? நல்ல அண்ணா எனக்கு…” என்று சலித்துக்கொள்ள அவனை முறைத்த ஆத்மா,
“பார்க்கிங் போறேன். வந்து சேருங்க சண்டை போடாம…” என்று முன்னே சென்றுவிட்டான் வேகமாய்.
“நல்ல பொண்டாட்டி…” என்று வித்யாவையும் பார்த்து முரளி கூற அவனை பார்ப்பேனா என்றிருந்தாள்.
இருவரையும் விட்டு ஆத்மா செல்ல அவனை பின்தொடர முடியாமல் முரளியின் கண்பார்வையில் தேங்கி நின்றாள் வித்யா.
“என்னவாம்? போகவேண்டியது தானே?…” என்று அவளை நெருங்கி சொல்ல, மௌனமாய் நின்றாளே தவிர செல்லவில்லை.
“ப்ச், இங்க வா…” என்றவன் அவளை காத்திருப்போர் இருக்கையில் அமரவைத்து தானும் அமர்ந்தான்.
“அந்த மாத்திரை எல்லாம் தா…” என்றவன் அதனை பிரித்து அவளிடம் காண்பித்தான்.
அனைத்துமே புதிதாய் இருந்தது. இதற்கு முன் அவள் எடுத்துக்கொண்டிருந்த மாத்திரை அதுவல்ல என்று பார்த்ததும் தெரிய, ‘என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?’ என்றாள் வித்யா அவனிடம்.
“என்ன பிரச்சனை? எனக்கு தான் பிரச்சனை. ஒன்னும் வழிக்கு வரலைன்னா கடத்த தான் போறேன்…” என்று சொல்லி பல்லை கடிக்க, மாத்திரை பற்றிய கேள்வியை விடுத்து அவனை முறைத்தாள்.
“முறைச்சா மட்டும்? சும்மா பார்த்து பார்த்து பத்தவைக்காம இந்த மருந்தை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு…” என்று மிரட்டலாய் கூற மீண்டும் கேள்வியாய் பார்த்தான் முரளி.
“தலையில ஏற்கனவே அடிபட்டிருக்கு. அதோட சில நேரம் சரியா தூக்கமில்லாம உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கற. தூக்கத்தை கன்ட்ரோல் பன்ற. தலையில நீர் கொர்க்குது. ஆப்பரேஷன் பண்ணின தலை. பத்திரமா பார்த்துக்க வேண்டாமா?…” என்றான் அதையுமே முறைப்புடன்.
அதற்கும் சிறு பார்வை மட்டுமே. லேசான புன்னகை புரிந்தாலும் அவ்வப்போது ஆத்மா சென்றுவிட்டானே என்று வேறு யோசித்தபடி இருந்தாள்.
“நான் இருக்கனுமா? இருன்னு சொல்லேன் திவ்யா? ஏன் அதுக்கு யோசிக்கிற? அதுவும் என்கிட்ட?…” என்று கால் முட்டியில் கைகளை கோர்த்தபடி குனிந்து அவள்புறம் முகம் திருப்பி பார்த்து கேட்டவன் கண்களில் சிரிப்பிருந்தது.
அவன் விழியசையாமல் பார்த்தவள் இதழ்கள் துளி புன்னகையை தேனாய் சிந்தியதோடு, பிடிபட்ட பாவனையை கண்கள் காண்பித்துக்கொடுக்க,
“திருட்டுத்தனம் நிறைய படிச்சுட்ட. உன் முகமே உன் நினைப்பை காட்டித்தருதே? தள்ளி போக நினைக்காத திவ்யா….” என்று சொல்ல உறைந்துவிட்ட உணர்வுகளுடன் அவனை கவனித்தாள்.
முகமெல்லாம் தேடலும், தேடியது கிடைக்கபெற்ற தித்திப்புமாய் முரளியின் முகம் விகசித்திருந்தது.
இவனின் நேசத்தை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று இப்போது நினைத்தாலும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதோ இந்த நொடி காதல் சொட்டும் அந்த கண்களின் பாஷையில் தொலைந்துகொண்டிருந்தவள், அதன் மொழிபெயர்ப்பில் பட்டம் பெற்றிருந்தாள்.
அவனின் நினைவுகள் அவளில் நிழல்படமாய் உருவம் பெற்றதென்னவோ அத்தனை மெய்.
அந்த மெய்யை அவனிடம் காட்டிக்கொள்ள முயன்று நொடிக்கொருமுறை வெற்றிகரமாக தோல்வியை தழுவியபடி தான் அவளின் பொழுதுகள் ஓய்ந்தது.
கருவிழி இரண்டும் இங்குமங்கும் உருள அதன் திசை அவனின் முகவடிவை அளந்துகொண்டிருக்க கண்டவன் முகத்தில் இதழ் விரியா புன்னகை.
இருவரும் சிலநொடிகள் பேச்சற்று மௌனத்தில் தள்ளப்பட ஆத்மாவிடமிருந்து அழைப்பு.
“டேய் பசிக்குதுடா. குட்டிம்மாவை பிக்கப் பண்ணிட்டு வர சொல்லிருக்கா உன் அண்ணி. கிளம்பி வர்றியா இல்லையா?…” என்று ஆத்மா கேட்க,
“என்னமோ நான் மட்டும் வர்ற மாதிரி கேட்கறீங்கண்ணா?…” முரளி சிரிப்புடன் கேலி பேசினான்.
“இவன் வேற டார்ச்சர் பன்றானே?…” என்று கடுப்பான ஆத்மா,
“உன்னை மட்டும் வர சொன்னா நீயும் வித்யாவை விட்டுட்டு வந்துடுவா. ஏன்டா ஏன்?…” என்று சொல்லவும் அடக்கமாட்டாத சிரிப்புடன் எழுந்துகொண்டவன்,
“வா…” என்று வித்திவ்யாவிடம் கண்ணால் அழைப்புடன் எழுந்தான் முரளி.
“ஓகே வாங்க…” என்று அழைப்பை துண்டித்துவிட இருவருமாக ஆத்மா அமர்ந்திருந்த வாகனம் நோக்கி சென்றனர்.
பூர்விதாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு முரளியும் ஊருக்கு கிளம்ப ரிதுபர்ணா அத்தனைமுறை கேட்டுவிட்டாள் எதற்கு மருந்தை மாற்றி தந்திருக்கின்றனர் என்று.
“இப்ப அடிக்கடி தலைவலின்னு சிலநேரம் மயக்கம் கூட வருதுன்னு நீ தான சொன்ன? அதான் இதுக்கு முன்ன சாப்பிட்டது வேண்டாம்ன்னு வேற டேப்லெட் தந்திருக்காங்க. இது ஒரு விஷயமா? வேணும்னா வித்யாக்கிட்டையே கேட்டுக்கோ…” என்றுவிட்டான் ஆத்மா.
ரிதுபர்ணாவும் தன் தங்கையிடம் கேட்க முரளி சொல்லியதை போல தான் மருத்துவர்களும் காரணம் சொல்லியிருக்க, அவர்கள் சொல்லியதையும், அந்த அறிவுரைகளையும் ஒன்றுவிடாமல் கூறிய வித்யா, முருகேஸ்வரிக்கும் சொல்லியிருந்தாள்.
“எதையாச்சும் நினைச்சுட்டு மனசை போட்டு உழட்டாம நிம்மதியா தூங்கி எந்தி கண்ணு. பாரு இப்ப மருமகனுக்கு எம்புட்டு அலைச்சல்?…” முருகேஸ்வரியை திருத்த முடியாது என்பதை போல தான் ரிதுபர்ணா முறைத்து பார்த்திருந்தாள்.
“பழகிருச்சு கண்ணு…” என அதற்குமே முருகேஸ்வரி பாவமாய் பதில் சொல்ல,
“என்னவோ பண்ணுங்க…” என்றாள் ரிதுபர்ணா.
“பொறவு கண்ணு, இங்கிட்டு தனியா வாயேன்…” என்று ரிதுபர்ணாவை தனியே அழைத்தவர்,
“உங்கத்தைட்ட பேசினியா கண்ணு? அந்த வரன் பத்தி எதுவும் சொன்னாங்களா?…” என்று ஆர்வமாய் முருகேஸ்வரி கேட்டார்.
“எந்த வரன் சித்தி?…” ரிதுவிற்கு ஞாபகத்தில் இல்லை.
“அதான் உன் விசேஷத்தன்னிக்கு வந்து பேசிட்டிருந்தாங்க இல்ல? முரளி தம்பிக்கு ஒரு பொண்ணு கொண்டுவந்திருக்கேன்னு…” என்று கேட்க,