அவரின் முகத்தையே அத்தனை ஆழமாய் பார்த்தார் செண்பகம். கிஞ்சித்தும் அதில் ஏமாற்றமோ, வருத்தமோ இல்லாத ஒரு முழுமையான மகிழ்ச்சி.
‘என்ன பெண்மணி இவர்?’ என்று தான் செண்பகத்தின் வியப்பின் எல்லை பெரிதாகியது.
“எம்மகன் வேற அன்னைக்கு அங்க வச்சு அப்படி வித்யாக்கிட்ட நடந்ததுல…” என்று செண்பகம் முடிக்கும் முன்,
“இல்லைங்க, அது என்னவோ வேறு போதாத நேரம்ன்னு விடுங்க. இப்பத்தான் எல்லாம் சுமூகமாகிடுச்சுல.பழசை விடுங்க. நாங்க இங்கின இருந்துக்கறோம். தம்பிக்கு உறுத்தலாகற மாதிரி அவங்க கண்ணுல படமாட்டோம்…” என்றும் முருகேஸ்வரி சொல்ல,
“நான் கேட்டேனா? இல்ல கேட்டேனான்னு கேட்டேன். வாய் இருக்குன்னா என்னவேனா பேசுவியா நீ? பெரிய தியாகியா?…” என்று பட்டென்று செண்பகம் வெடிக்க அத்தனைபேரும் திகைத்து பார்த்தனர்.
“என்ன மதினி?…” விசாலாட்சி அவரை அமைதிப்படுத்த முயல,
“பின்ன என்ன விசாலம். இவளா ஒன்னை நினைச்சுக்கிட்டு எல்லாத்தையும் தன் தலையில தூக்கி போடவேண்டியது. எதுக்கு வந்திருக்கோம்ன்னு எதாச்சும் பேச விடறாளா? பேசவேண்டிய இடத்துல அப்படியே வாயடைச்சு நிக்கவேண்டியது. கம்மின்னு இருக்கவேண்டிய இடத்துல வாய் கிழிய பேசவேண்டியது…” என்றார் செண்பகம்.
“இல்லங்க நான்…” என்ற முருகேஸ்வரி பேசும் முன்,
“வாய திறந்த பார்த்துக்கோ…” என்று சென்பகம் முறைத்து நிற்க வெளியே கார் வந்து நிற்கும் சப்தம்.
வித்யா தான் மீண்டும் உள்ளே வந்துகொண்டிருந்தாள். சட்டென அமைதி சூழ அவள் வரவும்,
“என்னாச்சு வித்யா வந்துட்ட?…” என்றாள் ரித்து.
பள்ளியின் அருகில் என்னவோ பிரச்சனை என்று பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டதாக சொல்ல, அப்போதுதான் ஆத்மா தனது கைப்பேசியை தேடினான்.
மாடியிலேயே வைத்திருக்க ச்நேற்று எடுத்துவிட்டு வர, அங்கே லோக்கல் அரசியலில் இரண்டு அணியினருக்கு இடையே தகராறு என்று சொல்லியிருக்க ஷோரூமை திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
“பெரிய பிரச்சனையா?…” என்றாள் ரிதுபர்ணா.
“அதெல்லாம் இல்லை. செக்யூரிட்டீஸ் இருக்காங்க. ஷோரூம் ஓபன் பண்ணலையே. ஒருநாள் தான். சரியாகிடும்…” என்று சொல்லியவன்,
“உட்கார் வித்யா…” என்றான்.
அவள் முருகேஸ்வரியின் முகம் பார்த்து நிற்க முருகேஸ்வரியும் மகளிடம் என்னவோ சொல்ல முயல,
“நீ இரு கண்ணா…” என்ற செண்பகம்,
“இங்க வா…” என்று ரிதுபர்ணாவை ஆத்மாவின் அருகில் நிற்க வைத்துவிட்டு வித்யாவை கூட்டி வந்தார்.
“வித்யாவை முரளிக்கு கேட்கறேன். கட்டித்தர முடியுமா?…” என்று கேட்க முருகேஸ்வரி இதனை எதிர்பார்க்கவே இல்லை.
நெஞ்சே வெடித்ததை போலொரு பாவனையில் அவர் அதிர்ந்து பார்க்க வித்யா அப்போதும் தாயை தான் பார்த்தாள்.
“நீ என்னடி அங்க பார்வை? இங்க திரும்பு…” என்று சொல்லிய செண்பகம்,
“என்ன ரிது? உன் தங்கச்சியை என் வீட்டுக்கு மருமகளா அனுப்பமாட்டியா?…” என்றார்.
“நீங்க வந்ததுலையே அனுமானம் தான் த்தை. ஆனா இவ்வளோ நாள் இல்லாம இப்ப என்ன திடீர்ன்னு? எனக்கு அதையும் தெரிஞ்சுக்கனும்…” என்று சொல்ல,
“அதை பேசத்தான வந்திருக்கேன்….” என்ற செண்பகம் வித்யாவை பார்க்க, மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.
“வித்யா நீ அமைதியா இரு. உன்னை கேட்காம செய்ய போறதில்லை. ஆனா அதுக்கு முன்னாடி நாங்க பேசணும்….” என்றாள் ரிதுபர்ணா.
“இல்ல கண்ணு…” என முன்னே வந்த முருகேஸ்வரியை திரும்பி பார்த்த செண்பகம்,
“நீ பேசாத, வீட்டுக்கு வந்தவள வாங்கன்னு கேட்க முடியலை. இதுக்கு மட்டும் பேசுவ…” என்று சொல்லிவிட்டு தளர்ந்து அமர்ந்தார் செண்பகம்.
“நீ கேட்கிறது புரியுது ரிது. முடியவே முடியாதுன்ற மனநிலையில தான் நானும் இருந்தேன். இது ஒத்துவராதுன்னு. நான் ஒளிச்சு எல்லாம் பேசலை. நேராவே சொல்லிடறேனே? எல்லாருக்கும் தெரியும் என் மருமகளா ஒருத்தி வர நான் என்னெல்லாம் கனவு கண்டுட்டு இருந்தேன்னு…”
“ஆனா என் மகனோட கனவை, அவன் மனசை நான் பார்க்கவே இல்லை. முரளிக்கிட்ட இப்படி ஒரு பக்கம் இருக்கும்ன்னு பெத்தவ எனக்கே தெரியலை. முதல்ல அவ்வளோ ஆத்திரம், என்னை விட இவ முக்கியமா போய்ட்டாளான்னு. என்கிட்ட சொல்லலையேன்னு…”
“எல்லா அம்மாக்களுக்கும் இருக்கறது தானே? நிறைய சண்டை, முரண்டு. என் மகன் என்னை மாதிரி தானே இருப்பான். இது அவன் வாழ்க்கை. அவனோட விருப்பம் தானே எனக்கு முக்கியம். ஆமா, இப்பவும் நான் அவனுக்காக தான் சம்மதிச்சிருக்கேன்…”
“நேத்து வரைக்கும் மனசுக்குள்ள யோசிச்சிட்டே தான் இருந்தேன். ரெண்டுமனசா தான் இருந்தேன். இதை சொல்லுறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உள்ளதை பேசிடனும்ல. இந்த சம்பந்தம் சரியே வராதுன்னு பிடிவாதம் இருந்துச்சு தான்…”
“ஆனா என் பிடிவாதம் முக்கியமா, என் பையன் வாழ்க்கை, அவன் சந்தோஷம் முக்கியமான்னு பார்த்தா அவனை விட வேறு எதுவும் எனக்கு பெருசா தெரியலை. சொல்ல போனா அவன் மாறவே மாட்டான்ற ஒரு உறுதிக்கு பின்னாடி தான் நான் இறங்கி வந்தேன்னு கூட வச்சுக்கலாம்…” என்ற செண்பகத்திற்கு அன்றைக்கு தன் மகன் தன் உயிரையும் துட்சமாக பேசியதன் தாக்கம் இப்போதும் தவிக்க செய்தது.
“எப்பவோ ஜாதகம் எல்லாம் பார்த்துட்டேன் விசாலம்கிட்ட வாங்கி. அதுக்கப்பறமும் என்னை நான் தயார்ப்படுத்திக்கிட்டேன். இதுதான் நடக்க போகுது. இதை முழுமனசோட, சந்தோஷத்தோட நானுமே அனுபவிச்சு நடத்தி வைக்கனுமே. அதுக்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டுச்சு….”
“வேற வழியே இல்லாம சம்மதிச்சேன்னாலும் பிடிக்காம சம்மதிக்கலை. இப்ப முழுமனசா சம்மதிச்சு தான் பொண்ணை கேட்டு வந்திருக்கேன். என் பிள்ளை இனியாவது நிம்மதியா உறங்கி எழுந்து, சந்தோஷமா சிரிச்சு பேசி, முழுமையான சந்தோஷத்தோட நிறைவா வாழனும்…” என்று சொல்ல,
“அத்தை…” என்று ரிதுபர்ணா அழைக்க,
“எனக்கு முன்னாடியே வித்யாவை புடிக்கும் தான? என்ன ஒன்னு இப்ப மருமகளா பார்க்கனும். பார்த்துட்டா போச்சு…” என்று சொல்லியவர் தொண்டையுமே கரகரத்து போயிருந்தது.
அத்தனை நேரம் அவர் பேசியதை எல்லாம் கேட்ட முருகேஸ்வரிக்கு சந்தோஷத்தை விட பயம் தான் பிடித்தது.
இன்றைக்கு மகனுக்காக சம்மதித்துவிட்டு, பின்பு பிடிக்காமல் போய்விட்டால் என்ற எண்ணம் அவரை பந்தாட,
“இல்ல, இல்லைங்க. அது சரிவராதுங்க…” என்று மறுத்தவர் வாய்க்கு வந்த காரணங்கள் ஒவ்வொன்றாய் அடுக்க அடுக்க செண்பகத்தின் பொறுமை பறந்தது.
“இப்ப என்ன தான் சொல்ல வர்ற? கல்யாணம் செஞ்சு குடுக்க முடியாதுன்னா?…” என்று செண்பகம் கேட்க,
“முடியாதுன்னு சொல்லுற அருகதைல நான் இல்லைங்க. ஆனா உங்க தகுதிக்கு என்னால என்ன செஞ்சுட முடியும்? என்கிட்ட, என்கிட்ட…” என்றவர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு அனைவரையும் பரிதாபமாய் பார்க்க அனைவரின் நெஞ்சையும் அறுத்தது அவரின் நிலை.
“ரிது கண்ணு எல்லாம் செஞ்சிருக்கா. ஆனா எல்லாமே அவளோடது தான். நானா எம்புள்ளைக்கு போட ஒன்னும் சேத்து வைக்கலைங்களே? சீருன்னு என்னத்த குடுப்பேன்?…” என்றார் துவண்டு போய் முருகேஸ்வரி.
“என்ன சித்தி பேசறீங்க? ஏன் சித்தி இப்படி இருக்கீங்க?…” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டு ரிதுபர்ணா கண்டனத்துடன் கண்ணீரை கொட்ட, வித்யா தாயருகில் செல்ல போனாள்.
‘வேண்டாம்.’ என்று தலையசைத்து அருகில் செல்ல போனவளை தடுத்த ஆத்மா ஒற்றை பார்வையில் நிறுத்திவிட்டான்.
“சீர்வரிசை தானே? கேட்காம எங்க போக போறேன். நீயும் குடுக்க கூடியது தான் முருகேஸு…..” என்ற செண்பகம், முருகேஸ்வரியின் பார்வையை கண்டு,
“புரியலையா? என் வீட்டு மருமவளை பெத்தவ காலத்துக்கும் எங்க கண்ணுமுன்னாடி எங்க கூடவே இருக்கனும்ன்ற சீரை குடு. அது போதும். இது உன்னால குடுக்க முடிஞ்ச சீர் தான?….” என்று சொல்லியதில் ரிதுவும், ஆத்மாவும் நெகிழ்ந்து பார்க்க முருகேஸ்வரி மடிந்து அமர்ந்துவிட்டார் அவரின் பேச்சில்.
வேறு என்ன வேண்டுமாம் அவருக்கு இதைவிட? இத்தனை வருட தவ வாழ்க்கைக்கு எல்லாம் மகுடம் வைத்ததை போன்றொரு வாழ்க்கை அல்லவா அது!
நெக்குருகி பேச வார்த்தையற்று அவர் பார்க்க விசாலாட்சி முருகேஸ்வரியின் கண்ணீரை துடைத்து,
“சிரிச்சு தொலையேன்டி. அழுவமூஞ்சி அம்மாக்காரி…” என்று சிரித்தார் விசாலாட்சி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.