இப்போது செண்பகத்தின் வீட்டில் வீட்டினர் மட்டுமே. ஆத்மாவுடன் மொட்டை மாடியில் முரளி பேசிக்கொண்டிருக்க,
“முரளி உன்னை வர சொன்னாங்க…” என்று அழைக்க வந்தான் பரத்.
அதுவரை தீவிரமாய் பேசிக்கொண்டிருந்த இருவரும் முகத்தை இலகுவாக்கிக்கொள்ள,
“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?…” என்றான் பரத்.
“அதெல்லாம் எதுவும் இல்லையே…” என முரளி சொல்ல,
“பழசை நினைச்சிட்டு என்னை அப்படி பார்க்காத முரளி. அன்னைக்கு நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக இப்படி பிரச்சனை நேரத்துலயும் எதுவுமே சொல்லாம மறைக்கிறது எனக்கு என்னை தள்ளி நிறுத்தற மாதிரி இருக்கு…” என்று சொல்லி ஆத்மாவை பார்க்க அவன் எதுவும் பேசவில்லை.
“அதெல்லாம் எதுவுமில்லை பரத். நான் அதை அப்பவே விட்டாச்சு. சும்மா கம்பெனி பத்தி தான் பேசிட்டிருந்தோம். என்ன, டிஸ்கஸ்ல கொஞ்சம் டீப்பா போய்ட்டோம்…” என்று இலகுவாய் முரளி சிரிக்க,
“சரி கீழ வா. சாமி கும்பிடனுமாம்…” என்றான் பரத்.
“போலாம்…” என்று ஆத்மா சொல்ல, முரளியும் பரத்தும் சேர்ந்தே இறங்கி வந்தனர்.
பூஜை அறையில் அவர்களுக்கு முன்னரே மற்றவர்கள் நிற்க வித்யா யாரின் முகத்தையும் பார்க்கவில்லை.
அத்தனை வெட்கத்துடன் தலை கவிழ்ந்திருக்க, குவிந்த மொட்டாய் நின்றவளை பார்த்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.
“கஷ்டம்டா முரளி…” என்றான் அவளின் காதில் விழுமாறு.
“ஹாங்…” என்று அவனை நிமிர்ந்து பார்த்து புருவமுயர்த்தவும், லேசாய் இதழ்குவித்து கண் சிமிட்டியவன்,
“ப்ச், சாமியை நல்லா வேண்டிக்கோம்மா என்னை நல்லபடியா கண் கலங்காம வச்சு காப்பாத்துவேன்னு…” என்றான் கிண்டல் போல.
“ஆமாமா, கண்ணு கலங்கிட போகுது…” சபர்மதியும் கேலி பேச வித்யா, கை கூப்பி கண்ணை மூடிக்கொண்டாள்.
“நான் சொன்னது தானே வேண்டுற நீ? என் கண்ணு கலங்கக்கூடாதுன்னு….” என்று மீண்டும் முரளி வம்பிழுதத்தவன் மனதிற்குள், ‘நிஜமாவே வேண்டிக்கோடி, நான் கலங்கிட கூடாதுன்னு’ என்று அவளிடம் வேண்டி நின்றான் மனமுருக.
“ம்மா, நீங்க அவுட்….” என்று அவரிடம் சொல்லிய முரளி தாயை அணைத்துக்கொள்ள,
“உன்னை பெத்துட்டேனே? நான் ஜெயிக்க முடியுமா?…” என்றார் அவனின் தோளை தட்டிக்கொடுத்து,
“நீங்க எப்போ தோத்தீங்க? என்னை ஜெயிக்க வச்சு நீங்களும் ஜெயிச்சிருக்கீங்க ம்மா…” என்றான் முரளி அதையும் விளையாட்டு போல குறும்பாய் சிரிப்புடன்.
“ஒவ்வொரு வீட்டுலையும் பர்ஸ்ட் நைட்ன்னா மூச்சு விடமாட்டாங்க. அங்கங்க கிசுகிசுன்னு பேச்சும், அச்சோன்னு அசட்டு வெட்கத்தோட நெளிஞ்சுக்கிட்டு, வாய் பொத்தி சத்தமில்லாம சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க. இங்க பார்த்தியா, எப்ப பாரு விக்ரமன் படம் ஓட்டனும். இல்லன்னா வயிறு புண்ணாகற அளவுக்கு சிரிக்கனும். குடும்பமாடா இது?…” என்று தலையில் அடித்துக்கொண்டவள்,
“ஒரு மூஞ்சிலையும் வெட்கமில்லை. மாப்பிள்ளை, பொண்ணு. சுத்தம். அவ பேந்த பேந்த முழிக்கிறதென்ன? இந்தண்ணா பெத்தமனசு சுத்தத்திலும் சுத்தமடான்னு பாடறதென்ன? அம்மான்னா சும்மா இல்லடான்னு இந்தம்மா இல்லாத மீசையை முறுக்கறதென்ன? பர்ஸ்ட் நைட் லேதா?…” என்று சுந்தரியின் காதை பஞ்சராக்கிக்கொண்டிருந்தாள் சபர்மதி.
“கொஞ்சம் நேரம் தான் வாயை மூடேன்டி? எங்கம்மாவும், தம்பியும் பாவம்…” என்று சுந்தரி சொல்ல,
“ம்க்கும், இதுவே என் கண்ணுவா இருந்தா இந்நேரத்துக்கு லேதுன்னா என்னன்னு கேட்டிருக்கும். பர்ஸ்ட் நைட் இல்லைன்னு விளக்கம் சொன்னதும் ஆத்தீன்னு வீட்டுல இருந்தே அங்கப்ரதட்சனம் பன்றேன்னு கோவிலுக்கு உருண்டிருக்கும். நீங்களும் தான் இருக்கீங்களே? எல்லாம் என் புருஷன மாதிரியே வாய்ச்சா நானும் என்ன செய்ய?…” என்று அங்கலாய்க்க,
“கூட்டிட்டு போங்கம்மா…” என்றார் செண்பகம் சபர்மதி, சுந்தரியின் பக்கம் திரும்பி.
“அப்பாயின்மென்ட் ஆடர் குடுத்த மாதிரி பில்டப்பை பார்த்தியா இந்த சித்திக்கு?…” என்று அதற்கும் அவள் கவுண்டர் கொடுக்க,
“ஹப்பா அண்ணி போதும். கூட்டிட்டு போங்க. இந்த மனோ எங்க?…” என்று ரிதுபர்ணா கேட்டு மனோவை தேடி சென்றாள்.
“ஓகே பை, எல்லாருக்கும் குட்நைட்…” என்று முரளி இரு கைகளையும் மேல் நோக்கி கூப்பி கும்பிட்டு, கையசைத்துவிட்டு செல்ல, மற்றவர்களும் களைந்து சென்றனர் சிரிப்புடன்.
“சீக்கிரம் அரசியல்ல புடிச்சு தள்ளிடுவோம். பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு இந்தண்ணனுக்கு. நான் பர்ஸ்ட் நைட்டுக்கு போறேன்னு வாயால தான் சொல்லலை…” என்ற சபர்மதி முதுகில் பொளீரென்று விழுந்தது.
“வாயை அடக்கேன்டி. உன் பேச்சுல இவ எப்படி வெக்கப்பட்டுட்டு நிக்கிறா பாரு…” என்றார் செண்பகம் வித்யாவை காண்பித்து அவளின் முதுகில் ஒரு அடி வைத்து.
“இதெல்லாம் பெருமையா, கடமை. வாங்க நம்ம வேலையை பாப்போம்….” என்று சொல்லி வித்யாவை அழைத்து சென்று முரளியின் அறை முன்னே விட்டவள்,
“ரூம் வாசல் வரைக்கும் தானே போகனும் நாம? இல்ல உள்ள போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கனுமா? ஏன் கேட்கறேன்னா இந்த கண்ணு என் கண்ணு உள்ள போய் என்ன பண்ணுச்சோன்னு கண்ணை கசக்கினா? எதுவா இருந்தாலும் நியாயமா பண்ணணும்ல…” என்று சபர்மதி அங்கொரு அழிச்சாட்டியம் செய்ய,
“போதும்டி. நீ பன்றது இருக்கு பாரு…” என்ற சுந்தரி வித்யாவை உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டு சபர்மதியை இழுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
“ம்க்கும், அழைச்சுட்டு போய் லாலாலா பாட மட்டும் நாங்க வேணும்? வம்பாடு பட்டு இந்த கல்யாணத்தை நடத்திருக்கோம். நமக்கு ஒண்ணுமில்ல…” என பொத்தென்று செண்பகம் அருகில் அமர,
“என்னடி வேணும் உனக்கு? ஆமா என்ன செஞ்ச நீ?…” என்று அவர் கேட்க,
“செண்பகம்ன்னு ஒரு பெரிய மலை. அதை நகர்த்திருக்கோம்ல…”
“யார் நீ?…” அவர் கேட்க,
“ப்ச், அதை விடுங்க. அதைவிட பெரிய சாதனை. ஒத்த குச்சியை வச்சுட்டு முருகேஸ் கண்ணுல விரலை விட்டு ஆட்டிருக்கேன். என்னை தவிர யாராலையும் செய்ய முடியுமா? எங்க யாராச்சும் அரைநாள் செஞ்சு தான் பாருங்களேன்…” என்று மிதப்பாய் பார்க்க,
“இப்ப என்ன வேணும் உனக்கு?…”
“பெருசா என்ன கேட்க போறோம்? என்ன இருந்தாலும் கல்யாணத்துல எங்களை மேடையில ஏத்தி கௌரவிச்சி ஆளுக்கு அஞ்சுபவுன் சங்கிலி போட்டிருக்கலாம்…” என்றவள்,
“அதுவும் முதல் சங்கிலி எங்க சித்தப்பாவுக்கு தான். கூடவே சுத்தின செவ்வாழ பட்ட கஷ்டத்தை சொல்லி மாளுமா? பாவத்த…” என்றதும் அடித்துபிடித்து வெளியே ஓடிவிட்டார் இளவரசு.
“உசுரு முக்கியம் பிகிலு இதான் போல? எம்புட்டு முக்கியமான விஷயம் பேசறேன். ஓட்டத்தை பாருங்க. என்ன இப்படி வளர்திருக்கீங்க சித்தி?…” என்று வாய் ஓயாமல் பேச,
“அவ்வளோ தானே?…” என்ற செண்பகம் தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழற்ற போக,
“ஆத்தீ, சித்தி…” என்று அவரை நெஞ்சோடு கட்டிக்கொண்டு,