குளித்துவிட்டு வந்த முரளி தலையை துவட்டிக்கொண்டிருக்க சலசலவென்று வேகமாய் அவள் கொலுசின் ஓசை.
இதழ்களில் மெல்லிய புன்னகை படர்ந்தது முரளிக்கு. வித்யாவின் வருகையை, அவளின் படபடப்பை அவள் கால் சதங்கையின் சிணுங்கலை வைத்து கண்டுகொண்டவன் முகமும் பூவாய் விரிந்தது.
அவன் நினைத்ததை போலவே வந்து சேர்ந்தாள் வித்திவ்யா. சற்றுமுன்னர் தான் அறையை விட்டு வெளியேறியவள் மீண்டும் உள்ளே நுழைய, அவள் முகம் கண்டே சத்தமாய் சிரித்துவிட்டான் முரளி.
“எதுக்கு இப்படி ஓடி வர்ற திவ்யா?…” என்று இலகுவாய் கேட்டவன் தோற்றத்தில் மீண்டும் கண்களை மூடியவள் நாணம் பூக்க ஜன்னலோரம் சென்று நின்றுவிட்டாள்.
“நேத்து தான் கல்யாணமாகியிருக்கு. இப்பவும் என்னை பார்க்க வெக்கப்பட்டா எப்படியாம்? நான் ஷார்ட்ஸ், வெஸ்ட் போட்டிருந்தும் கூட?…” என குறும்பாய், கள்ளப்புன்னகை கொஞ்ச கேட்டவன் மீது கையிலிருந்த கைக்குட்டையை சுருட்டி வீசி எறிந்தாள் வித்திவ்யா.
“ப்ச், என்னவாம்? வெளில என்ன கேட்டாங்க? கல்யாண பொண்ணுக்கு மருதாணியை விட முகம் சிவந்திருக்கே?…” என்று கேட்டுக்கொண்டே அவளின் அருகே வந்து முகம் நிமிர்த்தி நாசியின் நுனியில் மெலிதாய் இதழ்களை பதிக்க அவன் நெஞ்சில் தலையை பதித்து நின்றவள் கைகள் சில்லிட்டிருந்தது.
முரளியின் தோளிரண்டையும் பற்றி நின்றவள் நிலையை சூசகமாய் அறிந்தவனுக்குள் ரகசிய புன்னகை.
“ஓகே, நீ தனியா வெளில போகவேண்டாம். சேர்ந்தே போவோம். இங்க வந்து உட்கார். நானும் ரெடியாகி வரேன்…” முரளி சொல்ல தலையசைத்தவள் வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
விழிகள் அவளின் கையிலிட்டிருந்த மருதாணியில் பதிந்திருக்க மனமெல்லாம் வெளியில் சபர்மதியும், சுந்தரியும் கேட்ட கேள்வியிலேயே தான் சுழன்றது.
நினைக்க நினைக்க இனிப்பாய் வெட்கங்கள் ஆக்கிரமித்து அலைமோத அதன் சுழலிலிருந்து வெளிவர விரும்பாத ஒரு மயக்க நிலை.
இதழ்கள் இன்னும் புன்னகையை சிந்தியபடி இருக்க, கண்களில் கனவுகள் எதிர்கால வாழ்வை எண்ணி மிதந்துகொண்டிருந்தது.
“ஹ்ம்ம், வா போகலாம்…” என்று வந்தான் முரளி.
இப்போது உடை மாற்றி நின்றவனின் முகம் பார்த்து வித்யா புன்னகைக்கவும் அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன்,
“கொஞ்சநேரத்துக்கு முன்னாடி இந்த பார்வை எல்லாம் எங்க போச்சாம் உனக்கு?…” என்று கேட்க இன்னும் சிரித்தாள் அவள்.
கண்ணோரம் சிரிப்பில் சுருங்கினாலும் அந்த சிரிப்பின் நடுவில் அந்த சுருக்கங்களுக்கிடையில் அவன் வித்யாவிடம் அந்த வலியை கண்டான்.
“தலைவலிக்குதா திவ்யா?…” என்ற கேள்வியில் அவள் விழிகள் விரிந்தது.
வாய்விட்டு சொல்லவில்லை. ஆனால் கண்டுகொண்டானே என்ற ஆச்சர்யத்தில் இல்லை.
எப்படி இவனால் தன்னை உணர முடிகிறது என்னும் காதலின் பெருக்கெடுப்பில் விரிந்து விருட்சம் பெற்றது.
“உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன் திவ்யா? தலை வலிக்குதா?…” என்று தனக்குள் பொங்கும் பதட்டத்தை மறைத்துக்கொண்டு முரளி கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள், ‘லேசா தான், பளிச்சுன்னு குத்துது’ என்று கை ஜாடை புரிய, முரளியின் தொண்டைக்குழிக்குள் பந்தாய் முட்கள் பொருந்திய உருண்டை அவனை குத்தி கிழித்தது.
“ஓகே, சாப்பிட்டு வந்து மாத்திரை போட்டுட்டு கொஞ்சநேரம் தூங்குவியாம்…” என்றான் அவளிடம்.
‘கோவிலுக்கு போகனுமே? எல்லாரும் ரெடி’ என்று கை குவித்து காண்பித்து அவனிடம் விழி மொழி பேச,
“ப்ச், அதெல்லாம் பார்த்துக்கலாம். நீ ரெஸ்ட் எடு…” என்றவனை பாவம் போல் பார்த்தாள்.
“என்ன? என்ன லுக்? இதுக்கெல்லாம் ஏமாறமாட்டேன். வந்து தூங்கற. அவ்வளோ தான்…” என்று சொன்னவனை கண்டு தலையில் தட்டிக்கொண்டவள் முகத்தில் கேலி புன்னகை.
“இவனெல்லாம் புது மாப்பிள்ளையான்னு நக்கலு? அதான?…” என இடுப்பில் கை வைத்து முரளி முறைக்க, அவன் சொன்னது சரி என்பதை போல வாய் பொத்தி சிரித்தாள் வித்யா.
“வாலு, நீ செய்வடி…” என்றவன் அவளின் கன்னத்தில் லேசாய் தட்டி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
சிலநொடிகள் மௌனமாய் கழிய மெல்ல அவனின் இதயப்பகுதியை விரல் கொண்டு சுரண்டினாள் வித்திவ்யா.
“என்னடா?…” என்று முரளி அவள் முகம் பார்த்து கேட்க, ‘நீங்க தான் புது மாப்பிள்ளையா?’ என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“அடிங். சேட்டை….” என்று சொல்லிக்கொண்டிருக்க அதற்குள் செண்பகத்தின் குரல்.
“அம்மா உன்னை தான் கூப்பிடறாங்க. நீ போ…” என்றவன் தனது கைப்பேசியை தேடினான்.
அவன் சொல்லியும் வெளியே செல்லாமல் வித்யா நிற்க கண்டவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
“அநியாயம் பன்ற நீ…” என்றதுடன் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வர,
“சாமி கும்பிட வேண்டாமா? ஆடி அசைஞ்சு வர்ற…” என்று மகனை முறைத்துக்கொண்டு சொல்லி சென்ற செண்பகத்தை பார்த்து வித்யா விழிக்க,
“கரெக்ட்டா சொல்றாங்களே…” என்றான் கண் சிமிட்டலுடன் முரளி.
“ஹாங்…” என்று அவன் சொன்னதையும் கவனிக்காமல், செண்பகத்திற்கு கோபமோ என்று மிரண்டு நின்றாள் வித்யா.
காலை எழுந்து குளித்து வெளியே வந்ததும் சபர்மதி, சுந்தரி, மனோவின் கலாட்டாக்களில் செண்பகம் அழைத்ததை கூட காதில் வாங்காமல் மீண்டும் அறைக்குள் புகுந்திருக்க, இப்போது அதனால் கோபமோ என்ற சிந்தனை தான்.
“ஹோய் என்ன இப்படி நிக்கிற?…” என்றான் அவளின் தோளில் இடித்து.
“ம்ஹூம்…” என தலையசைத்தவள், ‘அத்தைக்கு கோவமா? அவங்க கூப்பிட்டாங்க. நான் வந்துட்டேன்’ என்று கையசைத்து தலையாட்ட,
அந்தநிமிட மிரட்சி மறைந்து சட்டென புன்னகை பூக்க நின்றவள் தலைசாய்த்து அவனை பார்க்க,
“கண்ணாலையே என்னை முழுங்கிடு. ஆனா பச்சைப்பிள்ளையாம் நீ…” என்றான் ரசனையாய் மனைவியின் ரசனையை ரசித்தபடி.
“அடடா, விடியலையாமா உங்களுக்கு? இந்த சூரியனுக்கு அவசரம் போகுதுன்னு விடிஞ்சு இப்ப என்னவொரு டிஸ்டர்பன்ஸ். அப்பப்பா, இதெல்லாம் வேற நான் பார்க்க வேண்டியதா இருக்கு…” என்றபடி அலப்பறையை கூட்டிக்கொண்டு சபர்மதி வந்துவிட்டாள்.
அவள் வந்ததுமே தன் காதுகளை பொத்திக்கொண்டு வித்யா முரளியின் முதுகின் பின் ஒளிய, முரளியின் முகமெல்லாம் அத்தனை பூரிப்பு.
“இவ்வளோ சிரிப்பீங்களா நீங்க? கலகலப்பான ஆளுன்னு தெரியும். ஆனா இந்தளவுக்கு சந்தோஷத்தை இன்னைக்கு தான் பார்க்கறேன்…” என முரளியிடம் சொல்லிய சபர்மதி,
“கண்ணு உன் மருமகன் மேல நான் கண்ணை போட்டுட்டேன். இப்ப நான் என்ன பண்ண?…” என்றாள் அங்கிருந்தே முருகேஸ்வரிக்கு குரல் கொடுத்தவளாக.
“அட இவ எவடி. இங்கருந்து காட்டு கத்து கத்தற?…” என கரண்டியுடன் வந்த செண்பகம், முரளியின் பின்னிருந்து எட்டிபார்த்துக்கொண்டிருந்த தன் மருமகளை கண்டார்.
“என்னடா? எதுக்கு இவ ஒளியறா?…” என்று கேட்டாலும் செண்பகத்தின் கண்களெல்லாம் நிறைந்து போனது மனதை போலவே.
அத்தனை அழகாய், பாந்தமாய் இருந்தது அந்த காட்சி. வர்ணனைக்கு அப்பாற்பட்ட ஓவியம் போல் முரளி கைகட்டி புன்னகையுடன் நிற்க, அவனின் தோள் வளைவிலிருந்து பக்கவாட்டாய் எட்டிப்பார்க்கும் வித்யா.
ரிதுபர்ணா அந்த காட்சியை நிழல்படமாய் சேமித்துக்கொண்டாள் தன் கைப்பேசியில்.
“இஸ்க்…” என்று செண்பகத்தின் மெய்மறந்த நிலையை கண்டு சபர்மதி சப்தமிட,
“என்னடி…” என்று திரும்பியவரின் முறைப்பில்,
“உங்களுக்கும் இஸ்க் என்று கேட்டுவிட்டதா மம்மி?…” என்றவள்,
“இருங்க, கண்ணுக்கிட்ட செண்பகத்து கண்ணை என்ன பன்றீங்கன்னு கேட்டுட்டு வரேன்…” என சொல்லி நகர போக,
“நீ ஏன்டி அவளை வம்பிழுக்குற?…” என்று சொல்லிவிட்டு மகனை முறைத்தார் மீண்டும்.
“என்னம்மா?…” என அவன் சிரிக்க,
“இன்னும் எத்தனை தடவைடா உங்களை கூப்பிட? இப்ப இவ எதுக்கு இப்படி நிக்கிறா?…” என்றார் ஆயாசமாய் செண்பகம்.
“நீயும் விட்டுடுவ இனிமே. போடா போ…” என்று சொல்ல, தாயின் கேலி பேச்சில் முரளியின் முகம் வெட்கத்தை பூசியது மஞ்சள் மேகம் போலே.
“அதான் சொல்றாங்க தானே? பாரு என்னை கிண்டல் பன்றாங்க. வா முன்னாடி…” என்று ஒரு கை கொடுத்து வித்யாவை தன்னருகே நிறுத்தி அவளின் தோளில் கை போட, சபர்மதி கிளுக்கி சிரித்தாள்.
அவள் சிரித்ததுமே சட்டென நழுவி செண்பகத்தின் அருகே வந்து நின்ற வித்யா அவரின் பின்னால் ஒளிந்துகொள்ள,
“இவ என்னடா இன்னைக்கு ஓடி ஒளியறதுலையே இருக்கா?…” என்றாள் சபர்மதி.
“அச்சோ அண்ணி போதும், இங்க தானே இருப்பீங்க? வந்து பேசலாம். நல்லநேரம் போகுது…” என சொல்லிக்கொண்டே ரிதுபர்ணா அவளை இழுத்து செல்ல,
“நான்லாம் மெயின் லீட்ல இருக்கனும். எனக்கு வாய்ச்ச புருஷனால சைட்ல நின்னு சைட் வேலையை பார்க்கற மாதிரி ஆகிடுச்சு…” என்று பேசிக்கொண்டே செல்ல,
“நம்ம குடும்பத்துல எல்லாருமே மெயின் லீட் தான் அண்ணி. என் அண்ணாவும் தான்….”
“யூ மீன் சின்ன அண்ணாமலை?…” என்று புருஷனையும் வாரிக்கொண்டே வர அங்கே பரத் சீரியஸாக எதையோ இளவரசுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.