கண் நிறைய தங்கள் முன் அமர்ந்திருந்தவளை பார்த்து பார்த்து நிம்மதியும், சந்தோஷமும் அடைந்தனர் வித்யாவின் மொத்த குடும்பமும்.
அந்த அறைகொள்ளவில்லை அத்தனை கூட்டத்திற்கும். அந்த மருத்துவமனையில் இருப்பதிலேயே பெரிய அறை அந்த அறை தான்.
உறவுகள் மாற்றி மாற்றி வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தனர். வித்யா கண்விழித்த விஷயம் கேட்டதும் பரத் ஏழுமலையை கரூரில் இருத்திவிட்டு புறப்பட்டு வந்துவிட்டான்.
அத்தனை பேசிவிட்டிருந்தார் விசாலாட்சி. சபர்மதி ஒருவார்த்தை கூட பேசாமல் கணவனை புறக்கணிப்பதை போலிருக்க தான் தெரியாமல் செய்த செயலின் வீரியமும், குடும்பத்தின் ஒதுக்கமும் அவனை ஆட செய்துவிட்டது.
வந்தவன் வந்த வேகத்தில் வித்யாவிடமும், அனைவரிடமுமே மன்னிப்பை கேட்டு நிற்க ரிதுபர்ணா திகைத்துவிட்டாள்.
அவனை சொல்லி மட்டும் என்ன செய்வது? விதியின் வினைப்பயன் இதுவாக இருப்பின் வேறு எதுவும் பரத்தை சொல்லவில்லை.
“எதாச்சும் பேசுடி. பிள்ளையை கூட காமிக்காம என்னை ஏங்கவா விடற?…” என்று எப்போதும் முறுக்கி கணவனெனும் கெத்து காண்பித்து திரிபவனின் கெஞ்சல் குரல் சபர்மதியை வித்தியாசமாக பார்க்க செய்தது.
“பேசுன்னா, ஏபிசிடி. என் புருஷன் கேடின்னு வேணும்னா பேசவா? இப்ப இருக்கற கோவத்துல இதான் பேச வரும்…” என்று சபர்மதி பதிலுரைக்க,
“என்னத்தையோ சொல்லு. ஆனா வேணும்னு எல்லாம் நான் எதுவும் செய்யலை. இப்படி ஆகும்ன்னு தெரியாது எனக்கு….”
“இப்படி ஆகும், இந்த விபரீதம் வித்யாவுக்கு இருக்குன்னு வேணா தெரியாதுன்னு சொல்லுங்க. ஆனா வேணும்ன்னு வெஞ்சன்ஸ் வச்சு தானே அன்னைக்கு அவளை அந்த பாடு படுத்தினீங்க?…” என்று அவனை கேட்டு பதில் சொல்லமுடியாமல் திக்குமுக்காட செய்தாள்.
“அன்னிக்கு மட்டும் அந்த பிள்ளை சொன்னமாதிரி வீட்டுக்கு போக விட்டிருந்தா பொத்துனாக்குல வந்து தூங்கி எந்திச்சு சரியாகிருக்கும். அந்த கட்டியும் கரைய பார்த்திருக்கும். உங்க இடும்பும், வறட்டு கௌரவமும் தான் இம்புட்டுக்கும் காரணம். வாழ்வா சாவான்னு இங்க ரெண்டுபேரும் பட்ட பாடிருக்கே?…”
“எல்லாம் இப்ப என் பிள்ளை தலையில ஏறும். ஆத்தீ, முதல்ல உம்மை விட்டு நான் எட்டி நிக்கனும். தெரிஞ்சு செஞ்சீங்களோ தெரியாம செஞ்சீங்களோ? செஞ்சீங்க தான? பெருசா மனசுல நினைப்பு சின்ன அண்ணாமலைன்னு. அந்த மனுஷன் கால் தூசி பெருவீங்களா நீங்க?…”
“இங்க ஒத்த உசுரு அல்லாடலை. அதுக்காக அத்தனை குடும்பமும் பட்ட பாட்டை கண்ணுல காண்க முடியலை. போயிருங்க பேசாம…” என்று மனதில் அத்தனை நாட்கள் வைத்திருந்ததை பேசி தீர்த்தவள் அப்போது தான் அடக்கி வைத்திருந்த அழுகையை காண்பிக்க விசாலாட்சி மருமகளை அணைத்துக்கொண்டார்.
“போங்க சொல்லுங்கத்தே. இவரெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கிட்டு வருது. தெரியாமையாம். இங்க பலபேரு இந்த தெரியாம செஞ்சிட்டேன்ற சுவத்துக்கு பின்னாடி கோழையா போய் ஒளிஞ்சுக்கறது. பொறவு விபரீதமாகவும் ஐயோ, அம்மா என்னிய மன்னிச்சுக்கங்கன்னு வந்து நிக்கிறது…”
“ஏன் செய்யிற அன்னிக்கு கண்ணும், காதும், மனசாட்சியும் எங்கிட்டாச்சும் பிச்சை எடுக்க போயிருதோ? வந்துட்டாரு மன்னிசிச்க்க, தெரியாமன்னு. போக சொல்லுங்க இவரை…” என்றவளின் கண்ணீர் அனைவரையுமே உலுக்கியது.
எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாய் தைரியம் கூறும் பெண்ணின் இத்தகைய பேச்சுக்கள் மற்றவர்களை விட பரத்தை வெகுவாய் தாக்கியது.
“இன்னிக்கு இந்த பிள்ளை பிழைச்சுக்கிட்டா. இல்லன்னா என்ன செய்யிவீங்க? அண்ணாமலை பெரியப்பா விஷயத்துல வேணும்னா வித்யா தலையில விழுந்த அந்த மணி தெரியாம விழுந்துச்சுன்னு சொல்லலாம். ஆனா திரும்ப அவ தலையில பிரச்சனை உண்டானதுக்கு காரணம் நீங்க மட்டும் தான். அது தெரிஞ்சு தான் பண்ணுனீங்க…” என்று சொல்ல பரத் வாயடைத்து நின்றான்.
“சரி மன்னிச்சிட்டோம் எல்லாருமே மன்னிச்சாச்சு. வித்யா கண்டிப்பா உங்களை குறை சொல்லவே மாட்டா. அது அவ மனசு. இப்ப எல்லாம் சரியா போச்சு. உங்க மன்னிப்பால இங்க ஒவ்வொருத்தரும் பட்ட ரணவேதனை எல்லாத்தையும் போக்கிட முடியுமா?சொல்லுங்க…” என்று சொல்ல அவள் பேச்சுக்கள் ஒவ்வொருவருக்கும் பாடம் போலிருந்தது.
“மதி, இதென்ன எல்லாரையும் வச்சுக்கிட்டு. அவன் தான் சொல்லிட்டான்ல. தனியா போய் பேசு, சண்டை போடு. இப்படியா பேசுவ?…” என ஆனந்தி பரத் நிற்கும் நிலை கண்டு அதனை தணிக்க முயல,
“ஏன் உங்க நாத்தனார் மவன் அம்புட்டு பேர் முன்னுக்கா தான எல்லாத்தையும் பண்ணினாரு. நான் கேட்க மட்டும் ஒதுங்கி கூட்டிட்டு போவனுமோ? ஒன்னு செய்யவா? என் மாமியார் மடில போட்டு தடவி தாலாட்டு பாடி, தூங்கவச்சு பொறவு என்ன இப்படி பண்ணிட்டீங்கன்னு பதவிசா பக்குவமா கேட்கவா?…”
“தெரியாம பேசிட்டேன்த்தா….” என்றார் ஆனந்தி வாயில் கைவத்து நிற்க அனைவருக்குமே சிறு புன்னகை.
“சரிம்மா, விடு…” என்று அண்ணாமலையும்,
“இதான் சாக்குன்னு அவனை எம்புட்டு ஆட்டு ஆட்டிட்ட?…” என்ற செண்பகம்
“எனக்கென்ன சந்தேகம்? இவன் கஞ்சி ஊத்துவான்னுதேன் நான் காத்துக்கெடக்கேனா? நான் இவனுக்கு ஆத்தி ஊத்துனா ஆகமாட்டாம கெடக்கு. இவ இன்னிக்கு புடிச்ச புடிய முன்னாடியே புடிச்சிருக்கனும்….” என்று மருமகளுக்கு தான் பரிந்துகொண்டு வந்தார் விசாலாட்சி.
“மதி, அடி வாங்க போற. அவங்க வயசென்ன?…” என்று பரத் வாயை திறந்தான் மனைவியை அதட்ட.
“ம்க்கும், பதினாறு பொறந்து பதினேழு தொறக்குது. கொண்டாடிருவோமா? பேசாதீங்க நீங்க. இன்னிக்கு தான் அவங்க வயசு உங்களுக்கு தெரிஞ்சதோ?…” என்று இன்னும் அவனை பொசுக்கினாள்.
“ஆத்தீ, நீயி கம்மின்னிரு தாயி. நீங்க போங்க தம்பி…” என்று முருகேஸ்வரி சபர்மதியை தரதரவென்று இழுத்து வந்து வித்யாவின் அருகில் நிறுத்திக்கொண்டார்.
“இல்லைங்க, அவ பேசறதுல தப்பென்ன இருக்கு? எம்மேல தான் தப்பு. மன்னிச்சிருங்க…” என்று உணர்ந்தே பரத் அவரிடம் கை கூப்பி மன்னிப்பை கேட்க,
“ஆத்தீ என்ன தம்பி இது?…” என்று அதற்கும் அரண்டு போனார் முருகேஸ்வரி.
“நீ வேற ஏன்டி இந்த வரத்து வர்ற?…” என்றார் செண்பகம் சிரிப்புடன்.
“பின்ன, மொட்ட தாத்தா குட்டையில விழுந்த கதையா மன்னிச்சிருங்கவாம். யாருகிட்டன்னு யாருக்கு தெரியும்? இன்னும் சித்தின்னு வரலையே?….” என்று சபர்மதி பிடித்து வாங்க பரத் விழித்தான்.
சட்டென அவனால் உறவென்று அழைக்க முடியவில்லை. ஆனால் அவனின் மன்னிப்பு உணர்ந்து முழு மனதாக கேட்க பட்டது தான்.
“ஆ…” என்று வித்யா அழைக்க அவளின் சத்தத்தில் திரும்பிய சபர்மதி,
“என்னடி?…” என்று சபர்மதி சொன்னலும் தானுமே அவளை அணைத்துக்கொள்ள பார்த்தவர்கள் அனைவருமே நெகிழ்ந்தனர்.
“போதும், போதும். முரளி அண்ணே மருந்து வாங்கிட்டு வந்து இத பார்த்தா சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம்ன்னு என்னை வெளிய போங்கடா அயோக்ற ராஸ்கல்ன்னு சொல்லிட போறார்….” என்று கலகலவென்று அந்த சூழ்நிலையையே மாற்றிவிட்டாள் அவள்.
“ராசாத்திடி நீ. நீ கிடைக்க இந்த பய தான் குடுத்து வச்சிருக்கனும்…” என்றார் செண்பகம் சபர்மதி முகத்தை தடவி.
அதற்கு கை தட்டிய வித்யாவும், ‘ஆமா, நல்லா பார்த்துக்கனும் அண்ணா’ என்றாள் பரத்திடம்.
விசாலாட்சிக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட பூரிப்பு. தாங்களாவது ஒரே குடும்பம். ரத்தபந்தங்கள்.
ஆனால் தன் மருமகள் எங்கிருந்தோ இந்த குடும்பத்திற்கு வாழ வந்தவள். எத்தனை அன்பானவள் என்று பெருமிதமாக பார்த்தாள்.
“பார்த்துட்டாலும். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உங்கண்ணே பார்த்துடுவாரு பாரு…” என்று சபர்மதி நொடிக்க பரத் வித்யாவின் அருகில் வந்து அவளின் புறங்கையை பற்றினான்.
“என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்ட தானே நீ. அண்ணனை மன்னிச்சிடுடா…” என்றான் கண் கலங்கி.
“ஆத்தீ, அண்ணனாம்ல. புடிங்க புடிங்க…” என்று விசாலாட்சி மீது சாய போவது போல பாவனை செய்ய,
“நீ வேற திரும்ப அவர கோவிக்க செய்யாதத்தா. புண்ணியமா போவும்…” என்று அவளை அடக்கமுடியாமல் பணிந்தேவிட்டார் முருகேஸ்வரி.
“முருகேஸு கண்ணு, இந்த மொத்த குடும்பத்துல இன்னிக்கு சுத்தி போடவேண்டியது உமக்கும், உம்ம திடீர் மவனுக்கும் தான். என் கண்ணே பட்டுடுச்சு…” என்று வாயாட,
அவள் பேச பேச அத்தனைபேருக்கும் கண்ணில் நீர் நிறைய அத்தனை சிரிப்பு. அவ்வளவு நாள் துன்பத்திற்கு ஈடுகட்டுவதை போல அத்தனைபேரின் மனமும் சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.
ஆத்மாவும், முரளியும் கையில் மருந்து சீட்டும், மருந்துகளுமாய் பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்.
அத்தனைபேரின் கவனமும் அங்கே செல்ல பார்வை முரளியின் முகத்தில் தான் ஆராய்ச்சியாய் படிந்தது.