என்னதான் வித்யாவின் உடல்நிலை பற்றி மருத்துவர்கள் பயம்கொள்ள தேவை இல்லை என்று சொன்னாலும் என்னவோ முன்பு அவர்கள் மறைத்ததன் விளைவாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
“வேற ஒண்ணுமில்லைல. ஒத்தையில எதையும் சுமக்காத சாமி. நாங்க எல்லாரும் இருக்கோம்…” என்று அவனுக்கு உணர்த்தி, அவனின் சிரிப்பை கண்ணார கண்டு களித்தனர்.
இப்போதும் முரளியின் கண்களில் ஒளிர்ந்த முழுமையான மகிழ்ச்சியை கண்ட பின்னர் தான் ஆசுவாசமடைந்தனர் அனைவருமே.
“என்ன, சிரிப்பு சத்தம் வெளில வரை கேட்குது. விவிஐபி ரூம். டாக்டர்ஸ் எப்போ இத்தனைபேரும் கிளம்புவாங்கன்னு கேட்டுட்டாங்க…” என்று வந்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“கிளம்பறதா? டிஸ்சார்ஜ் பன்றாங்களா அதுக்குள்ள?…” என ரிதுபர்ணா கேட்க,
“ப்ச், அதுக்குள்ள பண்ணுவாங்களா ரிது? இன்னும் ஒருவாரம் அப்சர்வேஷன்ல வச்சு பார்த்து தான் அனுப்புவாங்க. ஹீலிங் டைம் அதிகம். லாஸ்ட் டைம் மாதிரி அலட்சியமா இருந்துட முடியாதுல…” என்றான் ஆத்மா.
“ஹ்ம்ம், ஆமா கண்ணா. நல்லா பார்த்துட்டே புறப்படுவோம்…” என்று சொல்லிவிட்டார் அண்ணாமலை.
“அதான் சொல்றேன், ரெண்டுமூணு பேர் இருந்தா போதும். எல்லாரும் வீட்டுக்கு வாங்க.மாறி மாறி பார்த்துக்கலாம். இல்லைன்னா கரூர் புறப்படுங்க. இன்னும் ஒருவாரம் தானே?…” என்றவன்,
“மனோ, சுந்தரி நீங்க முதல்ல கிளம்புங்க. வந்து எத்தனை நாளாச்சு. வித்யா ஊருக்கு வரவும் அங்க வாங்க. சித்தப்பா நீங்க கூட போய் விட்டுட்டு வாங்க…” என்றவன்,
“இல்லை, நீங்க இருங்க. பரத் கூட போகட்டும்…” என்றான் ஆத்மா.
“சரி, நானே கூட்டிட்டு போயிடறேன்…” என்ற பரத் மனைவியை பார்க்க, எங்கே தன்னை அழைத்துவிடுவானோ என்று கணவன் அங்கிருப்பதாகவே அவள் கண்டுகொள்ளா பாவனையை காண்பித்தாள்.
“பொறவு அத்தே, ராத்திரிக்கு போய் சமைச்சு கொண்டாந்துடுவோமா? இங்க இருக்கவங்க இருக்கட்டும். நாம ரிது வீட்டுக்கு போயிட்டு வருவோம்…” என்று அவள்பாட்டில் பேச அனைவருக்குமே சிரிப்பு.
“மதி, நீயும் கிளம்பும்மா…” என்றான் ஆத்மா.
“எதே…” என்று அதிர்ச்சியை கான்பித்தவள்,
“என் மாமியாரு நானில்லாம இருக்கமாட்டாங்க. பாவத்த. வேணும்னா கேட்டுக்கோங்க…” என்று விசாலாட்சியை இழுத்துவிட்டவள்,
அதன் பின்னரே அவர்களும் வெளியே செல்ல ஆத்மாவும் முரளி, வித்யாவிடம் தலையசைத்துவிட்டு,
“ரூம் லாக் பண்ணிக்கோடா. இல்லைன்னா பேசிட்டே உள்ள வந்திருவாங்க. திரும்ப டைம் கிடைக்காது, பார்த்துக்கோ…” வெளியேறினான் மனநிறைவுடன்.
கதவை அடைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தை மேஜையில் வைத்தவன் அங்கிருந்தே திரும்பி வித்யாவை பார்க்க, புன்னகையுடன் தலை சாய்த்தவள் தன்னிரு கைகளையும் அணைப்பதை போல் காண்பித்து தலையசைக்க நிதானமாய் அவளை நெருங்கினான்.
“என்கிட்ட பேச, என்னை கூப்பிட, என்னை அணைச்சுக்க இப்ப தான் உனக்கு தோணுதாமா திவ்யா?…” என்றான் தன் வலது கையை அவளின் கன்னத்தில் பதித்து அவளின் கன்னத்தை லேசாய் சாய்த்து.
‘கடத்துவீங்கன்னு பார்த்தேன்’ என்றாள் கை ஜாடையில் வித்யா.
“கடத்தலாம். இந்த அட்மாஸ்பியர் எல்லாமே ஓயட்டும். கடத்திட்டு எங்கையாவது போகலாம்….” என்று புன்னகைத்தவன்,
“ம்ஹூம், வேண்டாம். நீ இல்லாம இங்க நான் மட்டுமில்லை. நம்ம குடும்பமும் எத்தனை தவிச்சு போவாங்கன்னு பார்த்துட்டேன் திவ்யா. அவங்க ஒவ்வொருத்தர் உயிர்லயும் நீ இருக்க. அவங்களோட இருக்கறதை விட எங்க சந்தோஷம் கிடைச்சிடும்?…” என்றதற்கு ஆமோதித்தவள், ‘அணைச்சுக்கவா?’ என்றாள் மீண்டும் அவனிடம்.