“அதெல்லாமில்லைப்பா…” என்று சொல்லி அங்கே பேசிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து நின்றுகொண்டார்.
வித்யா தன் கையிலிருந்த பிரசாதத்தை அனைவரிடமும் தந்துவிட்டு சர்க்கரை பொங்கலை பூர்விதாவிற்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
“ஆமா, உன் வண்டி எங்க வித்யா?…” என்று செண்பகம் அவளிடம் கேட்க, அவள் விளக்கும் முன் முரளி முந்திக்கொண்டான்.
“கிளம்பும்போது வித்யா வண்டி ரிப்பேர். அதான் பெரிப்பா என்னை கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. வர்ற வழில கோவிலை பார்த்து அப்படியே கும்பிட்டா. நான் தான் இறங்கி போய் கும்பிட்டு வான்னு சொன்னேன்…” என்ற முரளி,
“நான் கோவிலுக்கு கூட்டிட்டு போகாம அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா நீங்களே என்னை வாங்கு வாங்குன்னு வாங்கிருக்கமாட்டீங்களா? அதான் எதுக்கு வம்புன்னு சாமியை பார்த்துட்டு பிரசாதமும் வாங்கிட்டு வந்தாச்சு…” என்று முடிக்க செண்பகத்திற்கு என்னவோ சுறுசுறுவென்று பொங்கியது.
“உன்னை கேட்டேனா? கம்பெனில இருந்து வந்தா முதல்ல போய் முகம் கை, கால் கழுவிட்டு ட்ரெஸ் மாத்தவேண்டாமா? உள்ள போ, உனக்கு டீ கொண்டுட்டு வரேன்…” என்றார் செண்பகம் மகனிடம்.
“ம்மா, கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் கைகால் அலம்ப கூடாதுன்னு சொல்லுவீங்க. இன்னைக்கு என்ன மாத்தி சொல்றீங்க?…” என்று அவரின் பொறுமையை சோதிக்கவென்றே பேச,
“அடங்குடா. இன்னைக்குன்னு என்ன பேச்சு?…” என்ற ஆத்மா,
“நீங்க போங்க சித்தி…” என சொல்லி, முரளியை தனியே இழுத்துக்கொண்டு வந்தான்.
“என்னண்ணா, அம்மாட்ட பேசிட்டிருந்தேன்ல…” என முரளி சலிக்க,
“நல்லா பேசின நீ. எனக்கே பக்குன்னு ஆகிடுச்சு….”
“நீங்க பயந்தீங்களாண்ணா? இதை நான் இப்ப நம்பனுமோ? அண்ணாமலையையே சாய்ச்சவராச்சே நீங்க…”
“இப்ப இந்த பெருமை அவசியமா? அங்க உன்னை சித்தி டவுட்டா பார்க்கறாங்க. இனிமே தான் தம்பி நீ ரொம்ப கவனமா இருக்கனும்….”
“கவனமான்னா? எவ்வளோ நாளைக்கு? இப்படியே வருஷக்கணக்காவா?…” என்றவனை கண்டு புருவம் உயர்த்தியவன்,
“ஸோ, ஸார் கணக்கா தான் காய் நகர்த்தறீங்க…” ஆத்மாவிற்கு ஆச்சர்யம் தாளவில்லை தன் தம்பியை எண்ணி.
“வித்யாவை தவிர மத்த எல்லாரையும் அவளுக்கு தெரியமுன்ன நான் சரிக்கட்டனும். அட்லீஸ்ட் நான் சொல்லும்போது இதை ஓரளவு அவங்க அனுமானத்துல வச்சுக்கற மாதிரியாச்சும் தயார்படுத்தனும். அதுவும் அம்மா, எனக்கு அங்க தான் டென்ஷனே…” என்றான் முரளி.
“உன்னை பார்த்தா அப்படி தெரியலை. எனக்கு தான் டென்ஷனாகுது…” என சொல்லிக்கொண்டே திரும்ப அங்கே ரிதுபர்ணா ஆத்மாவை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“போச்சு. ஏற்கனவே என்ன எனக்கு தெரியாத ரகசியம்ன்னு என்னை துளைக்கிறா உங்கண்ணி. இப்ப என்னன்னா இப்படி பார்க்கறா…” தலையில் கைவைக்காத குறையாக ஆத்மா சொல்ல,
“இப்படியே சொல்லி சல்லி சல்லியா நொறுக்கறீங்கடா. நீ கொஞ்சம் அடக்கி வாசி தம்பி…” மீண்டும் தம்பியிடம் அவன் பேச,
“நானே ரொம்ப லேட் பண்ணிட்டேனோன்னு இருக்கேன்…” என்றவன் திரும்பி வித்யாவை பார்த்தான்.
“இவளுக்கு என்னை புரியுமாண்ணா?…” என்றான் அவளை பார்த்துக்கொண்டே ஆத்மாவிடம் அமைதியாக.
முகத்தில் கிஞ்சித்தும் விளையாட்டோ, கேலியோ இல்லை அயர்ச்சியோ எதுவுமற்ற ஒரு உணர்வு கனிவாய்.
“நான் கோவிலுக்கு போகனும்ன்னு சொல்றேன். நீ கூப்பிட்டா வருவேன்னு சொல்றேன். ஒரு செகென்ட் கூட நான் அவளை இந்த ஆங்கிள்ல பார்க்கறேன்னு வித்யாவுக்கு தோணவே இல்லைண்ணா. இது என்மேல உள்ள நம்பிக்கை தானே?…” என்று கேட்ட முரளி,
“அவ நம்பிக்கையை நான் என்னண்ணா பன்றேன்?…” என்று இப்போது ஆத்மாவை பார்த்தே கேட்க,
“இது என்னன்னு தெரியுமா?…” என தன் உள்ளங்கையை முரளி காண்பிக்க மருதாணியின் சிவப்பு அதில் வட்டமாய்.
“முரளி…” என்ற ஆத்மா அவனை பேச்சற்று பார்த்தான்.
“வித்யா தான் வச்சுவிட்டா. நான் கேட்டதும் யோசிக்கவே இல்லை. விசாலாட்சி அத்தையும் இருந்தாங்க. குழந்தை மாதிரி சிரிச்சிட்டே வச்சுவிட்டா. எனக்கு தான் மனசு தாங்கலை. போதும்ன்னு சொல்லிட்டேன்…” என்றவன்,
“இதையே அவக்கிட்ட என் மனசை சொல்லி வச்சிவிட கேட்டிருந்தா தொட்டிருப்பாளா? என் முன்னாடியாவது நின்னிருப்பாளா? இல்லைல. நான் ரகசியமா ரொம்பவே சந்தோஷப்பட்டுட்டேன் ண்ணா. என்னோட நினைப்பு காதலாவே இருந்தாலும் மத்தவங்க பார்வைக்கு அது வெறும் பாசமான பேச்சுவார்த்தையா தெரியுது…”
“ஒருவேளை என் விருப்பம் தெரிஞ்சு இதையெல்லாம் மனசுல வச்சுட்டு தான் நான் பழகினேன்னு எதுவும் நினைப்பாளோ? இல்லை அதை கூட தெரிஞ்சுக்காம இருந்திருக்கோமேன்னு யோசிப்பாளோ? அம்மா என்ன நினைச்சிருப்பாங்கன்னு தான் துடிச்சு போவா….”
“கண்டிப்பா என்னோட விருப்பம் காதல் கல்யாணமா மாறாது. அது தெரியும். ஆனா அவளை வலிக்க வைக்காம, முருகேஸ்வரி அத்தையை கஷ்டபடுத்தாம இந்த கல்யாணம் நடக்கனும். என்னோட விருப்பம் அவங்களை நோகடிச்சிடுமோன்னு ஒருபக்கம் பயம். இன்னொருபக்கம் என்னவா இருந்தாலும் பார்த்துக்கலாம்ன்னு நம்பிக்கை…” என்றான்.
அவன் பேச பேச ஆத்மாவின் மனதில் அத்தனை வருத்தம். இதில் யாரை சொல்லியும் நொந்துகொள்ள முடியாத சூழ்நிலை.
ஒவ்வொருவரும் அவரவர் பக்கத்தில் நியாயம் சுமந்தவர்கள் தான். யாரையும் பழிக்கவோ, குறை கூறவோ முடியாத நிலை.
அப்போதே தலை சுற்றிவிட்டது ஆத்மாவிற்கு. எப்படி எல்லாவற்றையும் தாண்டி வித்யாவுடன் இவன் வாழ்வு பிணைய போகிறதென்ற நினைவே கண்ணைக்கட்டியது.
செண்பகத்தை கூட சமாளித்துவிடலாம் போல. ஆனால் வித்யா, முருகேஸ்வரி. இவற்றுக்கெல்லாம் மேலாய் ரிதுபர்ணா. தன் மனைவி.
எப்படி இதனை இதுவரை யோசிக்காமல் விட்டோம் என்று பதறி போனான் ஆத்மா.
விஷயம் அறிந்து கோபத்தில் செண்பகம் ஏதேனும் வாய்தவறி சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்தது.
அதன்பின் தலைகீழாக நின்றாலும் ரிதுபர்ணா அதற்கு ஒப்புக்கொள்ள போவதில்லை. அவள் சம்மதமின்றி முருகேஸ்வரியும், வித்யாவும் இதற்கு சம்மதிக்க போவதில்லை என்பது உண்மைக்கும் உண்மை.
எல்லாம் இப்போது செண்பகம் கையில் இருக்கிறது. அவரின் பொறுமையில் தான் இருக்கிறது என்று நினைத்தவனுக்கு தடதடக்கும் உணர்வு.
“என்னண்ணா, ரொம்ப போட்டுட்டேனோ?…” என கழுத்தை அறுப்பதை போல செய்து காண்பிக்க எதுவும் சொல்லாமல் முரளியை அணைத்துக்கொண்டான் ஆத்மா.
“பார்த்துக்கோடா. எனக்கு வித்யா ரொம்ப முக்கியம். நீயும் தான். உன்னோட விருப்பத்துக்காக மட்டும் இந்த கல்யாணம் பத்தி நான் உன்கிட்ட பேசலை. வித்யா கண்டிப்பா அவ அக்காவும், அம்மாவும் சொல்றவனை தான் கல்யாணம் பண்ணிப்பா….”
“அது தெரியுமேண்ணா…” முரளி கூற,
“அது நீயா இருந்தா எனக்கு ரொம்பவே சந்தோஷம். உன் விருப்பமும், வித்யாவோட எதிர்காலமும் நிச்சயம் சிறக்கும்ன்னு தான் நான் இதுக்கு சரின்னு சொன்னேன். ஆனா…” என்றவன் முடிக்கும்முன் அங்கே பூர்விதாவை கையில் பிடித்துக்கொண்டு வித்யா வந்துவிட்டாள்.
“வித்யா வராண்ணா…” என்றான் முரளி திரும்பி பாராமல்.
முரளியிடமிருந்து தலையை மட்டும் சாய்த்து பார்க்க அங்கே வந்துகொண்டிருந்தாள் வித்யா.
“அப்பாக்குட்டி…” என்ற சத்தத்துடன் வித்யாவின் கையை பிடித்துக்கொண்டு மகள் குதித்தபடி வர,
“ம்க்கும்…” என தொண்டையை செருமிக்கொண்ட முரளி திரும்பி பார்த்தான்.
“மனோவா?…” என்ற ஆத்மா வித்யாவை பார்க்க அவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“ஓஹ், இதோ வரேன்…” என்று ஆத்மா செல்ல வித்யாவும் அவனுடன் நகர முரளி அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான்.
ஒருமாதத்திற்கு முன்பு பிறந்திருந்த கன்றுக்குட்டி அவனருகில் வந்து நிற்க முரளியின் முகம் புன்னகை சிந்தியது.
“என்னடா? உன் அம்மாவை விட்டுட்டு வந்துட்ட?…” என்று கன்றுடன் பேச, தாய் பசு அவனை பார்க்க கன்று முரளியின் வயிற்றில் லேசாய் தலையை வைத்து அழுத்திக்கொண்டு முணங்கியது.
“அம்மா கூட இரு. போ. சிலநேரம் நம்மையறியாமலே எதாச்சும் ஒருகாலகட்டத்துல பிரியவேண்டியதாகும். அது நாம விரும்பியோ, விரும்பாமலோ. எல்லாம் சூழ்நிலை தான் தீர்மானிக்கும்…” என்று சொல்ல அவனின் மனம் புரிந்தோ என்னவோ அவனின் பேச்சிற்கு பதிலாய் ‘ம்மா’ என்றது தாய் பசு.
கன்றுக்குட்டியும் அவனின் கால்களை சுற்றிக்கொண்டு விளையாட மனதின் அழுத்தம் குறைந்ததை போலிருந்தது அவனுக்கு.
சிறிதுநேரம் விளையாடிவிட்டு கன்றும் தாயின் அருகில் சென்றதும், இரண்டும் பாசத்தை காண்பிக்க முரளிக்கு மனதிற்குள் என்னவோ பிசைந்தது.
செண்பகத்தின் உலகமே அவன் ஒருவன் மட்டும் தான். பிள்ளை, பிள்ளை என்று அவனை கொண்டே அவரின் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.
மகன் தான் அவரின் பெருமிதம். என் மகன் என் வார்த்தையை மீறமாட்டான் என்னும் கிரீடத்தை சுமந்துகொண்டிருப்பவர்.
தன் திருமண விஷயத்தினால் அது தலையிறங்கினால் தாங்கிக்கொள்வாரா என நினைக்கவே அச்சமாக இருந்தது முரளிக்கு.
அவ்விடத்திலேயே நின்றபடி கண்ணுக்கு தெரியாத அந்த கடவுளிடம் மனதால் மன்றாடினான் முரளி.
எப்படியாயிலும் யாரின் மனமும் நோகாமல், காயப்படுத்தாமல், குடும்பங்களின் சந்தோஷத்துடன் வித்யாவை தன் கையில் கொடுத்துவிடவேண்டும் என்று இறைஞ்சிக்கொண்டிருக்க,
“என்னாச்சு முரளி?…” என்ற தாயின் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினான்.
செண்பகம் தான் கலவரமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார் அங்கே. மகனின் இந்த செயல்கள் அவருக்கு எல்லாம் புதிதோ புதிது.
இப்படி அவன் செய்த எதுவுமே, என்றைக்குமே அவனின் மனதை சஞ்சலம் கொள்ள செய்ததில்லை.
ஆனால் இன்றைக்கு அவர் பார்த்த விஷயமும், அடுத்தடுத்து அவன் பேசியதும், தனித்து வந்து இங்கே நிற்பதும் அவரை பயம்கொள்ள செய்தது.
“ம்மா, நீங்க என்ன இங்க?…” என்றான் புன்னகையுடன்.
“அதான் நானும் கேட்கறேன். கம்பெனிலருந்து வந்து இன்னும் நீ வீடு கூட நுழையலை. கண்ணாவோட இங்க வந்துட்ட. அவன் அங்க மனோ வரவும் வந்தும், அவனோட நீ வராம தனியா இங்க என்ன பன்ற?…” என்றார் மகனிடம்.
“தனியா என்ன தனியா? அதான் நம்ம லட்சுமிஸ், கன்னுக்குட்டீஸ் எல்லாம் இருக்காங்களே? சும்மா அப்படியே நின்னுட்டேன்…” என்று சொல்ல மீண்டும் அந்த கன்று வந்து அவனின் காலை சுற்றியது.
அவன் என்னவோ சமாளிப்பதை போலவே செண்பகத்திற்கு தோன்ற அழுத்தியும் கேட்கமுடியவில்லை.
“சரி, நீ போ. மனோவை பாரு…” என்று அப்போதைக்கு பேச்சை மாற்றினார்.