“ணாஹ்…” என்ற ஒன்றை அழைப்பு அழுத்தமின்றி அவள் வாயிலிருந்து வர அதே எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தவன்,
“என்ன வேணும்? வேலை இல்லையா?…” என்றான் கடுப்புடன்.
வித்யாவின் முகமாற்றம், வலி எதுவும் அவனுக்கு புரியவில்லை. அவனின் கவலை எல்லாம் வேலையை வைத்தே.
அவன் கேட்டபொழுது இளவரசு வேறு அவனுக்கு அழைப்பு விடுக்க கையில் போனை எடுத்தவன் வித்யாவை பார்த்தான்.
நெற்றியில் கழுத்தில் கை வைத்தவள் தனக்கு முடியவில்லை வீட்டிற்கு செல்வதாய் அவனுக்கு உணர்த்த முயல,
“ப்ச், இன்னைக்கு அதெல்லாம் முடியாது. டேப்லெட் வச்சிருந்தா போட்டுட்டு இதை முடி. இப்ப வந்திடறேன்…” என கூறியவன் காதில் போனை வைத்துக்கொண்டே கேபினை விட்டு நகர வித்யா விழிகள் கசிந்தது.
தனக்கு முன்னிருந்த கணிணியிலிருந்து அனைத்து காட்சிகளும் நேரம் செல்ல செல்ல இருள துவங்க தலை வெடித்துவிடும் போல் அத்தனை வலி.
கத்தவும் முடியாமல் தொண்டைக்குள் அந்த சின்ன குரல் அடங்கி விக்கி விலகி வெளியேற துடிக்க மெல்ல எழுந்து நின்றாள்.
குளிரூட்டப்பட்ட அறையாக இருந்தாலும் மொத்தமாய் சற்றுநேரத்தில் வியர்த்துவிட்டது வித்யாவிற்கு.
என்னவோ செய்கிறது. பெரிதாய் தனக்கு என்னவோ நேர்கிறது என்பது வரை மட்டுமே அவளுக்கு புரிய கைகள் நடுங்கியது.
தனது கைப்பேசியை கூட அவளால் எடுக்க முடியவில்லை. யாருமில்லாத அந்த அறையை விட்டு வெளியேற எழுந்து நின்றாள்.
தள்ளாடும் உடலை சமாளித்து பலம் கொண்டமட்டும் இழுத்து பிடித்து அறையின் வாசலுக்கு வந்து கதவை திறக்க அதன்முன் தான் பரத் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.
தலைக்குள் பெரும் பிரளயம். என்ன செய்கிறதென்று கூட சொல்லமுடியாமல் பரத்தை நெருங்கியவள் அவனின் பின்புற சட்டையை இழுத்து பிடிமானமாய் நிற்க முயல, பட்டென்று திரும்பியவனின் வேகத்தில் அவன் பிடித்து நிறுத்தும்முன் தடுமாறி அருகிருந்த இரும்பு மேஜையில் மோதி கீழே சரிந்தாள் வித்யா.
“வித்யா…” என்ற அலறலுடன் பார்த்தவனுக்கு கை காலெல்லாம் உதறல். பதறிப்போனான் பரத்.
சட்டென அவளை நெருங்கி தலையை தூக்கி பார்க்க அடிபட்ட இடத்தில் குருதி வெளியேற ஆரம்பிக்க அவளிடம் உணரவில்லை.
“மாமாவையும், கண்ணத்தானையும் வர சொல்லுங்க. ட்ரைவர்ட்ட சொல்லி காரை எடுங்க…” என்று சொல்லிக்கொண்டே அவளை கையில் தூக்க முயல,
“ஏய், என்னாச்சு பரத்?…” என வந்துவிட்டிருந்தான் ஆத்மா.
கணக்குவழக்கில் தேவைப்படுபவை எல்லாம் ஓரளவு கணக்கில் இருக்க மற்றதை மறுநாள் பார்ப்பதாக சொல்லி ஆடிட்டர் கிளம்பியதால் அவர்களும் அப்போது தான் வெளியே வந்தனர்.
வந்ததும் இதனை பார்த்தவனுக்கு உயிரே நின்றுவிட்டது. தலையில் காயத்துடன் மட்டுமல்லாது மூக்கில் லேசாய் கீற்றாய் குருதி வழிய ஆரம்பித்தது வித்யாவிற்கு.
“என்னடா என்னாச்சு?…” என்றவனின் சத்தத்தில் அவ்விடமே அதிர அண்ணாமலை, இளவரசு இருவரும் வந்துவிட்டனர்.
“ஸார் போன் பேசிட்டிருந்தப்போ வித்யாம்மா கூப்பிட வந்தாங்க. அவர் திரும்பின வேகத்துல தடுமாறி வித்யாம்மா கீழே விழுந்துட்டாங்க…” என்று அதனை தூரத்தில் நின்று பார்த்த ஒருவர் கூற,
“நீ வித்யாவுக்கு பார்க்கற டாக்டர்க்கு போனை போடு. வெளில இருந்தா உடனே ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்லு…” என்று சொல்லியபடி ஆத்மாவுடன் ஓட்டமும் நடையுமாக ஓடினார் அண்ணாமலை.
இளவரசு மருத்துவருக்கு அழைக்க பரத் செய்வதறியாமல் அவருடன் மருத்துவமனைக்கு வந்தான்.
அவசரசிகிச்சை பிரிவில் வித்யா அனுமதிக்கப்பட இன்னும் வீட்டில் யாருக்கும் சொல்லப்படாமல் இருப்பதனால் அதற்கும் இளவரசு அழைத்துவிட்டார்.
முதலில் விசாலாட்சியிடம் தான் விஷயத்தை சொல்லியது. அவர் செண்பகத்திடம் சொல்லி பிள்ளைகளை சபர்மதி, ஆனந்தியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மற்றவர்களுடன் மருத்துவமனை வந்துவிட்டனர்.
“என்னாச்சு என் பொண்ணுக்கு?…” என்று பரிதவித்து வந்த முருகேஸ்வரிக்கு பதில் சொல்லமுடியவில்லை.
“பார்த்திட்டிருக்காங்கம்மா. கொஞ்சம் பொறு…” என்ற அண்ணாமலை விசாலாட்சியை பார்க்க,
“அவ இந்த ஒருவாரமாவே சரியா தூங்கவும் இல்லை. நேத்தே தலைவலின்னு இருந்தா. அதனால கிறக்கமா இருந்திருக்கும்…” என்றார் செண்பகம்.
“சொல்றாங்கல்ல த்தை. அழாம இருங்க…” என்று சுந்தரி அவரின் கண்ணீரை துடைக்க ரிதுபர்ணா யாரிடமும் பேசாமல் ஆத்மாவிடம் வந்தாள்.
“என்னாச்சு? என்ன நடந்துச்சு?…” என்றவள் கேள்வியில் ஆத்மா பரத்தை பார்த்தான்.
வந்ததுமே பரத் விஷயத்தை மறைக்காமல் சொல்லிவிட்டான். முடியவில்லை என்று சொல்லியும் தான் தான் வேலை இருப்பதாக இருக்க சொல்லியதாக சொல்ல அப்போதே சட்டையை பிடிக்க போய்விட்டான் ஆத்மா.
அவனை சொல்லி என்ன செய்வது என்று முதலில் கவனத்தை வித்யாவிடம் செலுத்த நினைத்தான்.
“இதுக்குத்தான் சொன்னேன். அவ வெளிலையே வேலை பார்க்கட்டும்ன்னு. யார் கேட்டீங்க? எத்தனை தான் ஒண்ணா இருந்தாலும் அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. சொன்னேனே? கேட்டீங்களா?…” என்ற ரிதுபர்ணாவின் கண்ணீரை காண முடியவில்லை.
அண்ணாமலை இறுகி போய் நின்றிருந்தார். யாருக்கும் பதில் தர நினைக்கவில்லை.
காரணமில்லாமலா வித்யாவை தங்களின் கண்ணெதிரே இருக்க செய்தது. வெளியே வேலைக்கென்று சென்றால் கவனிக்க முடியுமா என்றுதான் தங்களின் பார்வை வட்டத்தில் வைத்து, அதிக சுமையில்லாத வேலையாய் அவளுக்கு தந்தது.
பரத்திடம் என்றால் நிறைய நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ளலாம் என்று தான் அவனின் கீழ் அவளை அமர்த்தியது.
அதுதான் தவறாகி போனதென்று இப்போது மௌனமாய் நின்றார் அண்ணாமலை.
மனதிற்குள் அத்தனை பதட்டம். மகனை பார்க்க அவன் எதையும் சொல்லவேண்டாம் என்பதை போல் கண்ணை காண்பித்தான்.
இதுவரை அவர்கள் இருவர் மட்டுமே அறிந்திருந்த ரகசியம் அது. இனிமேலும் அப்படியே இருந்துவிடட்டும் என்று மௌனம் காத்தான்.
ரிதுபர்ணாவிடம் சொல்லி அவளை அமைதிப்படுத்தி செண்பகத்தை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தனியே வந்தான்.
மருத்துவர்கள் இன்னும் வெளியே வரவில்லை. அதுவே அவனை பாடாய் படுத்தியது.
மெல்ல நகர்ந்து வந்தவன் அண்ணாமலையின் அருகில் வந்து நிற்க அவனின் தோளில் தட்டிக்கொடுத்தார் அண்ணாமலை.
“மூக்குல இருந்து ரத்தம் வர்ற அளவுக்கு ஸ்ட்ரெஸ்ஸாகிருக்கா ப்பா. டாக்டர் படிச்சு படிச்சு சொன்னார். லேசான தலைவலின்னாலும் அதை ஈசியா விடாதீங்கன்னு. எப்படி கவனிக்காம விட்டோம்?…” என்றவன்,
“முரளிக்கு என்ன பதில் சொல்ல?…” என்று கலங்கி போனான்.
சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்துகொண்டிருந்தவன் இடையில் கம்பெனிக்கு அழைக்க இப்படி விஷயம் என்று அங்கே சொல்லவும் தந்தைக்கு உடனே அழைத்து என்னவென்று விசாரித்தவனிடம்,
“வேற எதுவும் பிரச்சனை இல்லை முரளி. எல்லாரும் இங்க தான் இருக்கோம். நீ பைக்ல வர்ற. பார்த்து வா…” என்றார்.
“இதுக்குத்தான் சொன்னேன். உங்க கூட வச்சுக்கோங்கன்னு. வேலையும் கத்துக்கட்டும்ன்னு விட்டு இப்ப இது தேவையா?…” என்று அவன் அங்கே இரைவது இங்கே புரிந்தாலும் என்ன சொல்லமுடியும்?
“அவனும் வேணும்ன்னு பண்ணலை முரளி. ஆடிட்டிங் நடக்குதேன்னு டென்ஷன்ல…” என்று சொல்லிக்கொண்டிருக்க மருத்துவர்கள் வெளியே வந்துவிட்டனர்.
“ரூம்க்கு வாங்க, பேசலாம்…” என்று சொல்லி செல்ல,
“அப்பறம் கூப்பிடறேன்…” என்ற இளவரசு அழைப்பை துண்டிக்க மறந்து அண்ணாமலை, ஆத்மாவுடன் தானும் உடன் சென்றார்.
“பேசிட்டு வரோம்…” அண்ணாமலை சொல்லியும்,
“இல்லண்ணே நானும் வரேன்…” என்றார் இளவரசு.
மருத்துவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர்களின் கோபமான கண்டனத்தில் மூவரும் துடித்து போக, இதனை கேட்டு அங்கொருவன் உயிர் அஸ்தமிக்கும் போலானது.
எத்தனை வேகத்தில் அவன் வந்து சேர்ந்தானோ? முகமெல்லாம் புழுதியில் கசங்கி, உடை களைந்து விழிகள் சிவந்திருக்க முரளியை அத்தனை சீக்கிரத்தில் அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன முரளி…” என்ற தாயையும் தாண்டி சென்றவன் பார்வையில் பரத் ஒருவனே தெரிய,
“யூ ராஸ்கல்…” என்று பாய்ந்திருந்தான் அவனின் மீது.
அத்தனை ஆவேசம், அவ்வளவு ஆக்ரோஷம். கன்னத்தின் அறைகள் எண்ணிக்கையில் சேராது என்பதை போல முரளியை அங்கே யாராலும் அடக்கமுடியவில்லை.
“நீயெல்லாம் மனுஷ ஜென்மமாடா? அப்படி என்னடா உனக்கு வன்மம்? அவ உன்னை என்னடா பண்ணினா?…” என்று கேட்டவனை இழுத்து பிடிக்கமுடியாமல் அண்ணாமலையும், ஆத்மாவும் பயந்து போனார்கள்.
அவனின் சீற்றமும் ஆவேசமும் இதுவரை அந்த குடும்பத்தில் யாருமே கண்டிராதது.
அந்த குடும்பத்தின் செல்ல பிள்ளை என்பார்கள் முரளியை. அப்படி எந்தநேரமும் கலகலப்பும், சிரிப்புமாய் வளையவருபவன்.
யாரையும் கடிந்து பேசியிராதவனிடம் இவ்வளவு ஆத்திரம் என்று பயந்து பார்த்தனர்.