“இல்ல, இல்ல நான் வேணும்ன்னு பண்ணலை…” என்று பரத் சொல்லி யாரும் காது கொடுத்து கேட்பதை போலில்லை.
விசாலாட்சியே அதிர்ச்சியுடன் தான் பார்த்தார் மகனை. இந்தளவிற்கா இரக்கமின்றி நடந்திருப்பான் என்றவருக்கு முருகேஸ்வரி கதறலை கண்கொண்டு காண முடியவில்லை.
“அவ என்னய்யா செஞ்சா? வலிச்சா கூட சொல்ல தெரியாத புள்ளை. முடியலன்னு தான கெஞ்சிருக்கா? ஏ சாமி, அந்த ஈரமில்லையா? மனுசியா கூட பாக்கலையே? மூக்குல ரத்தம் வடியுதாமே? எம்புள்ளைக்கு என்னன்னு தெரியலையே?…” என்று சொல்லி முருகேஸ்வரி அழுது கொண்டே,
“கண்ணு ரிதும்மா, அவள காப்பாத்தி குடு தாயி. நாங்க எங்கிட்டாச்சும் போயிக்கறோம். அதுபாட்டுக்கு ஒரு இடத்துல இருந்திருக்கும்…” என்று என்னென்னவோ சொல்லி அவர் அழ ரிதுபர்ணா வந்து கட்டிக்கொண்டான் முருகேஸ்வரியை.
“ஏன் சித்தி இப்படி பேசறீங்க? அவளுக்கு எதுவுமாகாது. நல்லா இருப்பா. நல்லா வந்திருவா. எங்க போவீங்க? நான் உங்க பிள்ளை இல்லையா சித்தி. இப்படியெல்லாம் பேசாதீங்க…” என்று அவள் ஒருபுறம் அழ, யாரை தேற்றவென்றே தெரியவில்லை.
“போதுமாடா, நல்லா பாரு. இப்ப சந்தோஷமா? நிம்மதியா இருப்பியா?…” என்ற முரளி மீண்டும் அவன் மீது பாய போக,
“சத்தியமா நான் வேணும்ன்னு எல்லாம் பண்ணலைடா முரளி…” என்றான் பரத்.
“வேணும்ன்னு இல்லாம வேற என்ன? அவளை எப்பவும் வாய் பேசாதவன்னு எத்தனை ஏளனமா என்கிட்டவே பேசின தானே? இன்னொருவாட்டி பேசி பாரு அன்னைக்கு தெரியும் இந்த முரளி யாருன்னு….” என்றவனை விக்கித்து போய் பார்த்தார் செண்பகம்.
என் பிள்ளைக்கு அதிர்ந்து பேச வருமா என்றிருந்தவர் அவனின் இந்த ருத்ர அவதாரத்தில் அரண்டுபோய் பார்த்தார்.
என்ன நடக்கிறது என்ன ஏது என்று எதுவும் புரியாமல் நின்றவருக்கு மகனை தவிர வேறு ஒன்றும் பதியவில்லை.
“முரளி காம்டவுன். வித்யாவுக்கு சரியாகிடும். ஓவர் ஸ்ட்ரெஸ். வேற ஒண்ணுமில்லை…” என்று சொல்லிய ஆத்மாவை வெறித்த பார்வை பார்த்தவன்,
“நீங்க கூட என்கிட்ட சொல்லலைல? ஏன் ண்ணா என்கிட்ட மறைச்சீங்க?…” என்றான் அவனிடம் கோபமாய்.
ஆத்மா திகைத்து பார்க்க அண்ணாமலையும் அவனும் ஒருவரை ஒருவர் பார்க்க இளவரசு பதறினார்.
“நான் கேட்டுட்டேன். எல்லாமே கேட்டுட்டேன். அப்பாட்ட பேசிட்டிருக்கும் போது கால் கட்டாகலை. நீங்க டாக்டர்ஸ் பேசினதை நான் கேட்டுட்டேன்…” என்று தொய்ந்துபோய் சொல்லியவனின் கண்ணிலிருந்து நீர் கரகரவென்று இறங்கிவிட்டது.
“முரளி…” என்ற ஆத்மா அவனின் தோளில் கை வைக்க அதனை தட்டிவிட்டவன்,
“வித்யா எங்க?…” என்றான் வெறுமையான குரலில்.
“முரளி நான் சொல்றேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு…” என்று ஆத்மா அவனை நிறுத்த பார்க்க,
“எனக்கு அவளை பார்க்கனும். இப்பவே பார்க்கனும். எங்க, எந்த ரூம்?…” என திமிறியவனை நிறுத்த முயன்றான் ஆத்மா.
அத்தனைபேரும் முரளியின் இந்த அவதாரத்தில் ஸ்தம்பித்து போய் பார்க்க, முருகேஸ்வரி கூட அழுகையை நிறுத்திவிட்டு என்னெவென்று பார்த்தார்.
“கண்ணா அவன் பார்த்துட்டு வரட்டும்…” என்று அண்ணாமலை சொல்ல, வித்யா அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மருத்துவர் வெளியேறவும்,
“இந்த ரூமா?…” என கேட்டுக்கொண்டே விறுவிறுவென்று நடக்க, அவனின் வேகத்தில் அத்தனைபேரும் அவனை பின்தொடர கதவை படாரென்று திறந்துகொண்டு உள்ளே சென்றவன் நடை வித்யாவை நெருங்கியதும் தான் நின்றது.
‘என்ன செய்கிறான் இவன்?’ என்று உள்ளம் படபடக்க அனைவரும் வந்து பார்க்க, ஒருவரும் உத்தேசிக்காத ஒரு காரியத்தை அடுத்த நொடி நிகழ்த்தியிருந்தான் முரளி.
சிலநொடிகள் தான் ரிதுபர்ணா அசையாது நின்றது. அடுத்தநொடி உயிர் பெற்றதை போல உணர்வுகள் தலைதூக்க,
“முரளி…” என்று கத்திய ரிதுபர்ணா, வேகமாய் வந்து வித்யாவிடமிருந்து முரளியை பிரித்து கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டாள்.
இப்படி முரளி செய்வான் என்று ஒருவரும் நினைக்கவில்லை. அப்படியே நின்ற இடத்தில் அசையாது அவர்கள் நிற்க ரிதுபர்ணா தள்ளிவிட்ட வேகத்தில் முரளி வித்யாவின் காலருகே வந்து தடுமாறி நின்றான்.
அவனின் முகத்தில் கிஞ்சித்தும் தான் செய்தது தவறு என்ற பாவனையே இல்லை.
கன்னத்தசைகள் இறுகி விரிய மீண்டும் முரளியின் கைகள் வித்யாவின் பாதத்தை பிடித்தது.
கொஞ்சமும் யோசியாமல் பாதத்தில் அவளின் கொலுசில் மற்றுமொரு முத்தத்தை அழுத்தமாய் அடுத்தடுத்து அவன் வைக்க, ரிதுபர்ணா மொத்தமாய் பலமிழந்து தளர்ந்தவள் அங்கேயே சுவற்றோடு மடிந்து அமர்ந்துவிட்டாள்.
“இவ என்னோட உரிமை அண்ணி. அவ உணர்வில்லாம மயக்கத்துல இருக்கும்போது முத்தம் குடுத்தது தப்பு தான். ஆனா என்னோட வொய்ப். நான்,, நான்,,, இப்ப இப்படி இவளை….” என்றவன் கலக்கத்துடன்,
“என் உயிரே போயிருச்சு. இல்லைன்னு ஆகிட்டா உயிரும் போயிரும்….” என்றவனுக்கு வார்த்தைகள் இடற அவனின் கண்கள் வித்யாவின் கசங்கிய முகத்தில் தான்.
நடந்த எதுவுமே தெரியாமல் இன்னும் உணர்வின்றி மயங்கிய நிலையில் வித்திவ்யா.
சற்றுமுன்னான வலியில் அழுததன் அடையாளமாய் கன்னத்தினோரம் காய்ந்த கண்ணீர் தடங்கள் கோடாய் இறங்கியிருக்க, இதழ்களில் முரளியின் முத்தமிட்ட ஈரத்தில் சிவந்திருந்தது.
தன் மொத்த வாழ்வும் உருகுலைந்துவிடுமோ என்னும் வேதனை தாங்கிய முகத்துடன் முரளிவினோகரன்.
தன்னை சுற்றி நடந்த நிகழ்வுகள் எதையும் அறியாத நிர்மாலமான முகத்துடன் ஆழ்ந்த மயக்கத்தில் முரளியின் திவ்யா.
ஒவ்வொருவரின் மனதிலும் தூண்டப்பட்டிருக்கும் இந்த விளக்கின் வெளிச்சத்தில் ஒளிரும் தீபம் உணர்வெரிக்குமோ? உறவெரிக்குமோ?
வாழ்க்கையின் ஜோதியில் திரியாய் அவன். நெருப்பாய் அவள்.