முரளி கிளம்புவதையே பார்த்து நின்றவர்கள் மனதில் அத்தனை அழுத்தம்.
ரிதுபர்ணா எதுவும் சொல்லவில்லை. தங்கையை தோள் தொட்டு திருப்ப வித்யாவின் பார்வை அங்கே நின்றுகொண்டிருந்த செண்பகத்தை கவனித்தது.
நான்குநாட்களாக அவர் மருத்துவமனைக்கே வரவில்லை. அவளாக கேட்டதற்கும் செண்பகத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியிருந்தார் விசாலாட்சி.
இப்போதும் தான் வந்ததும் தன்னருகில் வராமல் அவரின் வாசலில் திண்ணை தூணில் சாய்ந்து நின்றிருக்க பார்த்தாள்.
“வித்யா வந்து நில்லு. திருஷ்டி எடுக்கனும்…” என்று சபர்மதி அழைக்க, அவளை கையமர்த்தி இருக்கும்படி சொல்லியவள் வேகமாய் செண்பகத்தை நோக்கி சென்றாள்.
“ஆத்தீ, என்ன இவ அங்க போறா?…” என விசாலாட்சி அவளுடன் செல்ல செண்பகம் தன்னை நோக்கி வரும் வித்யாவை தவிர்த்துவிட்டு வீட்டிற்குள் செல்லமுடியாமல் அப்படியே நின்றுவிட்டார்.
வந்ததும் அவரை பார்த்தவளுக்கு முகத்தில் சிறு கவலை துளிர்க்க அவரின் கைபிடித்தவள், நலம் விசாரிக்கவும் நெஞ்சமெல்லாம் அடைத்தது செண்பகத்திற்கு.
“நான் நல்லாயிருக்கேன்…” என திக்கி திணறி வார்த்தைகளை வெளியிட அவரின் முகமும் அந்தளவிற்கு வாடியிருக்க நிஜமாகவே உடல்நிலை தான் சரியில்லை என்று நம்பும்படி இருந்தது.
சட்டென செண்பகத்தின் கழுத்து, நெற்றியில் கைவைத்து பார்த்தவள் அவரை நன்றாக ஓய்வெடுக்க சொல்லி, விரைவில் சரியாகிவிடும் என்றும் சொல்ல அந்த அன்பில் நெக்குருகி போனார்.
கண்களில் நிறைந்துவிட்ட நீர் உடைப்பெடுக்க பொங்கி நிற்க அதனை துடைத்தவள், தன்னை குறித்துதான் இந்த வருத்தமோ என்று தன்னை குனிந்து காண்பித்து நன்றாக இருப்பதாக சொல்ல அழுகையே வந்துவிட்டது செண்பகத்திற்கு.
விசாலாட்சியை தட்டி அழைத்து ‘நீங்க சொல்லுங்க’ என்று செண்பகத்திடம் சொல்ல சொல்லியவள் தன் நெற்றி தையலை காண்பித்தாள்.
மூன்று தையல்கள் போடப்பட்டிருந்தது நெற்றி காயத்தில். அதனை காண்பித்து ‘சீக்கிரம் ஆறிடும்’ என்றும் கூறி புன்னகைக்க அனைவருக்குமே அவ்விடத்தில் நெஞ்சம் கசிந்தது.
“அதெல்லாம் அவங்களுக்கு புரியும். நான் சொல்லிக்கறேன், நீ வா…” என வித்யாவை விசாலாட்சி கைபிடித்து அழைக்க, தலையசைத்தவள் செண்பகத்திடம் திரும்பினாள்.
அவரின் கண்ணீரை துடைத்துவிட்டு, ‘அழக்கூடாது’ என்றும் சொல்லிவிட்டு திரும்ப பார்க்க,
“நில்லுடி…” என்ற செண்பகம், அவள் நின்றதும் நெற்றி காயத்தையும், அவள் கன்னத்தையும் தடவி,
“உடம்பை பார்த்துக்கோ. சரியா?…” என்று தொண்டையடைக்க பேச, சரி என்று தலையசைத்துவிட்டு விசாலாட்சியுடன் தன் வீட்டு வாசலுக்கு செல்ல துவண்டுபோய் அமர்ந்துவிட்டார் செண்பகம்.
அவரால் வித்யாவை தவிர்க்கவும், வெறுக்கவும் முடியவில்லை. அவள் மீது எவ்வித துவேஷமும் இல்லை.
மகனின் விருப்பத்தை கேட்டிருந்தவருக்கு எவ்விதத்திலும் அதற்கு அவளை காரணியாய் நிறுத்த முடியவில்லை.
அதுவும் ரிதுபர்ணா மருத்துவமனையில் வைத்து பேசியவையும், முருகேஸ்வரியின் கதறலும் அந்தளவிற்கு பாதித்திருந்தது.
அவர்களின் வளர்ச்சியை எல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருந்தார்.
அதற்குமேலும் அவரால் அவர்கள் மீது பழி சொல்லி பேச முடியுமா? நிச்சயம் முடியவில்லை.
வித்யாவிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றப்பட்டு வீட்டினுள் அழைத்து சென்றனர்.
அனைவருமே அங்கிருந்தே அவ்வப்போது செண்பகத்தை திரும்பி பார்க்கத்தான் செய்தனர்.
வா என்று அழைக்கவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. ரிதுபர்ணாவிற்கு தான் செண்பகத்தை எதிர்கொள்ள அச்சமாக இருந்தது.
எதுவும் பேசிவிட்டால் என்ன செய்வதென்றே அவரை தவிர்த்து வந்தாள் அவள். முருகேஸ்வரி அதற்குமேல் நடுங்கிக்கொண்டிருந்தார்.
இதற்குமேலும் தாங்கள் இங்கிருப்பது சரிவருமா என்ற எண்ணம் நொடிக்கொருதரம் அவரை அழுத்தத்திற்குள்ளாக்கியது.
ஆத்மாவும், அண்ணாமலையும் முடிவாய் சொல்லிவிட்டனர் எங்கும் செல்ல கூடாதென்று.
“போறேன்னா என்ன சொல்லி கூட்டிட்டு போவம்மா அந்த புள்ளையை? நடந்தது எதுவும் அதுக்கு தெரியாது. செண்பகமும் எதுவும் பேசலை. அப்பறம் என்ன? நிம்மதியா இருக்கற பிள்ளைட்ட இதை சொல்லி வேதனையில தள்ளிடாத…” என்று அண்ணாமலையும்,
“டாக்டர் வித்யாவை கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க அத்தை. திரும்ப எதையாச்சும் நினைச்சு அவ உடம்புக்கு எதுவும்ன்னா என்ன பண்ணுவீங்க? இப்போதைக்கு இருங்க. அப்பறமா யோசிப்போம்…” என்று சொல்லிவிட்டான் ஆத்மா.
அவர்கள் இருவரும் ரிதுபர்ணாவையும் வாய்திறக்க விடவில்லை. அவளுமே சொல்லி பார்த்திருந்தாள் ஆத்மாவிடம். அவன் கேட்டான் இல்லை.
இதோ வித்யா வீட்டிற்குள் வந்து இத்தனை நேரமாகிவிட்டது. யாரின் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை.
வித்யாவிற்கு அது தன் உடல்நிலை குறித்தோ என்று தான் தோன்றியது. அதுவும் சபர்மதி அத்தனை வருத்தம் தெரிவித்திருந்தாள் பரத்தின் செய்கையால்.
அதையுமே ‘இது ஒரு விஷயமா? அண்ணா பாவம். வேலை அதிகம். நீ சண்டை போடாதே’ என சபர்மதியை தான் கேட்டுக்கொண்டாள் வித்யா.
“அந்த பொண்ணு மனசு யாருக்கும் வராது. நீங்க வேணும்ன்னு செஞ்சீங்களோ இல்லை, வேலைன்னு செஞ்சீங்களோ? ஆனா அவ என்னைக்கும் போல தான் இருக்கா. நீங்க உங்களோட இந்த குணத்தை மாத்த பாருங்க…” என்றுவிட்டாள் கணவனிடம்.
எப்போதும் சத்தம்போட்டு அவளை அடக்க நினைக்கும் பரத் இப்போது அதற்கு எந்தவிதத்திலும் எதிர்வினையாற்றவில்லை.
விசாலாட்சி, ஏழுமலை இருவரும் அவனிடம் எதுவுமே கேட்டுக்கொள்ளாததே அவனை குற்றவுணர்வில் ஆழ்த்திவிட்டது.
சண்டை போட்டு, சத்தம் போட்டிருந்தால் கூட இப்படி குன்றி போயிருப்பானோ என்னவோ?
சாதாரணமாய் பேசி எப்போதும் போலிருந்தாலும் அவர்களிடம் புன்னகையும், வாஞ்சையும் சுத்தமாய் இல்லை.
கடமைக்கென்று பிள்ளையிடம் உரையாடுவதை போலவே தான் அவர்கள் நடந்துகொண்டனர்.
வித்யாவை பெரிதாய் எண்ணவில்லை தான். சமமாய் இல்லாமல் கீழாக நினைத்தான் தான். ஆனால் வேண்டுமென்று அவளை உடலளவில் இப்படி வருத்த நினைத்ததில்லை.
அண்ணாமலைக்கு பயந்து மருத்துவமனைக்கும் செல்லவில்லை அவன். எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாலும் அவருக்கும் அவன் மீது கட்டுக்கடங்காத கோபம் என்பதை உணர்ந்துகொண்டான்.
“வித்யாவுக்கு பதிலா வேற ஆளை அப்பாயின்ட் பண்ணிட்டேன். உனக்கு இனிமே அவங்க இருப்பாங்க….” என்று கம்பெனியிலும் மாற்றம் செய்துவிட்டார் அண்ணாமலை.
இளவரசு மனம் கேளாமல் அத்தனை பேசிவிட்டார் அவனை. தங்கை மகன் என்பதானால் அவரால் ஒரு அளவுக்கு மேல் சொல்லமுடியவில்லை.
இப்படியாக பரத்தை யாருமே அங்கே வார்த்தைகளால் கடியாமல், செயலால் கடிந்தனர்.
இப்போதும் வித்யா வீடு வரும் விஷயம் சபர்மதியிடம் விசாலாட்சி சொல்லிக்கொண்டிருக்க மனைவியிடம் கேட்டிருந்தான்.
“இப்ப எப்படி இருக்காளாம்? எப்போ கூட்டிட்டு வரீங்க?…” என்று கேட்க,
“நீங்க இன்னும் கிளம்பலையா? அப்பறம் என்னை பேசுவீங்க என்னால லேட்ன்னு…” என்றுவிட்டு வெளியேறிவிட்டாள் சபர்மதி.
நொந்துகொண்டு தான் கம்பெனிக்கு அவன் கிளம்பி சென்றது. அண்ணாமலையும் வீட்டில் இல்லை.
இளவரசு உடன் வருகிறேன் என்றதற்கு ஆத்மா மறுத்துவிட்டான் வேண்டாம் என்று.
“சரி வந்தாவது பார்த்துட்டு போகலாமா? இல்லை அதுக்கும் தடை போடுவியா நீ?…” என்றவரை நிறுத்தமுடியுமா?
மருத்துவமனைக்கு வந்து வித்யாவிடம் பேசியிருந்துவிட்டு அங்கிருந்தே கம்பெனிக்கு சென்றுவிட்டார் இளவரசு.
இப்படியாக ஒவ்வொருவரின் எண்ணத்திலும் வித்யா ஒவ்வொருவிதமாய் வலம் வந்துகொண்டிருக்க அவளை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க மகளிடம் பேசிவிட்டு முருகேஸ்வரியை அழைத்தான் ஆத்மா.
“நான் கிளம்பறேன் த்தை. வந்து நாளாச்சு. அடுத்தவாரம் ரிதுவை கூப்பிட்டுக்கறேன்…” என்றான்.
முருகேஸ்வரி ரிதுபர்ணாவை திரும்பி பார்க்க அவள் வித்யாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க எதுக்கும் வருத்தப்படவேண்டாம். எல்லா விஷயத்தையும் காலம் தீர்மானிக்கும். மனுஷங்க நாம நினைக்கிறதெல்லாம் நடந்திருமா என்ன? என்ன நடக்கனுமோ அது நடக்கும். குழப்பிக்காம தைரியமா இருங்க….” என்றவன்,
“வித்யாவுக்கு இந்த காயமெல்லாம் சரியாகட்டும். அப்பறமா சென்னைக்கு வந்து கொஞ்சநாள் இருங்க…” என்று சொல்ல,
“அவனை இன்னுமா உங்களுக்கு புரியலை?…” என சற்றே வருத்தத்துடனும் கேட்டான் ஆத்மா.
“அப்படி இல்லைங்க. அந்த தம்பி மேல எந்த குறையையும் சொல்லிட முடியுங்களா? ஆனா வேணாம். முடிஞ்சமட்டும் என் பிள்ளையை அவரு கண்ணுல படாம வச்சுக்கறேன். அவரும் என்னவோ ஒரு வேகத்துல, இதுவுங்கூட எங்களுக்கு யாருமில்லன்ற பரிதாபத்துல தோணிருக்கும்…” என்றவர்,
“அவரு அம்மா எம்புட்டு கனவு கண்டுட்டு இருக்காங்க. அவங்க பேசி புரியவைக்கட்டும். நாங்களும் ஒதுங்கி இருந்தோமின்னா இது சரிவராதுன்னு அந்த தம்பியும் விலகிரும் பாருங்க…” என்றார் அப்பாவியாய் முருகேஸ்வரி.
“அப்படியா?…” என்ற ஆத்மாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
அவருக்கு விளக்கி புரியவைக்கமுடியும் என்ற நம்பிக்கை அவனிடம் சுத்தமாகவே இல்லை.
“சரி நான் வீட்டுக்கு போய் எல்லாம் எடுத்துட்டு வரேன் த்தை. பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு, தோளில் சாய்ந்திருந்த மகளிடம்,