சார்ஜர் மட்டும் இன்னும் வைக்கப்படாமல் இருக்க அதனையும் உருவி பேக்கில் வைத்து பூட்ட ஆத்மாவும் வந்துவிட்டான்.
“இவ்வளோ நேரமாடி இங்க வர?…” என அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டவன் முத்தங்கள் ரிதுபர்ணாவின் கழுத்தையும், காதையும் நிறைத்தது.
ஒன்றும் பேசாமல் அவன் புறம் திரும்பியவளின் இறுகிய அணைப்பில் சிக்குண்டவன் முகமும் மென்மையை பூசிக்கொள்ள,
“நான் தானே இருக்க சொல்றேன். எப்படியும் உனக்கு இங்க விட்டுட்டு வர மனசிருக்காது. அதான் இருன்னு சொன்னேன்…”
“ஹ்ம்ம், புரியுது…” என்றாள் முணங்கலுடன்.
“என்ன வாய்ஸ் உள்ள போயிருச்சு?…” என்று சிரித்த ஆத்மா,
“என்ன புரியுதாம்?…” என கேட்டான்.
“ப்ளீஸ், திரும்ப சொல்றேன்னு நினைக்காதீங்க கண்ணத்தான், நாம வித்யாவை கூட்டிட்டு போவோமே. முரளியை இங்க வர சொல்லிருங்க. யாரையும் பிரிச்ச பாவம் நமக்கு வேண்டாம். செண்பகத்தை ஒடிஞ்சு போய் உக்கார்ந்திருக்காங்க. பார்க்கவே கஷ்டமா இருக்கு…” என்று கூற அதற்கும் புன்னகைத்தான் ஆத்மா.
“என்ன? என்ன இது சிரிப்பு? நான் சொல்றது புரியலையா? ப்ளீஸ், எனக்கும் இங்க இவங்களை விட்டுட்டு வர மனசே இருக்காது…” என்று கெஞ்சுதலாய் சொல்ல,
“ம்ஹூம். அது தப்பாகிடும். இங்க தான் அவங்க இருக்கனும்…” என்று உறுதியாய் மறுத்த ஆத்மா,
“ஏற்கனவே உன் சித்திக்கு இங்க எந்த உரிமையும் இல்லை, அவங்களால தான் எப்பவும் பிரச்சனைன்னு ஒரு காம்ப்ளெக்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும். இப்பவும் அது உண்மைன்ற மாதிரி நீ செய்ய சொல்றியே? நல்லாவாடி இருக்கு?…” என்றான் ஆதங்கத்துடன்.
ரிதுபர்ணாவிற்கு மனமெல்லாம் பாரமாகிவிட்டது. அவரின் ரத்தத்தில் ஊறிவிட்டதை போல தான் அந்த வார்த்தைகளும், எண்ணங்களும்.
நிச்சயம் முருகேஸ்வரியை, அவரின் நினைப்பை மாற்றவே முடியாது என்பதும் தெரிந்த விஷயம்.
இப்போது கணவனும் அதனை குறித்து சொல்ல இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள் ரிதுபர்ணா.
“ஒருவிஷயம் தெளிவா புரிஞ்சுக்கோ ரிது, இந்த விஷயத்துல எல்லாருமே அவங்கவங்க பக்கத்துல நியாயவாதிங்க தான். யார் மேலையும் தப்பு சொல்லமுடியாது. அதேநேரம் இதுக்கெல்லாம் தாண்டிய ஒரு நிஜம் இருக்கு பாரு. அதை எல்லாரும் ஏத்துக்கற சூழ்நிலையும் வரும். அதுவரை அவசரப்படக்கூடாது…”
“அப்போ முரளியை நீங்க அக்ஸப்ட் பண்ண சொல்றீங்களா?…” என்று விழிகள் சிவக்க கேட்க,
“அதுல தப்பெதுவும் எனக்கு தெரியலை. உரிமையில்லாம அவன் வித்யாக்கிட்ட நடந்துக்கிட்டதை நான் நியாயப்படுத்தமாட்டேன். அத்தனை வருஷ காதல், அவன் கண்முன்ன வித்யாவை பார்க்கும்போது ஒரு எமோஷன்ல அப்படி செஞ்சிட்டான். கண்டிப்பா தப்பு தான். அதுக்காக அவன் விருப்பத்தை நான் தப்பு சொல்லவேமாட்டேன்…” என்றவனின் முழு ஆதரவும் முரளிக்கு என்பதை மனைவிக்கு தெளிவாகிவிட்டான் ஆத்மா.
“எப்படி இப்படி பேச முடியுது உங்களால? எந்த நம்பிக்கையில இப்படி சொல்றீங்க?…” என்ற ரிதுபர்ணா,
“நம்ம கல்யாணத்துக்கப்பறம் தான் வித்யாவையும், சித்தியையும் ஓரளவு அவங்க நெருங்க ஆரம்பிச்சாங்க. இத்தனை வருஷமாச்சு ஒருநாளாச்சும் செண்பகம் அத்தை வித்யாவை அவங்க வீட்டுக்குள்ள கூப்பிட்டிருப்பாங்களா? இல்லை சித்தியை தான் கூப்பிட்டிருப்பாங்களா?…” என்றவளின் கேள்விக்கு பதிலின்றி மௌனியானான் ஆத்மா.
“அவ்வளோ பழக்கம், வித்யா, சித்தி மேல அத்தனை அன்பு இருந்தும் இன்னும் முழுசா அவங்களை சொந்தமா நினைக்க முடியலைன்ற காரணம் தானே வீட்டுக்கு கூப்பிடாம தள்ளி வைக்க செஞ்சது? அப்படி இருக்கறவங்க இதுக்கு சம்மதிப்பாங்கன்னு நினைக்கறீங்களா?…” என்றாள் ஆற்றாமையுடன்.
“சரி நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான். செண்பகம் சித்தியே சரின்னு சொன்னா உனக்கு சம்மதமா?…” என்று ஆத்மா கேட்க ரிதுபர்ணா அமைதியாகிவிட்டாள்.
“செண்பகம் அத்தையோட எதிர்பார்ப்பும், ஆசையும் நல்லாவே தெரியும். அதுல வித்யா எங்கயும் வரமாட்டா. அப்படியிருக்கும்போது இதுக்கு சாத்தியமில்லை. முருகேஸ்வரி சித்தியை எப்படி அவங்க எண்ணங்கள்ல இருந்து மாத்தமுடியாதோ, அதுமாதிரி தான் செண்பகம் அத்தையும். மாத்தமுடியாது…” என்று சொல்லியவள் அவனின் முகம் பார்க்க,
“மாற்றம் ஒன்றே மாறாதது ரிது. எல்லாத்தையும் மாத்தற சக்தி எதிர்பார்ப்பில்லாத அன்புக்கு இருக்கு. அளவில்லாத காதலுக்கும் இருக்கு. மாறும்ன்னு நான் நம்பறேன்…”
“பார்க்கலாம். ஆனா எனக்கு வித்யாவோட கல்யாணம் எல்லாரோட ஆசிர்வாதத்தோட, சந்தோஷத்தோட நடக்கனும். நம்ம கல்யாணம் மாதிரி இல்லாம, யாரோட கண்ணீர்லையும் நடக்காம முழுக்க முழுக்க நிறைஞ்ச மனசோட நடக்கனும்…” என்று ஆணித்தரமாய் சொல்ல,
“இது போதும்டி என் அத்தை மகளே. இப்ப நான் கிளம்பறேன். கூலா இரு. எதையும் நினைச்சு வித்யாக்கிட்ட முகத்துல கூட காமிச்சுக்காத. அப்பறம் என் பொண்ணே உன்னை கேள்வியால துளைச்சிருவா பார்த்துக்கோ….” என்றவன்,
“ஹ்ம்ம், நான் பேசறேன்…” என்று சொல்ல அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“வா…” என்று கீழே அழைத்து வந்தான்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் செண்பகத்தையும் பார்த்து பேசிவிட்டே புறப்பட்டான்.
அவர் அவனுக்குமே பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் அசைத்துக்கொண்டார்.
அங்கிருந்து கம்பெனிக்கு செல்ல அண்ணாமலையோடு பேசிக்கொண்டிருந்தான் முரளி. அவர்களுடன் இளவரசுவும் இருந்தார்.
“என்னப்பா கிளம்பிட்டியா?…” என்று இளவரசு கேட்க,
“ஆமா சித்தப்பா….” என்றவன்,
“ரெடியா முரளி?…” என்றான் அவனிடம்.
“போலாம் ண்ணா. ரெடி தான்…” என அவனும் எழுந்துகொள்ள,
“பார்த்துக்கோ கண்ணா….” என்ற இளவரசு,
“இப்ப எதுக்கு இவன் போகனும்ன்னு நிக்கறான்? இங்கயே இருக்கலாமே? நாம் பேசறேன் செண்பகத்துக்கிட்ட. கொஞ்சநாள் போகட்டும், பொறுமையா பேசுவோம்…” என்றார்.
“அந்த கொஞ்சநாள் ஆறப்போடற விஷயத்தை தான் முரளியும் செய்யறான் சித்தப்பா. அதுமட்டுமில்லாம இது சித்தி மட்டும் சம்மதிச்சா நடக்க கூடியதா? வித்யாவுக்கு என்ன எண்ணம்ன்னு தெரியனுமே. இதெல்லாம் இப்படி நடந்ததுன்னு சொல்லி அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறது மாதிரியாகிடும்…” என்ற ஆத்மா,
“முரளிக்கு அதுல உடன்பாடில்லை. முதல்ல இந்த விஷயத்தை எல்லாருமே ஜீரணிக்கனும். அதுக்கப்பறம் அதை ஏத்துக்கற மனப்பக்குவம் வரனும். யோசிக்க அவகாசம் வேணும். இதுக்கெல்லாம் மேல வித்யாக்கிட்ட சொல்ல அவளோட மனசும், உடல்நிலையும் ஆரோக்கியமா இருக்கனும்…” என்றான்.
“அவன் என்ன காட்டுக்கா போறான். இந்தா இருக்கற ஊருக்கு. அதுவும் அவன் அண்ணன் வீட்டுக்கு தானே போறான்? இந்த பாடுபடற நீ? அதான் கண்ணா இருக்கானே? அப்பறம் என்ன?…” என்று அதட்டிய அண்ணாமலை,
“நீங்க கிளம்புங்க. இங்க எல்லாரையும் நாங்க பார்த்துக்கறோம்…” என்று அனுப்பிவைத்தார்.
“வரேன் பெரிப்பா…” என்று முரளி சொல்ல,
“தைரியமா போடா. எல்லாத்தையும் செய்ய, சொல்ல மட்டும் முடிஞ்சது. காத்திருக்கவும் பொறுமை வேணும். போ, போ. பார்த்துப்போம்…”என்று அவனின் தோளில் தட்டிக்கொடுக்க இளவரசு மகனை அணைத்துக்கொண்டார்.
“உன்னை பிரிஞ்சு உங்கம்மா எப்படி இருப்பான்னு தெரியலை முரளி…” என்றவருக்கு மனது கலங்கியது.
‘எனக்கு பிடிக்கவில்லை, பேசினேன். ஆமாம்.’ என்று எப்படி சொல்லிவிட முடியும்?
எச்சிலை விழுங்கியபடி பரத் நிற்க, பல்லை கடித்த ஆத்மா ஒற்றை விரலில் அவனை எச்சரித்தவன்,
“பேசிட்டு வா முரளி. நான் காரை எடுக்கறேன்…” என்று நகர்ந்துவிட்டான்.
“நானும் வரேன் ண்ணா…” என்ற முரளி,
“இப்ப உன்கிட்ட பேசற மனநிலையில நான் இல்லை. கிளம்பறேன். திரும்ப நீ வித்யாவை பேசறதா தெரிஞ்சது…” என்றவன்,
“இப்போ உனக்கு தெரிஞ்சிருக்குமே அவ எனக்கு யாருன்னு…” என்றும் சொல்லிவிட்டு கிளம்ப பரத் அசையாமல் நின்றுவிட்டான்.
காரை கிளப்பியதுமே றிதுபர்ணாவிற்கு அழைத்து தகவலை சொல்லிவிட்டவன் பூர்விதாவிடமும் பேச மௌனமாய் அதனை கேட்டுக்கொண்டே வந்தான் முரளி.
சிலநிமிடங்கள் பேச்சுக்களின் பிறகு அழைப்பை துண்டித்துவிட்டு தம்பியின் பக்கம் திரும்பினான்.
“சித்தி என்ன சொல்றாங்க முரளி? கிளம்பும்போது வேண்டாம்ன்னு எதுவும் சொல்லலையா?…” என்று கேட்க வருத்தமாய் ஒரு புன்னகை முரளியின் முகத்தில்.
“ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுல இருந்தே என்னை அவாய்ட் பன்றாங்க ண்ணா. நானா பேச போனாலும் பேச விரும்பலை. ஆனாலும் என்ன செய்யறேன் எல்லாம் பார்த்துட்டு தான் இருக்காங்க. பேசத்தான் மனசில்லை…” என்றவன்,
“ப்ச், விடு. அவங்களும் இன்னும் ஷாக்ல இருப்பாங்க…” ஆத்மா கூற,
“ஷாக் இருக்கும் தான். ஆனா இப்ப என்னை அவாய்ட் பன்றது எங்க நான் பேசி, வித்யாவை கேளுங்க, எனக்கு குடுக்க சொல்லுங்கன்னு கேட்டுடுவேனோன்னு தான். அந்தளவுக்கா எனக்கு என் அம்மாவை புரியாது?…” என்றவன்,
“அவங்களுக்கும் வித்யாவை ரொம்ப புடிக்கும். ஆனா அது வித்யாவா மட்டுமே. என்னோட மனைவியா எல்லாம் அவங்க நினைச்சும் பார்க்க விரும்பலை…” என்றான் முகத்தை அழுத்தமாய் துடைத்தபடி.