.
வீட்டிற்குள் நுழைந்த விசாகனை
அய்யா ராசா என்ற தில்லையின் அழைப்பில் அறைக்கு செல்ல இருந்தவனின் கால்கள் தடைபட்டு நின்றிருந்தன. என்ன என்பது போல் பார்வையை அவர் புறம் திருப்பினான்.
“எம்புட்ட நேரமா உனக்கு போனை போடுறேன் எடுக்காம இந்த கிழவிய பதற வைஞ்சிட்டியே அய்யா” தில்லை ஆற்றாமையால் மறுகிட,
“தோப்பு வீட்டுக்குத்தான் அப்பத்தா போனேன்… போனதும் கொஞ்ச கணக்கு பாத்துட்டு இருந்ததுல நேரம் போனது தெரியல, அப்படியே தூங்கிட்டேன்”. சமாளிப்பாய் பதிலை கூறினாலும் அவரை காத்திருக்க வைத்த செயலுக்காக வருத்தமாகவே இருந்தது விசாகனின் முகம்.
பேரனின் முகத்தில் வருத்தத்தை பார்த்த தில்லை, “இவ ஒரு கூர் வாறு இல்லதா கிழவி, இப்பத்தான் ராசவே வீட்டுக்கு வந்து இருக்கு… என்னன்னோமோ பேசிட்டேன். நேரம் இருந்தா நீயே போன் பண்ணி இருப்ப, விடு யா இப்படித்தான் வயசானா மூளை மங்கி போய்டும்”. பேரனை சமாதானம் செய்ய பேசி “ஏலேய் முத்து நல்ல வெட கோழியா புடிச்சி போடு குழம்பு வைக்கனும்” என்றபடி கொள்ளை புறத்தை பார்த்து குரலை உயர்த்தியவர்.
“நீ போ ராசா நல்லா அலுப்பு தீர குளி எல்ல ஜோலியும் அப்புறம் பாக்கலாம்… இந்த சுந்தரம் பையன் எங்க போனான்… விடிஞ்சி இவ்வளவு நேரம் ஆகுது ஆளையே காணும்…” என்றபடி வாசல் புறம் போனார் தில்லை.
தனது அறைக்குள் நுழைந்து, சட்டையைக் கழட்டியவனின் அலைபேசி இசையை எழுப்பி தன் இருப்பை உணர்த்தியதும் அதை எடுத்து பார்க்க அது தேவாவின் எண்கள் என்று தெரிந்தது.