அம்மா… அம்மா” எங்க இருக்கிங்க…?” அமுதாவின் குரலில் கொள்ளையில் இருந்த அலமேலு “இதோ வறேன் இருடி” என ஆட்களுக்கு வேலையை செய்ய சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
“என்னடி அம்மாவை ஏலம் போட்டுக்கிட்டு வர?” என்ன விஷயம்…?” என கையை முந்தானையால் துடைத்துக் கொண்டு வந்தார்.
“இந்தம்மா” என அவர் கரங்களில் தன் சம்பளத்தை கொடுத்தவள் அவர் கால்களில் விழவும் நெஞ்சம் நிறைந்து போன அலமேலு,
“கட்டின புருஷன் கிட்ட எதிர்பார்த்து இருந்ததை என் பொண்ணு இன்னைக்கு என் கையில கொடுத்து இருக்கா… என் ராஜாத்தி நீ எப்பவும் நல்லா இருக்கனும்”. கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் “இந்தாடா கன்னு இதை எடுத்துட்டு போய் சாமிக்கிட்ட வைச்சிட்டு முகம் கழுவிக்கிட்டு வந்து விளக்கேத்து… போட கன்னு… நானு கொள்ளையில இருக்கவங்களுக்கு காபிதண்ணிய போட்டாறேன்” என அடுக்களைக்குள் சென்றார்.
அதுவரை திண்ணையில் அமர்ந்து இருந்த ரத்தினத்தின் கை அரிப்பெடுத்தது விசாகனும் பணத்தை தரமாட்டேன் என்று கூறி விட மனைவியும் வெளியே துரத்தி விட்டு இருக்க கால் காசை பார்க்க முடியாத வெறுப்பில் வந்து அமர்ந்தவனுக்கு மனைவியும் மகளும் பேசும் உரையாடல் காதில் விழ அடித்தது ஜாக்பார்ட் என்று அவன் உள்ளம் துள்ள, மெதுவாய் பூஜை அறை சென்று பணத்தை எடுத்துக்கொண்டு போக கதவில் இருந்த மணியின் சத்தம் ஆள் இருப்பதை அலமேலுவிற்கு உணர்த்தி விட்டதில், சமையலறையில் இருந்து எட்டி பார்த்தவருக்கு சட்டென அனைத்தும் விளங்கிட்டது.
“யோவ் வை யா… அது என் பொண்ணு சம்பாரிச்சது யா” என அவனுடன் சண்டையிட்டார்.
“நான் இல்லாம பொண்ணு எங்க இருந்து வந்தா டி? அவ எனக்கும் பொண்ணுதான்… அவ சம்பாரிச்சதுல எனக்கும் உரிமை இருக்கு.. சரிதான் போடி மனுசனோட நிலமை புரியாம, ஆறு மணியானா தன்னால உடம்பு நடுங்குது டி”ரத்தினம் வம்படியாய் பணத்தை பிடுங்க,
“நீ எதுக்குடா வாழற செத்து தொலை” அவேசமாக கூறிய அலமேலுவை அடித்து கீழே தள்ளிய ரத்தினம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
குளியலறையில் இருந்து வெளியே வந்த அமுதா அன்னை பேச்சு மூச்சி இல்லாமல் இருப்பதை பார்த்து பதறியபடியே “அம்மா அம்மா” என அழைக்க பின் மண்டையில் இருந்து ரத்தம் வந்தது… உடனே அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தேனி பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அலமேலு சுவாசம் கொள்ள சிரமப்பட ஆக்சிஜன் மாஸ்குடன் படுத்து இருந்தார்.
சுந்தரன் மூலம் விஷயம் அறிந்த விசாகனும் தில்லையும் வர ஒரு வித இறுக்கத்துடனே அறைவாசலில் அமர்ந்து இருந்தவள் தில்லையை பார்த்ததும் “அம்மத்தா” என அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.
அவருக்கும் அவளை கண்டு மனம் கலங்கிதான் போனது, படுக்கையில் இருந்த மகளை கணணாடி தடுப்பின் வழியே எட்டி பார்த்தவரின் கண்களிலும் நீர் வெளியேறியது. அறுதலாய் அமுதாவின் கையை பற்றியபடி சாய்ந்து இருந்தவர் மனதும் மகளை கண்டு தவித்துப் போனது
சிறிது நேரத்திற்கெல்லாம் பரபரப்பாய் டாக்டர்கள் உள்ளே நுழைய அரைமணி நேர காத்திருப்பிற்கு பின் வெளியே வந்த மருத்துவர் “சாரி அவங்கள காப்பத்த முடியல, பின் மண்டையில் அடி பட்டதாலும் அதிக ரத்த போக்கு மற்றும் உயர் ரத்த அழுத்ததாலும் எங்க சிகிச்சை அவங்களுக்கு பலன் அளிக்கல” என்றதும் மயக்கத்தில் சரிய இருந்த அமுதாவை தாங்கிய தில்லை தன் தோள் மீது சாய்த்துக்கொண்டார்.
விசாகன் மற்றும் சுந்தரனும் சூழ்நிலையை கணம் உணர்ந்து நாமும் இப்படியே இருந்தால் எப்படி என அறிந்தவர்கள் அடுத்து அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் ஈடுபட்டனர்.
உயிரோடு இருந்தவரை கஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே அனுபவித்த ஜீவன், ஒய்வின்றி மகளுக்காவே வாழ்ந்த ஒரு தாய், வாழ் நாள் முழுக்க செய்த தவறுக்காக சாகும் தருவாயில் கூட தாய் தந்தையிடம் மகளாக, மானசீகமாக மன்னிப்பை வேண்டிய அலமேலு, உயிரற்ற உடலாய் நடு வீட்டில் கிடத்தி இருக்க, வாய் விட்டு அழுதபடி அன்னையின் அருகிலேயே இருந்தாள் அமுதா.
கண்கள் இரண்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது… இதுவரை ஆதரவாய் தாங்கிய தாய் இன்று இல்லை என்ற உண்மையை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவள் அழுதழுது சோர்ந்து போய் இருந்தாள்.
தில்லையும் அவளுடன் தான் இருந்தார். மகள் உயிருடன் இருந்தவரை அவர் செய்த தப்பு பெரிதாய் தெரிய, இப்போது மகளே இல்லாமல் போனதும் அது எங்கோ ஒரு மூளையில் அடங்கிவிட்டது போல, மகளின் முகத்தை தொட்டு தொட்டு பார்த்து “உன்னை பாதியில எமனுக்கு கொடுக்கவா இந்த வயித்துல வந்து பிறந்த” என வாயை பொத்தி அழுதார்.
யார் அழுது என்ன புண்ணியம் எவனை நம்பி வந்தாளோ அவன் கையாலையே தன் இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டார், என்பது யாருக்கும் தெரியவில்லை… ஏன் வீட்டில் இருந்த மகளுக்கு கூட தெரியவில்லையே ஏதோ தாய் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இருக்கிறது என்று தானே இதுவரை நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.
தனக்காகவே வாழ்ந்த தாயின் முகத்தை பார்க்க பார்க்க அமுதாவிற்கு அழுகை கூடிக்கொண்டே போனது… படுத்து இருக்கும் தாயை எழுப்புவது போல “அம்மா வா மா… எழுந்துரு மா… என் கூட பேசுமா” என அனத்தியபடியே தாயின் கைகளை பிடித்துக்கொண்டு குழந்தை போல் அழும் அமுதாவை காணக்காண நெஞ்சம் கணத்து போனது சுந்தரனுக்கு,
மனைவி இறந்தது கூட தெரியாமல் குடித்துக் கொண்டு தள்ளாடியபடியே வந்த தகப்பனை கண்டவளுக்கு இதயமே கசந்து போனது …
“ஏய் யாரு நீ? எதுக்கு என் வீட்டு முன்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கு? அட கையில மாலை கூட இருக்கு? ஒரு வேலை என்னை இந்த தெரு கவுன்சிலரா தேர்ந்தெடுத்து மரியாதை பண்ண வந்து இருக்காங்களோ!! என்னடா இது நமக்கு தெரியாமலையே நடக்குது?” உளறியபடி ஆட்களை விளக்கி வீட்டுக்குள் வந்த ரத்தினம் கண்டது கீழே கழுத்தில் மாலையுடன் படுத்திருந்த அலமேலுவை தான்.
அந்த முழு குடியிலும் சற்று அதிர்ந்து தான் போனான் ரத்தினம். இருந்தும் பணத்தை பறிக்க மனைவி தன்னிடத்தில் நாடகம் ஆடுகிறாள் என்று எண்ணம் கொண்டு ஏய் “என்னடி இது நடுகூடத்துல படுத்து இருக்க? என்னடி நாடகம் ஆடுறியா? இதுக்கெல்லாம் நான் ஏமாறுவேனா?” நா குளறி குளறி பேசிட கல்போல இறுகி நின்றிருந்த விசாகனுக்கு ரத்தினத்தை பார்த்தும்,
‘கட்டின பொண்டாட்டி செத்தது கூட தெரியாம குடிச்சிட்டு வந்து ரகளை செய்கிறானே’ என கோவம் கொண்டவன் “போயா வெளியே” கோவமாக ரத்தினத்தின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டதும்,
“டேய்… டேய் விசா… இருடா… என்ன இருந்தாலும் அந்த ஆளு தானடா எல்லாம் செய்யனும்” அவனை அடக்கிட “டேய் அந்த ஆளு” என கூற வந்த விசாகன் “பச் போதைய தெளியவைச்சி கூட்டிட்டு வாடா” சலிப்பாக கூறினான்.
சுந்தரன் அவரை இழுத்துக் கொண்டு கிணற்றடிக்கு சென்றவன் இரண்டு குடம் தண்ணீரை தூக்கி தலையில் ஊற்றி அவனின் போதையை தெளிவிக்க முயன்றான்.
“யோவ் உன் பொண்டாட்டி செத்து போய் இருக்காங்க… அதை சொல்லக்கூட உன்னை தேடி அலைய வேண்டி கிடக்கு, எங்கய்யா போய் தொலைஞ்ச… இதுல நாடகம் போடுறாங்கன்னு அவன் முன்னாடியே சொல்ற துணிச்சல் தாண்டி உனக்கு” அவன் திட்டியபடியே அடுத்த குடத்து தண்ணீரையும் அவன் மேல் ஊற்றினான்.
“என்ன சொல்ற… நீ பொய் சொல்ற…என் பொண்டாட்டி ஏன் சாகப்போறா?” என்றபடி சுந்தரனை விளக்கி விட்டு கூடத்திற்கு சென்ற ரத்தினம் “ஏய் என்னடி நடிக்கிறியா உன் பொண்ணு கொண்டாந்த பணத்தை கொண்டு போயிட்டேன்னு நாடகம் போடுறியா டி… அவ எனக்கும் தானே பொண்ணு… நான் இல்லாம பொறந்துட்டாளா டி… என் கூட சண்டை போட்டு பணத்தை வாங்க முடியலன்னு இந்த மாதிரி வேலைய பண்றியா” என கேட்கவும் சட்டென ரத்தினத்தை நோக்கிய அமுதாவுக்கும் அங்கு சூழ்ந்து உள்ளவர்களுக்கும் புரிந்து போனது அனைத்தும்
அதுவரை தாயின் முகத்தை பார்த்தே கரைந்து கொண்டு இருந்தவள், ஆத்திரம், ஆவேசம், அழுகை, என உணர்வுகளுடன் போராடியவள் வெறி பிடித்தவள் போல் எழுந்து ரத்தினத்தின் சட்டையை பிடித்தாள்.
” அப்போ… அப்போ… நீ… நீதான் என்ன அம்மாவை கொன்னு இருக்க…, அட பாவி என் அம்மாவையே கொன்னுட்டியே கொலைகாரா… உன் பணத்தாசைக்கும், குடி வெறிக்கும் என் உலகத்தையே அழிச்சிட்டியே… … உன்னாலதான் என் அம்மா செத்தாங்க… நீதான் என் அம்மாவை கொன்னுட்ட… நீ தான் என் அம்மாவை கொன்னுட்ட…” என ரத்தினத்தின் நெஞ்சில் குத்தியவள் அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தாள்.
முதலில் நிதானம் தவறி தடுமாறியவன் அமுதாவின் அடி உறைக்கவும் “ஏய்… விடு… என்னை அப்பனையே கை நீட்டுறியா” நா குளறி திமிறியபடி அவள் கையில் இருந்து தன் சட்டையை உருவிக்கொண்டு அடியில் இருந்து தப்பிக்க அமுதாவை கீழே தள்ளியதும்,
அவளை தாங்கிய விசாகன் என்ற கற்சிலைக்கு உயிர் வந்து, அடித்த ஒரு அடியில் சுருண்டு போய் கீழே விழுந்த, ரத்தினத்தின் உதடுகள் கிழிந்து உதிரம் கொட்டி தலைக்குள் மின்மினி பூச்சிக்கள் பறந்தது.
விசாகனின் அடியில் முழு போதையும் விலகி இருக்க தட்டு தடுமாறி கன்னத்தில் கை வைத்து எழுந்தவனை மீண்டும் அடிக்க கையை ஓங்க “ஏப்பா விசாக அந்த ஆளை அடிச்சா மட்டும் எல்லாம் மாறிடுமா?” கூட்டத்தில் இருந்த ஒரு நரைத்த தலை பேசியதும்
“அதுக்கு என் அத்தை சாவுக்கு காரணமான இந்த ஆளை உயிரோட விட சொல்றாங்களா? ” என்றான் ஆத்திரமாய்,
“எப்பா சும்மா விட சொல்லுவோமா என்ன இருந்தாலும் அவன் புருஷன் இல்லையா இந்த சம்பரதாயம் இருக்குல்ல” அவரே தொடர,
“என்னங்கய்யா உங்க சம்பிரதாயம் இந்தாளு சிதைக்கு தீ மூட்டினா என் அத்தை கட்ட வேகுன்னு நினைக்கிறிங்களா?” என்று கேள்வியை எழுப்பினான்.
அதுவரையில் அழுகையில் கரைந்தவள் “இல்ல இல்ல அந்த ஆளு எங்க அம்மாவுக்கு நல்ல புருஷனா இருந்ததும் இல்ல… எனக்கு நல்ல தகப்பனாவும் இல்ல… என் அம்மாவுக்கு அந்த ஆளு எதுவும் செய்ய கூடாது… அதை எங்க அம்மா ஆன்மாவும் ஏத்துக்காது” ஆவேசமாய் பேசியவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவ்வளவு வலியை உள்ளடக்கியிருந்தாள்.
“ஆத்தா இப்போ வேணா கோவத்துல பேசலாம்” என்றவரை தடுத்து நிறுத்திய இன்னொரு நரைத்த தலை “என்னப்பா இது நடுகூடத்துல சடலத்தை வைச்சிக்கிட்டு வாக்குவாதம்… எய்யா விசாக நீ போ பா அந்த ஆளை போலீஸ் ல ஒப்படை… அந்த புள்ள வாழும் போதுதான் நல்ல இல்ல… கடைசியா போகும் போதாவது நிம்மதியா போகட்டும்” என்றார்.
“அய்யோ என் பொண்ணை இப்படி படுக்க வைச்சிட்டானே மூதேவி அவன் கொள்ளையில போக அவன் கையில கட்டை முளைக்க” மகளை கட்டிக்கொண்டு அழுதார் தில்லை.
தாய் இருக்கும் நிலை உரைக்க அம்மா என்ற கூவலுடன் அன்னையை இறுக்க கட்டி அழுதவள் “என்னை தனியா விட்டுட்டியே அம்மா இந்த உலகத்துல… நான் எப்படிம்மா உன்னை விட்டுட்டு இருப்பேன்…” என கரைந்து போனவளை தாங்கிய தில்லை “நீ அழாத ராஜாத்தி உனக்கு நான் இருக்கே ஆத்தா அழுவாத தாயீ” ஆறுதலை உரைத்தார்.
விசாகன் அடியிலிருந்து ரத்தினத்தை காப்பற்றிய சுந்தரம் “நீ இரு விசா நான் கூட்டிட்டு போறேன் இந்த ஆளை” என்றவன் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று ஒப்படித்தான்.
அலமேலுவிற்கு செய்யவெண்டிய அனைத்து இறுதி சடங்கையும் விசாகனே செய்தான். அழுதழுது சோர்ந்து போய் மயங்கிய அமுதாவை தில்லை ஆதரவாய் அனைத்துக் கொண்டார்.
இதோ அதோவென பதினாறம் நாள் காரியத்தையும் முடித்ததும் பிடிவதமாக அமுதாவையும் அழுத்துக்கொண்டு பெரிய வீட்டிற்கு வந்துவிட்டார் தில்லை இருந்தும் எப்போதும் அவளில் ஒரு வெறுமையை உணர்ந்தாள் அமுதா.
“இதையே பாத்துட்டு இருங்க உங்க அருமை பொண்ணு ஒழுங்கா சாப்பிட்டு, தூங்கி, இரண்டு வாரம் ஆகுது…. போக, போக இன்னும் துரும்பா போயிடுவா போல இருக்கு” ஆதங்கமாக தொடங்கி அழுகையில் முடித்தார் மரகதம்.
“என்னடி சொல்ற?… அவளுக்கு என்ன செய்து உடம்புக்கு முடியலையா? ஏதாவது” பதறிய சௌந்தரலிங்கம் “இதை உடனே சொல்றதுக்கு என்ன இரண்டு வாரம் காத்துக்கிட்டு இருந்தியோ” மனைவியை திட்டியவர் உடனே மகளின் அறைக்கு சென்றார்.
அவளோ விசாகனிடம் போட்ட சண்டையின் தாக்குதலில் இருந்தாள். ஏற்கனவே அண்ணன் தந்தை செய்த சத்தியம் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்க விசாகனின் வார்த்தைகள் அதில் அமிலத்தை ஊற்றியது போன்ற உணர்வில் இருந்தாள். மெத்தையில் கண்களை மூடி படுத்து இருந்தவளின் கருவிழிகள் சுவற்றையே வெறித்து இருந்தன .
“தேவா” என தந்தையின் கரிசனமான அழைப்பில் எழுந்து அமர்ந்தவள், நிலத்தினை பார்த்தாள். இந்த இரு வாரங்கள் தந்தை தாய் என எவர் முகத்தையும் பார்க்க பிரியப்படாமல் இருந்தாள்..
தந்தையை கண்டு முகம் திருப்பியவளின் அருகில் அமர்ந்தவர் “என்ன தேவா சரியா சாப்பிடறது இல்லலயாம், உன் அம்மா கவலைபடுறா” என்றார் தலையை வருடியபடி
“எப்படி சொல்லுவா? அதான் நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து வீட்டு பொம்பளைங்கள கேட்காம சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிங்களே.. எல்லாம் அதால கூட இருக்கலாம் இல்லையா?” மரகதம் முகத்தை திருப்பிக் கொண்டார்.
“அட நீ வேற மரகதம் அதையேன் இப்போ நியாபக படுத்துற… வேற ஏதாவது கூட இருக்கலாம் இல்லையா?” மனைவியை அடக்கி பேசியவர் மகளிடம் “தேவாமா அப்பாவும், அண்ணனும் உனக்கு நல்லதை தான் பண்ணுவோம். உன் அத்தைகாரி தான் அப்படி… மத்தபடி அருண் ரொம்ப நல்ல பையன் மா உன் மேல நிறைய ஆசைய வைச்சி இருக்கான். அது மட்டும் இல்லாம நம்ம ஜெயசந்திரன் கிட்டயும் அருண் இதை பத்தி பேசின பிறகுதான் நான் முடிவையே சொன்னேன்”.
“என்ன தான் இருந்தாலும் உங்க தக்கச்சிக்கு நாக்கு விஷக்கொடுக்கு என் மக எப்படி தாங்குவா பூவாட்டும் பொண்ணே வளர்ந்து ஒரு பாழும் கிணத்துல தள்ளி விட முடிவு பண்ணிட்டிங்க” என்று மகளை அனைத்துக் கொண்டு அழுதிட,
“மரகதம்” என்று கர்ஜனையாக பேசியவர் “முதல்ல அழுவதை நிறுத்து நாராசமா இருக்கு… என்றவர், துண்டை உதறி தோளில் போட்டபடி வீட்டை விட்டு வெளியேறினார்.
“என்னம்மோ பண்ணுங்க நான் சொல்றதை யார் கேக்குறா ஏய் நீயாவது என் பேச்சை கேளுடி” என மகளை பார்த்துக் கூறியவர், புலம்பியபடியே சென்றார்.
கண்களை இறுக்க மூடி படுத்திருந்தவளின் கருவண்டு விழிகள் நிலையில்லாமல் அலைபாய்ந்திட, வீட்டில் இருக்க முடியாமல் மேகலாவை பார்க்க சென்றாள்.
“ஏய்… வா புள்ள… உள்ள வா புள்ள… மேகலா அவளை வீட்டிற்குள் அழைத்திட “கலா கோவில் போகலாம் வரியா டி…?” என்றாள் தேவா
“ஒரு நிமிஷம், இரு புள்ள….” என்றவள் “அம்மா நான் கோவில் போய்ட்டு வரேன்…” குரலை கொடுத்தவள் மறுமொழிக்கு கூட காத்திராமல் தேவாவுடன் கோவிலுக்கு சென்றாள்.
“சொல்லு புள்ள… என்ன உன் மனசை அரிக்குது…?”
“கலா….?”
“தெரியும் புள்ள… ஏதோ இருக்கு இல்லன்னா நீ இப்படி இருக்க மாட்ட சொல்லு புள்ள…”
அன்று தனக்கும் விசாகனுக்கும் நடந்த வாக்கு வாதத்தை கூறி அவளின் தோள் சாய்ந்தாள் தேவா
“என்ன தேவா குழந்தை மாதிரி அழுகிற, அந்த அண்ணனை பத்தி தான் தெரியும் ல உனக்கு சாதாரணமாவே சண்டியர் கணக்கா கோவம் வரும்.. இதை பத்தி பேசினா என்ன செய்வாரு அதான் அடிச்சிப் போட்டாரு விடு புள்ள உனக்கு இது எல்லாம் சாதாரணம்…” தோழியை தேற்றினாள் மேகலா.
“பச் இல்ல கலா… என் மனசே விட்டு போச்சி… நான் தான் முதல்ல இருந்து இழுத்து பிடிச்சிக் கிட்டு இருக்கேன்… அவர் மனசுல கடுகு அளவு கூட என் மேல அபிப்பிராயம் இல்ல” என அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது
“இங்க பாரு புள்ள… இதை நீ சொன்னாப் போல கொஞ்சம் ஆறப்போடு படிப்புல கவனத்தை திருப்பு… இன்னும் ஆறு மாசம் இருக்கு உன் அத்தை பெத்த ரத்தினத்துக்கு பரிசம் போட்டு பட்டா போட, அதுவரை உனக்கு நேரம் இருக்கு சரியா… எப்ப வேணும்னாலும் அந்த அண்ணன் மனசு மாறலாம்” என சமாதனம் செய்தவளிடம்,
“ஒருவேளை மாறலனா…?” அச்சத்தோடு கேட்டாள் தேவா
நல்லதாவே நினைக்க மாட்டிய புள்ள… அது எல்லாம் மாறும் புரிஞ்சிதா… இப்போ நாம வந்த வேலைய பாப்போம்… இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த செம் வரப்போகுது ஒழுங்க மார்க்க வாங்கு இதுல தேறிட்டா நாம படிக்கறத வைச்சிக் கூட கல்யாணத்தை ஒத்தி போடலாம் எது நடந்தாலும் நமக்கு லாபம் தானே” மேகலா கூறியதும்,
“நடக்குமா டி…?” ஈனஸ்வரத்தில் கேட்டவளை கொலை வெறியுடன் பார்த்த மேகலா “அப்படியே கழுத்துல கைய வைச்சி நெருக்கி சாகடிச்சிடுவேன்… மாறுமா நடக்குமான்னு சந்தேகமாவே கேட்பியா எனக்கு தொண்டை தண்ணி வத்தி போகுதுடி உனக்கு சமாதனம் சொல்லியே” சலிப்புடன் கூறிட,
மேகலாவின் தாடையை பிடித்து ஆட்டியவள் “கோச்சிக்காதடி எனக்கு இருக்க டென்ஷனை உன்கிட்ட கேட்டேன்…” தேவா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“அதை விடு புள்ள நாளையில் இருந்து காலேஜ் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு தெரியும் ல வீட்டுல சொல்லிடு இல்ல அதுக்கும் உன் நொண்ணன் குதிப்பான்… பிக்காலி பைய அவனால வந்தது இது எல்லாம்… ஒரு ஜோடி சேரவே இலலை, இவன் வேலைய காட்டி ஜோடியே சேர முடியாதபடி பிரிச்சி விட்டு வேடிக்கை பாக்குறான்… நீயெல்லாம் ஒரு பொண்ணு பின்னாடி நாய சுத்தி தான்டா கல்யாணம் பண்ணுவ என் பிரெண்டை பண்ற டார்ச்சருக்கு…” ஜெயசந்திரனுக்கு இன்ஸ்டென்ட் சாபத்தை கொடுத்த மேகலா தோழியை சாமி தரிசனம் செய்ய சன்னதியை நோக்கி அழைத்து சென்றாள்.