பூ 27
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அவனை நினைக்கவே கூடாது என எண்ணியவள், அவனை பற்றி மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள். மூளைக்கு என்னமோ அவன் இன்னோருவரின் சொந்தம் என்று உரைத்தாலும் மனதில் அவன் வரிவடிவமே வியாபித்திருந்தது..
இதற்கிடையில் சித்திரை மாத திருவிழாவும் கொடியேற்றத்துடன் களைகட்ட தொடங்கியது… 10 நாள் திருவிழாவில் அங்காளி பங்காளி முதல் அனைத்து உறவுமுறைகளும் கலந்துக்கொள்ளும் இந்த திருவிழாவில் சாந்தலட்சுமி ஏழாம் நாள் தேரோட்டத்தில் கலந்து கொள்வதாக தகவல் கொடுத்திருக்க, துரைலிங்கத்தின் குடும்பம் முன்னதாகவே வந்திருந்தனர்.
ஜெயசந்திரனும் அன்று தான் ஊரில் இருந்து வந்தான். ஊருக்கு செல்லும் முன் பார்த்த தேவாவை விட இவள் மிகவும் வாடி போய் இருந்தாள். அவளிடம் பேச முயற்சி செய்த போது ஒரு முறைப்புடனே முகத்தினை திருப்பி செல்ல கையறு நிலையில் இருந்தான் ஜெயசந்திரன்.
ஊரில் இருந்து வந்த துரைலிங்கத்திற்கு இந்த திருமணம் ஓரளவு எதிர்பார்த்தது தான்… அக்காவின் மகள் ஜீவிதாவின் திருமண விஷயத்திலேயே அவருடைய எண்ணம் தெரிந்து இருந்தது… இப்போது அண்ணன் தேவாவின் திருமண விஷயத்தை பற்றி பேசவும் பெரிய அதிர்ச்சியை கொடுக்கவில்லை மாறாக “நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கிங்க அண்ணா” என்றார்.
“அருணை வைச்சி மட்டும் தான் சரின்னு சொன்னேன் துரை… உங்க அண்ணி தான் சாந்தவை நினைச்சி ரொம்ப பயப்புடுறா, தேவாவும் பயப்புடுறா மாதிரி தான் தெரியுது… என்ன செய்ய” என்றார் கையை பிசைந்தவாறு
“அண்ணா எனக்கு அருணை பத்தி நல்லாவே தெரியும்… பயப்பட ஒன்னும் இல்லை, அந்த வீட்டுல சாந்தா அக்கா மட்டும் தான் ஒரு மாதிரி… மத்தபடி யாரையும் குறை சொல்ல முடியாது அண்ணா” துரைலிங்கம் தன் மனதினை கூறிட,
அவரது மனைவி இளையாவும் அதற்கு இயைந்து பேசி சௌந்தரலிங்கம் மற்றும் மரகதத்தின் மனதினை ஒருவாறு தேற்றி விட்டிருந்தனர்.
முதல் நாளில் இருந்து கோலாகலமாய் ஆரம்பித்து இந்த திருவிழா நாளாக நாளாக பாட்டுக்கச்சேரி, தெருக்கூத்து, மஞ்சுவிரட்டு, வில்லு பாட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலப்போட்டி, சைக்கிள் ரேஸ் ரேக்கலா ரேஸ், உறியடி, சிலம்பப்போட்டி என ஒவ்வொரு நாளும் பண்டிகை போல் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது… இளசுகள் முதல் பல்லு போன வயதான கிழடுகள் வரை துள்ளலுடனும் மகிழ்ச்சியுடன் அதில் கலந்துக் கொண்டு இருந்தனர்…
ஏழாம் நாள் திருவிழாவில் தேரோட்டம் வெகு சிறப்பு, அம்மையப்பன் தேரில் உலா வர சுத்துபட்டு அத்தனை ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் வந்திருந்தது. சாந்தலட்சுமியும் குடும்பத்துடன் ஊருக்கு வருகை தந்திருக்க அவர்களின் வருகை தேவாவிற்கு முள்ளின் மீது நின்றிருப்பது போன்ற அவஸ்தை தந்தது.
நாத்தனார் என்ற முறையில் வந்தவர்களை “வா சாந்தா, வாங்க அண்ணா, வாங்க தம்பி” அனைவரையும் வரவேற்று குடிக்க மோரை கொடுத்தார் மரகதம்.
“எப்படி இருக்கிங்க அத்த” என்றபடி வந்த அருணின் விழிகள் தேவாவை காண, அமைதியான முகத்துடன் கதவின் ஓரம் நின்றிருந்தாள்.
மருந்திற்கும் சிரிப்பு என்பது அவள் உதடுகளில் எட்டவில்லை இருந்தும் மனதை கவர்ந்தவளின் முகத்தில் இருந்த மாற்றத்தினை காண மறந்தவன், அவளையே இமைக்கொட்டாமல் பார்த்து இருந்தான்.
அருகிலிருந்த தேவாவை பார்த்த சாந்தலட்சுமி, “உன்னை கட்டிக்க போறவன் வந்து இருக்கான்… வான்னு சொல்லு புள்ள சும்மா வெக்கபட்டுகிட்டு அங்கனையே நின்னா எப்படி…? ஒரு மரியாதை வேண்டாம்…” என்றவரின் வார்த்தைகள் காதில் அமிலத்தை பாய்ச்சியது போல் இருந்தது அவளுக்கு… வலிந்து இதழ்களுக்கிடையே சிரிப்பை உதிர்த்தவள் மேம்போக்காக “வாங்க” என ஒற்றை வார்த்தையை உதிர்த்திருந்தாள்.
அவள் வாங்க எனக் கூறியது அவனை சந்தோஷ கடலில் முழ்கடிக்க, சிரிப்புடனே தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டவன் அனைவரது நலனையும் விசாரித்து பின் அவனுக்கென ஒதுக்கிய அறைக்குள் சென்றான்.
இளையாவும் மரகதமும் அடுக்கலையில் மும்மரமாக சமையலை தொடர்ந்து இருந்தனர். சாந்தா வந்த அலுப்பு தீர திண்ணையில் போவோர் வருவோரிடம் கதை அளந்து கொண்டு இருந்தார். அழகன்பெருமாளும் மற்ற தன் இரு மச்சான்களுடன் பண்ணைக்கு சென்று விட்டதும், அர்ஜூன் தனது சிநேகிதர்களுடன் அலைபேசியில் மூழ்கவும் அருணிற்கு தேவாவிடம் பேசும் வாய்ப்பு தானே அமையபெற்றது.
வீட்டிற்குள் தேவா எங்கு சென்றாலும் அருண் அவளுடன் பேச முயற்சியை மேற்கொள்ள வெறுத்துப் போனவள், தாயிடம் மேகலாவுடன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறியவள் அருணிடமிருந்து தப்பித்து விட முடிவு செய்து கோவிலுக்கு சென்றாள்.
அருணும் அவளை தொடர்ந்து கோவிலுக்கு செல்ல, மேகலா திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றாள். பிராதன சாலையை தொடந்து வழி நெடுங்கிலும் புதுப்புது கடைகள் முளைத்து இருந்தது சோப்பு, சீப்பு , வளையல், கண்ணாடி முதல் ஜவுளி கடை வரை புதிதாய் அமையப்பெற்று மும்மரமாய் விற்பனை ஆகிக்கொண்டு இருந்த நேரம் அது,
பின்பக்கம் திரும்பியவளின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்ற தேவா, “அங்க என்ன பார்வை, முன்னாடி பார்த்து நட” மேகலாவை அதட்டவும் செய்தாள்.
“என்னை ஏன் அதட்டுற… உன்னை துரத்திட்டு வர்ற உன் மாமனை அதட்டி வைய்யி… என்ன புள்ள உன் பின்னாடியே துரத்திட்டு வரான்? ஓவர் லவ்ஸ் போல” கிண்டலுடன் மொழிய
“கடுப்பை கிளப்பாம வா…. வாய கிளறி வாங்கி கட்டிக்காத, வீட்டுல தான் இவன் தொல்ல தாங்கலன்னு வெளியே வந்தா, இங்கேயுமா வந்து தொல்ல பண்ணுவான்? தலையில் அடித்து கொண்டாள் தேவா…
இருடி உன் மாமனை கேட்டு சொல்றேன்…” என கிண்டலாக கூறியவள்… “பாக்க நல்லா கலரா, வட்டா சாட்டமா தானே இருக்கான்…. அடியே இது நிஜமாளுமே உன் அத்தை அந்த பிடாரிக்கு பிறந்தது தானா!!!” என வியப்பை குரலில் தேக்கி கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்தவள் ஒரு பெருமூச்சை வெளியேற்றி,
“மரியாதையா பேசாம வந்துடு… இல்ல இந்த கோவில் தெப்பத்திருவிழா உன்னால நடக்காம போயிடும் ஜாக்கிரதை” என எச்சரிக்கை விட்டாள் தேவா.
“அதெப்படி புள்ள…. நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லையே… நான் சொன்னா தெப்பத்திருவிழா நின்னுடுமா…?” அவள் அறியா பிள்ளையாய் கேட்க,
“ஆமாடி இப்போ இந்த குளத்துல உன்னை தள்ளிவிட்டா எப்படி திருவிழா நடக்கும்” எனக் கேட்டதுதான் தாமதம் “அடி பாதகத்தி என்ன வில்லங்கமா நினைக்குற…” தன் நெஞ்சில் கைவைத்து அதிர்வை வெளிப்படுத்தியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“என்னடி பாக்குற” தேவா கேட்டதும் “அது வந்து … இந்த பக்கம் ஓடலாமா… இல்ல அந்த பக்கம் ஓடலாமான்னு… பாரத்துக்கிட்டு இருக்கேன்…” என்றவள் திருவிழா கடைவீதியை சுற்றி ஓட்டம் எடுத்தாள்.
“ஏய் லுசு எதுக்குடி இப்படி ஒடுற?” அவளை துரத்தி வந்தவளுக்கு வெகு நாட்களுக்கு பிறகு தோழியுடன் விளையாடுவது மனதிற்கு மகிழ்வை கொடுத்தது. சிரித்தபடியே அவளை பிடிக்க, அனைவரையும் கடந்து சென்றாள்.
ஓடும்போது அவளை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அருணின் மேல் மோதி விட, சட்டென சுதாரித்து விலகி நின்றாள்… அதே நேரம் பக்கத்தில் யாரோ பளீர் என அறைவிடும் சத்தம் கேட்டதில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.
“யார் ரா நீ? உனக்கு ஆம்பள பொம்பள யார்ன்னு தெரியாதா கண்ணு என்ன புரணிலையா வைச்சிக்கிட்டு சுத்தற? தடிமாடு மாதிரி வளர்ந்து நிக்குற மேல வந்து மோதுற…? நானும் போதும் போதும்ன்னு விட்டுக்கிட்டு இருந்தா பொம்பளைய இடிக்கிறா மாதிரி இடிக்கிற” என பட்டென மறுமுறை அதே நபரை அறையவும், தன்னையறியாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டவள் ஏதோ தனக்கே அறை விழந்தது போன்ற பிரம்மையில் இருந்தாள் தேவா. ஏனென்றால் அடித்தது விசாகன் ஆயிற்றே கடைதெருவில் சுந்தரனுடன் நின்றிருந்தவனின் மேல் வேண்டுமென்றே மோதி நின்றவனை தான் அடித்துக் கொண்டு இருந்தான்.
அதற்குள் மேகலாவும் தன்பின்னே தோழி வரவில்லை என தெரிந்ததும் அவளை தேடி வந்தவள் “என்ன புள்ள ஏன் அங்கன ஓரே சலசலப்பா இருக்கு” என அங்கே பார்த்தாள்.
“அடிவாங்கியவனோ அண்ணே வேணும்னு இடிக்கலிங்கனே…. தெரியாம பட்டுடுச்சி… நான் இந்த ஊர் கூட இல்லிங்க அண்ணே வெளியூர்” பின் வாங்கிட அவன் பின் இருந்த நபரோ “இவனை பார்த்தா சந்தேகமா இருக்கு ஒருவேளை திருவிழால திருடும் திருடனாய் இருக்கு” என்றதும்.
சுந்தரனும் தன் பங்கிற்கு “விசா முகரையப் பார்த்தாலே தெரியல, ஆடு திருடினா கள்ளனாட்டம் இருக்கு… என்றான்.
அய்யோ தன் குட்டு எங்கு வெளிப்பட்டு விடுமோ என அஞ்சியவன் விசாகனிடமிருந்து தப்பிக்க இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்து அவனது கையில் ஒரு அறுப்பை போட்டவன் ஓட பார்க்க திருவிழாவிற்காக பாதுகாப்பிற்கு வந்த காவலரிடம் அவனை. விரட்டி பிடித்து ஒப்படைத்தனர்.
வெட்டு வாங்கியது என்னவோ விசாகன் தான்… ஆனால் அதனால் துடித்து போனது தேவசேனா… அவன் வெட்டு பட்டதை பார்த்ததும் உள்ளம் துடித்து அவனிடம் ஓட இருந்தவளின் கையை பற்றி தன் அருகிலேயே நிறுத்தி இருந்தாள் மேகலா.
திரு விழா கூட்டம் ஜெ ஜெ என இருந்த ஜன திரளில் மத்தியில் இவ்வாறான ஒரு காரியம் அரங்கேறி இருந்தால் தோழியின் பெயர் என்ன ஆகுமோ என அறிந்து வைத்திருந்தவள், அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டாள்.
இருந்தும் நிற்காமல் ஓடும் நதியாய் அவள் கண்களிலும் வெள்ளப் பெருக்கு… அருண் தங்களை அல்லாது நடந்துகொண்டிருந்த கலவரத்தை கவனிப்பதை பார்த்தாள் மேகலா.
“பேசாம வாடி… ஊருக்கு முன்னாடி எது நடந்தாலும் உன் பேர் ரிப்பேர் ஆகிடும்… ஒன்னும் இல்லாத வாயிக்கு நீதான் அவல் கணக்கா அரைபடுவ” என எச்சரித்து அவளின் கையை பிடித்து கோவில் படித்துறைக்கு தரதரவென இழுத்து வந்தாள்.
“அவர்.. அவருக்கு ரத்தம்” என பதறியவள் “ஹீரோவுக்கு ஒன்னும் ஆகாது ல” என மேகலாவிடம் பதட்டமாக கேட்டதும் அவள் மேல் எழுந்த எரிச்சலுடனே “ஒன்னும் ஆகாது தாயே… சின்ன கீறல் தான் மனுஷனுக்கு வலிக்கும்… கல்லுக்கு வலிக்குமா?…அவன் கிழிக்கும் போது கூட பாறை மாதிரி தானே இருந்தாரு” என்றாள் ஆத்திரத்துடனே…
“ஆனா எனக்கு வலிச்சிது கலா.. எனக்கு இங்க வலிச்சது” தன் இதயத்தை சுட்டி காட்டிட “மண்ணாங்கட்டி வாய முடிடு… உன்னை அவ்வளவு ஈசியா பேசிட்டு போனவருக்காக இப்படி கஷ்டபடுறியே… முதல்ல அவரை மறந்து தொலை உன் வாழ்க்கைக்கு அது ரொம்ப முக்கியம்… உன் பின்னடியே அலையுறானே… அவன் பேரு என்ன?…. ம்…. அருண்… அவனை கட்டிக்க… என்ன உன் அத்தகாரி தானே ராங்கி… அவ வாய உடைச்சி பேச முடியாத மாதிரி பண்ணி வைச்சிடலாம்… எதுக்கு இருக்கான் உன் அண்ணன் தடிமாடு தங்கச்சிக்காக இதையாவது பண்ணட்டுமே… மாட்டி விட்டான்ல கூட இருந்து இதையாவது பண்ணட்டும்” என்றதும்
“என்னால அவனை இல்ல… யாரையுமே அவர் இடத்துல வைச்சி பாக்க முடியாது கலா… இன்னொருத்தன் கட்டுற தாலி என் கழுத்துல எந்த நிலையிலும் ஏறாது” என உறுதியோடு கூறியவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
…..
அடுத்த நாள் தெப்பதிருவிழா அன்று இரவே பூக்குழி இறங்கிடும் விசேஷமும் இருந்தது பிள்ளைகளுக்காக மரகதம் பூக்குழி இறங்கும் நேத்தி கடனை முடிக்க அவருக்கு பின்னாலையே தேவாவும் பூக்குழி இறங்கி இருந்தாள் வீட்டினருக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை கேட்டதற்கு எல்லாரும் நல்லா இருக்கனும்னு இறங்கினேன் என்ற ஒற்றை சொல்லோடு முடித்துக் கொண்டாள்.
கோலாகலமாக ஆரம்பித்த 10 நாள் திருவிழா இனிதே நிறைவடைந்து தூரைலிங்கமும் அவரது குடும்பமும் ஊருக்கு புறப்பட்டு நிற்க “என்ன தம்பி கிளம்பிட்ட? நம்ம அருண் கல்யாண விசயம் பேசலான்னு இருக்கேன்” என்றதும் தூக்கி வாரிப்போட்டது தேவாவிற்கு,
“அக்கா…. தேவா படிப்பு முடியலையே” துரையின் கேள்விக்கு “அது ஒரு பாட்டுக்கு இருக்கட்டும் இப்போ யாரு படிப்ப நிப்பாட்ட போறா? தாராளமா படிக்கட்டுமே… அருணுக்கு இந்த தையில முடிச்சடனும் இல்ல 3 வருசம் தள்ளிடும்” என்றார் சாந்தா
அருணுக்கு தேவாவிடம் பேச வேண்டும் அவள் மனதை அறிய வேண்டும் என்று ஆசை ஆனால், நேற்று அவளிடம் பேச போய் தன்னை கண்டு மிரண்டு ஓடியதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டது. இந்த திருமணத்திற்கு அவள் சம்மதிக்க வேண்டும் என உள்ளுக்குள் உருப்போட்டு கொண்டுடிருந்தான்.
சௌந்தரலிங்கம் அனைவரையும் ஒரு முறை பார்த்தார் பின் தேவாவை பாரத்தார். “எனக்கு உன் பையனுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல சாந்தா… ஆனா ஒரு சொல் தாங்க மாட்டா என் மவ… இந்த கல்யாணம் பேசுனதுல இருந்து ரொம்ப பயந்து போய் இருக்கா அவ” என்றதும்.
சாந்தா ‘நீ என்ன சொல்கிறாய்’ என்பது போல பார்க்க, தாயின் நடவடிக்கையே அறிந்த அருணே பேச்சை தொடங்கினான்…
“மாமா தேவாக்கு எந்த பிரச்சனையும் வராது… அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னா, என் சுவாசம் மாதிரி மாமா.. அவள கண் கலங்காம பார்த்துப்பேன்.. என்னை நம்பி நீங்க தேவாவை கட்டி வைக்கலாம்… தேவா இந்த வீட்டு இளவரசினா, என் வீட்டுல மகாராணி மாமா.. அவளை பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க” அவனை பற்றி தேவா தெரிந்து கொள்ள வேண்டும் கூறினான்.
சாந்தாவிற்கே ஆச்சர்யம் தன்… மகனை பற்றி தெரியும் ஆனால் இவ்வளவு ஆசையை அவள் மேல் கொட்டி வைத்திருப்பான் என்று தெரியாது… அவருமே இந்த கல்யாணம் நடந்தால் போதும் என இருந்ததால் வாயை மூடிக்கொண்டு இருந்தார்.
ஜெயசந்திரனுக்கு மனதில் இருந்த பாரம் நீங்கினாலும் தங்கையை நினைத்து சற்று கலக்கமாக இருந்தது. சௌந்தரலிங்கத்திற்கும் மரகதத்திற்கும் மனது கொஞ்சம் சமன்பட்டது… “சரிய்யா உன்னை நம்பி இதற்கு சம்மதிக்கிறேன்” என்றதும் காலண்டரில் நாட்களை தேடிக் கொண்டு இருந்தார் சாந்தா