விடிந்ததும் அறைக்கு வந்தவர் தேவா… கதவை திறமா…. என்ற மரகதத்தின் பேச்சிற்கு பதில் இல்லாமல் போக பதட்டத்துடன் மறுபடி அழைத்தார்.
மரகதம் தேவாவை அழைத்துக்கொண்டு இருக்கையில் அங்கு வந்த இளையாவும் “என்ன அக்கா? தேவா இன்னும் எந்திரிக்கலையா? என்றதும், “நானும் கால் மணி நேரமா தட்டுறேன் புள்ள… கதவு திறக்கமாட்டுறாளே” என்றபடி சற்று அழுத்தம் கொண்டு வேகமாக தள்ள அது தானாக திறந்து கொண்டது.
கதவு திறந்துக்கொள்ளவும் சற்று ஆஸ்வாசம் அடைந்த மரகதம் “கதவு திறக்கலன்னுதும் பயந்துட்டேன் இளையா” என்றபடி அறைக்குள் நுழைந்தவர் கல்யாண வீட்டிற்கே உண்டான பரபரப்பில் “நீ போய் வர்றவங்களுக்கு காபிய கொடுத்து நேரா கோவிலுக்கு போகசொல்லிடு இளையா… இன்னும் விடிய நேரமிருக்கு இவளுக்கு நலுங்கு வைச்சி குளிக்க வைச்சிடலாம் அப்புறம் மேகலாவும் அன்னமும் தேவாவ ரெடி பண்ணட்டும் நானும் மத்த வேலைகளை பாக்குறேன் புள்ள” என்றவர் நினைவு வந்தவராக “அப்புறம் அத்த முறைக்கு சாந்தா தான் முதல்ல நலுங்கு வைக்கனும்… அப்படியே அவளுக்கும் ஒரு குரலை கொடுத்துடு” இளையாவிடம் கூறியபடியே படுக்கையை பார்க்க அது வெறுமையாக இருந்தது.
கூடவே படுக்கையில் ஒரு காகிதமும் இருக்க ” இது என்ன லெட்டர் இருக்கு அக்கா?… தேவா எங்க ஆளை காணும்?…” என, இளையா சென்று குளியலறையில் பார்க்க அங்கும் வெறுமையாக இருந்தது.
குளியலறையில் தேவா இல்லை என்றதும் “தேவா…. எங்க இருக்க…” உரக்க அழைத்தவர் மகள் வராமல் போகவே எங்கெங்கோ எண்ணங்கள் பயணிக்க கட்டிலின் மீது இருந்த கடிதத்தில் பார்வை பதிந்தது.
நடுங்கும் கரத்துடனே காகிதத்தை எடுத்து பார்க்கவும் மயக்கம் வருவது போல் அவர் உடல் தள்ளாடி விழ மரகதத்தை தாங்கி கட்டிலின் மேல் அமரவைத்த இளையா, அவரின் கையில் இருந்த பேப்பரை வாங்கி அதை வேகமாக பிரித்துப் படித்தார்.
படித்தவரின் கண்களில் அதிர்ச்சி கண்ணீர் இது இரண்டில் முதலில் எது வெளிப்படுவது என போட்டி போட்டுக்கொண்டு இருந்தது… மரகதத்திற்கு இளையாவின் முகம் ஏதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்ற விபரீதத்தை உணர்த்த “திக்கி திணறியபடி குரலில் கலக்கத்தை தேக்கி என்ன இளையா தே… தேவா… எங்க” என்றார்
“அக்கா…நீ … நினைச்சி பயந்தமாதிரியே நடந்துடுச்சிக்கா… இந்த கல்யாணம் பிடிக்கலன்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டாக்கா” என அழவும் இளையாவின் அழுகை சத்ததை கேட்ட துரையும் சௌந்தரலிங்கமும் அங்கு வேகமாக வந்தனர்.
விடிய இன்னும் சில நாழிகைகளே இருக்கையில் மனைவி மற்றும் மைத்துனி இருவரும் அழுவதை கண்ட சௌந்தரலிங்கத்திற்கும் துரைக்கும் ஒன்றுமே விளங்கவில்லை
“ஏன்டி நல்ல நாள் அதுவுமா அழுது வடியுற” மனைவியிடம் கேட்க பக்கத்தில் அழுதபடி இருந்த இளையா கடிதத்தை துரையிடம் கொடுத்தார். அதை படித்த துரை “அண்ணா தேவா…. தான் லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டா” பதற்றத்துடன் சௌந்தரலிங்கத்திடம் நீட்டினார்.
அவர் வாங்கிய அடுத்த கணமே ஆவேசமாய் எழுந்த மரகதம் கணவரின் சட்டையை பற்றி திருப்தியா?…. இப்போ திருப்தியா?…. என் பொண்ணு போயிட்டா… எந்த ஆத்துல, குளத்துல, விழுந்து செத்தாலோ தெரியலையே…” புலம்பிட மகள் விட்டு சென்ற கடிதத்தை பிரித்தார்.
பிரியமான அப்பாவிற்கு நான் செய்ற இந்த காரியம் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும்னு எனக்கு தெரிஞ்சும் இதை செய்றேன்… என்னை மன்னிச்சிடுங்க அப்பா… இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை… என்னோட எதிர்ப்பை நான் எல்லா வழியிலையும் காட்டிட்டேன்… ஆனா, என் மனசை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டிங்க… இந்த கல்யாணத்தை நிறுத்த இதை தவிர எனக்கு வேற வழி தெரியல அப்பா… முடிஞ்சா என்னை மறந்துடுங்க பா… இந்த உலகத்துல வாழ எனக்கு ஆசை இல்லை இனி என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது போறேன் பா திரும்பி வரவே முடியாத தூரம் போறேன்…. அம்மா நீயும் என்னை மன்னிச்சிடு….
இப்படிக்கு தேவசேனா
கடிதத்தை படித்தவர், சட்டையில் இருந்து மனைவியின் கையை விலக்கக்கூட தோன்றாமல் அதிர்ச்சியில் இருந்தவருக்கு மனைவியின் அழுகை நிதர்சனத்தை உரைக்க தொப்பென அமர்ந்துவிட்டார்.
“தலைபாடா அடிச்சிக்கிட்டேன் அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, இஷ்டம் இல்லன்னு என் வாய அடக்கி வைச்சி மூலையில உட்கார வைச்சிங்க… ஆனா இப்போ என்ன ஆச்சி என் பொண்ணு போயிட்டாளே அவ கிட்ட ஒத்த வார்த்தை கேட்டீங்களா வரமுடியாத தூரத்துக்கு போறேன்னு சொல்லிட்டாளே ” மரகதம் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
மனைவி பேசியது கூட கருத்தில் பதியாது இடிந்து போனவராய் இருந்தார் சௌந்தரலிங்கம். மரகதம் போட்ட சத்ததில் ஜெயசந்திரன், சாந்தா, அழகன்பெருமாள் கல்யாணத்திற்கு வந்த உறவுமுறைகள் அனைவரும் அங்கே கூடிவிட்டிருந்தனர்.
கடிதத்தை பற்றி அறிந்ததும் ஜெயசந்திரனுக்கு தான் தவறு செய்துவிட்டது போன்ற குற்றவுணர்வுடன், தங்கையை காணவில்லை என்ற பரிதவிப்பில் நின்றிருக்க, அருண் திகைத்த நிலையில் நின்றிருந்தான்.
அருணிற்கு ஏனோ அங்கு இருக்கவே மனம் வலித்தது… ‘அவளிடம் திருமணம் பற்றி தெளிவாக பேசி இருக்க வேண்டுமோ’ முதல் முறையாக எண்ண ஆரம்பித்தான்.
இந்த திருமணத்தில் பயம் என்று தானே நினைத்தான்… ஆனால் திருமணமே பிடிக்காமல் தான் வேண்டாமென கூறியிருக்கிறாள் என இப்போது தான் உணர்கிறான். எல்லாம் கை மீறி போன பின்னே தாமதமாக உணர்ந்து என்ன பயன்… சிலையாகி நின்றவனை பார்த்த அவனின் பெற்றவள்,
“அந்த சிரிக்கி மகளுக்கு என் பையனை கட்டிக்க கசக்குதா? சீமை சித்திராங்கி!!!…. என் புள்ளையா போய் நடுகூடத்துல நிறுத்திட்டாளே… அவ நாசமா போக… அந்த குடிகெடுத்தவ மட்டும் என் கையில கிடைச்சா காலை இரெண்டையும் உடைச்சி அடப்புல வைச்சிபுடுவேன் ஓடுகாலி கழதை… என்ன திமிர் இருந்தா கல்யாணத்தன்னக்கி ஓடிபோய் இருப்பா ஒடுவனவா தனியா போனாளா இல்ல” சாந்த வாய் எடுக்க “அம்மா…” எனக் கத்தி அவள் மீது கூறாய் வீசிய சொல்லம்பை தடுத்து நிறுத்தி இருந்தான் அருண்.
“ஏன்டா இப்போ என் வாய அடக்குற… அந்த ஓடுகாலி சிரிக்கிக்காக” மகன் மீதும் கோவம் கொள்ள
“முதல்ல உன் வாய மூடுமா உன்னால உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் பேச முடியும்… அவ வரவே மாட்டேன்னு எழுதி வைச்சிட்டு போயிருக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவன், “அவங்கப்பாட்டுக்கு பேசிட்டே போறாங்க நீங்களும் பார்த்துட்டு பேசாம இருக்கிங்க” அவரின் உடன் பிறந்தவர்ளையும் தன் தகப்பனையும் பார்த்தான்.
அதுவரை மகள் சென்றுவிட்டாள் இனி ஏச்சையும் பேச்சையும் சகித்து தான் ஆகவேண்டும் என அமைதியாய் இருந்தவர், கடைசியாக சாந்தா கொட்டிய சொற்கள் அவரிரை கோபத்தின் எல்லைக்கே கொண்டு சேர்த்து இருந்தது… சாந்தலட்சுமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டவர் “உன் மகனுக்கு என் புள்ளைய கட்டிக்கொடுத்து இருந்தா என்ன பாடுபட்டு இருப்பான்னு இப்போ தெரியுது… என் பொண்ணு போனது எனக்கு தான் கஷ்டமே தவிர உனக்கு இல்ல…. பூ மாதிரி வளர்த்த புள்ளைய தவறவிட்டு இருக்கேன்… என் ஆத்திரத்தை கிளப்பாம முதல்ல நீ இந்த இடத்தை விட்டு கிளம்பு” அவர் கர்ஜனையாக கூறியதும்,
அவரை தொடர்ந்து சொந்தபந்தங்களில் இருந்த ஒரு நரைத்த தலை “அட என்னப்பா ஆளாளுக்கு இப்படியே பதிலுக்கு பதில் பேசிட்டு இருந்தா எப்படி.? விரசா புள்ளைய தேடுங்கங்கப்பா சாந்தா நீ கொஞ்சம் அமைதியா இரு… கல்யாணத்துக்கு பயந்து ஏதாவது தப்பான முடிவை எடுத்திட போகுது புள்ள… அது பயந்து போய் தான் வீட்டை விட்டு போயிருக்கும் எப்படியும் விடியறத்துக்குள்ள தேடி கூட்டி வரலாம் ” அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஞாபகபடுத்தி பேசியதும் ஜெயசந்திரன் அருண் இன்னும் சிலர் அவளை தேடி புறப்பட இருந்தனர்.
அதே நேரம் ஊரை வளைத்து பந்தல் போட்டு தெருவெல்லாம் தோரணம் கட்டி வண்ண மலர்களால் அலங்கரித்த வீட்டின் முன் விசாகனுடன் வந்து இறங்கினாள் தேவசேனா. அந்த அதிகாலை பொழுதிலும் அவள் முகத்தில் பூத்திருந்த வெண்முத்துக்கள் அவளின் படபடப்பை உணர்த்தியது.