மேகம் மறைத்த நிலவை போல் தன் எண்ணங்களை கோபம் எனும் மேகத்தால் மறைத்து அவனை வறுத்துக்கொண்டு இருந்தாள் தேவசேனா…
தன் தாய் தந்தையரிடம் தேனாய் வெளிப்பட்ட வார்த்தைகள், தன்னிடம் மட்டும் எரிச்சலுடனே வெளிப்பட்டதை அவளின் குட்டி இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போகும் போது சொல்லவில்லை சரி ஒரு பார்வை கூட பார்க்கவில்லையே என தன்னை விட்டுசென்றவன் மேல் உரிமையுடன் கோவம் கொண்டாள்.
பார்த்து 2 மணி நேரமே ஆனா அவனிடம் ஏன் இதை எல்லாம் எதிர் பார்க்கிறோம் என அவளுக்கு புரியவில்லை அவன் மேல கோபத்துடனே உள்ளே சென்றாள். உடை மாற்றும் போதுதான் அவனுடைய அலைபேசி தன்னிடம் மாட்டிக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள், மறுபடி அவனை காணும் வாய்ப்பை நினைத்து மகிழ்ந்தாள்.
இந்த மகிழ்வு எதனால் என அவளுக்கு புரியவில்லை, அதை அவள் ஆராயவும் முற்படவில்லை ஆனால் அவனை காண போகும் ஆவல் மட்டும் இருந்தது.
தன் கரத்தில் இருந்த அலைபேசியை முன்னும் பின்னும் திருப்பியவள் ‘சிடு மூஞ்சி, சிடு மூஞ்சி எப்பவும் உர்ருனு முகத்தை வைச்சிட்டு பேசுறிங்க…. சிரிக்கவே தெரியாத… உர்ராங்குட்டான்..’ அதை பார்த்து திட்டியவள் இதை வாங்க வருவீங்கதானே அப்போ காட்டுறேன் நான் யாருன்னு’ நினைத்தபடியே இருக்க அலைபேசி தன் இருப்பை காட்டி ஒளிர்ந்தது.
திடிரென வந்த அழைப்பில் அதிர்ந்து கையில் பிடித்திருந்த செல்போனை கீழே தவறவிட்டு மீண்டும் பிடித்தவள், பெரூமூச்சை வெளியேற்றி அழைத்தது யார் என பார்த்தாள். அது சுந்தரன் என்ற பெயரை தாங்கி வந்தது.
அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில் இருந்தவள் ‘ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா என்ன செய்வது… ஒருவேலை அவனே அழைத்திருந்தால்’என அனைத்தையும் சிந்தித்தவள் அதை ஏற்று காதில் பொருத்தினாள்.
“ஹேய் விசா… எங்கடா போன…? இந்நேரம் வரையும் உன் வீட்டுல இருந்துட்டு வரேன்… நீ ஆளையே காணும்…” கேள்வியை அடுக்கிக்கொண்டே போனான் சுந்தரன்.
காதில் பேசியை பொருத்தி இருந்தவளோ ‘விசாவா அப்போ முழு பெயர் என்னவா இருக்கும்…” என யோசித்து இருக்க “என்னடா நான் பாட்டுக்கே பேசிக்கிட்டே இருக்கேன்…. அந்த பக்கம் பதிலே காணும்?” நண்பன் பேசவில்லையே வினாவை தொடுத்தான்.
கவனம் முழுவதையும் அவனுடைய பெயரில் நிலைக்க விட்டிருந்தவள் சுந்தரனுடைய குரலில் நிகழ்வுக்கு வர “முதல்ல கேட்க வேண்டிய கேள்விய எப்படி கடைசில கேக்குறிங்க?” என்றவளின் குரலில் தூக்கி வாரி போட்டதில் காதில் இருந்து தவற விட இருந்த செல்லை அழுத்தி பிடித்தான் சுந்தரன். ஒரு முறை தான் டயல் செய்த எண்களை சரிபார்த்து விட்டு “இது… இது… என் பிரெண்டோட போன் உங்ககிட்ட எப்படி வந்துச்சு..?” என்றான் பதட்டம் நிறைந்த குரலில்.
“அதுவா கால் முளைச்சு வந்து இருக்குமா…? இல்ல நான்தான் தூக்கிக்கிட்டு வந்துட்டேனா…? எல்லாம் உங்க பிரெண்டுதான் கொடுத்தார்… சரி சரி என்ன விஷயமா போன் பண்ணிங்க சீக்கிரமா சொல்லுங்க தூங்க போகனும்” என்றாள் இடைவெளியே விடாது.
சுந்தரனுக்கோ ஐய்யோ என்றானது ‘சரியான வாயாடிய் இருப்பா போலவே’ விசாகன் போன் அவ கிட்ட எப்படி போச்சி நினைத்தவன் இவளிடம் பேசினால் இன்னும் வாங்கி கட்டிக்கொள்வோம் என எண்ணி “ஒன்னுமில்லிங்க நான் அவன்கிட்டயே பேசிக்கிறேன்” என்றதும்
“இதுக்கு மேலயா போன்போட போறிங்க… அவரையாவது நிம்மதியா தூங்க விடுங்க… நாளைக்கு கால் பண்ணி பேசுங்க” கட்டளையாக கூறியவள் போனை வைத்து விட சுந்தரனுக்கு அவளின் துடுக்கு பேச்சு சிரிப்பை வரவழைத்திருந்தது.
அதே சமயம் அவனுடைய நலனில் அக்கரையாக பேசும் அப்பாவையை பற்றி அறியவும் எண்ணம் எழுந்தது.
வீட்டுக்கு சென்ற விசாகன் களைப்பின் காரணமாய் சீக்கிரமே உறங்கிவிட அலைபேசி இல்லாதது அவனுக்கு உறைக்கவே இல்லை மறுநாள் காலை ஜன்னலின் வெளிச்சம் கண்களை கூச கட்டிலை விட்டு எழுந்தவன் நேரத்தை பார்க்க 7.30 யை தொட்டது.
‘இவ்வளவு நேரமா தூங்கிட்டோமா..?’ என நினைத்தவன் அப்போது தான் தன் அலைபேசி இல்லாததை கவனித்தான். ‘எங்கே விட்டோம்’ என்பதை நியாபடுத்த கடைசியாய் தேவாவிடம் கொடுத்தது நியாபத்தில் வர ச்சே வாங்க மறந்துட்டோமே என்று தலையில் தட்டிக்கொண்டான் .
அறையில் இருந்து வெளியே வந்தவனை பார்த்த தில்லைநாயகி “அய்யா ராசா நம்ம சுந்தர பையன் வந்தான் ஆளுங்கள தோப்புக்கு அழைச்சிட்டு போறேன்னு சொன்னாய்யா… உன்கிட்ட ஒரு முறைக்கு சொல்ல சொன்னாய்யா” என்றவர் அவனுக்கு சாப்பிட தட்டை எடுத்து வைத்தார்.
“அவன் வந்ததுமே என்னை எழுப்ப வேண்டியதுதானே அப்பத்தா….” என்றவனை வஞ்சையாக பார்த்தவர் “நல்ல உறக்கமா இருந்தைய்யா அதான் எழுப்பல அவனும் வேண்டான்னுட்டான்” என்றவர் வாசலில் பைக் சத்தம் கேட்டதும் “அவன் தான் வந்துட்டான் போல… இரு பாக்குறேன்” அவனுக்கு பரிமாறியவர், எங்கே பாதி உணவில் பேரன் எழுந்து விடுவானோ என அவசரமாக வெளியே சென்று பார்த்தார்.
“வாய்ய உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருக்கான் ராசா…” என்றவர் அவனை வீட்டுக்குள் வர சொல்ல, சிரித்தபடி சம்மதமாய் தலை அசைத்தவன்,
“என்ன அப்பத்தா கோழி குழம்பு வாசம் தெரு முக்கு வரையும் தூக்குது” என்றபடி உள்ளே வந்தவனுக்கு, தட்டை எடுத்து வைத்தவர்
“நீயும் உட்காருய்யா” அவனுக்கும் பரிமாற ஆரம்பித்தார். நண்பனை பார்த்தவன் பூடமாக சிரித்தபடி “என்ன மாப்ள உன் போன் எங்கேயோ சிக்கிச்சி போல” சுந்தரம் கேட்கவும்,சாப்பிட்டு இருந்தவனுக்கு சட்டென புரை ஏறியது
“பாத்து மாப்ள பாத்து சாப்பிடு” தண்ணீரை எடுத்து பக்கத்தில் வைக்க அதை எடுத்து குடித்த விசாகன் “உனக்கு எப்படி தெரியும் டா” என்றான் அதிர்வான குரலில்.
“நேத்து நைட்டே டோஸ் வாங்கிட்டேன்ல” சிரிப்புடன் கூறியவன் “என்ன பேச்சி அப்பப்பா…. யார்டா அந்த பொண்ணு… ? உன் போன் அங்க எப்படி போச்சு” என்றான் சுந்தரன்.
நேற்று நடந்ததை கூறிய விசாகன் “வர்ற அவசரத்துல மொபைல வாங்க மறந்துட்டேன் டா” என்றான்.
“எப்பா சரியான வாய்டா…. இவ்வளவு வேலைய பார்த்துட்டு என்னம்மா பேச்சு பேசுது அந்த புள்ள…” சிலாகித்தான் சுந்தரன்.
அவளை கிண்டலடித்தவனை பார்த்து சிரித்த விசாகன் “நேத்து நடந்தத என் வாழ்க்கையில மறக்கவே முடியாதுடா…. அவ்வளவு டென்ஷனை ஏத்திட்டா…சரியான கிறுக்கு…” என்றவன் அப்பேச்சை தொடராமல்
தான் நிலம் தொடர்பாக சென்று வந்ததை பற்றியும் அந்த இடம் தனக்கு பிடித்த மாதிரி அமைந்ததை பற்றியும் கூறி “அதை வாங்கலாம்னு இருக்கேன்… இப்போ பத்திரத்தையும் பார்த்து வில்லங்கமும் பார்க்கனும் எல்லாம் சரியா இருந்து ரேட்டும் நமக்கு தக்கபடி வந்துட்டா முடிச்சிட வேண்டியது தான்”என சாப்பிட்டுவிட்டு கை கழுவ எழுந்துகொண்டான்.
“கவலையே படாத மாப்ள எல்லாம் பக்காவா அமையும்.” அவனுக்கு அனுசரனையாக கூறிய சுந்தரன் நேற்று லோடு ஏற்றி அனுப்பியதற்கு வசூலித்த தொகையையும் கொடுத்து மேலும் செய்ய வேண்டியவையும் பேசியபடி வீட்டிலிருந்து இருவரும் வெளியேறினர்.
வாசல் வரை வந்த விசாகன் பைக்கில் ஏறி அமர அவனை ஆராய்சியாய் பார்த்த சுந்தரனிடம் “என்னடா அப்படி நோட்டம் விடுற… என்றதும் “ஒன்றுமில்லையே” தலையை ஆட்டி உதட்டை பிதிக்கிய சுந்தரனிடம் “நான் போய் மொபைல் வாங்கிட்டு வரேன். உன்கிட்டயே அந்த வாயாடி அவ்வளவு பேசி இருக்கு… வேற யாருவது போன் பண்ணி அவகிட்ட மாட்டிக்க போறாங்க” அவனிடம் கூறியபடியே பைக்கை உயிர்பித்திட்டான்.
“நீயே பார்த்து பயப்படற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?? பார்த்தே ஆகணுமே” மனதில் நினைத்தவன் “மாப்ள நான் வேணா துணைக்கு வரவா?” என்றதும்
“இல்ல டா நானே போறேன்… நேத்து தான் பார்த்தது நான் போகவே சங்கடமா இருக்கு… நீயும்னா என்ன நினைப்பாங்களோ” என்றான் விசாகன்.
“சரி மாப்ள பாத்து போயிட்டு வா…” நான் வயலுக்கு போறேன். மருந்து அடிக்க சொல்லி இருக்கேன் ஆள் வருவாங்க” சுந்தரன் கூறியதும்
“சரி” என்றவன் நேராக அந்தியூர் கிராமத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்.
….
வாசலுக்கும் கூடத்திற்கும் நடையாய் நடந்தவளை தாய் மரகதத்தின் குரல் சட்டென நிறுத்தியது “அடியே கிறுக்கச்சி ஏன் இப்படி வீட்டை அளந்துகிட்டு இருக்க இன்னைக்கு எங்கேயும் ஜிங்கு ஜிங்குன்னு குதிக்க போகலையா?” தாய் மகளை சந்தேகமாக கேட்க,
ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் “மா அது… வந்து… உன் பொண்ணே நீயே இப்படி குரங்குக்கு ஒப்பேத்தி பேசலாமா? நான் என்ன வேணும்னா போறேன் சிநேகிதிக கூப்பிட்டாங்க போனேன்… என்னமோ தினமும் அதையே செய்றேன்ற மாதிரி சொல்றியே… ” அவள் கூறிக்கொண்டு இருக்கும் போதே தேவாவின் தோழி மேகலா வீட்டிற்குள் நுழைந்தாள்.
“தேவா… ஏய் புள்ள தேவா.. ” உள்ளே வந்தவள் அவளை பார்த்ததும் “நீ இங்கயா இருக்க?” என அருகில் வந்திட தன் இரு காதுகளையும் பொத்தியபடி “ஏன்டி இப்படி காதே செவிடா போறாமாதிரி அலறிகிட்டு வர”.
“ஏது நான் கத்துறனா?” என தன் அதிர்வை காட்டினாலும் “சரி அப்படியே வைச்சிக்க சீக்கிரம் கிளம்பு எங்க வீட்டுக்கு போலாம்” என்றாள் அவளின் பேச்சை புறம் தள்ளியவளாக
“உங்க வீட்டுக்கா??? எதுக்கு??”
“இன்னைக்கு தான் எங்க அக்காவ டவுன்ல இருந்து பொண்ணு பாக்க வராங்க புள்ள… எத்தனை முறை நம்மல ஓட்டி இருக்கும் இன்னைக்கு வசமா நமக்கிட்ட சிக்கி இருக்கு வா புள்ள” என்றாள் ஆர்வமாக.
தேவாவிற்கோ அங்கே செல்ல வேண்டுமென ஆசையாக இருந்தாலும், அவன் வந்து விடுவானோ என தயங்கியவள் பட்டென “நான் வரல புள்ள” என்றாள்.
தேவாவை ஆச்சரியமாய் பார்த்த மேகலா “ஏய் தேவா நீயாடி இது!! ஆசையா கூப்பிட்டா இப்படி வரமாட்டன்னு சொல்லுறியே டி” மேலும் கீழுமாக அவளை பார்த்து..
இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டே வேலை செய்தபடி இருந்த மரகதமோ ‘பாவம் புள்ள நேத்து நடந்த சம்பவத்தால போக பயப்புடறா போல இருக்கு’…என நினைத்தவர் செய்த வேலையை அப்படியே வைத்துவிட்டு “அவ தான் ஆசையா கூப்பிடுறா ல போயிட்டு தான் வாயேன்…” வாஞ்சையுடன் கூறிட,
“பச் நீயும் ஏன்மா அவளுக்கு பேசுற?? நான் தான் போகலன்னு சொல்றேனே” என்றாள் சிணுங்கிய குரலாக
“அட…. மழை தான் வரபோகுது போ… போயிட்டுவான்னு சொல்றேன் ல பாவம் புள்ள எவ்வளவு நேரமா நிக்குது. போயிட்டு வாடி” கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக மேகலாவுடன் அனுப்பி வைத்த தாயை எதுவும் பேச முடியாமல் தோழியை முறைப்புடனே பார்த்தவள் “வா அங்கேயே என்ன பாக்குற?” கூறியபடியே மேகலாவுடன் இணைந்து நடந்தாள்.
“அதுதான் புள்ள எனக்கும் புரியல… நான் வெளியே போகனும்னு சொன்னாலே எங்கம்மா பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாங்க நீ வந்து கேட்டதும் போன்னு வழி அனுப்பி வைக்கிறாங்க…. அதுசரி இப்போ நான் முக்கியமா வந்தே ஆகனுமா?” என்றாள் கடுப்புடன்,
அந்த பக்கம் மேகலாவுடன் அவள் சென்றதும் இந்த பக்கம் விசாகனின் பைக்கில் தேவாவின் வீட்டிற்கு வந்தவன் தன் பேசியை வாங்கிச் சென்றான்..
மேகலாவின் வீட்டிற்கு சென்றவளுக்கு அங்கே நிலவிய சூழலில் தன்னை பொறுத்துக் கொள்ளவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தவித்தவள், தோழிகளின் கேலி பேச்சில் தன்னையும் மறந்து அவர்களுடன் இணைந்து நேரம் சென்றதே தெரியாமல் வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு திரும்பினாள்.
வந்தவள் முதல் வேளையாக அறைக்குள் சென்று போனை தேடினாள். அது அவள் வைத்து இடத்தில் இல்லாமல் போனது ஒருவேளை நாம கைதவறி வேற எங்கேயாவது வைச்சிட்டோமோ என அறை முழுவதும் துழாவியவள் சந்தேகத்துடன் “அம்மா யாராவது வந்தாங்களா?” என்றாள்.
“இல்லையே” என மரகதம் கூற ‘அப்போ போன் எங்க போச்சு’ தன்னுக்குள்ளே கேள்வியாக மறுபடி அறைக்குள் சென்று தேட முற்பட நியாபகம் வந்தவராக “ஆமாடி நேத்தைக்கு உன்னை கொண்டு வந்து விட்டுட்டு போனாங்களே… அந்த தம்பி தான் ஏதோ போனை மறந்து உன்கிட்ட விட்டுடுச்சாமே… அதை வாங்க வந்தாங்க…” என்றார்.
அவனை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கோபம் இருந்தாலும் தாயிடம் காமித்தால் காது கிழியும் அளவிற்கு பேசியே கொன்று விடுவார்கள் என அமைதியாய் உள்ளே செல்ல முயல “அந்த புள்ளதான் போனை கொடுத்தா உனக்கு எங்கடி போச்சி அறிவுகெட்டவளே… அந்த தம்பிக்கு ஒன்னுக்கு ரெண்டு வேலை வைச்சி இருக்க எவ்வளவு பொறுப்பான புள்ளையா இருக்கு அவங்க வேலையெல்லாம் விட்டு வந்து இருக்காங்க” அவனை பாராட்டி பேசியபடி இருந்தார்.
தேவாவிற்கோ சுறுசுறு என கோபம் உள்ளுக்குள் ஏறியது ‘அவ்வளவு நேரம் சிடுமூஞ்சிக்காக வைட் பண்ணிட்டு இருந்தேன் அப்போ எல்லாம் வரமா…. நான் இல்லாதப்போ வந்து இருக்கான்… இந்த அம்மா வேற இப்போ பாட்டா படிக்குது வீட்டுக்குள்ளையே இருந்த என்னைய வெளியே துறத்தினதே நீதானே மா’ கடுப்பில் உச்சத்தில் எல்லோரையும் மனதில் வறுத்துக் கொண்டிருந்தாள்…