அந்த வார இறுதியில் நிரஞ்சன் தன் பெற்றோர்களை காண சென்றான். அங்குதான் முகுந்தம் இருக்க
“எப்படி இருக்க முகுந்தா?”என்றவன்
“அம்மா இருந்தாங்க உங்க மாத்திரை…” என்று ஒரு கவர் கொடுத்தான்.
“நிரஞ்சா, இந்த வார கடைசியில திருப்பதி போகணும். பெரிய கார் கொண்டு வந்துரு…” என்று சுசிலா சொல்லவும் நிரஞ்சன் முகம் கொஞ்சம் யோசனையை காட்டியது.
“என்னடா யோசிக்கிற..” என்று தாய் கேட்கவும்.
“அதில்லம்மா கார் வந்து வாடகைக்கு போய் இருக்கு.. வர்றதுக்கு எப்படியும் பத்து நாளைக்கு மேல ஆகும். உடனே போகணுமா நீங்க திருப்பதி…” என்று மகன் கேட்க.
“என்ன வாடகை? என்னடா சொல்ற நிரஞ்சா? நாங்க மட்டுமா போறது.. கோவிலுக்கு குடும்பமா தான்டா போகணும். நீங்க, நான், முகுந்தன் குடும்பம் எல்லாம் தான்..”
“அவ்ளோ பெரிய கார் வீட்டில் வைத்து என்னமா பண்ண போறேன். அதான் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சீரியல்ல இருக்கான். சீரியலுக்கு வாடகைக்கு விட்டுட்டேன்…”
“நம்ம வீட்டுல கொண்டு வந்து விடுடா…” என்றவர்,
“கோவிலுக்கு போகணும் நிரஞ்சன். உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிடு அப்புறம் லீவ் இல்ல அப்படி இப்படி ஏதாவது சாக்கு சொல்லுவா…”
“சாக்கு என்ன சொல்லப் போறா… அவகிட்டயும் ஒரு வார்த்தை கேட்கணும்மா.. நீங்களும் ஒரு வார்த்தை சொல்லுங்க. அவளும் வேலைக்கு போறா, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. எல்லாம் பார்த்து தான் யோசிக்கணும்…”
மகன் வார்த்தை சுசீலாவுக்கு கொஞ்சம் லேசாக வலித்தது. முன்பெல்லாம் அப்படி கிடையாது. சுசிலா சொன்னா, நிரஞ்சன் செய்வான். இன்று மனைவிக்காக யோசிக்கிறான் போல… மருமகள் கிட்ட எல்லாம் சொல்லி செய்து சுசீலாவுக்கு பழக்கம் கிடையாது. அவர் யோசனை தான் எப்போதும்.. மகனிடம் சொன்னால் அவன் செய்து விடுவான். அப்படி தான் இவ்வளவு நாளாக… இன்று மனைவிக்காக பார்க்கிறான் அவளிடமும் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று சொல்கிறான் வியப்பாக இருந்தது. மனைவியை மதிக்கிறான் என்பதெல்லாம் சரிதான், இருந்தாலும் ஒரு ஓரத்தில் மனைவி அதிகமாக தூக்கி வைக்கிறானோ என்று ஒரு எண்ணம் சுசீலாவுக்கு…
“காரை ஏன்டா வாடகைக்கு விடுற.. அடுத்தவங்க கை பட்டா உனக்கு பிடிக்காது நிரஞ்சா எப்படி?… என்று முகுந்தன் கேட்க.
“வேற என்னடா பண்ண… நான் இருக்குற வாடகை வீட்டுல ரெண்டு கார் அலோ பண்ண மாட்டாங்களாம். அதோட நல்ல வருமானம் கொடுக்குறாங்கடா.. முட்டாள் தனமான கொள்கையை தூக்கி போட்டேன்…” என்று நிரஞ்சன் சொன்னதும்,
“தொழில் ஓரளவு நல்லாத்தான் போகுதுன்னு சொன்ன.. அப்புறம் என்னடா பணத்துக்கு?…” என்று முகுந்தன் கேட்க.
“பெரிய பாப்பா பேர்ல கொஞ்சம் இன்சூரன்ஸ் போட்டு இருக்கேன். சின்ன பாப்பா பேர்ல சேவிங் தொடங்கி இருக்கேன்டா.. அதோட வருமானம்.. வருது எல்லா நேரமும் வராது இல்ல. நர்மதா ஓட சம்பளத்துல தான் இப்ப வீடு போயிட்டு இருக்கு. அப்ப ஏதாவது அவசர தேவை என்றால் என்ன பண்ண?.. சொந்த தொழில், காசு போட்டுட்டே இருக்கணும். அதுக்கு தான் கார் வாடகைக்கு விட்டேன். ஒரு அளவுக்கு காசு வருது. ஒரு அவசரத்துக்கு கடைக்கு தேவையானது வாங்க அந்த வருமானம் தான்டா…”
நிரஞ்சன் எதார்த்தமாகத்தான் சொன்னான். பெற்றவர்கள் பார்வை என்னவோ மகன் மீதுதான்…
“ரொம்ப கஷ்டமா இருக்காடா நிரஞ்சசா…” என்று அண்ணன் கேட்க.
“கொஞ்சம் கஷ்டம் தான். அப்பப்ப பணம் செலவுக்கு இழுத்து பிடிக்குது. ஆனாலும் கடன் இல்லாமல் போகுது, அதுவரைக்கும் ஓகே… முன்னாடியெல்லாம் நர்மதாவா நீ வேலைக்கு போக வேணாம்னு சொல்லி சண்டை போட்டு இருக்கேன். இப்போ யோசிக்கிறேன்டா.. ஓரளவுக்கு அவ வேலைக்கு போறத வச்சு தான் குடும்ப ஓடிட்டு இருக்கு. இப்ப நான் எடுக்கிற பணம் எல்லாமே திரும்ப கடைக்கு தான் போட்டுட்டு இருக்கேன். முழுசா பெரிய வருமானம் எடுக்க முடியல.. அவ்வளவுதான் கொஞ்சம் வருஷம் ஆகும்…” என்று நம்பிக்கையாக சொல்ல,
சுசீலா வந்து மகன் அருகே அமர்ந்து கொண்டார். மகன் வார்த்தை என்னவோ போல இருந்தது போல பெற்றவர்களுக்கு… தாய் மகன் கையைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க நிரஞ்சன் புரியாமல் பார்த்தான்.
“என்னம்மா?…”
“ரொம்ப கஷ்டப்படுறியாடா…” சுசிலாவுக்கு கண்கள் கலங்கியது.
“அம்மா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நல்லா தான் இருக்கோம். என்ன நான் நினைச்ச மாதிரி என்னால வேகமா ஓட முடியல பரவால்ல… அதுக்காக நீ ரொம்ப பீல் பண்ணாத மகன் கஷ்டப்படுறான்னு…” என்று நிரஞ்சன் சமாதானம் சொல்ல,
பெற்றவர்களுக்குத்தான் மனம் ஒரு மாதிரி இருந்தது. சுசிலா பார்வை சின்ன மகனே வட்டமிட…
நிரஞ்சனுக்கு லேசாக காதோரம் நரைத்து முன்பக்க முடி மேலே ஏறி இருந்தது. கொஞ்சம் வெயிட் குறைந்து இருந்தான்.
“என்னடா ரொம்ப வெயிட் குறஞ்ச மாதிரி இருக்க. வேலைக்கு போறேன், வேலைக்கு போறேன்னு உன்னை சரியா கவனிக்கறது இல்லையா அவ… அது என்ன காதோரம் லேசா நரச்சுருக்கு. அப்படி என்னடா உனக்கு வயசு ஆச்சு.. என்னடா கவலை மனசுக்குள்ள.. என்னடா வச்சிருக்க…” என்று மகனை உலுக்க..
“அம்மா நீ வேற நான் என்ன சின்ன பையனா, சும்மா இருங்க…” என்று முடியை சரி செய்தவன்,
“இன்னும் ஆறு மாசம் போனா நம்ம பாப்பாவுக்கே பத்து வயசு ஆயிடும். நீங்க என்னவோ நான் இன்னும் குழந்தை மாதிரி நினைச்சுட்டு.. போங்கம்மா…” நிரஞ்சனுக்கு எனக்கு ஒரு மாதிரி இருந்தது. லேசாக சிரிப்பும் லேசாக வெட்கமும்..
அவனுக்கு கல்யாணம், குழந்தை என்று வந்தபின்.. தாயோடு ஒட்டுதல் அதிகம் எல்லாம் கிடையாது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தாய் வந்து அருகில் உட்கார்ந்து தலையை தடவி பார்ப்பது, முகத்தை தொட்டு ஒரு மாதிரியாக வித்தியாசமாக இருந்தது.
“நீ சம்பந்தம் பண்ணாலும் எனக்கு மகன்தான, அது மாறாது இல்ல.. கொஞ்ச நேரம் இரு நிரஞ்சா.. நீங்க ரெண்டு பேரும் வர்றீங்கன்னு தான் அப்பா கறி எடுத்துட்டு வந்தாங்க நான் போய் பிரியாணி பண்றேன்…” என்று எழுந்து உள்ளே சென்றார் சுசீலா.
“பண்ணுங்கம்மா உங்க கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. அப்படியே கொஞ்சம் சேர்த்து பண்ணுங்க, நான் வீட்டுக்கு கொண்டுட்டு போறேன். நர்மதாவுக்கும், பிள்ளைகளுக்கும் பிடிக்கும்..” என்று நிரஞ்சன் சேர்த்து சொல்ல,
சுசிலா முகத்தை ஒரு மாறி வைத்துக் கொண்டு உள்ளே சென்றார். ஒரு பெருமூச்சு அவருக்கு..
“இனி என்னவென்றாலும் மகனோடு சேர்த்து மருமகளும் தான். அவன் குடும்பம் அதுதானே… மருமகளையும் சேர்த்து அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும் போல…” எண்ணம் எழுந்தது சுசிலாவுக்கு..
நிரஞ்சன் போன் பேச வெளியே செல்ல.. முகுந்தன் தந்தை முகத்தைப் பார்த்தான். அவர் முகம் ஒரு மாதிரி வாடி இருக்கவும் அருகே சென்று,
“என்னப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…” என்று கேட்கவும்,
“ஒன்னும் இல்லை முகுந்தா… பிள்ளைகள் என்னவோ வருங்காலத்தில் கஷ்டப்படக்கூடாதுன்னு தான் நாங்க எல்லாம் கஷ்டப்பட்டோம். எங்களுடைய செலவுகளை கூட குறைச்சு உங்களை நல்லா படிக்க வச்சா, நல்லா வந்துடுவீங்க.. இவங்களுக்கு சேர்த்து வச்சா நல்லா போயிடுவாங்க.. அப்படின்னு என்னென்னவோ ப்ளான் போட்டு தான் நானும் உங்க அம்மாவும் நிறைய சேர்த்து வச்சோம், படிக்கவும் வச்சோம்.. ஆனாலும் நீங்க கஷ்டப்படுறீங்க.. பார்க்க வலிக்குதுடா…”
“அப்பா என்னப்பா இது?..” என்று மகன் கையை பிடித்து கொள்ள,
“நாங்க படாத கஷ்டத்தை ஒன்னும் நீங்க படல தான். இருந்தாலும் நீங்க கஷ்டமே படக்கூடாதுன்றது தான் பெத்தவங்களா எங்களோட ஆசை, கனவு. உங்க வாழ்க்கைக்காக நீங்க ஓடுறது கூட எங்களுக்கு கஷ்டமா இருக்கு…” என்று சொன்னார் தாமோதரன்.
அது முகுந்தனுக்கும் நன்றாக புரிந்தது. நிரஞ்சன் மிகச்செல்லம் வீட்டின் கடைக்குட்டி என்று அவனுக்குத்தான் விட்டுக் கொடுத்துப் போவது.. அதுவும் சுசிலாவுக்கு நிரஞ்சன் அவ்வளவு இஷ்டம். இன்று உடல் முடியாததோடு சொந்த தொழில், மனைவி, பிள்ளைகள் என்று அவன் கஷ்டப்படுவது அவன் குடும்பத்திற்காக தான் என்றாலும் பார்க்கையில் வலித்தது பெற்றவர்களுக்கு..
“என்னப்பா.. நான் வேனா என் குடும்பத்தோடு திரும்ப இங்கவே வந்துடவா…” பெற்றவர்களுக்காக சொன்னான்.
“ஏண்டா டேய்.. நல்லா போறது உனக்கு புடிக்கலயா. தினமும் ஒரு பிரச்சனையை பார்க்கணுமா…” என்று தந்தை கேட்டதும்,
“என்னப்பா…” முகுந்தன் முகம் லேசாக வாடியது.
“பின்ன என்னடா… இங்க ரெண்டு மருமகள்கள் மட்டும் இருக்கட்டும்.. உங்க அம்மா வயசு பிள்ளை மாதிரி துள்ளிட்டு மகன்களுக்கு பிரியாணி செய்ய போய் இருப்பா? ஆயிரம் குறை சொல்லி இருப்பா… காலை ஆட்டிட்டு மருமகளை வேலை ஏவி இருப்பா.. உன் பொண்டாட்டி ஒரு பக்கம் முகத்தை தூக்கும், நிரஞ்சன் ஒரு பக்கம் காத்துவான்…”
“ஆனா இன்னைக்கு நாங்க நல்லா இருக்கோம். நீங்க கூட இல்லை, அந்த குறை மட்டும் தான். ஆனாலும் எட்டி பாக்குற தூரம் தான… வாரத்துல ரெண்டு நாள் நீ பார்க்க வந்துற.. உன் தம்பி மருந்து, மாத்திரை, சாப்பாடுன்னு ஏதாவது தினமும் கொண்டு வந்துடுவான். உங்க அம்மாவும் மகன்களுக்கு, பேரன், பேத்திக்குன்னு என்னத்தவாது செஞ்சிட்டு இருப்பா… எல்லாரும் நிம்மதியா இருக்கோம். அது போதும்…”
“அப்பா..” என்று மகன் சாய்ந்து கொள்ள,
“உண்மை முகுந்தா.. அன்னைக்கு காலத்துல தொழில், வருமானம் எல்லாம் ஒன்னா இருந்துச்சு. அதனால் எதுவும் தெரியல. ஆனா, இன்னைக்கு அவங்கவங்க திறமைக்கு தக்க பொருளாதார முன்னேற்றம் இருக்கு.. நம்ம பெத்த பிள்ளைகளுக்கு தனிப்பட்ட ஆசை, விருப்பம், லட்சியம் இருக்கு.. பாசத்தால உங்களை பிடிச்சு வைக்க விருப்பம் இல்லை. நாங்க தள்ளி நின்னு பார்த்து சந்தோசபடுறோம். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க. உங்க அம்மாக்கு மகன்கள் மேல பாசம் இருக்கு, மருமகளை அரவணைக்க தெரியல. அது வரவும் வராது…”
தந்தை சொன்னதன் நியாயம் முகுந்தானுக்கு நன்றாக புரிந்தது.
மாலை பள்ளி விட்டு வீடு வரும் போதே பிரியாணி வாசம் நர்மதாவை கட்டி இழுத்தது. வந்ததும் தட்டு எடுத்து அங்கு தான் போய் நிற்க.
நிரஞ்சனுக்கு சிரிப்பு தாங்க வில்லை.
“என்ன நம்பு இது நம்ம சான்வி மாதிரி வந்ததும் டிரஸ் கூட மாத்தாம தட்ட தூக்கி நிக்குற…”
“இன்னைக்கு தானே நான் வரும்போது சாப்பாடு என்ன வரவேற்கிறது இல்லைன்னா சிங் நிறைய பாத்திரம் தான் இருக்கும்…” என்றவள்,
“அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால காலேஜ் விட்டு வரும்போது வீட்டில் சாப்பாடு இருக்கும். நான் சின்ன வயசுல இருந்தே அப்படித்தாங்க ஈவினிங் சாப்பிடுவேன். எனக்கு ஸ்னாக்ஸ் எல்லாம் அவ்வளவா ஒன்னும் இஷ்டம் இருக்காது. ஸ்கூல் விட்டு வந்ததும் தட்ட தூக்கி சாப்பிட தான் உட்காருவேன்…”
“என்னைக்கு கல்யாணம் ஆகி எனக்குன்னு ஒரு குடும்பம் வந்துச்சோ இல்ல இல்ல என்னைக்கு நான் ஒரு அம்மாவை ஆனேனோ அன்னைக்கே எனக்கு சாப்பாடு அப்படின்றதெல்லாம் மறந்து போச்சு… அழுகிற பிள்ளையை பார்க்கிறதா, புருஷனை பார்க்கிறதா, மாமா, மாமியாரை பார்க்கிறதா… இதுல எனக்குன்னு யாராவது சமைச்சு வச்சுட்டு உட்காருவாங்களாக்கும்…” லேசான சடவு அவள் குரலில்…
“உங்க அம்மா சமையல் தானே.. அத்தை பிரியாணி செஞ்சா அவ்வளவு சூப்பரா இருக்கும். ஆனா, நான் வந்ததுக்கப்புறம் அவங்க, அவங்க சமையலுக்கு தான் லீவ் விட்டாங்க…”
“ஏன் எங்க அம்மா உனக்கு சமைச்சு கொடுத்ததே இல்லையா நர்மதா…”
“யாரு? உங்க அம்மா?.. மகனுக்குன்ன செய்வாங்க. எந்த காலத்துல மருமகள் வேலைக்கு போயிட்டு வாரான்னு சொல்லி மாமியார் சமைச்சு வச்சாங்களாம்… எனக்கு அப்படி எல்லாம் நடந்தது இல்லப்பா…” கேலியாக சொன்னாள் நர்மதா.
“அப்ப நீ எங்க அம்மா சமையல் சாப்பிட்டதில்லை அப்படித்தானே…” நிரஞ்சனும் அதே கேலியோடு தொடங்க,
“சாப்பிட்டு இருக்கேன்.. சாப்பிட்டு இருக்கேன். அதனால தான்னா அந்த டேஸ்ட் என் நாக்குல ஒட்டி இருக்கு, டிரஸ் கூட மாத்தாம தட்ட தூக்கி நிற்கிற அளவுக்கு… என்ன ஒன்னு மருமகளுக்கு செய்ய மாட்டாங்க. மகனுக்கு செய்வாங்க.. நெல்லுக்கும் பாயிறது புல்லுக்கும் அப்படின்ற மாதிரி நானும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்துப்பேன்…” அதே கேலி மாறாமல் நர்மதா பேச,
“தைரியம் தான். எங்க அம்மாவை என் முன்னாடியே கிண்டல் பண்ற… நிரஞ்சன் மேல பயம் விட்டு போச்சு…” முகம் சிரிப்பில் இருந்தாலும் குரலில் கோபத்தை கொண்டு வந்து சொல்ல, மனைவி அசரவே இல்லை.
“தைரியம் தான். சுசீலா மகன் தான் நர்மதா புருசனாகி ரொம்ப நாள் ஆச்சே…”
“பயமே கிடையாது நர்மதா புருசன், நர்மதா மாதிரியே ரொம்ப சாது. அவளை மாதிரியே அப்பாவி…” என்று பிரியாணியில் ஐக்கியமாகி விட்டாள் நர்மதா.
புன்னகை முகமாக மனைவியை பார்த்து இருந்தான் நிரஞ்சன். உடல் ரீதியான தாம்பத்திய வாழ்க்கையில் தள்ளி நின்றாலும், உள்ளம் நிறைந்த தாம்பத்திய வாழ்க்கையில் இனைந்தே இருந்தார்கள்.
முன்பெல்லாம் நர்மதாவுக்கு கணவன் முன் பேசும் போது ஒரு ஒத்திகையே பார்த்துக் கொள்வாள். ஏனெனில், நிரஞ்சன் எதில் குத்தம் பிடிப்பான் என்றே தெரியாது. அதுவும் அவனிடமே அவன் தாயைப் பற்றி ஒரு வார்த்தை கேலியாக கூட சொல்லி தப்பிக்க முடியாது. இப்போதெல்லாம் நிறைய பேசுகிறாள். முன்பை விட இப்பொழுது கணவனிடம் தான் அதிகம் பேசுகிறாள்.
அதுவும் மனம் விட்டு… சர்வ ஜாக்கிரதையாக இல்லாமல், என்ன பேசினால் அவன் என்ன கேட்பான் என்ற தயக்கம் இல்லாமல், எதார்த்தமாக மனதில் தோன்றுவதை ஃப்ரீயாக பேசி விடுகிறாள். அதுவே ஒரு மாதிரி அந்த நாள் நன்றாக செய்வதாக எண்ணம். இப்படி பேசுவது பிடித்தும் இருந்தது.
மறுநாள் காலை நர்மதா அரக்கப் பறக்க கிச்சன் ஏரியாவுக்குள் நுழையும் போதே, இஞ்சி தட்டி போட்ட டீயின் வாசம் அவளை கவர்ந்து இழுத்தது. நிரஞ்சன் தான் மனைவிக்காக தயார் செய்து வைத்திருந்தான். முகம் முழுக்க புன்னகையோடு நர்மதா திரும்பிப் பார்க்க, மனைவியை பார்த்து கண் சிமிட்டு விட்டு வாக்கிங் செல்ல கீழே சென்று விட்டான். மேலே நின்று கணவன் அதை தெருவை கடக்கும் வரை அவனை பார்த்து நின்றாள்.
பால்கனி ஜன்னலை திறந்து பார்க்க லேசாக சூரிய ஒளி படர சூழல் ரம்யமாக இருந்தது. அங்கிருந்து சேரை இழுத்து போட்டு கணவன் போட்டு வைத்திருந்த டீயோடு அமர்ந்து விட்டாள் நர்மதா. அவளுக்கு ஆற அமர டீயை ரசித்து ருசித்து குடிக்க மிகப் பிடிக்கும்.. என்று ஒரு குழந்தைக்கு தாயானவங்களோ… அதுவும் வேலைக்கு சென்ற பின் ஆற அமர என்ற நாளெல்லாம் பின்னால் போய்விட்டது. என்ன சமைக்கலாம், பிள்ளைகளை எழுப்ப நேரத்தை பார்க்க, கணவனுக்கு செய்ய, மாமியாரை பார்க்க என்று மனதில் பல பட்டியல் வைத்துக் கொண்டு கிச்சன் வேலையை பார்க்க ஓடணும். அடுப்பில் சாதம் கொதிக்க பக்கத்தில் குக்கர் விசில் விட அவசரமாக ஒரு டீ… இந்த மாதிரி ஆற அமர்ந்து, யாரேனும் டீ போட்டுக் கொடுத்து ரிலாக்ஸ்சாக உட்கார்ந்து டீ குடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
நிரஞ்சன் வாக்கிங் போய்விட்டு, அப்போதுதான் வீட்டுக்குள் நுழைய ஓடிவந்த நர்மதா, அவனை அனைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.
“ஆஹா… நான் என் பொண்டாட்டிக்கு வைரத்துல நகை எடுக்கும் போது கூட இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலையே எனக்கு…” என்று போலியாக நிரஞ்சன் அழுது கொள்ள,
நர்மதா லேசாக முறைக்க.. அவனுக்கு சிரிப்பு தாங்க வில்லை.
“உண்மையிலேயே நீ சொன்ன மாதிரி நர்மதா புருஷனுக்கு பணத்தை சிக்கனம் பண்ணவே தெரியல பாரேன். சுடுதண்ணியில் பாலும் டீத்தூளும் போட்டு கொதிக்க விட்டா.. இப்படி ஒரு கிஸ் கிடைக்குது இது தெரியாம லட்சக்கணக்கில் எல்லாம் செலவு பண்ணிட்டு வந்திருக்கேன். நெஜமாவே நீ மக்கு தான் நிரஞ்சா…” என்று என்று அவனை அவனே கேலி செய்ய,
“ஐயே பேச்சை பாரு…”
“இனி பாரு நம்மு டீல தான் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே மெல்ல மெல்ல சட்னி, தோசை, சாம்பார் சப்பாத்தி, பிரியாணின்னு கொண்டு வந்து உன்னிடம் ஆஃபர் வாங்கிடுறேன்…” என்று மேலும் கேலி பேச,
பட்டென்று பதிலுக்கு பதில் கொடுக்கத் தெரியாத நர்மதா,
“பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடண்டானாம்…” என்று நக்கல் பேசி நகர்ந்து விட்டாள்.
நாட்கள் சாதாரணமாக நகர.. ஒரு மாதம் கழிந்த நிலையில் பிருந்தா தங்கைக்கு போன் செய்தாள்.
“என்னடி சொல்ற காலங்காத்தால.. அப்பாவுக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கார்…” பதறிப் போய் நர்மதா கேட்க.
“கல்லீரல் பிரச்சனை தான். முன்னாடியே இருந்துச்சில்ல… நம்ம கிட்ட சொல்ல வேணாம்னு இருந்திருக்காரு போல.. ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி நான்கு நாள் ஆச்சு.. நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமா?…”
“நான் உடனே கிளம்பி வாரேன் நீ ரெடியா இரு.. நான் இப்பவே இவரை எழுப்புகிறேன்…” என்ற நர்மதா நிரஞ்சனை எழுப்பி விஷயத்தை சொல்ல அவனுக்கும் பதட்டம் தான்.
உடனே ஊருக்கு அழைத்து பேசி ரொம்ப ஒன்றும் கஷ்டமில்லை என்ற பின் தான் கொஞ்சமான ஆறுதல் நர்மதாவுக்கு… ஆனாலும் முழு ஆறுதல் இல்லை. உடனே தன் அக்காவோடு மதுரைக்கு கிளம்பி விட்டாள். நிரஞ்சன் தான் டிக்கெட் போட்டு கொடுத்து அனுப்பி வைத்தான். பிள்ளைகளை அனுப்பவில்லை. நிரஞ்சன் தனியாக பிள்ளைகளுடன் இருந்து கொண்டான்.
கல்லீரல் பிரச்சனை முன்பே இருந்ததுதான். பொழுது கொஞ்சம் ஹெவியா இருக்கு போல… பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையை பார்க்கவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும்போது தங்கள் நிலையை சொல்லி ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று தான் சொல்லாமல் இருந்திருப்பார்கள் போல…
பிருந்தா வந்ததும்,
“நான் என்ன செத்தா போயிட்டேன் ஒரு வார்த்தை சொல்லலையே கட்டி கொடுத்து அம்புட்டு தானா…” அவள் ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தாள்.
நர்மதாவுக்கு பேச்சே இல்லை, ஒரே அழுகை தான். பத்து நாட்களாக ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள் போல ஒரு வார்த்தை தங்களிடம் சொல்லவில்லையே…
“என்னத்த சொல்ல நீங்களே இப்பதான் கையை ஊண்டி எந்திரிச்சு நிக்கிறீங்க…” என்று விஜயா சொல்ல,
“ஆமா கஷ்டம் நஷ்டம் யாருகிட்ட இல்ல… எல்லாருக்கும் அவரவர் வாழ்க்கை பாடு தான். அதுக்காக பெத்தவங்கள நாங்க அப்படியேவா விடுவோம். ஒத்த வார்த்தை என்கிட்ட சொல்லலையே…” முனங்கி கொண்டே தான் இருந்தாள் பிருந்தா.
“மூணு மக்கள பெத்து வளர்த்தது எதுக்கு?… இப்படி தனியா கிடந்து அல்லாடவா…” நர்மதாவும் சடவு தான் சொன்னாள்.
பால மரத்தான் கண்விழித்து மகள்களோடு நன்றாக அமர்ந்து பேசவும் தான் பிள்ளைகள் அழுகை நின்றது. விஜயாவுக்கும் மகள்கள் வந்தபின் ஒரு புது தெம்பு கிடைத்தது. இத்தனை நாட்கள் அவராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
மகன் பணம் எவ்வளவு செலவழிக்கவும் தயாராகத்தான் இருந்தான். ஆனால், உடன் இருந்து பார்த்துக் கொள்ளத்தான் ஆள் இல்லை. மருமகளை எதிர்பார்க்கவே முடியாது. நானே கைப்பிள்ளை வைத்திருக்கிறேன் என்று ஒரேதாக ஒதுங்கி கொண்டாள்.
தந்தை பொறுப்பை மகள்கள் எடுத்துக் கொள்ள விஜயாவுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. சுபாவை குறை ஒன்றும் சொல்ல முடியாது. அவளுக்கு ஒரு மாதிரி ஹாஸ்பிடல் ஸ்மல் எல்லாம் அலர்ஜி. அதுவும் மாமனாருக்கு என்று நாள் முழுக்க அங்கேயே இருக்க அவளுக்கு விருப்பமில்லை. ஏதோ ஹாஸ்பிடலுக்கு சமைத்து தருகிறேன். வீட்டை பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான், அதைத் தாண்டி மாமனாரை உடன் இருந்து பார்த்துக் கொள்ள முடியாது என்று முன்பே திட்டவட்டமாக சொல்லிவிட்டாள்.
விஜயாவுக்கு அப்பொழுதே ஒரு உறுத்தல்தான். என்னதான் கணவர் என்றாலும் நாள் முழுக்க கூடவே இருந்து பார்த்துக் கொள்ள முடியுமா?… ஓரளவு அவருக்கும் ஓய்வு தேவை தானே.. அதை கொடுக்கத்தான் யாரும் தயாராக இல்லை. மகன் வேலைக்கு செல்கிறவன். பணம் வேண்டும் என்றால் கேளுங்கள் என்று முடித்துக் கொண்டான். மருமகளை பார்க்க, உங்க மகள்களை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று அவளும் முடித்துக் கொண்டாள்.
ஏற்கனவே பல பிரச்சனைக்கு பின் தற்போது தான், நர்மதா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பிருந்தாவும் இப்போதுதான் சொந்த வீடு என்று வாங்கி இருக்கிறாள். மகள்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று அவர்களே பார்த்துக் கொள்ள… எப்படியோ விசயம் தெரிந்து பிள்ளைகள் வந்து விட்டார்கள். அதுவரை ஒரு நிம்மதி தான்.
விஜயா பார்வை முழுக்க மகள்கள் மேல்தான். அவர்களுக்கு தகப்பன் மேல் எந்த அருவருப்பும் வரவில்லை. அங்கேதான் உறக்கம் உணவு எல்லாம்… சிறு முகசுழிப்பு கூட இல்லாமல் தந்தையை கவனித்தார்கள்.
பால மரத்தானுக்கு யூரின் டியூப் போட்டு இருக்க… அதை சுத்தம் செய்தது எல்லாம் பிருந்தா தான். அவரின் உடைகள் ஒரு மாதிரி ஆனா போதும் மற்றவர்கள் போல ஒதுங்கி நிற்காமல் தந்தையை சுத்தம் செய்தது நர்மதா தான்.
பிருந்தாவுக்கு அவ்வளவு கோபம்.
“ஆம்பள பையன் தூக்கி வச்சு ஆடுனிங்க பெத்த தகப்பன் தானே அவன் கூட மாட வந்து இருந்தா என்ன?… இவ்வளவு பெரிய மனுஷன் தூக்க செய்ய சங்கடப்படுறாரு… மகன்னா அவருக்கு கொஞ்சம் நல்லா இருக்குமல்ல…”
“எனக்கே தெரியலடி அவன் போக்கு.. அந்த சுபாவுக்கு உங்க அப்பா எவ்வளவு பார்த்து இருப்பார். என்னமோ தொட்டா ஒட்டிக்கிற நோய் மாதிரி தள்ளியே நிப்பா.. பாக்க வந்தாலும் பேருக்கு அங்க வெளியே வாசல் நின்னு எட்டி பார்த்துட்டு போவா…” என்று விஜயாவும் மருமகளை குறை படிக்க,
“விடுமா இவரு எங்களை பெத்த தகப்பன். எங்களுக்கு தான் ரத்தம் துடிக்கும். நாங்க அருவருப்பு படாம தொட்டு தூக்க செய்யலாம், பாக்கலாம். அவ என்ன பண்ணுவா பாவம். என்னதான் மாமனார இருந்தாலும், கொஞ்சம் தள்ளித்தான் இருப்பா.. பெத்த மகள்கள் செய்றது போய் மருமகாட்ட எதிர்பார்க்க முடியுமா?.. சும்மா என்னவாவது பேசாத…” என்று நர்மதா சொன்ன பின் தான் விஜயாவும் வாயை மூடினார். பின் அவருக்கு அவ்வளவு ஆதங்கம் இருந்தது மருமகள் மீது…
“என்னடி…” என்று பிருந்தாவும் வர,
“என்ன நீயும் வர.. இவர் நம்ம அப்பா அதனால அவரை பார்த்துட்டு அதே இடத்துல சாப்பிட நமக்கு ஒண்ணுமே கிடையாது. இதுவே வேற யாரோவா இருந்தா… நம்ம என்ன பண்ணி இருப்போம், தள்ளி நின்று தானே பார்த்துட்டு போயிருப்போம்…” என்றவள்,
“அப்பாவை பார்த்துக்கப்புறம் தான் நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்…” என்று நகர்ந்து விட்டாள் நர்மதா.
ஓரளவு பால மராத்தான் மகள்கள் கவனிப்பில் முன்னேற தொடங்கினார். அன்று நர்மதா வெளியில் சென்று வந்து இருக்க… மூணு முறை நிரஞ்சன் கால் செய்து விட்டான்.
“நர்மதா இந்தா போன்.. மாப்ள மூணு தடவ கால் பண்ணிட்டாரு என்னன்னு பேசு…” என்று தந்தை கொடுக்க,
அவர் அருகில் அமர்ந்து கணவனுக்கு போன் செய்தாள். நிரஞ்சன் வீடியோ காலில் வந்தான். பத்து நாள் மேல் ஆகிவிட்டது மனைவியை பார்த்து… முகம் தெரிந்ததும் ஒரு மலர்ச்சி. ஆரம்ப நல விசாரிப்பு முடிந்தது.
அன்று நர்மதா தக்காளி சிவப்பில் ஒரு சேலை அணிந்திருக்க..
“என்னடி சேல புதுசா இருக்கு.. நான் பார்த்ததே இல்லையே…”
“உங்க அம்மா வீட்ல இருந்ததுங்க சரி சொல்லுங்க எதுக்கு போன் பண்ணீங்க..” தந்தையை பார்த்து பேச்சை முடிக்க பார்க்க.
இவர்கள் பேச்சுவார்த்தையை கவனிக்காமல் பால மராத்தான் கண்மூடி படுத்திருந்தார்.
மனைவியின் குறி ப்பை உணராத நிரஞ்சன், “ஹே!.. இந்த கலர் உனக்கு அழகா இருக்கு நம்மு… முகம் கூட கொஞ்சம் பாலிசா இருக்கே. உங்க அம்மா, அப்பாவை பார்த்ததும் கொஞ்சம் கண்ணம் எல்லாம் சைனிங் ஆயிடுச்சு…”
“எங்க வச்சு என்ன பேசுறீங்க?..” என்று நர்மதா முகத்தை சுருக்கி சொல்ல,
“நிஜம்தான் உன் முகம் ரொம்ப பளபளப்பா இருக்கு நம்மு. என்னவாம்… நீ என்ன மிஸ் பண்ணவே இல்லையா? எனக்கு நீ இல்லாம தூக்கமே வரல…” என்று நிரஞ்சன் சொன்னதும் மாமனார் எழுந்து கொண்டார். இதற்கு மேல் முடியாது என்பது போல…
என்னதான் கண் மூடி இருந்தாலும் காது கேட்க தானே செய்கிறது. தந்தைக்கு மனதில் அப்படி ஒரு நிறைவு மருமகன் பேச்சைக் கேட்டு.. மெதுவாக சுவற்றில் பிடித்து வெளியே வர பார்க்க,
“அப்பா நீங்க இருங்க நான் வெளியே போய் பேசுகிறேன்…” என்று போனில் நிரஞ்சனை முறைத்தவாறு வெளியே வந்தால் நர்மதா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.