யமுனா அச்சத்துடன் தோழியை அழைக்கவும் கோகிலா முறைத்தபடி ஸ்டாலினைப் பார்க்க, அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“என்னடா செஞ்ச?” என்று சூர்யாவிடம் பல்லைக் கடித்தான்.
“அண்ணய்யான்னு சொல்றா டா” என்று சூர்யாவும் முறைத்துக் கொண்டே சொல்ல, ராமு இதையெல்லாம் பார்த்தவன் யமுனாவிடம்
“மா, நீங்க தப்பா நினைக்காதீங்க. இவனோட தங்கச்சி சின்ன வயசுலேயே இறந்திடுச்சு. அதுல இருந்து யார் அண்ணானு சொன்னாலும் டென்ஷன் ஆகிடுவான். நீ சும்மா இவனை பெயர் சொல்லியே கூப்பிடுமா” என்று சமாளித்தான்.
நண்பர்கள் இருவரும் ராமுவை ஆச்சர்யத்துடன் பார்க்க, கோகி இன்னும் ஸ்டாலினை முறைப்பதை விடவில்லை.
“யமுனா, நீ வாடி” என்று தோழியை இழுத்து அலைகளிடம் நடக்க , சூர்யா ஸ்டாலினைப் பார்த்தான்.
“என்ன ஏன் பார்க்குற? நீ பொசுக்குன்னு கோவப்பட்டு பேசினா அந்த பொண்ணு கத்தாம என்ன செய்யும்?” என்று கேட்டான் ஸ்டாலின்.
“இதெல்லாம் என் சட்டையைப் போடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். அன்னிக்கு உடுப்பில சாம்பார் இட்லி சாப்பிடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். போ எனக்கு இப்போ யமுனாவை சமாதானம் செய்யனும்” என்று கைகட்டிக்கொண்டு சூர்யா ஸ்டாலினைப் பார்க்க
அந்த பார்வையைக் கண்டு “கோகி! நில்லுடி. போன வாரம் என்னவோ உன் ப்ரண்டுக்கு டிரிக்னாமெட்ரீ புரியல சொன்னியே, இவன் நல்லா சொல்லிக்கொடுப்பான். அதுக்காகத் தாண்டி பேச வந்தான்,நல்ல பையன் கோகி, நம்புடி” என்று கோகிலாவிடம் பலவாறு கெஞ்சினான். இறுதியில்
“போகும்போது பேசிக்கலாம். இப்ப எங்களை கொஞ்சம் எஞ்சாய் பண்ண விடு” என்று சொல்லி தோழிகள் எல்லாம் அலையில் ஆட்டம் போட்டனர். சீக்கிரமே விடுதிக்குப் போக வேண்டும் என்பதால், சுண்டல் பஜ்ஜியெல்லாம் வாங்கிக் கொண்டு நடந்தபடியே உண்டு, பேருந்து இருக்குமிடம் சென்றனர்.
சூர்யா இரண்டு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொள்ள, யமுனா மட்டும் மிளகாய் பஜ்ஜி வாங்கவில்லை. இதில் ராமுவால் காரம் சாப்பிட முடியாமல் போக, அந்த பஜ்ஜியையும் ஒரே நொடியில் உள்ளே தள்ளினான் சூர்யா.
“எவ்வளவு காரம் சாப்பிடுறாங்க இல்லை” என்று அருகே இருந்த மேகலாவிடம் முணுமுணுத்தாள் யமுனா.
“ஆமாடி. அவர் ஆந்திராவாம். கோகி சொன்னா” என்றாள் மேகலா.
ஒருவழியாக பேருந்தில் மீண்டும் கல்லூரி விடுதிக்கு வந்து இறங்க, உள்ளே செல்லும் யமுனாவிடம் நேரே சென்ற சூர்யா
“நா பேரு சூர்யநாராயணன். உனக்கு டவுட்ஸ் இருக்குனு கோகிலா சொன்னா, எதுனாலும் ஐ வில் டீச் யூ” என்றவன் கோகிலாவிடம்
“நாளைக்கு இவளை லைப்ரரி அழைச்சிட்டு வா” என்று சொல்ல, ஸ்டாலின் தன் பக்கத்திலிருந்து கோகிலாவிடம்
“கோகி! அவனுக்கு உன் ப்ரண்டை ரொம்பப் பிடிச்சிருக்கு. காலேஜ் ஆரம்பிச்ச அன்னிலிருந்து பார்க்கிறானாம், பாடம் சொல்லித்தரேன்னு தானே சொல்றான், அழைச்சிட்டு வாயேன் டி” என்று சொல்லவும் அவன் கையில் கிள்ளினாள் கோகிலா.
“கோகி! இதெல்லாம் நான் சொல்லாம இருப்பேனா டி? அவன் ரொம்ப லவ் பண்றான் போல, அவன் விருப்பத்தை யமுனா கிட்ட சொல்லட்டும், அந்த பொண்ணுக்குப் பிடிக்கலன்னா அப்புறம் நான் அவனைக் கண்டிக்கிறேன். நம்மளும் லவ் பண்றோம், அவனுக்கு ஹெல்ப் பண்ணலன்னா எப்படி கோகி?” என்று பேசி கரைத்தவன்
“நாளைக்கு இவளோட ஹிக்கின்பாதம்ஸ்(Higginbothams) வந்திரு. நானும் வரேன், நம்ம புது புது அர்த்தங்கள் படம் ‘தேவி’ல பார்க்கலாம், என்ன?” என்று கேட்க கோகியும் புன்னகையுடன் தலையசைத்தாள். [Which is the oldest book shop in India? It was here on Mount Road that in 1844, Abel Joshua Higginbotham found spare office space and established Higginbothams, which is today India’s oldest bookstore.]
நண்பர்கள் மூவரும் மெரீனா கடற்கரையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சூர்யா ஸ்டாலின் சைக்கிளில் பின்பக்கம் உட்கார்ந்திருக்க, ராமு இன்னொரு சைக்கிளை ஓட்டினான்.
“டேய் ராமு! இருந்தாலும் நீ இப்படி திடுதிடுப்புன்னு சமாளிப்பேனு நான் நினைச்சே பார்க்கல டா” என்று ஸ்டாலின் சொல்ல
“தேங்க்ஸ் டா ராமு” என்று சூர்யாவும் புன்னகை செய்ய, ராமுவிடம் ஒரு கசந்த புன்னகை.
“என்ன செய்றது? என்னால தான் என் கோதை கூட சேர முடியல. இவன் அந்த பொண்ணை அப்படி தவிச்சுப் போய் பார்க்கும்போது சும்மா இருக்க முடியலடா” என்ற ராமுவை நினைத்து இருவருக்கும் கஷ்டமாக இருந்தது.
ராமுவின் காதலி கோதை, இருவரும் அக்கம் பக்கத்து வீடுதான். கோதை எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில் ராமு காதல் கடிதம் கொடுத்துவிட, கோதைக்கு விருப்பமிருந்தாலும், இந்த விஷயம் கோதையின் வீட்டிற்குத் தெரிந்து உடனே படிப்பை நிறுத்தி திருமணம் செய்துவிட்டனர். கோதை வெளியூரில் இருக்க, பார்த்தே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
அந்த நினைவுகளில் நெஞ்சம் நனைய, ராமுவின் கால் என்னவோ சைக்கிள் பெடலை மிதித்தது.
“ஆனா ஒன்னுடா சூர்யா, நீ அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராம நடந்துக்கோ” என்று ராமு அறிவுரை சொல்ல
ஸ்டாலினும் “அதேதான் டா ஆவக்கா! கோகி…லான்னு அவளுக்கு சும்மா பெயர் வைக்கல, லா பாயிண்டா பேசுவா. இன்னிக்கு நீ செஞ்ச வேலைக்கு என்னைக் காய்ச்சிட்டா டா. அந்த யமுனா பொண்ணு வீட்ல சண்டைப்போட்டு படிக்க வந்திருக்காம். படிக்கவே அவங்க மெட்ராஸூக்கு அனுப்பல, அதையெல்லாம் ஞாபகம் வைச்சிட்டு எதுனாலும் செய்” என்றான்.
“அதேதான், அப்படி பிரச்சனை வந்தா உடனே படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் செஞ்சு வைச்சிடுவாங்க டா” என்று ராமுவும் எச்சரிக்க
“ஏன்ட்டீ ரா நுவ்வு?” என்று சூர்யா ராமுவைப் பார்க்க,
“ஆசைக்கும் நிதர்சனத்துக்கும் பெரிய இடைவெளி இருக்குடா, ஆசையெல்லாம் நடந்துடாதுடா. அதுவும் உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒரு விஷயத்துக்குக் கூட ஒத்துப்போகாது. நீ கஷ்டப்படக் கூடாதுன்னுதான் சொல்றேன் நான்” என்ற ராமுவை இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
( நீங்க என்ன சொன்னாலும், whatever you say?) “மீரு ஏமி செப்பினபடிக்கி எனக்கு அஹ் அம்மாயிதான் டா வேணும், அம்மாயி நா ப்ரேமாடா” என்றதும் தனது சைக்கிளால் ஸ்டாலின் சைக்கிள் அருகே நெருங்கிய ராமு, ஒற்றைக்கையால் சூர்யாவின் தோளில் அடித்தான்.
“இப்படி தெலுங்குப் பேசினா எப்படி டா அந்த பொண்ணுக்குப் புரியும்?” என்று திட்டினான் அவன்.
“நம்ம என்ன சொன்னாலும் அவனுக்கு அந்த பொண்ணுதான் லவ்வாம் டா” என்று ஸ்டாலின் மொழிப்பெயர்க்க
“இப்படியே போச்சுன்னா டேய் ஸ்டாலின் நீ துபாஷியாத்தான்(Translators to British) போகனும், ஐபிஎஸ் எல்லாம் ஆக முடியாது. ஏதோ உங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு தெலுங்கு குடும்பம் இருந்ததால இவன் பேசுறது புரியுது. இல்லன்னா நமக்கே ஒன்னும் விளங்கியிருக்காது”
“நான் என்ன செய்யடா? என்னோட ஃபீலிங் சொல்லும்போது தானா வருது. பட் யமுனாவைப் பத்தி நீங்க சொன்னதும்தான் இன்னும் அவளை பிடிக்குது, அவளுக்குப் பிடிச்சது எல்லாம் செய்யனும் தோணுது. படிக்க கூட அனுப்பாத வீட்ல இருந்து எவ்வளவு ஆர்வமா படிக்க வந்திருக்கா, அவளுக்கு எவ்வளவு படிக்கனும்னாலும் படிக்க வைப்பேன் டா நான்” என்று ஒரு ரசனை பாவத்துடன் சூர்யா பேச
“அதேதான் நாங்களும் சொல்றோம், அப்படி ஆர்வமா படிக்க வந்த பொண்ணு உன்னைத் திரும்பி பார்க்க மாட்டா! நீ அவளை படிக்க வைக்கனும்னா, முதல்ல நம்ம படிச்சு ஐபிஎஸ் பாஸ் பண்ணனும். இந்த வருஷம் பரீட்சைக்கு இன்னும் ஆறே மாசம்தான் டா சூர்யா. நம்ம கனவை எப்பவும் விட்டுட கூடாது” என்று ஸ்டாலின் அழுத்தமாய் சொன்னான்.
“விடுடா ஸ்டாலின். அவனோட அன்பு நிஜமா இருந்து அதிர்ஷ்டம் இருந்தா அந்த பொண்ணோட அவன் சேர்ந்திடுவான். ஒரு தடவ பேசி பார்க்கட்டும்டா. நாளைக்கு அந்த பொண்ணு வரட்டும், பார்க்கலாம்” என்று ராமு கடைசியாகத் தீர்வு சொல்ல, அடுத்த நாள் யமுனா வரவே இல்லை. சூர்யாவுக்குப் பெருத்த ஏமாற்றம்!!
‘வணக்கம் ஆல் இந்தியா ரேடியோ! நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஆகாஷவாணியின் செய்தி அறிக்கை!’ என்று ஏழு பதினைந்துக்கு அந்த மர்ஃபி ரேடியோ பேசத்தொடங்கியது. அன்றையை செய்தி அறிக்கையைக் கேட்டுக்கொண்டே யமுனாவைப் பார்ப்பதற்குக் கிளம்பினான் சூர்யா.
“டேய் சூர்யா! அந்த பான்ட்ஸ் பவுடர் கொஞ்சம் கொடுடா, கோகியைப் பார்க்கப் போறேன்ல, வாசமா இருக்கனும்” என்று கேட்டு வாங்கி நன்றாய்ப் பூசிக்கொள்ள
“காலையில எங்கிட்ட மைசூர் சாண்டல் வாங்கி குளிச்ச, இப்படி கடன்லயே காதல் வளர்க்கிறவன் நீதான் டா” ராமு கிண்டல் செய்தான்.
“இதெல்லாம் நண்பனுக்கு செய்றது கடமைடா உனக்கு. நாளைக்கு எனக்கும் கோகிக்கும் பொறக்கிற புள்ளைக்கு உன் பெயர் வைப்பேன் டா ராமு” என்றதும்
“பாப்பா பொறந்துட்டா என்னடா பண்ணுவ?”
“ம்ம், ராமாயின்னு வைப்பானா இருக்கும்” என்று ராமச்சந்திரன் சிரித்தான்.
“இன்னும் தாலியே கட்டல புள்ளைக்குப் பெயர் வைக்கிறானாம், பெருச்சாளி போடா” என்று ராமு திட்டவும்
“பாருடா என் புள்ளைக்கு ராமுன்னுதான் பெயர் வைப்பேன். அதுவும் நீ இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம், அப்போ தெரியும் ஸ்டாலின் நட்புக்கு எப்படி மரியாதை கொடுக்கிறவன்னு” என்று ஸ்டாலினும் பதில் பேச
“ஷட் அப் ரா! பேசிட்டே இருந்தா லேட் ஆகிடும். ரா டா ஸ்டாலின்” என்று சூர்யா வாசல் கதவில் நின்று ஸ்டாலினை அழைக்க, வாரிய தலையை இடப்பக்கமும் வலப்பக்கமும் ஸ்டைலாய்க் கலைத்துவிட்டான் ஸ்டாலின். ராமு பேப்பரால் அடிக்க
“கோகிக்கு இப்படி இருந்தாதான் டா பிடிக்கும்” என்றவன்
“இன்னிக்கு லீவ்தானே? நீயும் வா ராமு” என்று நண்பனை உடன் அழைத்தான்.
“இல்லடா, யமுனா வந்தா அவன் சொல்லித்தருவான். நீ கோகி கூட படம் பார்க்க போய்டுவ, மாசத்துக்கு இரண்டு படம் பார்க்கிற அளவு எல்லாம் எங்கிட்ட காசு இல்லை. என் துணியெல்லாம் துவைக்கல, அதைத் துவைச்சுப் போடனும்” என்றான்.
ஸ்டாலினும் சூர்யாவும் ஹிகின்பாதம்ஸ் வாசலில் காத்திருக்க, கோகிலா மட்டுமே தனியே வந்தாள். இன்று ஒரு மெரூன் வண்ண சுடிதாரில், தலையில் மல்லிகை சூடி வந்திருக்க கோகிலா ஸ்டாலினின் கோகிலமாய் இருந்தாள். தன் கோகிலத்தில் லயித்திருந்த ஸ்டாலின் சூர்யாவின் வாட்டத்தைக் கவனிக்கவில்லை.
கோகிலா ஸ்டாலினிடம் வந்தவள் “யமுனா எங்கிட்டயே படிச்சிக்கிறேன் சொல்லிட்டா ஸ்டாலின். இந்த அண்ணா நேத்து சத்தமா பேசவும் பயந்துட்டா, அவ சாந்த ஸ்வரூபினிடா. புரிஞ்சிக்கோங்க”
கோகிலா அப்படி சொல்லவும் சூர்யாவின் முகத்தைப் பார்த்தவன் “என்னடி கோகி நீ? அவன் எவ்வளவு ஆசையா இருந்தான் தெரியுமா? உன் ப்ரண்டை நீ ஒழுங்கா பேசி கூப்பிட்டிருக்க மாட்ட” என்றதும் கோகிலா கோபமாய்ப் பார்த்தாள்.
சூர்யா நண்பனைப் பார்த்தவன்
“நீ படத்துக்குப் போடா ஸ்டாலின், ராமு தனியா இருப்பான். நான் வீட்டுக்குப் போறேன்” என்றவன் வீட்டிற்குப் போகவே இல்லை. ஸ்டாலினும் கோகிலாவும் படம் முடித்த பின், ஸ்டாலின் கோகிலாவை சைக்கிளில் வைத்தே பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு வீடு நோக்கி சென்றான்.
“குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி” என்று பாடியபடி படிகளில் ஏற, ராணியக்கா அவனை தடுத்தார்.
“என்ன ஸ்டாலின்? படத்துக்குப் போய்ட்டு வந்து பாட்டெல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டார்.
“ஆமாக்கா, சூப்பர் படம். நீங்களும் அண்ணன் கூட போய்ட்டு வாங்க. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேன்னு ஒரு பாட்டு, அற்புதமா பாடியிருக்கார் பாலு”
“என்னத்த சூப்பரா இருந்து என்ன ப்ரயோஜனம்? இவர் என்னை வருஷத்துக்கு இரண்டு படம்தானே அழைச்சிட்டுப் போவார்” என்று நொடித்தவர்
“எனக்குக் கால் வலி, மாடியில வத்தல் காயப்போட்டிருக்கேன், அதை மட்டும் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டுப் போயேன்பா” என்றார்.
“ஏன் கா, நான் வரதுக்குன்னே வெயிட் பண்ணீங்களோ? மேலே இரண்டு பேர் இருக்கானுங்களே அவனுங்களை வேலை வாங்க கூடாதா?”
“இரண்டு பேரா? ராமு மட்டும்தான் இருக்கான், சூர்யா உன்னோட போனவன் இன்னும் காணுமே? அவன் படிப்பான்னு உன்னைக் கூப்பிட்டேன், காஃபி போட்டு வைக்கிறேன், வத்தலைக் கொடுத்துட்டு குடிச்சிட்டுப் போ” என்று சொல்லவும் அவரின் மணக்கும் லியோ காஃபிக்காக மாடியேறினான் ஸ்டாலின்.
“ராமு! இன்னும் சூர்யா வரலையா?” என்று கேட்க
“உன்னோட வந்தவனை எங்கிட்ட கேட்டா?” என்றதும் காலையில் நடந்ததை ஸ்டாலின் சொன்னான்.
“இவன் நல்லவன் தான் டா, ஆனாலும் இப்படி பேசவே தயங்குற பொண்ணைக் காதலிக்கிறது எல்லாம் ஒத்துவருமா?” என்று ராமு கவலையுடன் கேட்க, ஆறு மணி போல் வீடு வந்து சேர்ந்தான் சூர்யநாராயணன். கடற்கரை சென்றிருப்பான் போல, அவனின் செருப்பெல்லாம் ஈரமண். பேண்டிலும் மண் ஒட்டியிருக்க, குளித்துவிட்டு வேஷ்டியோடு வந்தவனை ஸ்டாலின் பிடித்துக்கொண்டான்.
“ஏன் டா அந்த பொண்ணு பார்க்கலன்னா வீட்டுக்குக் கூட வர மாட்டியா?” என்று திட்ட
“சாப்பிட்டியா நீ?” என்றான் ராமு. இல்லை என சூர்யா தலையசைக்க
“இந்தா எனக்குன்னு ரசம் மட்டும் வைச்சேன், அப்பளம் பொறிச்சுத் தரேன் சாப்பிடு” என்று அப்பளம் பொறிக்க போக,
“டேய் இருடா, ராணியக்கா வத்தல் போட்டிருக்காங்க, கொஞ்சம் எடுத்தா தெரியவாப் போகுது? மாவடு கூட இருக்கு” என்று எல்லாவற்றையும் கொஞ்சம் திருடிக்கொண்டு வந்தவன், மீதியை நல்லபிள்ளையாய் அவரிடம் ஒப்படைத்து ஓசி காஃபி குடித்துவந்தான்.
“போலீஸ்காரனுக்குத் திருட்டுப் புத்தி இருக்கலாமா?” என்று ராமு திட்ட
“டேய் அவங்களுக்கு எவ்வளவு வேலை செஞ்சுத்தரேன் நான்? கொஞ்சுண்டு எடுத்தா தப்பில்லை, நம்ம மாதிரி பேச்சுலர்ஸ் எல்லாம் இப்படி மிச்சம் செஞ்சாதான் உண்டு. அப்பளத்தை இன்னொரு நாளுக்கு வைச்சிடலாம் பாரு” என்றான் ஸ்டாலின். சூர்யா உண்டு முடிக்கும்வரை எதுவும் பேசவில்லை. பின் அவனிடம் விசாரிக்க
“அந்த பொண்ணைப் பார்த்தப்போ ஒன்னும் பெருசா தோணல, ஆனா ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது இன்னும் ஒரு தடவ பார்க்கனும்னு ஆசை அதிகமாகுதுடா. அவளோட கண்ல சிரிப்பைப் பார்க்கனும், அவ கூட ரொம்ப நேரம் பேசனும் தோணுது. எங்கம்மா இருந்தவரைக்கும் அவங்க கிட்டதான் நான் எல்லாம் பேசுவேன், இப்போ அவங்க இல்லை, எனக்கு எங்கம்மாவே அவளை அனுப்பி இருக்காங்க தோணுது. எங்களுக்குள்ள எதுவுமே ஒத்துப்போகாம இருக்கலாம், ஆனாலும் என்னோட ப்ரியம், ப்ரேமம் அவளுக்குப் புரியும்னு நான் நம்புறேன்”
“அவகிட்ட பேசவே வழியில்லன்றப்போ கஷ்டமா இருக்கு ரா” என்றவனின் குரலில் அவ்வளவு கலக்கம்.
“சூர்யா! டேய்! நான் சொல்றதைக் கேளு, நேத்து நீ சட்டுன்னு கத்துனதுல அந்த புள்ள பயந்திருக்கும், நம்ம கோகி ப்ரண்ட் தானே? சீக்கிரமே ஒரு நாள் அந்த புள்ளை கூட உன்னைப் பேச வைச்சிடுறேன் டா. இது இந்த ராமச்சந்திரன் மேல சத்தியம்” என்றதும் ராமு முறைக்க, சூர்யா சிரித்தான்.
அன்று நவம்பர் 15, 1989.
தூர்தர்ஷனில் கராச்சியில் நடைப்பெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாக தெருவே அமைதியாய் இருந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் டீவியின் முன் உட்கார்ந்திருக்க, ஸ்டாலினும் ராமுவும் கூட கீழ் வீட்டில் கூடியிருந்தனர். ராணியக்காவின் கணவர் மாதவனுடன் அவர்களும் உட்கார்ந்து டீவி பார்த்தனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அண்ட் குட் மார்னிங் ஃப்ரம் தி நேஷனல் ஸ்டேடியம் இன் கராச்சி ஆன் தி மார்னிங் ஆஃப் நாட் ஒன்லி தி ஸ்டார்ட் ஆஃப் தி சீரிஸ் பிட்வீன் இந்தியா அண்ட் பாகிஸ்தான் பட் ஆல்ஸோ தி ஃப்ரஸ்ட் டெஸ்ட் மேட்ச் பிட்வின் பாகிஸ்தான் அண்ட் இந்தியா! அண்ட் நியுஸ் ஆஃப் டாஸ் இஸ் ஆஃப் கிரேட் இம்பார்டன்ஸ்” (Assalamuh Alaikum! and Good morning from the national stadium in Karachi on the morning of not only the start of the series between India and Pakistan but also the first test match between Pakistan and India! and news of toss is of great importance)என்று காலை வேளையிலேயே கமென்ட்ரீ ஆரம்பித்துவிட ராமுவும் ஸ்டாலினும் அன்று கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டனர்.
சூர்யா மட்டும் கல்லூரிக்குச் சென்றான். அது முடிந்து நூலகம் செல்ல, அங்கே செர்வீஸ் கமிஷனுக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி கொண்டிருக்க, தேடியது கிடைக்கும் முன் அவனின் தேடலை, காதலை அங்கே கண்டான். யமுனா சிரத்தையாய் உட்கார்ந்து ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, சூர்யா யமுனாவைப் பார்த்து அருகே போனவனுக்கு அகத்தில் பெரும் துள்ளல்.
“நா ப்ரியத்தம்மா!” என்று உதடுகள் முணுமுணுக்க
“யமுனா!” என்றழைக்க, யமுனா யார் இது என பார்த்தவள் சூர்யா என்றதும் டென்ஷனாகிவிட்டாள்.
இந்த முறை முன்னெச்சரிக்கையாய் “யமுனா கால் மீ சூர்யா! அண்ணான்னு சொல்லாத” என்று சொல்லிவிட
“என்ன இது முன்ன பின்ன தெரியாத பொண்ணை டி போட்டு பேசுறீங்க, இதெல்லாம் சரியில்லை” என்று சூர்யாவைப் பார்த்து யமுனா பேச பேச, அவளின் குரலும் பாவத்தையும் இத்தனை அருகே நின்று கேட்ட சூர்யா லயித்து ரசித்திருந்தான்.