அமர இடம் இல்லாத அளவு கூடிய கூட்டம் அனைத்தும் குறைந்து கடை அடைக்கும் நேரம் நெருங்குகையில் இன்னுமே ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி ஆர்டர் செய்து உண்ணாமல் அமர்ந்திருந்தாள் யாழினி.
“ஒரு வாரமா சாப்பிடாமா இருந்திருக்கும் போல அந்த பொண்ணு… மெனுல இருக்குற எல்லாத்தையும் ஆர்டர் பண்ணிடுச்சு.”
“ஆனா சாப்பிடல பாஸ்… எல்லாத்தையும் டேஸ்ட் மட்டும் பாத்து வச்சிருக்காங்க. பில் பே பண்ணா சரிதான்.”
அவளைப் பற்றி அங்கு வேலை செய்யும் மற்றொருவனும் கடை முதலாளியும் தங்களுக்குள் பேசிக்கொள்வது அவன் செவியில் விழ, மனம் கேளாத மணி யாழினியிடம் சென்று நின்றான்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது தன் மீது எப்படியான பார்வைகள் விழுகிறது என்ற கவலைகள் எதுவுமின்றி அரை லிட்டர் பழச்சாறை ஒவ்வொரு சொட்டாய் ஸ்டாவில் இழுத்து உறுஞ்சியபடி போனை பார்த்துக்கொண்டிருந்த யாழினி, இவன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
“வீட்டுல தேடப் போறாங்க! எப்போதும் நேரமே வீட்டுக்கு போயிடுவீங்க தான? இன்னைக்கு இவ்வளவு நேரம் இங்க இருக்கீங்க? ஏற்கனவே ரொம்ப இருட்டிடுச்சு இன்னும் நீங்க இங்கேயே இருந்தா பாதுகாப்பா இருக்காது யாழினி. கிளம்புங்க.” என்று அவசரப்படுத்த,
“நைட் லேட்டாகும்னு சொல்லிட்டேன். வேலை முடிஞ்சுதும் அண்ணனுக்கு கால் பண்ணா கூட்டிட்டு போக வந்துருவான்.” என்றாள் விட்டேற்றியாய்.
அவளின் அலட்சியத்தில் கடுப்பானவன், “இருக்குற எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சாப்பிட முடியாம சும்மா வச்சி இருக்குறதுக்கு எதுக்குங்க ஆர்டர் பண்ணீங்க? இல்லாதவங்களுக்கு கொடுத்தா வயிறார சாப்பிடுவாங்க.” என்று மேசை முழுதும் நிரம்பி ஈயாடும் உணவுகளைக் கண்டு கசப்புடன் கடிந்துகொள்ள, யாழினி முகம் சுழித்தாள்.
“சும்மா ஒன்னும் வாங்கல… காசு கொடுத்துதான் வாங்கி இருக்கேன்.”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த கடை முதலாளி மணியை யோசனையுடன் ஏறிட்டபடி யாழினியிடம் வந்தார், “மேம் க்ளோஸிங் டைம் ஆகிடுச்சு. பில் ரெடி பண்ணவா?”
பெருமூச்சை இழுத்துவிட்டவள், “ரெடி பண்ணுங்க… அண்ட் உங்களுக்கு பிரச்சனை இல்லைனா இந்த புட்ஸ் எல்லாத்தையும் சூடு பண்ணி பேக் பண்ணி தர முடியுமா?” என்ற கேள்வியை முன்வைக்க, தலையசைத்தவர்,
“மேடம் கேட்டபடி அவன்ல வச்சி ஹீட் அன்ட் பேக் பண்ணி கொடுத்துடு மணி. எஸ்க்கியூஸ் அஸ் மேம்.” என்று மணிக்கு கட்டளையிட்டுவிட்டு நகர்ந்தார்.
மணி எதுவும் பேசாது உணவுத் தட்டுக்களை இருகைகளிலும் மூன்று முறை வந்து எடுத்துச்சென்று, சூடாக்கி பேக் செய்து ஒரு பெரிய பையில் போட்டு எடுத்து வந்து கொடுத்தான்.
மெலிதான நகைப்புடன், “வீணாக்கணும்னு வாங்கல… ஸ்ட்ரஸ் ஈட்டிங் ஆகிடுச்சு. பாதி தட்டுல நான் கையே வைக்கல. பசில இருக்குறவங்களுக்கு கொடுத்துடுறேன்.” என்று அவனிடமிருந்து பைகளை பெற்றுக்கொண்டு கிளம்பினாள் யாழினி.
அவள் சென்றதும் அவள் அமர்ந்திருந்த இடத்தை சுத்தம் செய்து ஒதுங்க வைத்துவிட்டு பணிமுடித்து அங்கேயே உணவுண்டு கிளம்பினான் மணியும். எப்போதும் போல தன் காலே தனக்குதவி என்று நடை போட்டவன், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அலைபேசியுடன் நட்பாடினான். நேரம் பதினொன்னை தாண்டிட அந்த நிறுத்தத்தில் சில பல தெரு நாய்களைத் தவிர வேறு ஒருவரும் இல்ல. இரவு நேரம் என்பதால் பேருந்து எப்போது என்று அலைபேசியில் பார்த்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து வெட்டியாய் அலைபேசியை நோண்டினான்.
நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதுமாய் புணர்வதுமாய் இருக்க, அதன் குரைப்பு சத்தத்தில் அந்த நிறுத்தத்திற்கு சற்று தள்ளி சாலையோரம் படுத்திருந்தவர்களுக்கு உணவு விநியோகித்த யாழினி திரும்பிப் பார்த்தாள். கவனம் அங்கு தனித்திருந்த மணி மீது படிய, விரைந்து அவனிடம் வந்தாள்.
பையில் மிச்சம் இருந்த இரண்டு டப்பிகளையும் மணியிடம் எடுத்து நீட்டி, “வீட்டுக்கு போய் சாப்பிட லேட் ஆகிடும் சாப்பிடுங்க. இது புதுசுதான் நான் கை வைக்கல.”
புருவம் உயர்த்தியவன், “இல்லாதவங்களுக்கு கொடுத்தா நல்லதுங்க. நான் இன்னும் அந்தளவுக்கு வரல. சாப்புடுற அளவுக்கு ஏதோ கொஞ்சம் சம்பாதிக்குறேன்.” என்றான்.
தவறாய் எண்ணிவிட்டான் என்று நினைத்த யாழி, “ஐயோ அப்படி இல்லை. ஜஸ்ட் உங்களுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு கொடுத்தேன். என் ட்ரீட்னு வச்சிக்கோங்க.”
“நான் தான் ட்ரீட் தரணும். நீங்க எதுக்கு? சரி விடுங்க. இன்னும் வீட்டுக்கு கிளம்பாம ஏன் இப்படி நைட் நேரம் தனியா இருக்கீங்க?” என்று அவன் கரிசனப்பட,
“தனியாவா?” என்று விழி உயர்த்தியவள் அந்நேரத்திலும் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களை சுட்டிக்காட்டி, “இந்த ஏரியால பயம் கிடையாது. எல்லா நேரமும் யாராவது போயிட்டே தான் இருப்பாங்க.”
“நீங்க ஏன் இன்னும் வீட்டுக்கு கிளம்பலேன்னு கேட்டேங்க? சொல்ல விருப்பம் இல்லைனா பரவாயில்லை. பாதுகாப்பா இருக்காதேன்னு தான் கேட்டேன்.” தன் கேள்விகளை அவள் பிழையாய் எடுத்துவிடகூடாது என்ற நோக்கத்தில் தன் செயல்களை தெளிவுபடுத்தினான் மணி.
அவன் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள் வாகன இரைச்சலுக்கு மத்தியில் சில நிமிடங்கள் மெளனித்து பின் தயக்கத்துடன், “வீட்டுக்கு போக விருப்பமில்லை.” என்று தலைகுனிந்தாள்.
மெலிதாய் நகைத்தவன், “நான் போகாம இருந்தா கூட நியாயம் இருக்குங்க, நானே என் வீட்டுக்கு போறேன். நீங்க ஏன் இப்படி? உங்களுக்கு என்னங்க குறை? எல்லாரும் அன்பாதான் இருக்காங்க உங்க வீட்ல.”
“நானும் அப்படிதான் நினைச்சேன்.” விரக்தியாய் அவள் வெளிப்படுத்திய உணர்வுகளில் அப்படி என்னதான் இந்த பெண்ணுக்கு சிக்கல் என்று கூர்ந்து கவனித்தான் மணி.
“அப்புறம் என்னங்க வருத்தம் உங்களுக்கு?”
“இப்போ அன்பா இருக்காங்களான்னு தெரியல. கல்யாணம் பண்ணி துரத்தி விடணும்னு பாக்குறாங்க. அடுத்த வாரம் பொண்ணு பாக்க வராங்களாம்.” என்று யாழினி உதட்டை பிதுக்க,
மீண்டும் வெடித்துச் சிரித்தான் மணி, “சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… உங்க வீட்ல வேற என்ன பண்ணணும்னு நீங்க எதிர்பாக்குறீங்க?” என்று கேட்டவனை வெறிகொண்டு அவள் முறைக்க, அசராத மணிகண்டன்,
“கல்யாணம் அவ்வளவு பெரிய விஷயம் ஒன்னும் இல்லைங்க. கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்துதானே ஆகணும்னு பழமொழி கூட உண்டுங்க. நம்ம படிச்சு முடிச்சு வேலைக்கு போற பருவம் வந்தா கல்யாணம் பேச்சு வர்றது எல்லாம் சாதாரண விஷயங்க. அதுதான் நம்ம குடும்பங்களோட எதார்த்தமும் கூட. சொல்லப்போனா அது நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டம். என் தங்கச்சிக்கு இருப்பத்தி மூணு வயசாகுது இன்னும் ஏழு மாசத்துல குழந்தை புறந்துடும்… படிச்சு முடிச்சதும் கொஞ்ச நாள் வேலைக்கு போனா அப்புறம் கல்யாண பேச்சு அடிபட்டு அப்படியே அடுத்த கட்டத்துக்கு போயிட்டா.
இதையெல்லாம் நினைச்சி உங்களை நீங்களே வருத்திக்காதீங்க. ஈஸியா விடுங்க. கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச உடனே எல்லாம் பண்ணிட முடியாது. நேரம் எடுக்கும். அடுத்த வாரம் பையனை பாருங்க, பிடிச்சிருந்தா ஓகே சொல்லுங்க இல்லைனா இல்லைனு சொல்லுங்க. சிம்பிள்.”
“அது அவ்ளோ ஈஸி இல்லை.” என்று பல்லை கடித்தாள் யாழி.
“ஏன்?” என்ற கேள்வியோடு இதை ஏன் இந்த பெண் பெரிது செய்கிறாள் என்ற சிந்தையும் அவனுக்கு. ஒரு வேலை யாரையாவது காதல் செய்கிறாளோ என்றெண்ணி கேட்கவும் செய்தான், “லவ் பண்றீங்களா?” என்றதுதான் தாமதம் வெடித்துவிட்டாள் மங்கை.
“ஒரு பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொன்னா லவ் பண்றான்னுதான் அர்த்தமா? வாழ்க்கையோட அடுத்த கட்டம்னு சொல்றீங்களே அதை எப்போ எடுக்கணும்னு முடிவு பண்ற உரிமை கூட அவளுக்கு கிடையாதா? கல்யாணம்னு நினைப்பு வந்தாலே அவளை கிச்சனுக்குள்ள தள்ளிவிட்டுறது.
சமைக்க கத்துக்கணும், கூட்டி பெருக்கணும், குடும்பத்தை பொறுப்பா பாத்துக்கணும்னு அடுக்கிகிட்டே போறீங்க? எங்களுக்கும் ஆசை இருக்காதா? சொந்த உழைப்புல பெத்தவங்களை நல்லா பாத்துக்கணும், வீடு வாங்கணும், கார் வாங்கணும்னு கனவு கூட காணக்கூடாதா?
எங்களோட கனவெல்லாம் கானலவே போகணுமா? இதுதான் இங்க இருக்கிற குடும்ப அமைப்பா? பொண்ணுங்க முன்னேற அரசாங்கம் எவ்வளவோ சலுகை கொடுக்குது ஆனா அதையெல்லாம் அனுபவச்சிகிட்டு அவகிட்ட இருந்து முடிவெடுக்குற உரிமையை புடிங்கிறதுதான் இங்க இருக்குற குடும்ப அமைப்பு.
பொண்ணுங்கனா இப்படித்தான் இருக்கணும்னு ரூல்ஸ் புக்கே போட்டு வச்சிருக்காங்க. ஏன் அதெல்லாம் உங்களுக்கு இல்லை? கல்யாணம் ஆனா இதையெல்லாம் புரிஞ்சி அனுசரிச்சு வாழணும்னு ஏன் உங்களுக்கு யாரும் க்ளாஸ் எடுக்குறது இல்லை. எல்லாத்தையும் எங்க தலையில கட்டிட்டு ஆம்பளைங்க எல்லாரும் காலாட்டிட்டு இருக்கீங்க. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஒடுக்குமுறை?”
ஒரே மூச்சில் ஆடித்தீர்த்தவளை ஆயாசமாய் பார்த்தவன் தணிந்த குரலில், “பொண்ணுங்களுக்கு மட்டுமில்லை நாங்களும் இப்படித்தான் இருக்கணும்னு எழுதப்படாத விதி இருக்குங்க. குடும்பத்து மேல பாசம் இருந்தாலும் அதை வெளிகாட்டிக்காம எல்லாத்தையும் உள்ளுக்குளேயே போட்டு இறுகி போயிருந்த தலைமுறைதான் நமக்கு முந்திய தலைமுறை. இப்போவும் உத்தியோகம் புருஷ லட்சணம்னு தான் சொல்றாங்க. நான் முத பால்லையே அவுட்டு.” என்று கேலிச் சிரிப்பு சிரித்தான் மணி.
அவனின் வலி நிறைந்த சிரிப்பில் சற்று தணிந்தவள், “எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். அதை சொல்ற உரிமை கூட இருக்கானு தெரியல… என்கிட்ட கேக்கவே இல்லை.”
“எப்படிங்க கேப்பாங்க? நீங்களா அவங்க முன்னாடி போய் நின்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்கவா முடியும்? இதெல்லாம் அப்படியே குடும்பத்துல பொறுமையா பேச்சு எடுத்து நம்மளை கொஞ்ச கொஞ்சமா மனசளவுல தயார் பண்ணி போற போக்குல முடிச்சு விட்ருவாங்க.” என்று அதை எளிதாய் சொன்னான் அவன்.
அதை ஏற்றுக்கொள்ள முடியாத யாழி, “எங்க வீட்டுல செய்யுறது சரிங்குற மாதிரியே முட்டுக்கொடுக்குறீங்க.” என்று குற்றம்சாட்ட,
“நான் நிதர்சனத்தை சொல்றேங்க…” என்றான் மணியும்.
இறுக்கமான பேச்சுக்கள் நகர்ந்து இயல்புக்கு வர, யாழினியிடம் சற்று நிதானம், “என்ன நிதர்சனம்? அடுத்த வாரம் பொண்ணு பாக்க வர அந்த பையனை பிடிச்சே ஆகணும்னு சொல்றாங்க. அதுக்கு என்ன அர்த்தம்? பிடிச்சே ஆகணும்னா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அதை நான் ஏத்துக்கணும்னு என்னை போர்ஸ் பண்றாங்கன்னு தானே அர்த்தம்?”
“முதல்ல வர வரனே செட் ஆகி எல்லாம் சுபமா முடிஞ்சிடனும்னு எல்லாரும் எதிர்பாக்குறதுதான். நீங்க பிடிக்கலைனு சொன்னாலும் உங்க வீட்ல ஏத்துப்பாங்க. கவலைப்படாதீங்க. என்கிட்ட பேசுற மாதிரி உங்க வீட்லயும் பேசுங்க, புரிஞ்சிப்பாங்க.”
“ம்க்கும்… நான் வீடு வாங்கணும்னு தான் சொன்னேன் என் அண்ணன் முந்திகிட்டு வந்து முட்டுக்கட்டை போடுறான்.” என் ஆசைகளை வெளிப்படுத்தினேன் ஆனால் கிடைத்த பலனோ எதிர்பார்த்தது போல இல்லை என்பதை அவள் தெரிவுபடுத்தி, யாழன் முன்வைத்த காரணங்களை அடுக்க, அதுவும் சரியென்றான் மணி.
“உங்க அண்ணன் கேட்டதுல என்ன தப்பிருக்கு? நாளைக்கு உங்க வாழ்க்கை எப்படி வேணாலும் மாறலாம்னு இருக்கும் போது எல்லாத்தையும் யோசிக்கணும்ல…
இதுவரைக்கும் வாழ்க்கை மலர் படுக்கை இல்லைனாலும் முள்ளா குத்தலைன்னு சொன்னீங்க குத்துறதுக்கு முன்னாடியே காப்பாத்துற அண்ணன் இருக்கும் போது கவலை எதுக்குங்க?”
“நீங்க ஒரு பார்ம்ல தான் இருக்கீங்க… என் உடன்பிறப்புக்கு ஏத்த தோஸ்தா இருப்பீங்க போல…” என்று பெருமூச்சிட்டாள் யாழினி.
அவனிடம் வெடித்து கொட்டித்தீர்த்த பிறகு மலையளவு இருந்த பாரம் கடுகென சிறுத்துவிட, இந்த சிக்கலை எளிதாய் அணுகிப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் வந்தது காரிகைக்கு.
சில பல வினாடிகள் நாய்களின் அட்டகாசத்தை தவிர வேறெந்த ஓசையுமின்றி இருவருக்குள்ளும் அமைதியே பிரதானமாகியது. அந்த அமைதியை அவளே உடைக்கவும் செய்தாள்.
“அதென்ன உங்க கடையில ஆள் அதிகமாகிடுச்சுனு கேட்டா வேலையை விட்டுறவானு கேக்குறீங்க? வேலையை விடுறது கைவந்த கலையோ? இருக்கறதை விட்டுட்டு அப்புறம் குய்யோ முய்யோன்னு அழறது.” என்று தன் இன்னல்களுக்கு இடைவெளி கொடுத்து அவன் புறம் பேச்சையும் திருப்பினாள்.
“அப்படி என்ன செஞ்சீங்க வேலையை விட்டு தூக்குற அளவுக்கு?” என்று அவள் வினவ, மனதில் இருப்பதை கொட்டுவது இம்முறை அவனுடையது.
“இந்த கொரோனா வந்தது தான் வந்துச்சு அப்போ ஆரம்புச்சுது வினை. போகிற போக்குல என் வாழ்க்கைக்கு கும்மி அடிச்சிட்டு போயிடுச்சு. படிச்சு முடிச்சி ஒரு வருஷம் வேலை கிடைக்கல. முதல்ல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனில சூப்பர்வைசரா இருந்தேன் கொரோனா வந்ததும் வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அப்புறமும் கொஞ்ச நாள் வேலை கிடைக்கல. க்ளெர்க்கா இன்னொரு ஆபீஸ்ல சேந்தேன் அந்த வேலை பிடிக்கலைன்னு நானே விட்டுட்டேன். அடுத்த ஆபீஸ்ல ரெகமெண்டேஷன்ல புதுசா இன்னொரு ஆள் சேர்ந்ததும் என்னை தூக்கிட்டாங்க.
கிடைக்கும் போது சின்ன சின்னதா பல வேலை செஞ்சேன். தங்கச்சி கல்யாண வேலை பார்க்க ஒரு வாரம் லீவ் எடுத்தேன், லீவ் முடிஞ்சு ஆபீஸ் போனா என் இடத்துல இன்னொரு ஆள். போங்கடானு வந்துட்டேன். அப்படியே எதுவுமே செட் ஆகல. இப்போ வேலை இருக்கோ இல்லையோ எல்லாமே பழகிடுச்சு.”
“என்ன படிச்சி இருக்கீங்க?”
“இந்த பாழாப்போன இன்ஜினியரிங் தான். டிபார்ட்மென்ட் பேரு கூட மனசுல நிக்கல. ஏதோ அப்படி இப்படினு அரியர்ஸ் வச்சி க்ளியர் பண்ணி முடிச்சிட்டேன். எல்லாரும் படிக்குறாங்க நல்ல வேலை கிடைக்கும்னு படிக்க வச்சாங்க ஆனா அது புட்டுக்குச்சு.” என்று கைவிரித்தான்.
“இப்போதான் புது வேலை கிடைச்சிருச்சே. இனி எல்லாம் செட் ஆகிடும் பாருங்க.” என்று நம்பிக்கையாய் யாழினி பேச, அதே உத்வேகம் அவனிடம் இல்லை.
“இந்த வேலையும் எனக்கு பிடிக்கலீங்க… எவ்வளவு நாள் தாக்குப்பிடிப்பேன்னு தெரியல… பாக்கலாம்.” என்றவன் அலைபேசியில் நேரத்தை பார்த்துவிட்டு,
“நேரமாகுது. அண்ணனை கூப்பிட்டு வீட்டுக்கு போங்க.”
“நீங்க?” என்ற கேள்வியுடன் எழுந்தாள் யாழினி.
அவனும் உடன் எழுந்து அலைபேசியை பேண்டினுள் திணித்தவண்ணம், “நீங்க உன் அண்ணனை கூப்புடுங்க, நீங்க கிளம்புனதும் நான் போறேன்.”
“நீங்க எப்படி போவீங்க? நானே ட்ராப் பண்றேன்… பக்கத்து வீடுதானே.” காரிகை நேசக் கரம் வீசப் பார்க்க மசியவில்லை மணி.
“இல்லை வேண்டாம். நீங்க கிளம்புங்க யாழினி.”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”
“உங்களுக்கு இல்லை ஆனா பின்னாடி எதுவும் பிரச்சனை ஆகிட வேண்டாம் யாழினி. நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன்.” என்று அவன் தன் முடிவில் நிலையாய் நிற்க,
“அப்படியே யாழன் மாதிரி பேசுறீங்க.” என்று உதட்டை சுழித்தாள் யாழினி.
“அப்போ எனக்கு இன்னொரு தங்கச்சியா?”
“ச்சீ… ச்சீ வாயை கழுவுங்க. என்னால ஒரு யாழன் கேக்குற கேள்விக்கே பதில் சொல்லி சமாளிக்க முடியல… இன்னொருத்தர் வேண்டாம் சாமி… நான் ஆபீஸ் போய் யாழனை கூப்பிட்டு கிளம்புறேன். நீங்க உங்க வேலையை பாருங்க.” என்று கையெடுத்து அவனை கும்பிட்டேவிட்டாள்.
“ஏன் ஆபீஸ் போகணும்? இங்கிருந்து வீடு பக்கம்தானே இப்போ கூப்பிட்டீங்கன்னா பதினஞ்சு நிமிஷத்துல வண்டில வந்துரலாமே…” அலுவலகம் வரை தனியாய் செல்ல வேண்டுமா? என்று வாய் வரை வந்ததை இதழுக்குள் விழுங்கிக்கொண்டு அவள் விருப்பப்படியே தனித்து செயல்படட்டும் என்று யோசித்து வார்த்தைகளை விட்டான் மணி.
“அவன் வந்து ஆபீஸ்ல இல்லாம இங்க என்ன பண்றேன்னு கேக்கவா?” என்றபடியே யாழினி வண்டியை நோக்கி நடை போட, அவனும் அவளை பின்தொடர்ந்து வண்டி நிற்கும் இடம் வரை சென்றான்.
“அவரு கேட்டாலும் தப்பில்லை.”
“நீங்க பேசாம என் வீட்டுக்கு வந்துருங்க MK… அவங்களுக்கே சப்போர்ட் பண்றீங்க.”
“நான் வந்துருவேங்க ஆனா உங்களால என் வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.” என்று அவன் விளையாட்டாய் சொல்வது மெய்யாகும் போது என்னாகுமோ?