‘இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை. எனக்கென்று யாருமே இல்லை. எதற்காக வாழ்கிறேன் நான்?’ என்ற மனநிலையோடு சுற்றிய வீராவை மலரின் முகம் மொத்தமாக மாற்றியிருந்தது.
வாழ்க்கையின் மீது ஒரு பிடித்தமும், பிடிப்பும் அவனுக்கு இப்போது வந்திருந்தது.
அவளைப் பற்றி அனைத்தையும் விசாரித்து அறிய அவனுக்கு ஒற்றை நாளே போதுமானது. ஆனால், அவள் கதையை அவள் சொல்லிக் கேட்க வேண்டும் என்ற உந்துதலில், உள் மனதின் உச்சரிப்பை அவனால் தட்டிக் கழிக்க முடியவில்லை.
ஏதேதோ எண்ணங்களோடு மனது அலைக்கழிய, புயலில் சிக்கிய படகைப் போல உணர்ந்தான் வீரா.
அவன் எப்போதும் வெறுக்கும் தனிமை இப்போது தேவையாய் இருக்க, கடையை சுப்ரியாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தான் வீரா. மூச்சு வாங்க அவன் முன்னே ஓடி வந்து நின்ற செல்வா, “என்னடா பண்ணி வச்சிருக்க வீரா?” கோபத்தில் கனன்ற கண்களுடன் கத்தினான்.
“பொய் சொல்லாத வீரா?” அவன் தோளை பற்றி செல்வா உலுக்க,
“ஆ, வலிக்குது டா” வலியில் முகம் சுருக்கி சொன்னான் வீரா. அவனின் இடது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கழுத்தில் தொட்டில் கட்டி தொங்கிக் கொண்டிருந்த அவன் கரத்தை வெறித்து பார்த்த செல்வா, “கீழ விழுந்து, கை உடையற வயசா டா இது?” என்று முறைத்த படி கேட்க,
“எந்த வயசில விழுந்தாலும் எலும்பு உடையும் டா செல்வா” குறும்பு புன்னகையுடன் பதில் கொடுத்தான் வீரா.
அது செல்வாவை சீண்டி விட,
“எங்க விழுந்த? எப்படி விழுந்த? எனக்கு ஏன் கால் பண்ணல? இப்போ சுப்ரியா சொல்லி தான் எனக்குத் தெரியுது.” கேள்விகளை அடுக்கினான் அவன்.
வீரா திரும்பி சுப்ரியாவை முறைத்து விட்டு, “அப்புறமா சொல்றேன் செல்வா. இப்போ வீட்டுக்கு போறேன் டா. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா நல்லா இருக்கும் போல இருக்கு” வீரா சொல்ல, செல்வா அவனை தடுக்க முனையவில்லை. முறைத்துக் கொண்டே அவனுக்கு வழி விட்டான்.
அங்கிருந்து நேராக அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு தான் வந்தான் வீரா.
“கடவுளே, இந்த மலர் மனசை மலர வைக்க, எனக்கு ஒரு ஐடியா கொடேன்” புலம்பிக் கொண்டே அவன் நடக்க, கும்பிட போன தெய்வம் அங்கே உடலைக் குறுக்கி படுத்திருந்தது.
“பேபி பிங்க்” வண்ண நீளமான உடை அணிந்திருந்தாள். அப்படி மலரை பார்க்க நிறம் மங்கிய ரோஜாவை போலிருந்தது.
வீராவின் இதயத்தில் முள்ளால் கீறியது போல சுருக்கென்று ஒரு வலி.
மெதுவாக அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
“என் தோட்டத்தில் உன் வாசனை… என் ஜீவனில் உன் வேதனை…
நான் தேடினான் என் கண்ணனை…”
பாடல் வரிகளில் மூழ்கிப் போய் இருந்தாள் மலர். உலகம் மறந்து வேறெங்கோ சஞ்சரித்து கொண்டிருந்தது அவளின் ஈர விழிகள்.
“நான் வேறெங்கும் மறையவில்லை…” வரிகளை முணுமுணுத்தாள். அவளின் ஒரு கரம் உயர்ந்து மறு கரத்தில் இருந்த, “டாட்டூவை” வருடி கொடுத்தது.
‘இப்படியும் ஒருத்தி தன்னை வருத்திக் கொள்வாளா?’ கேள்வியோடு அவளைப் பார்த்தான் வீரா.
“உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசைக் கேட்டு ஓடி வந்தேன், மறைந்ததென்ன…” அந்த சோகக் குரலை கேட்கவே முடியவில்லை அவனால்.
மெதுவாக, “மலர்…” என்று அழைத்தான் வீரா.
அவளின் ஏகாந்தம் கலைந்து போன எரிச்சலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர். படக்கென்று தரையில் கையூன்றி எழுந்துக் கொண்டாள்.
“இங்க என்ன பண்றீங்க மலர்? அதுவும் தனியா?” அக்கறையும், அன்பும் கலந்து ஒலித்த அவன் குரல் அவளை அசைக்கவேயில்லை.
“முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க, சொல்லுங்க?” என்ற மலர், மாடியின் கட்டைச் சுவரை பிடித்து, கீழே குனிந்து பார்க்க,
“இன்னைக்கு கீழ விழுற எண்ணத்தில வரல மலர். இனி, அந்த எண்ணமே எனக்கு வராது” என்றவனை அப்போது தான் சரியாக பார்த்தாள் மலர்.
அடுத்த நொடியே, “ஐயோ, கைக்கு என்னாச்சு? ஏற்கனவே கீழ விழுந்துட்டீங்க போல, அதுல வந்த ஞானோதயம் தானா?” என்று அவள் கேட்க, சத்தமாக சிரித்து விட்டான் வீரா.
“கார்ல இருந்து போன் பேசிட்டே இறங்கினேன். அடுத்த நிமிஷம், தரையில கெடக்கறேன். என்ன நடந்ததுன்னே தெரியல. ஆனா, சுளீர்னு ஒரு வலி. கையை அசைக்க முடியல. ஹாஸ்பிடல் போனா, ஊஞ்சல் கட்டி விட்டுட்டாங்க” சோகமாக அவன் சொல்ல,
“ஓ, பார்த்து இறங்க கூடாதா? சரியாக எவ்ளோ நாள் ஆகும்?” அவள் குரலில் எந்த உணர்ச்சிகளும் இல்லை. கேள்வி கேட்கும் பாவனை மட்டுமே. ஆனால், அதுவே அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது.
“ரெண்டு வாரம் சொன்னாங்க.”
“சரியாகிடும்” மலர் சொல்ல,
“எதுவும் சரியாகாது. நாம தான் சரி பண்ணணும்” வீரா அழுத்தமாக சொல்ல, அந்த குரலில் இருந்த மாற்றத்தில் சட்டென அவன் கண்களைப் பார்த்தாள் மலர்.
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” பேச்சை மாற்றும் நோக்கத்தில் வேறொரு கேள்வியை அவன் கேட்க, பதில் சொல்ல மிகவும் தயங்கினாள் அவள்.
“ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அரை மணி நேர ட்ரைவ் தான். என்னால, இந்த கையோட கார் ஒட்ட முடியாது. நீங்க என் காரில், என்னை ட்ராப் பண்ண முடியுமா?” மலர் விழிகள் அதிர்ச்சியில் விரிய,
“டாக்ஸி புக் பண்ணி போகலாம் தான். ஆனா, கூடவே யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. செல்வா, ஆபீஸில் பிஸி. எனக்கு இந்த ஊரில் வேற யாரையும் தெரியாது. அதான், உங்களைக் கேட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம் மலர். பிளீஸ்” வீரா விளக்கம் கொடுக்க, மேலே எதையும் யோசிக்காமல் உடனே பதில் கொடுத்தாள் மலர்.
“நான் ட்ராப் பண்றேன். வாங்க”
இருவரும் இணைந்து கீழே இறங்கினர்.
கார் சாவியை அவனிடம் இருந்து வாங்கிய மலர், அவனுக்காக கார் கதவை திறந்து வைத்தாள். அவன் நன்றாக சாய்ந்து அமர்ந்த பின்னரே காரில் ஏறினாள் மலர்.
பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், லாவகமாக காரை அவள் இயக்க, அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த காரோடு மட்டுமல்ல. இவனோடும் ஏதோ ஒன்று என்னை இணைக்கிறது என்ற எண்ணம் மலரின் மனதில் அவளையும் அறியாமல் வந்து சென்றது.
அவள் குடும்பத்தினர், ராகவன், தோழிகள் தவிர்த்து யாரிடமும் அவள் இயல்பாக பேசுவது கூட கிடையாது. ஆனால், இந்த வீராவிடம் எப்படி என்னால் இயல்பாக பேச முடிகிறது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தாள் மலர்.
சிந்தனை காரின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கி இருந்தது.
அவனை காப்பாற்றியது, பூ கொடுத்தது, அவன் கொடுத்த பூக்களை தூக்கி எறியாமல் வாங்கிக் கொண்டது என்று ஒவ்வொன்றாக மனதில் வலம் வர, அவள் எப்படி உணர்ந்தாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை.
செல்வாவிடம் இருந்து தப்பிக்க, வீராவிடம் ரோஜாக்கள் கேட்டது நினைவில் வர, பலமான அதிர்ச்சி தான் அவளுக்கு.
அதே போல அவனது காரை கேட்டதும், அவனோடு பயணம் போனதும், அவளால் எளிதாக எடுத்துக் கொள்ளவே இயலவில்லை.
இவன், ஏதோ ஒரு வகையில் என்னை பாதிக்கிறான் என்று தான் அப்போது நினைத்தாள் மலர்.
அதை ஈர்ப்பு என்றோ, அவனோடு இருக்கையில் பாதுகாப்பாக உணர்கிறோம் என்றோ அவள் நினைக்கவேயில்லை.
என்னைப் போல இவனுக்கும் பலமான காயம் உண்டு, அதில் உண்டான பரிதாபம் தான் நட்பாக வளர்ந்து நிற்கிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் மலர்.
மௌனமாய் காரை செலுத்தும் மலரையே கண்ணெடுக்காது பார்த்துக் கொண்டே வந்தான் வீரா.
“மௌனமே பார்வையாய் பேசிக் கொண்டோம்…” வீராவிற்கு பின்னணியில் இசையும், பாடலும் ஒலித்தது.
அப்படியே மலரை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன். அவள் கண்களோ சாலையிலேயே நிலைத்திருந்தது.
ஒன்றில் இருந்து வெளியே வர எப்போதும் வேறொன்றை பற்றிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.
மலரை அவளது கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வரவே கார் பயணத்தை தேர்ந்தெடுத்தான் வீரா.
அது எவ்வளவு தூரத்துக்கு செல்லும், சரியாக வருமா என்று பெரிதாக யோசித்து குழப்பிக் கொள்ளவில்லை அவன்.
ஏனோ அவனுக்கு நிச்சயமாய் தோன்றியது. மலரை மாற்ற ஒரே வழி, மலர்களும், பயணமும் தான் என்று.
அது எந்த அளவுக்கு சரி வரும் என்று பொறுத்திருந்து பார்க்க அவன் தயாராகவே இருந்தான்.
“நீங்க சொன்ன இடம் வந்தாச்சு” காரை இடம் பார்த்து நிறுத்தியபடி சொன்னாள் மலர்.
“நீங்களும் வாங்களேன்” அவன் அழைக்க, அப்போது தான் எங்கு வந்திருக்கிறோம் என்பதையே கவனித்தாள் மலர்.
அது ஒரு “பிளான்ட் நர்சரி”. எங்கு பார்த்தாலும் பச்சைத் தாவரங்களும், பல வண்ண மலர்களும் நிறைந்திருக்க, கண்ணிமைக்க மறந்து நின்றாள் மலர்.
“மலர், வாங்க” வீரா மீண்டும் அழைக்க, அவனோடு நடந்தாள் அவள்.
“செடி பார்த்திட்டு இருங்க. ஒரு பத்து, இருபது நிமிஷத்துல வந்துடுறேன்” அவளது பதிலை எதிர்பாராமல் விலகி சென்றான் வீரா.
மலர்களோடு ஒன்றிப் போனாள் மலர். அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
அவளது அலைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்தாள். சுஹாசினி அழைத்துக் கொண்டிருந்தாள்.
“அச்சோ சொல்ல மறந்துட்டேன் சுஹா. வெளில வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்.” அந்த பக்கம் சுஹாசினி பதற,
“இல்ல, இல்ல. வந்துடுவேன். சாரி. சொல்ல மறந்துட்டேன். என்ன விஷயம்னு வந்து சொல்றேன் சுஹா, பிளீஸ்” என்று சமாளித்து அழைப்பைத் துண்டித்தாள் மலர்.
“எங்க வீட்டுக்கு ஏதாவது செடி வாங்கணும். வாங்க, நீங்களும் வந்து செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க” வீரா அழைக்க, மறுக்காமல் உடன் நடந்தாள் அவள்.
“இங்க இல்லாத பூக்களே இல்ல தெரியுமா?” அவன் சொல்ல, “அப்படியா?” என்று கேள்வியாக பார்த்தாள் மலர்.
“எஸ், மலர். வெளிநாட்டில் இருந்து கூட இறக்குமதி செய்து அவ்ளோ பூக்கள் வச்சிருக்காங்க. ஆர்க்கிட், டூலிப்ஸ் இப்படி எல்லாமே இருக்கும், இவங்க கிட்ட” அவன் தீவிரமாக சொல்லிக் கொண்டே போக,
“டீ, பூ இருக்குமா?” என்று கேட்டாள் அவள்.
“என்ன?” புரியாமல் அவன் முழிக்க,
“டீ இல்ல டீ? தேநீர்? அதோட பூ..” விளையாடுகிறாளா என்பது போல அவன் பார்க்க, ஒரு தீவிர முகபாவம் தான் அவளிடம்.
“அது…” என்று அவன் தடுமாற,
“வாங்க, போகலாம்” என்று முன்னே நடந்தாள் மலர்.
காரில் ஏறியதும், “அந்த பூ நீங்க பார்த்திருக்கீங்களா?” அவன் கேட்க, அவளது அலைபேசியை எடுத்து, புகைப்படத்தை தேடி அவனிடம் காண்பித்தாள் மலர்.
“வெள்ளையும், மஞ்சளும் கலந்து…குட்டியா, அழகா நல்லா இருக்கே…” அவன் சொல்ல, மலர் முகத்தில் மலர்ந்த புன்னகை மட்டுமே.
அந்த புகைப்படமும் ஜீவா கொடுத்தது தான். பூவும், அவன் புன்னகையும் அவளின் நினைவில் வர, பனிமலரின் கண்கள் பனிக்க புன்னகைத்துக் கொண்டாள்.
அக்கணம் அவன் நினைவு மென்மையாய் அவளை வருடவே செய்தது. இதயத்தை இறுக்கிப் பிடித்து கலங்க வைக்கவில்லை.
“ஆபீஸ் டைம் முடிந்ததும், நான் ஃப்ரீ தான். டிரைவ் தானே? எங்க போகனும்னு சொல்லுங்க. வர்றேன்” என்று அவள் இயல்பாக சொல்ல, அவன் மனதில் சிவப்பு ரோஜா ஒன்று மொட்டு விடத் தொடங்கி இருந்தது.
“டிரைவிங் ரொம்ப பிடிக்குமோ?” வீரா கேட்க,
“ம்ம்” என்றாள்.
“பூக்களும் பிடிக்கும் இல்லையா?” அந்த கேள்விக்கு மென்மையாய் புன்னகைத்து,
“மலருக்கு மலர்களை பிடிக்காமல் இருக்கலாமா, தப்பாச்சே.. ரொம்ப பிடிக்கும்” மலர் சொல்ல, அந்த மலர் முகத்தில் நிரந்தரமாய் தங்கி விட்டது அவன் கண்கள்.
“டிரைவிங், பூக்கள் எனக்கும் பிடிக்கும். அதையே தொழிலா எடுத்து செய்யற அளவுக்கு பிடிக்கும்” அத்தோடு நிறுத்தி இருக்கலாம் அவன்.
“பூக்கள் மட்டுமா? நம்ம ரெண்டு பேருக்கும் தான் எத்தனை ஒற்றுமைகள்?”
“எத்தனை? என்ன ஒற்றுமை?” பட்டென்று அவள் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினான் அவன்.
“இது ரெண்டும் தவிர வேறென்ன இருக்கு?” ஒரு நொடி பார்வையை அவனிடம் பதித்து அவள் கேட்க, அவனுக்கு நா உலர்ந்து போனது.
“அது.. ஒன்னுமில்ல. ஏதோ ஞாபகத்தில் சும்மா சொல்லிட்டேன்” மீண்டும் ஒரு பார்வை, அவ்வளவு தான். சாலையில் கவனமானாள் மலர்.
சத்தமில்லாமல் ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டு, இருக்கையில் சாய்ந்து கண் மூடினான் வீரா.
“விபத்து.. அதன் காயம்.. அதனால் நாம் சந்திக்கும் பயம்… ஒன்றை மறக்க முடியாமல், அதிலேயே தேங்கி நிற்கும் நம் இயல்பு… இப்படி நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறது மலரே” தனக்குள் சொல்லிக் கொண்டான் வீரா.