“இந்த பொண்ணு ஃபோட்டோ தான் கடைசியா அனுப்பினாங்க. நான் யோசிச்சு சொல்றேன்னு எங்க வீட்ல சொன்னேன். அப்புறம் பொண்ணு வீட்ல இருந்து ஒரு பதிலும் வரலை. திடீர்னு பார்த்தா, பொண்ணே வந்து என் முன்ன நிக்கறா. எதுவும் தெரியாத மாதிரி பேசுறா. அப்புறம் அவங்க அண்ணா தான் எனக்கு கால் பண்ணி பேசினார். தங்கச்சிக்கு எதுவும் தெரியாது. நீங்களே பொறுமையா பேசி, அவளுக்கு உங்களை பிடிக்க வைங்கனு சொன்னார்.” சொல்லிக் கொண்டே போனான் செல்வா.
சிவப்பு ரோஜாவை அழுந்தப் பற்றினான் அவன். முட்கள் அவன் உள்ளங்கையை வருடிப் பார்த்து, ஆழமாய் உள்ளிறங்கத் தொடங்கி இருந்தது.
“நானும் அவ கிட்ட பேசலாம்னு எவ்வளவோ டிரை பண்றேன். முடியல டா. சரியான சந்தர்ப்பம் அமையல. பட், சீக்கிரம் பேசணும்.” செல்வா சொல்லி முடிக்க,
“ம்ம்” என்றதோடு நிறுத்திக் கொண்டான் அவன்.
‘மலர், மலர்’ என கிடந்து அடித்துக் கொண்டது அவன் மனது. அதென்ன மலர் என்றாலே அவனுக்கு கிடைப்பதில்லை. மலரிடம் மட்டும் அவன் மனம் மயங்கும் விசித்திரம் தான் என்ன? மயங்கினானா? அவனுக்கே புரியவில்லை.
இந்த மலரும் அவனுக்கில்லை என்பதே அத்தனை வலித்தது. இத்தனைக்கும் அவர்களுக்கு நடுவில் எதுவும் இல்லை. ஆனாலும், எதையோ நிரந்தரமாக இழந்து விட்டதைப் போல துடித்து, தவித்தது அவன் மனது.
அவனது மனக் கண்ணில் வந்து நின்றாள் அவள்.
‘மலர்’ பெயருக்கு ஏற்ப, அவளும் மலர் போல தானிருந்தாள். பல வருடங்களாக அவன் மனதில் இருந்த மலரை அவன் நினைவுகளுக்கு இடம் மாற்றி சில வருடங்கள் ஆகியிருந்தது.
இப்போது அந்த இடத்தை அவன் அறியாமலேயே கைப் பற்றி விட்டாளா இந்த மலர்? சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை.
“நீ போய் வேலையை பாரு செல்வா” பூவின் மேல் முழு கவனத்தையும் பதித்து அவன் சொல்ல, அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் செல்வா.
“என்னடா ஆச்சு? நீ நார்மலா இல்லாத மாதிரி இருக்கே?” நண்பனை துல்லியமாய் அறிந்தவனாக செல்வா கேட்க,
“ப்ச்” என்றான் சலிப்பாய்.
“ஓகே, கிளம்பிட்டேன்” என்று அங்கிருந்து நகர்ந்திருந்தான் செல்வா.
ஒரு பெருமூச்சுடன் அவன் நிமிர, எதிரில் அவள் நிற்பது போன்ற பிரம்மை. இத்தனை மாதங்கள் இல்லாமல், இன்றைக்கு தான் அவனைப் பார்த்து புன்னகைக்க நல்ல நாள் பார்த்தாளா அவள்? மெலிதான எரிச்சல் அவனுள் எட்டிப் பார்க்கவே செய்தது.
கடையை கண்களால் சுழற்றினான். பல வண்ண மலர்கள் அவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தது.
“இந்த மலர்கள் மட்டும் தான் உனக்கு நிரந்தரம்” சத்தமாக சொல்லிக் கொண்டு வேலையை தொடர்ந்தான்.
யாரோ துரத்திக் கொண்டு வருவது போல, வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தாள் மலர்.
‘இதுவா நான்?’ தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டாள்.
பாதையில் பார்வை இருந்தாலும், பூவையின் கவனம் அதிலில்லை. பழகிய சாலையில் கால்கள் தன் போக்கில் நடக்க, மனம் வேறோரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
‘ஒருவனிடம் இருந்து தப்பிக்க, இன்னொருவனிடம் போய் நின்றதே பெரும் தவறு. அதில் அவனிடம் புதிய தொடக்கத்திற்கு லிலாக் மலர்களை கொடுப்பேன் என்று வேறு உளறி வைத்திருக்கிறேன் நான்? இதுவா நான்? இந்த சின்ன பிரச்சினையை கூட என்னால் சமாளிக்க முடியாதா? இதற்காக போய் பெயர் கூட அறியாத, யாரென்றே தெரியாத ஒருவனிடம் போலியாக புன்னகைத்து நின்றேனா நான்? என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான். இதை வைத்து என்னிடம் நெருங்க முயன்றால், என்ன செய்வேன் நான்?’
மனதில் புலம்பிக் கொண்டாள் மலர். தன்னைத் தானே நிந்திந்துக் கொண்டாள். அவளது செய்கையை அவளாலேயே சரியென்று ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.
‘வாழ்க்கை என்னை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது’ என்று நினைக்கையிலேயே மளுக்கென்று குளம் கட்டியது அவள் கண்கள். அழுகை வரும் போலிருந்தது.
அறையை அடைந்ததும் முதல் வேலையாக அண்ணனை அழைத்தாள் மலர்.
“சொல்லு பாப்பா, எப்படி டா இருக்க?” என்றான் சரவணன்.
“அண்ணா மேல என்னடா மலர் கோபம்?” அவன் சரியாக கணித்து கேட்க,
“கோபம் எதுவும் இல்ல ண்ணா”
“அப்படியா பாப்பா? அப்புறம் ஏன்டா என்னவோ போல பேசுற?”
“இப்ப தான் வேலை முடிச்சு, வீட்டுக்கு வந்தேன் ண்ணா” அவள் அலுப்பாக சொல்ல,
“வேலை கஷ்டமா இருந்தா, விட்டுட்டு வந்திடு டா பாப்பா” என்றான் அன்பான அண்ணனாக, அவளுக்குத் தான் பகீரென்றது.
“ஐயோ அப்படி ஒன்னும் கஷ்டமா எல்லாம் இல்ல ண்ணா.” பட்டென்று சொன்னாள் அவள்.
“சரி பாப்பா. என்ன விஷயம்? அண்ணா கிட்ட எதுவும் சொல்லனுமா?” சரவணன் கேட்க,
“அது வந்து ண்ணா..” மெல்லிய தயக்கத்துடன் இழுத்தவள்,
“கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் இங்க வர வேண்டாம் ண்ணா. நானே சென்னை வர்றேனே.” அவள் சொல்ல,
“அதெல்லாம் முடியாது பாப்பா. அதெப்படி முடியும்?” படபடத்தான் சரவணன்.
“நீ எப்படி தனியா வருவ? உன்னால எப்படி தனியா வர முடியும்?” மீண்டும் அதையே அவன் கேட்க,
“அண்ணா, பிளீஸ். நான் இப்படியே இருக்க முடியாது இல்ல? எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பேன் ண்ணா? நான்… நான் நார்மலா ஆகவே கூடாதுனு நினைக்கிறீங்களா?” பதட்டத்திலும் தயங்கி தயங்கி வார்த்தைகளை அவள் கோர்க்க,
“என்ன சொல்ற பாப்பா நீ? நாங்க அப்படி நினைப்போமா? அதுவும் உனக்கு… நீ நல்லா இருந்தா தான், நாங்க ..” அவனை மேலே பேச விடாமல் இடையிட்டாள் மலர்.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை ண்ணா. சாரி, தெரியாம சொல்லிட்டேன்”
“பிளீஸ் பாப்பா. இனிமே இப்படி பேசாத.” கனமான குரலில் அவன் சொல்ல, மலரின் மனதும் கூட கனத்துப் போனது.
“அண்ணா…” மெல்ல அழைத்தாள்.
“இனி நாங்க பெங்களூர் வரலை மலர். நீயே சென்னை வா. பஸ், கார், ப்ளைட் எது சரி வரும்னு சொல்லு. அண்ணா புக் பண்ணித் தரேன். சரியா?”
“சரிங்க ண்ணா.”
“பத்திரமா இரு பாப்பா” என்றதோடு இணைப்பை துண்டித்தான் சரவணன்.
அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு, படுக்கையில் சரிந்தாள் மலர்.
என்ன பேச அழைத்தாள்? என்ன பேசி விட்டு வைத்திருக்கிறாள்? ஓங்கி தலையில் அடித்து கொண்டாள் மலர்.
நாளை மீண்டும் செல்வாவை சந்திக்க வேண்டும். அந்த பூக்கடை காரனை எதிர்கொள்ள நேரிட்டால் என்ன பேசுவது? சிந்தனைகள் அவளை நிறைக்க, வெறும் வயிற்றோடு உறங்கி போனாள் மலர்.
அவள் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அடுத்த வந்த இரு நாட்களும் செல்வா அலுவலகம் வரவே இல்லை.
முதல் நாள் ஒருவித பதட்டத்துடன் அவனை எதிர்நோக்கி இருந்தவள், பின்னர் இயல்புக்கு திரும்பி இருந்தாள். தன் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தினாள்.
அதே போல பூக் கடையில் இருந்தவனையும் காணவில்லை. எப்போதும் போல சுப்ரியா தான் இருந்தாள். மலரின் கண்கள் தினமும் காலை, மாலை என இருவேளையும் அவனை தேடவே செய்தது.
வார இறுதி நெருங்க, அந்த வாரம் அவளே சென்னை சென்றாள். பயணம் முழுவதும் அவளது நட்புக்கள் மாறி, மாறி அவளோடு அலைபேசியில் பேசிக் கொண்டே இருக்க, அந்த பயணத்தை மிக எளிதாக கடந்தாள் அவள்.
சென்னையில் இருந்து திரும்பி வரும் போது இசையை துணைக்கு அனுப்பி விட்டு, அவளின் நண்பர்கள் ஓய்வெடுத்து கொண்டார்கள்.
பெங்களூரை அடைந்ததும் எதையோ சாதித்து விட்ட உணர்வு தான் அவளுக்கு. முழுதாக ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் தனியாக பயணித்து இருக்கிறாள், பயணம் என்றாலே நடுங்கிய காலம் போய், தனித்து பயணிக்கும் காலம் வந்ததை மிகவும் விரும்பியது அவள் மனது. எகிறி குதித்து, ஒரு அரை வட்டம் சுழன்று புன்னகையுடன் இடுப்பில் கை வைத்து நின்றாள்.
அவளுக்கு எதிரில் கண் இமைக்காமல் அவனும் சிரித்துக் கொண்டு தானிருந்தான்.
“கொஞ்சம் கொஞ்சமா நீங்க சொன்னதை செய்துட்டே இருக்கேன். உங்களுக்கு சந்தோசம் தானே?” அவள் கேட்க, புகைப்படத்தில் இருந்தவன், புன்னகையை மட்டும் தான் பதிலாக தந்தான். அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
அதே மகிழ்வுடன் கிளம்பி அலுவலகம் சென்றாள் அவள்.
மீண்டும் அவளை வட்டமடிக்க தொடங்கி இருந்தது செல்வாவின் கண்கள். நேராக நிமிர்ந்து அமர்ந்து எதையும் எதிர்கொள்ள தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அவனோ இம்முறை அவளை நெருங்கவே இல்லை.
மாலை வேலை முடித்து கீழிறங்க, அதிசயமாக பூக் கடையில் அவன் இருந்தான்.
அவள் கால்கள் தயங்கி நின்றது சில நொடிகள் தான். பின்னர் தானாகவே அவனை நோக்கி நகர்ந்திருந்தன.
“ஹாய்..” அந்த குரலுக்கு சட்டென்று திரும்பினான் அவன். கண்கள் கேள்வியாக அவளைப் பார்த்தது.
“அன்னைக்கு.. ஐ ஆம் சாரி.” என்ன சொல்லி மன்னிப்பு கேட்பது என்று புரியாமல், குத்து மதிப்பாக மன்னிப்பை கேட்டு வைத்தாள் மலர். அவனோ விளங்காத பார்வை பார்த்தான்.
“பூ தானே கேட்டீங்க? அதுக்கு ஏன் சாரி சொல்றீங்க?” அவன் கேட்க,
“இல்ல. நான், உங்க ப்ரெண்ட் முன்னாடி.. அப்படி வேற மாதிரி பேசி இருக்க கூடாது.” கைகளை கோர்ப்பதும், பிரிப்பதுமாக இருந்தாள்.
அவளது பதட்டம் புரிந்து,
“இட்ஸ் ஓகே. எனக்கு, நீங்க பூ கேட்டது மட்டும் தான் ஞாபகம் இருக்கு” தோள் குலுக்கினான்.
“ஓகே. இப்போ ஒயிட் ரோஸ் கொடுங்க” பூவை கேட்டு வாங்கிக் கொண்டு, இதழ் பிரியாமல் புன்னகைத்து விட்டு சென்றாள் மலர். அதற்கே மலர்ந்து நின்றான் அவன்.